மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் அவற்றின் கட்டுமானம் மற்றும் வரலாற்றின் பின்னணியினால் பெரும் புகழ்பெற்று விளங்குகின்றன. அதில் ஒன்றுதான் தேவாஸ் எனும் சிற்றூரில் உள்ள மலை மீது காணப்படும் சாமுண்டா மற்றும் துல்ஜா பவானி ஆலயங்கள். தேவாஸ் என்பது இந்தூர், உஜ்ஜயினி மற்றும் போபால் போன்ற மூன்று முக்கிய நகரங்களுக்கு மத்தியில் உள்ள சிற்றூர் ஆகும். இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசத்தில் தேவாஸ், இந்தூர், உஜ்ஜயினி, நாக்தா மற்றும் போபால் போன்றவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தை அந்த காலத்தில் மால்வா மண்டலம் அல்லது மால்வா பிராந்தியம் என்ற பெயரில் அழைத்திருந்தார்கள். அந்த மால்வா பிராந்தியத்தில் மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில் இருந்து சுமார் 143 கிலோ தொலைவில் உள்ளதே தேவாஸ் எனும் சிற்றூர் ஆகும். அந்த ஊரில் உள்ள மலை மீது தேவி வாசம் செய்கின்றாள் எனப் பொருள்படும் வகையில் இந்தி மொழியில் தேவி வாசஸ்தலம் என அழைக்கப்பட்ட இடம் காலப்போக்கில் மருவி தேவாஸ் என ஆயிற்று.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 350 அடி உயரத்தில், சிறு மலை குன்றின் மீது அமைந்துள்ள இந்த இரு ஆலயங்களுக்கும் வருடம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். அதுவும் நவராத்திரி பண்டிகை சமயத்தில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காலில் செருப்புக் கூட அணியாமல் கடும் வெயிலிலும் நடந்தே வந்து மகிஷாசுரமர்தினியின் அம்சமாக கருதப்படும் இளையவளான சாமுண்டா தேவியை வழிபட்டுச் செல்வதும் (அவளை வழிபட்டப் பின் மூத்தவளான துல்ஜா பவானியையும் வணங்கி விட்டே செல்வார்கள். அப்படி செய்வதே ஐதீகம் ஆகும்), அப்படி நடந்தே வரும் பக்தர்களில் ஆறு அல்லது ஐந்து வயது குழந்தைகள் உட்பட அறுபது முதல் எழுபது வயது கிழவர்கள் வரைக் கூட உள்ளதைக் காண்பது அதிசயமான காட்சியாகும்.
மலை மீது உள்ள இரு ஆலயங்களில் ஒன்று சாமுண்டா தேவி, இரண்டாவது துல்ஜா பவானி தேவி ஆகும் . சாமுண்டா தேவியை தேவாஸ் நகரை சேர்ந்த முன்னாள் மராட்டிய மன்னர்கள் குலதெய்வமாக ஏற்று இருக்கையில், துல்ஜா பவானியை முன் ஒரு காலத்தில் மராட்டிய மானிலத்தை ஆண்டு வந்த பேரரசன் மற்றும் மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜி தனது இஷ்ட தெய்வமாக வணங்கி வந்திருந்தார். சாமுண்டா மற்றும் துல்ஜா பவானி தேவிகளின் சிலைகள் இரண்டுமே மலையோடு சேர்ந்துள்ள பெரிய பாறைக் கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயம் பர்மார் எனும் மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை என்றும், அவை பல்வேறு உள்நாட்டுப் போரில் சேதமடைந்து இருந்தாலும் பின்னர் தேவாஸை ஆண்டு வந்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் புதிக்கப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுனர்கள் இந்த சிலைகள் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும், அவை 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆலயத்தில் உள்ள பண்டிதர்களும் வெவ்வேறு விதமான கருத்தைக் கூறுகிறார்கள். ஆனால் இவை எதற்குமே எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அனைத்துமே வாய்வழிச் செய்திகளாகவே உள்ளன என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதாவது மராட்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த இரு ஆலயங்களிலும் பெருமளவு ஆராதனைகள் இருந்துள்ளன என்பதே அது. இந்த ஆலயத்தில் பாறைகளில் செதுக்கப்பட்டு உள்ள தேவிகளின் சிலைகள் தானாகவே வெளி வந்தவை என்று கூறப்பட்டாலும், இவற்றை எதோ ஒரு சிற்பி தனது கனவில் தோன்றிய உருவத்தைக் கொண்டோ, அல்லது தனக்கு காட்சி தந்த தெய்வத்தின் உருவிலோ தென் இந்தியப் பகுதிகளில் காணப்படும் கிராம தேவதைகளின் உருவ அமைப்பில் செதுக்கி உள்ளார். இங்குள்ள சாமுண்டா தேவி ஆலயம் சக்தி பீடங்களில் ஒன்று என்றும் சாமுண்டா தேவி மகிஷாசுரமர்த்தினியின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். மகிஷாசுரமர்த்தினியானவள் பராசக்தியான பார்வதியின் அம்சமே ஆவாள்.
பல்வேறு இடங்களிலும் சக்தி பீடம் எழுந்த வரலாற்றைப் பற்றி கூறும் கதை புராணத்தில் உள்ளது. அது என்ன என்றால் முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மாமனாரும், பார்வதியின் தந்தையுமான தக்ஷன் என்பவர் சிவபெருமானை அவமதிக்க எண்ணி ஒரு பெரிய யாகத்தை நடத்தினார். அந்த யாகத்தில் பங்கேற்க அவர் சிவபெருமான் மற்றும் அவர் மனைவி பார்வதியைத் தவிர தேவலோகத்தில் இருந்த அனைத்து கடவுட்கள், தேவர்கள் மற்றும் ரிஷி முனிவர்களையும் அழைத்து இருந்தார். தன்னை தந்தை அழைக்காவிடிலும் அதில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று மனநிலையில் இருந்த பார்வதி அதை தவிர்க்குமாறு சிவபெருமான் அவளிடம் எத்தனை முறை எடுத்துக் கூறியும் கேட்காமல் சிவபெருமானை கட்டாயப்படுத்தி யாகத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கு சென்றவர்களை வரவேற்காமல் இருந்தது மட்டும் இல்லாமல் சிவபெருமானை பல்வேறு வார்த்தைகளினால் தக்ஷன் கேலியாக பேசி அவமானப்படுத்த அதை பொறுக்க முடியாமல் போன பார்வதி யாகத் தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இறந்து போனவள் உடலை தன் தோளின் மீது வைத்துக் கொண்டு உலகெங்கும் அதி பயங்கரமான கோபத்துடன் செல்லத் துவங்கிய சிவபெருமானை சாந்தப்படுத்த விஷ்ணுவானவர் தனது சக்ராயுதத்தை வீசி இறந்தவள் உடலை ஐம்பத்தி ஒரு துண்டுகளாக வெட்டி எறிய அவள் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்துமே சக்தி பீடங்கள் ஆயின. அப்படி அவள் உடலின் ஒரு பாகம் விழுந்த இடமே சாமுண்டா தேவி ஆலயம் உள்ள இடம் ஆகும் என்று இந்த ஆலயத்தில் சாமுண்டா எழுந்த வரலாற்றைக் குறித்துக் கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தில் காணப்படும் சாமுண்ட மாதா நான்கு கைகளைக் கொண்டு காட்சி தருகிறாள். அதில் மூன்று கைகளில் ஆயுதங்கள் இருக்க நான்காவது கையில் மனித தலை ஒன்றை பிடித்து வைத்துக் கொண்டு இருப்பது போல காணப்படுகிறது. வலது கையின் கீழே ஒரு அன்னப் பறவை உள்ளது. அன்னப் பறவை சாதாரணமாக சரஸ்வதி தேவியின் வாகனம் என்பார்கள் என்பதினால் இந்த தேவியின் அம்சம் குறித்து குழப்பம் உள்ளது. அது மட்டும் அல்ல, இந்த ஆலயத்திலுள்ள தனித் தன்மையுடன் கூடிய சாமுண்ட மாதாவின் உருவம் எந்த ஒரு புராணங்களிலும் அல்லது நூலிலும் காணப்படவில்லை என்பதும் வியப்பான செய்தியாகும் .
சாமுண்டா தேவியின் சரித்திரம் குறித்த பல கதைகள் உள்ளன. ஜலந்தரா எனும் ஒரு அசுரனுடன் சிவபெருமான் யுத்தம் புரிந்தபோது சாமுண்டா தேவியானவள் ருத்திரனுடன் சேர்ந்து சிவபெருமானின் சேனையின் தளபதியாக அந்த போரில் கலந்து கொண்டாள். ஆகவே அந்த போரில் சிவபெருமானுக்கு கிடைத்த வெற்றியைக் குறிக்கும் வகையில் சாமுண்டா தேவிக்கு ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு அதில் அவள் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறாள். அதில் உள்ள சாமுண்டாவை ருத்திர சாமுண்டா என்ற பெயரில் ஆராதித்து அழைக்கின்றார்கள். இன்னொரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் பல அறிய வரங்களைப் பெற்று அழிக்க முடியாமல் இருந்த சாண்டா மற்றும் முண்டா எனும் அசுரர்களை அழிப்பதற்காக பார்வதியின் இன்னொரு அம்சமான கௌஷிகா எனும் தேவியின் நெற்றியின் புருவத்தில் இருந்து சாமுண்டா தேவி வெளி வந்து யுத்தத்தில் கலந்து கொண்டாள். அவளை சண்டிகா தேவி என்று பெயரிட்டு அழைத்தார்கள். யுத்தம் முடிந்ததும் அதில் அவள் பெற்ற வெற்றியினால் மனம் மகிழ்ந்துபோன கௌஷிகா தேவி சாமுண்டா தேவிக்கு சாண்டி தேவி என பெயர் சூட்டினாள்.
தேவி மஹாத்மியத்தின் இன்னொரு புராணக் கதையின்படி தேவலோகத்தில் இருந்த தேவர்களை ஹிம்சை செய்து வந்த ஷும்பா மற்றும் நிகும்பா எனும் இரண்டு அசுரர்களை அழிக்க பார்வதி தேவி காளியின் அவதாரம் எடுத்து அவர்களை வதைத்தாள். ஷும்பா மற்றும் நிகும்பா எனும் அசுரர்களின் சேனைத் தலைவர்களாக சண்டா மற்றும் முண்டா என்பவர்கள் இருந்தார்கள். அவர்களை காளிதேவியே அழித்தாள். இதனால்தான் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற காளிக்கு சாமுண்டா என்ற பெயர் கிடைத்தது. ஆகவே சாமுண்டா தேவிதான் காளி என்றும் கூறுவார்கள்.
எது எப்படியோ, இந்த தேவாஸ் ஆலயம் எழுந்த வரலாறும் அங்குள்ளது. முன்னொரு காலத்தில் உஜ்ஜயினியை ஆண்டு வந்த மன்னன் விக்ரமாதித்தனின் சகோதரரே பத்ரஹரி என்பவர் ஆவார். அவர் தவ முனிவர், வடநாட்டில் உள்ள நாத் எனும் பிரிவை சேர்ந்தவர். அவர் தனிமையில் இருந்தவாறு தாம் தவம் இருக்க எண்ணி, இங்குள்ள மலைக்கு வந்து தவத்தில் அமர்ந்தார். அவருக்கு பல பக்தர்கள் உண்டு. ஆகவே அவர்கள் மலை மீது தவத்தில் இருந்த பத்ரஹரியை வந்து சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டு செல்வார்கள். அந்த மலை மீது நடகாசுரா என்றொரு அசுரனும் வாழ்ந்து வந்தான். அவன் பொறாமை கொண்டு பத்ரஹரியை வந்து சந்திக்கும் மக்களை ஹிம்சித்து பயமுறுத்தத் துவங்கினான். அது சக்தி பீடம் என்பதினால் தன்னை சந்திக்க வருபவர்கள் பயமின்றி மலைக்கு வந்து செல்ல வழிவகுத்து, அந்த அசுரனின் கொட்டத்தை அடக்குமாறு பார்வதியை பத்ரஹரி வேண்டிக் கொள்ள அவர் முன் காட்சி தந்த பார்வதி தேவியும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி சாமுடா தேவியாக உரு எடுத்து அந்த மலையில் இருந்த அசுரனை துரத்தித் துரத்தி அடித்து முடிவாக அவனை வதம் செய்தாள். இதனால்தானோ என்னவோ, நாத் பிரிவை சேர்ந்த பத்ரஹரியின் பெருமையினால் இந்த ஆலயத்தில் நாத் பிரிவை சேர்ந்தவர்களே பூசாரிகளாக உள்ளார்கள். மேலும் நாத் பிரிவை சேர்ந்த மகாயோகி கோரக்னாத்தும் இந்த பகுதியை சேர்ந்தவரே. சுமார் 250 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த செய்திகளின்படி இந்த மலையில் நாத் பிரிவை சேர்ந்த பல யோக, சித்த முனிவர்கள் தவத்தில் இருந்திருக்கின்றார்கள்.
துல்ஜா பவானி பற்றி சிறு செய்தியே உள்ளது. சமஸ்கிருதத்தில் அவளை கருணை மிக்கவள் எனும் வகையில் கருணேஸ்வரரூபி என்கிறார்கள். அவள் கருணை மிக்கவள், மன வலிமையை தருபவள் என்கின்றார்கள். அதனால்தான் 20 ஆம் நூற்றாண்டில் அவளை மன்னன் சத்ரபதி சிவாஜி வணங்கி வந்துள்ளார். 1864 ஆம் ஆண்டு சிவாஜி மன்னர் வழிவந்தவரும், மால்வாவின் தார் எனும் பகுதியை ஆண்டு வந்தவருமான நாராயண பவார் என்பவர் துல்ஜா பவானியின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பெரிய பாடலை இயற்றி உள்ளார். துல்ஜா பவானியை அவர் மஹா காளி, மஹா சரஸ்வதி மற்றும் திரிலோக சுந்தரி என்றும் புகழ்ந்து பாடினார். ஆகவே அவரே துல்ஜா பவானியின் ஆலயத்தை இந்த மலை மீது எழுப்பி உள்ளதாக கூறுகிறார்கள்.
இன்னொரு கதையின்படி சகோதரிகளான சாமுண்டா மற்றும் துல்ஜா பவானி இருவரும் இந்த மலையின் தெற்கு பக்கத்தில் இருந்த ஒரே குகையில் வசித்து வந்தார்கள். ஆனால் ஒருமுறை சின்ன மனத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். அதனால் அந்த மலையில் இருந்தே வெளியேறிவிட முடிவு செய்த இளையவள் சாமுண்டா கோபத்துடன் அங்கிருந்து கிளம்பியபோது அவளை அங்கு வந்த ஹனுமான் தடுத்து நிறுத்தி அவளை அந்த மலை மீதே வாசம் செய்யுமாறு வேண்டிக் கொள்ள அவளும் அந்த குகையின் பின்புறத்தில் செல்லத் துவங்கியபோது அங்கு ஒரு சுரங்கப் பாதை தோன்றியது. அதன் வழியே சென்றவள் பின்புறத்தில் அதாவது மேற்கு பகுதியில் ஒரு குகையை அமைத்துக் கொண்டு தங்கினாள். அவள் சென்றதும் சுரங்கப் பாதையும் மூடிக் கொண்டது. அந்த சுரங்கப் பாதை தோன்றிய இடத்தில் பெரிய சகோதரியின் குகையில் பெரிய பிளவு உள்ளதை இன்றும் காணலாம். இப்படியாக இளையவள் வட பகுதியிலும், மூத்தவள் தெற்கு பகுதியிலும் தனித் தனி குகையில் குடிகொண்டு அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி கூறி அருள் புரிந்து வருகிறார்கள்.
இரு சகோதரிகளின் பிரிவு தேவாஸை ஆண்டு வந்த மன்னர்கள் குடும்பத்திலும் எதிரொலித்தது. அந்த அரச குடும்பத்தில் மூத்த சகோதரர் துகோஜி ராவ் பவார் சாமுண்டா தேவியை தமது தெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்கி வர இளைய சகோதரர் ஜிவாஜி ராவ் என்பவரோ துல்ஜா பவானியை வணங்கி வரலானார்கள். அந்த இரு மன்னர்களும் தத்தம் தேவியை வணங்க அந்த மலை மீது தனி வழிப் பாதையையும், நீர் நிலையையும் அமைத்துக் கொண்டார்கள். ஆனால் தேவாஸ் நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் தடுப்பு சுவர் எதையும் அமைக்கவில்லை. ஆகவே அந்த மலைக்கு செல்லும் மக்கள் அனைவருமே, தாம் இரு மன்னர்களையும் மதிப்பதாக கூறும் வகையில் மலைக்குச் சென்றால் இரண்டு தேவிகளின் சன்னதிகளுக்கும் சென்று வணங்கி ‘ஜெய் மாதாகி ஜெய்’ என முழக்கம் இடுகிறார்கள்.
அந்த மலைக்கு செல்பவர்கள் தாம் தங்குவதற்கு தனி வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என தேவியை வேண்டிக் கொண்டு மலை மீது சிதறிக் கிடக்கும் சின்ன கற்களைக் கொண்டு சின்ன வீடு போல கட்டிவிட்டுச் செல்கிறார்கள். நவராத்திரி பண்டிகையின்போது வெகு தொலைவில் இருந்தும் லட்ஷக்கணக்கான பக்தர்கள் காலில் செருப்புக் கூட அணியாமல் நடந்தே வந்து ஆராதிக்கிறார்கள். இந்த மலையில் இரண்டு தேவிகளைத் தவிர ஹனுமான், பைரவர், அன்னபூர்ணா மற்றும் காளி தேவிக்கும் சிறிய அளவில் தனித் தனியே குகை ஆலயங்கள் உள்ளன. அதே போல இந்த மலை மீது முஸ்லிம் சமுதாய மக்கள் தவறாது வந்து வழிபட்டு வணங்கும் சின்ன மசூதியும், ஜெயின் மதத்தவர் வணங்கும் ஆலயம் ஒன்றும் உள்ளது.