பார்வதி தேவியின் அவதாரமே தேவி கபாலம்மா ஆவார். அந்த தேவிக்கு பெங்களூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபாலு எனும் ஒரு கிராமத்தில் ஆலயம் உள்ளது. கர்நாடகத்தின் ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ளது அந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மலை மீது காணப்படும் ஆலயமே கபாலம்மாவின் மூல ஆலயம் என்பதாக கிராமியக் கதை உள்ளது.
கிராமியக் கதையின்படி கும்பேஸ்வரனை வதம் செய்த பின் தேவி கபாலம்மா இந்த கிராமத்துக்கு வந்து கபாலு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாளாம். மலை மீது ஆலயம் இருந்ததினால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று அந்த ஆலயத்தில் வழிபட முடியாமல் இருந்தது. அந்த ஆலயமோ சுற்றி உள்ள இருபத்தி எட்டு கிராமங்களுக்கும் இருந்த ஒரே ஆலயமாக இருந்தது. ஆகவே இவற்றை மனதில் கொண்ட தேவி கபாலம்மா நந்தி தேவரான பசுவேஸ்வராவிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தனக்கு மலையின் கீழ் பகுதியில் ஆலயம் அமைத்தால் தான் அங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி அருள் புரிவேன் என சில பக்தர்களின் கனவில் தோன்றிக் கூறியதினால், ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதிடர்களின் ஆலோஜனைப்படி தற்போது உள்ள ஆலயத்தை நிறுவியதாக கிராமக் கதை உள்ளது.
தேவி கபாலம்மா யார்? அவளுடைய உருவம் என்ன? இந்த தேவி பார்வதி தேவியின் அம்சமான துர்கை தேவியின் அவதாரம் ஆவாள். அவள் பெண் குதிரை மற்றும் மாடு (இரு மிருகங்களின் கலவையைக் கொண்ட) என்ற இரு மிருகங்கள் கலந்த உருவை கொண்ட மிருகத்தின் மீது அமர்ந்து உள்ளாள். இந்த தேவியின் கதை மிகவும் அற்புதமானது.
கூறப்படும் வாய்மொழிக் கதையின்படி முன் ஒரு காலத்தில் கும்பேஸ்வரன் எனும் ஒரு அசுரன் பூமியை ஆண்டு வந்திருந்தான். அவன் மகிஷாசுரமர்தினி தேவியினால் வதம் செய்யப்பட்ட மகிஷாசுரனின் சகோதரர்களில் ஒருவன் ஆகும். அவன் தனது சகோதரனைப் போலவே மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அனைவரையும் வாட்டி வதைத்தான். தேவலோகத்தில் இருந்தவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. பல கொடுமைகளை செய்து மூவுலகையும் ஆண்டு வந்தவன் ஆட்சியில் ரிஷி முனிவர்களினால் யாகங்களையோ இல்லை வேறு எந்த சடங்குகளையோ செய்ய முடியவில்லை. யாராவது யாகங்கள் அல்லது சடங்குகளை செய்தால் அந்த இடத்தை கும்பேஸ்வரனுடைய ஆட்கள் வந்து அழித்து விடுவார்கள்.
இந்த நிலையில் ஆட்சி செய்து வந்தவனின் ஆட்சியில் எவருக்கும் நிம்மதி இல்லை. மும்மூர்த்திகளிடம் இருந்து அவன் பெற்று இருந்த வரத்தின் சக்தியினால் அவனை எவராலும் வெல்லவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை. அவனது உயிர் நிலை அவனது தலை பகுதியில் உள்ள கபாலத்தின் உள்ளே இருந்தது. அவனை அழிக்க வேண்டும் எனில் அது ஆண் அல்லது பெண்ணாக இருக்கக் கூடாது. அதே சமயத்தில் அலியும் இல்லாத ஆனால் ஆண் மற்றும் பெண் அம்சங்களைக் கொண்ட பிறவியாக இருக்க வேண்டும். மேலும் அந்த பிறவியின் வாகனம் அதுவரை இல்லாத இரண்டு மிருகங்களின் உருவிலான, குணத்திலான மிருகமாக இருக்க வேண்டும். பறவை மட்டும் அல்ல, உயிரினங்கள் மற்றும் வேறு எந்த பூச்சியும் கூட அவனைக் கொல்ல முடியாது. ஆகவே அவனை அழிக்க என்ன செய்வது எனது தடுமாறிய தேவலோக தேவர்களும் முனிவர்களும் பார்வதி தேவியிடம் சரண் அடைந்து அவனது தொல்லையில் இருந்து தம்மை விடுவித்து அவனைக் கொல்ல வேண்டும் என மன்றாடினார்கள்.
அவர்கள் கூறியதை பொறுமையுடன் கேட்ட பார்வதி தேவி கோபமுற அது அவள் முகத்தில் பிரதிபலித்தது. அடுத்த கணம் துர்கை போன்ற தோற்றம் கொண்ட ஒரு தெய்வம் பார்வதி தேவியின் உடலில் இருந்து வெளி வந்தது. ஆனால் வெளி வந்தவள் முகத்தில் கருகருவென மீசை மற்றும் ஒரு ஆணுடைய குணமும் இருந்தது. பாதி பெண் குதிரை, மீதி பாதி மாடு என்ற உருவத்தில் இருந்த மிருகத்தின் மீது அந்த தெய்வம் அமர்ந்திருந்தாள். அப்படிப்பட்ட மிருகத்தை அதற்கு முன்னர் எவருமே கண்டது இல்லை.
இப்படியான உருவில் வெளிவந்த தேவியானவள் அங்கிருந்த சாது சன்யாசிகளிடம் உடனடியாக கும்பேஸ்வரனின் ஆட்சியில் இருந்த வனப் பகுதிக்கு சென்று அவனை அழிக்கும் ஒரு யாகத்தை செய்யத் துவங்குமாறும், அந்த யாக சாலைக்கு தானே காவல் இருப்பதாகவும் கூறினாள். அதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் மிகவும் மகிழ்சியுற்று கும்பேஸ்வரன் ஆட்சியில் இருந்த வனத்துக்கு சென்று ஒரு பெரிய யாகத்தை செய்யத் துவக்கினார்கள். தனது ஆட்சியில் தன்னிடம் கேட்காமல் யாகம் செய்ய வந்தவர்களை அழிக்க வந்த கும்பேஸ்வரனையும் அவனது சேனையையும் வனத்தின் வாயிலிலேயே தேவி கபாலம்மா தடுத்து நிறுத்த பெரிய யுத்தம் மூண்டது. யுத்தத்தில் கடுமையாக காயம் அடைந்து விழுந்த அசுரன் கும்பேஸ்வரனை தேவி கபாலம்மா கையில் தூக்கி யாகத் தீயில் போட்டாள். அடுத்தகணம் அந்த அசுரனின் தலையும் அதற்குள் இருந்த கபாலமும் வெடித்துச் சிதறியது. இப்படியாக தேவி கபாலம்மாவின் உதவியினால் அழிக்க முடியாமல் இருந்த கும்பேஸ்வரனின் ஆயுளும் முடிந்தது. தேவி கபாலம்மா என அந்த தேவியை அனைவரும் போற்றி துதித்தார்கள். கபாலத்தை வெடிக்க வைத்து அசுரனின் ஆயுளை அழித்த தாயார் என்பதைக் குறிக்கும் வகையில் கபாலம் + அம்மா அதாவது தேவி கபாலம்மா எனப் பெயர் பெற்றாள்.
இந்த ஆலயத்தில் ஒரு மிக பெரிய மாடு உள்ளது. அதன் கொம்பில் எப்போதும் பக்தர்கள் தரும் காணிக்கை (ரூபாய்) மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தேவி கபாலம்மாவின் அருளை வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்கள் முதலில் அந்த மாட்டின் முன் சென்று தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே அவர்களுக்கு தேவி கபாலம்மாவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவர்களை அந்த மாடு தாண்டிச் சென்றால் தேவி கபாலம்மாவின் கருணை கிடைத்து விட்டதாக அர்த்தம். வந்த பக்தர்களின் எண்ணம் தவறானதாக இருந்தால் அது அவர்களை மூட்டித் தள்ளுமாம். அதன் அர்த்தம் தேவி கபாலம்மாவின் அருள் அவர்களுக்கு கிடையாது என்பதாகும். தேவி கபாலம்மா அமர்ந்து இருக்கும் மிருகத்தின் முன்புறத்தில் உள்ள பெண் குதிரை, தேவி திருபுரசுந்தரி பண்டாசூரனுடன் யுத்தம் செய்தபோது குதிரைப் படை தளபதியாக இருந்து கொண்டு அவளுக்கு உதவிய தேவி அஸ்வாரூடை அமர்ந்திருக்கும் குதிரையின் அம்சம் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அதை போல அந்த மிருகத்தின் மீதி பாதியான மாடும் தெய்வம் சிவபெருமானின் வாகனமான தெய்வீக நந்திதேவரின் அம்சம் எனக் கூறுகிறார்கள்.
சுற்றி உள்ள 28 கிராமங்களுக்கும் இந்த ஒரு ஆலயமே வழிபாட்டுத் தலமாக உள்ளதாகவும் இந்த தேவியை தூய்மையான மனதோடு பிரார்த்தனை செய்பவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும் கூறுகிறார்கள். கபாலு மலை மீதுள்ள ஆலயத்தைக் காட்டியது யார் என்பதோ அதன் வரலாறோ தெரியவில்லை. ஆனால் அது 1026 முதல் 1343 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஹோய்சாலா மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது ஒரு கூற்றாக உள்ளது. அதை போல தேவி கபாலம்மாவுக்கு பெங்களூரில் உள்ள உத்தரஹள்ளியில் ஒரு ஆலயம் உள்ளது. அது கட்டப்பட்ட விவரமும் சரிவர தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பண்டிதரோ தேவி கபாலம்மா அங்கு வந்து தங்கி தமது பக்தர்களுக்கு அருள் புரிவதாக என்னிடம் கூறினார்.
Kabalu,
Kabalu Post,
Sathnoor Hobli,
Kanakapura Taluk,
Ramanagara District,
Pin – 562126.