ஹைதிராபாத் உஜ்ஜயினி
மகாகாளி ஆலயம்
 சாந்திப்பிரியா 

ஆந்திரப் பிரதேசத்தில் பல புராதான ஆலயங்கள் உள்ளன.  சாதாரணமாகக் கூறுவது என்றால்  அனைத்து மாநிலங்களை விட ஆந்திராவில் புராதான மற்றும் சரித்திரப் புகழ் பெற்ற ஆலயங்கள் மிக அதிகம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே மிகப் பழமையான உஜ்ஜயினி மகாகாளி ஆலயம் ஆகும்.  இது சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இதன் வரலாறும் சுவையாகவே உள்ளது.

1813 ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த சுருட்டி அப்பையா என்பவர் ஆங்கிலேய அரசின் ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். அவரை மத்தியப் பிரதேசத்தில் இருந்த உஜ்ஜயினி நகருக்கு மாற்றினார்கள். சில காலம் அவர் அங்கு இருந்தபோது ஒரு முறை உஜ்ஜயினியில் கடுமையான பிளேகு நோய் பரவி இருந்தது . பலர் மரணம் அடைந்தார்கள். ஆகவே சுருட்டி அப்பையாவும் அவருடைய நண்பர்களும் உஜ்ஜயினி மகாகாளியின் ஆலயத்துக்குச் சென்று தமது வேலைகள் விரைவாக முடிந்து தாம் நல்லபடியாக ஊருக்கு திரும்பிச் சென்று விட்டால் ஹைதிராபாத்தில் உஜ்ஜயினி காளிக்கு ஒரு ஆலயம் அமைப்பதாக வேண்டிக் கொண்டார்கள். 1815 ஆம் ஆண்டு அவர்கள் நல்லபடியாக ஹைதிராபாத்திற்கு திரும்பினார்கள்.

 நவராத்தரி நாட்களில் அம்மனுக்கு
செய்யப்படும் பலவகை அலங்காரங்கள்

நல்லபடியாக ஊருக்குத் திரும்பி வந்தவர் வேண்டிக் கொண்டபடியே சுருட்டி அப்பையா 1815 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மரத்தினால் செய்த உஜ்ஜயினி காளியின் சிலையை செய்து வைத்து நான்கு சுவர்களைக கட்டி சிறு ஆலயத்தை அமைத்தார். ஆலயம் தற்போது உள்ள அதே இடத்தில் முன்னர் புதர்களும், பாறைகளும் மண்டிக் கிடந்தன. பல விதமான விஷ ஜந்துகள் வேறு சுற்றித் திரிந்தன. அந்த இடத்தில் ஒரு பாழடைந்த கிணறும் ருந்தது. ஆகவே அதை சுத்தம் செய்தார்கள். அப்போது கிணற்றுக்குள் இருந்து மனிக்யலம்மாவின் ஒரு சிலையும் கிடைத்தது. அதையும் ஆலயத்துக்குள் வைத்து வழிபட்டார்கள். சில காலம் சென்ற பின் 1864 ஆம் ஆண்டு வாக்கில் ஆலயத்தில் இருந்த மரத்திலான மகாகாளிக்கு பதில் கல்லினால் ஆன ஒரு புதிய சிலையை செய்து அந்த மகா காளி மற்றும் மனிக்யலம்மாவை சாஸ்திர சம்பிரதாயப்படி ஆலயத்துக்குள் பிரதிஷ்டை செய்தார்கள். மெல்ல மெல்ல ஆலயம் பெரியதாக கட்டப்படத் துவங்கியது. மக்களின் நன்கொடைகளை பெற்றுக் கொண்டு முதலில் ஆலயத்தின் மண்டபம் பெரியதாக்கப்பட்டது, கடைகள் கட்டப்பட்டு வருமானத்துக்கு வழி செய்யப்பட்டது. அவை அனைத்துமே சுருட்டி அப்பையாவின் மகன், பேரன், கொள்ளு பேரன் என வம்சாவளியினரால் செய்யப்பட்டது.

1914 ஆம் ஆண்டு ஒரு பொது காரியக் கமிட்டியை அமைத்து ஆலயத்தில் பூஜைகள் புனஸ்காரங்கள் என அனைத்தையும் செய்யத் துவங்கினார்கள். 1947 ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் பொது தர்மஸ்தாபன நிர்வாகத்தின் கீழ் இந்த ஆலயம் கொண்டு வரப்பட்டு நிர்வாகக் குழு மாற்றி அமைக்கப்பட்டு பிராமண பூசாரிகளை ஆலய பூஜைகளுக்கு நியமித்தார்கள்.

ஆலயத்தில் வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடா வருடம் ஆலய விழாக்களும் நடைபெறுகின்றன. ஆலய விழாவில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்கிறார்கள். வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆலயத்து தேவியின் ஜாத்ரா நடைபெற உள்ளது.  ஆலயத்திற்கு நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் நேரடியாக ஆலய நிர்வாகிக்கு அனுப்பலாம்.

ஆலய விலாசம்
Sri Ujjaini Mahakali Temple,
General Bazar,
Secunderabad ,
Andhra Pradesh,
INDIA
PIN – 500 003

————————————–
இந்த ஆலயம் குறித்த செய்திகள் மற்றும் படங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்த ஆலய இணையதளமான    http://sriujjainimahakalimatha.org/donations.html  தளத்துக்கு நன்றி