இலங்கை கதிர்காம
ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு
சாந்திப்பிரியா
பாகம்-4
கல்யாணகிரி என்பவர் இந்தியாவின் வடநாட்டில் இருந்து கதிர்காமனுக்கு வந்த பெரும் தபஸ்வி. அவர் இந்தியாவின் வட பகுதியில் இருந்த பத்து சன்யாச வம்சத்தினர்களில் ஒரு சன்யாச வம்சத்தை சேர்ந்தவர். தன்னை தவிக்க விட்டு கதிர்காமத்துக்குச் சென்று வள்ளியுடன் தங்கி இருந்த ஸ்கந்தன் எனும் முருகனை திரும்பவும் தன்னிடம் (இந்தியாவுக்கு) அழைத்து வர வேண்டும் என்று முருகப் பெருமானின் மனைவியான தெய்வானை கல்யாணகிரி எனும் அந்த தபஸ்வியை கேட்டுக் கொண்டதினால் அவர் அவளுடைய தூதுவராக முருகனை தேடிக் கொண்டு இங்கு வந்தார் என்று கூறுகிறார்கள். ஆகவே தெய்வானையின் தூதுவராக கதிர்காமனுக்கு வந்தவர் எங்கு தேடியும் முருகனை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு அவரை நேரில் காண வேண்டும் என்பதற்காக சட்கோண யந்திரம் ஒன்றை அமைத்து சடாக்ஷரா என்ற மந்திரத்தை பிரயோஹித்து ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு பன்னிரண்டு ஆண்டு காலம் பெரும் தவத்தில் அந்த வனத்தில் அமர்ந்திருந்தார். சட்கோண யந்திரம் என்பது முருகப் பெருமான் பிறப்புக்குக் காரணமாக சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு பொறிகளை ஆவாஹிக்கும் விதத்தில் அமைந்த யந்திரமாகும். அவர் அந்த யந்திரத்தில் மந்திரத்தை ஓதி ஆவாஹிக்க, ஆவாஹிக்க அந்த யந்திரமும் சக்தி மிக்க யந்திரமாகி விட்டது.
கல்யாணகிரி தவம் செய்து கொண்டு அங்கிருந்த சமயத்தில் வேத்தா எனும் வேடர்களின் இனத்தை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் அங்கு வந்து அமர்ந்திருப்பார்களாம். பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும், இரவும் பகலும் ஆராதனை தொடர்ந்து செய்தவண்ணம் இருந்தும் கூட ஸ்கந்தனைக் பார்க்க முடியவில்லை என்பதினால் ஒருநாள் மனம் தளர்ந்து போன கல்யாணகிரி தான் தவத்தில் இருந்த மரத்தடியிலேயே படுத்து உறங்கி விட்டார். அப்போது அந்த சிறுவன் வந்து அவரை தட்டி எழுப்பினான். அவரை தட்டி எழுப்பிய பையன் அவர் தூக்கத்தைக் கலைத்து விட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடனடியாக தன்னுடன் வருமாறு செய்கையும் காட்டிவிட்டு அங்கிருந்து மேனிக் கங்கை நதிப் பகுதியை நோக்கி ஓடினான். அவனை துரத்திக் கொண்டு சென்ற கல்யாணகிரி தன்னையும் அறியாமல் அந்த நதியின் மத்தியப் பகுதியை சென்று அடைய அங்கு முருகனும் வள்ளியும் அவருக்குக் காட்சி தந்தார்கள். அவர் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். அவர் ஸ்கந்தனை தன்னுடன் அழைத்து வருமாறு தெய்வானை வேண்டிக் கொண்டதினால் தான் அங்கு வந்ததாகவும், ஆகவே தன்னுடன் கிளம்பி தெய்வானை இருந்த இடத்துக்கு (இந்தியாவுக்கு) வருமாறு அவரை அழைத்தார். ஆனால் வள்ளியோ தன்னை தவிக்க விட்டு விட்டு ஸ்கந்தனை அங்கிருந்து அழைத்துப் போகக் கூடாது என்று அவரிடம் கேட்டுக் கொள்ள கல்யாணகிரியும் வேறு வழி இன்றி தாமும் அங்கேயே தங்கிக் கொண்டு தெய்வானையும் அங்கு வந்து அவர்களுடன் தங்கிக் கொள்ள அவளுக்கும் ஒரு ஆலயத்தை அங்கேயே அமைப்பதாக வள்ளியிடம் உறுதி மொழி கூறி விட்டு நாளடைவில் தெய்வானைக்கும் ஒரு ஆலயத்தை அங்கேயே அமைத்தார். தெய்வானையும் அங்கு அழைத்து வந்து தங்க வைத்தார். அவர் ஆவாஹித்து ஏற்படுத்திய யந்திரமே இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ள யந்திரம் ஆகும். அதன் பின்னர் கல்யாணகிரி வள்ளிக்கும், தெய்வானைக்கும் தனித் தனி ஆலயங்களை எழுப்பினார்.
இரண்டாம் ராஜ சிங்கம் என்ற மன்னனின் காலத்தில் அதாவது கி.பி. 1627 – 79 ஆண்டில் கதிர்காம ஆலயத்தில் கல்யாண மண்டபமும் ஹோம குண்டமும் முடிவடைந்த நிலையில் கல்யாண கிரி தமது பூத உடலைத் துறந்தார். கல்யாணகிரி தனது பூத உடலைத் துறந்தப் பின் ஒரு லிங்க உருவாகி விட கதிர்காம ஆலயத்தின் சிவன் கோவிலுக்குள் அதை முத்து லிங்கம் என்ற பெயரில் தனி சன்னதி அமைத்து வைத்துள்ளார்கள். இது சமாதி மடம் எனப்பட்டது. இங்கு குருபீடமும் எட்டு சமாதிகளும் உள்ளன.
……….தொடரும்