தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது பகவான் நரசிம்ம பெருமாளின் சிங்கப்பெருமாள் கோவில். இந்த ஆலயம் சுமார் 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆலயம் முழுவதும் மலையின் குகைக்குள் அமைந்து இருக்க ஆலய மூர்த்தியும் அதனுள் மலையின் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் விஷேசம் என்ன எனில் பகவான் நரசிம்மர் அவதரித்தது பிரதோஷ காலத்தில் என்பதினால் பிரதோஷ காலத்தில் இங்கு பகவான் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. திருமஞ்சனம் என்பது அபிஷேகத்தை குறிக்கும் சொல் ஆகும். சிவ ஆகம முறைப்படி பகவானின் சிலை மீது தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பொருளை ஊற்றி செய்யும் புனித நீராட்டுதலை (குளிப்பாட்டுவதை) அபிஷேகம் என்பார்கள். அதையே வைஷ்ணவர்கள் திருமஞ்சனம் என்பார்கள். ஆகவே இரண்டுமே ஒரே செயலைக் குறிப்பிடுவது ஆகும்.

இந்த ஆலயத்தில் உள்ள பகவான் நரசிம்மரை பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கின்றார்கள். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை என்பதான அர்த்தம் உண்டு. அதனால்தான் சிவப்பு மலையில் காணப்படும் பகவான் நரசிம்மரை பாடலார்த்தி பகவான் நரசிம்மர் என்கின்றார்கள். பாடலார்தி பகவான் நரசிம்மருக்கு மூன்று கண்கள் காணப்படுகின்றன. கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்துள்ள அவர் வலது கையினால் அபாய முத்திரை காட்டியவாறும், மீதம் உள்ள மூன்று கையில் இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியும் இருக்க நான்காவது கையை தனது தொடையில் வைத்துக் கொண்டு உள்ளார். அனைத்து ஆலயங்களிலும் பகவான் நரசிம்மர் வலது காலை தொங்க விட்டுக் கொண்டு அதன் மீது மடித்து வைத்து உள்ள இடது காலை வைத்திருப்பார். ஆனால் சிங்கப் பெருமாள் ஆலயத்திலோ அதற்கு  மாறாக பகவான் நரசிம்மர் இடது காலை தொங்க விட்டுக் கொண்டு அதன் மீது வலது  காலை மடித்து வைத்துக் கொண்டு காணப்படுகின்றார். இந்த ஆலயம் ஹிரண்யகசிபு வதத்துடன் சம்மந்தப்பட்டது என்கின்றார்கள்.

பிரகலாத சரித்திரத்தில் ஹிரண்யகசிபுவை அழிக்க பகவான் நரசிம்மர் ஹிரண்யகசிபுவின் அரண்மனைத் தூணை உடைத்துக் கொண்டு வெளிவந்து அவரை அழித்ததாக கதை உள்ளது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தற்போது சிங்கப் பெருமாள் உள்ள இடமே என சிலரும், இல்லை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் வேறு என்று சிலரும் கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் தற்போது சிங்கப் பெருமாள் ஆலயம்  உள்ள இடம் மிகப் பெரிய காடாக இருந்ததாகவும், அங்கு வந்த மகரிஷி ஜாபாலி பகவான் மஹாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற தபத்தில் இருந்தார் என்றும், அப்போது அவர் பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்த நிகழ்ச்சியை கேட்டறிந்தவுடன் பகவானின் அதே கோலத்தைக் காண வேண்டும் என ஆசை ஏற்பட, அவர் பகவான் விஷ்ணுவிடம் அவர் ஹிரண்யகசிபுவை அழிக்க எடுத்த உக்ராஹ பகவான் நரசிம்மர் கோலத்தை தனக்கு அங்கு காட்ட வேண்டும்  எனவும்,அதன் பின் அவர் அங்கேயே ஒரு ஆலயத்தில் அமர்ந்து  கொண்டு பக்தர்களுக்கு அருளாசி தர வேண்டும் எனவும் வேண்டினார். இதனால்தான் சிங்கப் பெருமாள் ஆலயம் இங்கு எழுந்தது  என்பதாக கதை உண்டு.

பகவான் சிவன் மற்றும் பகவான் விஷ்ணு என்ற இருவருமே ஒருவரே என்ற தத்துவத்தை நிலை நாட்டும் விதத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். புராணங்கள் மற்றும் வேதங்களின்படி தெய்வங்களில் பகவான் சிவபெருமானுக்கு மட்டுமே மூன்று கண்கள் உள்ளது என்பது தெரிய வரும். ஆனால் பகவான் சிவபெருமானின் அத்தகைய தனித்தன்மை கொண்ட முக்கண்ணை சிங்கப் பெருமாள் ஆலயத்தில் மூன்று கண்களைக் கொண்ட உருவில்  பகவான் நரசிம்மர் வெளிப்படுத்துவதினால் ஹரியும், ஹரனும் (பகவான் சிவனும் பகவான் விஷ்ணுவும்) ஒன்றே என்ற தத்துவத்தை நிலைநாட்டவே அப்படிப்பட்ட காட்சியை பகவான் விஷ்ணு வெளிப்படுத்தினார் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

பகவான் சிவபெருமானும் தானும் ஒருவரே எனும் உண்மையை மகரிஷி நாரத முனிவருக்கு பகவான் விஷ்ணுவே கூறியதாக சில கிராமியக் கதைகளும் உண்டு.  இந்தியாவில் நிலவும் புராணக் கதைகளை விட இந்து சமய மேன்மைக் கதைகளும் கருத்துக்களும் இலங்கையில் பெருமளவில் உண்டு. அங்கு ஒரு காலத்தில் பகவான் சிவபெருமானின் வழிபாடு மற்றும் வரலாற்று மேன்மை மிக்க பல ஆலயங்கள் பெருமளவில் இருந்ததினால் கிராமிய புராணக் கதைகளும் அதிகம் உலவின. அவற்றில் பல ஆலயங்கள் அன்னியர்களினால் பின்னர் அழிக்கப்பட்டு விட்டாலும்  மக்களின் எண்ணங்களையும்   வாய்மொழிச் செய்தியாக காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருந்த  பல புராண தெய்வீக கதைகளையும் அழிக்க முடியவில்லை. அவற்றில் ஒன்றுதான் பகவான் விஷ்ணுவானவர் நாரத முனிவருக்கு கூறியதாக கூறப்படும் இந்தக் கதையும்.

முன்னொரு காலத்தில் மும்மூர்த்திகளுக்குள் யார் மேன்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டு முடிவுற்றதும் பல காலம் பொறுத்து மகரிஷி நாரதருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பகவான் சிவபெருமானிடம் சென்று அவர் கேட்டார் “ஐயனே எமக்கோர் சந்தேகம் உண்டு. நீங்களும்  பகவான் விஷ்ணுவும் ஒருவரேதானா? எமது சந்தேகத்துக்கான காரணம் உலகில் படைப்பதற்கு பகவான் பிரம்மனும், படைத்தவர்களைக் காப்பதற்கு பகவான் விஷ்ணுவும், படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு தாங்களும் படைக்கப்பட்டு உள்ளதாக அல்லவா நாம் அறிகின்றோம். ஆனால் எங்கெல்லாம் தீமைகள் இருந்தாலும் அவற்றை அழிக்க பகவான் விஷ்ணு அல்லவா அவதாரம் எடுக்கின்றார். நீங்கள் அப்படிப்பட்ட அவதாரங்களை எடுக்கவில்லை. அவ்வளவு ஏன், தீமைகள் பெருகிடும்போது அவற்றை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்றல்லவா புராணங்கள் கூறுகின்றன. அப்படி என்றால் படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு படைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் உங்களுடைய  தொழிலான அழித்தலை, படைத்தவர்களைக் காப்பதற்காக படைக்கப்பட்டதாக கூறப்படும் பகவான் விஷ்ணு ஏன் செய்கின்றார்?  நீங்கள் ஏன் எதையுமே நேரடியாக அழிக்க எந்த ஒரு அவதாரமும் எடுக்கவில்லை?”  அதைக் கேட்ட சிவபெருமான் சிரித்துக் கொண்டே அந்த கேள்வியை பகவான் விஷ்ணுவிடம் சென்று கேட்குமாறு கூறி அனுப்பினார்.

பகவான் விஷ்ணுவிடம் சென்று அதே கேள்வியை மகரிஷி நாரதர் எழுப்ப மைதியாக பகவான் விஷ்ணு அவருக்கு கூறினார் ‘நாரதா இந்த உலகில் படைப்பதற்கு பகவான் பிரம்மனும், படைத்தவர்களைக் காப்பதற்கு நானும், படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு பகவான் சிவபெருமானும் படைக்கப்பட்டு உள்ளது உண்மைதான். அனைத்து தெய்வங்களும் ஒரு சக்தியில் அதாவது பரமாத்மனில் இருந்து அதாவது பரமாத்மன் எனும் சிவசக்தியின் இருந்து வெளிவந்தவர்கள்.   அதனால்தான் நாங்கள் பரமாத்மாவின்  உடலில் இருந்து வெளிப்படும்  உருவங்களாக இரு பக்கங்களிலும் இரண்டு தலைகளுடன் காணப்படுகின்றோம். தெய்வங்கள் எனப்படும் அனைவருமே பரமாத்மன் எனும் சிவசக்தியின் மாய உருவங்கள். படைத்தவற்றைக் காக்க வேண்டும் எனில் முதலில் தீமைகளை அழிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் தீய சக்திகள் வெளிப்படும்போது அவற்றை அழிக்க வேண்டும் எனில் புதிய மற்றும் விசேஷ சக்திகளை பெற்ற அவதாரங்கள் உருவாக வேண்டும் என்பது அவர்கள் பெற்று இருந்த வரங்களின் கடுமையான விதியாக இருக்கும். ஆண் தெய்வங்களில் அப்படிப்பட்ட புதிய அவதாரங்களை ஒவ்வொரு யுகத்திலும் நான் எடுக்க வேண்டும் என்ற நிலையை எண்ணெய் படைத்த பரமாத்மன் ஏற்படுத்தினார். தீயவர்களை அழித்து அனைவரையும் காப்பாற்றச் செல்லும் இடங்களில் எல்லாம் முதலில் தீமைகளை அழிக்க வேண்டி உள்ளது.  நானோ  அழிக்கும் சக்தியைக் கொண்டவராக படைக்கப்படவில்லை. ஆகவே நான் புதிய அவதாரம் எடுத்து தீமைகளை அழித்து படைப்புக்களைக் காப்பாற்றச் செல்லும்போது, தீமைகளை அழிக்கும் தன்மையை தன்னிடம் இருந்து எனக்கு பகவான் சிவபெருமான் கொடுத்து அனுப்புவதினால் அவருடைய சக்தியைக் கொண்டே நான் தீமைகளை அழித்து படைப்புக்களைக் காப்பாற்றுகிறேன்.  ஆகவே நான் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்போதும் பகவான் சிவபெருமானின் சக்தியையும் அடக்கிக் கொண்டுதான் செல்கின்றேன். அவர் சக்தி இல்லாமல் நான்  இல்லை என்பதே உண்மை என்பதால் நானும் பகவான் சிவபெருமானின் வெளிப்பாடே. இந்த பிரபஞ்சத்தில் தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள விதியின்படி அந்தந்த தெய்வங்கள் சில நாடகங்களை நடத்திக் காட்டி படைப்புக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதினால் நாங்கள் அனைவரும் வெவ்வெறு தன்மைகளைக் கொண்ட, வெவ்வெறு கருத்துக்களைக் கொண்ட நிலைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமே தவிற  மற்றபடி நாங்கள் அனைவருமே பரமாத்மன் எனும் சிவசக்தியின் மாய பிம்பங்களே. ஆகவே இனியும் நீங்கள் குழப்பம் அடையாத தேவை இல்லை’ என்றார்.  அதைக் கேட்ட நாரதர் மனக் குழப்பம் நீங்கிச் சென்றார்.

இதனால்தான் பகவான் சிவபெருமான் மற்றும் பகவான் விஷ்ணு இருவரும் தாங்கள் வெவ்வெறானவர்கள் அல்ல எனும் தத்துவத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க சில ஆலயங்களில் இருவரின் தன்மையை சேர்த்தே காட்சி தருகின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் சிங்கப்பெருமாள் ஆலயமும் ஆகும். இந்த ஆலயத்தில் பகவான் சிவபெருமானுக்கே உரிய மூன்றாவது கண்ணுடன் காணப்படும் பகவான் நரசிம்மருடைய மூன்றாவது கண்ணை பூஜையின்போது பண்டிதர்கள் காட்டுவார்கள். அப்படியாக அந்தக் கண்ணை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை பார்ப்பவர்களின் பல தீய பலன்களும் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.இந்த ஆலயத்து மூலவரை கடன் தொல்லைகள் தீரவும், திருமண தடைகள் விலகவும் மற்றும் சனி பகவானின் தோஷம் விலகவும் வழிபடுவார்கள்.

ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மலையை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மலைக்குகையில் பாறையில் பகவான் பாடலாத்ரி நரசிம்மர் செதுக்கப்பட்டு உள்ளார். ஆகவே கற்பக்கிரகத்தை  பிரதர்ஷணம் செய்ய வேண்டும் எனில் அந்த சிறிய மலை குன்றை சுற்றியே பிரதர்ஷணம் செய்ய வேண்டும். அதற்கு உதவிடும் வகையில் மலையை சுற்றிவர படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆலயத்தின் தாயாரின் பெயர் ஸ்ரீ அஹோபில வள்ளித் தாயார். அவரைத் தவிர பன்னிரண்டு ஆழ்வார்களின் சிலைகளும் மூல சன்னதியிலும், உற்சவ மூர்த்தியாகவும் வைக்கப்பட்டு உள்ளன.  ஆலயத்துக்குள் பகவான் ப்ரஹ்லாத வரதர்  ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ப்ரணவக்கொடி விமானத்தின் அடியில் காட்சி தருகிறார் (விமானம் என்பது கர்பக்கிரகத்தின் மேல் எழுப்பப்பட்டு உள்ள அமைப்பாகும்).

ஆலயத்தின் பின் பகுதியில் அழிச்சல் எனும் வரம் தரும் ஒரு மரம் உள்ளது. திருமணத் தடைகள் விலக, குழந்தை பாக்கியம் பெற பிராத்தனைகள் செய்பவர்கள்தமது ஆடையில் இருந்து நூலை உருவி எடுத்து அந்த மரத்தின் மீது காட்டுவார்கள். அப்படி செய்தால் அவர்களது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆலயம் காலை ஏழு மணி முதல் மதியம் 12 வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரை பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.