சித்தாடி காத்தாயி அம்மன்
சத சண்டி மஹா யாகம்
சாந்திப்பிரியா 

போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது.  சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும் பக்திபூர்வமாக திரண்டு இருந்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் குமுழி இருந்த மண்டபத்தில் காலை ஆறு மணி முப்பது நிமிடத்துக்கு விழா துவங்க சிவாச்சாரியர்கள் கலச பூஜையை செய்து முடித்தனர்.  அடுத்து சதசண்டி மகா ஹோமம் துவங்கியது. ஆறு ஹோம குண்டங்களில் ஆறு சிவாச்சாரியார்கள் அமர்ந்து இருக்க தலைமை சிவாசாரியார் மந்திரங்களை ஓதத் துவந்த ஹோம குண்டத்தில் அமர்ந்து இருந்த சிவாச்சாரியார்களும் அதை உச்சரித்தவண்ணம் ஹோம குண்டத்தில் யாகப் பொருட்களை  போடத் துவங்கினார்கள்

முப்பத்தாறு கோடி தேவர்களும் அங்கு கூடி இருந்ததாக நம்பப்பட்ட அங்கு அவர்களை பூஜிக்கும் விதமாக வண்ணமயமான 3600 ரவிக்கை துணிகள்- அதில் முடித்து வைக்கப்பட்டு இருந்த சில யாகப் பொருட்களுடன் – ஹோம குண்டங்களில் போடப்பட்டன. சங்கல்பம் செய்து அமர்ந்து இருந்த ராமகிருஷ்ணன், ராமதாஸன், விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணன் போன்ற பக்தஜன டிரஸ்ட்  அங்கத்தினர்கள் மற்றும் பக்தர்கள் பக்திபூர்வமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களும் பசியின்றி யாகம் முடியும்வரை அங்கு நிகழ்சிகளில் கலந்து கொண்டவாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காப்பி மற்றும் மோர் போன்ற பானங்களும் தொடர்ச்சியாக தரப்பட்டு வந்தன. சதசண்டி யாக பூஜை சுமார் மூன்று மணி நேரம் நடந்து முடிந்ததும், கன்யா சுகாசினி பூஜை மற்றும் வடுக பிரும்மச்சாரி பூஜை  தொடர்ந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காத்தாய் காட்சி  அளித்தாள்  . நான்காம்  தேதியன்று நாங்கள்   சென்று இருந்தபோது குழந்தை  வடிவில் காட்சி தந்தாள். சந்தனக் கலரில் அவள் உருவம். கண்களில் மை தீட்டி இருந்தது போல கருப்பு விழிகள் , அதன் மீது புருவங்கள். முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல இருந்தது.  அந்த காட்சியும் கண்களை விட்டு அகல மறுக்கின்றது.

அதைத் தொடர்ந்து மஹா பூரணார்த்தியும்  கலச மகாபிஷேகமும் நடைபெற்றது. தீபாராதனை முடிந்ததும், உள்ளே பச்சையம்மன் மற்றும் காத்தாயி கருவறைக்கு வெளியே பச்சைப் போடுதல் நடைபெற்றது. அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, சில பெண்மணிகள் அதை செய்து முடித்ததும் அனைத்து பக்தர்களும் வரிசையாக உள்ளே சென்று ஒரு கைப்பிடி அளவு பச்சை போடும் நிகழ்ச்சியில் அரிசியை  போட்டு வணங்கினார்கள்.  என வாழ்கையில் எனக்கும்  என்னுடைய மனைவிக்கும் அந்த வாய்ப்பு  கிடைத்தது.  என் குடும்பத்தில் என்னுடைய மகன், மருமகள், பேரன் மற்றும் பேத்தி உடல் நலத்தோடு வாழ்கையில் உயர்வோடு இருக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு வந்தோம்.  அதன் பின் முடிவாக மகா ஆராதனை நடைபெற்று  முடிந்தது.

இதில் கூற வேண்டிய விஷயம் என்ன என்றால் அனைத்து நிகழ்ச்சிகளும் முறையாக ஏற்பாடு செய்து இருந்தது போல ஒன்றன் பின் ஒன்றாக தடங்கல் இன்றி தொடர்ந்து நடந்தது. அங்கு பந்தா இல்லை. நான் பெரியவன், நீ பெரியவன், எனக்கே இந்த சாமி சொந்தம் என்ற பாகுபாடுகளோ பேதங்களோ இல்லாமல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.  அந்த ஆலயத்தை, இதை நான் செய்தேன், அதை நான் செய்தேன் என  ஒரு குறிப்பிட்ட மனிதர்களே ஆக்ரமித்துக் கொண்டு அதிகாரம் செய்யாமல் அனைத்துமே மாடு பூட்டப்பட்ட வண்டி ஓடுவது போல சென்று கொண்டே இருந்தது.

காவல் தெய்வங்களும் நன்றாகவே  ஆராதிக்கப்பட்டு இருந்தன.  சடா முனிக்கு மிகப் பெரிய – சுமார் ஐநூறு அல்லது ஆயிரம் இருக்கும் என நினைக்கின்றேன் – எலுமிச்சை பழம் தொடுத்த  மாலை போடப்பட்டு இருந்தது.

அது மட்டும் அல்ல காலை முதலிலேயே விழா முடியும்வரை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் – ஏழை எளியவர் என்ற பேதம் இன்றி நூறு ரூபாய், ஐம்பது  ரூபாய் என கொடுக்க திரு விஸ்வநாதன் கை வலியையும் பொருட்படுத்தாமல்   தொடர்ந்து ரசீதுகளை கொடுக்கக் கொடுக்க அதைக் காட்டி  அனைவரும் ஒரே மாதிரியான பிரசாத பையை  பெற்றுக் கொண்டனர். இது மிகவும் வியப்பான  விஷயமாக இருந்தது.  தெய்வத்தின் முன் அனைவரும் சமமே என்ற கருத்தை பிரதிபலித்தது.  ஆலயத்துக்கு ஏழை எளியவர்கள்  தந்த அந்த நூறு அல்லது ஐம்பது ரூபாய் அவரவர் இதயத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.  நூறு ரூபாய் தந்தவனுக்கும் அதே நடைமுறை, பத்தாயிரம் ரூபாய் தந்தவனுக்கும் அதை நடைமுறை என பேதம் இன்றி நடந்து முடிந்த காட்சி கண்களை  விட்டு நகர மறுக்கின்றது.

விழா நிறைவு பெற்றதும் வந்திருந்த அனைவரும் உணவு அருந்தி விட்டுச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்றவர்களின் மனமும் வயிறும் நிறைந்தே வெளியேறினார்கள். நடந்து முடிந்த அது அதி அற்புதமான விழா . எங்களின் குல தெய்வம்  எங்களைக் கைவிடாது. எங்களை காத்து ரட்ஷிப்பாள்  என்பது திண்ணம்.