இலங்கை கதிர்காம 

ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

பாகம்-3
உலகிலேயே விக்ரஹ ஆராதனை இல்லாமல், முருகனை வேல் வடிவிலும், ஜ்யோதி ஸ்வரூபமாகவும் வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம் என்பது மட்டும் அல்ல, அங்குள்ள கதிர்காமனின் சன்னதியின் உள்ளே உள்ளதை வருடத்துக்கு ஒரு முறைதான் நமது கண்களினால் பார்க்கவே முடியும் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தியாகும். இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம் என்ன என்றால் கதிர்காம முருகனை தமிழர்கள் முருகன் என்று வழிபட, சிங்களவர்கள் மற்றும் புத்த மதத்தினர் அவரை கதிர்காம தேவியோ என்ற பெயரில் வழிபடுகிறார்கள். ஆகவே மூன்று சமூகத்தினரும் -தமிழர்கள், சிங்களவர் மற்றும் புத்த மதத்தினர்- ஒன்றிணைந்து போற்றும் கடவுளாக கதிர்காமன் உள்ளார். கதிர்காமனில் உள்ள முருகனை கலியுக வரதன் என்றும் கதிர்காமர் என்றும் கூறுவார்கள். மேலும் கதிர்காமனைப் பொறுத்தவரை அந்த ஆலயத்தில் வள்ளி தேவிக்கே அதிக முக்கியத்துவத்தையும் பெருமையும் கொடுக்கிறார்கள். காரணம் வள்ளியை கதிர்காமனில் இருந்த வேத்தா என்ற வேடுவ குலத்தவர்கள் வளர்த்து முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததினால் வள்ளி தேவியை உள்ளூரை சேர்ந்தப் பெண் என்று போற்றுகிறார்கள்.
அந்த மலைப் பிரதேசம் அமைதியான சூழ்நிலையில் இருப்பதினால் அங்கு இன்னமும் பல ரிஷி முனிவர்கள்- இறந்து விட்டவர்கள் மற்றும் உயிருடன் உள்ளவர்கள் – நமது கண்களுக்குத் புலப்படாமல் தவத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பரவலாகவே உள்ளது. அது மட்டும் அல்லாமல் பல நேரங்களில் அங்கு சென்ற யாத்ரீகர்களுக்கு அவர்கள் காட்டு விலங்குகளினாலும், இயற்கை சீற்றங்களினாலும் அபாயங்களில் சிக்கியபோது அவர்களுக்கு இனம் தெரியாதவர்கள் வந்து உதவி விட்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விட்டார்கள் என்பதையும் அங்கு சென்று விட்டு வந்துள்ளவர்கள் கூறுவதுண்டு. அவர்கள் இது ஒன்றே அந்த பிரதேசத்தின் தெய்வீக நிலைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.
ஆறுபடை வீடுகளுக்கும் விஜயம் செய்து விட்டு கதிர்காமனுக்கு வந்து தங்கிய முருகனுடன் அவருக்கு சேவகம் செய்து வந்த வேறு சிலரும் அவரைத் தொடர்ந்து வந்தார்கள். அவர்களும் முருகனுடனேயே வந்து கதிர்காமனில் தங்கி விட்டார்கள். அப்படி வந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கதிர்காம ஆலயத்தின் பண்டிதர்களாக உள்ளார்கள். ஸ்கந்தன் என்ற முருகனை ( வட நாட்டில் முருகனை ஸ்கந்தன் மற்றும் கார்த்திகேயர் என்ற பெயரில் அழைக்கிறார்கள்) பெண்கள் வணங்கக் கூடாது என்று அந்த காலத்தில் வட இந்தியாவின் சில பகுதிகளில் இருந்த ஆலயங்களில் கட்டுப்பாடு இருந்துள்ளது. அது கதிர்காமனிலும் ஓரளவு எதிரொலித்துள்ளது என்பது போல ஆண்களுடன் பெண்களும் இந்த ஆலயத்திற்குள் செல்லலாம் என்றாலும் கதிர்காமர் எனும் முருகனை நேரடியாக தரிசிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆலயத்தில் உள்ள சன்னதி திரை சீலையினால் மூடப்பட்டே உள்ளது. கதிர்காம ஆலயத்துக்கு செல்பவர்கள் சன்னதியில் உள்ள கதிர்காமரை நேரடியாக தரிசிக்க முடியாது. அனைத்து பூஜைகளையும் மூடிய திரைக்குப் பின்னால் நின்றபடி உள்ள பூஜாரிகளே செய்வார்கள். இன்றைக்கு வள்ளி அம்மையின் வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் கபூரலாக்கள் என்கிற சிங்கள இனத்தவர்களே தமது வாய்களைக் கட்டிக் கொண்டு  திரைக்குப் பின்னால் முருகனுக்கு   பூஜை செய்கிறார்கள். அவர்களால் திரைக்குப் பின் வைக்கப்பட்டு  உள்ள ஒரு பெட்டிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரம ரகசியமாகவே இருக்கிறது என்றாலும் அதற்குள் உள்ளது முருகனின் யந்திரமே என்றும், இல்லை அதற்குள் சிவந்த சந்தனக் கட்டையில் செதுக்கப்பட்ட முருகனின் சிலை உள்ளாதாகவும் பலவாறு நம்பிக்கைகள் உள்ளன. திரையினால் மூடப்பட்டுள்ள அந்த அறைக்குள் பூஜாரிகளைத் தவிர வேறு எந்த பக்தரும் செல்ல முடியாது. மேலும் அந்த சன்னதி காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த சன்னதிக்கு முன்னால் உள்ள அறை வரை மட்டுமே சென்று காணிக்கைகளைத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கும் சன்னதிக்கும் இடையே சிறு கதவையும் அமைத்து உள்ளார்கள்.
இந்த பழக்கம் இலங்கையில் உள்ள அனைத்து கதிர்காமர் ஆலயங்களிலும் இன்றும் கடை பிடிக்கப்படுகிறது. இதற்கான வலுவான காரணம் தெரியவில்லை. ஸ்கந்தன் என்கின்ற கதிர்காமன் அங்கு வள்ளியுடன் ஏகாந்தமாக இருப்பதாகவும், அவருக்கு மக்களால் எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அந்தப் பழக்கத்தை பண்டைய கால பண்டிதர்கள் ஒரு ஐதீகமாக கடை பிடித்து வைத்திருக்கலாம்.
இந்த ஆலயத்தில் கதிர்காமரை ஜ்யோதி வடிவத்தில் வணங்குகிறார்கள். சன்னதியின் உள்ளே முருகனைக் குறிக்கும் எந்த சிலையுமே வைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அங்கு சட்கோண யந்திரம் ஒன்று ஒரு பேழையில் வைக்கப்பட்டு உள்ளது. அது முருகனின் மந்திரமான சடாக்ஷர என்ற மந்திரத்தினால் ஆவாகிக்கப்பட்டது. அந்த யந்திரமே மிக சக்தி வாய்ந்த யந்திரம் என்றும் அதில் இருந்து வெளியாகும் கதிர் அலைகளே அங்கு அவரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீக பலத்தையும், அனைத்து நன்மைகளையும் தருகிறது என்றும் நம்புகிறார்கள். எது எப்படி இருந்தாலும், கதிர்காமத்தில் ஏதோ ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதைக் அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் உணர்கிறார்கள். அந்த யந்திரம் என்ன?
……தொடரும்