கேதார்னாத் மான்மியம்
பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும். திருமால் நரநாராயணராக கேதார்னாத்தில் சிவபெருமானை வேண்டித் தவம் இருக்க அவர் திருமாலுக்குக் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாராயணரும் சிவபெருமானை அந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்த, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் அங்கயே ஜோதிர் லிங்க வடிவத்தில் இருப்பேன் என்று அவருக்கு உறுதி கூறினார். அத்தகைய புனித தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிவபெருமானின் ஆலயத்தை ஸ்தாபனம் செய்தார். அங்கு சிவபெருமானை தியானித்தபடி விஷ்ணுவும் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகமாகும்.
இன்னொரு கதையின்படி பார்வதி சிவனுடன் ஐக்கியமாகி தானும் அவர் அவதாரத்தில் பாதியானவள் என்பதை உலகிற்கு நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக கேதார்னாத்துக்குச் சென்று தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றுக் கொண்டு அர்த்தனாரீஸ்வரர் அவதாரத்தை எடுத்துக் கொண்டாள். ஆகவே பார்வதி வந்து தவம் செய்த இடம் என்பதினாலும் கேதார்னாத் முக்கியத்துவம் பெற்றது. இதன் கதை என்ன என்பதை பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட்டக் கதையில் கூறுகிறேன். அதற்க்கு முன்னால் இதைப் படியுங்கள்.
கேதார்னாத்துக்கு செல்பவர்கள் பஞ்ச கேதார் யாத்திரை எனப்படும் ஐந்து சிவன் ஆலயங்களையும் தரிசிக்காமல் வரமாட்டார்கள். பஞ்ச கேதார் யாத்திரை என்பது என்ன? அதன் கதை என்ன ?
குருஷேத்திரத்தில் மகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ராஜ்ய பரிபாலனத்தை தமது சந்ததியினரிடம் ஒப்படைத்து விட்டு அமைதி தேடி மோட்ஷம் அடைய பத்ரினாத் மற்றும் கேதார்னாத் ஆலய விஜயத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் தமது சந்ததியினரை கொன்று குவித்ததினால் அவர்களுக்கு ஏற்பட்டு இருந்த தோஷத்துக்கு விமோசனம் பெறுவதற்காகவும் கேதார்னாத்துக்கு வந்தார்கள். ஆனால் அங்கு வந்ததும் சிவபெருமான் அங்கு இல்லையென்றும் அந்த நேரத்தில் அவர் இமயமலையில் உள்ள வனப் பிரதேசத்தில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பாண்டவர்கள் சிவபெருமானை தேடிக் கொண்டு இமயமலையை நோக்கிச் சென்றார்கள். வழி நெடுகிலும் வனப் பிரதேசமாக இருந்ததினால் அவரை காட்டில் தேடி அலைந்தார்கள். ஆனால் எத்தனைத் தேடியும் சிவபெருமானைக் அவர்களினால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் விடா முயற்சி கொண்டு அவரைத் தேடி அலைந்தவர்கள் ஒருநாள் மனம் வெதும்பிப் போய் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார்கள். அப்போது வனத்தின் நடுவில் இருந்து ஒரு குரல் கேட்டது.