உலகமெங்கும் உள்ள ஆலயத்திலும் வீட்டு பூஜை அறையிலும் ஆஞ்சனேயர் எனும் ஹனுமான் வழிபடப்பட்டு வருகிறார். பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றுள்ள நிலையில் கைகளைக் கூப்பிக் கொண்டு ஒரே முகத்துடன் காணப்படும் ஹனுமானின் அடி வாலில் இருந்து நுனி வால் வரை சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு இட்டு தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்வார்கள். நுனி வாலில் கடைசி பொட்டு வைத்தப் பின்னர் அவருக்கு நெய்வித்தியம் படைத்து பிரார்த்தனையை முடிக்க வேண்டும். நெய்வித்தியப் பொருள் வெறும் சக்கரைப் போட்ட பாலாகக் கூட இருக்கலாம், தவறல்ல.
அதே போல சில பெண்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்துள்ள பஞ்சமுக அனுமானுக்கும் பொட்டு வைத்து துதிக்கிறார்கள். இது சரியா அல்லது தவறான முறையா என்பதை தெரிந்து கொள்ள கீழ் கண்டதைப் படிக்கவும்.
பொதுவாக வீட்டின் பூஜை அறைகளில் கோபமில்லாத அதாவது உக்கிரக பாவனை இல்லாத தெய்வங்களையே வைத்து வணங்க வேண்டும் என்பதாக நமது சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சீதையுடன் உள்ள ராமர், பார்வதியுடன் உள்ள சிவன், லஷ்மியுடன் உள்ள விஷ்ணு அல்லது நரசிம்மர் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகன், பசுவுடன் கூடிய கிருஷ்ணர், வினாயகப் பெருமான், சரஸ்வதி, அமர்ந்த நிலையில் உள்ள லஷ்மி, வெங்கடசலபதி, தத்தாத்திரேயர், கூப்பிய கரங்களுடன் அமர்ந்துள்ள அல்லது சுற்றிலும் ராமா, ராமா என்ற சொற்கள் இருக்க நின்ற நிலையில் காட்சி தரும் ஹனுமான், சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு செல்லும் ஹனுமான் மற்றும் பல தெய்வங்கள் உள்ள பட்டாபிஷேகம் போன்றவை உண்டு.
உக்கிர தெய்வங்களான நரசிம்மர், சன்யாச கோலத்தில் காணப்படும் சிவபெருமான், பசு மாடு இல்லாத கிருஷ்ணர், பிரத்தியங்கா தேவி, மஹிஷாசுரமர்தினி, காளி, பஞ்சமுக ஹனுமான் போன்றவர்களை நியமப்படி ஆராதனை செய்து வணங்கி துதிக்க முடியாதவர்கள் தமது பூஜை அறைகளில் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு பூஜை செய்து முடியும்வரை சில ஆசாரங்களை அனுஷ்டிக்க வேண்டும். ஏன் என்றால் நாம் செய்யும் வழிபாட்டு முறை தவறானதாக இருந்து விட்டால் அத்தகைய உக்கிர மூர்த்திகளினால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் ஏற்படும் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவே வீட்டு பூஜை அறைகளில் அப்படிப்பட்ட உக்ரக மூர்த்திகளை வைத்துக் கொண்டால் அவற்றை பொதுவாக வணங்கி விட்டு இருந்து விடலாம். பிரார்த்தனை மற்றும் பூஜைகளுக்கு அவற்றை உட்படுத்தினால் நியமப்படி அவற்றை செய்ய வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி அவை உபாசனை தெய்வங்கள் ஆகும். அவை பெரும்பாலும் மந்திர தந்திரங்களில் சித்தி பெற சாதனாக்களை செய்பவர்களும், உபாசனை செய்பவர்களும் பூஜிக்கும் தெய்வங்கள் ஆவார்கள்.
எதற்காக ஹனுமானுக்கு வேண்டுதல்
செய்கிறார்கள் ?
வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள ஹனுமானை எதெற்கெல்லாம் வேண்டுகிறார்கள்?
- சனி பகவானின் தொல்லைகள் அகல
- தடைகள் விலக
- கணவன் மனைவி மனஸ்தாபங்கள் நீங்கி மன மகிழ்ச்சி பெற
- குடும்ப அமைதி நிலவ
- பில்லி சூனியங்களின் தாக்கம் நீங்க
- ஆன்மீக நாட்டம் மேன்மை அடைய
- கிரஹ தோஷம் விலக மற்றும்
- மன பயம் விலகி தைரியம் உண்டாக
குளித்தப் பின் நல்ல உடை அணிந்து ஒரு முக அமைதியான ஹனுமானை பொட்டு இட்டு வணங்குவதைப் போல வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு வேண்டலாமா?
கூடாது. வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை மேற்கண்ட காரணங்களுக்காக குங்கும சந்தன பொட்டு இட்டு சாதாரண நிலையில் இருந்தவாறு வணங்கலாகாது. அதற்குக் காரணம் ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு உள்ள உக்கிர தெய்வமான பஞ்சமுக ஹனுமான் உபாசனை தெய்வம் ஆகும். அவரிடம் வேண்டுதல்களை வைக்கும்போது நியமப்படி பூஜித்து வணங்க வேண்டும். கண்டபடி எல்லாம் செய்யக் கூடாது. அதற்க்கு பல விதி முறைகள் உள்ளன. ஆகவே வேண்டுதல்களுக்காக பொட்டு இட்டு பூஜிக்காமல் பஞ்சமுக ஹனுமானை அவரது ஆலயங்களில் மட்டுமே சென்று வேண்டி துதிக்க வேண்டும். ஆலயத்தில் சென்று அவரை வணங்கும்போது அவர் நமக்கு வேண்டியதை தருகிறார். ஏன் என்றால் ஆலயத்தில் அவருக்கு முறைப்படி ஆராதனை செய்து பூஜிப்பதினால் அவர் சாந்தமாக இருப்பார். பஞ்சமுக ஹனுமானை ஏன் உக்கிர தெய்வமாகக் கருதுகிறார்கள்?
பஞ்சமுக ஹனுமான் யார் ?
ராமனையும் லஷ்மணனையும் சிறைபிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்திருந்தான் ராவணனின் தம்பியான மயில் ராவணன். அவர்களை சிறையில் இருந்து மீட்க வேண்டுமானால் அதை சுற்றி ஐந்து திசைகளில் எரிந்து கொண்டிருந்த ஐந்து எண்ணை விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்திட வேண்டும். மயில் ராவணனுடன் அதற்காக யுத்தம் செய்து கொண்டிருந்த ஹனுமான் கோபமடைந்து தன்னுடைய முகத்துடன் நரசிம்மர், வராஹர், கருடன் மற்றும் ஹயக்ரீவர் போன்றவர்களின் உக்கிர உருவங்களை ஏந்திக் கொண்டு கைகளில் ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு பாதாளத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒரே சமயத்தில் அணைத்து மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை சிறையில் இருந்து மீட்டார். ஆகவே கோபமான அம்சத்தைக் கொண்டவர் பஞ்சமுக ஹனுமான் என்பதினால் சரியான பூஜா நியமங்களை அனுஷ்டிக்காமல் வீட்டில் அவரை பொட்டிட்டு வணங்கலாகாது. உண்மையில் பஞ்சமுக ஹனுமானை எதற்காக வேண்டித் துதிக்கிறார்கள்?
- பில்லி சூனிய தோஷங்கள் அகல
- ஆன்மீக மேன்மை அடைய
- வியாபாரங்களில் வெற்றி கிடைக்க
- கிரஹ மற்றும் வாஸ்து தோஷங்கள் அகல மற்றும்
- மன பயம் அகன்று தைரியம் கிடைக்க
ஆனால் அதே நேரத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவ, மன அமைதி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வீட்டின் பூஜை அறையில் வைத்துள்ள ராம நாம வார்த்தைகள் நிறைந்து அமைதியாக கூப்பிய கைகளுடன் உட்கார்ந்த அல்லது நின்றுள்ள நிலையில் உள்ள ஹனுமனிடம்தான் அவர் வாலில் பொட்டு இட்டு வேண்டலாமே தவிர உபாசன தெய்வமான பஞ்சமுக ஹனுமானுக்கு சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் சரியான பூஜா விதிகளைக் கடைபிடிக்காமல், சுத்தமான மனதுடனும், உடல் நிலையிலும் இல்லாமல் வெறுமனே பொட்டு இட்டு வேண்டுவது சரி அல்ல. அதனால் வீட்டில் மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கவும், குழப்பங்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை. விதிப்படி வணங்கினால் மட்டுமே அவர் வேண்டியதை அருள்வார்.
அது மட்டும் அல்ல. ஒருமுறை வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள பொட்டு இட ஆரம்பித்த உடன் மாதவிலக்கு நாட்களைத் தவிர பிற நேரத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விட்டு, அதாவது ஒருவாரம் பொட்டு வைத்து விட்டு, மீண்டும் ஒருவார இடைவெளிக்குப் பிறகு விட்ட இடத்தில் இருந்து பொட்டு வைக்க துவங்குவது பெரும் தவறான செயல் ஆகும்.
அதனால்தான் வீட்டில் வைத்துள்ள பஞ்சமுக ஹனுமானை முறைப்படி ஆராதனை செய்யாமல் வெறுமே பொட்டு வைத்து பிரார்திப்பவர்களுடைய வீடுகளில் அமைதியும் இருப்பது இல்லை, நிம்மதியும் கிடைக்காது, வேண்டிய காரியங்களும் சரிவர நிறைவேறுவது இல்லை.