மகாபாரதத்தில் வரும் ஜராசந்தா விஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அவருடைய தந்தையான பிரஹத்திரன் என்பவர் மகத நாட்டு மன்னன். மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா எனும் அசுர தேவதையையையும் அவளது குழந்தைகளையும் யார் ஒருவர் வணங்கித் துதித்து வருவார்களோ அந்த வீட்டில் வேறு எந்த ஒரு துஷ்ட தேவதையும் நுழைய முடியாது என்ற வரத்தை அவள் பெற்று இருந்தாள் என்பதினால் பிரஹத்திரன் அந்த அசுர தேவதையை துதித்தும் வணங்கியும் வந்தார். ஆகவே அந்த அசுர தேவதையும் அவர் மீது நல்ல அப்பிராயம் வைத்துக் கொண்டு இருந்தாள். தக்க சமயம் வரும்போது அவருக்கு தான் உதவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருந்தாள்.
பிரஹத்திரன் காசியை சேர்ந்த ஒரு மன்னனின் இரண்டு பெண்களை மணந்து கொண்டார். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். புகழ் பெற்ற அந்த அரசனுக்கு அனைத்து வசதிகளும் வாழ்வில் இருந்தாலும் அவனுக்கு மூலமும் பிள்ளை ஒன்று பிறக்கவில்லையே என்ற பெருங் குறையும் இருந்தது. ஆகவே அவர்கள் மூவரும் வாழ்க்கையில் வெறுப்புற்று காட்டுக்கு சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்கள். அவரிடம் அவர்கள் தமக்கு ஒரு பிள்ளை பிறக்க அருள் புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். தமக்கு பரிபூர்ணமான மனதுடன் அவர்கள் சேவகம் செய்வதைக் கண்ட சந்திரகௌசிகர் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக உறுதி தந்தார். அதன்படி அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு தவத்தில் இருந்தபோது அவர் மடியில் மரத்தில் இருந்து ஒரு பழம் விழுந்தது. ஆகவே அதை நல்ல சகுனமாகக் கருதி அந்தப் பழத்தை எடுத்து அதில் தனது தெய்வீக சக்தியையும் சேர்த்து அவர்களுக்குக் கொடுத்து அதை யாராவது ஒருவள் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்றார். ஆனால் அக்கா தங்கைகளோ தம் இருவருக்குமே குழந்தை வேண்டும் என்பதற்காக அதை இரண்டாக வெட்டி இருவரும் உண்டார்கள். அதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளையும் ஒவ்வொருவளுக்கும் ஒரு பாதி என இரண்டு பாகமாக பிறந்தன. பிறந்த அதற்கு உயிரும் இல்லை.
இப்படி பாதிப் பாதியாக ஒரு குழந்தைப் பிறக்குமா என பயந்து போன பிரஹத்திரன் அவற்றை தூக்கி எரிந்து விடுமாறு கூறினான். அவர்கள் செய்வதை எல்லாமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்த ராக்க்ஷசியான ஜரா அவர்களுக்கு தம்மால் இந்த நேரத்திலேயே உதவ முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அப்படி தூக்கி எறியப்பட்ட குழந்தைகளின் இரண்டு சடலங்களையும் எடுத்து வந்து ஒன்றாக சேர்த்து தன் சக்தியை அதற்கு செலுத்த அவை இரண்டும் ஒன்றாகி ஒரு குழந்தையாயின. அவற்றைக் கொண்டு போய் அந்த ராக்க்ஷசி ஜரா மன்னனிடம் கொடுத்து அது எப்படி தனக்குக் கிடைத்தது என்பதையும் கூற அவன் தன் பிள்ளை உயிருடன் வந்து விட்டதைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். அது தன்னுடைய குழந்தையே என்று புரிந்து கொண்ட மன்னனும் அந்த ராக்க்ஷசியின் பெயரான ஜாராவையும் சேர்த்து அந்த குழந்தைக்கு ஜராசந்தா என்று பெயரிட்டான். அப்போது அங்கு வந்த சந்திரகௌசிக முனிவரும், ஜராசந்தாவை பார்த்து விட்டு, பிற்காலத்தில் அவன் சிவபக்தனாக விளங்குவான் என்று கூறி விட்டுச் சென்றார். அது மட்டும் அல்ல அவன் பிறந்ததைப் போலவே அவன் உடலை இரு துண்டுகளாக்கி அந்த இரண்டையும் எதிறெதிற்புறங்களில் இருக்குமாறு இரு பக்கங்களிலும் வீசி எறிந்தால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் அருள் புரிந்தார்.
ஜராசந்தா, மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் பெற்றான். பல மன்னர்கள் மீதும் படையெடுத்து அவர்கள் நாட்டைப் பிடித்து மகத நாட்டை அனைத்து திசைகளிலும் விரிவாக்கி தன்னை மகத நாட்டின் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். காலப்போக்கில் ஒருமுறை அவனுக்கும் கிருஷ்ணருக்கும் பகை மூண்டது. அதற்குக் காரணம் ஜராசந்தாவின் இரண்டு மகள்களே. ஜராசந்தாவின் இரண்டு மகள்களை கம்சன் மணந்து கொண்டிருந்தான். ஒருமுறை கம்சனை கிருஷ்ணர் கொன்று விட்டதினால் ஜராசந்தாவின் மகள்கள் தமது தந்தையிடம் போய் கிருஷ்ணர் தமது கணவரைக் கொன்று விட்டதைக் கூறி அழுது கிருஷ்ணரை அதற்கு பழிதீர்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆகவே தந்து மகள்களை விதவையாக்கிய கிருஷ்ணரை நிச்சயம் அதற்கு பழி வாங்குவதாக ஜராசந்தா சபதமும் செய்தான். அவன் மீண்டும் மீண்டும் பதினெட்டு முறை கிருஷ்ணர் ஆண்டு வந்த மதுரா மீது படையெடுத்து அதை நாசம் செய்தான். விதியின் பயனாக கிருஷ்ணரால் அவனைக் கொல்லவும் முடியவில்லை, வெற்றியும் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு அப்படி சாபம் கிருஷ்ணருக்கும் இருந்தது. ஆகவே ஜராசந்ராவை கொல்வது என்பது பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் மூலம் மட்டுமே முடியும் என்ற விதி இருந்ததை அறிந்திருந்ததினால் அதை செய்வதற்கு ஒரு நாடகம் ஆடினார்.
பல நாடுகள் மீதும் படையெடுத்து அந்த யுத்தங்களில் ஜராசந்தா பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான். அதனால் கிருஷ்ணர் யுதிஷ்டரை தூண்டிவிட்டு இராஜசூய யாகம் ஒன்றை செய்யுமாறு கூறினார். அந்த யாகத்தை செய்வதற்கு சில விதி முறைகள் இருந்தன. அதில் முக்கியமானது அந்த யாகத்தை செய்யும் மன்னனின் தலைமையை மற்ற மன்னர்களும் ஏற்கவேண்டும். ஆனால் மன்னர்கள் பலரும் ஜராசந்தாவின் சிறையில் இருந்ததினால் அவர்களால் யாகத்தை செய்யும் மன்னனின் தலைமையை ஏற்பதாக உறுதி கூற முடியவில்லை. ஆகவே அவர்களை விடுதலை செய்யுமாறு ஜராசந்தாவிடம் கேட்க கிருஷ்ணரும் தன்னுடன் அர்ஜுனன் மற்றும் பீமனையும் அழைத்துக் கொண்டு ஜராசந்தாவிடம் சென்றார். அவனிடம் சென்றவர்கள் யுதிஷ்டரின் யாகத்திற்கு தலைமை செய்பவராக யுதிஷ்டரை ஏற்றுக் கொள்ள மற்ற மன்னர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் அவர்களது வேண்டுகோளை ஏற்க ஜராசந்திரா மறுத்து அப்படி செய்ய வேண்டும் எனில் அந்த மூவர்களில் யாராவது தன்னுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற வேண்டும் என நிபந்தனைப் போட்டார். அவர்கள் மூவரில் பலசாலியான பீமனும் ஜராசந்திராவுடன் மல்யுத்தம் செய்ய சம்மதித்தான்.
இருவருக்கும் பலமணி நேரம் யுத்தம் நடந்தது. ஏற்கனவே கிருஷ்ணர் அறிவுறுத்தி இருந்தபடி பீமன் எத்தனை முறை ஜராசந்தாவை இரண்டாக கிழித்து எறிந்தாலும் அவன் உடல் ஒன்றாக சேர்ந்து வந்து கொண்டே இருக்க அவன் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து யுத்தம் செய்தான். ஆனால் பீமன் கிருஷ்ணர் தனக்கு கூறி இருந்ததில் சிறு தவறை செய்து கொண்டே இருந்ததினால்தான் ஜராசந்தாவை அவனால் எளிதில் வெற்றிக் கொள்ள முடியாமல் இருந்தது.
ஆகவே அவன் யுத்தம் செய்து கொண்டு இருந்தபோது கிருஷ்ணர் ஒரு தர்பையை எடுத்து அதை இரண்டாகப் பிளந்து அதை எதிரெதிர் திசைகளில் கையை குறுக்காக மாற்றி போட்டதும், அதை புரிந்து கொண்ட பீமனும் மீண்டும் ஜராசந்தாவை இரண்டாக கிழித்து இடது கையில் இருந்த உடலை வலது பக்கத்திலும், வலது கையில் இருந்த உடலை இடது பாகத்திலும் தூக்கி எறிய ஜராசந்தாவின் உடல்கள் ஒன்று சேராமல் அவனும் மடிந்தான். சிறைப்பட்டு இருந்த மன்னர்களும் விடுதலை அடைந்தார்கள்.