

தமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது. சாதாரணமாக அதீத சக்தி கொண்ட சமாதி ஆலயங்களில் நுழைந்ததும் நம்மை எதோ ஒரு உணர்வு அலை ஆக்ரமிப்பதைக் காணலாம். அந்த அதிர்வலைகள் எழுவது அந்தந்த சமாதிகளில் அடங்கி உள்ள மஹான்களின் அருளாசியாகும். நாங்கள் சென்னையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது.
சித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை நிகழ்த்தி உள்ளதாகவும், தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் குணப்படுத்தி வந்ததாகவும், அதனால் அவருக்கு பல பக்தர்கள் ஏற்பட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது. இன்றளவும் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த காலத்தில் வசித்து வந்திருந்த பெரும் மகான்கள், மஹரிஷிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதி வைக்கப்படாமல் காலம் காலமாக செவி வழி செய்தியாகவே தொடர்ந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட மகான்களின் சமாதிகளை தரிசிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அங்கு வருகை தரும் பக்தர்கள் மூலம் அறிய முடிந்தது.
சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை பொறுத்தவரை அவர் தபஸ்ஸில் அமர்ந்து இருந்தபோது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று உருவாகி வெளி வந்ததாகவும், அந்த சிவலிங்கத்தை பல காலம் அவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார் என்பதை நேரிலே பார்த்துள்ள பக்தர்களுடைய சந்ததியினர் மூலம் தெரிய வந்ததாம். அதனால்தான் அவருக்கு அத்தனை பக்தர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த சிவலிங்கத்தை அவர் எங்கு வைத்து விட்டு வந்துள்ளார் என்பதைக் குறித்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. அதை போல அவர் என்ன உணவு அருந்தினார், உடமைகள் எங்கு வைத்திருந்தார் என்பதையும் ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்பதின் காரணம் அவர் எந்த உடைமையையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதே. வழி நெடுக எங்கெல்லாம் சிவபெருமானின் ஆலயம் இருந்ததோ அங்கு சென்று ஆலய வளாகத்தில் ஏதாவது ஒரு மூலையில் தங்கி இருந்தவாறு தபத்தில் அமர்ந்து இருந்திருக்கின்றார். அங்கெல்லாம் பூஜைகளையும் செய்து இருந்துள்ளார். முடிவாக அவர் சென்னைக்கு வந்தவுடன் காரணீஸ்வரர் ஆலயத்தில் வந்து அவர் சமாதி ஆகும்வரை அங்கேயே தங்கி விட்டாராம்.
காரணீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தவர் அங்கு ஏதாவது ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவர் கண் விழித்திருக்கும் நேரங்களில் அங்கு வந்து அவரை வணங்கிய மக்களின் குறைகளை தீர்த்தார். வீபூதி தந்து வியாதிகளை குணமாக்கினாராம். காரணீஸ்வரர் ஆலயத்துக்கு தவறாது சென்று வந்த பக்தர்கள் பலரும் அந்த சித்த புருஷரை சந்தித்து ஆசி பெறாமல் வந்ததில்லை என்ற நிலை உருவாயிற்று. முடிவாக ஒருநாள் அவர் தாம் சமாதி அடைய வேண்டிய நாள் வந்து விட்டதை உணர்ந்தார். அங்கிருந்த பண்டிதரிடம் அதற்கு அனுமதியையும் கேட்டார். ஆனால் அந்த பண்டிதரோ ஆலயத்துக்குள் சமாதி அடைய அனுமதிக்க முடியாது எனக் கூறி விட்டார். அந்த காலங்களில் அனைத்து ஆலயங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதினால் பண்டிதரை அணுக வேண்டி இருந்தது. ஆகவே ஆலயத்துக்குள் சமாதி அடைய தனக்கு (சித்தர் குருலிங்க ஸ்வாமிகள்) அனுமதி மறுக்கப்பட்டதை கண்டவர் மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிச் சென்று ஒரு ஆற்று ஓரத்தின் பக்கத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டார்.
அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்த பண்டிதருக்கு திடீர் என வயிற்றுக் கோளாறும் பேதியும் ஏற்பட தாங்க முடியாத அவதிப்பட்டார். எந்த மருத்துவமும் அவருக்கு குணத்தை தரவில்லை. என்ன செய்வது என அவதிப்பட்ட அவருக்கு பலருக்கும் நோய்நொடிகளை குணப்படுத்திய சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் நினைவு வந்தது. அவரை தேடித் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். தனக்கு வந்துள்ள பொறுக்க முடியாத வயிற்று உபாதையைக் கூறி அதற்கு நிவாரணம் கேட்க கண்களைத் திறந்து பார்த்த ஸ்வாமிகள் தனது கமண்டலத்தில் சிறிது வீபுதியை போட்டுக் கலக்கி அந்த நீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார். அந்த தண்ணீரைக் குடித்த பண்டிதரின் உபாதை, அங்கிருந்த அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் உடனடியாக நின்றது. வியாதிகள் ஒன்றுமே இல்லாதது போல பண்டிதரும் சாதாரண நிலையை அடைந்தார்.
அதன் பின் பண்டிதர் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை ஆலயத்துக்கு வந்து சமாதி அடைய அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்வாமிகளோ ஆலயத்துக்குள் சமாதி அடைய விரும்பாமல் ஆலயத்தின் அருகில் இருந்த வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்குதான் 1886 or 1887* அன்று மதியம் 12 மணிக்கு தான் ஜீவ சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார் (*இது குறித்து முரண்பட்ட சில செய்திகள் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் நான் காரணீஸ்வரர் ஆலயத்திற்கும் ஜீவ சமாதிக்கும் நேரடியாக சென்று இருந்தபோது, ஸ்வாமிகள் ஜீவ சமாதி அடைந்தது 13-04-1866 என்று கூறினார்கள். ஆனால் பின் வருடங்களில் சில இணைய தளங்களில் அவர் ஜீவ சமாதி அடைந்தது 13-12-1886 என்றும் சிலவற்றில் அவர் சமாதி அடைந்தது 1887 ஆம் ஆண்டு என்றும் காணப்படுகின்றது. ஆகவே முரண்பாடுகளையும் குழப்பங்களையம் தவிர்க்க இந்த செய்தியை 1886 ஆம் ஆண்டோ இல்லை 1887 ஆம் ஆண்டோ ஜீவ சமாதி அடைந்து விட்டார் என மாற்றி உள்ளேன்).
ஸ்வாமிகள் கூறியதை போலவே சமாதி அடைவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பண்டிதர் செய்தார். அன்று காலை சித்தர் குருலிங்க ஸ்வாமிகள் தனது பக்தர்களுடன் நகரின் பல இடங்களுக்கும் ஊர்வலமாகச் சென்று சமாதி ஆலயம் உள்ள இடத்தை அடைந்து சமாதிக்குள் சென்று அமர்ந்து கொள்ள ஏற்கனவே ஸ்வாமிகள் கூறி இருந்தது போலவே சமாதியின் மேல்பகுதி அடைக்கப்பட்டது. அதன் மீது சமாதியை எழுப்பி ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள். தினமும் சமாதி ஆலயத்தில் ஆர்த்தியும் பூஜையும் நடைபெறுகின்றது. பிரதோஷ தினங்களில் பல பக்தர்கள் அங்கு சென்று அவரை வணங்கி ஆசி பெறுகின்றார்கள். வருடாந்திர விழாக்களும் அங்கு நடைபெறுகின்றன.

இன்றைக்கும் அந்த சமாதி ஆலயத்துக்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்களே தியானம் செய்தாலும் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் அருளாசி அவர்களுக்கு கிடைப்பதாக நம்புகின்றார்கள். அவர்களுடைய குறைகளும் விலகுகின்றனவாம். அடிக்கடி அங்கு சென்று ஸ்வாமிகளை வணங்கித் துதிக்கையில், மரத்தில் இருந்து விழுந்திடும் காய்ந்து போன இலைகளை போல மெல்ல மெல்ல பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கமும் குறைவதாக பக்தர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ அங்கு சென்று சில நிமிடங்களே கண்களை மூடி பிரார்த்திக்கும்போது கனத்திருக்கும் எண்ணங்கள் விலகிச் செல்வத்தையும் மனதில் இனம் தெரியாத ஒரு அமைதி நிலவுவதையும் நிச்சயமாக உணர முடிகின்றது. அதன் காரணம் அந்த மகான் சூட்சும வடிவில் சமாதியில் இருக்கின்றார் என்பதே. ஆலய விலாசம் இது:
10/92, காரணீஸ்வரர் கோவில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை.