
சூதகர் தொடர்ந்து கூறலானார் ”நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சாதாரணமாக தேவி ஆலயங்களை தவிர வேறு எந்த ஆலயத்துக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வணங்கியப் பின்னர் அங்குள்ள ஆலய தேவியை வணங்கிய பின்னரே மூலவர் யாராக இருந்தாலும் – சிவன், விஷ்ணு போன்றவர்கள்- அவர்களை வணங்குவார்கள். இது விதியல்ல என்றாலும் ஒரு நடைமுறையாக இருந்துள்ளது என்பதின் காரணம் தாயே முதல் தெய்வம் என்பார்கள். திருப்பூவாணத்திலோ கணபதியை துதித்தப் பின்னர் முதலில் சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின்னர்தான் தேவியையும் மற்றவர்களையும் வணங்க வேண்டும். அப்படி செய்யாமல் தேவியை முதலில் வணங்குபவர்களுக்கு ஒரு அந்தணனைக் கொன்றது போன்ற கொடிய பாபங்கள் வந்து சேரும். இந்த தரிசன விதி வந்ததின் காரணம் ஒரு மன்னன் செய்த தவறினால் சிவபெருமான் கோபம் அடைந்து அப்படி ஒரு விதியை நிர்ணயித்தார் என்பதே. அந்தக் கதையைக் கேளுங்கள் ” எனக் கூறி விட்டு அந்தக் கதையை கூறத் துவங்கினார்.
”பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பகுதியில் ஆட்சியில் இருந்த திராணேசன் என்ற ஒரு மன்னன் (தற்போது மதுரைப் பகுதி) தன் வாழ்க்கையில் சலிப்புற்றன். வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையுமே அனுபவித்து விட்டதினால் மனதில் விரக்தி தோன்றியது. வாழ்ந்தது போதும் என அவன் மனம் எண்ணலாயிட்று. ஆகவே தான் விரைவாக முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று தன்னுடைய குருவிடம் கேட்டபோது அவர் அவனை முறையாக துறவறம் மேற்கொண்டு அஷ்ட திக்குகள் எனப்படும் எட்டு திசைகளிலும் உள்ள நூற்றி எட்டு சிவாலயங்களுக்குச் சென்று திங்கள் கிழமைகளில் சிவபெருமானை துதித்து சிவ பூஜை செய்து முடித்தப் பின் பிரசாதம் எனும் பெயரில் அங்கேயே நூற்றி எட்டு அந்தணர்களுக்கு அன்ன தானமும் செய்தபின் முடிவாக திருப்பூவணத்துக்கு வந்து ஒரு மண்டலத்துக்கு சிவ பூஜை செய்து அன்னதானத்தையும் செய்து முடித்தால் அவன் விரும்பியது நடக்கும் என்று கூறினார். (சிவாலயங்கள் பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதியில்தான் இருந்துள்ளன. அதாவது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், பாகிஸ்தான், இரான், ரஷிய, சீனா போன்ற ஆசியாவின் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கி ஒரே பூமியாக இருந்தவை. எட்டு திக்குக்களிலும் இருந்த அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வர சுமார் ஐந்து ஆண்டுகள்வரை பிடிக்கும் என்பது அந்த காலத்தில் ஒரு கணக்காக இருந்தது என்பார்கள். அதன் காரணம் அந்த காலங்களில் நடைப் பயணத்தைதான் மேற்கொண்டு செல்ல முடியும். அல்லது குதிரை போன்ற மிருகங்களின் முதுகில் ஏறி பயணிப்பார்கள் – சாந்திப்பிரியா )

அதைக் கேட்ட அந்த மன்னனும் பெரும் மகிழ்ச்சி அடைந்து தனது குருநாதர் கூறியது போலவே துறவறம் பூணுவதற்கு தேவையான சடங்குகளை செய்து முடித்தப் பின் துறவறம் மேற்கொண்டு நூற்றி எட்டு சிவாலயங்களுக்கும் சென்று சிவபெருமானை வணங்கித் துதித்து தனது வேண்டுகோளை வைத்தப் பின் திருப்பூவணத்துக்கும் வந்தான். அப்போது அவன் ஒரு தவறை செய்தான். அஷ்ட திக்குக்களில் இருந்த சிவாலயங்களுக்கு செல்கையில் இடையில் ஒருமுறை திருப்பூவணத்துக்கும் சென்றான். ஆனால் அவன் அந்த ஆலய மகிமையை அறிந்திடவில்லை. மணிக்கன்னிகை தீர்த்தத்தில் குளித்தப் பின்னர் ஆலயத்துக்கு சென்றவன் கண்களில் முதலில் அன்னையின் சன்னிதானம் தென்பட அவனும் விநாயகரை வணங்கி விட்டு அந்த அன்னையின் சன்னிதானத்துக்குச் சென்று அவளை வணங்கினான். ஆனால் அடுத்த யாத்திரைக்கு நேரமாகி விட்டதினால் சிவனை வணங்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். திருப்பூவணத்துக்குத்தான் முடிவாக வந்து பூஜைகளை செய்து யாத்திரையை முடிக்கப் போகின்றோமே என்ற எண்ணத்தில் சற்று அசட்டையாக இருந்துவிட்டான். ஆனால் அந்த ஆலயமோ பார்வதி தவம் செய்ததினால் ஸ்வயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தினால் மகிமைப் பெற்ற இடமாகும் என்பதை அவன் அறியாமல் இருந்ததே அவன் செய்த தவறுக்குக் காரணம். திராணேசன் அங்கு சென்றபோது சிவபெருமானும் தனது சன்னதியில் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் பார்வதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். வந்தவன் தன்னை மதிக்காமல் சென்று விட்டதினால் கோபமுற்று அங்கிருந்து கிளம்ப எழுந்தபோது பார்வது வந்து அவரை தடுத்தார். வந்தவனை தண்டிப்பதற்காக தன்னை விட்டு அங்கிருந்து செல்வது முறையாகுமா என்று கெஞ்ச சிவபெருமானும் இனியும் தான் அங்கு தங்கி இருக்க வேண்டும் என்றால் அந்த ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் சிவபெருமானான தன்னை கண்டிப்பாக வணங்கி விட்டே தேவியை வணங்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை பார்வதியும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டாள். அதனால்தான் அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் முதலில் சிவன் சன்னதிக்கு சென்று அவரை வணங்கிய பின்னரே பார்வதியை வணங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அங்கிருந்து கிளம்பியவன் அஷ்ட திக்குக்களிலும் இருந்த பிற ஆலயங்களுக்கும் சென்று சிவனை வணங்கிய பின்னர் முடிவாக மீண்டும் திருப்பூவணத்துக்கும் வந்தான். வழியில் அவன் பல சங்கடங்களை எதிர்கொண்டான். காரணம் அவனுக்குப் புரியவில்லை. முடிவாக தனது குருநாதர் கூறியது போல திருப்பூவணத்துக்கு வந்து மணிக்கன்னிகை தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது தான் ஒரு வலுவற்ற பிரும்ம ராட்ஷஷனாகி இருந்ததைக் கண்டான். தான் இப்படி ஒரு கோலத்தை ஏன் அடைந்தோம் என்பது புரியாமல் கலங்கினான். நேரம் ஆகா ஆகா பசி எடுக்கலாயிற்று. அவன் பிரும்ம ராட்ஷசனாகி இருந்ததினால் யாரும் அவன் அருகிலும் செல்லவில்லை. உணவும் தரவில்லை. அவனாலும் யாரிடமும் சென்று உணவைப் பறிக்க முடியாமல் உடல் வலு குறுக்கே நின்றது.

நல்ல வேளையாக அங்கு வந்த நாரத முனிவரை வணங்கித் துதித்து தான் யார் என்பதையும் தான் அடைந்துள்ள நிலையையும் எடுத்துக் கூறி தான் ஏன் இந்த நிலையை அடைந்தேன் என்பது புரியவில்லை என்று கூறி அழுதான். தான் இப்படி பிரும்ம ராக்ஷசனாக மாறியது ஏன் என்றும் தான் மீண்டும் திராணேசனாக மாற வேண்டும் என்பதற்கு என்ன வழி முறை உள்ளது எனவும் உள்ளம் கனிந்துக் கேட்டான். நாரத முனிவர் தனது ஞான திஷ்டியினால் நடந்த அனைத்தையும் அறிந்துக் கொண்டதும் அவனுக்கு அவன் செய்த பிழையைக் கோடிட்டுக் காட்டி ‘நீ செய்த மிகப் பெரிய தவறே நீ பூவண்ணனாதர் நாதர் தனது சன்னதியில் வீற்று இருந்தபோது அவரை மதியாமல் அவருடைய பத்தினி சௌந்தரநாயகி மின்னனையாளை மட்டுமே வணங்கி விட்டு திரும்பி விட்டாய். ஆகவே நீ மணிக்கன்னிகையில் தினமும் குளித்துவிட்டு அவரது சன்னதிக்குச் சென்று அவரை வணங்கி துதித்து வர வேண்டும். இப்படியாக பன்னிரண்டு மண்டலம் நீ அவரை தினமும் வணங்கி வந்தபின் மீண்டும் ஷேத்திராடனம் சென்று பல சிவாலயங்களிலும் அவரை துதித்தப் பின் கடைசியாக மீண்டும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்ஷத்திரத்தன்று இங்கு வந்து இவரை பூஜித்தால் உனக்கு இழந்த உருவம் மீண்டும் கிடைக்கும்’ என்றார். மேலும் அந்த யாத்திரைக்கான சங்கல்பத்தை அங்கேயே எடுத்துக் கொண்டால் இனி அவன் அந்த புனித யாத்திரையை செய்து முடித்து பழைய உருவை அடையும்வரை அவனுக்கு எந்த விதத்திலாவது உணவு கிடைக்கும் என்றும், அவனுக்கு அகோரப் பசியும் எடுக்காது என்று கூறினார். பிரும்ம ராட்ஷஷனாகி நின்றிருந்த திராணேசனும் நாரதரை சாட்சியாக வைத்துக் கொண்டே அங்கேயே அந்த யாத்திரையை மேற்கொள்வதாக சங்கல்பம் செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பி புனிதமான அந்த தீர்த்த யாத்திரைக்குச் சென்றான்.

ராக்ஷஷன் உருவில் இருந்த திராணேசனும் நாரதப் பெருமான் கூறிய அறிவுரையை ஏற்று அவர் கூறியபடியே அனைத்தையும் செய்து கார்த்திகை மாத்து கார்த்திகை தினத்தன்று திருப்பூவணத்துக்கு வந்து மனிக்கன்னிகையில் முழுகி எழ அங்கேயே சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து அவன் பாவத்தைப் போக்க, அவனும் தனது பழைய உருவை மீண்டும் பெற்றான். அது முதல் அந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள் முதலில் பூவணநாதரை வணங்கியப் பின்னரே தேவியை வணங்க வேண்டும் என்பது நிபந்தனை ஆயிற்று” என்று கூறினார். இப்படியாக சூதகர் திருப்பூவணத்தின் வரலாற்றைக் கூறி முடித்தப் பின் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த முனிவர்களும் ரிஷிகளும் சூதகரை வணங்கிவிட்டு அவருக்கு நன்றி கூறி விட்டு கலைந்து சென்றார்கள்.