எழுதியவர்

சாந்திப்பிரியா

(nrj1945@gmail.com  and   https://santhipriya.com/  )

 

பதிமூன்றாம்  அத்தியாயம்

ஜனக மன்னனின் மகிழ்ச்சி நிலை

अकिञ्चनभवं स्वास्थ्यं कौपीनत्वेऽपि दुर्लभम् ।

त्यागादाने विहायास्मादहमासे यथासुखम् ॥

13.1  உள்ளத்தில் தோன்றும் மன அமைதி, ஒன்றுமே அற்ற, கோவணம் மட்டுமே அணிந்திருப்பவனுக்கு  கூட  அரிதாகவே கிடைக்கும்.  தியாகம் மற்றும் ஏற்றுக் கொள்வது போன்ற எண்ணங்களை துறந்த பிறகு, நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் :  ஜனகர் தன் நிலை விளக்கத்தில் என்ன கூறி உள்ளார் என்றால் ‘எந்த காரியத்தை செய்தாலும் மனதை  ஒரு நிலைபடுத்தி  செய்தால் மட்டுமே காரிய  சித்தி  கிடைக்கும் .  மனதில் ஓடும் பல எண்ணங்களையும் ஓட விடாமல் நிலைப்படுத்துவதே  ஆத்ம மகிழ்ச்சி கிடைக்க  சிறந்த வழியாகும். அனைத்தையும் துறந்து விட்டால் மட்டுமே ஆத்ம விடுதலை பெறலாம் என்பது தவறு.  அப்படி பார்த்தால் தன்னிடம் ஒன்றுமே இல்லாததினால், வறுமையில்,   ஒரு கோவணத்தை  மட்டுமே இடுப்பில் கட்டிக் கொண்டு திரிபவர்கள் பட்டற்ற  நிலையில் இருப்பவர்கள் என்பதாகி விடாதா?. அதுதான்  நியதி என்றால் அவர்கள்  அனைவரும்  மன அமைதியோடு இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படிப்பட்டவர்களில் அபூர்வமாகவே எவராவது ஒருவர்  மட்டுமே மன மகிழ்ச்சியோடு  இருக்கின்றார்கள்  என்பதே உண்மை.  அனைத்தையும் துறந்து விடுவது’ என்பதின் உண்மையான அர்த்தம் உள் மனதில் உள்ள அனைத்தையும் துறக்கும் பட்டற்ற நிலை   என்பதே தவிற, சரீரத்தின் மீது  போட்டுக் கொண்டுள்ள அனைத்து உடைகளையும் களைந்து விட்டு கோவணத்துடன் நிற்கும்   நிலை என்பது அர்த்தம் அல்ல. துறவிகள் கூட முதலில் தம் உள்ளத்தில் இருந்து அனைத்து பற்றுக்களையும்  விலக்கிக் கொண்டு மெல்ல மெல்ல தமது உடல் மீதான பற்றையும் குறைத்துக் கொள்ள தாம் அணிந்திருக்கும்  ஆடைகளை விலக்கிக் கொண்டு, கோவணத்துடனோ அல்லது இடுப்பில் ஒரு துணியை மட்டுமே கட்டிக்  கொண்டு திரிவார்கள்.  அதனால்தான் நான் கூறினேன்   தியாகம் மற்றும் ஏற்பது என்ற எண்ணங்களை துறந்த பிறகு, உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

कुत्रापि खेदः कायस्य जिह्वा कुत्रापि खिद्यते ।

मनः कुत्रापि तत्त्यक्त्वा पुरुषार्थे स्थितः सुखम् ॥

13.2  சில நேரங்களில் உடல் சலிப்புறுகின்றது,   உச்சாடனைகளில் சுணக்கம் நேரிடுகின்றது, மனமும் வெறுத்துப் போகின்றது. ஆனால் அவற்றில் ஆத்மார்த்தமாக ஈடுபடாமல் உள்ளதினால்  நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் : ஜனகர் தன் நிலை விளக்கத்தில் என்ன கூறி உள்ளார் என்றால் ‘கடுமையான உழைப்பு, யாகங்கள் மற்றும் யக்யங்களை  தொடர்ந்து  செய்து வருவது போன்றவற்றினால் உடல் சலிப்புறுகின்றது. அதே போலவே தொடர்ந்து மந்திர உச்சாடனைகளை செய்தவண்ணமும்,  ஜெபங்களை செய்தவண்ணமும் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டே இருக்கும் நிலைகளிலும்,  தளர்வடையும்  நாக்கு, சரியான உச்சாடனைகளை செய்ய மறுக்கும்.  அவை அனைத்தையுமே  செய்தும்  தாம் விரும்புவதை அடையவில்லை எனும்போது மனம் சலிப்புறும்.  இந்த மூன்று நிலைகள்தான்  ஒருவரது  மனநிலையை பாதிப்பவை,  அந்த பாதிப்புக்களை ஏற்படுத்துபவை உடலில் உள்ள ஐம்புலன்கள் என்பதை  ஜனகர் நன்கே உணர்ந்து இருந்தார் என்பதினால் அந்த செயல்களில் ஈடுபடுவதை துறக்க, முதலில்  தனது ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டார், உலகத்தின் மீதான  பற்றை முற்றிலும் விலக்கிக் கொண்டார். அவற்றின் விளைவாகவே உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

कृतं किमपि नैव स्याद् इति सञ्चिन्त्य तत्त्वतः ।

यदा यत्कर्तुमायाति तत् कृत्वासे यथासुखम् ॥

13.3   உண்மையில் நான் மனதார உடலின்   எந்த செயலையும்  செய்யவில்லை என்பதை உணர்கின்றேன்.  எது நடக்க வேண்டுமோ அவை நடந்து கொண்டிருந்தாலும், அவற்றில் ஆத்மார்த்தமாக ஈடுபடாமல் உள்ளதினால், நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.  

(விளக்கம் : இதன் மூலம் ஜனகர் என்ன கூறினார்  என்றால்  ‘ஜடமான உடலோடு தான் வாழ்ந்து கொண்டிருந்தாலும், சம்சார சாகரத்தில்  வாழ்வதினால் உடலின் இயக்கங்களை தடை செய்ய முடியாது. மன ஓட்டங்களின்படி அது செயல் புரிந்து கொண்டுதான் இருக்கும். ஜடமான உடலில்  உள்ள ஐம்புலன்கள் அதனதன் வேலைகளை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் அவற்றில் எல்லாம் ஆத்மார்த்தமாக ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டு  அவற்றினால் பாதிக்கப்படாமல், எனக்கு   சொந்தமும்  இல்லை, பந்தமும் இல்லை என்ற நினைப்புடன் இருக்கின்றேன்.

உடல் மற்றும் புலன்களின் இயக்கத்தினால் நடைபெறும் செயல்களுக்கும் ஆத்மாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, ஆத்மாவை எவற்றாலும் கட்டுப்படுத்த முடியாது  என்ற உண்மையை மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்  என்பதினால்தான் நான் பேரானந்த நிலையில் உள்ளேன். அவற்றின் விளைவாகவே உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

कर्मनैष्कर्म्यनिर्बन्धभावा देहस्थयोगिनः ।

संयोगायोगविरहादहमासे यथासुखम् ॥

13.4 சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் யோகிகள் வேறு வழி இன்றி உலகிற்காக சில செயல்களை செய்ய வேண்டி உள்ளது , சில செயல்களை தவிர்க்க  வேண்டி உள்ளது. ஆனால் நானோ அந்த செயலற்ற செயல்களின் உணர்வுகளை அழித்துக் கொண்டு விட்டதினால்,  நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் : இதன் மூலம் ஜனகர் என்ன தெரிவித்தார் என்றால்  ‘சம்சார சாகரத்தில் வாழ்பவர்கள் நடப்பதும், அலைவதும், உட்கார்ந்திருப்பதும், சுற்றி அலைவதும்  போன்ற சில செயல்களை செய்ய வேண்டி உள்ளது. அதே போல  சில செயல்களை தவிர்க்கவும் வேண்டி உள்ளது. அந்த நிலை  ஆண்டியானாலும் சரி, அரசனானாலும் சரி இருவருக்குமே சமமாக  பொருந்தும்.  ஆகவே சம்சார சாகரத்தில் வாழும் விழிப்புணர்வு பெறாத நிலையிலான யோகிகளும் ஆத்ம விடுதலை பெறும்வரை அவற்றில் இருந்து விதி விலக்கு பெற முடியாமல் கடமைக்காக அவற்றை செய்தபடி வாழ்கின்றார்கள்.

ஆனால் நானோ  ஒரு யோகி அல்ல, ஒரு ராஜ்யத்தின் தலைவன்.  அப்படி இருந்தும் நான்  எதை செய்தாலும்  அவற்றை செய்வது இயந்திரம் போன்ற எனது  ஜடமான உடலே  என்ற என்ற தீர்க்கமான மன நிலையுடன்தான்  எப்போதுமே இருக்கின்றேன். அவை அனைத்தையும் செயலாற்ற செயல்களாகவே உணர்கின்றேன். அதனால் எனது அகங்காரம் முற்றிலும் அழிந்து விட்டது. எப்போது எனது அகங்காரம் அழிந்து விட்டதை உணர்ந்தேனோ  அப்போதே, நான், எனது என்ற நிலைப்பாடெல்லாம் என்னிடம் இருந்து  அழிந்து விட்டது.  அவற்றின் விளைவாகவே உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

अर्थानर्थौ न मे स्थित्या गत्या न शयनेन वा ।

तिष्ठन् गच्छन् स्वपन् तस्मादहमासे यथासुखम् ॥

13.5  நிற்பதாலோ, நடப்பதாலோ, படுத்திருப்பதாலோ எனக்கு எந்தப் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. அதனால் என் உடல்  நின்ற நிலையில் இருந்தாலும்,  தூங்கிக் கொண்டிருந்தாலும்  அந்த நிலைகளில் உள்ள உடலால் நான்  எந்த பாதிப்பையும் அடைவதில்லை என்ற உணர்வோடு இருப்பதினால் நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் : இந்த தன்னிலை விளக்கத்தின் மூலம் ஜனகர் என்ன தெரிவித்தார் என்றால்  ‘சம்சார சாகரத்தில் வாழ்பவர்கள் நடப்பதும், அலைவதும், உட்கார்ந்திருப்பதும், சுற்றி அலைவதும்  போன்ற சில செயல்களை செய்ய வேண்டி உள்ளது. அதே போல  சில செயல்களை தவிர்க்கவும் வேண்டி உள்ளது. அந்த நிலை  ஆண்டியானாலும் சரி, அரசனானாலும் சரி இருவருக்குமே சமமாக  பொருந்தும். நான்  படுத்திருந்தாலும், அமர்ந்திருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், வேறு எந்த செயல்களை செய்து கொண்டிருந்தாலும், அவற்றை செய்வது இயந்திரம் போன்ற எனது  ஜடமான உடலே, அவற்றுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவற்றால் நான் லாபமோ நஷ்டமோ அடைவதில்லை, லாப நஷ்டங்கள் என்ற மனநிலை அறியாமை என்ற மன நிலையில் இருக்கும்போது மட்டுமே  இருக்கும்  என்ற தீர்க்கமான மன நிலையுடன்தான்  எப்போதுமே இருக்கின்றேன்.  அது முதல்  நான், எனது என்கின்ற அகங்காரம் எல்லாம் என்னிடம் இருந்து  அழிந்து விட்டது.  அவற்றின் விளைவாகவே உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ )

स्वपतो नास्ति मे हानिः सिद्धिर्यत्नवतो न वा ।

नाशोल्लासौ विहायास्मादहमासे यथासुखम् ॥

13.6 நான் எதுவுமே செய்யாமல் உறங்கி கொண்டே இருந்தாலும்  எந்த நஷ்டமும்  ஏற்படுவதில்லை, மாறாக கடுமையாக உழைத்தாலும் எந்த லாபமும் எனக்கில்லை. ஆகவேதான் லாபமோ நஷ்டமோ அவற்றின் மீதான பற்று எதுவும் இல்லாததினால், நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் : மேலே கூறிய அதே விளக்கமே இதற்கும் பொருந்தும்)

सुखादिरूपा नियमं भावेष्वालोक्य भूरिशः ।

शुभाशुभे विहायास्मादहमासे यथासुखम् ॥

13.7 காலத்திக்கேற்ப  இன்ப, துன்பங்கள்  ஒருவனுக்கு  மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்கும் என்பதே நியதி என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் நன்மை மற்றும் தீமை  என்ற  மன உணர்வுகளை என்னிடம் இருந்து  அழித்துக் கொண்டு விட்டதினால்  நான் பேரானந்த நிலையிலான மகிழ்ச்சியுடன்  உள்ளேன்.

(விளக்கம் : இந்த தன்னிலை விளக்கத்தின் மூலம் ஜனகர் என்ன தெரிவித்தார் என்றால் ‘ஒருவரது மன எண்ண ஓட்டங்களினால் அவர்களது உடல் செயல்பட்டுக்  கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு  நன்மைகளும் தீமைகளும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்கும். அது பூர்வ ஜென்ம பிராரப்த கர்ம வினைகளினாலும் ஏற்படலாம் அல்லது வாழும் ஜென்மத்திலேயே  அவர்கள்  செய்யும் செயல்களினால் இருக்கலாம்.  எப்போது ஒருவன் அனைத்தையும் துறந்த, வாழ்க்கையின் பட்டற்ற  நிலைக்கு சென்று விடுவானோ அப்போது முதலே  துன்பமும், இன்பங்களும் எந்த விதத்திலும் அவனது மனதில் எந்த பாதிப்பையும்  ஏற்படுத்துவதில்லை. அவற்றை உணர்ந்து கொண்டு  நன்மை மற்றும் தீமை  என்ற  மன உணர்வுகளை என்னிடம் இருந்து  எப்போது அழித்துக் கொண்டு விட்டேனோ அப்போது முதலே  நான் உள்ளத்தில் நிலவும்  மயான அமைதி  போன்ற சூழ்நிலையில், பேரானந்த அமைதி எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

பதினான்காம்  அத்தியாயம்

ஜனக மன்னன் தனது மனதின் அமைதி  நிலை குறித்து மேலும் கூறினார்

प्रकृत्या शून्यचित्तो यः प्रमादाद् भावभावनः ।

निद्रितो बोधित इव क्षीणसंस्मरणो हि सः ॥

14.1  இயற்கையாகவே  எதிலும் பற்றில்லாமல், தனது வாழ்க்கையின் அனைத்து நினைவுகளையும் அழித்துக் கொண்டு, மனதை  சூனிய நிலை போன்று  வைத்துக் கொண்டிருப்பவனுக்கு தற்செயலாக  பழைய நினைவுகள்  வந்தால் அவன்   கனவில் இருந்து விழித்தவன் என்றே கருத வேண்டும்.

(விளக்கம் :  ஜனகர் தனது மகிழ்ச்சியின் எல்லையை இப்படியாக வெளிப்படுத்துகின்றார் ‘ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று கொண்டிருப்பவன் எதிலும் பற்று இல்லாமல்  விரத்தியோடு இருக்கலாம். அவன் மனதும், உள்ளமும்  குடுவையில் உள்ள வெற்றிடம் போல  இருக்கலாம். ஆனால் பிராப்தம் எனும் பூர்வ ஜென்ம கர்மா வினையின் தாக்கத்தினால்  உலகில் வாழும் ஜடமான உடலில் உள்ள ஐம்புலன்களினால்  சில நேரத்தில் சில பழைய சம்பவம் நினைவிற்கு வரலாம் . அதை தவிர்க்க முடியாது.  பழைய வாழ்க்கையின் நிகழ்வுகளை அவன் வேண்டும் என்றே மனதில்  நிழலாட விடுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது பிராரப்த கர்மாவினால் இப்படியாக பாதிக்கப்படுகின்றனர், அவர்களால் அதில் இருந்து விலக்கு  பெற முடியாது.  வறுமையான சூழ்நிலையில் அமர்ந்து கொண்டுள்ள ஒரு  மனிதனிடம் முன்பின் தெரியாத ஒருவர் வந்து   எதோ சிறிய வேலையை தந்து, அதை பெற்றுக் கொண்ட பின் அதற்கான பணத்தை தருகின்றார். ஆனால் அதே நபர் வேலை முடிந்தவுடன் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டு ஓடி விட்டால் அந்த ஏழையால், கூப்பாடு போடுவதைத் தவிற வேறு   என்ன செய்ய முடியும் ? அப்படியான  இரண்டு சூழ்நிலைகளும்  ஏற்படுவதின் காரணம் பிராரப்த கர்மா வினை பயனே. லாபமடைவதும்,  நஷ்டப்படுவதும் பிராரப்த கர்மா வினை பயனே. அதனால்தான் எதிலும் பற்று இல்லாத விழிப்புணர்வு நிலையில் உள்ளவனுக்கு பிராரப்த கர்மா வினையினால்  பழைய நினைவுகள் வந்தாலும் அவன் உள்ளத்தில் அவற்றினால் எந்த சலனமும்  ஏற்படுவதில்லை, அவன்  தூக்கத்தில் இருந்து விழித்தவன் போன்ற நிலையில்தான் இருப்பான். இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டு விட்டதினால்தான் நான்  பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

क्व धनानि क्व मित्राणि क्व मे विषयदस्यवः ।

क्व शास्त्रं क्व च विज्ञानं यदा मे गलिता स्पृहा ॥

14.2  அனைத்து ஆசைகளையும் அழித்துக் கொண்டு  பட்டற்ற நிலையில் சென்று விட்ட   எனக்கு  செல்வத்தின் மீதும்,  நண்பர்கள் மீதும் எப்படி ஆசை இருக்க முடியும்?  உடலை இயக்கிக் கொண்டிருக்கும் ஐம்புலன்களின் ஆதிக்கம் எப்படி  இருக்க முடியும்? விவேகமும்,  ஆன்மீக விளக்கங்களும் என்னுள் என்ன மாற்றத்தை கொண்டு வர இயலும்?

(விளக்கம் :  ஜனகர் தனது மகிழ்ச்சியின் எல்லையை இப்படியாக வெளிப்படுத்துகின்றார் ‘சம்சார சாகரத்தில் உழல்பவனுக்கு  செல்வங்கள் தேவை. ஆறுதல்களுக்காகவும், உதவிக்கும்  நண்பர்கள் தேவை. சமூகத்தில் மதிப்பிருக்க  சாஸ்திர சம்பிரதாயங்களை உதாசீனப்படுத்த முடியாது.  தொழிலுக்கும், உழைப்பிற்கும் விஞ்ஞான பூர்வ அறிவு தேவை. கலாசாரத்தை ஒதுக்கி விட்டு வாழ இயலாது.   ஆசைகளை  அடக்க முடியாது.    அவற்றை பூர்த்தி செய்ய செல்வம் தேவை, சமூகத்தில் மதிப்பு தேவை, சிற்றின்ப ஆசைகளில் இருந்து எளிதில் வெளி வர இயலாது. இப்படி அனைத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு சமூகத்தில்  வாழ முடியாது என்பதே உண்மை. ஆனால் நானோ அவை அனைத்தும்  கானல் நீர் போன்றது என்று உணர்ந்து, அவை அனைத்தையும்  என் உள்ளத்தில் இருந்து முற்றிலும்  அழித்து விட்டல்லவா இங்கு வந்து நிற்கின்றேன்.  இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால் நான்  பேரானந்த நிலையான வெற்றிடத்தில், அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’).

विज्ञाते साक्षिपुरुषे परमात्मनि चेश्वरे ।

नैराश्ये बन्धमोक्षे च न चिन्ता मुक्तये मम ॥

14.3   நான் பேரானந்தமான  விழிப்புணர்வு நிலையில் உள்ளதினால், அறியாமையில் இருந்தும் ஆசா பாசங்களில் இருந்தும் முற்றிலும் விடுதலை அடைந்து விட்டேன். ஆகவே  மீண்டும் எங்கிருந்து ஆத்ம விடுதலை  வேண்டும்  என்ற விருப்பம் என்னுள் எழ முடியும்?

(விளக்கம் :  ஜனகர் தனது மகிழ்ச்சியின் எல்லையை இப்படியாக வெளிப்படுத்துகின்றார் ‘ஒருவன் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருந்தாலும், அவன்  பேரானந்தமான  விழிப்புணர்வு நிலையில் சென்று விட்டால் அவனுக்கு அறியாமை எங்கிருந்து வரும்? அறியாமையை அழித்து விட்டதினால்தானே அவன் பேரானந்தமான  விழிப்புணர்வு நிலையை அடைய முடியும். அவனுக்குள் ஆசா பாசங்கள் எங்கிருந்து வரும்? அவன்தான் அவற்றையும் தன்னுள் இருந்து அழித்துக் கொண்ட பிறகல்லவா பேரானந்தமான  விழிப்புணர்வு நிலைக்கு செல்கின்றான். ஆத்ம விடுதலை யாருக்கு தேவை? எவன் ஒருவன் ஆசா பாசங்களுடன், இன்ப துன்ப நிலைகளுடன், சிற்றின்ப ஆசைகளுடன் வாழ்கின்றானோ அவனுக்கல்லவா ஆத்ம விடுதலை தேவை.  நான்தான் என் ஜடமான உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகள் அனைத்தில் இருந்தும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு, சுதந்திரமாக, ஆனந்தமாக இருக்கிறேனே, அதற்கு மேல் எந்த பேரானந்த நிலை எனக்கு தேவை ?  எதற்கு மீண்டும் ஆத்ம விடுதலை எனக்கு தேவை? இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால் நான்  பேரானந்த நிலையான வெற்றிடத்தில், அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’).

अन्तर्विकल्पशून्यस्य बहिः स्वच्छन्दचारिणः ।

भ्रान्तस्येव दशास्तास्तास्तादृशा एव जानते ॥

14.4  எந்த பற்றையும் வைத்துக் கொள்ளாமல், எதன் மீதும்  ஆசையும், சந்தேகமும் கொள்ளாமலும், வெளிப் பார்வைக்கு பைத்தியக்காரன் போல வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானியை  இன்னொரு உண்மையான ஞானியால் மட்டுமே அடையாளம் காண முடியும்.

(விளக்கம் :  ஜனகர் தனது மகிழ்ச்சியின் எல்லையை இப்படியாக வெளிப்படுத்துகின்றார்  ‘மெத்த அறிவாளியான ஞானியானவர்  பைத்தியக்காரன் போல வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தாலும், சம்சார சாகரத்தில் மற்றவர்களை போல உழன்று கொண்டிருந்தாலும், அவர் உண்மையில் யார் என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த  ஞானிக்கு உள்ளத்தில் எந்த பற்றுமே இருக்காது, மனதில் குழப்பமோ,   ஆசையோ, எவர் மீதும் சந்தேகமோ இருக்காது. சில நேரங்களில் அவரது தோற்றத்தையும் நடத்தையும் காணும் மக்கள் அவரை கிறுக்கன் என்று கூட நினைப்பார்கள். ஆனால் அவை அனைத்துமே வெளித் தெரியும் போலி வேடங்கள், அவர் உண்மையிலேயே பேரானந்த நிலையில் உள்ள மாபெரும் ஞானி என்பதை இன்னொரு ஞானியால் மட்டுமே உணர முடியும். இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால் நான்  பேரானந்த நிலையான வெற்றிடத்தில், அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’).

பதினைந்தாம்  அத்தியாயம்

ஆத்ம ஞானம் குறித்து ஜனக மன்னனுக்கு  அஷ்டவக்கரர் கொடுத்த   போதனைகள்

यथातथोपदेशेन कृतार्थः सत्त्वबुद्धिमान् ।

आजीवमपि जिज्ञासुः परस्तत्र विमुह्यति ॥

15.1 குருவின் போதனையில் இயற்கையிலேயே அறிவாற்றல் மிக்கவன் பேரானந்த நிலையான ஞானத்தை  எளிதில் எட்டி விடுவான். ஆனால்  அறிவுக் கூர்மை  குன்றியவரோ வாழ்நாள் முழுவதும் குரு போதனை பெற்றால் கூட ஞான நிலையை அடைய முடியாமல்  குழம்பிய நிலையில்தான் இருப்பான்.

(விளக்கம்: அஷ்டவக்கரர் எத்தனை அழகாக இதை விவரிக்கின்றார்  என்றால் ‘மனித வாழ்க்கையில் காணப்படும்  மூன்று அடிப்படை குணங்கள்  முக்கியமானவை. அவை ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ எனப்படும்.  எவன் ஒருவன் ரஜஸ் குணத்தை கொண்டுள்ளானோ அவன் உடலிலும் மனதிலும் செயல்படும் நிலையை அதிகம் கொண்டவன்.  தமஸ் குணத்தைக் கொண்டவன்  உடலிலும் மனதிலும் ஒய்வு எடுக்கும் நிலையை  கொண்டவன். ஆனால் இந்த இரண்டு குணங்களினாலும் ஆக்கிரமிக்கப்படாமல்,    தெளிவான மன நிலையோடு   உள்ளவனோ  சத்வ குணம் கொண்டவன் எனப்படுவான். அப்படிப்பட்ட சத்வ  குணத்தைக் கொண்டவனே  ஞான நிலையை அடைய முற்றிலும் தகுதியானவனாக இருக்கின்றான். அவனுக்கு குருவின் போதனை சிறிதளவு இருந்தால் மட்டும் போதும், ஆத்ம ஞானத்தை விரைவில் அடைந்து விடுவான்.  ஆனால் எவனொருவன் மூன்று குணங்களில் இரண்டான ரஜஸ், மற்றும் தமஸ்  குணங்களினால் அதிகம்  ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளானோ, அவற்றின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெறவில்லையோ, அவனுக்கு வாழ்நாளில் எத்தனை போதனைகள் செய்தாலும், மனதில் எதன் மீதும் தெளிவு இருக்காது, மாறாக  அனைத்திலும் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.  அவனுக்கு ஞானம் கிடைப்பதில்லை’).

मोक्षो विषयवैरस्यं बन्धो वैषयिको रसः ।

एतावदेव विज्ञानं यथेच्छसि तथा कुरु ॥

15.2 ஐம்புலன்களையும் அடக்கி, இச்சைகளினால் இழுக்கப்படாமல் உள்ளவன் ஆத்ம   விடுதலை அடைந்தவன்.  ஆனால் அவற்றை துறக்க முடியாதவன் அறியாமை எனும் அடிமைத்தனத்தில் உள்ளவன் என்பதே உண்மை  என்பதால்  நீ விரும்பியபடி வாழலாம்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாதவனால் மனதில் எழும்  பலவிதமான சிந்தனைகளையும் அடக்க முடியாது. அவனது  மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். உலக நிகழ்வுகளின் மீதான பற்றுதல்  அதிகமாக காணப்படும். காம, மோக இச்சைகள் மரம் போல வளர்ந்து கொண்டே இருக்கும்.  ஆன்மீக தாக்கம் அவனுக்குள் குறைந்தே இருக்கும். ஆன்மீக தாக்கம் குறைந்து இருக்கும்போது அவனுக்கு எங்கே ஆத்ம விடுதலை பெற வேண்டும் என்ற  எண்ணம் ஏற்படும் ? அப்படிப்பட்டவனை அறியாமை எனும் விலங்கு போட்டு கட்டப்பட்டு உள்ளவன் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.

ஆனால் எவன் ஒருவன்  ஐம்புலன்களையும் அடக்கி வைத்துக் கொண்டு,  காம, மோக, உலக இச்சைகளினால் இழுக்கப்படாமல் உள்ளானோ அவனே ஆத்ம விடுதலை பெற்ற நிலையில் உள்ளவன் என்று கூற முடியும்’ இப்படியாக கூறியவர் ஜனகரிடம் கேட்டார் ‘இப்போது நீயே கூறு உன் நிலை என்ன?’).

वाग्मिप्राज्ञामहोद्योगं जनं मूकजडालसम् ।

करोति तत्त्वबोधोऽयमतस्त्यक्तो बुभुक्षभिः ॥

15.3  ஜீவாத்மா எனும் உண்மையை புரிந்து கொண்ட ஆற்றல் மிக்கவன்*,   சுறுசுறுப்பானவான்*, சிறந்த பேச்சாளன்*  எனப்படும் அறிவாளி, செயலாற்ற நிலையில் தன்னை வைத்துக் கொண்டு மௌனமாகி விடுவான்.  ஆனால்   உலக சுகபோகங்களில் நாட்டம் கொண்டவனோ  அந்த மூன்று நிலைகளையும்* தவிர்த்துக் கொள்வார்கள்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் எத்தனை ஆழமான தத்துவத்தை உள்ளடக்கிய இந்த அறிவுரையை கூறினார்  என்றால்  ‘ஜீவாத்மா எனும் உண்மையை புரிந்து கொண்ட ஒருவன் ஆற்றல் மிக்கவனாக இருப்பான், சிறந்த பேச்சாளனாக, மெத்த படித்த அறிவாளியாகவும் இருப்பான், அவர்கள் யதார்த்த நிலையில் தத்துவத்தைக் கூறி   சிக்கல்களை தீர்ப்பார்கள். அந்த நிலை அவனுக்குள் அதிகமாக, அதிகமாக அவன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு விடுவான். அனாவசிய பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்வான். பெரும்பாலும் மௌன நிலையில் இருப்பான். ஞான நிலையை அடைய மெத்த தகுதியானவனாகி இருப்பான்.

ஆனால் அதே மனிதன் ஒரு கட்டத்தில் உலக மோகங்களில் முழுகத் துவங்கினால் தனது அறிவாற்றலையும் பிற குணங்களையும் இழந்து மன எண்ணங்களின் கட்டுப்பாட்டில் சென்று விடுவான்.  அந்த நிலையின் அவன் அறியாமையின் கைதியாகி விடுவான். இதன் காரணம் அவன் புலன்களின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுவதினால்தான்’. இப்படியாக கூறியவர் ஜனகரிடம் கேட்டார் ‘இப்போது நீயே கூறு இந்த இரு நிலைகளில் உன் நிலை என்ன?’).

न त्वं देहो न ते देहो भोक्ता कर्ता न वा भवान् ।

चिद्रूपोऽसि सदा साक्षी निरपेक्षः सुखं चर ॥

15.4  நீ எனும் ஜீவாத்மா  ஜடமான உன்  உடல் அல்ல, அந்த உடலின் உரிமையாளனோ அல்லது அதை இயக்குபவனோ அல்லது அதனால் பயன் பெறுபவனோ  நீ அல்ல.  நீ தூய்மையானவன், சுதந்திரமானவன், உடல் இயக்கங்களுக்கு ஒரு சாட்சி போன்றவன் மட்டுமே  என்பதினால் மகிழ்ச்சியோடு  இரு.  

(விளக்கம் : ஜீவாத்மா குறித்த   ஆழமான தத்துவத்தை உள்ளடக்கிய இந்த அறிவுரையை அஷ்டவக்கரர் எப்படி கூறினார்  என்றால்  ‘ஆத்ம அறிவு அற்ற மானிடர்கள் ‘தான்’ எனும்போது தனது உடலை குறிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். அந்த உடலின் இயக்கங்களை தானே கட்டுப்படுத்துவதாக  நம்புவார்கள். அவர்களிடம் தான் என்ற எண்ணமே அதிகம் இருக்கும்.  தான் என்பது தனது உடலில் உள்ள உயிர் எனும் ஆத்மா என்றும் நம்புவார்கள். ஆனால்  பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ள ஜீவாத்மா, அந்த ஜடமான உடலிலும் வியாபித்து உள்ள அதே பரமாத்மா என்ற உண்மை  எவருக்கும் புரியவில்லை.

ஒரு  உடலின்  இயக்கங்கள் உண்மையில் யாரால் நடைபெறுகின்றன? உடலில் இயற்கையாக உள்ள ஐம்புலன்களின் ஆதிக்கத்தினால் உடல் இயங்குகின்றது. அவற்றை அப்படியும் இப்படியுமாக இயக்குவது யார் ? மன எண்ண ஓட்டங்கள் உடல் இயக்கங்களின் பாதையை நிர்ணயிக்கின்றன. மன எண்ண ஓட்டங்கள் எதனால் ஏற்படுகின்றன? அறியாமை எனும் மாய நிலையில் அவை தோன்றுகின்றன.  மாய நிலையில் தோன்றும் இயக்கங்கள்  அனைத்துமே பூர்வ ஜென்ம பிராராப்த கர்மா வினைப்படி  நடைபெறுகின்றன. அதையே விதி என்றும் கூறுவார்கள்.  அதனால்தான்  இப்படித்தான் எண்ண வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.  செயல் முடிந்ததும் அவைகளும் மறைந்து விடும் அல்லது கட்டுப்பட்டு விடும்.

அவை எதையுமே ஆத்மா எனும் ஜீவாத்மா இயக்குவதும் இல்லை, கட்டுப்படுத்துவதும் இல்லை.  அவற்றுக்கும் தனிமையான, அமைதியான, தூய்மையான, சுதந்திரமான, அழிவற்ற ஜீவாத்மாவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. உடலில் நடக்கும் அனைத்து இயக்கங்களையும்  அவற்றின் விளைவுகளையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கும்  ஒரு சாட்சி போல  மட்டுமே உள்ளது ஜீவாத்மா என்பது.  இந்த உண்மையை  நீ  புரிந்து கொண்டு விட்டாயா?. இந்த உண்மைகள் அனைத்தையும் முழுமையாக புரிந்து கொண்டு விட்ட நிலையில் உள்ளவன் நீ என நம்பினால், பேரானந்த மகிழ்ச்சி நிலையில் இரு’).

रागद्वेषौ मनोधर्मौ न मनस्ते कदाचन ।

निर्विकल्पोऽसि बोधात्मा निर्विकारः सुखं चर ॥

15.5  ஆசையும், கோபமும்  மன சஞ்சலங்களினால் ஏற்படுபவை. மனமோ அல்லது அவற்றில் இருந்து எழும் எண்ணங்களோ  உன்னுடையது அல்ல.  விழிப்புணர்வு பெற்றவன்  நீ எவற்றினாலும்   பாதிக்கப்படுவதில்லை. ஆகவே  மகிழ்ச்சியோடு  இரு. 

(விளக்கம் :  இந்த அறிவுரை மூலம்  அஷ்டவக்கரர் என்ன  கூறினார் என்றால் ‘சுக துக்கங்கள், ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்பு, நன்மை மற்றும் தீமை   போன்ற அனைத்தும் புலன்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மன எழுச்சிகளினால் ஏற்படுகின்றன. உலக பந்தங்களில் ஆழமாக ஊறிக் கிடக்கும்  ஒருவனுக்கே  அலை பாயும் எண்ணங்களினால் பாதிப்புகள் ஏற்படும். அது அவனது பிராரப்த கர்மா வினை.  அதனால்தான்  உடலை சுற்றி உள்ள அறியாமை எனும் மாயை அவற்றை தோற்றுவிக்கின்றது. ஆனால் நீயோ அந்த நிலைகளை எல்லாம் கடந்து விட்டு, ஆனந்தமான மன நிலையில் சென்று விட்டவன். ஆகவே அவற்றால் இனி உனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதினால் நீ மகிழ்ச்சியோடு  இரு’).

सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।

विज्ञाय निरहङ्कारो निर्ममस्त्वं सुखी भव ॥

15.6  அனைத்து உயிர்களிலும்  ஜீவாத்மா  உள்ளதையும், ஜீவாத்மாவிற்குள்  அனைத்து உயிரினங்களும் உள்ளதையும் உண்மை  என்பதை உணர்ந்து கொள். அதே சமயம் நான் என்ற அகந்தையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, எதிலும் அக்கறை கொள்ளாமல்  மகிழ்ச்சியாக இரு .

(விளக்கம் :  இந்த அறிவுரை மூலம்  அஷ்டவக்கரர் என்ன  கூறினார்  என்றால்   ‘ இந்த பிரபஞ்சத்தை படைத்த பரமாத்மா எனும் ஜீவாத்மா, அதே பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும்  வியாபித்து உள்ளது  என்பது மட்டும் அல்ல, அந்த பரமாத்மா எனும் ஜீவாத்மாவே உனக்குள்ளும், அனைத்து படைப்புகளுக்குள்ளும்   உள்ளது என்ற உண்மையையும் உணர்ந்து   கொண்டால்,  நான் எனும் அகந்தை உன்னுள் இருந்து அழிந்து விடும். அந்த நிலைதான்  நீயும் பேரானந்தமாக உள்ள இந்த நிலை  என்பதை புரிந்து கொண்டு மகிழ்ச்சியோடு  இரு’).

विश्वं स्फुरति यत्रेदं तरङ्गा इव सागरे ।

तत्त्वमेव न सन्देहश्चिन्मूर्ते विज्वरो भव ॥

15.7   ஓ, அறிவின் ஊற்றிடமே  உன்னுள் இருந்துதான் இந்த பிரபஞ்சமே கடல் அலைகளை போல எழுந்து மறைகின்றது.  இந்த உண்மையை புரிந்து கொண்டு உலக ஆசைகள் மற்றும் நிராசைகள் என அனைத்தையும் மனதில் இருந்து அழித்து விட்டு சுதந்திரமான நிலையில் நீ இரு.

(விளக்கம் :  ‘ஓ, அறிவின் ஊற்றிடமே’ என்று கூறியதின்  மூலம்  படர்ந்து விரிந்துள்ள எல்லை அற்ற ஆகாயம் மற்றும் பரந்து விரிந்துள்ள கடலைப் போன்ற அளவிலான அறிவாற்றல் ஜீவாத்மாவிற்குள் உறைந்து கிடக்கின்றது என்ற   தன்மையை அஷ்டவக்கரர்  எடுத்துக் காட்டினார்.  மேலும் இந்த அறிவுரை மூலம்  அஷ்டவக்கரர் என்ன  கூறினார்  என்றால்   ‘அறிவின் உறைவிடமான ஜீவாத்மா எனும் பரமாத்வாவில் இருந்துதான் பிரபஞ்சமே கடல் அலைகள் எழுவது போல வெளிவந்து, யுகங்களின் முடிவில் அதன் விதிக்கேற்ப  மீண்டும் மறைந்து விடுகின்றது. புதிய பிரபஞ்சம் மீண்டும் எழுகின்றது.   பிரபஞ்சத்தை படைத்த பரமாத்மா எனும் ஜீவாத்மா, அதே பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் தானே வியாபித்து உள்ளது  என்பது மட்டும் அல்ல, அந்த பரமாத்மா எனும் ஜீவாத்மாவே உனக்குள்ளும் அனைத்து படைப்புகளுக்குள்ளும்   உள்ளது. தனிமையான, அமைதியான, தூய்மையான, சுதந்திரமான ஜீவாத்மாவிற்கு அழிவென்பது இல்லை, அதற்கு பிறப்பும் இல்லை,  இறப்பும் இல்லை என்ற அனைத்து உண்மைகளையும் உணர்ந்து   கொண்டால் மனதில் இருந்து ஆசைகள் மற்றும் நிராசைகள் அனைத்தும் தானாகவே அழிந்து விடும். அந்த நிலைதான்  நீயும் பேரானந்தமாக உள்ள இந்த நிலை  என்பதை புரிந்து கொண்டு சுதந்திரமாக  இரு’).

श्रद्धस्व तात श्रद्धस्व नात्र मोहं कुरुष्व भोः ।

ज्ञानस्वरूपो भगवानात्मा त्वं प्रकृतेः परः ॥

15.8  நம்பிக்கையை இழக்காதே  மகனே, நம்பிக்கையை இழக்காதே   நீயே மெய்யறிவு  நிலையிலானவன், ஒப்பற்ற தலைவன், உனக்கு நிகர் நீயேதான். இயற்கையை விட மேலானவன் நீ. இந்த உண்மையை மாயை என்று எண்ணி ஒதுக்கி விடாதே.

(விளக்கம் :  ஜீவாத்மாவின் தன்மையை ஜனக மன்னனின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்  என்பதற்காக, அஷ்டவக்கரர் தனது  சிஷ்யனான ஜனகரை ‘மகனே’ என உரிமையோடு அழைத்தார்.  ஜனக மன்னனுக்கு  ஏற்கனவே அஷ்டவக்கரர் பேரானந்த நிலையான ஆத்ம ஞானத்தை பற்றி போதனைகள் செய்து இருந்தாலும்,  கஷ்டப்பட்டு பேரானந்த நிலையை அடைந்து விட்டிருந்த  ஜனக மன்னன் எந்த சூழ்நிலையிலும்  ஜீவாத்மாவின் உண்மை தன்மையின் மீது நம்பிக்கையை  இழக்காமல், அது ஒரு மாயை என்று கருதாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே  மீண்டும், மீண்டும் ஜீவாத்மா குறித்து ஆழமாக கூறிக் கொண்டே இருந்தார்.

‘நீயே மெய்யறிவு  நிலையிலானவன், ஒப்பற்ற தலைவன், உனக்கு நிகர் நீயேதான்’ என்றெல்லாம்   அஷ்டவக்கரர் கூறியது ஜீவாத்மாவுடன் இணைந்த நிலையில் இருந்த ஜனக மன்னனை குறித்த வர்ணனையே ஆகும். ஆனாலும் அந்த சூழ்நிலையிலும் ஜீவாத்மாவைப் பற்றி ஜனக மன்னனிடம் அஷ்டவக்கரர் எப்படி விளக்கினார் என்றால் ‘பேரானந்த நிலையிலான ஞானம் என்பதற்கு ஈடு இணை  வேறு எதுவுமே கிடையாது.  அதை விட பேரானந்த நிலை வேறு கிடையாது என்பதை நீ  முற்றிலும் நம்ப வேண்டும்.  இயற்கையினாலும் கட்டுப்படுத்த  முடியாததே ஜீவாத்மா என்பதாகும். அனைத்து கட்டுப்பாடுகளுக்கும்  அப்பாற்பட்ட நிலையிலானது  ஜீவாத்மா. அது எந்த மாறுதலுக்கு உள்ளாவதில்லை, தனித்  தன்மையுடன் கூடிய அது  பேரானந்த நிலையை தருவது, அமைதியானது, அழிவற்றது, அதற்கு ஜனன மரண நிலை கிடையாது, அழிவற்ற அதற்கு நிகர் அதுவேதான் ‘).

गुणैः संवेष्टितो देहस्तिष्ठत्यायाति याति च ।

आत्मा न गन्ता नागन्ता किमेनमनुशोचसि ॥

15.9  ஜடமான உடலும் அதில் உள்ள ஐம்புலன்களும்,  தோன்றும், மறைந்தும் போகும். ஆனால் நீயோ  போவதும் இல்லை, வருவதும் இல்லை என்பதினால் எதற்கு   வருத்தம் அடைகின்றாய்?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனிடம் என்ன கேட்டார் என்றால் ‘பிறப்பும் இறப்பும் ஜடமான உடலுக்கு மாறி மாறி வந்து  கொண்டேதான் இருக்கும்.  எப்போதெல்லாம் ஒரு உடல் தோன்றுமோ அப்போதெல்லாம் அதனுடன் அதனுள் உள்ள ஐம்புலன்களும்  சேர்ந்தே  பிறக்கும். எப்போது அந்த உடல் மரணம் அடைகிறதோ அந்த  உடலை இயக்கிக் கொண்டிருந்த ஐம்புலன்களும்  அந்த உடலோடு சேர்ந்தே  மரணிக்கும்.  ஆனால் அந்த உடலில் தங்கி இருந்த, பிரபஞ்சம் முழுவதுமே வியாபித்து உள்ள,  நிரந்தரமான, அழிவற்ற நிலையில் உள்ள ஜீவாத்மாவிற்கு மரணமோ அல்லது மறு பிறப்போ கிடையாது எனும்போது ஜடமான  உடலை நினைத்து நீ எதற்காக துக்கப்பட வேண்டும்?’).

देहस्तिष्ठतु कल्पान्तं गच्छत्वद्यैव वा पुनः ।

क्व वृद्धिः क्व च वा हानिस्तव चिन्मात्ररूपिणः ॥

15.10  நீ தங்கி உள்ள  ஜடமான உடல் யுகம் முடியும்  வரை அழியாமல் இருக்கட்டும் அல்லது இன்றே அழிந்து போகட்டும். அதில் குடியிருக்கும் தூய மெய்யறிவு  நிலையிலான உனக்கு  அந்த நிலைகளினால்  எந்த மாற்றமானது ஏற்படுகிறதா?

(விளக்கம் : ‘தூய மெய்யறிவு  நிலையிலான உனக்கு,  ஜடமான உடலின் ஜனன மரண   நிலைகளினால்  எந்த மாற்றமானது ஏற்படுகிறதா ‘ என்று அஷ்டவக்கரர்   கேட்டது  ஜீவாத்மாவுடன் இணைந்த நிலையில் இருந்த ஜனக மன்னனை குறித்த வர்ணனையே ஆகும்.  இதன் மூலம் ஜனக மன்னனுக்கு அஷ்டவக்கரர்  என்ன விளக்கினார்   என்றால்  ‘பிரபஞ்சத்தை வெளிப்படுத்திய பரமாத்மா, அதில் பல ஜீவராசிகளையும் தோற்றுவித்ததும் அல்லாமல், அந்த ஜீவன்களிலும் வியாபித்து இருந்தார்.

அவற்றில் தோன்றிய  ஜீவன்களுக்கான  ஜனன- மரண நியதிகள்  ஜடமான உடலுடன் சம்மந்தப்பட்டவை.  அந்த உடல்கள் ஜனன மரணம் அடையும்போது அவற்றில் குடி இருந்த  பரிசுத்தமான ஜீவாத்மா அவற்றினால் எந்த மாறுதலையும் அடைவதில்லை. ஏன் என்றால் ஜீவாத்மா தனித் தன்மையிலானது, அழிவற்றது, சுதந்திரமானது, நிலையானது, எவற்றுடனும் பற்று இல்லாதது. பிரபஞ்சம் முழுவதுமே அது வியாபித்து உள்ளதினால் பிறந்த அல்லது அழிந்த  உடலின் மாற்றங்கள் அந்த உடல்களோடு சம்மந்தம் கொண்டவையாக இருக்குமே ஒழிய அந்த உடலுக்குள் உள்ள ஆத்மாவை அந்த மாற்றங்கள் எந்த விதத்திலும்  கட்டுப்படுத்த முடியாது’).

त्वय्यनन्तमहाम्भोधौ विश्ववीचिः स्वभावतः ।

उदेतु वास्तमायातु न ते वृद्धिर्न वा क्षतिः ॥

15.11  பெரும் கடல் போன்ற உன்னுள் இருந்து அலை அலையாய் உலகம் எழுந்து விதிப்படி யுக யுகங்களாக  மறையட்டும்.  ஆனால் அவற்றினால் உனக்கு லாபமும் இல்லை, இழப்பும் இல்லை.

(விளக்கம்:  ஜீவாத்மாவின் தன்மையை ஜனக மன்னனின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்  என்பதற்காகவே அஷ்டவக்கரர் அதன் பல்வேறு தன்மைகளை  பல விதங்களிலும், பல உதாரணங்கள் மூலம்  எடுத்துரைத்தார். அஷ்டவக்கரர் கூறினார் ‘ஜீவாத்மா என்பது மாபெரும் கடல் போன்ற  தூய உணர்வு பெற்ற அம்சம் ஆகும். பிரபஞ்சம் முழுவதிலும் படந்துள்ள அது உன்னுள்ளும் உள்ளது என்றேன் அல்லவா, அந்த ஜீவாத்மா எனும் பரமாத்மாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட தன்மையிலான பிரபஞ்சம் தோன்றும், அந்த  யுக முடிவில் அது அழிந்து விட, அடுத்த யுகம் மற்ற தன்மைகளோடு தோன்றும். இப்படியாக ஒவ்வொரு யுகங்களுக்கான பிரபஞ்சங்கள், அநேக தன்மைகளுடன் தோன்றி, தோன்றி மறையும். ஆனால்  ஜீவாத்மா அழிவற்றது, சுதந்திரமானது, நிலையானது. அது யுகங்களில் தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை என்பதின் காரணம் அதனுள் இருந்துதானே அடுத்தடுத்த பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன. ஜீவாத்மாவிற்கு அழிவு உண்டென்றால் அதை யார் படைப்பார்கள்? எனவேதான் அதற்கு அழிவு இல்லை என்கின்றோம். ஜீவாத்மாவிற்கு எந்த தனித் தன்மையும் கிடையாது,  நமது கண்களுக்கு புலப்படாமல் உள்ளது அவ்வளவே. அத்தனை யுகங்களிலும் ஜீவாத்மா மிகுந்த உணர்வுடன் இருப்பதினால், உலகில் காம க்ரோதங்களினால் அலை அலையாய் எண்ணங்கள் எழுந்தாலும் அவற்றினால் ஜீவாத்மாவிற்கு எந்த லாபமோ அல்லது நஷ்டமோ கிடையாது, அது எந்த உணர்ச்சிகளினாலும் பாதிக்கப்படுவது இல்லை’).

तात चिन्मात्ररूपोऽसि न ते भिन्नमिदं जगत् ।

अतः कस्य कथं कुत्र हेयोपादेयकल्पना ॥

15.12 மகனே,  நீ தூய ஜீவாத்மா. நீயும் உலகமும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை. நீயே உலகம் எனும்போது அதில்  இருந்து நீ  எதை ஏற்க முடியும் அல்லது நிராகரிக்க முடியும், அது சாத்தியமா? 

(விளக்கம்: அஷ்டவக்கரர் தனது  சிஷ்யனான ஜனகரை ‘மகனே’ என மீண்டும் உரிமையோடு அழைத்து என்ன கூறினார் என்றால்  ‘ஜீவாத்மா என்பது மாபெரும் கடல் போன்ற  சின்மாத்ர ஸ்வரூபா அல்லது தூய உணர்வு பெற்ற அம்சம் எனப்படும்.  பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ள ஜீவாத்மா தூய்மையானது, ஜீவாத்மாவிடம் இருந்துதான் உலகமே தோன்றியது என்பதினால் அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளவை. உலகமும் அதில் படைக்கப்பட்டுள்ள  அனைத்துமே  ஜீவாத்மாவினால் வியாபிக்கப்பட்டு உள்ளது எனும்போது அந்த உலகில்  எவர் எதை ஜீவாத்மாவிற்கு கொடுக்க முடியும்?  ஜீவாத்மா என்பதற்கு உருவமே இல்லை எனும்போது  அந்த ஜீவாத்மா இந்த உலகில்  எதை  நிராகரிக்க முடியும் அல்லது ஏற்க முடியும், அவை சாத்தியமா என்பதை எண்ணிப் பார்’)

एकस्मिन्नव्यये शान्ते चिदाकाशेऽमले त्वयि ।

कुतो जन्म कुतो कर्म कुतोऽहङ्कार एव च ॥

15.13 நீ அழிவற்றவன், தூய்மையானவன்,  மாறுதல்களுக்கு உட்படாதவன்,  அமைதியானவன் மற்றும் படர்ந்த ஆகாயம் போன்ற  மெய்யறிவு உள்ளவன் எனும்போது உனக்கு அகங்காரமும், இறப்பும், மறு பிறப்பும் எங்கிருந்து வர முடியும்?

(விளக்கம்: அஷ்டவக்கரர் ஆகாயம் போன்று மெய்யறிவு உள்ளவன் என ஜீவாத்மாவை குறிப்பிட்டதின் மூலம் ஜீவாத்மாவை ஆகாயத்தின் தன்மையுடன்  ஒப்பிடவில்லை. ஆகாயம் எந்த அளவு எல்லையே இன்றி படர்ந்து விரிந்துள்ளதோ அதே போன்ற நிலையிலான  அறிவாற்றல் கொண்டது ஜீவாத்மா என்று கூறுகின்றார். ஜீவாத்மா அழிவற்றது, சுதந்திரமானது, நிலையானது. அதற்கு எந்த தனித் தன்மையும் கிடையாது.  அது யுக யுகமாக  தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை எனும்போது  அதற்கு எங்கிருந்து  ஜனன மரண  நிலைகள் ஏற்பட முடியும்  என்பதாக ஜனக மன்னனிடம் கேட்டதின் காரணம் ஜீவாத்மா அழிவற்றது என்பதை அவர் மனதில் ஆழமாக பதிக்க வேண்டும் என்ற எண்ணமே).

यत्त्वं पश्यसि तत्रैकस्त्वमेव प्रतिभाससे ।

किं पृथक् भासते स्वर्णात् कटकाङ्गदनूपुरम् ॥

15.14   தங்க  கை வளையல், கொலுசு, கை காப்பு போன்ற  அனைத்திலுமே எப்படி தங்க உலோகம் மட்டுமே  ஊடுருவி உள்ளதோ அதே  போலவேதான்  பிரபஞ்சம் முழுவதும் நீயே ஊடுருவி உள்ளாய்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் இதன் மூலம் என்ன கூறுகின்றார் எனில் ‘தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள், உருவத்தில்    வேண்டுமானால்  மாறுபட்டு  இருக்கலாமே தவிற அந்த மாற்று உருவ நகைகள் அனைத்துமே  வேறு உருவில் உள்ள தங்க உலோகமே என்பது எப்படி உண்மையோ அப்படித்தான்,  இந்த உலகமே உன்னுடன் இணைந்துள்ளது என்பதினால் உலகில்  உள்ள அனைத்திலுமே  வியாபித்து உள்ளது ஜீவாத்மாவே எனும்  உண்மையையும் அறிந்து கொள்ள முடியும்’).

अयं सोऽहमयं नाहं विभागमिति सन्त्यज ।

सर्वमात्मेति निश्चित्य निःसङ्कल्पः सुखी भव ॥

15.15   நான் அதுவல்ல, நான் இதுவல்ல  என்ற நிலைகளை அழித்துக் கொண்டு, நானே பிரும்மன்  என்ற உணர்வில் இருந்து கொண்டு, உலகில் எந்த பற்றும் இல்லாமல்,  மகிழ்ச்சியோடு இரு.

तवैवाज्ञानतो विश्वं त्वमेकः परमार्थतः ।

त्वत्तोऽन्यो नास्ति संसारी नासंसारी च कश्चन ॥

15.16  உனது அறியாமையினால்தான் தனியான உலகம்  உள்ளதாக நீ நினைக்கிறாய்.  பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே  ஜீவாத்மாதான். அதை  மீறி வேறெந்த ஜீவாத்மாவும் இல்லை, ஈஸ்வரரும் இல்லை.

(விளக்கம் : அஷ்டவக்காரர் ஜனக மன்னனிடம் கூறினார்  ‘உண்மையைக் கூற வேண்டும் எனில் இந்த உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து ஜீவராசிகளும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கின்றன என்றாலும் ஆச்சர்யமாக அவை அனைத்திலும் ஊடுருவி உள்ள  ஜீவாத்மாவிற்கோ பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஜீவாத்மாவில்  இருந்து  வெளி வந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலுமே ஜீவாத்மா மட்டுமே வியாபித்து உள்ளது, இந்த உலகே ஜீவாத்மா என்பதே உண்மை எனும்போது  உலகம் வேறு ஜீவாத்மா என்பது வேறா? உனது அறியாமையினால்தான்  மாயையான உலகை ஜீவாத்மாவின் இருந்து வேறுபட்டதாக நீ பார்க்கிறாய்’).

भ्रान्तिमात्रमिदं विश्वं न किञ्चिदिति निश्चयी ।

निर्वासनः स्फूर्तिमात्रो न किञ्चिदिव शाम्यति ॥

15.17  மன விடுதலை அடைந்தவன் எதன் மீதும் வெறுப்பு  கொள்வதில்லை, எதையும் விரும்புவதும் இல்லை. இந்த உலகமே மாயை, அதன் இயக்கங்களும் மாயை என்பதை உணர்ந்த அவன் பற்று அற்ற  நிலையில்தான் இருப்பான். பேரானந்த மனநிலையில் இருக்கும் அவன்  முற்றிலும் அமைதியாகவே இருப்பான்.

एक एव भवाम्भोधावासीदस्ति भविष्यति ।

न ते बन्धोऽस्ति मोक्षो वा कृतकृत्यः सुखं चर ॥

15.18   கடல் போல பரந்து விரிந்துள்ள  உலகின் அனைத்திலும் வியாபித்து உள்ளது ஒன்றே ஒன்றுதான், அது ஜீவாத்மாதான். அதற்கு பற்றுதலும் கிடையாது, விடுதலையும்  கிடையாது என்ற உண்மையை ஆழமாக மனதில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு இரு.

मा सङ्कल्पविकल्पाभ्यां चित्तं क्षोभय चिन्मय ।

उपशाम्य सुखं तिष्ठ स्वात्मन्यानन्दविग्रहे ॥

15.19   மெய்யறிவு மிக்கவன், உன்னை  சுற்றி உள்ள அனைத்துமே மாயை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தேவை அற்ற எண்ணங்களால் மனதை குழப்பிக் கொள்ளாமல்  அமைதியாக, பேரானந்த நிலையிலேயே இரு. 

त्यजैव ध्यानं सर्वत्र मा किञ्चिद् हृदि धारय ।

आत्मा त्वं मुक्त एवासि किं विमृश्य करिष्यसि ॥

15.20  எந்த சிந்தனையும் இல்லாமல், மனதை முற்றிலும் வெறுமையான நிலையில் வைத்துக் கொண்டு, நானே பிரும்மன் என்ற நிலையில் சுதந்திரமாக இரு.  

(விளக்கம்: மேலே 15.17 முதல் 15.20 வரை கூறப்பட்டு உள்ள போதனைகள் அனைத்தையுமே  ஆனந்த நிலையில் இருந்த ஜனக மன்னனுக்கு  ஜீவாத்மாவின் தன்மையையும் அதனுடன் ஐக்கியமாக என்ன நியமங்களை கடைபிடிக்க  வேண்டும்  என்பதையும் தெளிவாக புரியும் வகையில் அஷ்டவக்கரர் எடுத்துரைத்தார். ‘ நீ (ஜனகர்) மெய்யறிவு மிக்கவன். பேரானந்த நிலையின் அருகில்  சென்று  விட்டதினால் எதன் மீதும் விருப்பு வெறுப்பு கொள்ளாமலும், எதையும் அடைய விரும்பாமலும் இருந்து கொண்டு,  உலகமே மாயை, அதில் உள்ள இயக்கங்களும் மாயையானது  என்ற உண்மையை புரிந்து கொண்டு, உன்னுள்  மீதம் உள்ள பற்றையும் அழித்துக் கொண்டு முற்றிலுமான  பட்டற்ற நிலையில் சென்று விடு. அப்போதுதான்  பட்டற்ற நிலையில் உள்ள ஜீவாத்மாவுடன்  முழுமையாக ஐக்கியமாக முடியும்.    தேவை அற்ற சிந்தனைகளினாலும் எண்ணங்களினாலும்  மனதை குழப்பிக் கொள்ளாமல்  நானே பிரும்மன் என்ற நிலையில், சுதந்திரமான புருஷனாக  அமைதியாக இரு’).

பதினாறாம்  அத்தியாயம்

ஜனக மன்னனுக்கு அஷ்டவக்கரர் கொடுத்த   விசேஷ போதனைகள் 

आचक्ष्व श‍ृणु वा तात नानाशास्त्राण्यनेकशः ।

तथापि न तव स्वास्थ्यं सर्वविस्मरणाद् ऋते ॥

16.1  என் மகனே, நீ எண்ணற்ற நூல்களை படிக்கலாம், வேதங்களை ஓதலாம், அவற்றின் உரைகளைக் கேட்கலாம், ஆனால் அவை அனைத்தையும் உனது  மனதில் இருந்து நீக்கிக் கொள்ளும்வரை உன்னால் விழிப்புணர்வு  நிலையை அடைய முடியாது.

भोगं कर्म समाधिं वा कुरु विज्ञ तथापि ते ।

चित्तं निरस्तसर्वाशमत्यर्थं रोचयिष्यति ॥

16.2   அறிவாற்றல் மிக்கவனே, பல்வேறு வகைகளில் உலக இன்பங்களை அனுபவிக்கலாம், அமைதிக்காக தியானம்  செய்யலாம். ஆனாலும்  ஆசைகளை எல்லாம் அழித்துக் கொண்டு அவற்றை எல்லாம் கடந்த ஆனந்த நிலையை அடைய உனது மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கும். 

(விளக்கம் :  இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னருக்கு என்ன கூறினார் என்றால்  ‘உலக பற்றுக்களுடன் நீ இணைந்து இருக்கும்வரை உன்னால் ஞான நிலையை நினைத்தும் பார்க்க முடியாது.  உலக பற்றுக்களுடன் இருக்கும்வரை நீ என்ன செய்தாலும் உன் மனதில் அமைதி ஏற்படாது. அது வேண்டும், இது வேண்டும் என மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே நீ ஞான நிலையை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொண்டால், முதலில்  உலக பந்தங்கள்  அனைத்தையும் அழித்துக் கொண்டு  பற்றற்ற நிலைக்கு சென்றால்  மட்டுமே உனது இலக்கை அடையும் பாதையில் பயணிக்க முடியும்’).

आयासात्सकलो दुःखी नैनं जानाति कश्चन ।

अनेनैवोपदेशेन धन्यः प्राप्नोति निर्वृतिम् ॥

16.3   இது வேண்டும், அது வேண்டும் என்று எழும் ஆசைகளே வாழ்க்கையில் துயரத்தை தருகின்றது  என்ற  உண்மையை  ஒருவன் உணர்வது இல்லை. ஆனால்  இந்த உபதேசத்தின் உண்மையை புரிந்து கொள்பவர்கள்  உலக பந்தங்களை அழித்துக் கொண்டு  மன விடுதலை பெறுகின்றார்கள் .

व्यापारे खिद्यते यस्तु निमेषोन्मेषयोरपि ।

तस्यालस्य धुरीणस्य सुखं नान्यस्य कस्यचित् ॥

16.4  கண்களை திறந்து மூடுவதை கூட சங்கடமாக நினைப்பவனை முழு சோம்பேறி என்று நினைத்தால் அது தவறு. அவனே  உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருப்பவன். அந்த பேரானந்த நிலை மற்றவர்களுக்கு கிடைக்காது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘அனைத்து பந்தங்களையும், உலக பற்றையும் துறந்து  விட்டு பேரானந்த நிலையில் அப்படியே ஜடம் போல கண்களை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்தவண்ணம்  இருக்கும் ஞானி, ஐம்புலன்களின் இயக்கத்தினால் கண்களை திறந்து மூடுவதும் கூட தான் விரும்பாத உலக பற்றின் ஒரு பகுதி, தனது ஆனந்தமான நிலைக்கு அதுவும் ஒரு தடையே என்பதாக உணர்வான். கண்களை திறந்து மூடுவது உடல் உணர்வோடு சம்மந்தப்பட்ட   நிலை என்பதினால்  ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகிவிட்ட தனக்கும் அந்த செயலுக்கும் சம்மந்தம் இல்லை எனக் கருதுவான். அதை வளர விட்டால் மீண்டும் தான் உணர்வுகளுடன் சம்மந்தம் கொண்டு விடுவேன் என நினைத்து  அவற்றை விரும்புவதில்லை.  ஆகவே அந்த நிலையை சோம்பேறித்தனம் எனக் கருதுவது தவறு. உண்மையில் அவன் இருக்கும் பேரானந்த நிலையை  மற்றவர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாதது’).

इदं कृतमिदं नेति द्वन्द्वैर्मुक्तं यदा मनः ।

धर्मार्थकाममोक्षेषु निरपेक्षं तदा भवेत् ॥

16.5  நான் இதை செய்தேன், அதை செய்தேன் என்ற எதிர்மறை மன நிலைகளில் இருந்து விடுபட்டு விட்டால்  அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு போன்ற  எண்ணங்களில்  மனம் ஈடுபடுவது இல்லை.

(விளக்கம் : ஐம்புலன்களினால் ஏற்படும்  எண்ணங்களை தவிர்த்துக் கொண்டால் நான் எனும் அகம்பாவம் அகலும். நான் இதை செய்தேன், அதை செய்தேன் எனக் எண்ணத்  துவங்குவது அகம்பாவத்தையும் அறியாமையையும் அதிகரிக்கும். அவை அதிகரிக்கும்போது மன எண்ணங்கள் அலை மோதிக் கொண்டே இருக்கும்.  மனித வாழ்க்கையின் நான்கு நேரான குறிக்கோள்களான   அறம், பொருள், இன்பம் என்பவற்றின் மீது நாட்டம் அதிகரிக்கும். அந்த நிலை பேரானந்த நிலையான விழிப்புணர்வை தராது.

அறம், பொருள், இன்பம் என்பவற்றை புருஷார்த்தம் என்பார்கள்.   அறம் என்பது தர்மத்தை குறிக்கின்றது. தர்மம் என்பது  நீதி, தார்மீக சிந்தனைகள் போன்றவை ஆகும். பொருள் எனப்படுவது செழிப்பு, செல்வம், நற்பெயர் பெறுவது  போன்றவற்றைக் குறிக்கும்.  காமம் என்பது  இன்ப நுகர்ச்சி அல்லது ஆசையைக் குறிப்பது.   ஆனால் அறம், பொருள், இன்பம் போன்ற  மூன்றையும் முறையோடும், நெறியோடும், அளவோடும் கை கொள்பவன் வீட்டை அடைவான் அதாவது இறுதி வீடு எனப்படும் மோட்ஷத்தை அடைவான் என்பது  ஒரு நம்பிக்கை.  இதனால்தான் ஒருவர் இறந்த பின்   சொர்கலோகத்திற்கு செல்வதை மோட்ஷ நிலை  என்பார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட தெய்வ நம்பிக்கைகளை அஷ்டவக்கரர் ஏற்கவில்லை. அதற்கு பதில் ஒருவன், சம்சார சாகர    வாழ்க்கையிலேயே அனைத்து பற்றையும் துறந்து விட்டு  மோட்ஷம் எனப்படும் பேரானந்தத்தை தரும் ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகும் நிலையில் இருக்கலாம்’ என்பதாக அஷ்டவக்கரர் கருதி அதை ஜனகருக்கும் உணர்த்தி இருக்க வேண்டும்).

विरक्तो विषयद्वेष्टा रागी विषयलोलुपः ।

ग्रहमोक्षविहीनस्तु न विरक्तो न रागवान् ॥

16.6  எவன் ஒருவன் புலன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைத்துள்ளானோ அவன் காம, மோக, சிற்றின்ப  ஆசைகளை துறந்தவனாக இருப்பான். ஆனால்  அவற்றை  துறக்க முடியாத நிலையில் உள்ளவன் உலக பற்று கொண்டவனாக இருப்பான். விழிப்புணர்வு கொண்ட நிலையில் இருப்பவனுக்கோ  விருப்பு, வெறுப்பு  என்ற நிலையே  கிடையாது. 

(விளக்கம்: அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு தந்த போதனையின் அர்த்தம் இதுதான் ”எவன் ஒருவன் அனைத்திலும் பேரார்வம்   கொண்டவனாகவும், பேராசை கொண்டவனாகவும் இருப்பானோ அவனிடத்தில் காம, மோக இச்சைகளும், பொருட்கள் மீதான ஆசைகளும் நிறையவே இருக்கும். ஆனால் அவை அனைத்தும் அளவு கடந்து செல்லும்போது, ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்’ என்ற பழமொழியைப் போல, அவற்றின் மீதான நாட்டம் அவனுக்கு தானாகவே குறையத் துவங்கும். அந்த நிலையில்தான் அவனுக்கு ஆன்மீக நாட்டம் ஏற்படும்.  ஆன்மீக நாட்டம் ஏற்படும்போது’ நான் யார்’ என்ற வினா மனதில் எழும்.  ‘எனது உடல்’ என்பதின் தத்துவம் புரியத் துவங்கும். மனம் அமைதியை தேடும். அந்த பக்குவ நிலையில் சென்று விட்டவனுக்கு மெல்ல மெல்ல விருப்பு, வெறுப்பு என்கின்ற நிலைகள் மனதில் இருந்து அழிந்து விடும்”).

हेयोपादेयता तावत्संसारविटपांकुरः।

स्टहा जीवति याव? निर्विचारदशास्पदम्॥

16.7  ஆசை இருக்கும் வரை அனைத்திலும் சம நோக்கின்மை எனும் பாகுபாடும், விருப்பு, வெறுப்பு என்ற நிலைப்பாடும் இருக்கும்.  அதுவே   அறியாமை எனும் சம்சார சாகரத்தில் மூழ்க உள்ள நிலைக்கு போடப்படும் விதை ஆகும்.

(விளக்கம்: இதன் மூலம்  அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு  விளக்கி உள்ளது என்ன என்றால்  ‘ஐம்புலன்களினால் இயங்கும்  எண்ண அலைகளால் இயக்கப்படும் மனிதனின் பேராசை ஆலமரம் போல வளரத்  துவங்கும்போது, அது  அவனை மீள முடியாத சம்சார சாகரத்தில் கொண்டு சென்று தள்ளி விடும்.  சம்சார சாகரம் எனும் ஆலமரம்  வளர போடப்படும் விதைகளே, ஆசைகளின் ஆணி வேர்களான ஆசா பாசங்கள், விருப்பு, வெறுப்பு மற்றும் காம, மோக இச்சைகள் போன்ற நிலைகள் ஆகும். ஒவ்வொரு ஆசைகளும் மரக் கிளைகள் போல வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் உள்ளவன் செய்யும் செயல்களினால் அவன் மேலும் மேலும் மீள முடியாத கர்மாக்களை பெறுகிறான். ஆசைகள், பேராசைகளாக மாறி விட, அவற்றின் பலன்கள் அடுத்த ஜென்மத்திலும் அவனை பிராரப்த வினை  கர்மா என்ற பெயரில் துரத்தி அடிக்கும்.  அது அவனுக்கு வேதனைகளையும், துன்பங்களையும் தரும். எனவேதான் ஆசைகளை அழித்துக் கொள்ளத் துவங்கா விட்டால், பிறப்பு மற்றும் மறுபிறப்பு எனும் நிலையில் இருந்து தப்ப முடியாத நிலைக்கு சாதகன்   சென்று விடுவான். அவனால் ஞான நிலையை தரும் பாதையில் நுழைய முடியாது ‘ ).

प्रवृत्तौ जायते रागो निर्वृत्तौ द्वेष एव हि ।

निर्द्वन्द्वो बालवद् धीमान् एवमेव व्यवस्थितः ॥

16.8  வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள்  குடும்ப பற்றை அதிகரிக்கும். வேறு    சில நிகழ்வுகளோ வாழ்க்கையில் வெறுப்பை வளர்க்கும். ஆனால் அந்த இரு நிலைகளையும் அழித்துக் கொண்டவனே குழந்தை போன்ற மன நிலையில் உள்ள  ஞானி ஆவான்.

(விளக்கம்: இதன் மூலம்  அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு  விளக்கி உள்ளது என்ன என்றால்  ‘அனைத்து பற்றையும் விலக்கிக் கொண்டு விட்டவன் எந்த சிந்தனையும் அற்ற நிலையில் உள்ளவன் ஆகி விடுவான்.  எந்த சிந்தனைகளும் இல்லாத நிலை பிறந்து சில மாதமே ஆன குழந்தைக்கு மட்டுமே இருக்க முடியும். சிறு குழந்தைக்கு குடும்பப் பற்று குறித்து என்ன தெரியும்? ஆசை, பேராசை, காம, மோக இச்சைகள்  மற்றும் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்பு என்பவை என்ன புரியும்?  கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தையின் மனம்  எதுவுமே இல்லாத வெறுமை நிலையில் இருக்கும். அனைத்து பற்றுக்களையும் தன்னுள் இருந்து அழித்துக் கொண்டு, ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு விட்ட ஞானியும் அப்படிப்பட்ட கள்ளம் கபடமற்ற குழந்தை போன்ற மன நிலையில்தான் இருக்கின்றார்’).

हातुमिच्छति संसारं रागी दुःखजिहासया ।

वीतरागो हि निर्दुःखस्तस्मिन्नपि न खिद्यति ॥

16.9  துன்பத்தில் உழலுபவன்   குடும்பத்தை  துறக்க  வழி தேடுகிறான். ஆனால் உலக வாழ்வில் பற்றில்லாமல் இருப்பவனோ எந்த  துன்பத்தையும் உணராமல்   சுதந்திரமாக இருக்கின்றான்.

(விளக்கம்:  மிக   எளிதாக தெரியும் இந்த தத்துவார்த்தமான போதனை மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு  விளக்கி உள்ளது என்ன என்றால்  ‘சம்சார சாகரத்தில் உழலும் யாருக்கு, எதனால்  துன்பம் நேரிடுகின்றது என்று ஆராய்ந்து பார்த்தால், மனதில் எழும் அளவற்ற ஆசைகளே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பது  புரியும். ஆசைகள் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். பெண்ணாசை, பொருளாசை மற்றும் மண் ஆசை என்பவை ஆலமரம் போன்று வளரும் ஆசைகளுக்கு போடப்படும்  அடிப்படை விதைகள் ஆகும். அந்த மூன்று  அடிப்படை ஆசைகள்தான்  வேறு பல வித   ஆசைகளையும் தூண்டி விடும். ஆசைகள்  மரம் போல வளரத் துவங்கும்போது அவை பேராசைகளாக மாறி விடுகின்றன.  பேரராசைகளை பூர்த்தி செய்து கொள்ள பொருளாசை தேவைப்படும். பொருளாசைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வம் வேண்டும். செல்வம் தேவை எனில் தீய செயல்கள் உட்பட பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இவற்றை எல்லாம் தாண்டி ஒரு கட்டத்தில்  உடல் நலமும் மன நலமும் தளர்ந்து போய்விடும்  நேரத்தில் அந்த மனிதன் வாழ்க்கையை வெறுக்கத் துவங்குகின்றான். வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி கொள்ள நினைக்கின்றான், அவனுக்கு வழி தெரிவதில்லை. மனம் வெதும்பி வாழ் நாட்களை கழித்துக் கொண்டு இருப்பான். ஆனால் அது போன்ற நிலைகளில்  இருந்த இன்னொருவனோ  தக்க நேரத்தில்  ஆசைகளையும்   உலக பற்றுக்களையும் அழித்துக் கொண்டு விடும்போது எந்த துன்பத்தையும் உணராமல்   சுதந்திரமாக இருக்கின்றான்’).

यस्याभिमानो मोक्षेऽपि देहेऽपि ममता तथा ।

न च ज्ञानी न वा योगी केवलं दुःखभागसौ ॥

16.10 தான் ஆத்ம விடுதலை பெற்றவன்,  சுதந்திரமானவன் என எவன் ஒருவன்  தன்னைத் தானே புகழ்ந்து கொள்கின்றானோ அவன் ஒரு  ஞானியும் அல்ல, அனைத்தையும் துறந்த யோகியும் அல்ல. அவன் உண்மையில்  துன்பங்களில் உழல்பவனாக  இருப்பான்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு கூறுகின்றார் ”எவன் ஒருவனுக்கு ‘தான்’ என்ற அகந்தை மனதில் எழுந்து விடுமோ, அப்போதே அவன் ஆன்மீக பேராற்றல் கொண்டவன் அல்ல என்பதை புரிந்து கொண்டு விடலாம். ‘தான்’ என்பது அகந்தை அல்ல அறியாமையாகும். தான் என்ற எண்ணம் உள்ளவனை உலகின் ‘அனைத்து பற்றுக்களும்  சூழ்ந்து கொண்டு விட்ட நிலையில் உள்ளவன்’ என்பதாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான்  ‘தான் ஆத்ம விடுதலை  பெற்றவன்,  சுதந்திரமானாவான் என  தன்னைத் தானே புகழ்ந்து  கொள்பவன்   ஞானியும் அல்ல அனைத்தையும் துறந்த யோகியும் அல்ல’ என்ற கருத்து உண்மை என்பதாகி விடுகின்றது. அவனது மனதிலும் இதயத்திலும்  சூறாவளி போன்ற துன்ப நிலைகள்  தொடர்ந்து கொண்டே இருப்பதினால்தான், அவற்றை மூடி மறைத்து, சமூகத்தில் ஒரு அந்தஸ்தத்துடன் இருக்க எண்ணி  வெளிப் பார்வைக்கு தான் பேரறிவாளி  போல  காட்டிக் கொள்ள எண்ணி  அப்படி எல்லாம் கூறுவான். ஆனால் அதே சமயத்தில் உண்மையான அறிவாளியோ எந்த விதமான சலனத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னை பற்றி யார், என்ன நினைத்தாலும் அவை தனக்கு அல்ல என்ற நிலைப்பாட்டுடன் அமைதியாக இருக்கின்றான். அவனுக்கு தான் யார் என்பது தெரியும், நன்கே புரியும்.  நிறை குடம் தளும்பாது என்பது அவனுக்கே பொருந்தும்”).

हरो यद्युपदेष्टा ते हरिः कमलजोऽपि वा ।

तथापि न तव स्वाथ्यं सर्वविस्मरणादृते ॥

16.11  மாபெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு மற்றும் தாமரையில் அமர்ந்துள்ள பிரும்ம தேவனே கூட பூமிக்கு வந்து உங்களுக்கு போதனை செய்யும் குருவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைத்து நினைவுகளையும் உங்களிடம் இருந்து அழித்துக் கொள்ளாதவரை விழிப்புணர்வு நிலையை அடைய முடியாது.

(விளக்கம் : இதன் மூலம் தெளிவாக அஷ்டவக்காரர் ஜனக மன்னனுக்கு தெரிவித்தது என்ன என்றால்  ‘எவன் ஒருவன் தனது பழைய மற்றும் நிகழ் கால  வாழ்க்கை நினைவுகளை எல்லாம் தன்னுள் இருந்து அழித்துக் கொள்ள முடியாமல் உள்ளாரோ, அவருக்கு எந்த ஒரு குரு போதனையும் விழுப்புணர்வு நிலையை அடைய உதவி செய்யாது. அத்தனை ஏன்,  மாபெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு மற்றும் பிரும்ம தேவனே கூட பூமிக்கு வந்து அவனுக்கு போதனைகள் செய்தாலும் அவனுள் துளிர் விட்டுக் கொண்டே இருக்கும் ஆசைகளை அவன்  அழித்துக் கொள்ளாதவரை அவனால் ஆத்ம விடுதலை பெற முடியாது.

 இந்த பகுதியில் உள்ள போதனைகள்  அனைத்துமே உண்மையில் ஆத்ம விடுதலை அடைய வேண்டும் என்ற ஆவல் உள்ள சாதகர்களுக்கு பயன்படும் வகையில் கூறப்பட்டு  உள்ளது. அஷ்டவக்கரர் ஜனகருக்கு செய்த  போதனைகளின் சாரம் இதுதான்    ‘எவர் ஒருவர்   உண்மையிலேயே ஆத்ம விடுதலை  பெற வேண்டும் என விரும்புவாரோ, அதற்கு முன்னர் அவர் தனது ஆன்மீக பற்றை  வளர்த்துக் கொள்ள எண்ணற்ற நூல்களை படிக்கலாம், வேதங்களை ஓதலாம் அல்லது அவற்றின் உரைகளைக் கேட்கலாம்.  ஆனால் எப்படி உணவருந்தும் அரிசி  மீதுள்ள உமியை  களைந்து விட்டு அதை உணவிற்கு பயன்படுத்துவோமோ, எப்படி  ஆழ்ந்த உறக்க நிலையில் கண்ட கனவை உறக்கம் கலைந்து எழுந்த பின் நாம்  மறந்து விடுவோமா, அதை போலவேதான்  அந்த நூல்களின்  மற்றும் உரைகளின்  சாரத்தை மட்டும் மனதில் உறிஞ்சிக் கொண்டு புத்தகங்களை குறித்த நினைவுகளை முற்றிலும் மறந்து விட வேண்டும்.  மனதில் ஏற்றி வைத்துக் கொண்ட சாரங்களின் நியமங்களின்படி  நடக்க முயல வேண்டும். அதுவே  முதல் படி. அதே நேரத்தில் புத்தகங்களை மறந்து விடுவதை போல  குருவின் போதனைகளை  எப்போதுமே மறக்கக் கூடாது, உதாசீனப்படுத்தவும் கூடாது .

ஒருமுறை ஆன்மீக தாக்கத்தை மனதிற்குள் ஏற்றுக் கொண்டு விட்டால், எப்போது ஆத்ம விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் எழுமோ அதற்கு முன்னோடியாக பழைய மற்றும் நிகழ் கால வாழ்க்கை நினைவுகளை எல்லாம் தன்னுள் அழித்துக் கொள்ளத் துவங்க வேண்டும். குடும்பத்தின் மீதான ஆசா பாசங்கள் மற்றும் பற்றை  விலக்கிக் கொள்ள வேண்டும். எவன் ஒருவன் அனைத்திலும் பேரார்வம் கொண்டவனாகவும், பொருட்கள் மீது பேராசை கொண்டவனாகவும் இருப்பானோ அவனிடத்தில் காம, மோக இச்சைகளும், பொருட்கள் மீதான ஆசைகளும் நிறையவே தோன்றத் துவங்கும். ஆகவே ஆலமரம் போன்று வளர்ந்து கொண்டிருக்கும்  ஆசா பாசங்கள், விருப்பு, வெறுப்பு மற்றும் காம, மோக இச்சைகள் போன்றவற்றை அழித்துக் கொள்ள வேண்டும்.

ஆசைகளை அழித்துக் கொள்ளத் துவங்காவிட்டால், பிறப்பு மற்றும் மறுபிறப்பு எனும் நிலையில் இருந்து தப்ப முடியாத நிலைக்கு சாதகன்  சென்று விடுவான். காரணம் அவனால் ஞான நிலையை தரும் பாதையில் நுழைய முடியாது. ஒருமுறை ஆன்மீக நாட்டம் வந்து விட்டால் நானே பிரும்மன் என்ற உண்மையை உணரத்  துவங்குவார்கள். மெல்ல மெல்ல அவர்களுக்கு ஜீவாத்மா என்பதின் உண்மையான அர்த்தம்  புரியத் துவங்கும், இந்த உலகமே மாயை என்பதை புரிந்து கொள்வார்கள்.   அந்த நிலையில்தான் ஐம்புலன்களையும் தம்முள் இருந்து அழித்துக் கொண்டு, உலக பற்றை எல்லாம் விலக்கிக் கொண்டு, ஆத்ம விடுதலை அடையும் பாதையில் நுழையத் துவங்குவார்கள்.  இவை அனைத்தையும் புரிந்து கொள்ளாவிடில் தெய்வங்களே நேரில்  வந்து குரு உபதேசங்களை செய்தால் கூட சாதகனால்  ஆத்ம விடுதலை அடைய முடியாது.

இந்த உபதேசங்களில் ஆச்சர்யமான நிலை என்ன என்றால், ஜனகருக்கு கொடுத்த போதனைகளில்  வேறு எங்குமே அஷ்டவக்கரர் தெய்வங்களைக் குறித்துக் கூறவில்லை, ஆன்மீகத்தை பற்றியும் குறிப்பிடவில்லை. அதற்கான காரணம் அவற்றில்  அஷ்டவக்கரர் நம்பிக்கை கொள்ளவில்லை என்று புரிந்து கொள்ளலாமா என்றும் தெரியவில்லை’).

 

பதினேழாம் அத்தியாயம்

தன்னை அறிந்தவர் அஷ்டவாக்கரர் கூறினார் :

तेन ज्ञानफलं प्राप्तं योगाभ्यासफलं तथा ।

तृप्तः स्वच्छेन्द्रियो नित्यमे- का की रमते तु यः॥१॥

17.1  எவன் ஒருவன்  எப்போதும் தனிமையில் இருப்பதை விரும்புவானோ, எவன் ஒருவன் உலக பற்று அனைத்தையும்  விலக்கிக் கொண்டு, புடம் போட்ட  தங்கம் போன்று புலன்களை அடக்கிக் கொண்டுள்ள நிலையில் இருப்பானோ, அவனே ஆத்ம ஞானம் பெற்றவன், யோகப் பயிற்சியின் முழு பலனையும் பெற்றிருப்பவன்.

(விளக்கம்: ஜனக மன்னனின் மனதில் ஆழமாக பதியும் வகையில் அஷ்டவக்கரர் இவற்றை கூறியதின்  காரணம் ஆத்ம விடுதலை பெற நினைக்கும் சாதகர்களுக்கு அது பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அவர் கூறியதின் உள் அர்த்தம்  இதுதான்.    ‘பொதுவாக ஞானம் பெற விரும்பும் யோகிகள் யோக நிலையில் துவங்கி, தியான நிலையை அடைந்து அதன் பின்னர் ஆத்ம ஞான நிலையை அடையும் பாதையில் நுழைவார்கள்.   தனது ஒரே நிலையிலான கவனத்தில் இருந்து  தன்னை திசை திருப்பும் செயல்களில் எவரும்  ஈடுபடக் கூடாது என்பதற்காக தனிமையை நாடுவார்கள்.   தனிமையில் ஆரவாரம் அற்ற இடத்தில் இருக்கும்போது மட்டுமே  தன்னை மறந்த நிலையில் இருக்க முடியும்,  ஆரவாரமற்ற, இயற்கையின்  அமைதியோடு ஒன்றிணைந்து இருக்கும் நிலையில் மனம் சஞ்சலப்படுவது இல்லை, நான் தனிமையானவன், சுதந்திரமானவன், எனக்கும் இந்த உலகிற்கும் அதில் உள்ள மாயைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்ற ஒரே நிலையிலான  உணர்வோடு இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்கள் ஆனந்தமயமான, ஆரவாரமற்ற, மயான அமைதி நிலவும் பனிப் பிரதேசம் போன்ற வான் வெளியில் ஜடமான உடல் இன்றி பறந்து கொண்டிருப்பதை போல  உணர்வார்கள். அங்கு அவர்களுக்கு பசி தாகம் இல்லை, எந்த உணர்ச்சிகளின் பாதிப்பும் இல்லை, இன்ப துன்பங்கள் இல்லை, காம க்ரோதங்கள் இல்லை என்ற அளவில் அமைதி படர்ந்து இருக்கும். அதுவே பேரானந்தம்  தரும் ஜீவாத்மாவுடன் ஐக்கியமாகி விடும் நிலைக்கு செல்லும் பாதை  என்பது’).

न कदाचिज्जगत्यस्मिन् तत्त्वज्ञो हन्त खिद्यति ।

यत एकेन तेनेदं पूर्णं ब्रह्माण्डमण्डलम् ॥

17.2   இந்த உலகமே என்னுள்தான் அடங்கி உள்ளது  என்ற சத்தியமான உண்மையை  உணர்ந்தவன்  எந்த துன்ப  நிலைகளினாலும் பாதிக்கப்படுவது இல்லை

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனகரிடம் கூறினார் ‘எப்போது ஒருவன் இன்ப நிலை, துன்ப நிலை எனும் இரட்டை நிலைகளில் அகப்பட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பானோ அவனுக்கு வாழ்வில் அமைதி கிடைக்காது. அனைத்து பற்றுக்களையும்  விலக்கிக் கொண்டு, தானே இந்த உலகம், இந்த உலகமே தன்னுள்தான் அடங்கி உள்ளது எனும் உண்மையை  எப்போது உணர்வானோ, அந்த நிலையை எட்டியவனை  இன்ப துன்ப நிலைகள் பாதிப்பது இல்லை.  அந்த நிலையில் இருப்பவனே ஆத்ம விடுதலை பெற்று பேரானந்த ஞான நிலையை எட்டியவன் ஆகிறான்’)

न जातु विषयाः केऽपि स्वारामं हर्षयन्त्यमी ।

सल्लकीपल्लवप्रीतमिवेभं निम्बपल्लवाः ॥

17.3  ஷல்லாகி எனும் இனிமையான மர இலைகளை தின்று மகிழும் யானைகள், வேப்ப மர இலைகளை தின்னாது. அதை போலவே தான் யார் என்பதை உணர்ந்து விட்டவனை  எந்த விதமான புலன் உணர்ச்சிகளும்  மகிழ்விப்பதில்லை.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனகரிடம் கூறினார் ‘எப்போது ஒருவன் புலங்களினால் பாதிக்கப்பட்டு அதன் இயக்கங்களில் கட்டுண்டு கிடப்பானோ அவனுக்கு அமைதி என்பதே இருக்க முடியாது. காம க்ரோதங்கள், விருப்பு வெறுப்புக்கள்,  ஏற்ற தாழ்வுகள் மற்றும் இன்ப நிலை, துன்ப நிலை  என்பவை வாட்டி வதைத்துக்  கொண்டேதான் இருக்கும்.  காட்டில் வசிக்கும் யானைகள் வேப்ப  இலைகள் உட்பட பல மரங்களின்  இலைகளையும் தின்னும்.  ஒருமுறை எதேர்சையாக அவை  இனிமையான சுவை தரும் ஷல்லாகி எனும் இனிமையான மர இலைகளை தின்று  விட்டால் அதன் பின் வேறெந்த இலைகளையும் தின்ன விரும்பாது. அது போலவேதான் வாழ்க்கையில் அனைத்து பற்றுக்களையும்  விலக்கிக் கொண்டு, தானே இந்த உலகம், இந்த உலகமே தன்னுள்தான் அடங்கி உள்ளது எனும் உண்மையை உணர்ந்தவனை  எந்தவிதமான இன்ப துன்ப நிலைகளும்  பாதிப்பது இல்லை.  அந்த நிலையில் இருப்பவனே ஆத்ம விடுதலை பெற்று பேரானந்த ஞான நிலையை எட்டியவன் ஆகிறான்’).

यस्तु भोगेषु भुक्तेषु न भवत्यधिवासितः ।

अभुक्तेषु निराकाङ्क्षी तादृशो भवदुर्लभः ॥

17.4  தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொருட்களில்  ஆசை வைத்துக் கொள்ளாமல் இருப்பவனையும்,  தான் அதுவரை அனுபவிக்காத பொருட்கள்  மீதும் நாட்டம் கொள்ளாமல் இருப்பவனையும் பார்ப்பது அரிதிலும் அரிதாகும். 

(விளக்கம் : இதன் மூலம் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால் ‘தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொருட்களின் மீது பற்று வைக்காமல், எதோ கடனுக்காக, கடமைக்காக   என்ற நினைப்புடன் அனுபவிப்பவனையும், தான்  அனுபவிக்காத பொருட்கள் மீது  நாட்டம் கொள்ளாமல்  இருப்பவனையும், ஐம்புலன்களையும் அடக்கிக்   கொண்ட வைராக்கிய நிலையில் உள்ளவன்  என்பதாக பார்க்க  வேண்டும் . அது  அவன் உலகமே மாயை என்பதையும், ஜீவாத்மா ஒன்றே ஆனந்த நிலையை  தருவது என்ற உண்மையையும்  புரிந்து கொண்டு அறியாமையில் இருந்து வெளியேறி விட்ட நிலை ஆகும். எனவே பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் போன்ற உணர்வுகளை  தன்னுள் இருந்து அகற்றிக் கொள்ளாமலும், உலக பொருட்களின் மீதான ஆசைகளை துறக்காமலும்   ஆத்ம விடுதலையை அடைய முடியாது’).

बुभुक्षुरिह संसारे मुमुक्षुरपि दृश्यते ।

भोगमोक्षनिराकाङ्क्षी विरलो हि महाशयः ॥

17.5 உலக சுக போகங்களை அனுபவிக்க விரும்புபவர்கள், ஆத்ம  விடுதலை (ஞானம்) பெற விரும்புபவர்கள்  எனும் இரு வகையிலான மனிதர்கள் இவ்வுலகில் உள்ளார்கள். ஆனால் அந்த இரண்டு நிலைகளையும் விரும்பாத துறவிகளை பார்ப்பது  அரிது.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவாக்கரர் என்ன கூறினார் என்றால் ‘இந்த உலகில்  சிற்றின்ப ஆசை கொண்டவர்கள் பலர் உண்டு. அதே போல ஆத்ம விடுதலை பெற  வேண்டும் என்று நினைக்கும் சிலரும்  உண்டு. இரண்டு வகையினரும் எதிர் எதிரான   மன நிலையில் உள்ளவர்கள் என்றாலும் ஒரு விஷயத்தில் இருவருக்குமே ஒற்றுமை உள்ளது.  அதாவது எதோ ஒன்றை அவர்கள் அடையத் துடிக்கிறார்கள். அப்படி  ஒன்றை அடையத்  துடிக்கும் நிலையே புலன்களை அடக்கிக் கொள்ள முடியாத நிலை ஆகும். அதுவே ஆசை என்பதின் அடித்தளம். ஆக  எதிர் எதிரான   மன நிலையில் உள்ள இரண்டு வகையினரும் கூட  ஆசையின் அடித்தளத்தில் உள்ளவர்களே.

ஆனால் அதில் சின்ன வித்தியாசம் என்ன என்றால் ஆத்ம விடுதலை பெற  வேண்டும் என்று நினைப்பவர்  தன் புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு, உலக இன்ப துன்ப நிலைகளை தன்னுள் இருந்து அழித்துக் கொண்டு, பட்டற்ற நிலையில் இருக்கத் துவங்குவார்கள். அதில் வெற்றி பெற்றதும் தான் யார் என்பதை உணர்ந்து ஞானம் பெறுவார்கள்.

ஆனால் நான் உலக இன்பங்களிலும் மூழ்கிக் கிடப்பேன் அவற்றின் மீது அதீத பற்று இல்லை , அதே சமயம் எனக்கு ஆத்ம ஞானமும் தேவை இல்லை.  சுயக் கட்டுப்பாடுடன்  எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பேன்  என்ற மனநிலையில்  உள்ள துறவிகளை  பார்ப்பது அரிது’).

धर्मार्थकाममोक्षेषु जीविते मरणे तथा ।

कस्याप्युदारचित्तस्य हेयोपादेयता न हि ॥

17.6  பிறப்பு, இறப்பு, புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம  மற்றும்  மோட்ஷம் என்பவற்றின் மீது விருப்போ அல்லது  வெறுப்போ  இல்லாமல் உள்ளவனே ஞானி, தான் யார் என்பதை முற்றிலும் உணர்ந்தவன்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்காரர் என்ன கூறினார் என்றால் ‘ஞானி  என்பது  தன்னை முற்றிலும் உணர்ந்து விட்ட, ஆத்ம விடுதலை பெற்ற,  பேரானந்த நிலையில் உள்ள ஜீவாத்மாவுடன் முற்றிலும் ஐக்கியம் ஆகி விட்டவனைக் குறிக்கும்.  அவன்  ஜடமான உடல் மீது பற்று இல்லாதவன். அவனைப் பொறுத்தவரை  பிறப்பு, இறப்பு, தர்ம, அர்த்த, காம  மற்றும்  மோட்ஷம் என்பவற்றின் மீது விருப்போ அல்லது  வெறுப்போ கிடையாது.

தர்ம,  அர்த்த, காமம், மோக்ஷம் என்பவை மானிட வாழ்வில்  உள்ள நான்கு புருஷார்த்தங்கள் ஆகும்.  திட்டமிட்டு முறையுடன் செயல்பட்டு ஒன்றை அடையும் திறன் என்பதையே புருஷார்த்தம் என்று சொல்கிறோம் . இதில் ‘தர்ம(ம்)’ என்பது நீதி மற்றும் மற்றவர்களுக்கு உதவிடும் கடமையை குறிக்கின்றது. அர்த்த என்பது பொருள் மற்றும் செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் நிலையை குறிக்கும்.  காமம் என்பது உடல் இச்சையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலை ஆகும். முடிவாக வாழ்வின் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்த பின், அளவுக்கு மீறினால் இனிப்பும் திகட்டும் என்பதை போலவே, வாழ்க்கையின் சுக போகங்கள்   எல்லை கடந்து போன பின் வாழ்க்கையே அலுத்து விடும் நிலையில் மன அமைதியை  நாடிச் செல்லும் பாதையே மோட்ஷ பாதை எனப்படும். இந்த நான்கு நிலைகளில் பணம் அல்லது பொருள் ஈட்டுவது மற்றும் காம மோகங்களில் இன்புறுவது என்ற செயல்களில் தீவிரமாக இருந்தால் கூட, அந்த நிலையிலும் தர்மத்தை கை விடக் கூடாது  என்பதாக பெரியவர்கள் கூறுவார்கள். காரணம்  பொருள் ஈட்டுவதும் காம லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் நிலையும்  நிரந்தரமானது  அல்ல. அவை எப்போது வேண்டுமானாலும்  நம்மை விட்டு போய் விடும். ஆனால் தர்மம் மட்டுமே  நமது தலையைக் காத்தபடி நிற்கும், அதாவது பிராரப்த கர்ம வினைகளின் தாக்கங்களை  குறைக்கும் என்பது  நம்பிக்கை. இப்படிப்பட்ட  புருஷார்த்தங்கள் மீது வெறுப்பும் இன்றி, விருப்பும் இன்றி, அதேபோல மரண ஜனனத்திலும் அக்கறை இன்றி  எவன் ஒருவன் இருப்பானோ அவனே தன்னை முற்றிலும் உணர்ந்த ஞானி என்பவன் ஆவான்’).

वाञ्छा न विश्वविलये न द्वेषस्तस्य च स्थितौ ।

यथा जीविकया तस्माद् धन्य आस्ते यथा सुखम् ॥

17.7  தான் யார் என்ற  உண்மையை (ஆத்மா ஞானத்தை ) உணர்ந்து விட்டவன் இந்த உலகைக் குறித்து கவலைப்படுவது இல்லை, உலகம் இருந்தாலும்,  அழிந்தாலும் அவனுக்கு  கவலை இல்லை.  எது நடக்கிறதோ நடக்கட்டும் என்ற மன நிலையோடு மகிழ்சியாக இருப்பான்.

(விளக்கம்: இதன் மூலம்  அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தான் யார் என்ற  உண்மையை (ஆத்மா ஞானத்தை ) உணர்ந்தவன்,   முற்றிலும் பட்டற்ற நிலையில் உள்ளவன், மனதின் எண்ணங்களே அறியாமை, அதுவே அனைத்து துன்பங்களுக்கும்  காரணம்  என்ற உண்மையை உணர்ந்தவன்,  தன்னுள்ளிருந்து  அனைத்து எண்ணங்களையும்  அழித்துக் கொண்டு, தன்னைப் பற்றி    கவலைக்  கொள்ளாமல் இருப்பவன், உலகத்தில் என்ன நடந்தால் என்ன, நடக்காவிடில் என்ன  என்பதைக் குறித்து எதற்காக கவலைப் படுவான்? அவன் ஆனந்தமாக ஐக்கியம் ஆகி உள்ள ஜீவாத்மாவே அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளது என்ற உண்மையை உணர்ந்தவன்   எதற்காக மாயையான உலகின் தோற்றத்தைக்  குறித்து  வருந்துவான். தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை சற்றும் இருக்காது என்பதினால்  எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோடு மகிழ்சியாக இருப்பான்’).

कृतार्थोऽनेन ज्ञानेनेत्येवं गलितधीः कृती ।

पश्यन् श‍ृण्वन् स्पृशन् जिघ्रन्न् अश्नन्नास्ते यथा सुखम् ॥

17.8  ஆத்ம விடுதலை பெற்றவன் மனதில் அமைதியாக  இருப்பான்.  அவன் மனம் வெற்றிடம் போல இருக்கும். அவனும் பிற மானிடர்களுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதினால் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, தொடுவது மற்றும் சாப்பிடுவது போன்ற  அனைத்து செயல்களையும் செய்தபடி இருப்பான்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை பெற்றவன்  தனிமையில் சந்நியாசி கோலத்தில்தான் வாழ்ந்து கொண்டு  இருக்க  வேண்டும், கானகத்தில் சென்றுதான் வசிக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. பூமியிலே பிறந்து விட்டதினால்   அவன் குடி உள்ள  ஜடமான உடலுக்கு எத்தனை காலம் வாழ வேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டு இருக்குமோ அத்தனை காலமும் அவன் அந்த உடலோடு, அவனை சுற்றி உள்ள மானிடர்களோடு, அனைத்து சூழ்நிலைகளோடும்,  வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்.  அந்த நிலைகளிலும் ஐம்புலன்களினால் ஏற்படும்  எந்த விதமான உணர்ச்சிகளும் அவனை பாதிக்காது.  வாழ்த்தோ வசையோ, அனைத்தையும் ஒரு ஜடம் போன்ற நிலையில் ஏற்றுக் கொண்டு, அவற்றுக்கு  எதிர் வினை ஆற்றுவதில்லை.  சாதாரண மனிதனிடம்  உள்ள பார்ப்பது, கேட்பது, நுகர்வது, தொடுவது மற்றும் சாப்பிடுவது போன்ற அனைத்து செயல்களுமே அவனிடத்திலும் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி அவனுக்கும் சாதாரண மானிடனுக்கும்  உள்ள வித்தியாசம் என்ன என்றால் ஆத்ம விடுதலை பெற்றவன் உயிரற்ற ஜடம் போன்ற நிலையில் ஆத்ம மகிழ்சியோடு வாழ்ந்து கொண்டு இருப்பான், மற்றவனோ வாழ்வில் அதிருப்தி மற்றும் அமைதியின்மையோடு வாழ்ந்து கொண்டிருப்பான்’).

शून्या दृष्टिर्वृथा चेष्टा विकलानीन्द्रियाणि च ।

न स्पृहा न विरक्तिर्वा क्षीणसंसारसागरे

17.9   பிறப்பும் இறப்பும்  கொண்ட சம்சார சாகர கடலில் இருந்து விடுதலை பெற்று பேரானந்த நிலையில் சென்று   விட்டவனுக்கு வாழ்க்கையில் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. அவனது அனைத்து செயல்களுமே- பார்வை, செயல்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை  போன்ற அனைத்துமே உணர்ச்சிகள் அற்றவை, ஜடமானவை. 

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால்  ‘ஜனன மரணங்களைக் கொண்ட சம்சார சாகரம் என்ற கடலில் இருந்து விடுதலை பெற்று ஒரு ஞானி சென்று விட்டாலும், அவன் வாழும் உடலானது மரணம் அடையும் வரை  ஐம்பொறிகளினால் இயங்கி கொண்டுதான் இருக்கும். அதில் வெளிப்படும் செயல்கள் அவனது உண்மைத் தன்மையுடன் வெளிப்படுபவை அல்ல. அவனது  பார்வை காலி குடுவையைப் போல இருக்கும்.  செயல்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை போன்ற அனைத்துமே உணர்ச்சிகள் அற்ற பாறைக்  கல் போன்ற  நிலையில் இருக்கும்.   அவனது புலன்கள் செயலிழந்து விட்ட நிலையில் இருக்க, ஒரு இயந்திரம் போன்று உணர்ச்சிகள் இல்லாமல், புலன்களின் தாக்கத்தில் அடங்கி கிடைக்காமல், சுதந்திரமாக  வாழ்ந்து  கொண்டு இருப்பான்.  அவன் மனம் விடுதலை பெற்ற  பேரானந்த நிலையில் இருக்கும்’).

न जागर्ति न निद्राति नोन्मीलति न मीलति ।

अहो परदशा क्वापि वर्तते मुक्तचेतसः ॥

17.10 மன விடுதலை பெற்றவர் ஆத்மார்த்தமாக   உறங்குவது இல்லை, விழித்திருப்பது இல்லை, கண்களை மூடுவதும் இல்லை, திறந்திருப்பதும் இல்லை போன்ற  நிலைகளில்  இருந்தாலும், உள்ளத்திற்குள்     உன்னதமான பேரானந்த மகிழ்ச்சி  நிலையில்தான் இருந்து கொண்டிருப்பார்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் கூறி உள்ளது என்ன என்றால் ‘ஆத்ம விடுதலை பெற்றவன் மற்றவர்கள் முன் ஒரு உயிரற்ற ஜடல் போலவே பார்க்கப்படுகின்றான். அதன் காரணம்  அவன் பார்த்துக் கொண்டே இருந்தாலும், பேசினாலும், உணவருந்தினாலும், நடந்தாலும், அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும்  அவை  அனைத்துமே உணர்ச்சிகள் அற்ற இயந்திரம் இயங்குவது போன்ற,  மரணம் அடைந்து விட்ட ஒரு உடலைப் போலவேதான் இருக்கும்.  ஐம்புலன்களினால் ஏற்படும்  எந்த வித உணர்ச்சிகளும் அவனுக்குள்  இருக்காது. ஆனால் அவனது உள் மனது மட்டும் உன்னதமான பேரானந்த நிலையில் இருக்கும்.  உள் மனது என்பது இங்கு ஜீவாத்மாவை  குறிக்கின்றது’).

सर्वत्र दृश्यते स्वस्थः सर्वत्र विमलाशयः ।

समस्तवासना मुक्तो मुक्तः सर्वत्र राजते ॥

17.11   ஆத்ம விடுதலை பெற்று விட்டவன் தனக்கு மட்டுமே கட்டுப்பட்டவன், தூய்மையான மன நிலையில் உள்ளவன்.    எந்த நிலையிலும், எந்த விதமான உலக பந்தங்களுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்பதினால் மகிழ்ச்சியாக இருக்கின்றான்

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு என்ன கூறினார் என்றால் ‘சம்சார பந்தங்களில் இருந்து, விடுதலை அடைந்து, ஆத்ம ஞானம் அடைந்து விட்டவன், எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், அமைதியான மன நிலைமையையும், தெளிவான எண்ணங்களையும்  கொண்டிருப்பான்.   உலகின் எந்த வித நிகழ்வுகளும் அவனை பாதிப்பது இல்லை.  அனைத்து ஆசைகளையும் துறந்த நிலையில்  அமர்ந்திருக்கிறான். பேச்சில் தூய்மை இருக்கும்,  பேச்சு அனைத்துமே இருட்டை விலக்கும் பிரகாசமான ஒளி போன்று தெள்ளத் தெளிவாக இருக்கும்’).

पश्यन् श‍ृण्वन् स्पृशन् जिघ्रन्न् अश्नन् गृह्णन् वदन् व्रजन् ।

ईहितानीहितैर्मुक्तो मुक्त एव महाशयः ॥

17.12  உண்மையாகவே  ஆத்ம விடுதலை பெற்றவர்  மானிட வாழ்வில் உள்ளவரை பார்க்கவும், கேட்கவும், உணரவும், முகர்ந்து பார்க்கவும், சுவைக்கவும், பேசவும், நடமாடவும் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பார். ஆனால் அவர் அவை அனைத்தையுமே ஜடமான நிலையில் இருந்தவாறே பற்று இல்லாமல் செய்கின்றார்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு என்ன கூறினார் என்றால்  ‘ஆத்ம விடுதலை பெற்றவர்  மானிடர்களோடு ஜடமான உடலில் இருக்கும்வரை பார்க்கவும், கேட்கவும், உணரவும், முகர்ந்து பார்க்கவும், சுவைக்கவும், பேசவும், நடமாடவும் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பார் என்பதின் காரணம் அவர் உடலில் உள்ள ஐம்புலன்கள் ஜடமான அந்த உடலை  இயக்குகின்றன. அந்த உடம்பு பூமியில் இருந்து மறையும் வரை அந்த இயக்கங்களும் அந்த உடலில் இருந்தே தீரும். ஆனால் ஐம்புலன்களினால் உடலின் இயக்கங்களை இயக்க முடியுமே தவிர அந்த உடலுக்குள் உள்ள தூய ஆத்மாவை இயக்க முடியாது என்பதின் காரணம் அது சுதந்திரமானது. ஆத்ம விடுதலை அடைந்தவராது உடல் இயக்கங்கள் ஒரு இயந்திரத்தைப் போன்றே இயங்குகின்றனவே தவிர அவருடைய முழுமையான மன  ஒப்புதலுடன் அவை இயங்கவில்லை என்பதினால்தான் ஆத்ம விடுதலை அடைந்தவர், வெளிப் பார்வையில்  ஒரு உடலில் இருந்தபடி இயங்குவது போல தோன்றினாலும், அது உண்மையான நிலை அல்ல’)

न निन्दति न च स्तौति न हृष्यति न कुप्यति ।

न ददाति न गृह्णाति मुक्तः सर्वत्र नीरसः ॥

17.13 ஆத்ம விடுதலை பெற்றவர் அனைத்து ஆசைகளையும் துறந்த நிலையில் இருப்பவர் என்பதினால் அவர் ஒருவரை இகழ்வாகவோ அல்லது புகழ்ந்தோ பேசுவதில்லை. தனது மகிழ்ச்சியையோ அல்லது கோபத்தையோ  வெளிப்படுத்துவதில்லை என்பதின் காரணம் அவருக்கு எதன் மீதும் பற்று இல்லை.

सानुरागां स्त्रियं दृष्ट्वा मृत्युं वा समुपस्थितम् ।

अविह्वलमनाः स्वस्थो मुक्त एव महाशयः ॥

17.14  ஆத்ம விடுதலை பெற்றவர் எந்த நிலையிலும் வருந்துவதில்லை. அவர் முன்னால் கவர்ச்சியூட்டும் பெண் வந்து நின்றாலும் சரி, தனக்கு மரணம் சம்பவிக்கப் போவதை அறிந்து கொண்டாலும் சரி, அவர் மனம் சஞ்சலப்படுவதில்லை. அந்த நிலைகளே அவர் ஆத்ம விடுதலை அடைந்த ஞானி என்பதைக் எடுத்துக் காட்டும்.

सुखे दुःखे नरे नार्यां सम्पत्सु च विपत्सु च ।

विशेषो नैव धीरस्य सर्वत्र समदर्शिनः ॥

17.15  அனைத்தையும் ஒரே சமனான நிலையில்  பார்க்கும் ஒரு ஞானி இன்பம், துன்பம், ஆண், பெண், மற்றும்  அதிர்ஷ்டம்  அல்லது துரதிஷ்டம் போன்ற நிலைகளிலான  வேறுபாட்டை உணர்வதில்லை.

न हिंसा नैव कारुण्यं नौद्धत्यं न च दीनता ।

नाश्चर्यं नैव च क्षोभः क्षीणसंसरणे नरे ॥

17.16 மானிடராக வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஞானியாகி விட்டவனுடைய உலக பந்தங்கள் அழிந்து விடுவதினால் அவரிடம் ஆத்திரம் இருக்காது, இரக்கம் இருக்காது, அகங்காரமோ, அன்போ, பணிவோ,  பெருமையோ எதுவுமே இருக்க முடியாது. 

न मुक्तो विषयद्वेष्टा न वा विषयलोलुपः ।

असंसक्तमना नित्यं प्राप्ताप्राप्तमुपाश्नुते ॥

17.17 ஞானியாகி விட்டவர் ஐம்புலன்களின் தாக்கங்களை வெறுப்பதும் இல்லை, விரும்புவதும்  இல்லை. தன்னை  சுற்றி என்ன நடக்கின்றனவோ, அவை நடக்கட்டும் என்ற மனநிலையில் இருந்தவாறு  எவற்றின்  மீதும்  பற்றில்லாமல் தனது பேரானந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

समाधानासमाधानहिताहितविकल्पनाः ।

शून्यचित्तो न जानाति कैवल्यमिव संस्थितः ॥

17.18 உலகத்தின் மீது பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானிக்கு மனதில் எந்தவிதமான சிந்தனைகளும்  எழுவதில்லை,  மன சஞ்சலம் ஏற்படுவது இல்லை, நன்மைகளோ தீமைகளோ அனைத்துமே அர்த்தமற்றவைகளாகி  நிற்கும்.  அவர் உடலில் எத்தனை வேறுபட்ட நிலைகள் ஏற்பட்டாலும்  அவற்றினால் பாதிக்கப்படாமல் தனது பேரானந்த நிலையில்தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

निर्ममो निरहङ्कारो न किञ्चिदिति निश्चितः ।

अन्तर्गलितसर्वाशः कुर्वन्नपि करोति न ॥

17.19  ஞானியின் உடல் இயக்கங்கள் இயந்திரம் போல இயங்கி கொண்டு இருக்கும். நான், என்னுடையது என்ற எண்ணம் அவருக்குள் இருக்கவே இருக்காது. அவர் வாழ்ந்து கொண்டிருப்பது ஜடமான உடல் என்பதும்   உலக இயக்கங்கள்  அனைத்துமே மாயை என்பதையும்  பரிபூரணமாக உணர்ந்தவர் என்பதினால் அவர்  பட்டற்ற நிலையில் இருப்பார்.

मनःप्रकाशसंमोहस्वप्नजाड्यविवर्जितः ।

दशां कामपि सम्प्राप्तो भवेद् गलितमानसः ॥

17.20 நமக்கெல்லாம் புரியாத நிலையில் ஞானி உள்ளதினால் மாயை, கனவு மற்றும்  மந்தமான நிலை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து  அவர் முற்றிலும் விடுபட்ட நிலையில் இருப்பார்.

(விளக்கம் :மேலே 17.13 முதல் 17.20  வரையிலான போதனைகளின்    மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு பொதுவாக என்ன கூறினார் என்றால்  ‘ஆத்ம விடுதலை பெற்றவர்  மானிட வாழ்வில் உள்ளவரை போல  பார்க்கவும், கேட்கவும், உணரவும், முகர்ந்து பார்க்கவும், சுவைக்கவும், பேசவும், நடமாடவும் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பார் என்றாலும் அவர்கள்  பணம், புகழ், அதிகாரம் என்ற எவற்றையும் நாடாமல்  ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள்.  மானிடர்களாக வாழும்  நிலையிலும் கூட அவர்கள் நன்மை-தீமை என்ற இருமைக்கு அப்பாற்பட்டு நிற்பவர்கள், விருப்பு-வெறுப்பு என்பவை இருக்காது. பிறப்பு-இறப்பு என்ற சூழலில் மீண்டும் சிக்குவதில்லை.   மனம், வாக்கு, கண்கள், செவி, முதலிய புலன்கள் மூலம் நடைபெறும் செயல்கள் அனைத்துமே அழியும் தன்மை உடையது  என்பதை உணர்ந்தவர்கள் என்பதினால் அந்த புலன்களை எல்லாம் தம்முள் இருந்து அழித்துக் கொண்டு விட்ட பின்னரே  ஞான நிலைக்கு சென்றவர்கள். சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் மனிதனின் புத்தியில் உள்ளவை, ஆனால் அது ஆத்மாவின் குணங்கள் அல்ல என்பதை முற்றிலும் உணர்ந்தவர்கள். புலன்களையும், மன எண்ணங்களையும் அழித்துக் கொண்டு ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகி விடுவதினால் பிரபஞ்சம் முழுவதிலும் விஸ்தரித்துள்ள  ஜீவாத்மாவை தன்னுள் காண்பவர்கள்.   அனைத்து உடலிலும்   உள்ள அதே ஜீவாத்மாவே தன்னுள்ளும்  இருப்பதை உணர்ந்து கொண்டு ஆத்ம மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள்’).

பதினெட்டாம்  அத்தியாயம்  

அமைதி அஷ்டவாக்கரர் கூறினார் :

यस्य बोधोदये तावत्स्वप्नवद् भवति भ्रमः ।

तस्मै सुखैकरूपाय नमः शान्ताय तेजसे ॥

18.1  பேரானந்தம் தரும், அமைதியான, ஒளி போன்று  பிரகாசிக்கும்  நிலையில் எது உள்ளதோ, எதை முழுமையாக உணர்ந்து விட்டால் அனைத்து  மாய நிலையிலான உலக இயக்கங்களும்  ஒரு கனவு போல மாறி விடுமோ அதற்கு எனது பணிவான வணக்கங்கள்.

(விளக்கம்: ஆச்சர்யமாக இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில்  ஜனக மன்னனுக்கு கூறி  உள்ள போதனைகளில், அஷ்டவக்கரர் முதலில் தனது உடலில் உள்ள ஜீவாத்மாவிற்கு வணக்கங்களை தெரிவித்த பின்  போதனைகளை தொடர்கிறார். இதன்  மூலம் ஜனக மன்னனுக்கு ஆத்மாவின் மேன்மையையும்  பெருமையையும்  குறித்து விளக்கி உள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்).

अर्जयित्वाखिलान् अर्थान् भोगानाप्नोति पुष्कलान् ।

न हि सर्वपरित्यागमन्तरेण सुखी भवेत् ॥

18.2 வாழ்வில் பெரும் அளவிலான செல்வங்களை குவித்துக் கொள்ளும்போது  ஏற்படும்  மகிழ்ச்சி அளவற்றது. ஆனால் அவை அனைத்தின் மீதான பற்றையும்  துறந்து கொள்ளாதவரை அவனுக்கு வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காது.

(விளக்கம் : இதன் மூலம் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால் ‘உலக வாழ்வின் சுகபோகங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள் தமது வசதிகளையும் இன்ப நிலைகளையும் அதிகரித்துக் கொள்ள மேலும் மேலும் செல்வங்களை சேர்த்துக் கொண்டே இருப்பார்கள்.  தனது வாழ்க்கையில் அளவற்ற செல்வம், மனைவி, மகன் போன்ற பலவற்றையும் அடைந்த பின் பல வகைகளிலான  சுகங்களை அனுபவிப்பார்கள்.  அவை மட்டுமே  ஆத்ம பூர்வமான நிரந்தரமான மகிழ்ச்சிக்கு வழி வகுக்காது என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை .  ஆனால் செல்வம் பெருகிய சில  காலங்களிலேயே  அவற்றை அனுபவிக்க முடியாத நிலைமைகள் ஏற்படலாம். தற்காலிகமாக சில காலங்களுக்கு தொடரும்  இன்பங்கள் அழிந்த பிறகு, அவன் மன அமைதியை துறந்து விடலாம். பல்வேறு பிரச்சனைகள் எழலாம், அதனால் அவனுக்கு பல துன்ப நிலைகள் ஏற்படலாம்.  சொத்துக் குவிப்பதினால்  செலுத்த வேண்டிய வரிகளில்  பல்வேறு  பிரச்சனைகள் எழலாம், குடும்பங்களிலேயே கூட  சொத்துக்களினால் பிரச்சனைகள் எழலாம். அவர்களது  வசதிகளை கண்டு  எழும் பொறாமையினால்  அவர்களுக்கு எதிரிகள் அதிகரிக்கலாம்,   சமூகத்தில் கெட்ட பெயர் எழலாம்,  நோய் நொடிகள் வந்து சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருக்கலாம். இப்படியான பல்வேறு நிலையில் மன அமைதி முற்றிலும் குறைந்து  ஒவ்வொரு நாளும் கழிவது  ஒவ்வொரு வருடம் கழிந்தது போல  இருக்கும்.  செல்வங்களும், சொத்துக்களும்  நிலையற்றவை, அழிந்து போகக் கூடியவை என்ற உண்மையை புரிந்து   கொண்டு உலக பொருட்களின் மீதான பற்றுக்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டு விட்டால் மட்டுமே கிடைக்கும் நிரந்தரமான பேரானந்தம் செல்வங்களை பெருக்கிக் கொள்வதினால்  கிடைப்பது இல்லை’).

कर्तव्यदुःखमार्तण्डज्वालादग्धान्तरात्मनः ।

कुतः प्रशमपीयूषधारासारमृते सुखम् ॥

18.3  அமிர்தம் போன்ற  அமைதி  நிலை  மனதில் இதமாக அமர்ந்திருக்க  வேண்டிய நேரத்தில், கடுமையான வெய்யில் சூட்டினால்  எழும் உடல் கொம்பிளங்கள்  போல, துன்ப நிலைகள்  இதயத்தை காயப்படுத்திக் கொண்டே இருந்தால் மகிழ்ச்சி எங்கிருந்து  கிடைக்கும் ?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவாக்கரர் என்ன கூறினார் என்றால் ‘மாயையான உலக பந்தங்களில் உழன்று கொண்டிருக்கும்போது  ஏற்படும் சுக துக்கங்களில், பொதுவாகவே  துன்பங்களின் நிலை அதிகம் இருக்கும். காரணம் அகங்காரம் மற்றும்  ஒருவருக்கொருவர் மீதான போட்டி, பொறாமை போன்றவை. அது மட்டும் அல்ல நன்மையோ, தீமையோ பிராரப்த கர்ம வினைகளின் பலன்கள்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.  உலக பந்தங்களில் இருக்கும்வரை அவை அதிகரித்தவண்ணமே இருக்குமே ஒழிய குறையாது. மேலும் மேலும் ஒருவனை துன்ப  நிலைகள் தாக்கிக் கொண்டே இருக்கும்போது அவன் மன அமைதி குன்றி சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்கின்றான். அது அவன்  மன அமைதியை குறைக்கும்.  அதே வேளையில் அவன் உலக பந்தங்கள் அனைத்தையும் எப்போது அழித்துக் கொண்டு இந்த உலகமே ஒரு மாயை என்பதை புரிந்து கொண்டு ஆத்ம விடுதலையை நோக்கி பயணிப்பானோ அப்போது முதல்தான்  அவன் மனதில் உள்ள துக்கம் மெல்ல மெல்ல மடியத் துவங்கி அமிர்தம் போன்ற நிலையிலான அமைதி நிலவத் துவங்கும். எனவே ஒரு நிலைக்கு மேல், உலக பற்றுக்களை துறந்து, பட்டற்ற நிலையில் வாழத் துவங்கினால் மட்டுமே   சொல்லொண்ணா மன மகிழ்ச்சி கிடைக்கும்’).

भवोऽयं भावनामात्रो न किञ्चित् परमार्थतः ।

नास्त्यभावः स्वभावानां भावाभावविभाविनाम् ॥

18.4   நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படித்தான் ஒன்றுமற்ற மாயையான இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் நம் முன் காட்சி அளிக்கும்.  ஆனால் நாம் நினைப்பதை போல  ஜடமான உடலுக்குள் உள்ள  ஜீவாத்மாவின் தன்மையோ அல்லது மாயையான உலகின் தன்மையோ மாறுவது  இல்லை.

(விளக்கம்: அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு என்ன கூறினார்  என்றால் ‘நாம் விரும்புவது போல  உலகம் நம்  முன் காட்சி அளித்தாலும் (கனவில்)  உண்மையில் அது எப்படி தோற்றுவிக்கப்பட்டதோ அதே நிலையில்தான் இருக்கும்.   அதில் இருந்து  இருந்து மாறுவதில்லை.  உனக்கு  முன் தெரியும் அந்த மாயையான உலகம் அழிவிற்கு உட்பட்டது.  யுக யுகமாக தோன்றி அழிந்து கொண்டிருக்கும், பரமாத்மாவிடம் இருந்து வெளிப்படும் உலகம் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு  தன்மைகளுடன் இருக்கும். ஆனால் ஜடமான உன் உடல்  அழிந்தாலும், இருந்தாலும், அனைத்து இடங்களிலும், அத்தனை ஏன் உனது உடலுக்குள்ளும் வியாபித்து இருக்கும் ஜீவாத்மாவின் தன்மை  என்றுமே மாறப் போவது இல்லை. அதன் காரணம் ஜீவாத்மா நிலையானது, அழிவற்றது, பிறப்பும், இறப்பும் அற்றது, எந்த வித உருவமும் அதற்கில்லை, அது சுதந்திரமானது, தனித்தன்மை வாய்ந்தது’).

भवोऽयं भावनामात्रो न किञ्चित् परमार्थतः ।

नास्त्यभावः स्वभावानां भावाभावविभाविनाम् ॥

18.5  ஜீவாத்மா   நம்மிடம் இருந்து  எட்ட முடியாத தொலைவில் இல்லை, அது நம் ஐம்புலன்களோடும், நினைவுகளோடும் உணர்வுகளோடும் உள்ள உடலில், நிலையாக எப்போதுமே நம்முள்தான் உள்ளது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘பேரானந்த நிலையில் உள்ளதே ஜீவாத்மா என்பதாகும். அதை எட்டிவிட்டால் நாம் துன்பம்  அற்ற வாழ்க்கைக்கு சென்று விடலாம். ஆனால் அது எங்கு உள்ளது என்பதை தேடுகின்றாயா?

தேவை இல்லை அது உனக்குள்ளேதான் உனது ஐம்புலன்களின் இயக்கங்களுக்கும், நினைவுகளுக்கும் உணர்வுகளுக்கும்   சாட்சியாக, ஆனால் அவற்றுடன் எந்த பந்தமும், ஓட்டும் உறவும் இன்றி, தனிமையில், சுதந்திரமாக உள்ளது. அதை எப்படி அடைவது? அனைத்து உலக பற்றையும் முற்றிலும் விலக்கிக் கொண்டால் அதை நீ அடையலாம்’).

व्यामोहमात्रविरतौ स्वरूपादानमात्रतः ।

वीतशोका विराजन्ते निरावरणदृष्टयः ॥

18.6  மன எண்ணங்கள்  தெளிவாக  இருந்தால்  துக்கங்களில் இருந்து  விடுபட்டு பிரகாசிக்க முடியும்.  அறியாமை எனும் மாயையில் இருந்து தங்களை முற்றிலும் விலக்கிக் கொண்டால், அவர்களுக்குள்ளேயே உள்ள பேரானந்த நிலையை விரைவில் அடைய முடியும்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை பெற வேண்டும் என விரும்புகிறவன், அதற்கான பாதையில் செல்லாமல், அறியாமையில் உழன்று கொண்டு, தான் எனும் அகங்காரத்தில்   இருந்து கொண்டு  இருந்தால்   அவனது மன ஓட்டங்கள் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கும். அவன்  மனம் காம க்ரோதங்கள் போன்ற எண்ணங்களில் சிக்குண்டும், எதையும் முறையாக செய்ய முடியாத,  சோம்பேறித்தனமான நிலையிலும், எதையும் தெளிவாக சிந்திக்கவோ, செயல்படுத்தவோ நிலையிலோ இருப்பான். அவன்  என்று  அறியாமையில் இருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்டு உலக பற்று இல்லாத நிலையில் செல்வானோ  அன்று முதல் ஆத்ம விடுதலை எனும் பாதையில் சென்று அவர்களுக்குள்ளேயே உள்ள பேரானந்தமான  நிலையை காண முடியும்’).

समस्तं कल्पनामात्रमात्मा मुक्तः सनातनः ।

इति विज्ञाय धीरो हि किमभ्यस्यति बालवत् ॥

18.7  தன்னை சுற்றி உள்ள அனைத்துமே  கற்பனையில் தோன்றுபவை, தனக்குள் உள்ள ஜீவாத்மா அழிவற்றது, சுதந்திரமானது என்பதை முற்றிலும் உணர்ந்துள்ள ஞானி எதனால் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்கின்றார்?

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவாக்கரர்  என்ன கூறுகின்றார் என்றால் ‘எப்போது ஒரு ஞானி  பேரானந்தமாக ஞான நிலைக்கு சென்று விடுவாரோ அப்போது முதலே  அவர் ஒன்றுமறியா குழந்தைப் போன்ற நிலையில் மாறி இருப்பார்.  கனவில் இருந்து விழித்தெழுந்தவன் கனவை மறந்து விடுவதை போல, ஜடமான உடலுடன் ஒன்றி இருந்து அறியாமையினால் செயல்பட்ட கால காலத்தில், ஐம்புலன்களினால் ஏற்பட்ட இன்ப துன்ப  காட்சிகள் அனைத்தும் அவன் மனதில் இருந்து அழிக்கப்பட்டு இருக்கும். அப்போதுதானே  பட்டற்ற நிலையை எட்ட முடியும். எப்படி பிறந்த குழந்தைக்கு தாய் என்பவளைத் தவிர வேறு எவரையும் தெரியாதோ, எப்படி  ஒரு குழந்தை தான் என்ன செய்கின்றோம் என்பதை உணராமல் அப்பாவி போன்ற மன நிலையில் எதையாவது செய்து கொண்டு  இருக்குமோ அப்படிப்பட்ட மன நிலையில்  உள்ள ஞானிக்கு, ஜீவாத்மா என்பதைத் தவிர வேறு எதையுமே உணர முடியாது ‘).

आत्मा ब्रह्मेति निश्चित्य भावाभावौ च कल्पितौ ।

निष्कामः किं विजानाति किं ब्रूते च करोति किम् ॥

18.8     உலகமே மாயை, அவற்றில் உள்ளது அனைத்துமே கற்பனை என்ற உண்மையை உணர்ந்து, பட்டற்ற நிலையில்  நானே பிரும்மன் என்ற நிலைக்கு சென்று விட்ட ஞானி  கூறுவதற்கு என்ன உள்ளது,  அவரால் என்ன  செய்ய முடியும்?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘உலகமே மாயை, அவற்றில் தெரிவது அனைத்துமே கற்பனையே என்ற உண்மையை உணர்ந்து கொண்டவன், உலகப் பற்றை எல்லாம் துறந்து,  தன்னிலை மறந்து,  தானே பிரும்மன் என்ற உணர்வில் இருப்பான்.  அவனிடத்தில் இருந்து ஐம்புலன்களும் முற்றிலும் அழிந்து போய் விட்ட  நிலையில் மனம் பிரம்மகரமாக இருப்பதால், எதையும் அறியாமலும், எதையும் சொல்லாமலும், எதையும் செய்யாமலும் ஆன்மாவில் மட்டுமே நிலைத்திருக்கும் மனநிலையில் இருப்பார் எனும்போது,  வேண்டும், வேண்டாம், நன்மை மற்றும் தீமை போன்ற கருத்துக்களை அவரிடம் இருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்?’).

अयं सोऽहमयं नाहमिति क्षीणा विकल्पना ।

सर्वमात्मेति निश्चित्य तूष्णीम्भूतस्य  योगिनः ॥

18.9    நானே பிரும்மன் என்ற உண்மையை  உணர்ந்து,  ஞான நிலைக்கு சென்று மௌனமாகி விட்ட  ஞானியிடம்  இருந்து,  நான், நானல்ல போன்ற அறியாமையிலான முந்தைய நினைவுகள் அனைத்தும் முற்றிலும்  அழிந்து போயிருக்கும். 

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு என்ன கூறினார் என்றால்  ‘அது நான், அது நானல்ல, என்  உடல், என் மனம் மற்றும் எனது புத்தி என்ற எண்ணங்கள் அனைத்தும் அழியாதவரை ஒருவரால்  ஞான நிலையை எட்ட முடியாது.  கடந்த கால எண்ணங்கள் அனைத்தும் மனதில் இருந்து அழிந்து விட்டால் மனம் வெற்றிடம் ஆகிவிடும்.  வெற்றிடம் ஆகி விட்ட மனதில்  எந்த சிந்தனையும் எழவே முடியாது எனும்போது அவர் முற்றிலும் தன்னை மறந்த நிலைக்கு சென்று அமைதியாகி விடுகின்றார். இறை நிலையை அடைந்து விட்டவர் மனதில் பரமாத்மன் மட்டுமே இருப்பார். என்ன முயன்றாலும் அந்த நிலைக்கு சென்று விட்டவரை மாற்ற முடியாது. அவர் கடந்த கால நினைவுகளை திரும்ப அவருக்குள் கொண்டு வர இயலாது’).

न विक्षेपो न चैकाग्र्यं नातिबोधो न मूढता ।

न सुखं न च वा दुःखमुपशान्तस्य योगिनः ॥

18.10  அனைத்து உலக பற்றையும், அறியாமையையும்,   ஐம்புலன்களையும் அடக்கி அழித்துக் கொண்டு விட்ட ஞானிக்கு துன்பம் இல்லை, இன்பம் இல்லை, கவனச் சிதறல்கள் இல்லை, மேலும் கற்க வேண்டிய அவசியமும்  கிடையாது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு என்ன கூறினார் என்றால் ‘பேரானந்த நிலைக்கு சென்று விட்டவருக்கு மன சிதறல்கள்  எதுவுமே இருக்க முடியாது. ஐம்புலன்களையும் அடக்கி அழித்துக் கொண்டு விட்ட ஞானிக்கு துன்பம் இல்லை, இன்பம் இல்லை, கவனச் சிதறல்கள் இல்லை, மேலும் கற்க வேண்டிய அவசியமும்  கிடையாது என்பதின் காரணம் அவரிடம் அதீத அறிவோ, முட்டாள்தனமோ, மகிழ்ச்சியோ  அல்லது துக்கமோ இருக்காது. அவை அனைத்தையும் கடந்த நிலையில் உள்ள அவரை பொறுத்தவரை அவர் சுதந்திரமானவர், ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகி விட்டவர், அமைதியானவர், மயானத்தில் நிலவும் அமைதியை போன்ற மன நிலையில் இருப்பவர்).

स्वाराज्ये भैक्षवृत्तौ च लाभालाभे जने वने ।

निर्विकल्पस्वभावस्य न विशेषोऽस्ति योगिनः ॥

18.11 சொர்கத்தில் இருந்தாலும், பிச்சைக்காரனாக இருந்தாலும், மனிதர்கள் இடையே இருந்தாலும், காட்டில் தனியே  இருந்தாலும், வாழ்க்கையில் லாபம் பெறுபவனாகவோ அல்லது நஷ்டத்தை அடைபவனாக இருந்தாலும் சரி,  ஆசைகளை அழித்துக் கொண்டு விட்ட யோகியால் எந்த நிலையிலும் அமைதியாக வாழ முடியும்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு  ஒரு ஞானியின் நிலையைக் குறித்து கூறியது என்ன என்றால் ‘அறிவுக் கூர்மை வாய்ந்த ஒரு  யோகி எதிலும் விருப்பம் இல்லாதவர், அவரால் எந்த சூழ்நிலையிலும், எங்கு வேண்டுமானாலும் வாழ முடியும். அது சொர்க பூமியே என்றாலும் சரி, நரகம் என்றாலும் சரி,  யாருமே அற்ற அடர்ந்த காடாக இருந்தாலும் சரி, பெரும் மக்கள் கூட்டத்தின் இடையே வாழ்ந்தாலும் சரி  அவர் துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அடைவதில்லை. அதன் காரணம் அவர் பிரும்மம் போன்று எந்த உணர்ச்சிகளும் அற்ற நிலையில் உள்ளவர். அதுவே பேரானந்தமும், அமைதியும் தரும் ஜீவாத்மாவுடன் ஐக்கியமாகி விட்ட நிலை ஆகும்’).

क्व धर्मः क्व च वा कामः क्व चार्थः क्व विवेकिता ।

इदं कृतमिदं नेति द्वन्द्वैर्मुक्तस्य योगिनः ॥

18.12  மானிட  வாழ்வின் மூன்று ஆசைகள் புருஷார்த்தம் எனப்படும். அவை தர்மம் (நீதி), அர்த்த (செழிப்பு), காமம் (சிற்றின்பம், மோகம்) மற்றும் மோட்ஷ நிலை போன்றவை.  ஒரு துறவியை அந்த நிலை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை.  இதை செய்தேன்,  அதை செய்யவில்லை போன்ற   இரட்டை நிலைகளை கடந்து நிற்பவர்  ஆவார்.

(விளக்கம்:  அஷ்டவக்கரர் கூறியதின் அர்த்தம் இதுதான்   ‘வாழ்க்கையில் மூன்று ஆசைகளே ஒருவரை  வாழ வைக்கும். அனைத்து பிற ஆசைகளும் புருஷார்த்தங்கள்  எனப்படும் மூன்றில் அடங்கி விடும். அவற்றை கடந்த நிலை  மோட்ஷ நிலை.  ஒரு துறவியானவர் அந்த மூன்று நிலைகளை எல்லாம் கடந்து மோட்ஷ நிலையை  அடைந்து விட்டாலும், அந்த நிலையை நோக்கி நகரவில்லை, அவர் ஆத்ம விடுதலையை நோக்கியே நகர்வார். மோட்ஷ நிலை என்பது சொர்கலோகத்தை அடைவது ஆகும்.  அது ஒருவர் மரணத்திற்கு பின்னர் நடைபெறும் நிகழ்வு ஆகும். ஆனால்  உயிருள்ளபோதே, மானிடர்கள் இடையே வாழ்ந்து கொண்டிருக்கும்போதே,  எதிலும் பற்று இல்லாமல் உள்ளத்தில் பேரானந்தத்துடன் ஒருவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றால் அந்த நிலையையே ஆத்ம விடுதலை அடைந்து விட்ட  நிலை என்போம்.  அந்த நிலையை எட்டியவருக்கு,  முன் வாழ்வில் செய்த எந்த செயலுக்கும் எந்த வருத்தம் இல்லை, இன்னும் அதை  செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று நினைப்பது இல்லை. வாழ்க்கையில் எந்த இரட்டை நிலையும் இல்லை. ஒரு ஜடம் போன்று வாழ்ந்து கொண்டிருப்பார்’)

कृत्यं किमपि नैवास्ति न कापि हृदि रञ्जना ।

यथा जीवनमेवेह जीवन्मुक्तस्य योगिनः ॥

18.13 ஆத்ம விடுதலை பெற்று விட்ட யோகிக்கு இதயத்தில் எதன் மீதும் உறவு இருக்காது, வெறுப்பும் இருக்காது.  ஆனால் அவர்  உலகில் ஜடமான உடலில் வாழ்ந்து கொண்டிருப்பதினால், சில செயல்களை செய்ய வேண்டி உள்ளது.

(விளக்கம் : இதன் மூலம்  அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில்  ‘ஒரு துறவியானவர்  ஆத்ம விடுதலை பெற்று ஞான நிலையை அடைந்து விட்டாலும், அவர் குடும்பத்தில் ஒருவராக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளபோது, அல்லது குடும்பத்தை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட, சில செயல்களை செய்ய வேண்டிய நிர்பந்த நிலையில்தான் இருப்பார். மகிழ்ச்சியிலும் துன்ப நிலையிலும்  அவர்  தங்கி உள்ள உடல் ஒரு இயந்திரம் போல சில செயல்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். அவரும்  அங்கும் இங்கும் சென்று கொண்டுதான் இருக்க நேரிடும்.

இவை அனைத்தையுமே  பிராரப்த கர்மா அதாவது   அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கர்ம வினைப் பயன்களினால் செய்ய வேண்டி உள்ளன. அந்த நிலையில் ஜடம் போன்ற நிலையில் வாழும் யோகிக்கு அவர்  வாசம்  செய்யும்  உடலானது அழியும்வரை, அதாவது அதன் மரணத்தின்வரை, இயந்திரமாக வாழ்க்கையில்  வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி இருக்கும்.   ஆனால் பிராரப்த கர்மாவினால் யோகியின் உடலானது  செயல்பட்டாலும், அவை  உடல் சார்ந்ததாகவே இருக்குமே தவிர மனத்தால் ஏற்படுபவை  அல்ல என்பதால் ஆத்ம விடுதலை அடைந்து விட்ட யோகியின்   நிலையில் எந்த மாற்றமும் இருப்பது இல்லை. அவர்  ஜீவாத்மாவுடன் கலந்து விட்ட நிலையில் பேரானந்தமாகவே இருப்பார்’).

क्व मोहः क्व च वा विश्वं क्व तद् ध्यानं क्व मुक्तता ।

सर्वसङ्कल्पसीमायां विश्रान्तस्य महात्मनः ॥

18.14    உலக பற்றுக்கள் அனைத்தையும் துறந்து விட்டு அனைத்திற்கும் அப்பாற்பட்ட பேரானந்த நிலைக்கு சென்று விட்ட யோகியின் முன் பிரபஞ்சம் எங்கே இருக்கும்? மாயையான   பிரபஞ்சத்தில் அவர்  எதை துறக்க வேண்டும்? அறியாமை எனும் மாயை எங்கே இருக்கும்? அவர் எதனிடம் இருந்து  விடுதலை பெற வேண்டும்?

येन विश्वमिदं दृष्टं स नास्तीति करोतु वै ।

निर्वासनः किं कुरुते पश्यन्नपि न पश्यति ॥

18.15 எண்ணங்களினாலும், உணர்வுகளினாலும் உலகின் பல்வேறு தோற்றங்களை பார்ப்பவன், அவற்றை மறந்து விடலாம்.   ஆனால்  அனைத்தையுமே துறந்து விட்டவர்  (ஞானி)  உலகம்  என்பதே மாயை என உணர்வதால் அவர்   கண்களுக்கு  எந்த விதமான தோற்றத்திலும் உலகம் தெரிவதில்லை.

(விளக்கம்: அஷ்டவக்கரர் ஜனகருக்கு  கூறினார் ‘பார்ப்பதும், உணர்வதும் ஐம்புலன்களினால் ஏற்படுபவை. அந்த ஐம்புலன்களும் உடலின் செயல்களை இயக்குகின்றன என்பதினால்தான் ஒருவனுக்கு உலகை சுற்றி பல்வேறு எண்ணங்களும் உணர்வுகளும் தோன்றி மறைகின்றன. அறியாமையில் உழல்பவன் கனவுலகிலும் எண்ணங்களிலும் உலகை பல்வேறு தோற்றங்களில் காண்பான். அவற்றை ரசிப்பான். அதில் தான் வாழ்வது போன்ற மன நிலையிலும் உணர்விலும் இருப்பான். ஆனால் ஞானிக்கோ உலகமே மாயை, அதற்கு எந்த தோற்றமும் கிடையாது  என்ற உணர்வு ஆழமாக இருந்து விடுவதினால் அவரால் உலகின் தோற்றத்தை மனதில் ஏற்றிக்  கொள்ள  முடிவதில்லை’ ).

येन दृष्टं परं ब्रह्म सोऽहं ब्रह्मेति चिन्तयेत् ।

किं चिन्तयति निश्चिन्तो द्वितीयं यो न पश्यति ॥

18.16  இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர் பிரம்மன் (பரமாத்மா) என்பதை  உணர்ந்தவர் தானும் அவருடன் கலந்து விட   ‘நானே பிரம்மன்’  என்ற தியான பயிற்சியை மேற்கொள்கிறார். ஆனால் அந்த நிலையை எட்டி  ஞானியாகி விட்டவர்  வேறெந்த பிரும்மனை அடைய நினைக்கின்றார் 

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனிடம் என்ன கேட்டார்  என்றால் ‘நானே பிரும்மன் என்பதில் கூட இரண்டு நிலைப்பாடுகளை மனிதர்கள் வைத்துக் கொண்டு உள்ளார்கள். இந்த பிரபஞ்சத்தையே படைத்தது பரமாத்மா எனும் பிரும்மன் என்பதை உணர்ந்தவர், தானும் அந்த பிரும்ம நிலையை அடைய வேண்டும் என்பதற்காக நானே பிரும்மன் என்ற நிலையிலான தியானப் பயிற்சியை மேற்கொள்கிறார். அதில் வெற்றி பெற்று ஆத்ம விடுதலை  அடைந்து விட்டவர் மீண்டும் எதை நோக்கி தியானிக்க வேண்டும்?’.  இப்படி கூறியதில் மூலம் நான் பிரும்மன் எனும் சுய நிலையை அடையாளம் கண்டு கொண்டு விட்ட பின்   ஜனகர் மீண்டும் எந்த இலக்கை அடைய வழி தேடுகிறார்  என்பதை சூசகமாக கேட்டார்).

दृष्टो येनात्मविक्षेपो निरोधं कुरुते त्वसौ ।

उदारस्तु न विक्षिप्तः साध्याभावात्करोति किम् ॥

18.17 மன விடுதலை இலக்கை நோக்கி பயணிப்பவருக்கு அலை பாயும் மனது இருந்தால், அதை அவர் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால்  ஞானிக்கு அலை பாயும் மனது இல்லை எனும்போது அவர் எதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல வேண்டும்?

(விளக்கம் :  ‘உலக பந்தங்களை முற்றிலும் அழித்துக் கொண்டு, பட்டற்ற நிலையில் சென்று விட்டவரே ஞானி எனும்போது, அவரது மனம் அலை பாய்வதில்லை, எண்ணங்கள் எதுவும் அவருக்குள் எழுவதில்லை. ஐம்புலன்களும் அழிந்த நிலையில் உள்ளவர் அவர் எனும்போது, இல்லாத ஒன்றை  சாதிக்க  -அதாவது அலை பாயும் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள-  அவர் ஏன் முயல வேண்டும்?’.  பேரானந்த நிலையில் இருப்பதாக கூறும் ஜனகரின் சுய விளக்கம் உண்மையா என்பதை ஆத்ம பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜனக மன்னனுக்கு  சூசகமாக அஷ்டவக்கரர் எடுத்துரைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது).

धीरो लोकविपर्यस्तो वर्तमानोऽपि लोकवत् ।

न समाधिं न विक्षेपं न लोपं स्वस्य पश्यति ॥

18.18   ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று கொண்டிருக்கும், ஆத்ம ஞானம்  அடைந்து விட்ட ஞானி,  மற்ற மானிடர்களிடம் இருந்து மாறுபட்டே நிற்கின்றார். அவர் தமக்குள் உள் அமைதியையோ, கவனச் சிதறலையோ, குறையையோ பார்ப்பதில்லை. அவற்றை கடந்த  நிலையில் உள்ளவர் அவர்.

भावाभावविहीनो यस्तृप्तो निर्वासनो बुधः ।

नैव किञ्चित्कृतं तेन लोकदृष्ट्या विकुर्वता ॥

18.19   ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று கொண்டிருக்கும், ஆத்ம ஞானம்  அடைந்து விட்ட ஞானி, சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது  போல காட்சி அளித்தாலும், உண்மையில் அவர் ஜடமான  நிலையில்தான் இருப்பார். இயந்திரம் போல அவருடைய ஜடமான உடல் மட்டுமே ஐம்பொறிகளினால் இயங்கி கொண்டிருக்கும்.

प्रवृत्तौ वा निवृत्तौ वा नैव धीरस्य दुर्ग्रहः ।

यदा यत्कर्तुमायाति तत्कृत्वा तिष्ठतः सुखम् ॥

18.20  ஜடமான உடலுடன் வாழும் அறிவாளி பிராரப்த கர்மாவினால் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தபடி  இருப்பார். எந்த செயலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், செயலற்ற நிலையில் இருந்தாலும் அவர் அவற்றினால் பாதிப்பையும் அடைவதில்லை.

(விளக்கம் :  அறிவாளி என்பவரை பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானி என்பதாக  கூறும் அஷ்டவக்கரர், ஜனக மன்னனிடம் என்ன கூறினார் என்றால் ‘மானிடராக பிறந்து ஜடமான உடலில் வாழும் அனைவருமே  பிராரப்த கர்மாவினால் அவரவர்குறிய கடமைகளை செய்தபடி இருக்க வேண்டி உள்ளது. ஆனால் அப்படி தனது கடமையை செய்தபடி வாழ்ந்து கொண்டு இருந்தாலும் பேரானந்த நிலையை  எட்டி விட்ட ஞானி  அவற்றினால் மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ அடைவதில்லை. வேலை செய்தாலும் ஒரே நிலை, செய்யாவிடிலும்  அதே நிலை என்ற  பட்டற்ற நிலையில் வாழ்ந்து கொண்டபடி இருப்பார்’).

निर्वासनो निरालम्बः स्वच्छन्दो मुक्तबन्धनः ।

क्षिप्तः संस्कारवातेन चेष्टते शुष्कपर्णवत् ॥

18.21  ஆத்ம விடுதலை அடைந்து விட்டவர், எவற்றின் மீதும்  ஆசை வைக்காமல், சுதந்திரமாக,  தனித் தன்மையோடு காற்றிலே பறக்கும் ஒரு உலந்த இலை போல சம்சார சாகரத்தில் பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டு  இருப்பார்.

(விளக்கம் :  இதன் மூலம்  அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘பூமியில் கிடக்கும் காய்ந்த இலைகளுக்கு எங்கும் செல்லவோ, தங்கவோ திறன் கிடையாது. காற்று வீசும் திசையில் பறந்து கொண்டிருக்கும். அதை போலவேதான் ஆத்ம விடுதலை அடைந்து விட்டவர், காற்றிலே பறக்கும் ஒரு உலந்த இலை போல சம்சார சாகரத்தில் இருந்து கொண்டு இருப்பார். உலர்ந்து விட்ட இலை இறந்து போனதற்கு சமம் என்பதை போல  ஞானியும் சம்சார சாகரம் எனும் மரத்தில் இருந்து விழுந்து உலர்ந்து போன இலை போலத்தான் இருக்கின்றார். உலர்ந்து போன இலை  காற்றினால் ஆனந்தமாக இங்கும் அங்கும் பறந்து கொண்டு இருப்பதை போல சுற்றி உள்ளவர்கள் ஆட்டி வைக்கும் நிலையில், வெற்றியோ, தோல்வியோ அவற்றுக்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்ற நிலையில்  வாழ்ந்து கொண்டிருப்பார்’).

असंसारस्य तु क्वापि न हर्षो न विषादता ।

स शीतलमना नित्यं विदेह इव राजये ॥

18.22   ஆத்ம விடுதலை அடைந்து, உலக பற்றை துறந்து  விட்டவருக்கு துக்கம் என்ன மகிழ்ச்சி  என்ன? மரத்துப் போய் விட்ட அவரது மனதில் அவற்றுக்கு இடமே இல்லை அவர் மானிட உருவில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், உணர்ச்சிகள்  அற்ற ஜடமாகவே  வாழ்கின்றார்.

कुत्रापि न जिहासास्ति नाशो वापि न कुत्रचित् ।

आत्मारामस्य धीरस्य शीतलाच्छतरात्मनः

18.23  ஜடமான உடலுடன் வாழும் மெய்யறிவாளியின் மனது தூய்மையானது, அமைதியானது, ஆனந்தமான நிலையில் இருப்பது. அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை,  துறப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஜடமான உடலுக்குள் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் நிலையிலேயான மனத்துடன்  மட்டுமே   வாழ்கின்றார்.

(விளக்கம் : மெய்யறிவாளி என்பவரை பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானி என்றே  அஷ்டவக்கரர் கருதுகின்றார்).

प्रकृत्या शून्यचित्तस्य कुर्वतोऽस्य यदृच्छया ।

प्राकृतस्येव धीरस्य न मानो नावमानता ॥

18.24    இயற்கையிலேயே  சூனியமான  மன நிலையில்  வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்யறிவாளி தனக்கு  மரியாதை கிடைத்தாலும், அவமானப்பட்டாலும் பிற மனிதர்களை போல  எந்த விதமான பாதிப்பையும்  அடைவது இல்லை. 

(விளக்கம் :  இதிலும் மெய்யறிவாளி என்பவரை பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானி  என்றே  கூறும் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார்  என்றால் ‘மானிட வாழ்க்கையில் ஜடமான உடலுக்குள் இருந்தபடி பயணிக்கும் ஞானி, விரும்பியோ, விரும்பாமலோ அவருக்கு தரப்படும் கடமைகளை செய்தபடி இருந்து கொண்டிருந்தாலும், அதனால் கிடைக்கும் புகழினாலோ அல்லது அவமானத்தினாலோ சாதாரண மக்களை போல எந்த விதமான பாதிப்பிற்கும் உள்ளாவதில்லை. ஏன் எனில் அவருக்கு கிடைக்கும் புகழோ, அவமானமோ அவருடைய பிராரப்த கர்மாவினால் ஏற்படுபவை. முன்னரே கூறியபடி உலர்ந்து போன சருகு காற்று இழுக்கும் திசையில் மேலும் கீழும் விழுந்தவாறு  பறந்து கொண்டிருப்பதை போலவேதான், மானிடர்களிடையே வாழும் ஞானியும் அவருடைய பிராரப்த கர்ம வினையின்படி அந்த உடல் அழியும்வரை அனைத்து நிலைகளையும் எதிர் கொண்டும், அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் அவை அனைத்துமே அவர் ஜடமான நிலையில்தான் செய்கின்றார்’).

कृतं देहेन कर्मेदं न मया शुद्धरूपिणा ।

इति चिन्तानुरोधी यः कुर्वन्नपि करोति न ॥

18.25  நடைபெறும் செயல்கள் அனைத்தையுமே நான் வசிக்கும் உடல்தான் செய்கின்றது அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதை முற்றிலும் உணர்ந்த  ஞானி, சில செயல்களை செயல்படுவது போல தோன்றினாலும் அவர் உண்மையில்  அவற்றை செய்வதில்லை.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தன்னை உணர்ந்த ஞானியின்  உடலின் இயக்கங்களினால் வெளிப்படும் செயல்கள் அந்த ஜடமான உடலில் உள்ள ஐம்பொறிகளினால் ஏற்படுபவை. அவற்றுக்கும் அந்த ஜடமான உடலில் உள்ளே உள்ள ஜீவாத்மாவிற்கும் எந்தவிதமான  சம்மந்தமும் இல்லை.    அகங்கார உணர்வுகளை முற்றிலும் அழித்துக் கொண்டு, சூன்யமான மனநிலையில், ஜடமான உடலில் உள்ள ஞானியின்  ஜீவாத்மாவிற்கும் ஐம்பொறிகளின் இயக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும்  இல்லை என்பதினால், அந்த உடலின் வெளித் தெரியும்  செயல்களை, உண்மையில் அவர் செய்வது இல்லை. அதனால்தான் தூய எண்ணம் கொண்ட ஞானி செயல்படுவது போல தோன்றினாலும் அவர் உண்மையில்  செயல்படுவதில்லை’).

अतद्वादीव कुरुते न भवेदपि बालिशः ।

जीवन्मुक्तः सुखी श्रीमान् संसरन्नपि शोभते ॥

18.26  ஆத்ம விடுதலை அடைந்தவர் தான்தான் அந்த வேலையை  செய்தேன் என கூற முடியாத  முட்டாளை போல செய்தாலும், உண்மையில் அவர்  மூடன் அல்ல. மனசாட்சியை முற்றிலும் உணர்ந்தவராக  இருப்பதால், உள்ளத்தில் மகிழ்ச்சியாக  இருக்கின்றார்.

(விளக்கம் :  ஒரு ஞானி  சம்சார வாழ்வில் உள்ளபோது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் ? அது முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். ஆனால்  இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘ஆத்ம விடுதலை அடைந்தவர்   எந்த ஒரு வேலையை செய்தாலும், அதை அவர் செய்யவில்லை. ஜடமான உடலுக்குள் உள்ள ஐம்புலன்கள்தானே அவற்றை செய்யுமாறு உடலை இயக்குகின்றது. அந்த உடல் மூலம் நடக்கும் அனைத்து செயல்களையும் சூனிய  நிலையில் பார்த்தபடி,  அவை எதற்காக நடைபெறுகின்றது என்பதை உணராத நிலையில், ஒன்றும் அறியாத முட்டாளை போலவே அவர் அந்த உடலுக்குள் அமர்ந்து கொண்டு உள்ளார். ஏன் எனில் அவருக்கும் அந்த செயல்களுக்கும்  சம்மந்தம் இல்லை. முட்டாளை போன்று, செய்வது என்ன என்ற நிலை தெரியாமல் ஒரு பிரும்மம் போல  செயல்படுவார்.  காரணம்  அந்த ஜடமான உடலின் உள்ளே உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி அல்லது அதிகாரம் ஜீவாத்மாவிற்கு இல்லை’).

नानाविचारसुश्रान्तो धीरो विश्रान्तिमागतः ।

न कल्पते न जानाति न श‍ृणोति न पश्यति ॥

18.27   வாழ்க்கையின் பலவிதமான போராட்டங்களில் இருந்து விடுபட்டு  முடிவாக, ஆத்ம விடுதலை பெற்று பேரானந்த நிலைக்கு சென்று விட்டால் அதன் பின் அவர் சிந்திக்கவோ, செயல்படுவது, கேட்பதோ இல்லை எதையும் ஆர்வமோடு பார்ப்பதும் இல்லை.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகரிடம்  என்ன கூறினார் எனில் ‘ஆத்ம ஞானம் அடைந்து விட்டவனின் அகங்காரங்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றன. வாழ்க்கையின் பலவிதமான போராட்டங்களில் இருந்து விடுபட்டு  அகங்காரம் அழிந்ததுமே,  நான், என்னுடைய என்ற எந்த எண்ணமே அவனுக்குள்  இருக்க முடியாது  என்பதினால் அவன் ஒரு  சிலை போல, உணர்ச்சி அற்ற நிலையில் ஜடமாகவே  இருக்கின்றான். அதன் பின் அவர் சிந்திக்கவோ, செயல்படுவது, கேட்பதோ இல்லை எதையும் ஆர்வமோடு பார்ப்பதும் இல்லை).

असमाधेरविक्षेपान् न मुमुक्षुर्न चेतरः ।

निश्चित्य कल्पितं पश्यन् ब्रह्मैवास्ते महाशयः ॥

18.28  தான் பார்க்கும் இந்த உலகமே ஒரு மாயை, கானல் நீர் போன்றது என்ற உண்மையை உணர்ந்து,  அனைத்து எண்ணச் சிதறல்களையும் அழித்துக் கொண்டு சமாதி நிலைக்கு அப்பாற்பட்ட தானே பிரும்மன் என்ற நிலையில் உள்ளவர், அதற்கு மேல்  எதற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும்?

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘எல்லாவற்றுக்கும் காரணமான ஜீவாத்மாவை புரிந்து கொண்டு  அஹம் பிரம்மம், அதாவது நானே பிரும்மன், தானே தன்னுடைய ஆத்மா என்று உணர்ந்து கொண்டு, அத்துடன்  ஐக்கியமாகி விட  வேண்டும் என்று விரும்புபவர்களை ‘முமுக்ஷு’ என்பார்கள். உலக பந்தங்களில் இருந்து  விடுபட வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் முமுக்ஷுத்வம் எனப்படும்.  ஞான மார்க்கத்தில் செல்ல யோக்கியதை பெற்றவர்கள் முமுக்ஷுக்கள்தான். அப்படிப்பட்ட முமுக்ஷுக்கள் ஞான மார்கத்தில்  சென்று ஆத்ம விடுதலை பெற்று  இருந்தாலும்  சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருந்தால், பிராரப்த கர்மாவினால் சில செயல்பாடுகளை செய்ய வேண்டி இருந்தாலும்,  அனைத்து மன ஓட்டங்களையும் அழித்துக் கொண்டு,  தான் வாழும் உடலுக்கும் தனக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை, அந்த உடலில் மட்டும் அல்ல  இந்த பிரபஞ்சம் முழுவதிலும்  நான்   நிறைந்திருக்கின்றேன்  என்ற  பிரும்ம நிலையில் இருப்பதினால், மீண்டும் எந்த பிரும்ம நிலையை அடைய  தியானப் பயிற்சி அவருக்கு தேவை?’).

असमाधेरविक्षेपान् न मुमुक्षुर्न चेतरः ।

निश्चित्य कल्पितं पश्यन् ब्रह्मैवास्ते महाशयः ॥

18.29  நான் என்ற எண்ணம் உள்ளவர்   ஒய்வு எடுத்தபடி இருந்தாலும் அவர் மனதில் எதாவது எண்ண அலைகள் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் ஞானியானவர்  எதையாவது செய்து கொண்டு இருந்தாலும்  அவரது  மனம்  எந்த சிந்தனையும் இல்லாமல் சூன்யமாகவே இருக்கும்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில்   ‘சாதாரண நிலையிலான மனிதன் படுத்தபடியே ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தாலும் சரி, உறங்கி கொண்டு இருந்தாலும் சரி,  இல்லை ஏதாவது வேலை  செய்தபடி இருந்தாலும் சரி, அவரது மனம் எதையாவது எண்ணிக் கொண்டேதான் இருக்கும். காரணம் அவருக்கு உலகப் பற்று இருக்கும், நான் எனும் மமதை இருக்கும். எதையாவது  செய்து, எதையாவது அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆகவே அவருக்கு மனக் கட்டுப்பாடு இருக்காது. ஆனால் அதே நேரத்தில்  மானிடர்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானி  ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தாலும் சரி, உறங்கி கொண்டு இருந்தாலும் சரி,  இல்லை அவரது பிராரப்த கர்மாவினால் எதையாவது வேலை செய்தபடி இருந்தாலும் சரி, அவரது மனம்  எந்த சிந்தனையும் இல்லாமல்  சூன்யமாகவே இருக்கும்’).

नोद्विग्नं न च सन्तुष्टमकर्तृ स्पन्दवर्जितम् ।

निराशं गतसन्देहं चित्तं मुक्तस्य राजते ॥

18.30 ஆத்ம விடுதலை பெற்றவர் மனதில் வருத்தமோ, மகிழ்ச்சியோ இருப்பதில்லை என்பதின் காரணம் அவருக்கு உலகப் பற்று இல்லை. அவர் மனது எந்த சிந்தனையும் இல்லாமல் சூன்யமாகவே இருப்பதால் அங்கு ஆசைகளோ, கேள்விகளோ எழுவது இல்லை.

निर्ध्यातुं चेष्टितुं वापि यच्चित्तं न प्रवर्तते ।

निर्निमित्तमिदं किन्तु निर्ध्यायेति विचेष्टते ॥

18.31 ஆத்ம விடுதலை பெற்றவருக்கு தியானம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதற்கான முயற்சியையும் அவர்  மேற் கொள்வது இல்லை என்பதின் காரணம் அவரது உள்ளத்தில்  இயற்கையாகவே தியான நிலை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில்  ‘ஆத்ம விழிப்புணர்வு பெற்றவன் சம்சார சாகரத்தில் வாழ்ந்து கொண்டே இருந்தாலும் ஒய்வு நேரங்களில் தியானத்தில் ஈடுபடுவதில்லை என்பதின் காரணம் இயற்கையான   தியான நிலை அவரது உள்ளத்தில்  கலந்தே உள்ளது. அவர் உள்ளத்தில் சுதந்திரமாக வாழ்கிறார்,   மனக் கட்டுப்பாட்டை  அழித்துக் கொண்ட நிலையில்   வசிக்கிறார். அதனால்தானே அவர் மன அமைதியாக இருக்கின்றார்).

तत्त्वं यथार्थमाकर्ण्य मन्दः प्राप्नोति मूढताम् ।

अथवा याति सङ्कोचममूढः कोऽपि मूढवत् ॥

18.32  ஒரு முட்டாள்  ஆன்மீக  உண்மைகளைக் கேட்கும்போது  குழப்பமடைகிறான், ஆனால் அதே நேரத்தில் அறிவாளியோ, ஆன்மீக  உண்மைகளைக் கேட்கையில்  முட்டாளை போல காட்சி அளிக்கின்றான்.

(விளக்கம் : இதன் மூலம்  அஷ்டவக்கரர்  உண்மையான ஆன்மீக முட்டாளுக்கும், முட்டாளை போன்று காட்சி அளிக்கும் ஆன்மீக அறிவாளிக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டினார்  ‘எவன் ஒருவன் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தானோ, அவன் ஒரு கட்டத்தில்   ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடுத் துவங்கும் நிலையில்  அதுவரை அவன் கேட்டிராத பல உண்மைகளை  கேட்கும்போது நம்பவும் முடியாமல், மறுக்கவும் முடியாத நிலையில், அது அப்படி இருக்குமா, இப்படி இருக்குமா,   என்ற  குழப்ப நிலையை  அடைகின்றான். அவன்  உள்ளத்தில் பல வகைகளிலான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருப்பதினால்தான் அப்படிப்பட்ட  மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறான்’. அவன் ஆன்மீகத்திற்கு புதியவன் என்பதையே முட்டாள் என்று அஷ்டவக்கரர் குறிப்பிடுகின்றார்  என்றாலும் மேலும் கூறுகின்றார் ‘ஆனால் முட்டாள் கேட்ட அதே செய்தியை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு மன விடுதலையை நோக்கி பயணிக்கும் அறிவாளியானவன் கேட்டால், அவனை அந்த செய்திகள் பாதிப்பது இல்லை, அவன் சிந்திப்பது இல்லை, அவனுக்கு அந்த உண்மைகள் புரியும் என்பதினால் மௌனமாக அவற்றை மனதில் ஏற்றுக் கொண்டு நிற்கின்றான். ஆகவே அமைதியாக ஜடம் போன்ற நிலையில் அனைத்தையும் கேட்பவனும் கூட   மற்றவர்களுக்கு  முட்டாள் என்ற நிலையிலேயே காட்சி தருகின்றான். அந்த அறிவாளி ஏன் சிந்திப்பது இல்லை என்றால் அவன் தனது அனைத்து எண்ண அலைகளையும் கட்டுப்படுத்தி, மனதை  சூன்ய நிலையில் வைத்துக் கொண்டு ஆத்ம விடுதலையை நோக்கி பயணித்துக்  கொண்டு இருப்பதினால், அவனுக்குள் ஆன்மீக செய்திகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை’).

एकाग्रता निरोधो वा मूढैरभ्यस्यते भृशम् ।

धीराः कृत्यं न पश्यन्ति सुप्तवत्स्वपदे स्थिताः ॥

18.33  சம்சார சாகரத்தில்  முழுகி உள்ள முட்டாள்கள்  அவ்வப்போது தத்தம் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளவும், மன அமைதி வேண்டியும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் அந்த நிலைகளை எல்லாம்  கடந்து விட்ட ஞானிக்கோ  அவை எதுவுமே தேவை இல்லை என்பதினால் உறக்கத்தில் உள்ளவனைப் போல காணப்படுகின்றார்.

(விளக்கம் : சம்சார சாகரத்தில்  முழுகி  எவன் ஒருவன் தனது அறியாமையினால் பீடிக்கப்பட்டு மனம் மற்றும் உடலின் மீது அதிக அக்கறை கொண்டவராக உள்ளாரோ, அவர்களை ஆன்மீக முட்டாள்கள் என்பதாக குறிப்பிடும் அஷ்டவக்கரர்,    ஏற்கனவே பட்டற்ற நிலையில் சென்று விட்ட, எந்த சிந்தனைகளும் இல்லாத, சூன்யமான மனநிலையில், பேரானந்த நிலையில் உள்ளவரை ஆன்மீக உறக்க நிலையில் உள்ளவராக காட்டுகின்றார்).

अप्रयत्नात् प्रयत्नाद् वा मूढो नाप्नोति निर्वृतिम् ।

तत्त्वनिश्चयमात्रेण प्राज्ञो भवति निर्वृतः ॥

18.34  மனம் பக்குவப்படாத முட்டாள் ஒரு செயலை செய்வதின் மூலமும், செய்யாவிடிலும் மன அமைதியை பெறுவதில்லை. ஆனால் தான் யார் என்பதை உணர்ந்த புத்திசாலி மன அமைதியுடன் இருக்கின்றான்.

(விளக்கம் : இதன் மூலம்  அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘எவன் ஒருவன் சம்சார சாகரத்தில் மனதளவிலும், உடலளவிலும், எண்ணங்களாலும், செயல்களினாலும்  முழுமையாக தன்னை ஈடுபட்டுக் கொண்டு உள்ளானோ அவன் எத்தனை முயற்சியை மேற் கொண்டாலும் நிலையான மன அமைதியை பெற முடியாது. எப்போது அவன் அறியாமையில்  இருந்து வெளியேறி உலக பற்றை துறப்பானோ  அப்போது முதல்தான் அவன் மன அமைதி கிடைக்கும் பாதையில் நுழைய முடியும். ஆனால் தான் யார் என்பதை ஏற்கனவே உணர்ந்து விட்டவன் பேரானந்த நிலையில் மன அமைதியுடன் இருக்கின்றான்’).

शुद्धं बुद्धं प्रियं पूर्णं निष्प्रपञ्चं निरामयम् ।

आत्मानं तं न जानन्ति तत्राभ्यासपरा जनाः ॥

18.35  பல்வேறு  சாதனாக்களை செய்பவர் பலருக்கும் தெரியாத  உண்மை என்ன எனில் அவர்களுக்குள்ளேயே உள்ள ஜீவாத்மாவே தூய்மையானது, விழிப்புணர்வு பெற்றது, தெளிவானது, அழிவற்றது மற்றும் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ளது என்பது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘பலரும் மன அமைதி பெறவேண்டும்,  மனதில்  மகிழ்ச்சி வேண்டும், மன விடுதலை வேண்டும், ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற வேண்டும் போன்ற காரணங்களுக்காகவெல்லாம்  யோகா, தியானம் போன்ற  பலவிதமான வழிமுறைகளை கடை பிடிக்கிறார்கள். ஆனால் முடிவாக அவை போகும்  இடம் என்ன என்றால் ஆத்ம விழிப்புணர்ச்சிதான். யோகா, தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய  சாதனாக்களை  செய்வது ஒரு வழி முறைதான் என்றாலும்  அப்படிப்பட்ட சாதனாக்களை  செய்பவர்களுக்கு   அவர்கள் உடலுக்குள்ளேயே பேரானந்த நிலையை தரும்  ஜீவாத்மா உள்ளது, அதை அடைய முயற்சிக்க வேண்டும்  என்பது தெரிவதில்லை’).

नाप्नोति कर्मणा मोक्षं विमूढोऽभ्यासरूपिणा ।

धन्यो विज्ञानमात्रेण मुक्तस्तिष्ठत्यविक्रियः ॥

18.36 புத்தியசாலித்தனமற்ற நபர் மனதை கட்டுப்படுத்தும் தொடர்ச்சியான சாதனாக்களை மட்டுமே செய்து  ஞான நிலையை எட்டுவது இல்லை.   ஆனால் சில புண்ணியவான்கள் அவர்களது உள்ளுணர்வுகளினால் உந்தப்பட்டு ஆத்ம  விடுதலை அடைந்து அமைதியாகி   விடுகின்றார்கள்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘பலரும் மன அமைதி பெறவேண்டும்,  மனதில்  மகிழ்ச்சி வேண்டும், மன விடுதலை வேண்டும், ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற வேண்டும் போன்ற காரணங்களுக்காகவெல்லாம்  மனக் கட்டுப்பாட்டை தரும் யோகா, தியானம் போன்ற  பலவிதமான சாதனாக்களில் ஈடுபடுகின்றார்கள்.  யோகா, தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய  சாதனாக்களை  செய்வது மனதை அடக்கும்  ஒரு வழிமுறைதான். அவற்றுக்கு அடுத்தடுத்த நிலையில் சென்றால்தான் ஆத்ம விடுதலை பெற முடியும்.  அப்படிப்பட்ட சாதனாக்களை  செய்பவர்களுக்கு   அவர்கள் உடலுக்குள்ளேயே பேரானந்த நிலையை தரும்  ஜீவாத்மா உள்ளது, அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதை உணருவதில்லை. ஆனால் சில அதிர்ஷ்டசாலிகள் அவர்களது உள்ளுணர்வுகளினால் உந்தப்பட்டு மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, பற்று அற்ற நிலைக்கு சென்று, ஆத்ம  விடுதலை அடைந்து, அமைதியாகி   விடுகின்றார்கள்’).

मूढो नाप्नोति तद् ब्रह्म यतो भवितुमिच्छति ।

अनिच्छन्नपि धीरो हि परब्रह्मस्वरूपभाक् ॥

18.37  பிரும்ம நிலையை அடைய வேண்டும்  என்ற எதிர்பார்ப்புகளுடன்  சாதனாக்களை செய்பவன் பிரும்ம நிலையை அடைவதில்லை. ஆனால் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத  புத்திசாலி அவனை அறியாமலேயே பிரும்ம நிலையை  அடைகின்றான்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ஒரு சராசரி புத்திசாலி மனிதன் பல விதங்களிலுமான யோகப் பயிற்சிகளையும்  செய்து ஆத்ம விடுதலையை அடைய முயல்கிறான், ஆனால் அந்த வழிமுறைகள்  அவனுக்கு பிரும்ம நிலையை தருவதில்லை.  ஆனால் ஒரு  அறிவாளியோ ஆத்ம  விடுதலையை அடைய  முயற்சி செய்யாவிட்டாலும் கூட இயற்கையாகவே தனது உடல் உணர்வுகளை  விலக்கிக் கொண்டு விடுவதினால், அவனை அறியாமலேயே அவன் பரபிரம்ம நிலையை அடைகிறான்’)

.निराधारा ग्रहव्यग्रा मूढाः संसारपोषकाः ।

एतस्यानर्थमूलस्य मूलच्छेदः कृतो बुधैः ॥

18.38   அறியாமையில் உழலும் சராசரி மனிதன் உலக  இன்ப, துன்பங்கள் மற்றும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபடாமல் ஆத்ம விடுதலை பெற விரும்புகின்றார்கள். ஆனால் மெய்யறிவாளியோ துன்ப நிலையின்  ஆணி வேரான உலக பந்தங்களை முதலில் அடியோடு அழித்துக் கொண்டு விடுகின்றார்கள்.

(விளக்கம் :  இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் முதலில்  தன் புலன்களை அடக்கிக் கொண்டு, அறியாமை, இன்ப துன்ப நிலைகளை தன்னுள் இருந்து அழித்துக் கொண்டு, பட்டற்ற நிலையில் சென்றால் மட்டுமே பேரானந்த நிலைக்கான  பாதையில் நுழைய முடியும் என்பதை நம்ப வேண்டும். ஆனால் ஒரு மெய்யறிவாளியோ ஆத்ம விடுதலைக்கான  பாதையில் நுழையத் தடையாக  உள்ள மரத்தின் ஆணி வேர் போன்ற அறியாமை எனும்  உலக பந்தங்களை, இன்ப துன்பங்களை, ஐம்புலன்களை எல்லாம் முதலில் அடியோடு அழித்துக் கொண்டு விடுகின்றார்கள்’).

न शान्तिं लभते मूढो यतः शमितुमिच्छति ।

धीरस्तत्त्वं विनिश्चित्य सर्वदा शान्तमानसः ॥

18.39 சாதனாக்களை செய்வதின் மூலம் மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மன அமைதி பெறலாம் என்பதாக ஒரு சராசரி புத்திசாலி மனிதன்  நினைப்பான். ஆனால் அவற்றை மட்டுமே மேற் கொண்டு அவனால்  அதை அடைய முடியாது. ஆனால் யோகியோ மன எண்ண ஓட்டங்களைத் தாண்டிய நிலையில் இருப்பதினால் மன அமைதியுடன் அமைதியாக அமர்ந்திருப்பார்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘மன அமைதி வேண்டும் என ஆசைப்பட்டு தியானம், யோகா போன்ற பல விதங்களிலான சாதனாக்களை செய்வதும் கூட  அறியாமையின் ஒரு பகுதியே. அப்படிப்பட்ட தியானங்களை செய்தாலும் அவனால் அலை பாயும் மனதை ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் அவ்வளவுதான். ஆனால்  அறியாமையினால் ஏற்படும் ஆசை, உலக பந்தங்கள் போன்றவை   உள்ளவரை  ஆத்ம ஞானம் பெற்று பேரானந்த நிலையான அமைதி என்பதை அடைய முடியாது. ஆசை, உலக பந்தங்கள் போன்ற அறியாமைகளை விலக்கிக் கொண்டு விடுவதினால் ஞானி மன அமைதியுடன் இருக்கின்றான்’).

क्वात्मनो दर्शनं तस्य यद् दृष्टमवलम्बते ।

धीरास्तं तं न पश्यन्ति पश्यन्त्यात्मानमव्ययम् ॥

18.40  எவன் ஒருவன் உலகமே மாயை என்பதை உணர மறுப்பானோ அவனால் அவனுக்குள்ளேயே உள்ள ஜீவாத்மாவை எப்படி உணர முடியும்? அதே நேரத்தில் ஞானி உலகமே மாயை என்பதை உணர்ந்து, தனக்குள்ளே உள்ள ஆத்மாவை மட்டுமே பார்க்கின்றான்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் ‘அலை பாயும் மன ஓட்டங்களில் இருந்து எவன் ஒருவன் வெளிவர முடியவில்லையோ, எவன் ஒருவன் தான் பெற்றுள்ள கல்வி மற்றும் பொது அறிவு மிகப் பெரியது என நினைத்துக் கொண்டிருக்கின்றானோ,  எவன் ஒருவன் உடலின் உணர்ச்சிகள், எண்ணங்கள் போன்று ஐம்புலன்களினால் இயக்கப்படும் புலன்களில் கட்டுண்டு,  உலக அனுபவங்களில் மூழ்கிக் கிடக்கின்றானோ, அவனால் எத்தனை முயன்றாலும் விழிப்புணர்வை பெற முடியாது. ஆனால் விழிப்புணர்வு பெற்ற ஞானியோ உலகமே மாயை, தனக்கு முன் தெரிவதெல்லாம் மாயை  என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்டு இருப்பதினால்  வேறு எவற்றின்  மீதும் தனது  கவனத்தையோ பார்வையையோ செலுத்துவதில்லை என்பதினால்  அவன் பேரானந்த நிலையில் மூழ்கிக் கிடப்பான்’).

क्व निरोधो विमूढस्य यो निर्बन्धं करोति वै ।

स्वारामस्यैव धीरस्य सर्वदासावकृत्रिमः ॥

18.41  தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஆத்ம விடுதலை தேடுபவன்  மூடன் ஆவான். ஆனால் பேரானந்த நிலையில் உள்ள ஞானிக்கோ ஆத்ம விடுதலை  பெறும்  உணர்வு இயற்கையாகவே  அமைந்து உள்ளது.

(விளக்கம் :  எதனால் அஷ்டவக்கரர் மீண்டும் மீண்டும் ஆத்ம ஞானம் அடைய  பல்வேறு சாதனாக்களையும் வழி முறைகளையும்  நம்பிக் கொண்டு அவற்றை கடைபிடிக்க நினைப்பவர்களை மூடன் அல்லது முட்டாள் என்றே குறிப்பிடுகின்றார்? உலக பந்தங்கள் அனைத்தையும்  விலக்கிக் கொண்டு பட்டற்ற நிலையில்  சென்றால் மட்டுமே விழிப்புணர்வு எனும் பேரானந்த நிலை அடையும்  பாதையில் செல்ல  முடியும் என்பது உண்மை நிலை. அதன் முதல் நுழைவாயில் அலைபாயும் எண்ணங்களை கட்டுப்படுத்துவது.  ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி  விட்டால்  மட்டும் போதும்,  பேரானந்த மகிழ்ச்சி   நிலை   கிடைத்து விடும்  என நினைத்துக்  கொண்டு  யோகா, தியானம் போன்ற சாதனாக்களை செய்து கொண்டு, தற்காலிகமாக மன அமைதி கிடைத்ததும், மீண்டும் உலக இன்பங்களில் முழுகத் துவங்குவார்கள்.  மீண்டும் அலைபாயும் எண்ணம் திரும்ப, மீண்டும், மீண்டும் சாதனாக்களை செய்தவண்ணம் தற்காலிக மன அமைதி பெறுகின்றார்கள். ஆத்ம விடுதலை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் முதலில்  தன் புலன்களை அடக்கிக் கொண்டு, அறியாமை, இன்ப துன்ப நிலைகளை தன்னுள் இருந்து அழித்துக் கொண்டு, பட்டற்ற நிலையில் சென்றால் மட்டுமே பேரானந்த நிலைக்கான  பாதையில் நுழைய முடியும் என்பதை நம்ப வேண்டும். ஆனால் குடும்பஸ்தனுக்கு அது பொருந்தாது என்ற உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் யோகா, தியானம் போன்ற சாதனாக்களை செய்து கொண்டு அதுவே  ஞானிகள் போன்ற  நிலை  என நினைப்பவர்களை மூடர்கள் என்று சொல்வது தவறா? ) .

भावस्य भावकः कश्चिन् न किञ्चिद् भावकोपरः ।

उभयाभावकः कश्चिद् एवमेव निराकुलः ॥

18.42   நம்மை மீறிய சக்தி உள்ளது என சிலர் நம்ப, வேறு சிலரோ அப்படி எதுவும் கிடையாது  என்று நம்புகின்றார்கள். ஆனால்  அபூர்வமாகவே  இரண்டு நிலைகளை குறித்தும் யோசனை செய்யாமல்  இருப்பவன் அலைபாயா மனநிலையில்,  அமைதியாக இருக்கின்றான்.

शुद्धमद्वयमात्मानं भावयन्ति कुबुद्धयः ।

न तु जानन्ति संमोहाद्यावज्जीवमनिर्वृताः ॥

18.43 அறிவாற்றல் குறைவான சாதனாத்விக்கள்  ஜீவாத்மா தூய்மையானது, அதற்கு இணையானது வேறெதுவும் கிடையாது என்பதை உணர்ந்தாலும், அவர்கள் உலக மாயையில் இருந்து வெளி வராமல்  இருப்பதினால்  வாழ்நாள் முழுவதும் துன்பத்திலேயே உழல்கின்றார்கள்.

(விளக்கம் : அஷ்டவக்கிரர் என்ன  கூறுகின்றார் என்றால் ‘அறிவாற்றல் குறைவான  சாதனாத்விக்கள்   ஜீவாத்மா தூய்மையானது, அதற்கு இணையானது வேறெதுவும் கிடையாது என்பதை பூரணமாக உணர்ந்து கொண்டு இருந்தாலும், ஜீவாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலையை அடைய பல்வேறு வகைகளிலான தியான  முறைகளில்  ஈடுபட்டாலும், அவர்களால் உணர்ச்சி பூர்வமாக அந்த தியானத்தில் ஈடுபட முடிவதில்லை என்பது அவர்களுக்கே புரியவில்லை.   தாம் நல்ல முறையில் தியானம் செய்கின்றோம் என்று அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றார்கள். அதன் காரணம்  இன்ப துன்பங்கள், நன்மை, தீமை  கலந்த சம்சார பந்தங்களில் இருந்தும், ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவர்களால் வெளி வர முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே உள்ளது.  உலக மாயையில் சிக்கித் தவிக்கும் அலைபாயும் மனதோடு உள்ளவர்களால் எப்படி ஜீவாத்மாவை  அடைய இயலும்?’).

मुमुक्षोर्बुद्धिरालम्बमन्तरेण न विद्यते ।

निरालम्बैव निष्कामा बुद्धिर्मुक्तस्य सर्वदा ॥

18.44  ஆத்ம விடுதலையை நாடிச்  செல்லும் ஒருவனுக்கு ஆற்றல் மிக்க இன்னொரு  துணை தேவைப்படும். ஆனால் ஆத்ம விடுதலை அடைந்து விட்டவருக்கு அவரே குரு, ஏன் எனில் அவர் ஆசைகள் அனைத்தையும் துறந்து  ஏற்கனவே அந்த நிலையை எய்தி  விட்டவர் ஆகும்.

(விளக்கம்: அஷ்டவக்கிரர் என்ன  கூறுகின்றார் என்றால் ‘ஆத்ம விடுதலை அடைய ஆசைப்படும்  ஒருவர் முதல் நிலை பயிற்சிகளை மேற்கொண்டு மனதை கட்டுப்படுத்திய பின்னர், தன்னிடம் இருந்து முழுமையாக அறியாமையை விலக்கிக் கொள்ள வேண்டும், அதாவது ஆத்ம விடுதலை பெற வேண்டும் என்ற ஆசையைக் கூட முதலில் விலக்கிக் கொள்ள வேண்டும். ஆசை இருக்கும்வரை அறியாமை தொடரும். என்பதினால் தான் எதற்காக தியானத்தில் ஈடுபடுகின்றோம் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சிக்காமல் தொடர்ந்து தன்னை மறந்த நிலையில் கடுமையான  தியானத்தை தொடரும்போது அனைத்து புலன்களும்  மெல்ல மெல்ல அவரிடம் இருந்து  அழியத் துவங்கும். அவர் விரும்பிய ஆத்ம விடுதலையை அவர் அடைய முடியும். அதற்கு வழிகாட்ட  யோகா, தியானம் போன்றவற்றை கற்றுத் தரும் இன்னொருவர் தேவை  என்பது மட்டும் அல்ல அவருக்கு  ஆத்ம விடுதலை பெற்ற இன்னொரு வழிகாட்டி, மானசீக குரு தேவைபடுவார். ஆனால் ஏற்கனவே ஆசைகள் அனைத்தையும் துறந்து அந்த நிலையை எட்டி விட்ட  ஞானிக்கு எந்த துணையும் தேவைப்படுவதில்லை’).

विषयद्वीपिनो वीक्ष्य चकिताः शरणार्थिनः ।

विशन्ति झटिति क्रोडं निरोधैकाग्रसिद्धये ॥

18.45  ஆத்ம விடுதலை தேடி தியானிக்கும் மன திடம் அற்ற சாதனாத்விகள், புலிகளை போன்று பயமுறுத்தும் அலைபாயும் எண்ண  அலைகளைக்  கட்டுப்படுத்திக் கொள்ள  தியான, யோக வகையிலான வழிமுறைகளில் ஈடுபடுகின்றார்கள்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன   கூறுகின்றார் என்றால் ‘ஆத்ம விடுதலை அடைய வேண்டும் எனில் மெல்ல மெல்ல தம் மனதை  திடப்படுத்திக் கொண்டு பற்று அற்ற நிலையை அடைய வேண்டும். புலன் உணர்ச்சிகள் நிறைந்த உலகத்தில் இருந்து தம்மை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு ஆத்ம விடுதலை பெறும் மார்கத்தில் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சாதனாத்விக்கள் தமது தியான நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும்,  அலைபாயும் எண்ணங்களை தடுத்து நிறுத்தவும், அவற்றில் ஏற்படும்  தடங்கல்களை தடுத்துக் கொள்ளவும்,  பல்வேறு  வழி முறைகளிலான சாதனாக்களை   பயன் படுத்துகின்றார்கள். ஆனால் அவை சரியான வழி முறைகள் அல்ல. ஆத்ம விடுதலை அடைய முதலில் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும், புலன்களின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும், உலக பற்றை துறக்க வேண்டும். இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக செய்து வரும் நிலையில், சுய கட்டுப்பாடு கைகூடும், மெல்ல மெல்ல விழிப்புணர்வை அடையும் நிலைக்கான பாதையில் பயணிக்கத் துவங்குவார்கள். அதை விடுத்து மேலும் மேலும் அவர் கற்பிக்கும் அந்த சாதனா  செய்யலாம் அல்லது இன்னொருவர் போதிக்கும் இன்னொரு சாதனா செய்யலாம் என வேறு வழி முறைகளை  பின்பற்றத்  துவங்குவது  ஆசைகளை வளர்க்கும், மனதின் எண்ண ஓட்டங்களை மேலும் அதிகம் அலைபாய வைக்கும். அந்த நிலை  ஆத்ம விழிப்புணர்வு அடையும் மார்கத்தில் நுழைய வழி காட்டாது’).

निर्वासनं हरिं दृष्ट्वा तूष्णीं विषयदन्तिनः ।

पलायन्ते न शक्तास्ते सेवन्ते कृतचाटवः ॥

18.46  ஒரு பெரிய யானையைப் போன்ற ஐம்புலன்கள், அனைத்து ஆசைகளையும் அழித்துக் கொண்டு விட்ட பராக்கிரம சிங்கம் போன்றவனின் உடலில்  இருந்து,  சிங்கத்தைக் கண்டு ஓடிடும் யானையைப் போல விலகி விடும் அல்லது அவனை பாதிக்காமல் அடங்கிக் கிடக்கும்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன   கூறுகின்றார் என்றால் ‘ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம் என்பார்கள். எவன் ஒருவன்  ஐம்புலன்களையும் அழித்துக் கொள்ளத் துவங்குவானோ அவனுடைய  உலக பற்று குறையத் துவங்கும், பொருட்களின் மீதான ஆசை, அகங்காரம், கோபம், காம இச்சைகள் என அனைத்தும்  பராக்கிரம சிங்கத்தை விட்டு விலகி ஓடும் யானையைப் போல அவனிடம் இருந்து அழியத் துவங்கும். மெல்ல மெல்ல அவன் பட்டற்ற நிலைக்கு சென்று விடுவான். அந்த நிலையில் இருந்து விழிப்புணர்வு  அடையும்  நிலையை எட்டுவது  எளிது ‘).

न मुक्तिकारिकां धत्ते निःशङ्को युक्तमानसः ।

पश्यन् श‍ृण्वन् स्पृशन् जिघ्रन्नश्नन्नास्ते यथासुखम् ॥

18.47 எவன் ஒருவனுக்கு எந்தவித சந்தேகங்களும் கிடையாதோ, ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகி விட்டாரோ,  அவருக்கு  விழிப்புணர்வு செல்லும் நிலைக்கான  சாதனாக்கள் தேவைபடுவது இல்லை. ஆனால்  பார்ப்பது, கேட்பது, நுகர்வது, தொடுவது மற்றும் மற்றும் சாப்பிடுவது போன்ற உணர்வுகளுடன் ஜடமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்‘).

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கிரர் ஜனக மன்னனுக்கு என்ன   கூறுகின்றார் என்றால்  ‘ஆத்ம விடுதலை பெற்றவன்  சன்யாச  கோலத்தில்தான் இருக்க வேண்டும், கானகத்தில் சென்றுதான் வசிக்க வேண்டும் என்ற நியதி இல்லை. பூமியிலே பிறந்து, சம்சார சாகரத்தில் உழன்று  கொண்டிருந்தாலும்  உலக பற்று இல்லாமல், அந்த ஜடமான உடலுக்கு எத்தனை காலம் வாழ வேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டு இருக்குமோ அத்தனை காலமும் அந்த உடலோடு, குடும்பஸ்தனாக  நடமாடிக் கொண்டு  இருக்க வேண்டி இருக்கும். ஜடமான உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு ஐம்புலன்களினால் ஏற்படும்  எந்த விதமான உணர்ச்சிகளும் இருக்காது. ஒரு ஜடம் போன்ற நிலையில், உணர்ச்சி அற்றவனாக அவனது கடமையை செய்து கொண்டிருந்தாலும், உள் மனதில் பேரானந்த  அமைதியில் வாழ்வான்’).

वस्तुश्रवणमात्रेण शुद्धबुद्धिर्निराकुलः ।

नैवाचारमनाचारमौदास्यं वा प्रपश्यति ॥

18.48 எப்போது ஒருவர் அலை பாயும் எண்ணங்களை அழித்துக் கொண்டு விட்டாரோ, அவர் மனம் தூய்மை அடைந்து விடுகின்றது. அவர் மனதில் எது தவறு, எது சரி, மற்றும் எது செயலாற்ற தன்மை  என்ற பேதங்கள் தோன்றுவதில்லை. 

{விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன   கூறுகின்றார் என்றால் ‘ஞான நிலைக்கு செல்லத் துவங்கும் சாதகன் எப்போது  தனது ஆசைகளையும், அறியாமையையும் அகற்றிக் கொண்டு அமைதியாகி விடுவாரோ, அப்போது முதலே அவரது மனம் தூய்மையாகி விடும். ஆன்மீக உண்மைகளை முற்றிலும் புரிந்து கொண்டு விட்ட நிலையில் மனம் அமைந்து விடும். மேலும்  அவர் தனது வழிகாட்டி மூலம் போதனைகளையும், உபதேசங்களையும் உள்வாங்கி கொள்ளத் துவங்க,   அந்த நிலையில் அவர் ஞான நிலையை அடையும் ஆன்மீகத்தின் மேல்படியில் செல்லத் துவங்குவார். அந்த நிலையை எட்டியதும்  அவருக்கு உலக பந்தங்களில் இணைந்துள்ள எது சரி, எது தவறு என்ற நிலைகள் தெரிவதில்லை. அவராக விரும்பி எந்த செயலையும் செய்வதும் இல்லை. உலக நடப்புகள் குறித்து கவலைக்  கொள்வதும் இல்லை. தான் எனும் அகங்காரம் அழிந்து விட்ட நிலையில் அமைதி அடைந்து விடுவார்’).

यदा यत्कर्तुमायाति तदा तत्कुरुते ऋजुः ।

शुभं वाप्यशुभं वापि तस्य चेष्टा हि बालवत् ॥

18.49  ஒரு ஞானி  எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, நல்லதோ அல்லது கெட்டதோ  அதை ஒரு குழந்தையைப் போன்ற  களங்கமற்ற மன நிலையுடன்  இருந்தவாறு செய்கிறார்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘தூய்மையான மனநிலையை அடைந்து விட்ட ஞானி  அதை  செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவதில்லை. அப்படிப்பட்ட ஞானியின்  மன நிலை கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையின் மன நிலை  போன்றுதான்  இருக்கும். ஏன் எனில் அவன் மனது சூன்யமாகி கிடக்கின்றது. அங்கு எண்ண ஓட்டங்கள் இருப்பது இல்லை. நான் என்ற மன நிலையும் இல்லை. பிராரப்த கர்மா உள்ளவரை, நடப்பவற்றை எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, உடலின் இயக்கம் அழியும்வரை ஒரு குழந்தையின் நிலையில்  வாழ்ந்து கொண்டிருப்பார்’).

स्वातन्त्र्यात्सुखमाप्नोति स्वातन्त्र्याल्लभते परम् ।

स्वातन्त्र्यान्निर्वृतिं गच्छेत्स्वातन्त्र्यात् परमं पदम् ॥

18.50 அறியாமையில் இருந்து விடுதலை கிடைத்ததும்  முதலில் ஆத்ம மகிழ்ச்சி கிடைக்கின்றது, அடுத்து ஞான நிலையின்  உச்சக் கட்டத்திற்கு செல்கின்றார். அதற்கு அடுத்த கட்டத்தில்   அவருக்குள்  பேரானந்த அமைதி நிலவத் துவங்கி விடும். 

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘ஆத்ம விடுதலைப் பெற சாதனாக்களை செய்யும் எந்த ஒருவரும் பேரானந்த நிலையிலான  விழிப்புணர்வு எனும் நிலையை படிப்படியாகவே பெறுகின்றார். முதலில் மனக் கட்டுப்பாடு அடைந்ததும் ஆத்ம மன மகிழ்ச்சி கிடைக்கின்றது. அடுத்த தியான நிலையில் எண்ணங்கள் கட்டுப்படுகின்றன.

அடுத்த நிலையில்  மனம் சூனியமாகத்  துவங்க, அறியாமைகள் அகன்று பட்டற்ற நிலையில் செல்கின்றார். அதுவே ஞான நிலையின் உச்ச கட்டம் என்பது. அதை அடைந்த பின் அவர் பேரானந்த நிலையான விழிப்புணர்வை பெற்று விடுவார். அந்த நிலையே ஞானியாகி விட்ட நிலை’. இப்படியாக ஒவ்வொரு நிலையையும் கடந்து அடுத்த நிலைக்கு செல்வதையே அஷ்டவக்கிரர் விடுதலை  என்பதாக கூறுகின்றார்).

अकर्तृत्वमभोक्तृत्वं स्वात्मनो मन्यते यदा ।

तदा क्षीणा भवन्त्येव समस्ताश्चित्तवृत्तयः ॥

18.51 எந்த ஒருவனுக்கு தான் செயல்படுத்துபவரும் அல்ல, நடப்பவற்றை ரசிப்பவரும் அல்ல என்ற எண்ணம் ஆழமாக எழத்   துவங்குமோ அப்போது முதலே அவனது அலை பாயும் மன எண்ண ஓட்டங்கள் அழியத் துவங்குகின்றன. 

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன   கூறுகின்றார் என்றால் ‘ஆத்ம விடுதலைப் பெற சாதனாக்களை செய்பவர்களுக்கு எப்போது முதல் ‘தான் அதை செய்தேன், தன்னால்தான் அது நடந்தது, தானே முக்கியமானவன்’ போன்ற ‘தான்’ எனும் அகந்தை   அழியத் துவங்குமோ, அப்போதுதான் அவனால் அலை பாயும் எண்ணங்களை முற்றிலும் அழித்துக் கொள்ள முடியும். அதன் மூலமே அவன் பேரானந்த நிலையை அடையும் அடுத்த கட்ட பாதையில் அடி எடுத்து வைக்க முடியும்’).

उच्छृङ्खलाप्यकृतिका स्थितिर्धीरस्य राजते ।

न तु सस्पृहचित्तस्य शान्तिर्मूढस्य कृत्रिमा ॥

18.52   ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் செயல்கள், எந்த விதமான உள் நோக்கங்களும், நடிப்புகளும்  இன்றி உள்ளத்தில் இருந்து வெளி வருவதினால் களங்கம் இன்றி உள்ளன. ஆனால் மனம் நிறைய ஆசைகளுடன், உலக பற்றுக்களை வைத்துக் கொண்டிருக்கும் கபடதாரி  மௌனசாமிகளின் செயல்கள் உண்மையானவைகளாக இருப்பது இல்லை.

(விளக்கம்: ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் செயல்கள் களங்கம் இன்றி உள்ளன என்பதன்  மூலம் அஷ்டவக்கிரர் என்ன   கூறுகின்றார் என்றால்  ‘எந்த உள் ஆசைகளும் இல்லாத ஞானியின் செயல்கள் ஒருதலை பக்ஷமாக இல்லாமல் இருப்பதினால் சமூகத்தில்  அனைவராலும் விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏன் எனில் அவை சொந்த விருப்பு வெறுப்புக்கள் அடிப்படையில்  செயல் படுத்தப்படுபவை   கிடையாது. அதே நேரத்தில்  ஞான நிலையை அடையாத  போலி வேஷதாரிகள், தாமும் எவர் ஒருவர் மீதும் தனிப்பட்ட  ஈடுபாடு கொண்டவர்கள் அல்ல,  அனைத்தையும் துறந்த  சன்யாசிகள் என தம்மைப் பற்றிக் கூறிக் கொண்டாலும் அவர்கள் செயல்பாடுகள் உள்நோக்கம் நிறைந்தவைகளாகவே இருக்கும்’).

विलसन्ति महाभोगैर्विशन्ति गिरिगह्वरान् ।

निरस्तकल्पना धीरा अबद्धा मुक्तबुद्धयः ॥

18.53  அனைத்து உலக பற்றுக்களையும் துறந்து எந்த  சிந்தனைகளும், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரமான நிலையில் உள்ள ஞானி மகிழ்ச்சி நிறைந்த  இடங்களிலும் காணப்படுவார், தனிமையான  குகைகளிலும் சென்று வசிப்பார்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கிரர் என்ன  கூறுகின்றார் என்றால் ‘முற்றிலும் துறந்த ஞானிக்கு ஆசா பாசங்கள், இன்ப துன்பங்கள், அலை பாயும் மன நிலை போன்ற எதுவுமே கிடையாது. உயிரற்ற ஜடம் போன்ற, கல்லை போன்ற  நிலையில் உள்ளவர் அவர். ஆகவே அவர் சம்சார வாழ்வில் உள்ளவரை, அதாவது எந்த உடலில் அவர் தங்கி உள்ளாரோ அந்த உடல் மரணம் அடையும்வரை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பார். மிக சந்தோஷமான சூழ்நிலை நிலவும்  இடங்களில் இருந்தாலும் அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனிமை குகையில் சென்று வசித்தாலும் அந்த சூழ்நிலையும்  அவரை பாதிப்பது இல்லை.   உலகின் முன் அவர் ஒரு மானிடப் பிறவி. ஆனால் அவரைப் பொறுத்தவரையிலோ    எதன் மீதும் பற்றில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத மன நிலையுடன் பேரானந்த நிலையில் வசிப்பவர்’).

श्रोत्रियं देवतां तीर्थमङ्गनां भूपतिं प्रियम् ।

दृष्ट्वा सम्पूज्य धीरस्य न कापि हृदि वासना ॥

18.54  ஒரு பெண்ணை, அரசனை, நண்பனை, புனித ஸ்தலங்களை  அல்லது ஒரு அறிவாளியை  பார்க்கும்  ஞானிக்கு அவர்கள் மீது  எந்த விதமான ஆசைகளும், ஈர்ப்புகளும்  ஏற்படாது.

(விளக்கம்: அஷ்டவக்கரரின் கூற்றின்படி பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு உலக பற்றே இருக்காது என்பதே மேற் கூறிய  நிலைக்கான அடிப்படைக் காரணம்  ஆகும்’).

भृत्यैः पुत्रैः कलत्रैश्च दौहित्रैश्चापि गोत्रजैः ।

विहस्य धिक्कृतो योगी न याति विकृतिं मनाक् ॥

18.55 தன்னிடம் பணி புரிபவர்கள், மகன்கள், மனைவிகள், பேரக் குழந்தைகள் அல்லது பிற  உறவினர்கள் என எவரும் தன்னை கேலி செய்தாலும் அவமானப்படுத்தினாலும், ஞானி அதை பொருட்படுத்துவதே  இல்லை.

(விளக்கம்: அஷ்டவக்கரரின் கூற்றின்படி மேற்கூறிய நிலைக்கான  காரணம்  ‘பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு உலக பற்றே இருக்காது.   அவமானமும்,  கேலியும் மனதுடன் சம்மந்தப்பட்டவை.  ஞானியானவர் அவற்றை எல்லாம் துறந்து விட்ட நிலையில் அல்லவா இருக்கின்றார் ‘  என்பதே ஆகும்).

सन्तुष्टोऽपि न सन्तुष्टः खिन्नोऽपि न च खिद्यते ।

तस्याश्चर्यदशां तां तां तादृशा एव जानते ॥

18.56  இன்பம் என்றாலும் மகிழ்ச்சி அடைவதில்லை, துன்பம்  என்றாலும்  கலங்குவதில்லை. வேறு எந்த நிலையினாலும் அவர் பாதிக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் (ஞானியின்) மனதை அவரைப் போன்ற குணம் உள்ள ஞானியினால்  மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

(விளக்கம்: அஷ்டவக்கரரின் கூற்றின்படி இன்பமும், துன்பமும் மனதுடன் சம்மந்தப்பட்டவை.  ஐம்புலன்களின் செயல்களினால் ஞானி பாதிக்கப்படுவது இல்லை என்ற நிலையில் இருக்கும் ஞானியை இன்னொரு ஞானியினால் மட்டுமே அடையாளம் காண முடியும்’).

कर्तव्यतैव संसारो न तां पश्यन्ति सूरयः ।

शून्याकारा निराकारा निर्विकारा निरामयाः ॥

18.57  கடமை உணர்வு, என்பது பொதுவான நியதி ஆகும். அனைத்து இடங்களிலும் வியாபித்து  உள்ள, உருவமற்ற, அமைதியான மற்றும் களங்கமில்லாத ஜீவாத்மாவுடன் இணைந்துள்ள ஞானி அவற்றை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை.

(விளக்கம் : அஷ்டவக்கரரின் கூற்றின்படி ‘உலக பற்று அனைத்தையுமே துறந்து, விழிப்புணர்ச்சி பெற்று விட்ட  நிலையிலான ஞானிக்கு,  ஓ, நான் இத்தனை மணிக்கு அதை செய்ய வேண்டும், இத்தனை  மணிக்கு இதை செய்ய வேண்டும்,  இத்தனை  மணிக்கு அவர்களை பார்க்கப் போக வேண்டும் போன்ற எந்த எண்ணங்களும் மனத்தில் தோன்றுவதே இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவை அனைத்துமே மாயையான உலகை சார்ந்தவை, ஜடமான உடலுக்கு சொந்தமானவை. அவற்றுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதாக நினைக்கின்றார்).

अकुर्वन्नपि सङ्क्षोभाद् व्यग्रः सर्वत्र मूढधीः ।

कुर्वन्नपि तु कृत्यानि कुशलो हि निराकुलः ॥

18.58   விழிப்புணர்வு பெற முடியாத நிலையில் உள்ளவன் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாலும் மனதில் ஆவேசப்பட்டபடி இருப்பான். ஆனால் விழிப்புணர்வு பெற்ற ஞானியோ தான் செய்ய வேண்டியதை இயந்திரமாக செய்யும்போது கூட உணர்ச்சியற்ற மரக்கட்டை போலவே  இருப்பான்.

(விளக்கம் : அஷ்டவக்கரரின் கூற்றின்படி ‘ ஞானிக்கும் மற்றவனுக்கும்  இடையே உள்ள  மாறுபட்ட நிலைப்பாடுகளான ஆவேசத்திற்கும் அமைதிக்கும் அடிப்படை காரணம்  மன நிலையே ஆகும்.   ஞானியின் மனம் சூனியமான நிலையில் இருக்க,  விழிப்புணர்வு பெற முடியாத நிலையில் உள்ளவனின்  மனமோ  அலை பாய்ந்த நிலையில் உள்ளது ‘).

सुखमास्ते सुखं शेते सुखमायाति याति च ।

सुखं वक्ति सुखं भुङ्क्ते व्यवहारेऽपि शान्तधीः ॥

18.59    ஸம்ஸார சாகர வாழ்க்கையில் இருக்கும் போதும் எந்த பற்றும் இல்லாத ஞானி மகிழ்ச்சியாக செயல்படுவார், மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பார், மகிழ்ச்சியாக உறங்குவார், மகிழ்ச்சியாக நடமாடுவார், மகிழ்ச்சியாக பேசுவார், மகிழ்ச்சியாக உணவும் அருந்துவார்.

(விளக்கம் : அஷ்டவக்கரரின் கூற்றின்படி ‘ஞானிக்கு எதன் மீதும் எந்த பற்றும் கிடையாது என்றாலும் உலக வாழ்க்கையில் இருக்கும்போது வெளிப் பார்வைக்கு அவர் மகிழ்சியாகவே அனைத்தையும் செய்வது போலத் தோற்றம் அளித்தாலும்  உண்மையில் அவர் உணர்ச்சி அற்ற மரக்கட்டைப் போல, இயந்திரமாகவே செயல்பட்டுக்  கொண்டு இருப்பார்’).

स्वभावाद्यस्य नैवार्तिर्लोकवद् व्यवहारिणः ।

महाह्रद इवाक्षोभ्यो गतक्लेशः सुशोभते ॥

18.60  தன்னைத் தானே முற்றிலும் உணர்ந்து கொண்டு விட்ட ஞானிக்கு இன்ப துன்ப நிலைகள் என்பதே கிடையாது. அமைதியான ஒரு பெரிய நீர்நிலை போன்ற மனத்துடைய அவர், மற்ற மனிதர்களை போன்று இல்லாமல் உலக வாழ்க்கையின் எந்த நிலையிலும் கலங்குவது இல்லை.

निवृत्तिरपि मूढस्य प्रवृत्ति रुपजायते ।

प्रवृत्तिरपि धीरस्य निवृत्तिफलभागिनी ॥

18.61  மூடனுக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது கூட எதோ ஒரு வேலையை  செய்து கொண்டிருப்பது போல தோன்றும்.  ஆனால் ஞானியின் செயலாற்ற நிலை கூட  ஒரு வகையிலான பலனையே தருகின்றது.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர்  மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிதாக கூறி உள்ளார். அனைத்து  போதனைகளிலுமே அவர் முட்டாள் மற்றும் மூடன் என குறிப்பிடுவது மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஞான நிலையை அடைய முயற்சிக்கும் சாதனா  செய்பவரையே குறிப்பிடுகின்றது.  ஆத்ம விடுதலைப் பெற சாதனாக்களை செய்யும் எந்த ஒருவரும் பேரானந்த நிலையிலான விழிப்புணர்வு எனும் நிலையை படிப்படியாகவே பெற முடியும். முதலில் அலைபாயும் எண்ணங்களில் சிக்கித் தவிக்கும் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.  அடுத்த தியான நிலையில் தன்னை மறக்கத் துவங்க வேண்டும். அடுத்த நிலையில்  மனம் சூனியமாகத்  துவங்கி, அறியாமைகள் அகன்று உலக பட்டற்ற நிலையில் செல்கின்றார். அதுவே ஞான நிலையின் உச்ச கட்டம் என்பது. அதை அடைந்த பின் அவர் பேரானந்த நிலையான விழிப்புணர்வை பெற்று விடுவார்.  சாதனா என்பது தினசரி செய்யும் ஆன்மீக பயிற்சி. இதுதான் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள உதவிடும்  மிக முக்கியமான வழிமுறைகளில்  ஒன்றாகும். அப்படிப்பட்ட கடுமையான பயிற்சி முறையின் துவக்க கட்டத்திலேயே, தியானத்தில் இருக்கையிலேயே சாதனாவை செய்பவரின் மனம் அலை பாயத் துவங்கி விட்டால், அந்த நிலையை  ‘மூடனுக்கு  எதோ ஒரு வேலையை  செய்து கொண்டிருப்பது போல தோன்றும்’ என்பதாக அஷ்டவக்கரர் குறிப்பிடுகின்றார்.

அதே சமயத்தில் சம்சார வாழ்க்கையில் உழலும் ஞானியோ எதை செய்தாலும் அந்த செயலை பற்று இல்லாத நிலையில், அதாவது செயல் அற்ற நிலையில்  இருந்தவாறே  செய்தாலும் அவற்றில் பலவும் மற்றவர்களுக்கு நன்மையை அளிக்கும் விதத்தில் அமையலாம். ஆனால் ஞானியோ அந்த நிலையிலும்  அமைதியோடுதான் இருக்கின்றார்’).

परिग्रहेषु वैराग्यं प्रायो मूढस्य दृश्यते ।

देहे विगलिताशस्य क्व रागः क्व विरागता ॥

18.62  தனது வாழ்க்கை  மீது அக்கறை கொண்டுள்ளவன் அவ்வப்போது வாழ்க்கையின் மீது வெறுப்பு வரும்.  ஆனால் எப்போது அவனுக்கு  வாழ்க்கையின்  மீதான ஆசைகள்  முற்றிலும் விலகுமோ  அப்போது முதல்தான் மனதில் வெறுப்போ, பற்றோ ஏற்படாது.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால் ‘ஆசைகள் மற்றும் விருப்பு வெறுப்புக்கள் போன்ற நிலைகள் அறியாமையில் உள்ளவனிடத்தில்தான் இருக்கும். தனது வாழ்க்கையின் வளத்தை   குறித்து பெருமையடித்துக் கொள்ளும்  மூடன், அவ்வப்போது மனதில் எழும் ‘முக்தி அடைய வேண்டும் என்ற ஆசையில்’ தன் செல்வத்தையும், இருப்பிடத்தையும், மனைவியையும், குழந்தைகளையும் கூட  தியாகம் செய்ய நினைப்பான். ஆனால் அதை அவனால் செய்ய முடியாது என்பதின் காரணம் அவன் தனது உடல் மீதான ஆசைகளை விலக்கிக் கொள்ளவில்லை, குடும்பத்தின் மீதான பற்றை விலக்கிக் கொள்ளவில்லை. அவன் மனதில் இருந்த   அகங்காரம் அழியவில்லை. அவன் அடையும் வெறுப்பும் கூட தற்காலிகமானது. அவனது மனதின் எண்ணங்களை ஆசைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொள்ள முயலும் நிலை அது ஆகும்.  ஆனால் எப்போது அவனிடத்தில் இருந்து  வாழ்க்கையின்  மீதான ஆசைகள்  முற்றிலும் விலகுமோ  அது முதல்தான்  அவனுக்கு மனதில் வெறுப்போ, பற்றோ ஏற்படாது. அத்தகைய நிலையில் உள்ள  மனிதனுக்குப் பற்றும், வெறுப்பும் இல்லை’).

भावनाभावनासक्ता दृष्टिर्मूढस्य सर्वदा ।

भाव्यभावनया सा तु स्वस्थस्यादृष्टिरूपिणी ॥

18.63 சாதனாவின் முழு நிலையை எட்ட முடியாத  சாதனாத்விகள் மனதில் அவர்களை அறியாமலேயே ஏதாவது எண்ண அலைகள் ஓடிக் கொண்டே இருக்கும்.  ஆனால் ஞானியின் பார்வையோ, எண்ணங்களோ நினைவுகள் அற்ற சூன்ய (வெறுமை)  நிலையில் இருக்கும். 

(விளக்கம்: சாதனாவின் முழு நிலையை அடையாத சாதனாத்விகளையே முட்டாள் அல்லது அறிவற்றவர்  என்பதாக அஷ்டவக்கரர் குறிப்பிட்டு உள்ளார்.   அவர்  என்ன கூறுகின்றார் எனில் ‘அனுபவம் அற்ற சாதனாத்விகள் விரைவில் சாதனாவின் உச்ச நிலையை எட்ட வேண்டும் என்ற தவிப்பில் இப்படி செய்தால் என்ன, அப்படி செய்தால் என்ன என்று எண்ணிக் கொண்டே இருப்பார்கள். எப்போது அப்படிப்பட்ட ஆர்வம் மனதில் தோன்றி  விடுமோ அப்போதே பற்றும் அதிகமாகி வேறு சில எண்ணங்களும் தோன்றத் துவங்கும். எண்ணம் பிசாசைப் போன்றது.  ஒருமுறை உள்ளே புகுந்து விட்டால் எளிதில் வெளியில் செல்லாது. இதனால்தான் சாதனாத்விகள் சாதனாக்களை செய்யும்போது  ஆத்மாவின் முழுமையான நினைப்புடன் இருக்க வேண்டும், அப்போதுதான் பிற  எண்ணங்கள் மனதை ஆக்ரமிக்காது. எப்போது முழுமையான ஆத்ம நினைவோடு சாதனாக்களை  செய்வார்களோ அப்போது முதல்தான்  மனம் ஸ்திரப்படத் துவங்கும். ஆன்மீக நிலையின் அடுத்த கட்டம் புரியத் துவங்கும்.

அதே சமயத்தில் ஞானியைப் பாருங்கள். ஒன்றை பார்த்துக் கொண்டே இருப்பது போல அவர்கள் பார்வையும் செயல்களும் வெளித் தெரிந்தாலும்  அவர்கள் அவற்றை உண்மையில்  பார்ப்பது இல்லை என்பதே நிஜம். அவர்கள் பார்வை பொருளை பார்த்துக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அவர்களின் நினைவு பேரானந்த நிலையான ஜீவாத்மாவுடன் கலந்த நிலையில்தான்    இருக்கும். அதனால்தான் ‘ஒரு செயல் அல்லது பொருள் மீதான ஞானியின் பார்வையோ, எண்ணங்களோ   நினைவுகள் அற்ற சூன்ய (வெறுமை)  நிலையில் உள்ளது’ என்பதாக குறிப்பிடுகின்றார்).

सर्वारम्भेषु निष्कामो यश्चरेद् बालवन् मुनिः ।

न लेपस्तस्य शुद्धस्य क्रियमाणेऽपि कर्मणि ॥

18.64 தான் செய்யும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபாடு கொள்ளாமல், ஒரு இயந்திரம் போல செயல்படும் ஞானியின் பார்வைகளும், செயல்களும் தூய்மையான குழந்தையின் மன நிலையில்தான் இருக்கும்.

(விளக்கம்: ஏற்கனவே பல போதனைகளில்  கூறி உள்ளபடி ஞான நிலையை எட்டி விட்டவன்  மனம் சூன்ய நிலையில் இருக்கும். அங்கு ஜீவாத்மாவின் நினைவை தவிர வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதினால் அவன் மனது பிறந்த குழந்தையின் மன நிலையில்தான் இருக்கும். எதை செய்தாலும் அவனை அறியாமல் ஜடமாகவே செய்வான். அதில் ஆர்வமுடனான ஈடுபாடு இருக்காது என்பதினால்தான் அவன் பிறந்த குழந்தை போன்ற மன நிலையில் இருப்பான் என்பதாக அஷ்டவக்கரர் கூறுகின்றார்).

स एव धन्य आत्मज्ञः सर्वभावेषु यः समः ।

पश्यन् श‍ृण्वन् स्पृशन् जिघ्रन्न् अश्नन्निस्तर्षमानसः ॥

18.65 எதை பார்த்தாலும், கேட்டாலும், தொட்டுப் பார்த்தாலும், முகந்து பார்த்தாலும், ஏன் உணவு அருந்தினால் கூட  எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஜடமான நிலையில் இருப்பவனே ஞானி  ஆவார்

(விளக்கம் : அந்த நிலைக்கு காரணம் ‘ஞானி  பற்றற்ற நிலையில் உள்ளவர்’).

क्व संसारः क्व चाभासः क्व साध्यं क्व च साधनम् ।

आकाशस्येव धीरस्य निर्विकल्पस्य सर्वदा ॥

18.66 படர்ந்து விரிந்துள்ள, மௌனமான ஆகாயம் போன்று, சலனமற்று பேரானந்த நிலையில் உள்ள  ஞானி, மேலும்  எந்த பாதையை பின்பற்ற வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எந்த இலக்கை அடைய வேண்டும் ?

स जयत्यर्थसंन्यासी पूर्णस्वरसविग्रहः ।

अकृत्रिमोऽनवच्छिन्ने समाधिर्यस्य वर्तते ॥

18.67 மேன்மையானவர் யார் என்றால், அனைத்து ஆசைகளையும் துறந்தவர், இயற்கையாகவே எழுந்த தூண்டுதலினால், பேரானந்த விழிப்புணர்வை பெற்று, நானே பிரம்மன் என்ற சமாதி போன்ற நிலைக்கு  சென்று விட்டவர் ஆவார்.

बहुनात्र किमुक्तेन ज्ञाततत्त्वो महाशयः ।

भोगमोक्षनिराकाङ्क्षी सदा सर्वत्र नीरसः ॥

18.68  சுருக்கமாக கூற வேண்டும் எனில்  ஞானி தனி சிறப்பான ஆன்மா, உண்மையை உணர்ந்தவர், ஆசை மற்றும் இன்பங்களை துறந்து  ஆத்ம விடுதலை அடைந்தவர். காலமில்லா காலத்திலும் அவருக்கு எதன் மீதும் பற்று என்பதே  இருக்காது.

महदादि जगद्द्वैतं नाममात्रविजृम्भितम् ।

विहाय शुद्धबोधस्य किं कृत्यमवशिष्यते ॥

18.69 பல்வேறு பெயர்களில் உள்ள, பல்வேறு தன்மைகளை கொண்ட உலகத்தின் மீதான  பற்று அனைத்தையும்  துறந்து விட்டு,  தூய்மையான விழிப்புணர்வு நிலைக்கு சென்று விட்ட  அறிவாற்றல் மிக்க ஞானிக்கு மேலும் என்ன தேவை இருக்க முடியும்?.

भ्रमभूतमिदं सर्वं किञ्चिन्नास्तीति निश्चयी ।

अलक्ष्यस्फुरणः शुद्धः स्वभावेनैव शाम्यति ॥

18.70  தூய்மையான ஞானி  இந்த உலகமே ஒரு சூனிய நிலையிலானது, அது  ஒரு மாயத்  தோற்றம்தானே தவிர அவற்றில் எதுவுமே இல்லை என்று உறுதியாக நம்புகிறார். மற்றவர்களுக்கு புலப்படாத நானே பிரும்மன் என்ற நிலை அவருக்கு கிடைத்து இருப்பதினால் அவர் மெளனமாக, அமைதியான பேரானந்த நிலையில் இருக்கின்றார்.

शुद्धस्फुरणरूपस्य दृश्यभावमपश्यतः ।

क्व विधिः क्व च वैराग्यं क्व त्यागः क्व शमोऽपि वा ॥

18.71 இயற்கையாகவே விழிப்புணர்வு பெற்று பேரானந்த நிலையில் ஜொலிக்கும்,  தனித்துவமான  உலகமே இல்லை என்று நம்புகின்ற அறிவாளிக்கு (ஞானி), அதற்கும் மேல் வாழ்வின்  நடத்தை நெறி முறைகள், பற்றின்மை, துறவரம், மனக் கட்டுப்பாடு  போன்ற எவைதான்  தேவை ?

स्फुरतोऽनन्तरूपेण प्रकृतिं च न पश्यतः ।

क्व बन्धः क्व च वा मोक्षः क्व हर्षः क्व विषादिता ॥

18.72 ஜீவாத்மா மட்டுமே பல்வேறு பரிமாணங்களில் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளது, ஆனால் இயற்கையுடன் கூடிய உலகம் என்பது மாயை என்பதாக நம்பும் ஞானிக்கு அடிமைத்தனமும் அறியாமையும், விடுதலையும், மகிழ்ச்சியும் மற்றும் வருத்தமும் எங்கிருந்து வர இயலும் ?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார்  என்றால் ‘அனைத்து உலக பற்றையும் துறந்து விட்டு பேரானந்த நிலையான விழிப்புணர்வை பெற்றுக் கொண்டு விட்ட ஞானி ஒருவர் உலகின் பன்மைத் தன்மையை ஏற்றுக் கொள்வதே இல்லை. அவரைப் பொறுத்தமட்டில்  கடல் நீரும்  அதன் மீது   தோன்றி,  தோன்றி  மறைந்து  கொண்டே இருக்கும்  அலைகளும், நீர் குமிழிகளும்  அதே கடல் நீர்தான்  என்பதை போலவே, இந்த உலகின்  பல்வேறு முகத்  தன்மைகளும்  ஒரே  ஜீவாத்மா எனும் பரமாத்மாதான் என்பதாக நம்புகிறார். அவருக்கு ஜீவாத்மாவைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது என்ற உணர்வு இருந்து கொண்டே இருப்பதினால்தான் அடிமைத்தனமும் அறியாமையும், விடுதலையும், மகிழ்ச்சியும், வருத்தமும் ஏற்படுவதில்லை’).

बुद्धिपर्यन्तसंसारे मायामात्रं विवर्तते ।

निर्ममो निरहङ्कारो निष्कामः शोभते बुधः ॥

18.73 ஆத்ம விழிப்புணர்வு  பெறும்வரை இந்த உலகமே மாயை என்பது புரிவதில்லை. ஆனால் மாயை அழிந்ததும்   ‘நான்’ மற்றும்  ‘எனது’ என்ற எண்ணங்களை  அழித்துக் கொண்டு எந்த பற்றும் இல்லாமல் ஞானி வாழ்கின்றான்.

अक्षयं गतसन्तापमात्मानं पश्यतो मुनेः ।

क्व विद्या च क्व वा विश्वं क्व देहोऽहं ममेति वा ॥

18.74 ஜீவாத்மாவிற்கு துக்கம் இல்லை, என்றும் நிலையானது, அதற்கு அழிவு இல்லை என்பதை உணர்ந்த ஞானிக்கு மேலும்  என்ன அறிவாற்றல் தேவை?  இந்த உலகமே மாயை என எண்ணுபவருக்கு   ‘நான்’ மற்றும் ‘எனது’ போன்ற உணர்வுகள் எங்கிருந்து எழும் ?

(விளக்கம்: இந்த கருத்தையே மீண்டும் மீண்டும் அஷ்டவக்கரர் பல்வேறு விதங்களில் ஆணித்தரமாக கூறி உள்ளார். அதை மீண்டும் எதற்கு கூறி உள்ளார் எனில்  ‘நான் மற்றும் எனது  என்ற ஒரு சிறு தீப்பொறி மனதில் எழுந்தால் கூட  உடலின் இயக்கங்களுடன் ஒரு சாதகனை இணைத்து விடும். உடலின் இயக்கங்களுடன் அறியாமை எனும் சிறு தீப்பொறி  மீண்டும் கலந்து விட்டால், அதன் பின்னர் எண்ணங்கள் மனதில் அலை அலையாய் எழுந்து  கொண்டே இருக்கும். அவற்றை எளிதில் அழிக்க முடியாது. எண்ணங்கள் எழத் துவங்கி விட்டால் ஐம்புலன்களின் ஆதிக்கம் தீ போல பரவி விடும். அதை மீண்டும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம் என்பதினால் எப்போது உலகமே மாயை என்பதை உளமார உணர்ந்து விட்டானோ, அந்த க்ஷணத்தில் இருந்தே அனைத்து உலக பற்றையும் அழித்துக் கொண்டு வாழத் துவங்கி விட வேண்டும். முக்கியமாக நான், எனது மற்றும் இந்த உலகில் வாழ்கின்றேன் என்ற எண்ணங்களே வரக்கூடாது.  மரத்தின் ஆணி வேரை அழிப்பது  போல அவற்றை எண்ணத்தில் இருந்து அடியோடு அழித்து விட வேண்டும்’).

निरोधादीनि कर्माणि जहाति जडधीर्यदि ।

मनोरथान् प्रलापांश्च कर्तुमाप्नोत्यतत्क्षणात् ॥

18.75  எப்போது அறிவாற்றல் குறைந்த  ஒரு சாதகன்  இனிமேல் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது என்று தீர்மானித்து விட்டு சாதனாக்களை  நிறுத்திக் கொண்டு  விடுவானோ, அடுத்த கணமே அவனை ஆசைகளும் மனக் கற்பனைகளும் மீண்டும் ஆக்ரமித்துக் கொண்டு விடும் .

मन्दः श्रुत्वापि तद्वस्तु न जहाति विमूढताम् ।

निर्विकल्पो बहिर्यत्नादन्तर्विषयलालसः ॥

18.76  ஜீவாத்மா எனும் உண்மையை  முழுமையாக புரிந்து கொண்ட, அறிவாற்றல் குறைந்த சாதகன்,  பேரமைதியில் உள்ளதை  போல வெளிப் பார்வைக்கு காட்சி அளித்தாலும், உண்மையில் அவன் மன சஞ்சலங்களுடனும், உலக பற்றுதல்களுடன்தான்   இருக்கின்றான்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘ஜீவாத்மா எனும் உண்மையை புரிந்து கொண்டு, அதை அடைய தீவிரமான தியானம் மற்றும் பிற சாதனாக்களில் ஈடுபடும் அறிவாற்றல் குறைந்த சாதகன், அதில்  ஓரளவு  வெற்றி கண்டாலும் முழுமையான  மனக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறான். காரணம் விரைவாக ஆத்ம விடுதலை பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட, அந்த ஆசையே அவன் எண்ண அலைகளை தூண்டி  விட,  அவனையும் மீறி அவனது உடலிலுள்ள ஐம்புலன்கள்  மீண்டும்,  மீண்டும் அவன் உணர்ச்சிகளை தூண்டி விடும் நிலையில், அவனால் ஐம்புலன்களை அடக்கி  ஆசைகளை  துறப்பது, உலக பற்றை அழித்துக் கொள்வது என்பவற்றில் வெற்றி பெற முடிவதில்லை. அதனால்தான்   அவன் அறியாமையில் இருந்து  வெளிவந்து விட்டது போல காட்சி அளித்தாலும்  உள்ளத்தில்  மன சஞ்சலங்களுடனும், உலக பொருட்கள் மீதான பற்றுதல்களுடன்தான் இணைந்தே இருக்கின்றான்’).

ज्ञानाद् गलितकर्मा यो लोकदृष्ट्यापि कर्मकृत् ।

नाप्नोत्यवसरं कर्तुं वक्तुमेव न किञ्चन ॥

18.77 வெளிப்  பார்வையில் ஞானி  சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருப்பது போல தோன்றினாலும்  உண்மையில் அவர் மனம் சூன்ய நிலையில் உள்ளதினால்,  அவற்றை அவர் விரும்பி செயல்படுவதும் இல்லை, எதை குறித்தும்  கருத்து கூறுவதும் இல்லை.

(விளக்கம் : அஷ்டவக்கரரின் கூற்றின்படி ‘ஞானிக்கு எதன் மீதும் எந்த பற்றும் கிடையாது என்றாலும் உலக வாழ்க்கையில் இருக்கும்போது  அவர்  குடும்ப வாழ்க்கைக்கான சில செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.  அது பிராரப்த கர்ம வினைப் பயன் ஆகும்.  ஆனால்  எந்த செயலை அவர் செய்தாலும்  அவற்றில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு செய்யாமல்,  உணர்ச்சி அற்ற மரக்கட்டைப் போல இருந்தவாறு, இயந்திரமாகவே அவர் அந்த செயல்களில் ஈடுபட்டுக்  கொண்டு இருப்பார். அதனால்தான் அவர் அந்த வேலைகளுக்கான எந்த கருத்தையும் கூறுவதில்லை. நல்லதோ, கெட்டதோ, விளைவுகளை பொருட்படுத்தாமல் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவற்றை அப்படியே இயந்திரமாக செய்தபடி இருக்கின்றார்’).

क्व तमः क्व प्रकाशो वा हानं क्व च न किञ्चन ।

निर्विकारस्य धीरस्य निरातङ्कस्य सर्वदा ॥

18.78  எந்த அச்சமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானியின்  வாழ்க்கையில் இருளோ, ஒளியோ, லாபமோ இல்லை நஷ்டமோ கிடையாது. அவை அனைத்துமே  மனதின் வெளிப்பாடுகள் என்பதினால் அவர் அதனால் பாதிப்படைவதில்லை.

(விளக்கம்: வாழ்க்கையில் இருளோ, ஒளியோ, லாபமோ இல்லை என்பதின் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘ஞானியைப் பொறுத்தவரை இருள் அல்லது ஒளி என்பது மனதின் அறியாமை மற்றும் அறிவாற்றலைக்  குறிக்கும். விளக்கு வெளிச்சத்தையோ அல்லது வெளிச்சம் இல்லாத இருந்த நிலையையோ குறிப்பது அல்ல அந்த வார்த்தைகள்.

அதை போல அறியாமை எனும் இருளில் இருந்து விடுதலை பெற்று பேரானந்த நிலைக்கு ஏற்கனவே சென்று விட்ட ஞானிக்கு அதற்கும் மேல் மனதின் ஆசைகளை நிறைவேற்றும்  எதை இழக்க வேண்டும் அல்லது எதை அடைய வேண்டும்?’).

क्व धैर्यं क्व विवेकित्वं क्व निरातङ्कतापि वा ।

अनिर्वाच्यस्वभावस्य निःस्वभावस्य योगिनः ॥

18.79 பொறுமை, பாகுபாடு, பயமின்மை மற்றும் விவேகமாக செயல்படுவது போன்ற அனைத்து  நிலைகளையும் கடந்த நிலையில் உள்ள ஞானி,  சாதாரண மக்களை  போன்ற  நிலையில் பார்க்கப்பட வேண்டியவர் அல்ல. 

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘பொறாமை, பாகுபாடு, பயமின்மை மற்றும் விவேகமாக செயல்படுவது போன்ற அனைத்துமே மன எண்ணங்களின் வெளிப்பாடுகள்தான். ஞானிக்கு அவை எதுவுமே கிடையாது.  சுதந்திரமாக செயல்படுபவர். தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும்,  ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு எதுவுமே தேவை இல்லை என்ற பட்டற்ற நிலையில் சென்று விட்டவரே ஞானி ஆவார். ஆகவே அவரை  எப்படி சாதாரண  மக்களுடன் ஒப்பிட முடியும்?’).

न स्वर्गो नैव नरको जीवन्मुक्तिर्न चैव हि ।

बहुनात्र किमुक्तेन योगदृष्ट्या न किञ्चन ॥

18.80  ஒரு ஞானியின்  பார்வையில் சொர்கம், நரகம், விழிப்புணர்வு போன்ற எதுவுமே கிடையாது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும்,  ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மன நிலையில் சென்று விட்ட  ஞானி மீண்டும் எதற்காக சொர்கம், நரகம், விழிப்புணர்வு போன்றவற்றை குறித்து பேசவோ எண்ணவோ, வேண்டும்? அவர் அவற்றை எல்லாம் கடந்த நிலையில் உள்ளவர்.  சொர்கம், நரகம், விழிப்புணர்வு போன்றவற்றை குறித்து எண்ணத் துவங்கினாலோ அல்லது பேசினாலோ மீண்டும் அவர் அறியாமையில் அகப்பட்டு, எண்ண அலைகளோடு வாழத் துவங்க வேண்டி வரும். எண்ண அலைகள் மனதை ஆட்கொண்டால் அடுத்து ஆசா பாசங்களும், இன்ப துன்பங்களும் அவரை பற்றிக் கொண்டு விடும், அவர் அடைந்திருந்த ஞானமும் அழிந்து விடும் என்பதினால் அந்த எண்ணங்கள் எதுவுமே அவருக்கு இருக்க முடியாது’).

नैव प्रार्थयते लाभं नालाभेनानुशोचति ।

धीरस्य शीतलं चित्तममृतेनैव पूरितम् ॥

18.81 ஒரு ஞானி எந்த விதமான ஆதாயங்களுக்கும்  ஏங்குவதில்லை, அவை கிடைக்கவில்லையே என்று வருந்துவதில்லை என்பதின் காரணம் அமைதியான, அமிர்தம் போன்ற பேரானந்த விழிப்புணர்வு நிலையில் அல்லவா அவர் இருக்கின்றார்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்வு நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு எவற்றின் மீது பற்று இருக்க முடியும்?’).

न शान्तं स्तौति निष्कामो न दुष्टमपि निन्दति ।

समदुःखसुखस्तृप्तः किञ्चित् कृत्यं न पश्यति ॥

18.82  பட்டற்ற நிலையில் உள்ள ஞானி   நல்லவனைப் புகழ்வதில்லை, தீயவர்களிடம்  குறை காண்பதில்லை. இன்பமோ, துன்பமோ இரண்டு  நிலைகளிலும் அவர் எந்த மாறுதல்களுக்கும் உட்படாமல் இருக்கின்றார். 

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி எனும் நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு  எப்படி  இரண்டு தன்மை கொண்ட மனநிலை இருக்க முடியும். அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

धीरो न द्वेष्टि संसारमात्मानं न दिदृक्षति ।

हर्षामर्षविनिर्मुक्तो न मृतो न च जीवति ॥

18.83  ஞானிக்கு மரணத்தின் மீது வெறுப்பு இல்லை, பிறப்பிலும் அக்கறை இல்லை, தன்னை அறிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. அவருக்கு இன்ப, துன்ப எண்ணங்களே கிடையாது என்பதினால் உயிரோடு இருந்தாலும் இறந்தவரைப் போலவே வாழ்ந்து வருவார்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘எந்த விதமான எண்ண அலைகளும் இல்லாமல், எதன் மீதும்  பற்று வைக்காமல், பிராரப்த கர்மாவினால், அவர் வாழும் உடல் அழியும் வரை வாழ வேண்டிய கட்டாயத்தில்  ஞானி உள்ளதினால், ஒரு இயந்திரமாக, ஜடமாக,  உணர்ச்சிகள் அற்ற நிலையில்  செயல்பட்டவாறு வாழ்ந்து கொண்டிருப்பதால், ஞானியை உயிரோடு இருந்தும் உணர்ச்சி அற்ற பிணம் போன்ற நிலையில் உள்ளவர் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?).

निःस्नेहः पुत्रदारादौ निष्कामो विषयेषु च ।

निश्चिन्तः स्वशरीरेऽपि निराशः शोभते बुधः ॥

18.84  எல்லா எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்ட ஞானி  பட்டற்று  இருக்கின்றான். அவனுக்கு தனது குழந்தைகள், மனைவி அல்லது வேறு எவரிடமும்  எந்த பற்றுதலும் இல்லை. எந்த வகையிலான இச்சைகளிலும்  மனதை செலுத்துவது இல்லை. தன் சொந்த உடலைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. ஆகவே அவரை மேன்மையான நிலையில் உள்ளவர் என பாராட்ட வேண்டும்.

(விளக்கம்: ஒரு மனிதரிடம் உள்ள இச்சை என்பது  மண் ஆசை, பெண் ஆசை, மற்றும் பொருளாசை போன்ற அனைத்திற்கும்  பொருந்தும் என்பதினால் அஷ்டவக்கரர்  கூறுகின்றார் ‘தன் சொந்த உடலை குறித்துக் கூட கவலைப்படாத ஞானிக்கு உடலோடு சம்மந்தப்பட்ட இச்சைகள் எங்கிருந்து  வரும்? உடலோடு சம்மந்தப்பட்ட இச்சைகள் இல்லாதவன் ஏன் மனைவி மற்றும் குழந்தைகளைக் குறித்து கவலைப்படுவான் ? அவன்தான் பட்டற்ற நிலையில் இருக்கிறானே!  மண் ஆசை, பெண் ஆசை, மற்றும் பொருளாசை போன்ற இச்சைகள்  எழுந்தால் மன எண்ணங்கள் வலுக்கும். மன எண்ணங்கள் வலுத்தால்  மனம் அலை பாயத் துவங்கும். மனம் அலை பாயத்  துவங்கினால் மாயையான உலக இன்ப துன்பங்களில் மூழ்கி விடுவான் என்பதினால் எவை எல்லாம் மனதில் சற்றே கலக்கம் தருமோ அவற்றை எல்லாம் முதலில் களைந்து எறிய வேண்டும். எனவே ஒரு ஞானி ஆக வேண்டும் என நினைப்பவர்  முதலில் அனைத்தையும் துறந்த, எந்த விதமான பற்றுகளும் அற்ற நிலையில் தன்னை மாற்றிக் கொள்ள  வேண்டும் என்பது ஆத்ம விழிப்புணர்வு பெறுவதற்கான அடிப்படை தத்துவம் ஆகும். அதனால்தான் குழந்தைகள், மனைவி மற்றும் வேறு பலர் என அனைவரிடமும் பற்று இன்றி எல்லா எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்ட ஞானி  பட்டற்று  இருக்கின்றான் என்பது மேன்மையான  நிலை அல்லவா’).

तुष्टिः सर्वत्र धीरस्य यथापतितवर्तिनः ।

स्वच्छन्दं चरतो देशान् यत्रस्तमितशायिनः ॥

18.85 ஞானி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும், விதிப்படி தனக்கு கிடைக்க வேண்டியதை  எடுத்துக் கொண்டு மன நிறைவுடன் இருப்பார். இருக்கும் இடம் பற்றிக் கவலை இல்லை என்பதினால் எங்கு சூரியன் மறைவாரோ அந்த  இடத்தில்  இரவில் தூங்குகிறார்.

(விளக்கம் : இங்கும்  அஷ்டவக்கரர்  என்ன கூறுகின்றார் எனில் ‘எதிர்ப்பார்ப்பு என்பதே ஆசைக்கான விதை ஆகும் என்பதினால், எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும்  எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக வாழப் பழக வேண்டும். விதிப்படி என்ன கிடைக்குமோ அதை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ வேண்டும் என்பவை  ஞான நிலைக்கு செல்லும் முதல் படிகளில் சில ஆகும்.  இங்கு எப்படி இருக்க முடியும், அங்கு எப்படி இருக்க முடியும் போன்ற  எதிர்பார்ப்புகளை எல்லாம் வைத்துக் கொண்டு  சிந்திக்கத் துவங்கினால் மன எண்ணங்கள் பெருகும். மனம் அலை பாயத் துவங்கி விடும்.  ஞான நிலைக்கான பாதையில் எப்படி நுழைய  முடியும்?  உடல் சுகத்தை துறக்க வேண்டும், நாக்கின் சுவையை அடக்க வேண்டும், மற்றும் இச்சைகளின் புலன்களை வெறுக்க   வேண்டும் போன்றவற்றை  எல்லாம் கடந்து வந்த நிலையில் உள்ள ஞானியே முழுமையான மன நிறைவோடு இருக்கின்றார். ஆத்ம மன நிறைவு அவருக்கு பரிபூரணமான  அமைதியை கொடுக்கின்றது ).

पततूहेतु वा देहो नास्य चिन्ता महात्मनः ।

स्वभावभूमिविश्रान्तिविस्मृताशेषसंसृतेः॥

18.86 நான் பரிபூரணமானவன், அழிவற்றவன், சுதந்திரமானவன், மாயை உலகோடு சம்மந்தம் இல்லாதவன் என்ற நிலையில் உள்ள ஞானிக்கு, பிறப்பு, மறு பிறப்பு குறித்தோ அல்லது ஜனன மரணம் குறித்தோ எந்த சிந்தனையும் எழுவது இல்லை.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி எனும் நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு  எப்படி இப்படிப்பட்ட  மன நிலைகள்  இருக்க முடியும். அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

अकिञ्चनः कामचारो निर्द्वन्द्वश्छिन्नसंशयः ।

असक्तः सर्वभावेषु केवलो रमते बुधः ॥

18.87  ஞானி தனிமையில் இருப்பதை விரும்புவார். எதன் மீதும் பற்று இன்றி, தன் விருப்பப்படி நடந்து கொள்பவர்.  இன்ப, துன்ப நிலைகள் அவருக்கில்லை. இரு நிலையிலான மனமும்  இல்லை. அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஞானியே உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி எனும் நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு  எப்படி இப்படிப்பட்ட  மன நிலைகள்  இருக்க முடியும். அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

निर्ममः शोभते धीरः समलोष्टाश्मकाञ्चनः ।

सुभिन्नहृदयग्रन्थिर्विनिर्धूतरजस्तमः ॥

18.88  என்னுடையது என்ற உணர்வு அற்றவர் ஞானி. இதயத்தின் முடிச்சுக்களை அவிழ்த்து விட்ட நிலையில்  உள்ள அவருக்கு மண்ணும், கல்லும், பொன்னும் வெவ்வெறானவை அல்ல.  அவருக்கு அறியாமை, பேரார்வம் போன்ற நிலைப்பாடுகள்    கிடையாது.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி எனும் நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு  எப்படி இப்படிப்பட்ட  மன நிலைகள்  இருக்க முடியும். அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

सर्वत्रानवधानस्य न किञ्चिद् वासना हृदि ।

मुक्तात्मनो वितृप्तस्य तुलना केन जायते ॥

18.89  எதன் மீதும் பற்று இல்லாதவனும், சற்றும்  மோகம் கூட இல்லாதவனும், ஆன்மாவின் பேரின்பத்தில் திருப்தியடைந்தவனுமாக  உள்ள ஜீவன் முக்தி பெற்ற ஞானிக்கு இணையாக யாரைக் கூற  முடியும்?

जानन्नपि न जानाति पश्यन्नपि न पश्यति ।

ब्रुवन्न् अपि न च ब्रूते कोऽन्यो निर्वासनादृते ॥

18.90 அனைத்தையும் அறிந்தும் அறியாமல் இருப்பவன், பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்காமல் இருப்பவன், மற்றும் பேசினாலும் பேசாமல்  உள்ளவர்  என்ற நிலையில் உள்ளவரே ஆசைகள் அனைத்தையும் துறந்த ஞானி ஆவார்.

(விளக்கம் : இந்த பெரும் தத்துவம் மூலம் அஷ்டவக்கரர் என்ன  கூறுகின்றார் என்றால் ‘பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்ற  புலன்களை, உடலோடு இணைந்துள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் போன்ற ஐம்பொறிகள் உணர்த்துகின்றன. ஆனால் ஒரு ஞானிக்கோ அவை எதுவுமே வேலை செய்வதில்லை. அதாவது உணர்ச்சிகள் அற்ற நிலையில் ஐம்பொறிகளும் அவருக்குள்  உள்ளன என்பதினால் அவர் பார்ப்பது போல தோன்றினாலும் உண்மையில் அவர் பார்ப்பது இல்லை, அனைத்தையும் அறிந்தவர் போல காட்சி அளித்தாலும் அது உண்மையா என்பது நமக்கு தெரிவதில்லை, எதை பேசினாலும் அவரது பதில் மௌன பாஷையிலேதான்  அல்லது பேசுபவை சாதாரண மக்களுக்கு எளிதில் புரியாத தத்துவார்த்தமாகவே இருக்கும் என்பதினால்  எதைக் கூறினாலும்  புரியாத நிலையிலேயே அவை இருக்கும்’).

भिक्षुर्वा भूपतिर्वापि यो निष्कामः स शोभते ।

भावेषु गलिता यस्य शोभनाशोभना मतिः ॥

18.91 ஆசைகள் அற்ற, பேரானந்த நிலையில் உள்ள ஞானி ஏழையாக இருக்கலாம் அரசனாகவே கூட இருக்கலாம். ஆனால்  அனைத்திலும் அவர்களது  பார்வை நன்மை தீமைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

(விளக்கம்: இதன்  மூலம் அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு எதை உணர்த்தினார்  என்றால் ‘விழிப்புணர்வு நிலை என்பது  ஏழ்மை நிலையில் உள்ள பிச்சைக்காரன் அல்லது அரசன் என்ற பேதம் பார்த்து வருவதில்லை. யாருக்கு இயற்கையாக அந்த உந்துதல் உள்ளதோ, யாருக்கு பிராரப்த கர்மா உள்ளதோ அவர்களால் மட்டுமே அந்த நிலையை எட்ட முடியும்.  அந்த பேரானந்த நிலைக்கு சென்று விட்டவர்கள் அனைத்திலுமே பரமாத்மா எனும் ஜீவாத்மா வியாபித்து உள்ளதைக் காண்பார்கள். எவற்றிலும் பற்று இல்லாத நிலையில் அவர்கள் இருப்பதினால்  உணர்ச்சி பூர்வமாக எதையும் பார்ப்பது இல்லை, கேட்பது இல்லை மற்றும் பேசுவதும்  இல்லை. மௌனிகளாகவே இருப்பார்கள்.  சம்சார சாகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் அந்த ஞானியின் பார்வை நன்மை தீமை போன்றவற்றுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். அவர்கள் எண்ணங்களினாலும், உணர்வுகளினாலும் சாதாரண மக்களுக்கும் மேலான நிலையில், தெய்வ சன்னிதானத்தில் உள்ள ஒருவர் போலவே இருப்பார்கள்’).

क्व स्वाच्छन्द्यं क्व सङ्कोचः क्व वा तत्त्वविनिश्चयः ।

निर्व्याजार्जवभूतस्य चरितार्थस्य योगिनः ॥

18.92  ஏற்கனவே வாழ்க்கையின் உச்ச கட்ட பேரானந்த நிலைக்கு சென்று விட்ட, வஞ்சகம் அற்ற நேர்மையின் சிகரமான ஞானிக்கு, எதன் மீது  ஆசை இருக்கும், என்ன சுயக் கட்டுப்பாடு தேவை, எந்த உண்மையை தேடி அவர் அலைய வேண்டும்?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘உச்ச கட்ட ஞான நிலையை அடைந்து விட்ட ஒருவர் தான் எனும் ஜீவாத்மாவுடன் கலந்த நிலையில் இருக்கின்றார். அவருக்கு அகந்தை இல்லை, மாயை இல்லை, இந்த உலகில்  செய்வதற்கும்  ஒன்றும் இல்லை எனும்போது அவருக்கு மேலும் என்ன தேவை இருக்க முடியும்? உணர்ச்சிகள் அற்ற மன நிலையில் உள்ள அவருக்கு எதன் மீது ஆசை இருக்க முடியும், என்ன சுயக் கட்டுப்பாடு தேவையாக இருக்கும்? எதன் மீதாவது இச்சை கொண்டிருந்தால் அல்லவா சுயக் கட்டுப்பாடு தேவை.  உச்ச கட்ட ஞான நிலை என்பதே மாபெரும் அறிவாற்றல் நிறைந்த நிலை என்பதினால் அந்த நிலையை அடைந்து விட்ட அவருக்கு இன்னும் எந்த உண்மையை தேடி அலையும் நிலைக்கான  அறிவாற்றல் தேவை?’).

आत्मविश्रान्तितृप्तेन निराशेन गतार्तिना ।

अन्तर्यदनुभूयेत तत् कथं कस्य कथ्यते ॥

18.93 அனைத்து பற்றுதல்களையும், எண்ணங்களையும் அழித்துக் கொண்டு விட்ட, இன்ப துன்பம் இல்லாத நிலையில் உள்ள ஞானியால்  அவரது உள் மனதில் எழும் ஆனந்த அனுபவத்தை, எந்த வகையிலான வார்த்தைகளால் விவரிக்க முடியும் ?

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘பேரானந்த நிலையான விழிப்புணர்விற்கு சென்று விட்ட ஞானியினால்   பேரானந்த நிலை, பேரானந்த நிலை என்று கூறுவதை  தவிர, அந்த பேரானந்த நிலை எப்படி இருக்கும்  என்பதை  எதனுடன் ஒப்பிட்டு, எந்த விதமான வார்த்தையினால் விளக்க முடியும்? அப்படி வார்த்தைகளினால் விளக்கத்   துவங்கினார்  என்றால் அவர் பேரானந்த நிலையை அடையவில்லை என்பது அர்த்தம் ஆகி விடும். காரணம் வார்த்தை ஜாலங்கள் எண்ண அலைகளினால் எழுபவை. எப்போது எண்ண அலைகளில் மிதக்கத் துவங்கி விடுவானோ அப்போதே அவனது ஐம்பொறிகளும் இயங்கத் துவங்கி, ஐம்புலன்களையும் எழுப்பி விடும். அந்த நிலை சாதாரண மானிடரின் நிலையை ஒத்து இருக்கும்’).

सुप्तोऽपि न सुषुप्तौ च स्वप्नेऽपि शयितो न च ।

जागरेऽपि न जागर्ति धीरस्तृप्तः पदे पदे ॥

18.94  ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல ஒரு ஞானி காட்சி அளித்தாலும், அவர்  உண்மையில் உறங்குவது இல்லை.  கனவில் கூட அவர் உறங்குவது இல்லை. அதே போல விழித்து இருந்தாலும்  உண்மையில் அவர் விழித்துக் கொண்டு இருக்கவில்லை.

(விளக்கம்: ‘ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல ஒரு ஞானி காட்சி அளித்தாலும், உண்மையில் அவர் உறங்கவில்லை’  என்று அஷ்டவக்கரர் கூறுவதில்  மூலம் அவரது வெளித் தோற்றத்தில் உள்ள உடல்தான் உறங்குகின்றது, அந்த உடலுக்குள் உள்ள ஜீவாத்மா எப்போதும் போல விழிப்புணர்வு நிலையில்தான் உள்ளது என்கின்றார். அவர்  உடல் உறங்கும்போதும், அந்த உடலில் உள்ள ஐம்புலன்கள் கனவு காணும் போதும் அந்த கனவிலும் கூட அவரது ஜீவாத்மா விழித்துக் கொண்டுதான் உள்ளது, உறக்கவில்லை. அதே போல ‘விழித்திருக்கின்றார்  என்றாலும் அவர்  உண்மையில் விழித்துக் கொண்டு இருக்கவில்லை’ என்பதின் மூலம் எல்லை  இல்லாத   ஆழ் நிலையில் உள்ள ஆத்மாவிற்கு  விழிப்பு ஏது, விழிப்பில்லாத நிலை ஏது என்று கேட்கின்றார். ஏன் என்றால் அந்த இரு நிலைகளும் அறியாமையினால் ஏற்படும் மன எண்ணங்கள் அல்லவா).

ज्ञः सचिन्तोऽपि निश्चिन्तः सेन्द्रियोऽपि निरिन्द्रियः ।

सुबुद्धिरपि निर्बुद्धिः साहङ्कारोऽनहङ्कृतिः ॥

18.95  அறிவாற்றல் மிக்க ஞானி யோஜனை செய்வதை   போல காட்சி அளித்தாலும் அவருக்குள் எந்த எண்ண ஓட்டங்களும் இருக்காது. அறிவற்றவர் போன்று தோன்றும், ஆனால் அது உண்மை அல்ல.  அகங்காரம் உள்ளவர் போல தோன்றினாலும் அதுவும் உண்மை அல்ல.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘முற்றும் துறந்த நிலையில் உள்ள ஞானியின் உடலில் ஐம்பொறிகளும் உள்ளன என்றாலும் அவை அடக்கி   ஒடுங்கிய நிலையில்தான் உள்ளன. அவர் உடலில் அவை இயந்திரம் போலத்தான் செயல்படுகின்றதே ஒழிய உணர்ச்சி பூர்வமாக இயங்கி கொண்டிருக்கவில்லை. சம்சார சாகரத்தில் அவர் ஒரு  மனிதராக உழன்று கொண்டிருந்தாலும்   அவர் நடமாடும் பிணம் போன்ற நிலையில்தான் இருப்பார். பிராரப்த கர்மாவின் வினைப் பயனினால் அவர் உடலின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன, அவை இன்ப துன்பங்களை எதிர் கொள்கின்றன.  ஆனால் அவற்றை இயக்குவது அவர் அல்ல, அவர் அதற்கு அப்பாற்பட்ட  நிலையில் சுதந்திரமாக உள்ளவர், அவற்றின் செயல்களினால் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல்தான் இருக்கின்றார். ஞானியின் ஆத்மா விழிப்புணர்வு நிலையில், எதனாலும் பாதிக்கப்படாமல் ஆனந்தமாக இருந்து கொண்டிருக்கின்றது’).

न सुखी न च वा दुःखी न विरक्तो न सङ्गवान् ।

न मुमुक्षुर्न वा मुक्ता न किञ्चिन्न च किञ्चन

18.96  ஞானி ஒருவருக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை, எதன் மீதும் பற்று இல்லை, பற்றில்லாமலும்  இல்லை, மன விடுதலை பெறவும் இல்லை, விடுதலைக்கு ஏங்கி கொண்டும் இல்லை. அவர் அவருமல்ல, வேறு எவரும் அல்ல.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவாக்கரர் மீண்டும் மீண்டும் என்ன கூறுகின்றார் என்றால்  ‘மேலே குறிப்பிட்டுள்ள  அனைத்து நிலைகளும் மன எண்ண ஓட்டங்கள் அடிப்படையில் எழுகின்றன. உடலை இயக்குவது   ஐம்பொறிகள்.  அதன் மூலம் எழும் ஐம்புலன்கள் மன ஓட்டங்களை எழுப்பி  அலை பாயும் மனதை தருகின்றன. அதனால்தான் இன்பம், துன்பம், பற்று மற்றும் பற்று இல்லாமை போன்ற வேறுபட்ட நிலைகளை ஐம்புலன்களின் இயக்கத்தினால் நம்மால் உணர முடிகின்றன.

ஆனால்  பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானியின் ஐம்புலன்களும் அவருக்குள் இருந்து அழிந்து விட்டன  என்பதினால் அவரால் எந்த உணர்வுகளையும் உணர முடியாது. அவரது உடல்தான் இயந்திரம் போல இயங்குமே தவிர பேரானந்த நிலையில் உள்ள அந்த ஞானி அவற்றை உணர்வதில்லை என்பதினால்தான்’அவர் அவருமல்ல, வேறு எவரும் அல்ல’ என்ற நிலையில் உள்ளவர். ஞானி   எப்போது ஜீவாத்மாவுடன் தன்னை இணைத்துக் கொண்டு விட்டாரோ அப்போது முதலே அவர்  எதையும் உணரும் நிலையில் இருப்பதில்லை).

विक्षेपेऽपि न विक्षिप्तः समाधौ न समाधिमान् ।

जाड्येऽपि न जडो धन्यः पाण्डित्येऽपि न पण्डितः ॥

18.97 குழப்ப நிலைகளிலும் ஞானியின் கவனம் சிதறுவதில்லை. அமைதியாக சமாதி நிலையில் இருந்தாலும் அவர் தியானத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டார். அறிவாற்றல் மிக்கவர் என்றாலும் அவர் கல்வி ஆற்றல் பெற்றவராக இருந்திருக்க  வேண்டிய அவசியம் இல்லை.

(விளக்கம் : மீண்டும் இந்த மிகப் பெரிய தத்துவத்தின் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறி உள்ளார் என்றால்   ‘பேரின்பம், ஆத்ம விடுதலை அல்லது ஞானம் என்று கூறப்படும் முக்தி அல்லது சமாதி  நிலை என்பது  நாம் வெளியுலகிலிருந்து முற்றிலும் விலகி, நமது அக உலகத்துடன் இணைந்திருக்கும் நிலை ஆகும்.  இந்த நிலையில்தான் ஒருவன் பேரின்ப நிலையை அடைகின்றான். அக உலகம் வேறு, வெளி உலகம் வேறு. வெளி உலகம் என்பது நம் கண்களுக்கு வெளியில் தெரியும் உலகம். வெளி உலகில் உள்ள எதையும் பார்ப்பதற்கு  ஒளி  தேவை. அக உலகில் நம் கண்களுக்கு தெரியும்  எந்த வெளிச்சத்தையும்   பார்க்க முடியாது, ஆனால் அங்குள்ள வெளிச்சமோ பிரகாசமானது, ஆத்ம ஞானம் பெற்றவர்களுக்கு மட்டுமே புலப்படும். அப்படிப்பட்ட  அந்த ஒளியைத்தான்  அகச் சுடர் அல்லது அகக் கண் என்பார்கள்.  அந்த அகக் கண் திறந்தால் பிரபஞ்சம் முழுவதும் தெரியும். அந்த நிலையில் உள்ளவரே ஞானி. அவர் உட்கார்ந்து இருந்தாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் அவர் மனம்  சமாதி நிலையில்தான் இருக்கும். அது ஒரு வகையிலான தியான நிலை என்பதினால் அவர் கண்களை மூடிக்கொண்டு செய்யப்படும் தியானத்தில் ஈடுபடத் தேவை இல்லை. அதனால்தான்  எத்தனை குழப்பங்கள் வந்தாலும் ஞானியின் கவனம் சிதறுவதில்லை’. இதனால்தான் முன்னர் ஒரு போதனையில் அஷ்டவக்கரர் விழிப்புணர்வு பெற்றவர் ஏழையாக  இருக்கலாம் அல்லது அரசனாகவே இருக்கலாம். விழிப்புணர்வு பெறும் பாக்கியம் இயற்கையாகவே  ஒருவருக்கு அமைந்திருக்கும். அது ஏழை அல்லது பணக்காரன் அல்லது அரசன் என்றெல்லாம் பேதம் பார்த்து வருவதில்லை என்ற கருத்தை கூறி உள்ளார்’).

मुक्तो यथास्थितिस्वस्थः कृतकर्तव्यनिर्वृतः ।

समः सर्वत्र वैतृष्ण्यान्न स्मरत्यकृतं कृतम्

18.98  ஞான நிலையை எட்டியவன் தன்னைத் தானே அடக்கிக் கொண்டவனாக  இருப்பான். அதனால்தான் அவனுக்கு அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவது இல்லை. எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அவன் அவனாகவேதான் இருப்பான். தான் என்ன செய்தோம் என்பதையோ அல்லது என்ன செய்யவில்லை என்பதையோ குறித்து அவன் சிந்திப்பதே இல்லை.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி எனும் நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு  எப்படி இப்படிப்பட்ட  மன நிலைகள்  இருக்க முடியும். அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

न प्रीयते वन्द्यमानो निन्द्यमानो न कुप्यति ।

नैवोद्विजति मरणे जीवने नाभिनन्दति ॥

18.99  ஞானியை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்  அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.  அவருக்கு மரண பயமும் இல்லை, களிப்பும் ஏற்படுவதில்லை.

(விளக்கம்:  மேல் கூறிய அனைத்துமே மன எண்ண அடைப்படையில் ஏற்படுபவை.  இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘முன்பே கூறியபடி தனது மனதை பூரணமாக அடக்கி, எண்ண அலைகளையும், ஐம்புலன்களையும் அழித்துக் கொண்டு சூன்ய  மனநிலையில்,   அமிர்தம் போன்ற விழிப்புணர்ச்சி நிலைக்கு சென்று, உலக பற்றே இல்லாமல் சமாதி நிலையில் வாழ்ந்து வரும்  ஞானியை  புகழ்ச்சியும், இகழ்ச்சியும், மரண பயமும் எவ்வாறு பாதிக்கும்?  அவர்தான் எதைக் குறித்தும் சிந்தனை செய்வதே இல்லையே’).

न धावति जनाकीर्णं नारण्यमुपशान्तधीः ।

यथातथा यत्रतत्र सम एवावतिष्ठते ॥

18.100 முற்றிலும் அமைதியான நிலையில் உள்ள ஞானி  தனிமையில் இருந்தாலும் சரி, பெரும் கூட்டத்தில் இருந்தாலும் சரி, அவரிடத்தில்  எந்த மாற்றத்தையும் காண முடியாது. அவர்  அவராகவேதான் இருப்பார்.

(விளக்கம் : இங்கும்  அஷ்டவக்கரர்  என்ன கூறுகின்றார் எனில் ‘ஆத்ம விடுதலை பெற்று விட்டவன் எந்த நிலையிலும்,  எங்கு இருந்தாலும் எந்த விதமான  மாற்றமும்  இல்லாமல் அமைதியாக, முழுமையான மன நிறைவோடு இருக்கின்றார் என்பதின் காரணம் அவருக்கு உலகின் மீதான எந்த பற்றும் கிடையாது. அவருக்கு வாழ்க்கை வசதிகள் தேவை இல்லை. காம, மோக இச்சைகள் இல்லை. வெறுப்பு, விருப்பு இல்லை, புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அவருக்கு ஒன்றேதான்.  அதனால்தான் யார் என்ன கூறினாலும் சரி, என்ன செய்தாலும் சரி,  அவை எதுவுமே அவரை பாதிப்பது இல்லை.   ஆத்ம மன நிறைவு  அவருக்கு பரிபூரணமான  அமைதியை கொடுக்கின்றது).

பத்தொன்பதாம்  அத்தியாயம்  

தனது பேரின்ப நிலைக் குறித்து ஜனகர்  கூறுகின்றார்

तत्त्वविज्ञानसन्दंशमादाय हृदयोदरात् ।

नानाविधपरामर्शशल्योद्धारः कृतो मया ॥

19.1  உண்மையான போதனைகள் மூலம் என்னுள்  ஆழமாக அமர்ந்திருந்த பல்வேறு சந்தேகங்கள் மற்றும் விவாதப் பொருட்களை,  குறடு மூலம் முள்ளை பிடுங்கி எறிவதை போல, இதயத்தில் இருந்து அகற்றிக் கொண்டு விட்டேன்

{விளக்கம்: இதை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகவே தெரியும்.  ஆனால் ‘பல்வேறு சந்தேகங்கள் மற்றும் விவாதப் பொருட்கள்’  என்பதை ஆழமாகப் பார்த்தால் அவை பல்வேறு சாதகர்களுக்கு, பல்வேறு கால கட்டத்தில், பல்வேறு குருமார்களால் கொடுக்கப்பட்ட போதனைகளின் சாரத்தை  சுட்டிக் காட்டுவது புரியும்.  போதனைகளின் சாரம் என்பது ஆன்மீக விழிப்புணர்வை நோக்கிச் செல்லும்  பாதையைக் காட்டுகின்றது. இந்த நாட்டில் பல்வேறு குருமார்கள் இருந்துள்ளார்கள், மேலும் குருமார்கள் தோன்றிக் கொண்டே உள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய கண்ணோட்டத்தில் ஆன்மீக போதனைகளை கொடுப்பார்கள். அவர்கள் காட்டும் பாதை அல்லது வழிமுறைகள் வேறு வேறாக இருக்கலாம்,   அவற்றில் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டது போலத் தோன்றலாம், ஆனால் முடிவில் அனைத்துமே சென்று அடைவது அழிவற்ற, எல்லை இல்லாத, நிலையான ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவுடன் ஒன்றிணையும் நிலைதான்.  அஷ்டவக்கரர் கொடுத்த உண்மையான விளக்கத்தைக் கேட்ட பின்,  பல்வேறு விவாதங்களினால் அவரது (ஜனகரின்) மனதில் அதுவரை ஆழமாகப் பதிந்து இருந்த  சந்தேகங்களையும், விவாதப் பொருட்களையும் தன் மனதில்  இருந்து அழித்துக் கொண்டு  விட்டதாக ஜனகர் கூறுகின்றார்}.

क्व धर्मः क्व च वा कामः क्व चार्थः क्व विवेकिता ।

क्व द्वैतं क्व च वाऽद्वैतं स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.2   பேரானந்த  நிலையில் மூழ்கி விட்ட  என் மனதில் இருந்து  மத பேதங்கள், மோகங்கள்,  பொருட்கள் மீதான நாட்டங்கள்,  செல்வத்தின் மீதான நாட்டங்கள், மனசாட்சி மற்றும் இருமை நிலை என்பதெல்லாம்  முற்றிலும் அழிந்து விட்டன.

(விளக்கம்: இதன் மூலம் ‘அஷ்டவக்கரரின் போதனைகளில் பேரின்ப நிலைக்கு சென்று விட்ட தன்னுள் அதுவரை இருந்த உலக பற்றுதல்கள், தவறான எண்ணங்கள் போன்றவை  அனைத்தும் அழிந்து விட்டதாகவும்,   தான் ஞான நிலையை எட்டி விட்டதாக   ஜனகர் கூறுகின்றார்).

क्व भूतं क्व भविष्यद् वा वर्तमानमपि क्व वा ।

क्व देशः क्व च वा नित्यं स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.3  பேரானந்த  நிலையில் மூழ்கி விட்ட என்னுள் இருந்து  முற்கால, தற்கால மற்றும் பிற்கால நிகழ்வுகளும், பிரபஞ்சத்தின் நினைவுகளும் முற்றிலும் அழிந்து விட்டன.

(விளக்கம்: ‘அஷ்டவக்கரரின் போதனைகளினால் பேரின்ப நிலைக்கு சென்று விட்ட தன்னுள் அதுவரை இருந்த முற்கால, தற்கால மற்றும் பிற்கால நிகழ்வுகளும், பிரபஞ்சத்தின் நினைவுகளும்  அழிந்து விட்டதினால், தான் ஞான நிலையை எட்டி விட்டதாக  ஜனகர் கூறுகின்றார்).

क्व चात्मा क्व च वानात्मा क्व शुभं क्वाशुभं यथा ।

क्व चिन्ता क्व च वाचिन्ता स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.4  பேரானந்த  நிலையில் மூழ்கி விட்ட என்னுள்  இருந்து நன்மை, தீமை, நான், நானில்லை, குழப்பம், மனத் தெளிவு போன்ற அனைத்து நிலைகளும் அழிந்து போய் விட்டன.

क्व स्वप्नः क्व सुषुप्तिर्वा क्व च जागरणं तथा ।

क्व तुरीयं भयं वापि स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.5  பேரானந்த  நிலையில் மூழ்கி விட்ட என்னுள் பயம் இல்லை, உறக்கம் இல்லை, விழிப்பு இல்லை மற்றும் கனவுகளும் இல்லை. அத்தனை ஏன் நான்காம் நிலை கூட இல்லை.

(விளக்கம் : ஒரு மனிதனுக்கு நான்கு நிலைகள் உள்ளன. அதில் முதலாவது விழிப்பதற்கும் உறங்குவதற்கும் இடையிலான இடைநிலை நிலை, இரண்டாவது  தூங்குவதற்கும் விழிப்பதற்கும் இடையிலான இடைநிலை நிலை, மூன்றாவதாக தெளிவான கனவு காணும் நிலை மற்றும் நான்காவது உடலுக்கு வெளியே கிடைக்கும் அனுபவம் அதாவது உடலுக்கு வெளியே ஒரு இடத்தில் இருந்து உலகத்தை உணரும் நிலை. அஷ்டவக்கரரின் போதனையினால், தான் அந்த நான்காவது நிலைக்குள் நுழையாமல் நேரடியாக பேரானந்த நிலையை அடைந்து விட்டதாக ஜனகர் கூறுகின்றார்).

क्व दूरं क्व समीपं वा बाह्यं क्वाभ्यन्तरं क्व वा ।

क्व स्थूलं क्व च वा सूक्ष्मं स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.6 பேரானந்த நிலையில் மூழ்கி விட்ட நான் எதுவும் தொலைவிலோ அல்லது அருகிலோ  உள்ளது போல  உணரவில்லை. என் உள்ளத்திலும்  ஒன்றும் இல்லை, இல்லாமலும் இல்லை. என்னைப் பொறுத்தவரை எதுவுமே பெரியது  அல்ல, சிறியதும் இல்லை. என்னுள் இருந்த இரு நிலைப்பாடு அழிந்து விட்டது.

(விளக்கம்: மேற்கூறிய இரு நிலைப்பாடு அனைத்துமே ஒன்றுக்கு எதிரான இன்னொன்று ஆகும். அஷ்டவக்கரரின் போதனைகளினால் மேல்  கூறிய இரு நிலை வேறுபாடுகள் அனைத்துமே அறியாமையினால் எழும் மனதின் எண்ண அலைகளினால் மட்டுமே அளவிடப்படுகின்றன அல்லது ஆராயப்படுகின்றன என்பதாக ஜனகருக்கு  புரிந்தது. பேரின்ப நிலைக்கு சென்று விட்ட பின் அதுவரை அவருக்கு இருந்த இருநிலை வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து விட உண்மை நிலையை  புரிந்து கொண்டார். அவற்றின் அடிப்படையில்தான்  அதுவரை தனக்கு இருந்த உலக பற்றுதல்கள் அனைத்தும் அழிந்து விட்டதாகவும்   தான் ஞான நிலையை எட்டி விட்டதாகவும் மீண்டும் ஜனகர் கூறினார்).

क्व मृत्युर्जीवितं वा क्व लोकाः क्वास्य क्व लौकिकम् ।

क्व लयः क्व समाधिर्वा स्वमहिम्नि स्थितस्य मे ॥

19.7  பேரானந்த  நிலையில் மூழ்கி விட்ட எனக்கு  ஜனனமும் மரணமும் எங்கிருக்கும்?  மாயையான உலகமும் அதோடு இணைந்த உலக பந்தங்களும், முன்னர் இருந்த  முழுமையான கவனமும், கவனச் சிதறல்களும்  எங்கிருக்கும் ?

(விளக்கம்: ‘அஷ்டவக்கரரின் போதனைகளினால் பேரின்ப நிலைக்கு சென்று விட்ட தன்னுள் அதுவரை இருந்த உலக பற்றுதல்கள், உலக நினைவுகள் அனைத்தும் அழிந்து விட்டதாகவும்   தான் ஞான நிலையை எட்டி விட்டதாகவும்  ஜனகர் கூறுகின்றார்).

अलं त्रिवर्गकथया योगस्य कथयाप्यलम् ।

अलं विज्ञानकथया विश्रान्तस्य ममात्मनि ॥

19.8  ஏற்கனவே பேரானந்த நிலையில் உள்ள எனக்கு அறம், பொருள், இன்பம் என்கின்ற மூன்று நிலைகளும் இல்லை.  தியானம் மற்றும் யோகா போன்ற சாதனாக்களை குறித்து என்னிடம் பேசுவது அர்த்தம் அற்றது. உண்மையை அறிவது (விழிப்புணர்வை பெறுவது) என்ன என்பதைக் குறித்துப் பேசுவதும் அர்த்தம் அற்றது.

இருபதாம்  அத்தியாயம்  

ஜனகர் தனது பேரானந்த நிலையைக் குறித்து தொடர்ந்து கூறலானார்

 

क्व भूतानि क्व देहो वा क्वेन्द्रियाणि क्व वा मनः ।

क्व शून्यं क्व च नैराश्यं मत्स्वरूपे निरञ्जने ॥

20.1 நான் அப்பழுக்கற்ற பேரானந்த நிலையில்  உள்ளேன் எனும்போது  ஐம் பூதங்களான வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம்  என்பவையும், மனம், வெற்றிடம், விரக்தி, உடல் அதன் பாகங்களின் இயக்கம் போன்றவை  எனக்குள்  எங்கே இயங்கும்?

(விளக்கம்: ‘உலகின் மீதான அனைத்து பற்றுதல்களையும் விலக்கிக் கொண்டால்தான் பேரானந்த நிலையான விழிப்புணர்ச்சி நிலையை அடைய முடியும்.  அனைத்து பற்றுதல்களையும் விலக்கிக் கொண்ட நிலை  என்பது உடலின் மீதான எண்ணங்களையும் ஆசைகளையும் கூட விலக்கிக் கொள்வதுதான். அப்படி அனைத்தையும் விலக்கிக் கொண்டு பட்டற்ற நிலைக்கு சென்று விடுபவனின் மனது   சூன்ய நிலையில் இருக்கும். அந்த சூன்ய நிலையில் உள்ளவனது  ஐம்புலன்கள்  எங்கே இயங்கும்? ஐந்து பூதங்களின் தாக்கம் எங்கிருந்து இருக்கும்?  உலக வாழ்வில் இருக்கும் அவனது உடல் மரணம் அடையும்வரை ஐம்புலன்களும், ஐம்பூதங்களும் அவனது உடலில் ஒரு இயந்திரம் போலவே இயங்கி கொண்டு இருக்கும். ஆனால் அவனை அவை எந்த நிலையிலும் பாதிப்பது இல்லை. அதாவது அவன் இருந்தும் இறந்தவன் என்ற நிலையில், செயலற்று இருக்கின்றான். அதுவே அவன் உள்ள பேரானந்த விழிப்புணர்வு நிலை’. நான் அப்பழுக்கற்ற பேரானந்த நிலையில்  உள்ளேன்  என்று கூறும் ஜனகரின் சுய ஒப்புதல் வாக்கு மூலமே  இவை அனைத்தும் ).

क्व शास्त्रं क्वात्मविज्ञानं क्व वा निर्विषयं मनः ।

क्व तृप्तिः क्व वितृष्णात्वं गतद्वन्द्वस्य मे सदा ॥

20.2  ஏற்கனவே ஆத்ம விடுதலை அடைந்து விட்டவன் நான் என்பதினால் சாஸ்திரங்களைப் படிப்பது, சுய அறிவாற்றல் பெறுவது போன்ற எதுவுமே எனக்கு தேவை இல்லை. நான்தான் இருமை நிலையில் இருந்து வெளி வந்து விட்டவன் ஆயிற்றே. 

(விளக்கம் : இதன் மூலம் ஜனகர் என்ன தன்னிலை விளக்கம் அளித்தார் என்றால்  ‘எவன் ஒருவன் ஏற்கனவே ஆத்ம விடுதலை அடைந்து விட்டானோ அவன்  எதற்கு  மீண்டும் ஆத்ம விடுதலை பெறும் வழிமுறைகளைக் கூறும் வேத புத்தகங்களின் உதவியை நாடி, தியானம், யோகா போன்ற  சாதனாக்களை செய்ய வேண்டும்?  அறிவாற்றலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்?   மன நிறைவை தரும் ஆத்ம  விடுதலை அடைய தேவையான  மனதை வெல்வது, மனதை அடக்கி வைப்பது, ஆசைகளை நீக்குவது போன்ற  சாதனங்களை எதற்காக செய்ய வேண்டும்?’).

क्व विद्या क्व च वाविद्या क्वाहं क्वेदं मम क्व वा ।

क्व बन्ध क्व च वा मोक्षः स्वरूपस्य क्व रूपिता ॥

20.3 நான் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, தனித்துவமான பேரானந்த நிலையில் நிற்பதினால்  அறிவாற்றல், அறியாமைநான், இது, என்னுடையது, அடிமைத்தனம், ஆத்ம விடுதலை போன்ற எந்த எண்ணங்களும் எனக்குள் எழ முடியாது.  

{விளக்கம்: ‘ஏற்கனவே குருவின் (அஷ்டவக்கரரின்) போதனைகள் மூலம்  தனித்துவமான நிலையில்  அதாவது ஜீவன் முக்தியை  பெற்று விட்ட நிலையில்,  மீண்டும் எங்கிருந்து மன எண்ணங்களின் அடிப்படையில் எழும் அறிவு, அறியாமை, நான், இது, என்னுடையது, அடிமைத்தனம், ஆத்ம விடுதலை போன்ற தாக்கங்கள் தமக்கு எழும்’ என்று ஜனகர் கேட்கின்றார். ‘மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, தனித்துவமான பேரானந்த நிலையில் நிற்பதினால்’  என்று கூறியதின் மூலம் தான் விழிப்புணர்வு பெற்ற நிலையை அடைந்து விட்ட நிலையைக்  குறிப்பிடுகின்றார்}.

क्व प्रारब्धानि कर्माणि जीवन्मुक्तिरपि क्व वा ।

क्व तद् विदेहकैवल्यं निर्विशेषस्य सर्वदा ॥

20.4 தனிப்பட்ட குணாதிசயங்களிலிருந்து விடுபட்டு, வாழும் பொழுதே  ஜீவன் முக்தி நிலையில் உள்ளவனுக்கு, பிராரப்த  கர்ம வினைப் பலன்களோ, ஆத்ம விடுதலையோ அல்லது மரணத்தின் மூலம் முக்தி போன்ற நிலைகளோ  எதுவுமே கிடையாது.

{விளக்கம் : ஜனகர்  ‘ஏற்கனவே குருவின் (அஷ்டவக்கரரின்) போதனைகள் மூலம்,   மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, தனித்துவமான நிலையில்  நிற்கும்  தனக்கு,  அதாவது ஜீவன் முக்தி எனும் ஆத்ம விடுதலை பெற்று விட்டவருக்கு  மீண்டும் எங்கிருந்து அறியாமை எனும் நிலையில், மன எண்ணங்களின் அடிப்படையில் எழும் மேலே கூறிய நிலைகள் வர முடியும்’ என்று கேட்கின்றார். ஜீவன் முக்தி என்பது இந்து தத்துவத்தின்படி, உயிருடன் இருக்கும் போதே ஆன்மீக ரீதிகளில் மன விடுதலை பெற்ற நிலை ஆகும்}.

क्व कर्ता क्व च वा भोक्ता निष्क्रियं स्फुरणं क्व वा ।

क्वापरोक्षं फलं वा क्व निःस्वभावस्य मे सदा ॥

20.5 தனித்துவ நிலையில் நிற்கும் நான் எந்த செயலையும் செய்வதில்லை, அதன் பலனை அனுபவிப்பவனும் அல்ல. எண்ணங்களின் மூலமும் தெரியாது, முடிவும் தெரியாது என்பதினால் இன்னும் எங்கிருந்து அறிவாற்றல் பெற இயலும்

(விளக்கம்: ‘ஏற்கனவே குருவின் (அஷ்டவக்கரரின்) போதனைகள் மூலம்   மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, தனித்துவமான நிலையில் நிற்கும், விழிப்புணர்வு பெற்றவன்’  என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கும்  ஜனகர்  ‘தான் ஜீவன் முக்தி எனும் ஆத்ம விடுதலை பெற்று விட்டதினால், எண்ண அலைகளினாலும், ஐம்புலன்களினாலும்  இயக்கப்படும் எந்த செயல்களிலும் ஈடுபடுவதில்லை, தனக்குள் எந்த சிந்தனைகளும் எழ முடியாது,  சுய அறிவாற்றல் உள்ள தான்  வேறு எங்கிருந்தும் அறிவாற்றல் பெறும் நிலையில் இல்லை’ என்பதாக கூறுகின்றார்.

क्व लोकं क्व मुमुक्षुर्वा क्व योगी ज्ञानवान् क्व वा ।

क्व बद्धः क्व च वा मुक्तः स्वस्वरूपेऽहमद्वये ॥

20.6  இரட்டை நிலைப்பாடு அற்று  தனித்துவ நிலையில் நிற்கும்  என் முன் உலகம் எங்கே உள்ளது? மன விடுதலை தேடுபவர் யார்? சிந்தனை நிறைந்த மற்றும் அறிவாற்றல் மிக்கவன் எங்கே? அறியாமையில் உழன்றவன் எங்கே, ஆத்ம விடுதலை பெற்றவன் எங்கே

(விளக்கம்: ஜனகர் என்ன கேட்கின்றார் என்றால் ‘விழிப்புணர்வு  பெறுவதற்கு  முன் மேலே கூறிய அனைத்து நிலைகளிலும் இருந்தவன் தான் என்றாலும், பின்னர் குருவின் போதனைகள் மூலம் விழிப்புணர்வு பெற்று விட்ட நிலையில்  சென்று விட்ட தனக்கு முந்தைய  வாழ்க்கையின் நிலைகள் அனைத்தும் அர்த்தமற்றவைகள் ஆகிவிட்டன என்றும், உலகத்தின் மீதான பற்றுதல்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டால்தானே ஆத்ம விடுதலை பெறும் மார்கத்தை அடைய முடியும் என்பதினால் அனைத்து பற்றுதல்களையும் தன்னுள் இருந்து அழித்துக் கொண்டு விட்டவனுக்கு மீண்டும் அறியாமை எங்கிருந்து  தோன்றும் ? மாயை உலகை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?’).

क्व सृष्टिः क्व च संहारः क्व साध्यं क्व च साधनम् ।

क्व साधकः क्व सिद्धिर्वा स्वस्वरूपेऽहमद्वये ॥

20.7  நான் எந்த  இருமை   நிலையிலும்  இல்லை. எனக்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை, எந்த இலக்கையும் அடைய ஆசையும் இல்லை, அவற்றுக்கான வழி முறைகளையும் தேடவில்லை.  நான் நானாகவே இருக்கின்றேன்.   

(விளக்கம்: அஷ்டவக்கரரின் போதனைகள் மூலம் விழிப்புணர்வு பெற்று விட்டவன்  தான்   என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறும் ஜனக மன்னன், சுதந்திரமான, தனிமையிலான,  ஜீவாத்மாவின் உண்மையான  தன்மை எப்படிப்பட்டதாக உள்ளது என்பதை மேற் கூறிய கருத்து மூலம் தெரிவிக்கின்றார். மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்துமே ஜீவாத்மாவைக் குறித்து கூறியவை ஆகும். பரமாத்மாவின் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றி யுக யுகமாக மறைகின்றது, அதே பிரபஞ்சம் புதுப் பொலிவோடு  யுக யுகமாக மீண்டும் தோன்றுகின்றது  என்பதையே  எனக்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை என்பதாக தத்துவார்த்தமாக கூறுகின்றார்.  இன்னொன்றையும் மேல் கூறிய கருத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.  ‘நான் எந்த  இருமை   நிலையிலும்  இல்லை. எனக்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை, எந்த இலக்கையும் அடைய ஆசையும் இல்லை, வழி முறைகளையும் தேடவில்லை.  நான் நானாகவே இருக்கின்றேன்’ என்ற அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும்.  ஆகவே அப்படிப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்து நிற்கும் தான் பேரானந்த நிலையில் உள்ளதாக கூறுகின்றார்).

क्व प्रमाता प्रमाणं वा क्व प्रमेयं क्व च प्रमा ।

क्व किञ्चित् क्व न किञ्चिद् वा सर्वदा विमलस्य मे ॥

20.8 அறிவாற்றல் மிக்கவர் யார், அறிவாற்றல் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? அவை எங்கே உள்ளது? அறிவின் பொருள் என்ன? எது ‘அனைத்தும்’ என்பது,  எது ‘எதுவும் இல்லை’ என்பது?

(விளக்கம்: அஷ்டவக்கரரின் போதனைகள் மூலம் விழிப்புணர்வு பெற்று விட்டவன்  தான்  என்றாலும், விழிப்புணர்வு நிலைக்கு செல்லும் முன் தன்னைப் போன்ற சாதகர்களுக்கும்  தனக்கும் இருந்த கேள்விகளின் சாரமே மேலே கூறியவை என்றும்,   மன எண்ண அலைகளினால் எழுந்த கேள்விகள்  அவை என்றாலும், அவற்றை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தபோதுதான் மெல்ல மெல்ல தான் யார் என்பதை உணரத்  துவங்கி, விழிப்புணர்வு பெற்றதாகவும் கூறியவர், தற்போது அந்த கேள்விகள் அனைத்தும் தனக்கு அர்த்தமற்றவைகளாகி விட்டன என்கின்றார்).

क्व विक्षेपः क्व चैकाग्र्यं क्व निर्बोधः क्व मूढता ।

क्व हर्षः क्व विषादो वा सर्वदा निष्क्रियस्य मे ॥

20.9 பட்டற்ற நிலையில் உள்ள நான், உருவமற்ற ஜீவாத்மாவோடு ஐக்கியம் ஆகி விட்டேன் என்பதினால் முழு கவன நிலையோ, கவனச் சிதறல்களோ, மந்தத் தன்மையோ, மாயையான எண்ணங்களோ, இன்ப துன்பங்களோ எனக்குள் எப்படி வர முடியும்?

(விளக்கம்: ‘உடலில் உள்ள இந்திரியங்களினால் எழும் செயல்பாடுகளே மேலே கூறிய அனைத்து செயல்களும். அவை மன எண்ண ஓட்டங்களினால்  ஏற்படுபவை.  அவை  அனைத்தையும் அழித்துக் கொண்டு, பற்றில்லா  நிலைக்கு சென்று, அங்கிருந்து  பேரானந்த நிலைக்கு சென்று விட்ட தன்னுள் மீண்டும் எப்படி அந்த செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பதாக ஜனகர் கேட்டார்).

क्व चैष व्यवहारो वा क्व च सा परमार्थता ।

क्व सुखं क्व च वा दुखं निर्विमर्शस्य मे सदा ॥

20.10 எண்ணங்கள் அனைத்துமே அழிந்து விட்ட நிலையில் உள்ள எனக்கு என்ன செயல்பாடு இருக்க முடியும்? நான்  விவாதங்களுக்கு அப்பாற்பட்டவன். என்னிடத்தில் உண்மை அல்லது உண்மை இல்லாத நிலை  என்பதெல்லாம் கிடையாது மற்றும் துயரமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.

क्व माया क्व च संसारः क्व प्रीतिर्विरतिः क्व वा ।

क्व जीवः क्व च तद्ब्रह्म सर्वदा विमलस्य मे ॥

20.11 அறியாமை என்பது என்ன? பிரபஞ்சத்தின் தோற்றம் என்பது என்ன? பற்றுதல் என்பது என்ன? பற்றுதல் இல்லாத நிலை என்பது என்ன? ஜீவாத்மா மற்றும் பிரும்மன் என்பதெல்லாம் என்ன? அவற்றை எல்லாம் கடந்த பேரானந்த நிலையில் உள்ளவன் நான்.

(விளக்கம்: ‘உடலில் உள்ள இந்திரியங்களினால் எழும் செயல்பாடுகளே மேலே கூறிய அனைத்து செயல்களும். அவை மன எண்ண  ஓட்டங்களினால்  ஏற்படுபவை. ஆனால்   அனைத்தையும் துறந்து, பற்றில்லா  நிலையில் சென்று, அங்கிருந்து  பேரானந்த நிலைக்கு சென்று விட்ட எனக்குள்  மீண்டும் எப்படி அந்த செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பதாக ஜனகர் கேட்டார்).

क्व प्रवृत्तिर्निर्वृत्तिर्वा क्व मुक्तिः क्व च बन्धनम् ।

कूटस्थनिर्विभागस्य स्वस्थस्य मम सर्वदा ॥

20.12 நானே பிரும்மன் என்ற   நிலையில்  சென்று விட்டதினால் எனக்குள் எங்கிருந்து  செயல்படும்  மற்றும் செயலற்ற தன்மை  இருக்கும்?   மன எழுச்சியினால் எழும் அறியாமை மற்றும் ஆத்ம விடுதலை எங்கே இருக்கும்?

(விளக்கம்: ‘உடலில் உள்ள இந்திரியங்களினால் எழும் செயல்பாடுகளே மேலே கூறிய அனைத்து செயல்களும். அவை மன எண்ண  ஓட்டங்களினால்  ஏற்படுபவை. ஆனால்   அனைத்தையும் துறந்து, பற்றில்லா  நிலையில் சென்று, அங்கிருந்து  பேரானந்த நிலைக்கு சென்று விட்ட எனக்குள்  மீண்டும் எப்படி அந்த செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பதாக ஜனகர் கேட்டார்).

क्वोपदेशः क्व वा शास्त्रं क्व शिष्यः क्व च वा गुरुः ।

क्व चास्ति पुरुषार्थो वा निरुपाधेः शिवस्य मे ॥

20.13  எந்த எல்லையும் இல்லாத, பேரானந்த நிலையில் உள்ள நான் அறிந்து கொள்ள வேத புத்தகங்களில் பிரகடனங்கள் அல்லது தடைகள்  எப்படி இருக்க முடியும்? எனக்கு யார் சீடன், யார் ஆசானாக இருக்க முடியும்?  வாழ்க்கையின்  எந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கும்?

क्व चास्ति क्व च वा नास्ति क्वास्ति चैकं क्व च द्वयम् ।

बहुनात्र किमुक्तेन किञ्चिन्नोत्तिष्ठते मम ॥

20.14 வாழ்வது என்பதென்ன, வாழ்வற்ற  நிலை என்பதென்ன என்பதை பற்றி எனக்கென்ன கவலை? ஒற்றுமை அல்லது வேற்றுமை எனும் இருமை நிலை  எனக்கு எங்கே இருக்கும்?  இதற்கு மேல் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை, ஏன் என்றால் என்னிடத்தில் இருந்து எதுவும் வெளி வருவதில்லை.

(விளக்கம் : இதன் மூலம் ஜனகர் என்ன கூறினார் என்றால் ‘நான்  முழுமையானவன், எதிலும் பற்று இல்லாதவன், சுதந்திரமானவன் மற்றும் அழிவற்றவன்  என்ற நிலைக்கு எப்போது சென்று விட்டேனோ அப்போது முதல் எனக்கும் மன எண்ண ஓட்டங்களினால் எழும் புலன்களின் உணர்ச்சிகளுக்கும், உடலை இயக்கும்  ஐம்பொறிகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கும், மாயையான உலக பந்தங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நான் ஒரு ஜடமான உடலில் குடி இருக்கின்றேன். அந்த உடல் அழியும்வரை நானும் அங்கிருப்பேன். நான் என்ற எனக்கும் அந்த உடலுக்கும், அந்த உடலின் இயக்கங்களுக்கும் எந்த விதத்திலுமான சம்மந்தமும் கிடையாது. மானிட வாழ்க்கையில் உள்ளவரை நான் உயிரற்ற, ஜடமான நிலையில், உணர்ச்சிகள் அற்ற ஒரு நடை பிணம்தான்’).

 

–அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு செய்த உபதேசமும், ஜனக மன்னன்  கொடுத்த தன்னிலை விளக்கமும்  முடிவுற்றது

 

                                            **********************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூலாசிரியர்

1945 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இந்த நூலாசிரியர் கல்வி பெற்றதும் வளர்ந்ததும் சென்னையில்தான். அச்சுக் கலை   கல்வி  பயின்ற இவர் முதலில் பணியில்  சேர்ந்த இடம் பெங்களூரு. அதன் பின் டெல்லி, மும்பை மற்றும் தேவாஸ் போன்ற இடங்களில் பணி  புரிந்தார். மத்திய அரசின் நிதித்துறையின், பொருளாதார பிரிவின் கீழ் இருந்த காகித நாணயம் அச்சடிக்கும் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணி   புரிந்த பின்   2005 ஆம் ஆண்டு ஒய்வு பெற்று  மீண்டும் பெங்களூருக்கே வந்து குடி அமர்ந்தார். ஒய்வு நேரத்தில் பொழுது போக்காக சாந்திப்பிரியா எனும் பெயரில் எழுதத்  துவங்கியவர் ஆயிரக்கணக்கான ஆன்மீக கட்டுரைகளை எழுதி தனது இணையதளமான https://pages.santhipriya.com என்பதில் வெளியிட்டார். அதை போல  அச்சுக்கலை பயிலும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்க https://printing.santhipriya.com  என்ற இணைய தளத்திலும் பல கட்டுரைகளையும் கேள்வி பதில்களையும்  எழுதி வெளியிட்டு உள்ளார். குலதெய்வ தோற்றம், அவற்றின் வரலாறு மற்றும் ரகுவம்சம், தத்தாத்திரேயர்  சரித்திர பாராயண நூல், திருப்பதி வெங்கடாசலபதி  சரித்திர பாராயண நூல்கள் போன்றவை  பெரும் வரவேற்பை பெற்று உள்ளன. அவற்றை தவிர சில ஆன்மீக மையங்களுக்கும் ஆலயங்களுக்கும்  அவர்களது மகான்கள் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி தந்துள்ளார்.