எழுதியவர்

சாந்திப்பிரியா

(nrj1945@gmail.com  and   https://santhipriya.com/  )

சிறு முன்னுரை

நாம் அனைவரும் பகவத் கீதை என்பதையே கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் அதைப் போலவே  அஷ்டவக்கர கீதை எனப்படும் நூலும் உள்ளது. அந்த கீதை குறித்து பலருக்கும் தெரியாது. அஷ்டவக்கர கீதை என்பது வேத காலத்தில் எழுதப்பட்டு உள்ள சமிஸ்கிருத நூல் என்கின்றார்கள். இதை எழுதியவர்  அஷ்டவக்கரர் என்ற முனிவர் என்று கூறுகிறார்கள். இன்னொரு கூற்றின்படி இந்த நூல் அஷ்டவக்கரர் எனும்  முனிவர்  மிதிலையின் மன்னனான ஜனக மகாராஜருக்கு அருளிய  ஞான உரை என்று கூறுகிறார்கள்.

யோக தத்துவத்தின்படி பிரபஞ்சத்தையே இரண்டாக பிரிக்கிறார்கள். முதலாவது மாயா எனும் மாயை. இரண்டாவது நான் எனும் உண்மை. மாறக்கூடிய அனைத்துமே மாயை என்பதினால் பரமாத்மாவிடம் இருந்து தோன்றிய பிரபஞ்சம் எனும் உலகமே மாயை என்பதாகவும், பிரபஞ்சத்தை படைத்த பரமாத்மா எனும் ஜீவாத்மா என்றும் நிலையானது, சுதந்திரமானது, தனிமையானது, அழிவற்றது, பிறப்பு இறப்பு நிலைகள் அதற்கில்லை, பேரானந்த நிலையை தரக் கூடியதே அந்த நிலை என்பதாகவும் கூறுகின்றார்கள். இதை பிரதிபலிப்பதே அஷ்டவக்கர கீதை என்பதாகும்.

அஷ்டவக்கரரை  போலவே ஜனக மன்னனுக்கு யக்யவல்க்கிய  முனிவரும் உபதேசம் செய்ததாக கதையும் உண்டு. அது குறித்து பிருஹதாரண்யக உபநிஷத்தில் காணப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஆத்மாவைப் பற்றி கூறப்பட்டு உள்ளது   என்பதினால் யக்யவல்க்கியர் ஜனக மஹாராஜாவுக்கு  போதனை செய்த ஆத்மன் எனும் பரமார்த்த (ஜீவாத்மா) தத்துவம்  விவரமாக விளக்கிச் சொல்லப்பட்டு உள்ளதாம்.  யக்யவல்க்கியர் கொடுத்த ஒரு விளக்கத்தில் ஆத்மாவைப் பற்றி  இப்படியாக கூறினாராம் ‘ஆத்மா என்பது அனைத்திலும், அனைத்து பிரபஞ்சத்திலும் வியாபித்து உள்ள ஒன்றாகும்.  அதைத் தவிர தோன்றிய பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து படைப்புக்களுக்குமே அழிவு உண்டு, ஆனால் ஆத்மாவிற்கு மட்டும் என்றுமே அழிவில்லை. உலகின் இன்ப, துன்ப நிலைகள் எதுவுமே  ஆத்மாவை பாதிப்பதில்லை. ஆத்மாவிற்கு பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் என்பவை எதுவுமே கிடையாது. அவை அனைத்தையும் கடந்த நிலையில் உள்ள உருவமற்ற ஒன்றே, ஒவ்வொரு உடலிலும், அனைத்து ஜீவன்களிலும் உள்ள ஆத்மா’ என்கின்றார். இதையே அஷ்டவக்கர கீதையிலும் காண முடிகின்றது.

ஆத்ம ஞானம்   பெற்று விட்ட ஞானிகளுக்கு கர்ம வினைகள் கிடையாது.  காம,  குரோத, விரோத நிலைகளோ இச்சைகளோ இருக்காது. அப்படி இருந்தால் அவன் முழுமையான ஞான நிலையை அடையாதவன். இன்னமும் அறியாமையில் இருப்பவன். எப்படி தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்த பின், அந்த வெண்ணை அதே தயிரில் கரையாதோ அதை போலவேதான் சம்சார சாகரத்தில் இருந்து விலகி பற்று அற்ற நிலைக்கு சென்று, ஞான நிலையை அடைந்து, ஜீவாத்மாவுடன் ஐக்கியம் ஆகி விட்டவன், மீண்டும் சம்சார நிலைக்கு திரும்புவதில்லை. பூமியில் வாழும்போது அந்த உடல் மரணம் அடையும்வரை அவன் ஜடமான நிலையில்தான், உணர்ச்சிகள் அற்று  இருந்து கொண்டிருப்பான் என்பதே ஞான நிலையின் அடிப்படை தத்துவம். இனி அஷ்டவக்கரர் யார் என்பதையும், அஷ்டவக்கர கீதையின் சாரத்தையும் தெரிந்து கொள்வோம்.  — சாந்திப்பிரியா

அஷ்டவக்கர கீதை – கதை

அஷ்டவக்கரர் யார்?

முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கிய பண்டிதர். அவருக்கு இருந்த பல சீடர்களில் கஹோடா என்பவரும் ஒருவர். அந்த சீடரின் குணதிசயத்தையும், கல்வியில் இருந்த ஞானத்தையும் கண்ட உதலாக்கா முனிவர் அவருக்கே தன்னுடைய மகளான சுஜாதா என்பவளை மண முடித்துக் கொடுத்தார்.  சுஜாதா கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்பிணியானாள். கிராமங்களில் கூறுவார்கள், கர்பவதிகள் நல்லவற்றையே காது கொடுத்துக் கேட்க வேண்டும், இறைவனின் நாமத்தை வாய் நிறைய கூறிக் கொண்டே இருக்க வேண்டும், மற்றும் இறைவன் பாடல்களை கேட்க வேண்டும். அப்போதுதான் பிறக்க உள்ள குழந்தையும் நல்ல குணத்துடன் பிறப்பான்.

இதை மனதில் கொண்ட சுஜாதா தனது கர்ப்ப காலத்தில் தன்னுடைய கணவருக்கு தனது தந்தை தினமும் செய்து வந்த உபதேசங்களையும், அவருக்குக் கற்றுக் கொடுத்து வந்த வேத பாடங்களையும் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு கேட்பதுண்டு.  அவள் வயிற்றில் வளர்ந்து வந்தக் குழந்தையோ அவற்றை தானும் கிரகித்துக் கொண்டது. குரு தனக்கு சொல்லிக் கொடுத்தப் பாடங்களை வீட்டில் வந்து கஹோடா மீண்டும் மீண்டும் கூறி  மனப்பாடம் செய்வார். அப்படி செய்யும்போது அவர் உச்சரிப்புக்களில் சில பிழைகள் ஏற்படுவது உண்டு. அதை கவனித்து வந்த சுஜாதாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் வயிற்றில் இருந்தே அவர் செய்யும் பிழைகளைக் உரத்தக் குரலில் கூறி தவற்றை திருத்தும். முதல் சில நாட்கள் எதோ ஆசிரி குரல் போல இருந்த அந்த குரலைக் கேட்டு வந்த கணவன், மனைவி இருவரும், சில நாட்களில் அதை செய்வது அவள் வயிற்றில் உள்ள  குழந்தைதான் என்பதைக் கண்டு பிடித்தார்கள். ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பார்கள். தன் குழந்தையே தன்னை திருத்துவதா என கோபமுற்ற கஹோடா தன்னை மறந்து அதற்கு சாபமிட்டார். ‘நீ பிறந்தாலும் அஷ்ட கோணலாகப் பிறக்க வேண்டும்’. ஆனால் அடுத்த நிமிடமே தனது ஆத்திர புத்தியை நினைத்து கஹோடா மனம் வருந்தினார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருந்தார்.

இதற்கிடையில், அந்த குழந்தை பிறக்கும் முன், தன்னுடைய குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த கஹோடா தன்னுடைய வாதத் திறமையை சபையில் காட்டி சன்மானம் பெற்று வர வேண்டும் என எண்ணிக் கொண்டு ஜனக மன்னனிடம் சென்று அங்கு நடைபெற்ற வாதப் போட்டியில் அரச பண்டிதரிடம் தோற்றுப் போனார்.  அரசவை பண்டிதரின் நிபந்தனைப்படி தோற்பவர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை அடைவார்கள். ஆகவே வாதப் போட்டியில் தோல்வி அடைந்த  கஹோடா  முனிவரும் அந்த தண்டனைப் பெற்று மரணம் அடைய வேண்டி இருந்தது.

அவர் மரணம் அடைந்ததும் அவர் சாபமிட்டபடி சுஜாதாவிற்கு குழந்தை எட்டு கோணல்களுடனான உடம்புடன் பிறந்தது.  அஷ்ட என்றால் எட்டு என்றும் வக்ர என்றால் கோணல் என்றும் பொருள் வரும் வகையில் அதற்கு அஷ்டவக்கரர்  எனப் பெயரிட்டார்கள் . அதே நேரத்தில் கஹோடாவின்  குருவான உதலாக்கா முனிவருக்கும் ஒரு குழந்தைப் பிறந்தது. அதற்கு ஸ்வேதகேது எனப் பெயர் சூட்டினார்கள். குழந்தை அஷ்டவக்கரர்  வளர்ந்த பின்னரும் அவனுடைய தாயார் அவனுக்கு தந்தை மரணம் அடைந்த செய்தியை கூறவில்லை. அவனையும் தன்னுடைய தந்தையான உதலாக்காவிடமே கல்வி பயில அனுப்பினாள். அஷ்டவக்கரரும், ஸ்வேதகேதுவும் சேர்ந்தே அவரிடம் கல்வி பயின்றார்கள். அவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்களும் ஆயினர். அஷ்டவக்கரர்  ஏற்கனவே கருவில் இருந்த போதே பல வேதங்களை கற்றறிந்து இருந்ததினால் அபார கல்வி ஞானத்தைப் பெற்று இருந்தார்.

தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை முதலில் அறிந்திராத அஷ்டவக்கரர்  உதலாக்காவே தனது தந்தை என்று நினைத்து வந்தார். ஆனால் காலப்போக்கில்  தனது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை எப்படியோ தெரிந்து கொண்ட அஷ்டவக்கரர்  தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமான பண்டிதரை பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார். ஒரு முறை அரண்மனையில் மீண்டும் வாதப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முடிவு செய்த அஷ்டவக்கரர்  தன்னுடைய   தோழரான ஸ்வேதகேதுவுடன் ஜனகர் அரண்மனைக்குள் சென்று அரச பண்டிதரான பாண்டியை -தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமாக  இருந்தவரை    – வாதப் போட்டியில் சந்திக்க அனுமதி கோரினார்.

போட்டியின் நிபந்தனையின்படி வாயில் காவலாளி முதல், அமைச்சர்கள் வரை அனைவரையும் வாதத் திறமையால் தோற்கடித்துக் கொண்டே சென்றனர். போகும் வழி நெடுக அந்த இரண்டு சிறுவர்களும் காட்டிய திறமை மன்னனின் காதில் எட்ட, அவர் அந்த இரு சிறுவர்களையும் அரச சபைக்கு உடனே அழைத்து வருமாறு கூறினார். அவர்கள் அரச சபைக்குள் நுழைந்ததுமே அஷ்டவக்கரரின்  அங்கஹீனத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் பெரியதாக சிரித்து கேலி செய்ய கோபமடைந்த அஷ்டவக்கரர், மன்னனைப் பார்த்து  ‘அரசே, நான் இந்நாள் வரை உங்கள் அரச சபையில் படித்த மேதாவிகள்தான் உள்ளனர் என நினைத்திருந்தேன். இங்கு வந்ததும்தான் தெரிகின்றது இந்த அவையில் செருப்பு தைப்பவர்கள்தான் உள்ளனர் என்பது. ஏன் எனில் அவர்களுக்குத்தானே தோலின் மீது நாட்டம் இருக்கும். எந்த ஒருவனுடைய உருவத்தையும் கொண்டு அவனை எடை போடக் கூடாது. அவனுடைய திறமையை  சோதித்துப் பார்த்து அவனைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்’ எனக் கோபமாகக் கூறியதும், அந்த சிறுவன் கூறியதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சற்றே சங்கடம் அடைந்த மன்னனும் அஷ்டவக்கரரிடம், அவனை கேலி செய்தவர்களின் சார்ப்பில் தானே மன்னிப்புக் கேட்டு விட்டு, சிறுவன் என்றும் பாராமல் அவனை போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார்.

போட்டி துவங்கியது. அஷ்டவக்கரர் சற்றும் தயக்கம் இன்றி அரச பண்டிதரான பாண்டியுடன் ஆன்மீகத்தில் வாதம் செய்யத் துவங்க, நீண்ட வாதங்களுக்குப் பிறகு அரச பண்டிதர் தோற்றுப் போனார். ஆகவே போட்டியில் தோற்று விட்ட அரசவைப் பண்டிதருக்கு என்ன தண்டனை தரவேண்டும் என மன்னன் கேட்கவும், அஷ்டவக்கரர் கூறினார் ‘என் தந்தை மரணம் அடைந்தது போலவே பண்டிதரும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணம் அடைய வேண்டும்’.

அதைக் கேட்ட அரசவைப் பண்டிதரான பாண்டி சற்றும் கலக்கம் அடையவில்லை. ஆனால் அதுவரை தான் ரகசியமாகக் காத்து வந்த ஒரு உண்மையை அனைவர் முன்னிலையிலும் கூறினார். ‘மன்னனே நான் வருண பகவானின் மகன். ஆகவே நீரில் மூழ்கடித்தாலும் எனக்கு மரணம் கிட்டாது. மேலும் அஷ்டவக்கரர் தந்தையின் மரணத்துக்கோ, அல்லது மற்றும் தோற்றுப் போன பலரின் மரணத்திற்கோ நான் காரணம் அல்ல. உண்மையில் என் தந்தை ஒரு பெரிய யாகம் செய்து கொண்டு உள்ளார். அதில் நன்கு ஞானம் பெற்ற பண்டிதர்கள் தேவையாக இருந்ததினால்தான் என்னிடம் தோற்றவர்களை அங்கு அனுப்பி வந்தேன். ஆகவே அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கின்றேன். நான் அறியாமல் செய்து வந்த தவறை நிவர்த்திக்கும் வகையில், என்னால் இறந்து போனதாக கருதப்பட்டு மேலுலகில் நடைபெறும் யாகத்தில் பங்கேற்றுக் கொண்டு இருந்த அனைவரையும் திரும்ப அழைக்கின்றேன்’ என்று கூறி விட்டு அஷ்டவக்கரரின்  தந்தையை மேலுலகத்தில் இருந்து வரவழிக்க அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய தந்தை சபையில் வந்து நின்றார்.

தன் மகனுடைய வாதத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கஹோடா  மிக்க மகிழ்ச்சி அடைந்து, தன் மகனை உடனடியாக அங்கிருந்துச் சென்று சாமங்கா என்ற நதியில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அவரும் அந்த நதியில் சென்று குளித்து விட்டு நீரில் இருந்து எழுந்த பொழுது அங்கஹீனம் மறைந்து இருந்தது. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்து போக ஜனகரும் அஷ்டவக்கரரையே  தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். அந்த அஷ்டவக்கரர்  தந்த போதனைகளினால்தான்  பெரும் குழப்பத்தில் இருந்த ஜனகர் மனத்தெளிவு பெற்று ஞானம் அடைந்தாராம். அந்த ஞான போதனையே அஷ்டவக்கர கீதை எனப்படுவதாக கூறுகிறார்கள். அஷ்டவக்கர கீதை என்பது பகவத் கீதையைப் போன்ற கீதை. ஆனால் இது மன்னன் ஜனகருக்கு எழுந்த சந்தேகங்களுக்கு முனிவர் அஷ்டவக்கரர் விளக்கம் அளித்தது என்கிறார்கள்.

அஷ்டவக்கர கீதையில் பற்றிய இன்னொரு கதையும் உண்டு. ஒருமுறை ஜனக மஹாராஜாவிற்கு ஒவ்வொரு நாளின் இரவிலும் ஒரு கனவு வந்ததாம். அந்த கனவில் தான் ஒரு பிச்சைக்காரன் போல ஆகி விடுவதாகவும், ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இன்றி பெரும் அவதிப்படுவது போல கனவு வரும். அப்படி வந்த அந்த கனவினால் பயந்து போய் உறக்கத்தில் இருந்து எழுந்து விடுவாராம். மீண்டும் உறங்கினால் அதே கனவு வரும். இந்த நிலை தினமும் தொடர்ந்ததினால் பயந்து போன மன்னன் அஷ்டவக்கரரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது அஷ்டவக்கரர் கொடுத்த பெரிய விளக்க உரையே அஷ்டவக்கர கீதை என ஆயிற்றாம்.  அதில் அஷ்டவக்கரர்  ‘ஒருவர் அவரது கனவில் காண்பவை நிஜம் அல்ல, அவர் வாழும் வாழ்க்கையும் நிஜம் அல்ல. இரண்டுமே கடவுளானால் காட்டப்படும் மாயை என்றும்,  இந்த உலகமே மாயையானது. எவன் ஒருவன் ஆத்ம ஞானம் பெறுகின்றானோ அவனே கடவுளுடைய முழுமையான அருளைப் பெற்றவன் ஆகிறான். அப்படிப்பட்ட முழுமையான அருள் கிடைக்கும் போது அவன் பேரானந்த நிலையை அடைகின்றான். தனது அறியாமையினால்தான் உலக பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படுகின்றான்’  என்பதை  விளக்கினார்.

மேலும் இன்னொரு கதையின்படி ஞானம்  என்பதை ஒருவன் குதிரையின் மீது ஏறி அடுத்த காலை இன்னொரு பக்கத்தில் வைக்கும் முன்னரே பெற முடியும் என்பதாக அஷ்டவக்கரர்  கூற, அதை நம்ப மறுத்த ஜனக மன்னனை அஷ்டவக்கரர் தனிமையில் ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு மன்னனின் குதிரையின் மீது ஏறுமாறு கூறினாராம். ஜனகரும் தனது குதிரையின் சேணத்தில் காலை வைத்து அடுத்த காலை இன்னொரு பக்க சேணத்தில் வைக்க தூக்கியபோது அதே நிலையில் அப்படியே தன்னை மறந்து நின்று விட்டாராம். அப்போது அஷ்டவக்கரர் போதித்த கீதையே இது என்பதாக கூறுகின்றார்கள்.  போதனை முடிந்ததும் மன்னர் மேலே தூக்கிய தனது காலை அடுத்த பக்க சேணத்தில் வைத்தபோது தன்னிலை மறந்த பேரானந்த நிலையில் இருந்தாராம். அவருக்கு தான் யார், ஞான நிலை என்பது என்ன, ஜீவாத்மா என்பதெல்லாம் என்ன என்று மிகத் தெளிவாக புரிந்து இருந்ததாம். அதன் பின் குதிரையில் இருந்து இறங்கிய ஜனகர் அஷ்டவக்கரரிடம் விடை பெற்றுக் கொண்டு அரண்மனைக்கு திரும்பியதும் அவரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருந்ததாம். முன்னர் போல தேவை அற்ற விவாதங்களில் முழுகாமல் ஆன்மீக பற்றுடன் இருந்து வந்ததாக கூறுகின்றார்கள்.

முதல்  அத்தியாயம்

அஷ்டவக்கிரர் ஜனக மஹாராஜருக்கு உபதேசம் செய்கின்றார்ஜனகருக்கு ஆத்மா என்பதின் உண்மையான தன்மை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகின்றார்.

जनक उवाच ॥

ஜனகர் கேட்டார் :-

कथं ज्ञानमवाप्नोति कथं मुक्तिर्भविष्यति ।

वैराग्यं च कथं प्राप्तमेतद् ब्रूहि मम प्रभो ॥

1.1 ஸ்வாமி, வாழ்க்கையில் ஆசைகளை துறந்து, ஞானம் பெற்று, முக்தி பெறுவது  எப்படி என்பதை தாங்கள் விளக்க வேண்டும்.

(விளக்கம் : இங்கு  ஜனக  மன்னன் ஞான நிலை  என்பதை  அறிவாற்றல் என்ற பெயரில்  குறிப்பிடுகின்றார். அதை ஆங்கிலத்தில் height of wisdom அல்லது renunciation என்பதாக கூறுவார்கள்.  ஆன்மீக சாதகர்கள்  அறிவாற்றல் பெறுவதற்கான முதல் அடித்தளம்  அறியாமையை அழித்துக் கொள்ளும் நிலை ஆகும். அறியாமை என்பது என்ன? முதலாவது  தான் யார், தனக்கு என்ன ஆன்மீகத் தகுதிகள் உள்ளன  என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலை. இரண்டாவது ஆன்மீக அடிப்படையிலான உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம்.

அடுத்து ஆத்ம விடுதலை பெறும் வழிமுறையைக் குறித்து கேட்கிறார். ஆத்ம விடுதலை என்பது ஆத்ம விழிப்புணர்வு பெறும் நிலை. அதை அடைய வேண்டும்  என்றால் முதலில் சாதகர்கள் தங்களிடம் ஊறிக் கிடைக்கும் அறியாமையை அழித்துக் கொள்ள வேண்டும். அறியாமையை அழித்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நான் எனும் அகங்காரத்தை அழித்துக் கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ, ஆசையோ, நிராசையோ, எந்த நிலை என்றாலும் அந்த நிலையினால் பாதிக்கப்படாமல் இருக்க முயல வேண்டும். இந்த உலகமே மாயை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உலக இயக்கங்கள் அனைத்துமே  மன எண்ண ஓட்டங்களினால் நடைபெறுபவை ஆகும்.  மன எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால்  ஐம்பொறிகளினால் வெளிப்படும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ள வேண்டும்.  ஐம்புலன்கள் என்பவை நுகர்தல், பார்த்தல், கேட்கும் திறன், தொடுதல், சுவைத்தல் என்பவை. அவற்றை வெளிப்படுத்துவது  ஐம்பொறிகள் எனும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்தால் அலைபாயும் மன எண்ண ஓட்டங்கள்  கட்டுப்படும். அவை முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டால் மானிட வாழ்க்கையிலும் உலகின் மீதும் பற்றுக் குறையத் துவங்கும். உலகத்தின் மீதான பற்றுதல்கள் அனைத்தும் அழிக்கப்படும் நிலையில்தான்  ஒரு சாதகன் ஆத்ம விடுதலையின் பாதையில் நடக்கத் துவங்குவான். அதில் வெற்றிகரமாக பயணிக்கும் போது பேரானந்த நிலையிலான ஜீவாத்மாவுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றான். அதன் பின் அவன் என்றுமே பரிபூரண  மகிழ்ச்சியோடு இருக்கின்றான். இங்கு மகிழ்ச்சி என்பது ஆழ்த்த இதயத்தின் உள்ளே நிலவும் ஆனந்த நிலை ஆகும். அதன் பின்  அவனை சுற்றி என்ன நடந்தாலும் அவன் கவலைப்படுவதில்லை, எந்த நிகழ்வும் அவனை பாதிப்பது  இல்லை. இருந்தும் இல்லாதவனாக, நடைபிணமாகவே வாழ்ந்து கொண்டிருப்பான். பெயருக்குத்தான் அவன் சம்சார சாகரத்தில் உள்ள மனிதன், மற்றபடி சுதந்திரமான நிலையில் உள்ளவன்.

ஞானம்,  முக்தி என்ற இரண்டுமே அடுத்தடுத்த நிலையிலானவை. ஞானத்தின் நிலையில் செல்ல விரும்பும் சாதகர்களை  மோட்ச விச்சையுள்ளவன் என்பார்கள். அதாவது உலகப் பொருள்களில் பற்று இல்லாமல் இருப்பது, மன வைராக்யம், ஆன்மீக நூல்களை படித்தல், முக்கியமாக ஞான, யோக தியான நூல்களை படித்து அவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ளுதல், பிரம்ம ஞானிகளுடனான தொடர்பு,  அவர்களது போதனைகள்  மற்றும் கேட்டறிந்த விஷயங்களைக் மனதில் ஏற்றிக் கொள்வார்கள். முடிவாக வைராக்கிய  நிலையுடன் இருந்தவாறு தியானம், யோகா மற்றும் பிற சாதனா முறைகளை கடைபிடிக்கத் துவங்கியதுமே மெல்ல மெல்ல மனதில் உள்ள  ஆசைகள் அழியத் துவங்கி விடும். நமக்கு முன் உள்ள அனைத்துமே அர்த்தம் இல்லாதவை என்ற உண்மை விளங்கத் துவங்கும்.   ஞான நிலையை அடையும் பாதையில் நுழைய முடியும்.  ஞான நிலையை எட்டியதும் பேரானந்த விழிப்புணர்வை பெறுவான், தான் என்பது தனது உடல் அல்ல என்பதை உணர்வான்.

முக்தி என்பது கடைசி நிலை. அதை ஞான நிலை என்றும் கூறுவார்கள். அதாவது பிறப்பு-இறப்பு எனும் நிலைகளே இல்லாத பிரும்மத்தில் ஐக்கியமாவதை விதேக முக்தி என்பார்கள். இந்த முக்தி நிலையைத் தவிர இரண்டு முக்தி  நிலைகள் உள்ளன.  முதலாவது உயிருடன் இருக்கும் போதே மன நிறைவுடன் வாழ்வது சீவ முக்தி எனப்படும். இரண்டாவது கிரம முக்தி எனப்படுவது. எந்த ஒருவனுக்கு சீவ முக்தி கிடைக்கவில்லையோ அவன்  செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு  ஆத்ம ஞானம் (பிரம்ம ஞானம்) அடைந்து,   விதேக முக்தி எனும் பிரும்மத்துடன் ஐக்கியமாகும் நிலையை பெறுகிறான். இவை எதுவுமே ஜனக மன்னனுக்கு புரியவில்லை அல்லது தெரியவில்லை என்பதினால்தான், அவர்   அஷ்டவக்கரரிடம்  ஞான நிலையை அடைவது எப்படி என்று கேட்டார்).

अष्टावक्र उवाच ॥

அஷ்டவக்கரர்  அவருக்கு விடை அளிக்கத் துவங்கினார்:-

मुक्तिमिच्छसि चेत्तात विषयान् विषवत्त्यज ।

क्षमार्जवदयातोषसत्यं पीयूषवद्ज ||

1.2  அன்பனே , நீ கேட்ட வினாக்களுக்கும்  விடை  கூறுவது எளிதல்ல.  நீ முக்தி அடைய வேண்டும் என விரும்பினால்  முதலில் உலக நாட்டம் கொண்ட உனது   ஆசைகள் அனைத்துமே கொடிய விஷம் போன்றவை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். தினமும் வாழ்க்கையில்  மன்னிப்பு, நேர்மை, கருணை போன்றவற்றை  கடைபிடித்தவாறு   அமிர்தம் போன்ற மன நிறைவை (அனைத்திலும் திருப்தி)  அடைய  பழக்கிக் கொள்ள  வேண்டும்

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘முக்தி அடைவது எளிதல்ல. அது ஒரே நாளில் வருவதில்லை.  அதை அடைய வேண்டுமானால்  உலக பந்தங்களுடன்  வாழ்பவர்கள் மெல்ல மெல்ல பல நிலைகளை கடந்து செல்ல வேண்டும். அலைபாயும் மன எண்ண ஓட்டங்கள்  உலகத்தின் மீதான பற்றை அழிய விடாமல் தடுத்து நிறுத்துகிறது  என்பதினால் முதலில் மனதை   அடக்க பயிற்சி செய்து கொள்ள வேண்டும். மன எண்ண ஓட்டங்களை   அடக்க வேண்டுமானால் அதற்கான முதல் நிலை  வாழ்க்கையில்  சில மாற்றங்களைக் கொண்டு வருவது ஆகும். அவைகளே மன்னிப்பு, நேர்மை, கருணை போன்றவை. அடுத்து தியானம், யோகா போன்றவை. அவற்றை எல்லாம் கடைபிடித்தே அமிர்தம் போன்ற மன நிறைவை பெற வேண்டும்’).

  न पृथ्वी न जलं नाग्निर्न वायुर्द्यौर्न वा भवान् |

एषां साक्षिणमात्मानं चिद्रूपं विद्धि मुक्तये ||

1.3   நீர், நிலம், நெருப்பு, வாயு (காற்று) மற்றும் ஆகாயம்  என்ற பஞ்ச  பூதங்கள்  நீ அல்ல.  நீ முக்தி  அடைய வேண்டும் என நினைத்தால் அந்த பஞ்ச பூதங்களின் சாட்சியாக நிற்பது  உனது உடலில் உள்ள ஜீவாத்மா மட்டுமே என்பதை நீ நன்கு உணர்ந்து  கொள்ள வேண்டும்.

(விளக்கம் :  இதன் மூலம் அஷ்டவக்கரர் விளக்கி உள்ளது என்ன என்றால் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்’  என்பது தத்துவம். அண்டம் என்பது உலகம் , பிண்டம் என்பது நமது  உடல். அதாவது இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அதே தத்துவத்தில் தான் நமது உடலும் இயங்குகிறது.  நமது உடல் இயக்கத்தின்படியே இந்த உலகமும் இயங்குகிறது என்று நம்பப்படுகின்றது. அதனால்தானோ என்னவோ பஞ்ச பூதங்களும் உனக்குள் உள்ளதாக நினைக்கிறாய்.   பஞ்ச பூதங்களான பூமி, நீர், ஒளி, காற்று, ஆகாயம்,  ஐம் புலன்களான வார்த்தைகள், தொடுதல், வடிவம், சுவை மற்றும் வாசனை ஆகியவை நீ அல்ல. ஆனால் நீ  அறியாமையில் ஐம் புலன்களை என்னுடையது என்பதை போல  நினைக்கிறாய். ஆனால் உனக்குள் உள்ள ஜீவாத்மாவையுமா  அவை இயக்குகின்றன? எவருக்குமே நீ எனும் ஜடமான உடலும் உனக்குள் உள்ள ஆத்மாவும் வெவ்வேறு என்பது தெரியவில்லை. ஜீவாத்மா என்பது சுதந்திரமானது, தூய்மையானது, அதற்கு இறப்போ, பிறப்போ எதுவும் இல்லை, அது நிலையானது மற்றும் பேரானந்த நிலையில் உள்ளது.  உடலின் இயக்கங்கள் அனைத்தையும் பார்த்தபடி அமைதியாக, ஒரு சாட்சி  போல நின்று கொண்டு உள்ளது.  அதன் அருகில் செல்லும்போதுதான்  அந்த ஆனந்தத்தை உன்னால் உணர முடியும். அந்த நிலையையே முக்தி என்கின்றோம்’)  यदि देहं पृथक् कृत्य चिति विश्राम्य तिष्ठसि |अधुनैव सुखी शान्तो बन्धमुक्तो भविष्यसि || 

1.4   அழியக் கூடிய உடலும் நீயும் ஒன்றல்ல என்ற உண்மையை புரிந்து கொண்டு அதே விழிப்புணர்வு  நிலையில்  இருக்கத் துவங்கினால், அப்படி சிந்திக்க துவங்கிய அடுத்த கணத்தில் இருந்தே  அமைதியும், மகிழ்ச்சியும் உன்னை சூழ்ந்து கொள்வதைக் காண்பாய்.

(விளக்கம்: அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘இந்த உலகில்  ஐம்பொறிகளினால் உடல் மற்றும் உடலின் உணர்ச்சிகள் செயல்படுகின்றன.  அதனால் இன்ப துன்பங்களின் தாக்கம்,  மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொன் ஆசை, அதாவது பொருள் ஆசையில் சிக்கி தவிக்கின்றோம். அதன் காரணம் உடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் அலைபாயும்  மன எண்ண ஓட்டங்கள்.  ஆசைகள் மேலும், மேலும்  வளரும் போது ஆணவமும், அகங்காரமும் தலை விரித்தாடும்.  ஆனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு,  அந்த உடல் உணர்வுகளுடன் தன்னை சம்பந்தப்படுத்திப் கொள்ளாமல் உள்ளது ஒன்றே ஜீவாத்மா என்பது. அதன் பார்வையில் அது வசிக்கும் அந்த உடல்  உயிரற்ற உடல் ஆகும். அந்த உடலுக்கு பிராரப்த கர்மாவின்படி எப்போது அழிவு (மரணம்) என்பது ஏற்படுமோ அதுவரை அது அந்த  சடலமான உடலில் இருந்து கொண்டிருக்கும். அதன் வேலை அவ்வளவுதான்.  ஜீவாத்மா அமைதியானது, பேரானந்த நிலையில் உள்ளது, அழிவற்றது, ஆனந்த மயமானது மற்றும் சுதந்திரமானது.  அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் நிலையே  ஞான நிலை ஆகும்.   அந்த நிலைக்கு சென்றவர்களை பேராற்றல் மிக்க அறிவாளி அல்லது விழிப்புணர்ச்சி பெற்றவர்கள் என்பார்கள். ஆகவே  சாதகர் ஒருவர் ஜனன மரணத்துடன் சம்மந்தப்பட்ட, இன்ப , துன்பங்களை அனுபவிக்கும் உடலுக்கும், அதனுள் ஓடும் மன ஓட்டங்களுக்கும் ஜீவாத்மாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, உலக பற்றுதல்கள் அனைத்தையும் தன்னுள் இருந்து அழித்துக் கொண்டால்  மட்டுமே  பேரானந்த நிலையான விழிப்புணர்வு நிலைக்கு செல்லும் பாதையில் பயணிக்க முடியும். அந்த பாதையில் சென்று விழிப்புணர்வு  நிலையை அடைந்து விட்டால் மனதில் ஏகாந்தமான அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுவதைக் காணலாம் என்று கூறுகின்றார்).

न त्वं विप्रादिको वर्णो नाश्रमी नाक्षगोचरः ।

असङ्गोऽसि निराकारो विश्वसाक्षी सुखी भव ॥

1.5   நீ அந்தணனோ அல்லது வேறு எந்த ஜாதியை சேர்ந்தவனோ அல்ல. வாழ்வின் நான்கு நிலைகளையும் கடந்து நிற்பவன் நீ.  ஐம்புலன்களுக்கும், உனக்கும் எந்த உறவும் பந்தமும் இல்லை. நடைபெறும் அனைத்திற்கும்  சாட்சியாக மட்டுமே  நிற்பவன் நீ என்பதினால் மகிழ்ச்சியோடு இரு.

(விளக்கம் : விழிப்புணர்வை பெற்று விட்டால் எந்த நிலையில் ஜனகர்  இருப்பார் என்பதை மேல் கூறிய போதனை  மூலம்  அஷ்டவக்கரர் கூறி  உள்ளது இதுதான்  ‘நீ  ஞான நிலையை அடைந்து விட்டால் அதன் பின் ஜீவாத்மாவுடன் உனது உணர்வுகள்  கலந்து  விடும்.  நீயும் அமைதியான, பேரானந்த நிலையில்  இருப்பாய். அந்த நிலையில்  சென்று விடும் உனக்கும் ஜாதி மத பேதங்களுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. ஏன் என்றால் உனக்கும்  உடலின் இயக்கங்களுக்கும் சம்மந்தம் இருக்காது. நீ இயந்திரம் போல, இருந்தும் இறந்த நிலையில் உள்ள மனிதனாக, ஜடமாக  செயல்படுவாய்.  அறியாமை எனும் மன எண்ணங்களினால்  தோன்றும் ஜாதி மத பேதங்களும், நான்கு நிலைகளிலான பிரம்மச்சர்யம், கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன் மற்றும் சன்யாசம்  போன்றவை உன்னுடைய (ஜனகரின்) ஜடமான உடலை  சார்ந்தவை என்பதாகி விடும்.  இந்த பிரபஞ்சத்தை படைத்தது பரமாத்மா ஆகும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இரண்டுமே ஒன்றுதான். உலகில் படைக்கப்பட்ட அனைத்திலுமே பரமாத்மா எனும் ஜீவாத்மா வியாபித்து உள்ளது எனும்போது எங்கிருந்து அதற்கு ஜாதி பேதங்கள் இருக்கும், வர்ணாஸ்ரம நிலைகள் இருக்கும்? ஜடமான உடலுக்கு  ஏற்படும்  இன்ப துன்பங்களை  உடல்தான் அனுபவிக்கின்றதே தவிர, கண்களுக்கு புலப்படாத, எந்த உருவமும் அற்ற, ஜீவாத்மா எனும் சுதந்திர பறவைக்கு அவற்றினால் எந்த பாதிப்பும் இல்லை, எனவேதான்  ஜீவாத்மாவுடன் ஐக்கியமாகி விடும் உனக்கும் அவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதினால் மகிழ்ச்சியோடு இரு’. ).

धर्माधर्मौ सुखं दुःखं मानसानि न ते विभो ।

न कर्तासि न भोक्तासि मुक्त एवासि सर्वदा ॥

1.6 நீதி, நேர்மை மற்றும் தீய செயல்களும்,  சுக துக்கங்களும் மனதை சார்ந்த எண்ணங்களே ஒழிய தவிர அவை உன்னால் தோற்றுவிக்கப்படவில்லை. அவற்றினால் ஏற்படும் விளைவுகளை அனுபவிப்பவனும்  நீ அல்ல.  நீ   அவற்றை எல்லாம் தாண்டி நிற்கும் சுதந்திரமானவன்.

(விளக்கம் : விழிப்புணர்வை பெற்று ஞான நிலையை எட்டி விட்டால், எந்த நிலையில் ஜனகர்  இருப்பார் என்பதை மேல் கூறிய போதனை  மூலம்  அஷ்டவக்கரர் கூறி உள்ளார்).

एको द्रष्टासि सर्वस्य मुक्तप्रायोऽसि सर्वदा ।

अयमेव हि ते बन्धो द्रष्टारं पश्यसीतरम् ॥

1.7  நடக்கும் அனைத்து மாயையான செயல்களுக்கும் ஒரே சாட்சியாக நின்று கொண்டிருக்கும் மெய்யுணர்வாளர் நீ சுதந்திரமானவன்ஆனால் உன்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அறியாமையினால், சடலம் போன்ற நிலையில் உள்ள ஜடமான உடலுடன் எந்த பந்தமும் இல்லாதவன் நீ என்பதை அவ்வப்போது  மறந்து விடுகிறாய்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் போதனையின் உள் சாரம் இதுதான். ‘நீ  அறிவாற்றல் நிறைந்தவன், சுதந்திரமானவன். ஆனால் நீ அவ்வப்போது  மெய்யுணர்வாளர் என்ற நிலையையும்  சடலமான உடலுடன் எந்த பற்றும்  இல்லாதவன் என்பதையும் அறியாமையினால் மறந்து விடுகிறாய். எல்லா உடலிலும் உள்ள  ஆத்மாவின் குணம் ஒரே நிலையில்தான் இருக்கும். ஆணவக்காரன் உடலில் உள்ள ஆத்மா ஆணவமாக இருக்குமா என்றால் நிச்சயமாக  இருக்காது என்பதே உண்மை. அதை போலவே அடங்கி வாழ்பவன் உடலில் உள்ள ஆத்மாவும் அடங்கி இருக்காது. ஆனால் அது சுதந்திரமானதாக இருக்குமா என்றால் ‘ஆமாம்’ என்பதே பதில். ஆகவே நீயும் சுதந்திரமானவன்தான், உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே சாட்சியாக அமைதியாக நின்றபடி பார்த்துக்  கொண்டிருப்பவன் மட்டுமே நீ).

अहं कर्तेत्यहंमानमहाकृष्णाहिदंशितः ।

नाहं कर्तेति विश्वासामृतं पीत्वा सुखं चर ||

1.8 கரு நாகத்தின்  விஷத்தைப் போன்ற எண்ணமான  ‘அனைத்தையும் செய்பவன் நானே’ என்ற அறியாமையை அழித்து விட்டு,  நடப்பவை எதற்கும் காரணம் நான் அல்ல என்ற அமுதம் போன்ற உண்மையை உணர்ந்து கொண்டு மகிழ்சியாக இரு.

(விளக்கம் : அஷ்டவாக்கரர் ஜனக மன்னனுக்கு என்ன கூறினார்  என்றால் ‘அறியாமையினால் ஏற்படும்  தான் எனும் கரு நாக விஷத்தைப் போன்ற அகம்பாவத்தை அழித்துக் கொண்டால் ஒழிய  ஆன்மீக விழிப்புணர்வு தோன்றாது. அகங்காரத்தை அழித்துக் கொள்ளாவிடில் மன எண்ண அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். எண்ண அலைகள் தோன்றிக் கொண்டே இருந்தால் உலகத்தின் மீதான பற்று அதிகரிக்கும். பற்று அதிகரித்தால்  ஞான நிலைக்கு செல்லும் பாதையில் உன்னால் நடக்க முடியாது.  பற்று எனும் பந்தம் இருக்கும் வரை எந்த விதத்திலும் நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நான் இந்த பூமிக்குரியவன் அல்ல, நான் தனிமையானவன் என்பதை என்று உணரத் துவங்குவாயோ அன்றுதான் பற்றுகளும் உன்னை விட்டு அகலத் துவங்கும். அந்த நிலையில் சென்றவுடன் இன்ப துன்பங்கள் நம்மை பாதிப்பது இல்லை,  மனதில் மகிழ்ச்சி தன்னால் தோன்றும். ஆகவே முதலில் நீ உனது அறியாமையை அழித்துக் கொள். நான், நான் அல்ல, என்பதை   உணர்ந்து கொள். அதாவது  ஜடமாக வெளித் தெரியும் உடல் நான் அல்ல என்ற உண்மையை நீ பரிபூரணமாக உணர்ந்து கொள்ள வேண்டும் ’)

एको विशुद्धबोधोऽहमिति निश्चयवह्निना ।

प्रज्वाल्याज्ञानगहनं वीतशोकः सुखी भव ||

1.9 நான் விழிப்புணர்ச்சி பெற்றவன்  என்பதை உறுதியான நம்பிக்கையுடன் உணரும் பொழுது,  அறியாமையினால் ஏற்படும் அனைத்து துன்பங்களும், பெரிய வனத் தீயில் மரங்களும், செடிகளும், கொடிகளும் எரிந்து போவது போல அழிந்து விடும். அப்போது முதல் நீ மகிழ்சியோடு இருப்பாய்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் என்றால்  ‘அறியாமை எனும் அகங்காரம் நம்மை சூழ்ந்து கொண்டு இருக்கும்போது  நமக்குள் அனைத்து பேதங்களும் அதாவது   நான்,  என் இனம், ஜாதி , மகிழ்சி, மண் ஆசை, பெண் ஆசை, பொருளாசை, துக்கம், ஆர்வம் மற்றும் உலகத்தின் மீதான அனைத்து பற்றுகளும் எண்ண அலைகளாக  காட்டுத் தீயைப் போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும்.  ஒரு காட்டுத் தீயில் சிக்கி உள்ள மரம், செடி   மற்றும்  கொடிகள் எப்படி அந்த தீயில் கருகி  அழிந்து   விடுமோ அதே நிலையில்தான்,  நீயும் பற்றற்ற நிலையில் சென்று அறியாமை எனும் அடித்தளத்தை அழித்துக் கொண்டால், பேரானந்த நிலையான விழிப்புணர்வு என்பதை பெறுவாய்’).

यत्र विश्वमिदं भाति कल्पितं रज्जुसर्पवत् ।

आनन्दपरमानन्दः स बोधस्त्वं सुखं भव ॥

1.10 முழுமையான அறிவாற்றல் பெற்ற நீ, விழிப்புணர்ச்சி  எனும் பேரானந்த நிலையில்  சென்று விட்டால் உனக்குள் அடங்கி உள்ள உலகம் கூட  ஒரு கயிற்றின் மீது  தொங்கும் பாம்பு போன்ற மாயையான காட்சி தரும். ஆகவே  மகிழ்ச்சியாக இரு.

(விளக்கம் : அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘அறியாமை எனும்  பயத்தினால் இருட்டிலே பார்க்கும் கயிறு கூட பாம்பைப் போல காட்சி அளிக்கும். ஆனால் வெளிச்சம் வந்ததும் அது பாம்பு அல்ல, வெறும் கயிறு என்பது புரியும். அந்த கயிற்றையும், பாம்பையும் போன்ற நிலையில்தான் நீயும் இருக்கின்றாய். அறியாமையில் நீ உள்ளபோது பார்க்கும் உலகம் வேறு. ஆனால் நீ பிரும்ம நிலையை எட்டி   விட்டால் நீ தங்கி உள்ள அந்த உலகமே ஒரு  மாயை என்பது புரியும்.  உலக பற்றுக்கள் அனைத்தையும் முழுமையாக அழித்துக் கொண்டால் மட்டுமே அடைய முடியும் என்கின்ற  பிரும்ம நிலை என்பது   ஜீவாத்மாவுடன் இணைந்துள்ள நிலை ஆகும்.  ஆகவே மன மகிழ்ச்சியோடு இரு.   மாயை உலகில்தான்  உன்னுடைய  மாய  உடலும் உள்ளது. அந்த மாயையான உடலுக்குள் உள்ளதே பேரானந்த நிலையில் உள்ள ஜீவாத்மா என்றாலும்  உலக இயக்கங்களினால் செயல்படும் உடலினால்  அந்த ஆத்மாவிற்கு எந்த பாதிப்பும்  ஏற்படுவதில்லை. ஏன் எனில் அது சுதந்திரமானது, தனிமையானது, பேரானந்த நிலையில் உள்ளது, அழிவற்றது.  ஆகவே  உலக பந்தங்களை துறந்து நீ  மகிழ்ச்சியோடு இருக்க பழகிக் கொள்ள வேண்டும்’).

मुक्ताभिमानी मुक्तो हि बद्धो बद्धाभिमान्यपि ।

किंवदन्तीह सत्येयं या मतिः सा गतिर्भवेत् ॥

1.11   ஒரு பழமொழி உண்டு. ‘நீ  உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாயோ அது போலவே நீயும் ஆகி  விடுவாய்’.  அதுவே உண்மை என்பதை போல ‘நான் சுதந்திரமானவன் என்று நீ நினைத்துக் கொண்டால் அப்படிப்பட்ட வாழ்க்கையைதான் வாழ்வாய். நான் அடிமை என்று நீ நினைத்துக் கொண்டால் அப்படிப்பட்ட  வாழ்க்கையில்தான் வாழ்ந்து கொண்டு  இருப்பாய்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறுகின்றார் எனில் “ஒரு குருவின் அருளை பரிபூரணமாக அடைந்து விட்ட சாதகன் தான் விழிப்புணர்ச்சி  பெறும் நிலைக்கான பாதையின்  அருகில் சென்று விட்டேன் என்று நினைத்துக் கொண்டால் அவன் அந்த பாதையில் நுழைந்து விட்டான் என்பது அர்த்தம்.  ஏன் எனில் அவன் தன் மீதும் தனது குருவின் போதனைகள் மீதும், தனது வைராக்கியத்திலும்  அபார நம்பிக்கை கொண்டவன். எனக்கு என்ன ஆனாலும் சரி, நான் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்குள் ஆழமாக பதிந்து இருக்கும்.  ஆகவே நிச்சயமாக அவன்  ஆத்ம விழிப்புணர்வைப் பெறுவான். ஆனால் அதே நேரத்தில்  மனம் முற்றிலும் பக்குவமில்லாத  இன்னொரு சாதகனோ ‘எத்தனை சாதனாக்களை  செய்தும் என் மனம் பக்குவப்படவில்லையே, விழிப்புணர்ச்சி பெற  இன்னும் எத்தனை காலம் நான் காத்திருப்பது’  என்ற அடிமைத்தனத்திலான  நினைவுடன் இருப்பான். அந்த  சாதகன் தன் மீதும் நம்பிக்கை வைத்துக்  கொள்ள மாட்டான், தனது குருவின் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டான், வைராக்கிய மன நிலையிலும் இருக்க மாட்டான்.   தன் மீதான அவநம்பிக்கையில்   காலத்தை கடந்து  கொண்டிருப்பான் என்பதினால்  அவன் நினைத்ததை போல விழிப்புணர்வு நிலையை அடைய மாட்டான்.  இதில் இருந்து எதை உணர வேண்டும் என்றால் முதலில் தன் மீதும் தனது முயற்சியின் மீதும் பரிபூரண நம்பிக்கை வைத்துக் கொண்டு ‘நான் நானாக இருக்கப் போகின்றேன்’ என்ற வைராக்கியத்தைக் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம்  விரும்பிய விழிப்புணர்வை அடைய முடியும்”)

आत्मा साक्षी विभुः पूर्ण एको मुक्तश्चिदक्रियः ।

असङ्गो निःस्पृहः शान्तो भ्रमात्संसारवानिव ॥

1.12  அனைத்திற்கும் சாட்சியாக நிற்கும் உன் ஜீவாத்மா தனித் தன்மை  கொண்டது,  பரிபூரணமானது, சுதந்திரமானது, ஆசைகள் அற்றது, அமைதியானது, மேலும் அழிவு இல்லாதது. ஆனால் அறியாமையினால் மாயையான உடலையே இந்த உலகத்தோடு இணைந்து உள்ள ஆன்மாவாக பார்க்கின்றார்கள்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் இதன் மூலம் என்ன அறிவுறுத்துகிறார் எனில் ‘இந்த உலகில் வெளித் தெரியும் உடல் வேறு, அதனுள் உள்ள ஆத்மா என்பது வேறு. ஜீவாத்மாவை தான் ஆத்மா என்று கூறுவார்கள். இந்த பிரபஞ்சத்தையே படைத்தது பரமாத்மா எனும் உருவமற்ற ஒளியாகும். அதில் இருந்தே அனைத்து ஜீவராசிகளும் உலகமும் வெளியாயின. பரமாத்மா படைத்த மானிடர் உட்பட அனைத்து ஜீவ ராசிகளிலும் அவர் வியாபித்து  உள்ளார், அவர் இல்லாத இடமே இல்லை. அவர் இல்லை என்றால் அனைத்துமே ஜடமான நிலையில்தான் இருக்கும். ஆனால் அவருக்கும் அவர் வியாபித்து உள்ள எந்த படைப்புக்களின் இயக்கங்களுக்கும் சம்மந்தமே இல்லை. ஏன் எனில் அவற்றை இயக்குவது அவர் அல்ல. அவை  தத்தனியே அதனதன் ஐம்பொறிகள், ஐம்புலன்கள்,  மற்றும் மற்றும் பிராரப்த கர்மாவின்படி பல்வேறு சுயத் தன்மையுடன் இயங்குகின்றன. பரமாத்மா யார்? அவரே ஜீவாத்மா என்ற பெயரில் அழைக்கப்படுபவர், உனது உடலிலும் உள்ளவர். அந்த ஜீவாத்மா   தனித் தன்மை  கொண்டது,  பரிபூரணமானது, சுதந்திரமானது, ஆசைகள் அற்றது, அமைதியானது, மேலும் அழிவு இல்லாதது.  பிராரப்த கர்மாவை அனுபவித்த பின் அது தங்கி உள்ள உடல் என்று மரணம் அடையுமோ , அதுவரை அதுவும் அந்த உடலுக்குள் குடி இருக்கும். அதன் உறவு அந்த உடலுடன் அவ்வளவு   மட்டுமேதான்).

कूटस्थं बोधमद्वैतमात्मानं परिभावय ।

आभासोऽहं भ्रमं मुक्त्वा भावं बाह्यमथान्तरम् ॥

1.13  உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள அனைத்து  உணர்சிகளையும், அறியாமையையும் அழித்துக் கொண்டு நான் விழிப்புணர்வு பெற்றவன் என்று கடுமையான நிலையில் தியானம் செய்ய வேண்டும்.  

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர் பேரானந்த விழிப்புணர்வை பெறும் நிலையை அடைவதற்கான  அடித்தளத்தை  குறித்து சாதகர்களுக்கு விளக்குகின்றார். ‘அனைத்து எண்ண அலைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டும், அறியாமைகளை அழித்துக் கொண்டும், மனதின் அடித்தளத்தில்  உள்ள உணர்வுகளுக்கும், வெளித்  தெரியும் உடலின் செயல்பாடுகளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தம் இல்லை, இனி உள்ளொன்று புறமொன்று  என்கின்ற  இரட்டை  நிலை எனக்கில்லை, நான் சுதந்திரமானவன், சஞ்சலமற்றவன், அழிவற்றவன் என்ற  ஒரே நினைவுடன்  நானே பிரும்மன், நானே பிரும்மன் என்று கடுமையான தியானம் செய்யுமாறு அறிவுறுத்துகிறார்’).

देहाभिमानपाशेन चिरं बद्धोऽसि पुत्रक ।

बोधोऽहं ज्ञानखड्गेन तन्निकृत्य सुखी भव ॥

1.14.   மகனே,  நீண்ட காலமாக  ‘எனது உடலே  நான்’ என்ற உனது அறியாமை, ஒரு கயிற்றில் உன்னை கட்டி வைத்துள்ளதை போன்ற  நிலையில் வைத்து உள்ளது.  அதை விழிப்புணர்ச்சி பெற்றவன் நான் என்கின்ற  வலிமையான வாளினால்   வெட்டி  எறிந்து விட்டு,  மகிழ்ச்சியோடு இரு.

(விளக்கம் : இந்த போதனையில் அஷ்டவக்கரர்  ஜனகரை  ‘சீடனே’ என அழைக்காமல் ‘அன்பு மகனே’ என அழைத்து என்ன கூறி உள்ளார் என்றால் ‘காலம்   காலமாக அனைவரும், உலக இயக்கங்களோடு உள்ள  தனது உடலே தனக்கு அடையாளம் என்பதாக நம்புகின்றார்கள். அந்த உடல் தன்னுடையது என்றும் கருதுகின்றார்கள். அப்படிப்பட்ட  எண்ணத்தின்  உண்மையான  நிலை என்ன தெரியுமா?  உடல் உணர்வு  எனும் தூக்கு கயிற்றில் ஒருவனை உறுதியாக கட்டி வைத்துள்ளதை போன்றது. அந்த சிந்தனையை  எளிதில் மாற்றிக் கொள்ள முடியாதுதான். ஆனால்  ஒரு உடலில் எந்த பந்தமும் இல்லாமல் தூய்மையாக, பிரகாசமாக, சுதந்திரமாக, அழிவற்ற நிலையில் உள்ள  நான் எனும் ஜீவாத்மாவை அடைய வேண்டும் எனில்  முதலில் உனது உடல் மற்றும் மன எண்ணங்களின் மாயையில் இருந்து உன்னை மீட்டுக் கொள்ள வேண்டும். தூக்கு மேடையில் தொங்க விடப்பட்டுள்ள  கயிறை. ஒரு வாளைக் கொண்டு வெட்டி எறிவது போல, அறியாமை எனும் தீயை, அறிவாற்றல் எனும் வாளினால் வெட்டி எறிந்து விட்டால் உள்ளுணர்வில் வெளிச்சம் தோன்றும். நானே பிரும்மன் என்ற உணர்வு ஏற்படும். அந்த நிலைக்கு சென்றால்  பேரானந்த மகிழ்ச்சியில் இருக்கலாம்’).

निःसङ्गो निष्क्रियोऽसि त्वं स्वप्रकाशो निरञ्जनः ।

अयमेव हि ते बन्धः समाधिमनुतिष्ठसि ॥

1.15 நீ யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல, சுதந்திரமானவன், களங்கமற்றவன், முழுமையான அமைதியில் உள்ளவன்.  ஆனால் அறியாமை எனும் அடிமைத்தனத்தினால்  இந்த உண்மையை புரிந்து  கொள்ளாமல்  எதை அடைய  சமாதி போன்ற நிலையில் உள்ள தியானப் பயிற்சியில் மூழ்கிக்  கிடைக்கின்றாய்? 

(விளக்கம் : அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால்  ‘எவர் ஒருவர் தனது உள்ளத்தில்  உள்ள அனைத்து எண்ண அலைகளையும்  ஒன்றுமில்லாமல் அழித்துக் கொண்டு, முற்றிலும் அமைதியாகி  விடுவாரோ, அப்போது முதலே அவர் அவர் முக்தி எனும் விழிப்புணர்வு நிலைக்கு  சென்று விடுகின்றார்.  அந்த நிலை ஜீவாத்மாவை அடைந்து விடும் நிலை ஆகும். அப்போது முதலே அவர் அவர் சுதந்திரமானவர், ஆத்மாவோடு ஜொலிப்பவர், எந்த விதமான களங்கமும் இல்லாதவர், எவருக்கும் கட்டுப்படாதவர் என்ற நிலைக்கு சென்று விடுகின்றார். சுய அறிவு இல்லாத ஒரு  சாதகருக்கே சமாதி நிலையிலான தியானப் பயிற்சி வேண்டும். ஆனால் அறிவாற்றல் உள்ள நீ  மனதுக்குள் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டாலே அந்த நிலையை அடைந்து விடலாம் எனும்போது  எதற்கு  சமாதி நிலை போன்ற தியானத்தில் ஈடுபட வேண்டும்?  அப்படி என்றால் உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லை என்பதுதானே அர்த்தம்’).

त्वया व्याप्तमिदं विश्वं त्वयि प्रोतं यथार्थतः ।

शुद्धबुद्धस्वरूपस्त्वं मा गमः क्षुद्रचित्तताम् ॥

1.16   எங்கும் எதிலும் வியாபித்து உள்ள உனக்குள்தான்  இந்த உலக இயக்கமே அடங்கி உள்ளது.  நீ  இயற்கையாகவே  விழிப்புணர்வு உள்ளவன் எனும்போது  எதற்காக  நீ  உன்னை குறைத்து மதிப்பிட்டுக்  கொள்ள வேண்டும்.

(விளக்கம் : தனது சீடனுக்கு அஷ்டவக்கரர் அறிவுரை கூறுகின்றார் ‘இந்த  பிரபஞ்சத்தை படைத்தவர் பரமாத்மா எனும் ஒளியாவார். அவரிடத்தில் இருந்துதான் அனைத்து ஜீவராசிகளும் வெளியாயின. அவரே அனைத்து ஜீவராசிகளிலும் வியாபித்து உள்ளார். அவர் இல்லை என்றால் எதுவுமே கிடையாது, அனைத்தும் ஜடமாகவே இருக்கும்.  பரமாத்மனே, ஜீவாத்மா  மற்றும் ஜீவாத்மாவே, பரமாத்மா என்பது உண்மை எனும்போது உனக்குள் உள்ள அதே ஜீவாத்மாதானே இந்த உலகம்  முழுவதும் வியாபித்து இருக்க முடியும்?  ஜீவாத்மா எனும் பரமாத்மா உலகம் முழுவதும் வியாபித்து உள்ளது  என்பதினால்தானே  கனவில் கூட உன்னால் இந்த உலகம் முழுவதையுமே சுற்றிப் பார்க்க முடிகின்றது.  இந்த உலகம் முழுவதும் உன்னால் நிரம்பியுள்ளது  என்று எடுத்துக் காட்ட இது ஒன்றே போதாதா?    உண்மையைக்  கூற  வேண்டும்   என்றால் கண்ணுக்குத் தெரியும் உலகம் உன்னால் (ஜீவாத்மா) நிரம்பியுள்ளது. அதனால் இந்த உலகமே நீதான்   எனும்போது எதற்காக  நீ  உன்னை குறைத்து மதிப்பிட்டுக்  கொள்ள வேண்டும்?’)

निरपेक्षो निर्विकारो निर्भरः शीतलाशयः ।

अगाधबुद्धिरक्षुब्धो भव चिन्मात्रवासनः ॥

1.17  பூரணமான  விழிப்புணர்ச்சி பெற்ற நீ (ஜீவாத்மா)  அமைதியானவன். உருவமற்றவன்,  மாற்றம் அற்றவன், அசைவற்றவன். விருப்பு வெறுப்பு  ஏதுமற்ற  உன்னை  எந்த நிபந்தனைகளும்  கட்டுப்படுத்த முடியாது.   ஆகவே  உண்மை எனும் பேரானந்த நிலையில் என்றும் இரு

(விளக்கம் : ‘விருப்பு வெறுப்பு  ஏதுமற்ற  உன்னை  எந்த நிபந்தனைகளும்   கட்டுப்படுத்த முடியாது’ என்று கூறுவதின் மூலம், ஜனக மன்னனையும் சேர்த்து சாதகர்களுக்கு அஷ்டவக்கரர் என்ன  செய்தியை கூறுகின்றார் என்றால் ‘ஜீவாத்மா முற்றிலும் பேரானந்த நிலையில் உள்ள சச்சிதானந்த ஸ்வரூபம் ஆகும். அதற்கும், அது குடி உள்ள ஸ்தூல  உடலுக்கும், அதன் இயக்கங்களுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை. ஸ்தூல உடலில் எழும்  விஷம் போன்ற பசி, தாகம், துக்கம், பற்று, பிறப்பு மற்றும்   இறப்பு  என்கின்ற உணர்ச்சிகளினால்  எந்த நிலையிலும் அது பாதிப்படையாமல் நடப்பவை அனைத்திற்கும்  ஒரு சாட்சி போல மட்டுமே  நிற்கின்றது.  பேரானந்த நிலையில் உள்ள அந்த சச்சிதானந்த ஸ்வரூபமே உனக்குள் உள்ளபோது நீயும் ஞானம் பெற்றவன்தான் என்ற உண்மையை புரிந்து கொண்டு பேரானந்த நிலையில் என்றும்  இருக்க வேண்டும்’).

साकारमनृतं विद्धि निराकारं तु निश्चलम् ।

एतत्तत्त्वोपदेशेन न पुनर्भवसम्भवः ॥

1.18  வெளித் தெரிவது எதுவும் நிஜமல்ல, மாய தோற்றம் கொண்டவை. ஆனால்  உருவமற்ற, வெளியில்  காண முடியாத அந்த ஜீவாத்மாதான் மாற்றம் இல்லாதது, நிலையானது. இந்த உண்மையை நீ புரிந்து கொண்டால், அறியாமையில் இருந்து விடுதலை பெற்று, மறுபிறப்பு அற்ற நிலையை  பெறுவாய்.

{விளக்கம் : இதற்கு முன்னர் கூறப்பட்டு உள்ள ஸ்லோகங்களில் அஷ்டவக்கரர் நீ , நீ என்று  குறிப்பிட்டு இருப்பது   ஜீவாத்மாவைப் பற்றிதான். ஸ்தூல உடலான ஜனகரின் அதே உடலுக்குள்தான், அவர் தேடி அலையும்   ஜீவாத்மாவும் உள்ளது என்ற உண்மையை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, ஜனகரே  ஒரு ஜீவாத்மா போன்ற    பிரமையை அவருக்குள்  ஏற்படுத்தி, ஜீவாத்மாவின் தன்மைகள் மற்றும் அதன் வெளித் தெரியாத உருவம் குறித்தும் விவரமாக கூறினார்.  ஜீவாத்மாவே  உண்மை என்றும், உலகம் முழுவதிலும் வியாபித்து உள்ள அதுவே ஜனகருக்கும் உள்ளே உள்ள ஜீவாத்மாவும்  என்றும் விளக்கினார்.   ஒரு சாதகன் ஜீவாத்மா என்பது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பின்னரே சாதனாவை தொடர வேண்டும் என்பதற்காக ஜீவாத்மாவின் தன்மையை பல கோணங்களிலும் விளக்கி கூறி உள்ளார்.  ஜீவாத்மாவின் உண்மையை புரிந்து கொண்டால் அறியாமையில் இருந்து விடுதலை பெற்று, மறுபிறப்பு அற்ற நிலையை  பெறுவாய் என்று  கூறியது எதனால் என்றால் ‘மறுபிறப்பு இல்லாத நிலை  முக்தி நிலை என்பதாகும்.

முக்தி நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் கீழ்கண்ட விளக்கம் தரப்படுகின்றது. முக்தி நிலை என்பது கடைசி நிலை.   பிறப்பு-இறப்பு எனும் நிலைகளே இல்லாத பிரும்மத்தில் ஐக்கியமாவதே முக்தி எனப்படும். இதை விதேக முக்தி என்பார்கள்.  விதேக  முக்தி நிலையை  தவிர இரண்டு முக்தி  நிலைகள் உள்ளன. அதில் ஒன்று உயிருடன் இருக்கும் போதே மன நிறைவுடன் வாழ்வது. அது சீவ முக்தி எனப்படும். இரண்டாவது  எந்த ஒருவனுக்கு சீவ முக்தி கிடைக்கவில்லையோ அவன்  செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு முழு ஆத்ம ஞானம் (பிரம்ம ஞானம்) அடைந்து, பிரும்மத்துடன் ஐக்கியமாகும் நிலையை பெறுகிறான். அந்த நிலையை கிரம முக்தி  என்பார்கள்}.

यथैवादर्शमध्यस्थे रूपेऽन्तः परितस्तु सः ।

तथैवाऽस्मिन् शरीरेऽन्तः परितः परमेश्वरः ॥

1.19  பிம்பத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி முன்  யார் நின்றாலும் நிற்காவிட்டாலும் அது தனது தன்மையை  இழக்காமல்  கண்ணாடியாகவே இருப்பதை  போல, உன்னுள் உள்ள ஜீவாத்மாவும்  தனது தன்மையை இழக்காமல் உனது உடலுக்குள்ளும், வெளியிலும்  வியாபித்து உள்ளது. 

(விளக்கம் : அஷ்டவாக்கரர் கூறும் போதனை ஒரு நிலைக் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொள்ளும் சாதகரின்  பிரதிபலிப்பு சம்பந்தப்பட்டது.   சாதகர் ஒருவர் ஒரு கண்ணாடி முன் நின்றால் அதில்  அவருடைய உருவம் தெரியும். அப்படி என்றால் அவர் கண்ணாடிக்குள்ளும்  வியாபித்து உள்ளாரா என்றால் அது இல்லை. அது ஒரு மாய பிம்பம்.  அதனால்தான்  அந்த கண்ணாடிக்குள் எந்த மாற்றமும் நிகழ்வது இல்லை. கண்ணாடி கண்ணாடியாகவேதான் இருக்கும்.  அதை  போலவேதான் சூக்கும சரீரத்தில்  கண்ணாடி போன்ற நிலையில் உள்ள ஜீவாத்மாவை, ஸ்தூல  உடலுக்கு நேரிடும் இன்ப, துன்பங்கள் அல்லது அந்த உடலில் உள்ளே அலை பாய்ந்து கொண்டிருக்கும் எண்ண அலைகள் எந்த நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

நமது உடலைக் குறித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் கீழ்கண்ட விளக்கம் தரப்படுகின்றது. இயற்கைதான் எத்தனை அழகாக நமது உடல் அமைப்பை அமைத்து உள்ளது. வெளித் தெரியும், தோல் மற்றும் தசைகளிலால் ஆன உயிரோட்டமான உடலையே முழு சரீரம் அல்லது காரண உடல்  என்கின்றார்கள்.   காரண உடலில் தோல், தசை போன்றவை தன்னிச்சையாக இயங்க முடியாத ஜடப் பொருள்கள் பொருட்கள் உள்ளன. ஆனால் அந்த உடலுக்குள் உள்ள தூல உடல் எனப்படும்  இதயம், மூளை, சிறுநீரகம், சுவாச மண்டலம் ரத்த நரம்புகள் என்பவை அவற்றை இயக்குகின்றன. ஆனால் அந்த தூல உடலை இயக்குவது யார். அது வேறு யாரும் அல்ல, அதை இயக்குவது சூக்கும  உடலில் உள்ள உயிர் அல்லது உயிராற்றல் எனும் கண்களுக்கு புலப்படாத சக்தி ஆகும்  என்கிறோம். அந்த காரண உடல்  அல்லது காரண  சரீரம் வெளித் தெரியும் உடல் என்றால் சூக்கும சரீரம் என்பது ஞானக் கண்களுக்குத் மட்டுமே தெரியும் சரீரம் ஆகும் என்பதினால்தான் அதையே ஜீவாத்மா என்றும் நம்புவார்கள்.).

एकं सर्वगतं व्योम बहिरन्तर्यथा घटे ।

नित्यं निरन्तरं ब्रह्म सर्वभूतगणे तथा ॥

1.20   ஆகாயத்தின் கீழ் உள்ள பகுதியில் பரந்து விரிந்துள்ள  நிலையில் காணப்படும்  வெற்றிடமும், ஒரு ஜாடிக்குள் அடைபட்டுக்  கிடைக்கும் வெற்றிடமும் ஒரே தன்மையில்தான் இருக்கும். அதே போன்ற நிலையில்தான் உடலுக்கு உள்ளேயும், அகண்ட வெளியிலும் அழிவற்ற பிரும்மமும்  பரந்து வியாபித்து உள்ளது.

{விளக்கம் :  அஷ்டவக்கரர் அழிவற்ற  பிரும்மம் என்பதின் மூலம் ஜனக மன்னனுக்கு ஜீவாத்மாவை பற்றியே குறிப்பிடுகின்றார். எப்படி அழிவற்ற நிலையிலான ஆகாயம்  அதன் இரு எல்லையையும் காண முடியாமல் வியாபித்து உள்ளதோ அது போலவேதான்  அழிவற்ற நிலையிலான ஜீவாத்மாவும்  முன்னரே கூறியபடி  ஸ்தூல சரீரத்திலும்  அதன் வெளியில்   வியாபித்து உள்ளது. அதனால்தான் ஜீவாத்மாவை உள்ளேயும் வெளியேயும் உள்ளது என்பார்கள்.

இதனால்தான் அஷ்டவக்கரர் முன் ஒரு போதனையில் (1.16) ‘இந்த  பிரபஞ்சத்தை படைத்தவர் பரமாத்மா எனும் ஒளியாவார். அவரிடத்தில் இருந்துதான் அனைத்து ஜீவராசிகளும் வெளியாயின. அவரே அனைத்து ஜீவராசிகளிலும் வியாபித்து உள்ளார். அவர் இல்லை என்றால் எதுவுமே கிடையாது, அனைத்தும் ஜடமாகவே இருக்கும்.  பரமாத்மனே, ஜீவாத்மா  மற்றும் ஜீவாத்மாவே, பரமாத்மா என்பது உண்மை எனும்போது உனக்குள் உள்ள அதே ஜீவாத்மாதானே இந்த உலகம்  முழுவதும் வியாபித்து இருக்க முடியும்?  ஜீவாத்மா எனும் பரமாத்மா உலகம் முழுவதும் வியாபித்து உள்ளது  என்பதினால்தானே  கனவில் கூட உன்னால் இந்த உலகம் முழுவதையுமே சுற்றிப் பார்க்க முடிகின்றது.  இந்த உலகம் முழுவதும் உன்னால் நிரம்பியுள்ளது  என்று எடுத்துக் காட்ட இது ஒன்றே போதாதா?’ என்று கேட்டார்}

இரண்டாம் அத்தியாயம்

அஷ்டவக்கிரர் கொடுத்த முதல் உபதேசத்தில் சற்றே மனது தெளிவு பெற்ற ஜனகர் இப்படியாக தன் மன  நிலையை வெளிப்படுத்துகின்றார்.

अहो निरञ्जनः शान्तो बोधोऽहं प्रकृतेः परः ।

एतावन्तमहं कालं मोहेनैव विडम्बितः ॥

2.1.  குருவே,  இத்தனை காலமும்  அறியாமை எனும்  மாயையில்  கட்டுண்டு  கிடந்தேன். நான் களங்கமற்றவன், தூய்மையானவன்  என்பதை இப்போது உணர்கின்றேன். இப்போது நான்  இயற்கைக்கும் அப்பாற்பட்ட அமைதியான,  விழிப்புணர்ச்சி பெற்ற  நிலைக்கு சென்று விட்டேன் என்பதை  உணர்கின்றேன்

(விளக்கம் :  அமிர்தம் போன்ற  குருவின் போதனைகள்,  சீடனான ஜனகருக்கு உள்ளத்தில் மாபெரும் ஆன்மீக  தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.   அதனால் பேரானந்த நிலையில் சென்று விட்டதாக கூறும்  ஜனகர் தனது அனுபவத்தை அஷ்டவரக்கரரிடம்  இப்படியாக கூறினார் ‘பல்லாண்டு காலமாக  தான் மாயை எனும் அறியாமையில்  மூழ்கிக் கிடைத்ததாகவும், அந்த இருள் போன்ற நிலையில் அடைந்து கிடந்த  தன்னை,  குருவின் போதனைகள் பேரானந்த நிலையிலான ஆத்ம விழிப்புணர்வை பெற வழி விட்டதாகவும் அதன் விளைவினால் தற்போது எந்தவித களங்கமும் இல்லாமல் தூய்மையான நிலையில் தான் உள்ளதை போன்று உணர்வதாகவும்’ பரவசத்துடன் கூறினார்).

यथा प्रकाशयाम्येको देहमेनं तथा जगत् ।

अतो मम जगत्सर्वमथवा न च किञ्चन ॥

2.2   இந்த ஸ்தூல உடலுக்கும், அதை சுற்றி உள்ள பிரபஞ்சத்திற்கும்  ஒளி தருபவன் நானே  என்பதினால் இந்த உலகமே  நான்தான், நான் இன்றி இந்த  உலகம்   இல்லை  என்ற உண்மையை  உணர்கின்றேன்.

(விளக்கம் :  மேற்கண்ட  பதில்  மூலம்  சீடன் குருவிடம் தனக்கு இருந்த பற்றுதலை வெளிப்படுத்துகின்றார். மேலும் தானே ஜீவாத்மாவாக மாறிவிட்டதை போன்ற   உணர்வில் இருந்தவாறு கூறுகின்றார் ‘எந்த ஒரு பொருளுக்கும் ஒளி தானாக கிடைப்பது இல்லை அது ஸ்தூல உடலாக இருந்தாலும் சரி, உலகமே என்றாலும் சரி, அவற்றுக்கு ஒளி கிடைக்க வேண்டும் எனில் வேறு ஒரு சாதனம் வேண்டும்’.  இங்கு  ஒளி என்பதை அறிவாற்றல் அல்லது இயக்குதல் என்பதான பொருளில் ஜனகர் கூறி உள்ளார்.  ‘ஸ்தூல உடலுக்கு   ஐம்புலன்களினால் உணர்ச்சிகள்  கிடைக்கின்றன, எண்ணங்கள் எழுகின்றன. அவற்றை  இயக்குவது சூக்கும  உடலில் உள்ள உயிர் அல்லது உயிராற்றல் எனும் கண்களுக்கு புலப்படாத சக்தியான ஜீவாத்மா என்பதாகும்.  அதை போன்றதே இந்த உலகமும். அதற்கு ஒளி தருவது யார் ?’ இங்கும் ஒளி என்பதை இயக்கம் என்கின்றார். ‘ஸ்தூல உடலில் உள்ள ஜீவாத்மா எப்படி ஒரு உடலுக்கு  இயக்கங்களை தர வழி வகுக்கின்றதோ அதை போலவேதான் ஜீவாத்மா எனும் பரமாத்மாவும் இந்த உலகின் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளதினால்  அவரால் அனைத்து இயக்கங்களுக்கும்  செயல்படுகின்றன’).

स शरीरमहो विश्वं परित्यज्य मयाधुना ।

कुतश्चित् कौशलाद् एव परमात्मा विलोक्यते ॥

2.3  மாயையான உடலையும், மாயையான உலக பற்றுதல்களையும்  துறந்த பின்னர், குருவின் உபதேசங்களில் நான் அடைந்த அறிவாற்றலினால், பேரானந்த  விழிப்புணர்வு நிலைக்கு சென்று விட்டேன்.

(விளக்கம் :  இதன் மூலம் இத்தனை நாளும் அறியாமையில் உழன்று கொண்டிருந்த தான் குருவின் உபதேசத்தினால்  கிடைத்த அறிவாற்றலினால்  ஸ்தூல  உடலும், அது இயங்கும் உலகம்  என்ற இரண்டுமே மாயையானவை என்பதை புரிந்து கொண்டு, பேரானந்த நிலையிலான விழிப்புணர்வு நிலைக்கு  சென்று  விட்டேன் என்பதாகக் கூறுகின்றார். ஆனால் அவருடைய பதிலில் அந்த அறிவாற்றல்  அவருக்கு யாரிடத்தில் இருந்து கிடைத்தது என்பதை குறிப்பிடவில்லை. ஒரு சாதகன் பேரானந்த விழிப்புணர்வு நிலையை அடைய வேண்டும் எனில் தியானம், யோகா போன்ற பலவிதமான சாதனாக்களை செய்கின்றான். பல போதனைகளை  பல குருக்களிடம் இருந்து பெறுகின்றான். இந்த நிலையில்தான் மன அமைதியை தேடி ஓடிக் கொண்டு இருந்த ஜனகர் காலம் காலமாக தியானம், யோகா போன்ற பலவிதமான சாதனாக்களை செய்து இருக்க வேண்டும். பல குருக்களின் போதனைகளையும் பெற்று இருக்க வேண்டும். ஆனாலும் அவற்றைக் கொண்டு அத்தனை காலமும் பேரானந்த நிலையான விழிப்புணர்வை பெற முடியாமல் இருந்த ஜனகருக்கு  ஒரு நெருப்புப் பொறியை தட்டி தீயை பற்ற வைத்ததை  போன்று,  அஷ்டவக்கரரிடம் இருந்து கிடைத்த போதனைகள் ஒரு க்ஷணத்தில் ஜனகருக்கு ஞானத்தை தந்திருக்க வேண்டும். இப்படியாக பல ஞானிகள் ஒரு க்ஷணத்தில் ஞானம் பெற்ற கதைகள் ஹிந்து மத நூல்களில் உண்டு ).

यथा न तोयतो भिन्नास्तरङ्गाः फेनबुद्बुदाः ।

आत्मनो न तथा भिन्नं विश्वमात्मविनिर्गतम् ॥

2.4   தண்ணீரில் இருந்து வெளிப்படும் நீர் குமிழிகளும்,  அலைகளும்,  நுரையும் அதே  தண்ணீரிலிருந்து வேறுபட்டவை அல்ல, ஒன்றுடன் ஒன்றிணைந்தவை என்பதை போலவேதான் உடலுக்குள் உள்ள ஜீவாத்மாவும்  மாயையான இந்த உலகில் உள்ள பரமாத்மாவும் வெவ்வேறானவை அல்ல.

{விளக்கம் :    ஜனக மன்னனின் ஆத்ம ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில்  ஆத்மா ( இது  ஆன்மா, ஜீவாத்மா, உயிர் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுன்றது ) மற்றும் பரமாத்மா என்பதைக்  குறித்து சாதகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு  விடை அளிப்பது போல,  அஷ்டவக்கரர்  விளக்கி  இருக்க வேண்டும் என்றே தெரிகின்றது.  மேலே கூறியவை ஜனகர்  தன்னை மறந்த நிலையில் கூறியவை ஆகும். தானே ஆத்மா என்ற நிலையில்  இருந்தவாறு ஜனகர் பேசியதாக  புரிந்து கொள்ள முடிவதினால், ஜனகரின் மனதிற்குள் இவற்றை எல்லாம் அஷ்டவக்கரர் பதிய வைத்து  இருக்க வேண்டும். இந்த விளக்கத்தின் மூலம் சாதகர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால்  ‘ஆத்மாவும் உலகமும் தனித்தனியானவை அல்ல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளவை.  எப்படி கடல் அலையில் இருந்து  எழும் நுரை மற்றும் தண்ணீர் குமிழிகள், அதே கடல் அலைகள் முழுவதும் படர்ந்து இருக்குமோ அதை போலவேதான் பரமாத்மாவும் உலகம் முழுவதிலும் வியாபித்து இருக்கின்றார்.  எப்படி கடல் அலையில் இருந்து  எழும் நுரை மற்றும் தண்ணீர் குமிழிகள், அதே கடல்  அலையில் மீண்டும்  ஐக்கியம் ஆகி மறைந்து மீண்டும் நுரை மற்றும் தண்ணீர் குமிழிகளாக வெளி வருமோ  அதை போலவேதான் பரமாத்மா எனும் ஜீவாத்மாவிலிருந்து வெளி வரும் பிரபஞ்சமும் அவர் உடலுக்குள் சென்று மறைந்து விட்டு மீண்டும் வெளிவரும்.  எத்தனை முறை வெளி வந்தாலும் அவற்றில் வியாபித்து உள்ள   பரமாத்மா எனும் ஜீவாத்மாவை அவற்றில் இருந்து பிரிக்க முடியாது’)

तन्तुमात्रो भवेद् एव पटो यद्वद् विचारितः ।

आत्मतन्मात्रमेवेदं तद्वद् विश्वं विचारितम् ॥

2.5   ஒரு துணியை கூர்த்து பார்த்தால் மட்டுமே அதில் ஓடும்  நூல் இழைகளை  காண முடியும். பின்னிப் பிணைந்த பல நூல் இழைகளே ஒரு துணி போல காட்சி அளிக்கின்றது.  அதே போலவே படைப்பை குறித்து சற்றே ஆழமாக  சிந்தனை செய்தால் பிரபஞ்சத்துடன் கண்களுக்குத் தெரியாத நிலையிலான அந்தர்யாமியாக  ஜீவாத்மா எனும் பரமாத்மா வியாபித்துக் கொண்டு  உள்ளதை உணர  முடியும்.

यथैवेक्षुरसे क्लृप्ता तेन व्याप्तैव शर्करा ।

तथा विश्वं मयि क्लृप्तं मया व्याप्तं निरन्तरम्

2.6  கரும்பில் இருந்து எடுக்கப்படும் கரும்பு சாறு முழுவதிலும் சக்கரை கலந்திருக்கும். அதை போலவேதான் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ள நான் அதன் வெளியிலும் உள்ளேன், உள்ளேயும் இருக்கின்றேன் .

(விளக்கம் :   ஜனக மன்னன் தனது ஆனந்த நிலையை வெளிப்படுத்தியதைப் போன்று அமைந்து உள்ள இந்த கருத்தும் ஞான நிலையை அடைய விரும்பும் ஆன்மீக சாதகர்களுக்காக கூறப்பட்டு உள்ளது.   ‘கரும்பு முழுவதும் இனிப்பான சக்கரை கலந்தே உள்ளது, ஆனால் அது வெளியில் தெரிவது இல்லை. கரும்பில் இருந்து சாற்றை பிழிந்து எடுத்து அதை காய்ச்சினால் மட்டுமே அது இனிப்பான சக்கரை மாறி விடும்.  அதை போலவேதான் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்து உள்ள பரமாத்மா எனும் ஜீவாத்மா நமது கண்களுக்கும்   தெரிவதில்லை,  அதை உணரவும் முடியாது. ஆன்மீக சொற்பொழிவுகளிலும், போதனைகளில் மட்டுமே கேட்க முடிகின்றது.  ஆனால் ஒரு சாதகன் தனது கடுமையான சாதனா பயிற்சி  மூலம்  ஆன்மீக சாதனாவின் உச்ச கட்ட நிலையை அடைந்தால், கரும்பில் இருந்து எடுக்கப்படும் இனிப்பான  சக்கரை போல, ஆனந்தமயமான    விழிப்புணர்வை பெறுகின்றான். அங்கு  ஒளி மயமான   ஜீவாத்மாவை பேரானந்த நிலையில் உணர்கிறான்).

आत्माज्ञानाज्जगद्भाति आत्मज्ञानान्न भासते ।

रज्ज्वज्ञानादहिर्भाति तज्ज्ञानाद् भासते न हि

2.7.  ஒருவரது அறியாமையினால் இருட்டில் தொங்கும் கயிறு கூட அவருக்கு   ஒரு  பாம்பு போல  கண்களுக்கு புலப்படும், ஆனால் வெளிச்சத்தில் பார்க்கும்போது அது கயிறு என்பது புலப்படும்.  அதே போலவே அறியாமையில் உழலும்போது மாயையான உலகம் கூட அழகாக தெரியும். ஆனால் விழுப்புணர்ச்சி பெற்ற பின்னர்  உலகம் மாயை என்பது புரியும். 

(விளக்கம் :  இதுவும் சாதகர்களுக்காக கூறப்பட்டுள்ள போதனை ஆகும்.  இதன்  மூலம் என்ன விளக்கப்பட்டு உள்ளது  என்றால் ‘இந்த உலகில் நாம் காண்பதும் உணர்வதும்  அனைத்துமே மாயை. நமது அறியாமையினால், அதாவது உலக இன்பங்களுடன் இணைந்து உள்ள நிலையில் உள்ளவரை   நாம் அதை வேறு வேறு  தோற்றங்களில் பார்க்கின்றோம். நாம் விழிப்புணர்ச்சி பெற்றதும், அதாவது ஞான நிலையை அடைந்து விட்டால் நம்மை சுற்றி உள்ள அனைத்துமே மாயையானவை என்பது புரிந்து விடும். நாம் அறியாமையில் இருக்கும் வரை நம்மால் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவை உணர முடியாது’. அதை எளிதில் விளக்கவே கயிறும் பாம்பும்  ஒரு உதாரணமாக கூறப்பட்டு உள்ளது).

प्रकाशो मे निजं रूपं नातिरिक्तोऽस्म्यहं ततः ।

यदा प्रकाशते विश्वं तदाहं भास एव हि

2.8   ஒளி என் வடிவம், இதைத் தவிர நான் வேறு ஒன்றும் இல்லை.  ஒளி இந்த உலகத்தை எப்படி பிரகாசிக்கச் செய்கிறதோ, அதே போல நான்  என்ற உணர்வையும்  ஒளிரச் செய்கிறது.

(விளக்கம் :  ஒளிமயமானவன்  என்றால், விளக்கு வெளிச்சம் அல்லது வெளிச்சம் தருபவன்  என்பதல்ல அர்த்தம். ஒளிமயம் என்பது இயக்கங்கள், விழிப்புணர்வு நிலை, ஆத்ம ஞானம் எனும் ஆத்ம ஒளி போன்றவற்றை  குறிக்கும்.  ஜீவாத்மாவை அடையும் நிலையை விழிப்புணர்வு பெற்ற நிலை அல்லது ஞான நிலை (highest  wisdom)  என்பார்கள்.   ஞானம் சிந்தனை மற்றும் உணர்வை விட ஆழமானது. ஆகவேதான்    ‘இயற்கையாகவே ஒளிமயமானவன்  நான்’  என்பதின் மூலம்  கூறப்படுவது என்ன என்றால் ‘ பிரகாசிக்கும் ஞான நிலையின் இருப்பிடமாக, இயற்கையாகவே உள்ளவன் நான்’ என்பது அர்த்தம்.  மாயையான இந்த உலகம்  ஜடமாக வெளி வந்த பின் அதற்கு   அறியாமை என்பதினால் எழும் மாயத் தோற்றத்தை தந்ததும்   ஜீவாத்மா எனும் அதே பரமாத்மாவான  நானே என்பதையே  ‘அதில்  ஒளி மயமாக   இருந்ததும் நான்’ என்று கூறப்பட்டு உள்ளது,  அதாவது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து உள்ளவன்  நான் என்பது பொருள்).

अहो विकल्पितं विश्वमज्ञानान्मयि भासते ।

रूप्यं शुक्तौ फणी रज्जौ वारि सूर्यकरे यथा ॥

2.9. கடலில் உள்ள முத்தை வெள்ளி உலோகம் என்றும்,  கானல் நீரை தண்ணீர் என்றும், ஒரு கயிற்றை பாம்பு என நினைப்பதும், பார்ப்பதும் அறியாமை. அதை போலவேதான் என்னால்தான் இந்த உலகம் உருவானது என நினைப்பதும் அறியாமையே ஆகும்

(விளக்கம் : இதில் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால்  எப்படி ஒருவர் அறியாமையில் முத்தை விலை மதிப்பற்ற  வெள்ளி போன்றும்,  கானல் நீரை போன்றும், தொங்குகின்ற  ஒரு கயிற்றை பாம்பு என பார்க்கிறார்களோ அதை போலவே இயற்கையாகவே தான் ஒளிர்மயவானவன் என்றும் தன்னால்தான் இந்த உலகம் தோன்றியதாகவும் ஜனகன் நினைப்பது ஆச்சரியமானது).

मत्तो विनिर्गतं विश्वं मय्येव लयमेष्यति।

मृदि कुम्भोजले बीचिकनकेकटकं यथा ॥

2.10.  மண் குடம் உடைந்த பின் மீண்டும் மண்ணாகி விடும். உலோகங்களினால் செய்யப்பட்ட நகைகளை  உருகினால் மீண்டும் அவை உலோகமாகி விடும், தண்ணீரில் இருந்து எழும் நீர் அலைகள் மீண்டும் நீரில் மூழ்கி மறைந்து விடும் என்பவற்றை போலவே  என்னிடம் இருந்து வெளியான  உலகம்   மீண்டும் எனக்குள்ளே வந்து  மறைந்து விடும்.

(விளக்கம் :  எவற்றில் இருந்து எது பிறக்கின்றதோ அல்லது புதிய  வடிவம் பெறுகின்றதோ, அவை அழிந்த பின் மீண்டும் மூல நிலைக்கு சென்று விடும்  என்பதை   மூன்று ஆதாரங்கள் மூலம்   விளக்கப்பட்டு உள்ளது.  மண் குடம் உடைந்த பின் மீண்டும் மண்ணாகி விடும். உலோகங்களினால் செய்யப்பட்ட நகைகளை  உருகினால் மீண்டும் அவை உலோகமாகி விடும், தண்ணீரில் இருந்து எழும் நீர் அலைகள் மீண்டும் நீரில் மூழ்கி மறைந்து விடும். அவற்றை  போன்றுதான்  பரமாத்மாவின் இருந்து வெளிவந்த மாயையான உலகமும் அந்தந்த யுகங்களின் முடிவில் அது வெளியான இடத்துக்கு -பரமாத்மாவுடன்-  சென்று மறைந்து விடும் என்பதே இயற்கையின் நியதி ).

अहो अहं नमो मह्यं विनाशो यस्य नास्ति मे ।

ब्रह्मादिस्तम्बपर्यन्तं जगन्नाशोऽपि तिष्ठतः||

2.11. எத்தனை  அற்புதமானவன் நான்.  என்னை நானே பாராட்டிக்  கொள்ள வேண்டும். ஏன் என்றால்  இந்த பிரபஞ்சத்தைப்  படைத்த பிரும்மா  முதல் படைக்கப்பட்ட புல்   பூண்டுவரை  அனைத்தும் அழிந்தால் கூட, எனக்கு அழிவும்  இல்லை, சிதைவும்  இல்லை என்பது அற்புதம்தானே.

(விளக்கம் : இதன் மூலம் சாதகர்களுக்கு என்ன விளக்கப்படுகின்றது என்றால், ‘பரமாத்மாவிடம் இருந்து வெளியான உலகம் அழிவற்றது. அது பரமாத்மாவின் இருந்து  வெளியாகி  அவருக்குளேயே சென்று மறைந்து விடுகின்றது, அதற்கு அழிவு  இல்லை.  உலகம் என்ன தோற்றத்தில்  இருந்தது என்பதை எவரிடமாவது கேட்டால் அதில் அது இருந்தது, இது இருந்தது என்பதே பதிலாக இருக்கும், ஆனால் எதுவுமே இல்லாத  உலகத்தின் தோற்றம் என்ன என்று மீண்டும் கேட்டால் பதில் கூற இயலாது. ஏன் எனில் அது அகண்ட வெளி, மாயையான தோற்றம் கொண்டது  அவ்வளவே.  ஒவ்வொரு யுக முடிவிலும் தன்னுள் தன்னுள் மறைந்து விடும்  பிரபஞ்சத்தை மீண்டும் பரமாத்மாவே வெளிப்படுத்துகின்றார்.

பிரளய காலத்தில்  பிரும்மா  முதல், அவரால்  படைக்கப்பட்ட புல்   பூண்டுவரை  அனைத்தும்  அழிந்து விடும் என்பது நியதி. ஆகவே பிரும்மாவிற்கு கூட அழிவு என்பது உண்டு என்றாலும் ஒளி மயமான பரமாத்மா எனும் ஜீவாத்மாவிற்கு என்றுமே அழிவில்லை. அது உருவமற்றது, நிலையானது, சுதந்திரமானது, தூய்மையானது. பரமாத்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட உலகில் படைக்கப்பட்ட அனைத்திலும், அவை எந்த வித  தோற்றங்களில் இருந்தாலும் பரமாத்மா எனும் ஜீவாத்மா அவற்றில் வியாபித்து உள்ளார் எனும்போது பிரும்மா முதல் அனைத்துமே அழிந்தாலும் கூட பரமாத்மா எனும் ஜீவாத்மாவிற்கு அழிவில்லை என்பது ஆச்சர்யமான நிலை அல்லவா’).

अहो अहं नमो मह्यमेकोऽहं देहवानपि ।

क्वचिन्न गन्ता नागन्ता व्याप्य विश्वमवस्थितः

2.12. எத்தனை  அற்புதமானவன் நான். நானே என்னை பாராட்டிக்  கொள்ள வேண்டும். ஏன் என்றால்  நான் ஒரு சடலம் போன்ற  ஒரு உடலுக்குள் ஏகாந்தமாக  தனிமையில்  இருந்தாலும், அங்கிருந்து வெளியில் செல்வதும் இல்லை, வெளியில் இருந்து உள்ளே வருவதும் இல்லை. அதன் காரணம் நான் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவன் என்பதே. 

(விளக்கம் :  ‘பஞ்ச பூதங்களினால் ஆட்கொள்ளப்பட்டுள்ள சடலம் போன்ற வெவ்வேறு  உடல்களில் ஜீவாத்மா வசித்தாலும், அந்த உடல் எதிர்கொள்ளும்   பல்வேறு வகைகளிலான சுகங்களையும் துக்கங்களையும் ஜீவாத்மா அனுபவிப்பது இல்லை. சுதந்திரமான, தனிமையான, தூய்மையான  ஜீவாத்மா தனது தனித் தன்மையை இழக்காமல்,  அந்த உடல்களுக்கெல்லாம்  ஏற்படும் மாற்றங்களினால் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல்,    எந்த மாற்றங்களையும் அடையாமலும்   உள்ளது.   விஷம் கலந்த, கொதிக்கும், நறுமணம் மிக்க, துர்நாற்றம் வீசும் மற்றும் அசுத்தமான சாக்கடையில் ஓடும்  தண்ணீரில்  சூரியனின் ஒளி கிரணங்கள் விழுந்தாலும் அவற்றினால் அந்த சூரியனின் ஒளிகளில் மாற்றம் ஏற்படுகிறதா?  சூரிய ஒளி அதே தன்மையில்தான் உள்ளது.

அது போலத்தான் எல்லா உயிர்களிலும் கலந்து உள்ள ஜீவாத்மாவும் எந்த பாதிப்பையும் அடைவது இல்லை, அது அதன் தன்மையில் இருந்து மாறுபடுவதில்லை. ஆகாயத்தை பாருங்கள். பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளது. அது எங்கு துவங்கி எங்கு முடிகின்றது என்பது தெரிகின்றதா, அல்லது  சூரிய ஒளி அதன் மீது விழுந்தாலும், சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றதா?  ஆகாயம் ஆகாயமாகவே உள்ளது என்பதை போலவேதான் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ள ஜீவாத்மாவும்  எந்த நிலையிலும், எந்த மாறுதலுக்கும்  உள்ளாவதில்லை என்பதினால் ஜீவாத்மா தானே தன்னையே  போற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதாக அஷ்டவக்கரர் கூறினார்).

अहो अहं नमो मह्यं दक्षो नास्तीह मत्समः।

असंस्पृश्य शरीरेण येन विश्वं चिरं धृतम्॥

2.13. எத்தனை  அற்புதமானவன் நான். என்னைவிட புத்திசாலி எவரும் கிடையாது என என்னை நானே போற்றிக் கொள்ள வேண்டும். இந்த உலகம் முழுவதும் நான் வியாபித்து இருந்தாலும் எதையும் தொடாமலேயே அனைத்திலும் பரவி உள்ளேன் அல்லவா. 

(விளக்கம் : இதன் மூலம் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால் ‘எந்த ஒரு செயலை செய்தாலும்  கைகளினாலோ, கால்களினாலோ அல்லது உடலுடனோ  ஒரு கருவியை அல்லது ஒரு பொருளை  கையில் ஏந்திக் கொண்டுதான்  செய்ய முடியும்.  ஒவ்வொரு செயலிலும் எதையாவது, எதன்  மூலமாக தொட்டுக் கொண்டே இருக்க வேண்டி இருக்கும்.     ஆனால் எல்லையற்ற, என்றும் நிலையான பரமாத்மாவின் அங்கமான ஜீவாத்மா அது தங்கி உள்ள உடலையோ அல்லது பொருளையோ தன்னுடன் எடுத்துச் செல்லாமல், அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளது என்ற உண்மை பெரிய அற்புதம் அல்லவா’).

अहो अहं नमो मह्यं यस्य मे नास्ति किञ्चन ।

अथवा यस्य मे सर्वं यद् वाङ्मनसगोचरम् ॥

2.14.  எத்தனை  அற்புதமானவன் நான் என நானே பெருமைப் பட்டுக் கொள்ள  வேண்டும். காரணம் என்னிடம் ஒன்றுமில்லை என்றாலும் நான் அனைவருடைய மனது, பேச்சு மற்றும் எண்ணங்களாக  இருக்கின்றேன் அல்லவா.

(விளக்கம்: இதன் மூலம் என்ன கூறப்படுகிறது என்றால் ‘ஆன்மீக கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் ஒரு உடலுக்குள் உள்ள ஜீவாத்மா   என்பது தனிமையானது, எதனாலும் களங்கப்படாதது, பாதிப்புக்குள்ளாகாதது, எந்த மாறுதலுக்கும் உட்படாதது என்றே கூற வேண்டும். அதனிடம் ஒன்றுமே கிடையாது. அந்த ஜீவாத்மா தங்கி உள்ள  உடலில் இருந்து  வெளிப்படும் பேச்சு, எண்ணங்கள் போன்ற எதையுமே ஜீவாத்மா இயக்கவில்லை என்றாலும் உடலின் அனைத்து செயல்களுக்கும்  அந்த  ஜடமான  உடலில் உள்ள உயிரே காரணம் என ஜீவாத்மாவையும் சேர்த்தே அல்லவா கூறுகின்றார்கள். ஆகவே எதுவுமே அற்ற ஜீவாத்மாவை ஒதுக்கி விட்டு எதுவுமே கிடையாது என்பது கூட  அதற்கு பெருமைதானே’).

ज्ञानं ज्ञेयं तथा ज्ञाता त्रितयं नास्ति वास्तवं ।

अज्ञानाद् भाति यत्रेदं सोऽहमस्मि निरंजनः

2.15.  உண்மையைக் கூறினால் மெய்யறிவு, அறிவின் பொருள் மற்றும் அறிவின் செயல் என்ற எதுவுமே கிடையாது. ஆனால்  அறியாமையினால் அந்த மூன்றுமே களங்கமற்ற என்னுடன் சம்மந்தப்பட்டவை என நினைக்கின்றார்கள்.

(விளக்கம் :  ஆன்மீக கண்ணோட்டத்தில்  பார்க்கும்போது ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள த்ரிபுத்தி என்ற மெய்யறிவு, அறிவின் பொருள் மற்றும் அறிவின் செயல் என்ற மூன்றுமே மன எண்ணங்களின் செயல்பாடுகளே என்பது தெரியும். அவை மாயையானவை. ஆனால் அறியாமையினால் அவற்றை இயக்குவது ஆன்மா என்பதாக நினைக்கின்றார்கள். விழிப்புணர்ச்சி பெற்றவனோ ஜீவாத்மா என்பது அவை அனைத்திற்கும் அப்பாற்பட்ட நிலையில் உள்ளது என்ற உண்மையை உணர்கிறான்).

द्वैतमूलमहो दुःखं नान्यत्तस्याऽस्ति भेषजम् ।

दृश्यमेतन् मृषा सर्वमेकोऽहं चिद्रसोमलः ॥

2.16. இதுவா அல்லது அதுவா என்ற இரு பக்க நிலைபாடே அனைத்து துன்பங்களுக்கும் காரணம். இந்த  அறியாமையில் இருந்து விடுபட   வேண்டும் எனில்   நாம் காணுவது எதுவும்  நிஜமல்ல, மாயை  என்றும், விழிப்புணர்வு நிலையில் உள்ள  ஜீவாத்மா மட்டுமே உண்மையானது, தூய்மையானது மற்றும் பேரானந்த நிலையை தருவது  என்பதையும்   நம்ப வேண்டும்.

(விளக்கம்:  இன்பமும் துன்பமும் ஏற்படுவது எதனால் என்றால் எந்த ஒரு செயலிலும் ஒரு ஸ்திரமான முடிவு எடுக்க முடியாமல் அலைபாயும் மனதுடன் இருப்பதுதான் காரணம் .   எதை செய்தால் நமக்கு நம்மை கிடைக்கும் என்று எதற்கெடுத்தாலும் எனக்கு, எனக்கு என தனக்கே அனைத்து  நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற மன நிலையோடு செயல்படும்போது,  துயரங்களையும்,  துன்பங்களையும் சந்திக்க நேரிடுகின்றது. ஆகவே அலைபாயும் மனநிலை  என்ற அறியாமையினால் ஏற்படும் குழப்பங்களே அனைத்து துன்ப நிலைக்கும் காரணம்,  என்றுமே நிலையான ஜீவாத்மா மட்டுமே உண்மையானது, தூய்மையானது மற்றும் பேரானந்த நிலையை தருவது. தன்னை  சுற்றி நடப்பவை அனைத்துமே மாயையானவை என்பதை சாதகன் பரிபூரணமாக உணர வேண்டும். அப்போதுதான் அவனால்  பேரானந்த நிலையை எட்ட முடியும்).

बोधमात्रोऽहमज्ञानाद् उपाधिः कल्पितो मया ।

एवं विमृशतो नित्यं निर्विकल्पे स्थितिर्मम ॥

2.17  விழிப்புணர்வு பெற்ற நிலையில் உள்ள நான்  அறியாமையால் பிற பண்புகளை கொண்ட உடலுடன் உள்ளவன் என்று கற்பனை செய்து கொண்டிருந்தாலும் அந்த மாய  மன எண்ண ஓட்டங்களை அழித்துக்  கொண்டு  நானே பிரும்மம்  என்ற சிந்தனையோடு நிலையாக  இருக்கின்றேன்.

(விளக்கம் : இதில் கூறப்பட்டு உள்ளது என்ன எனில் ‘ ஜீவாத்மா என்பது உணரப்பட வேண்டிய உருவகம். அதற்கு உருவம் கிடையாது.   ஜீவாத்மாவிற்கு  எந்த இயக்கமும் இல்லை,  எதன் மீதும் பற்றும்  இல்லை.  அது சுதந்திரமானது, அழிவற்றது, தூய்மையானது மற்றும் நிலையானது என்ற  உண்மையை சாதகன் உணர்ந்து  கொண்டு,  தான் விழிப்புணர்வு கொண்டவன் என்பதில் நிலையாக இருக்க வேண்டும். அறியாமையில்  இந்த உடல் என்னுடையது  என்று   நான் முன்னர் கற்பனை செய்து கொண்டிருந்தாலும்  நான் தூய்மையான விழிப்புணர்வை உடையவன், நானே பிரும்மன்  என்ற சிந்தனையுடன் இருக்கின்றேன்.)

न मे बन्धोऽस्ति मोक्षो वा भ्रान्तिः शान्ता निराश्रया ।

अहो मयि स्थितं विश्वं वस्तुतो न मयि स्थितम् ॥

2.18 நான் அடிமையும் அல்ல விடுதலை பெற்றவனும் இல்லை.  என்னுள் இருந்த இப்படியான மாயையான எண்ணங்கள் அனைத்துமே அழிந்து விட்டன.  இந்த உலகமே என்னுள் (பரமாத்மா) அடங்கி  உள்ளது என்றாலும்  அதுவும் உண்மை அல்ல.

(விளக்கம் : இது ஆழமான தத்துவம் அடங்கிய போதனையாகும். நான் அடிமையும் அல்ல விடுதலை பெற்றவனும் இல்லை என்று கூறி உள்ளது  ஜீவாத்மாவின் நிலை ஆகும். ஜீவாத்மா சுதந்திரமானது, அழிவற்றது, நிலையானது மற்றும் எவருக்கும் எந்த நிலையிலும்  கட்டுப்பட்டது அல்ல எனும்போது  விடுதலை மற்றும் அடிமைத்தனம் எங்கிருந்து அதற்கு  ஏற்படும்? இங்கு விடுதலை என்பது மோட்ஷ நிலையைக் குறிக்கும். அடிமைத்தனம் என்பது ஐம்புலன்களோடும், இன்ப, துன்பங்களோடும், காம இச்சைகளோடும், அனைத்து விதமான எதிர்பார்புகளோடும்  வாழும் மானிடத்  தன்மையிலான உடலைக்   குறிக்கும். அழியாக் கூடிய சடலம் போன்ற உடலில் தங்கி உள்ள ஜீவாத்மாவிற்கு அவற்றினால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அந்த சடலம் அழிந்தாலும் ஜீவாத்மாவிற்கு அழிவில்லை என்பதின் காரணம் ஏகாந்தமான நிலையில் உள்ள   பரமாத்மாவிற்கு உருவம் கூட  இல்லை.  மாயையான உலகம் எப்படி அவருக்குள் அடங்கி இருக்க முடியும்? அதுவும் உண்மை இல்லை அல்ல, ஏன் எனில்   உலகம் என்று நாம் காண்பது கூட பரமாத்மாவினால் வெளிப்படுத்தப்பட்ட  ஒரு மாயத் தோற்றம், அவ்வளவே ).

सशरीरमिदं विश्वं न किञ्चिदिति निश्चितम् ।

शुद्धचिन्मात्र आत्मा च तत्कस्मिन् कल्पनाधुना ॥

2.19  இந்த உடல் மற்றும் உலக இயக்கங்கள் அனைத்துமே மாயை, கற்பனையானவை. ஆகவே  ஆன்மீக விழிப்புணர்ச்சி  எனும் ஞானம் பெற்றுள்ள  நான் (ஜீவாத்மா)  அவற்றைக் குறித்து எதற்காக கற்பனை செய்ய வேண்டும்?

शरीरं स्वर्गनरकौ बन्धमोक्षौ भयं तथा ।

कल्पनामात्रमेवैतत् किं मे कार्यं चिदात्मनः ॥

2.20 இந்த உடல், ஸ்வர்கம், நரகம்,விடுதலை, அடிமைத்தனம்,  பயம் போன்ற அனைத்துமே கற்பனையானவை  எனும்போது தூய விழிப்புணர்ச்சி பெற்றுள்ள எனக்கும் (ஜீவாத்மா) அவற்றுக்கும் இனி எந்த வகையில்  சம்மந்தம் இருக்க முடியும்?  

(விளக்கம் : சாதகன் ஒருவன் உடல், ஸ்வர்கம், நரகம்,விடுதலை, அடிமைத்தனம்,  பயம் போன்றவற்றை நம்பினால், அவன் அவற்றின் மீது பற்று கொண்டவனாகி விடுகின்றான்.    அந்த  நிலை அனைத்துமே உடலை சார்ந்தவை. நமது உடலை மூன்று உடல் தத்துவங்களாக கூறுவார்கள்.  தோல் மற்றும் தசைகளிலால் ஆன உயிரோட்டமான உடலையே முழு சரீரம் அல்லது காரண உடல்  என்கின்றார்கள்.  காரண உடலில் தோல், தசை போன்றவை தன்னிச்சையாக இயங்க முடியாத ஜடப் பொருள்கள் பொருட்கள் உள்ளன.  அவற்றை  தூல உடல் எனப்படும்  இதயம், மூளை, சிறுநீரகம், சுவாச மண்டலம் ரத்த நரம்புகள் என்பவை இயக்குகின்றன. ஆனால் அந்த தூல உடலை இயக்குவது யார்? அது வேறு யாரும் அல்ல, அதை இயக்குவது சூக்கும  உடலில் உள்ள உயிர் அல்லது உயிராற்றல் எனும் கண்களுக்கு புலப்படாத சக்தி ஆகும்  என்கிறோம்.  காரண உடல்  அல்லது காரண  சரீரம் வெளித் தெரியும் உடல் என்றால் சூக்கும சரீரம் என்பது ஞானக் கண்களுக்குத் மட்டுமே தெரியும் சரீரம் ஆகும் என்பதினால்தான் அதையே ஜீவாத்மா என்றும் நம்புவார்கள்.

உடலின் உள்ளும், வெளியிலும் உள்ள மனதின் எண்ண அலைகளினால் தோற்றுவிக்கப்படுபவை ஸ்வர்கம், நரகம், விடுதலை, அடிமைத்தனம்,  பயம் போன்ற மாயத் தோற்றங்கள் ஆகும்.  அவற்றை எந்த மனிதர்களும் பார்த்தது இல்லை . அதே சமயம் அந்த உடலில் சுதந்திரமாக, ஏகாந்தமாக, தூய்மையான, நிலையான, அழிவற்ற, அமைதியான நிலையில் உள்ள ஜீவாத்மா, அந்த ஜடமான உடலில் இருந்தாலும்  நடப்பவை  எவற்றின் மீதும் பற்று இல்லாதது. உலகின் எந்த செயல்பாடுகளும் ஜீவாத்மாவை  பாதிப்பது இல்லை.  ஜீவாத்மாவை பொறுத்தவரை  இந்த உலகமே மாயை. அதில் ஏற்படும் எந்த நிகழ்வுகளும் விழிப்புணர்வு பெற்ற நிலையில் உள்ள ஜீவாத்மாவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை எனும்போது இந்த உலகில் நடைபெறும்  அனைத்து நிகழ்வுகளுக்கும், ஸ்வர்கம், நரகம்,விடுதலை, அடிமைத்தனம்,  பயம்  போன்ற மாயையான எண்ணங்களுக்கும், அந்த ஜீவாத்மாவுடன் கலந்து விட்ட  விழிப்புணர்ச்சி பெற்றவனுக்கு  எப்படி சம்மந்தம் இருக்க முடியும்?).

अहो जनसमूहेऽपि न द्वैतं पश्यतो मम ।

अरण्यमिव संवृत्तं क्व रतिं करवाण्यहम् ॥

2.21  நான்  இருமை தத்துவம் கொண்டவன் அல்ல . உண்மையற்ற பெரும் திரளான மக்கள் கூட்டத்தில் நான் இருந்தாலும், வறண்ட பாலைவனத்தில், தனிமையில் உள்ளதை போன்ற உணர்விலேதான் இருக்கின்றேன்.  உண்மையற்ற மக்கள் கூட்டத்தில் யாருடன் நான்  இணைந்து இருக்க முடியும்? 

(விளக்கம்:  இதன் மூலம் என்ன விளக்கப்பட்டு உள்ளது என்றால் ‘தூய ஆத்மாவிற்கு இருமை தத்துவம் போன்ற நிலைகள் கிடையாது. இருமை தத்துவம் என்பது அத்வைதம் மற்றும் துவைதத்தை குறிப்பதாகும். அத்வைதம் என்பதின் அடிப்படைக்  கொள்கை அனைத்தும் கடவுள், ஆன்மா மற்றும் பரமாத்மா இரண்டும் ஒன்றே என்பதாகும்.   துவைதம்  என்பதின் அடிப்படைக் கொள்கை ஆன்மா மற்றும் பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை என்பதாகும்.  ஆனால் எந்தவிதமான பற்றும் இல்லாத, தனித்துவமான, நிலையான மற்றும் தூய்மையான விழிப்புணர்ச்சி பெற்ற, நிலையில் உள்ள  ஆத்மாவிற்கு எப்படி  கொள்கைகள் இருக்க முடியும்? கொள்கைகள் மனதோடு சம்மந்தப்பட்டவை. மனதை வியாபித்து உள்ளவை அலைபாயும் எண்ணங்கள். அவை ஐம்புலன்களுக்கும் கட்டுப்பட்டவை . ஆனால் ஆத்மாவோ, அவை அனைத்துமே மாயை என்கின்றது. உடலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்ற நிலையில் உள்ளது ஆத்மா.  ஆகவே   எந்த கொள்கை கொண்ட மக்களானாலும் சரி,  எந்த மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் சரி, அனைத்து  மதத்தினர்  உடலிலும் வியாபித்து உள்ள ஆத்மாவிற்கு எப்படி ஜாதி, மத அல்லது இனப் பிரிவினை இருக்க முடியும்?  இந்த உலகமே மாயை, உண்மையற்றது  எனும் கருத்துடைய ஜீவாத்மா எத்தனை பெரிய ஜனத்திரளில் இருந்தாலும் பற்று இல்லாமலேதான் இருக்கின்றது.  அதனால்தான் அந்த நிலையில் உள்ள தன்னை வர்ணிக்கும்போது ‘வறண்ட பாலைவனத்தில்’ உள்ளதை போல இருப்பதாக கூறுகின்றார்’).

नाहं देहो न मे देहो जीवो नाहमहं हि चित् ।

अयमेव हि मे बन्ध आसीद्या जीविते स्पृहा ॥

2.22   இந்த உடல்  நான் அல்ல.   எனக்கு  எந்த விதமான உடலும்  கிடையாது.  நான் அறியாமையில் உழலும் உயிருள்ள ஜீவனும்  அல்ல.  நான் முழுமையான விழிப்புணர்ச்சி பெற்ற நிலையில் உள்ளவன்.   நான்  வாழ வேண்டும் என்ற தாகத்தோடு இருந்ததுதான் என் அடிமைத்தனம்.

(விளக்கம்:  முதலில் அறியாமையினால் இருந்ததினால் இன்னும் தான் வாழ வேண்டும்,  இன்னும் வாழ வேண்டும்  என்ற நிலையில் முன்னர் இருந்தது தனது  அடிமைத்தனம் என்று ஜனக மன்னன் ஒப்புக் கொண்டார். ஆனால் அதன் பின் அஷ்டவாகரரின் அறிவுரையினால்  விழிப்புணர்ச்சி பெற்று பேரானந்த நிலையில்  தான் சென்று விட்டதாக கூறிக் கொள்ளும்   ஜனகர்   ‘இந்த உடலே விஷத் தன்மையிலானது, ஆனால் அதை அறிந்து கொண்டவுடன் அந்த விஷத்தில் இருந்து வெளியேறி விட்டேன்’ என்று  தான் உணர்ந்ததை அஷ்டவக்கரரிடம் கூறிக் கொண்டு  இருந்தார். விஷத்தன்மை கொண்ட உடல்  என்பது ‘உண்மையற்ற, பொய்கள் நிறைந்த, பேதங்கள் அனைத்தும் கூடிய, உலக பற்றுக்களால் நிறைந்த, பிராரப்த கர்ம வினைகளினால் சூழப்பட்டு இருந்த   உடல்’ என்பதைக் குறிக்கின்றது).

अहो भुवनकल्लोलैर्विचित्रैर्द्राक् समुत्थितम् ।

मय्यनन्तमहाम्भोधौ चित्तवाते समुद्यते ॥

2.23  பெரும் கடல் போன்று படர்ந்து விரிந்துள்ள விழிப்புணர்ச்சி பெற்ற நிலையில் இருந்தாலும் காற்றினால் எழும்  கடல் அலைகள் போல பல்வேறு எண்ணங்கள் புதிதாக  திடீரென்று எழுகிறது

(விளக்கம் : மேலே கூறிய வசனம் மூலம்  ஜனகர்  தன்னை விரிந்து படர்ந்த கடலைப் போன்று உள்ளதாக வர்ணித்துக் கொள்ளுகிறார். காற்று வீசும்போது  கடலில் அலைகள் எழுந்து அதே கடலில் மறைகின்றன.  ஆனால் காற்று வீசுவது அடங்கியதும் அலைகளின் எழுச்சியும் குறைந்து விடும். அதை போல மனம் அமைதியாக இருக்கும்போது எந்த எண்ணங்களும் எழுவது இல்லை, ஆனால் மனதில் அலைகள் போன்ற எண்ணங்கள் தோன்றத்  துவங்கியதும் மீண்டும்  மனதில் அலைகள் பாயத் துவங்கி உலக இச்சைகள் மற்றும்  ஆசா பாசங்களோடு இணைந்து கொள்கின்றது.  கடலில் எப்படி அலைகள் எழுகின்றனவோ அப்படித்தான் மனதிலும் எண்ண அலைகள் எழுந்து கொண்டே உள்ளது என்பவர் எப்படி  கடல் அலைகள் கடல் நீரில் இருந்து  வேறுபட்டதல்ல என்பது உண்மையோ அதே போலவேதான் பிரபஞ்சமும் என்னிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதையும் கூறுகின்றார். ‘என்னிடம் இருந்து’ என்பது ஜீவாத்மாவை  குறிக்கும் நிலை ஆகும்).

मय्यनन्तमहाम्भोधौ चित्तवाते प्रशाम्यति ।

अभाग्याज्जीववणिजो जगत्पोतो विनश्वरः ॥

2.24  படர்ந்து விரிந்துள்ள எல்லை இல்லாத கடல் போன்ற விழிப்புணர்ச்சி பெற்ற நிலையில்,   காற்றினால் எழும் கடல் அலைகள் போன்று எண்ணங்கள் எழுந்தாலும்,  அனைத்து எண்ணங்களும், கடலில் செல்லும் பெரிய படகு பாறையில்  மோதி கடலில்  மூழ்கி மறைந்து விடுவதை போல, நான் பெற்றுள்ள  விழிப்புணர்ச்சியில் அழிந்து விடுகின்றன.

मय्यनन्तमहाम्भोधावाश्चर्यं जीववीचयः ।

उद्यन्ति घ्नन्ति खेलन्ति प्रविशन्ति स्वभावतः ॥

2.25    ஆஹா என்ன அற்புதம் ! நான் எனும் அற்புதமான  எல்லையே இல்லாத  கடலில், ஜீவன் எனும் உயிர்  அலைகள் அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப எழுவதும், மோதிக் கொள்வதையும், விளையாடுவதையும், அழிந்து போவதையும்  காண எத்தனை அற்புதமாக உள்ளது. 

(விளக்கம் : இந்த வசனம் மூலம் ‘பல்வேறு மாயை தோற்றங்களில் காணப்படும்  உலகை சுற்றியவாறு  அலை மோதிக் கொண்டு இருக்கும் அறியாமை என்ற எண்ணங்கள்,  விழிப்புணர்வு எனும் பெரும் கடலில் முழுகி மறைந்து விடுகின்றன. அலை பாயும் கடல் நீரில்  மிதந்தபடி  சென்று கொண்டிருக்கும்  ஒரு படகு,  கடல் அலைகளுக்கு ஏற்றது போல மேலும் கீழும் எழும்பி சென்றவாறு இருந்தாலும், பெரும் அலைகளுக்கு இடையே உள்ள பாறையை பார்க்காமல் எப்படி அதன் மீது மோதி முழுகி விடுமோ, அப்படித்தான் தன் கட்டுப்பாட்டை இழந்து மேலெழும்பும் அறியாமை எனும் மன உணர்வுகள்,  அவ்வப்போது மேலெழுவதும்  விழிப்புணர்வு நிலையில் அழிந்து போவதையும்  காண அற்புதமாக உள்ளது’ என்று ஜனகர்  ஆனந்தமாக கூறினார்).

மூன்றாம் அத்தியாயம்

ஜனகர் கூறிய ஒப்புதல் வாக்குமூலம் போன்ற பதில்கள்  அஷ்டவக்கரருக்கு திருப்தியை தரவில்லை. ஜனகர்  இன்னமும் முழுமையான  ஞான நிலையை எட்டவில்லை என்பதாக  அஷ்டவக்கரர் கருதியதால் தனது சிஷ்யன் உண்மையிலேயே விழிப்புணர்வு பெற்று விட்டாரா என்பதை  சோதனை செய்து பார்க்கும் விதத்தில் சில கேள்விகளை எழுப்பினார்.

अविनाशिनमात्मानमेकं विज्ञाय तत्त्वतः ।

तवात्मज्ञानस्य धीरस्य कथमर्थार्जने रतिः ॥

3.1  பேரானந்த நிலையிலான  ஜீவாத்மா  என்ற உண்மையை உணர்ந்து கொண்டதாக  கூறும், அனைத்தையும் துறந்த  ஞானியான  நீங்கள்,  எதற்காக மேலும் செல்வத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொள்கின்றீர்கள்?

(விளக்கம் :  ஜனகனின் ஒப்புதல் வாக்கு மூலம் போன்ற பதிலில் பல முரண்பாடுகள் காணப்பட்டன. அவர் ஆட்சியை துறப்பதாக கூறவில்லை. அவரது உள் மனம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவரே முரண்பாடான கருத்துக்களைக் கூறினார். எப்போதெல்லாம் மனதில் எண்ண அலைகள் மேலெழுந்ததோ  அவை அனைத்தும்  தான் பெற்ற விழிப்புணர்வில் அழிந்து போகின்றன என்பதாக கூறியதில் இருந்து  ஜனகர் இன்னமும் முழுமையான ஆத்ம விடுதலை பெறவில்லை, அவ்வப்போது அவரது அறியாமை எனும் மன எண்ண ஓட்டங்கள் வெளி வந்து கொண்டே உள்ளது என்பது தெளிவாக தெரிந்தது. அதை சுட்டிக் காட்டும் விதத்திலேயே அஷ்டவக்கரர் ‘பேரானந்த நிலையிலான  ஜீவாத்மாவை  உணர்ந்து கொண்டதாக  கூறும் நீங்கள்,  எதற்காக மேலும் செல்வத்தின் மீதான ஆசைகளை விடவில்லை’  என்று கேட்டார்).

आत्माज्ञानादहो प्रीतिर्विषयभ्रमगोचरे ।

शुक्तेरज्ञानतो लोभो यथा रजतविभ्रमे ॥

3.2  கடலில் மின்னும் கிளிஞ்சலை வெள்ளி என்று நினைத்து அதை அடைய   ஆசை கொள்வது அறியாமை. அதை போன்ற ஒரு அறியாமையினால்தான்  விழிப்புணர்வில் உள்ளவன் என்பதை மறந்து  மாயையான  பொருட்கள் மீது மோகம் கொள்வதும் ஆகும் .

(விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னனுக்கு அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘அறியாமைதான் உலகில் உள்ள மாயையான பொருட்கள் மீது ஆசை வைக்கத் தூண்டும்.  ஜனகருக்கு உலக பொருட்கள் மீது எழும் ஆசைகளின் காரணமும் அதே அறியாமைதான். அந்த ஆசைகள் மன சஞ்சலங்களினால் எழுகின்றது. அவற்றை முற்றிலும் அழித்துக் கொண்டால்தான்  ஞான நிலையின் பாதையில் நுழைய முடியும். மின்னும் கிளிஞ்சலை வெள்ளி என்று எண்ணிக் கொண்டு அதை அடைய முயல்பவன் நிலைதான் ஜனகருக்கு செல்வத்தின் மீதான நாட்டம்  என்பதும்.  அதே அறியாமை எனும் நிலையில் உள்ளத்தினால்தான்   அரச போகத்தையும் ஜனகர்  துறக்கவில்லை. ஜனகர் தன்னை முற்றிலும் பற்றற்ற   நிலையில் வைத்திருக்கவில்லை, அறியாமையை முற்றிலும் அழித்துக் கொள்ளவில்லை  என்பதினால்தான்  ஜனகருக்கும் அவ்வப்போது மன எண்ண ஓட்டங்கள் எழுந்து, அவை  விழிப்புணர்வு நிலையில்  அழிந்து போகின்றன.  உண்மையில் ஜனகர் பேரானந்த நிலையை முழுமையாக அடையவில்லை’).

विश्वं स्फुरति यत्रेदं तरङ्गा इव सागरे ।

सोऽहमस्मीति विज्ञाय किं दीन इव धावसि ॥

3.3  உண்மையிலேயே நீ விழிப்புணர்வு  நிலையிலான  ஜீவாத்மாவை புரிந்து கொண்டு விட்டவன் என்றால், கடல் அலைகள் போல தோன்றி மறையும் மாயையே இந்த உலகம்  எனும்போது, அதில் விழுந்து  நீ ஏன் துயரத்தில்   அவதிப்படுகின்றாய்? 

(விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னனிடம்  அஷ்டவாக்கரர்  என்ன கூறினார்  எனில் ‘மாயையான உலகை  உருவமற்ற ஜீவாத்மா எனும் பரமாத்மா வெளிப்படுத்தியது  உண்மை என்றாலும்,  அதில் நிகழும் எந்த செயலுக்கும், ஜீவாத்மாவுடன் தொடர்பு கிடையாது.  மாயையான உலகை சுற்றியே  தூல உடலில் இருந்து எழும் துன்பம், இன்பம், போகம், மோகம், இச்சை, ஆசை போன்ற அனைத்தும்  தலை விரித்து ஆடுகின்றன. அவற்றுக்கும் கூட  ஜீவாத்மாவுடன் எந்த வித  தொடர்பும் கிடையாது. காரணம் ஜீவாத்மா சுதந்திரமானது, தனிமையானது, எவருக்கும் கட்டுப்படாதது மற்றும் ஆனந்த நிலையில் உள்ளது.  கடல் நீரில் இருந்து  எழும் அலைகளை கடல் நீரில் இருந்து பிரிக்க முடியாது.  அதை போலவேதான்  வாழ்க்கை என்பது மன எண்ணத்தால் உருவாகும் இன்பம், துன்பம், நன்மை மற்றும் தீமை போன்ற  சக்கரங்கள் மீது  ஓடிக் கொண்டே உள்ளது என்பதினால் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள அவற்றையும்  பிரிக்க இயலாது.  அது போலவேதான் வாழ்க்கையில் பற்று வைத்துக் கொண்டு விட்டால் பேரானந்த நிலையிலுள்ள ஆத்ம ஜீவனை அடைய முடியாது  என்பதினால் உடல் மீதான ஆசை  மற்றும் மோகங்களில் மூழ்கி துன்ப நிலையில் இருப்பது ஏன்?’).

श्रुत्वापि शुद्धचैतन्य आत्मानमतिसुन्दरम् ।

उपस्थेऽत्यन्तसंसक्तो मालिन्यमधिगच्छति

3.4  நீ உண்மையிலேயே  பேரானந்த,  தூய்மையான, அற்புதமான   ஆத்மாவை புரிந்து கொண்டு விட்டவன் என்றால் உடல் மீதான ஆசை  மற்றும் மோகங்களில் மூழ்கி தூய்மையற்றவனாக கிடப்பது ஏன் ?

(விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னனிடம்  அஷ்டவாக்கரர்  என்ன கூறினார்  எனில் ‘ உடல் ஆசை மற்றும் பெண்  மோகங்களில் மனதை செலுத்தி விட்டால் அது உடலின் இச்சைகளை  அதிகரிக்கும், அதில் இருந்து எளிதில் மீண்டு  வர இயலாது.   அத்தனை சக்தி கொண்டவை அவை.  மன எண்ணங்களில்   பெண் மோகம் அதிகரித்தால், மனதின் தூய்மை மட்டும் அல்ல உடலின் தூய்மை கூட மாசு படும். விழிப்புணர்வு பெறும் பாதையில் செல்ல வேண்டும் எனில் முதல் கட்டமாக உடல் மீதான ஆசை, மோகம், காமம் போன்றவற்றை மனதில் இருந்து முற்றிலும் அழித்துக் கொள்ள வேண்டும். அவை  இருந்தால் விழிப்புணர்வு பெறும் பாதையில் நுழையக் கூட முடியாது. ஆனால் நீ அவற்றை உன்னிடம் இருந்து விலக்கி வைத்துக் கொள்ளாமல் எப்படி பேரானந்தமான,  தூய்மையான, அற்புதமான   நிலையிலான ஆத்மாவை புரிந்து கொண்டு விட்டேன்  என்று கூறிக் கொள்கிறாய்?’).

सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।

मुनेर्जानत आश्चर्यं ममत्वमनुवर्तते ॥

3.5  அனைத்து உயிரினங்களிலும் தான் இருப்பதாகவும், அனைத்து உயிரினங்களும்  தன்னிடம் உள்ளதாகவும் கூறிக் கொள்ளும் விவேகம் மிக்க ஞானி,  உலக பற்றுக்கள் எதையுமே இன்னமும் துறக்கவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கின்றது.

(விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னனிடம்  அஷ்டவாக்கரர்  என்ன கூறினார்  எனில்  ‘நீ இன்னமும் உன்னை யார் என்று  முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உலக பந்தங்கள் அனைத்தையும் துறந்து விட்ட ஞானி என்பவன்   தனித்தன்மை கொண்ட, எவற்றினாலும் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியாத, சுதந்திரமான, ஆனந்த மயமான   ஜீவாத்மாவுடன் இணைந்து விட்டவன் என்பது பொருள். அவன் இணைந்து விட்ட ஜீவாத்மாவே படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் வியாபித்து  உள்ளது, அந்த உயிரினங்களும் அதற்குள்ளேதான் உள்ளது எனும்போது நீ இன்னமும் இருமை தத்துவ நிலைப்பாடுகளை  கொண்ட உள்ளத்துடன்  இருக்கின்றாய். அதனால்தான் மாயையான பற்று, ஆசை என்பதெல்லாம் அழியாமல் உன்னிடத்தில் இன்னமும் உள்ளது. அவை உள்ளவரை நான்  என்ற  அகங்காரமும் அறியாமையும் உன்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்  எனும்போது நீ எப்படி உலக பந்தங்கள் அனைத்தையும் துறந்து விட்ட விவேகம் மிக்க ஞானி என்று கூறிக் கொள்கிறாய் ?).

आस्थितः परमाद्वैतं मोक्षार्थेऽपि व्यवस्थितः ।

आश्चर्यं कामवशगो विकलः केलिशिक्षया ॥

3.6   இருமை தத்துவ நிலைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு  சென்று   மிக உயர்ந்த நிலையிலான ஆத்ம விடுதலை பெறுவதே என் இலக்கு   என்று  கூறிக் கொள்பவனுக்கு  இன்னமும் மோகம், உடலாசை போன்றவை  இருப்பது வியப்பை அளிக்கின்றதே.

 (விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னனிடம்  அஷ்டவாக்கரர்  என்ன கூறினார்  எனில்  ‘நீ இன்னமும் உன்னை யார் என்று  முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அனைத்து நிலையிலும் உள்ள இருமை தத்துவ நிலைகளை அழித்துக்  கொண்டு,  ஆன்மீக  விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தும் நீ  இன்னமும் உன்னிடத்தில்  உள்ள காமம், மோகம்  போன்ற உடலாசைகளை விலக்கிக் கொள்ளவில்லை என்பது  உன் மனைவிகளுடன் ஒரே அரண்மனையில் உல்லாசமாக இருப்பதில் இருந்தே தெரிகிறதே?  உடல் ஆசை மற்றும் பெண்  மோகங்களில் மனதை செலுத்தி விட்டால் அது உடலின் இச்சைகளை  அதிகரிக்கும், அதில் இருந்து எளிதில் மீண்டு  வர இயலாது.   அத்தனை சக்தி கொண்டவை அவை.  மன எண்ணங்களில்   பெண் மோகம் அதிகரித்தால், மனதின் தூய்மை மட்டும் அல்ல உடலின் தூய்மை கூட மாசு படும். விழிப்புணர்வு பெறும் பாதையில் செல்ல வேண்டும் என்று எண்ணும் சாதகர்  முதல் கட்டமாக உடல் மீதான ஆசை, மோகம், காமம் போன்றவற்றை மனதில் இருந்து முற்றிலும் அழித்துக் கொள்ள வேண்டும். அவை  இருந்தால் விழிப்புணர்வு பெறும் பாதையில் நுழையக் கூட முடியாது. ஆனால் நீ அவற்றை  விலக்கி வைத்துக் கொள்ளாமல் எப்படி ஆன்மீக  விழிப்புணர்வு பெற வேண்டும்  என்று ஆசைப்படுகிறாய்?).

उद्भूतं ज्ञानदुर्मित्रमवधार्यातिदुर्बलः ।

आश्चर्यं काममाकाङ्क्षेत् कालमन्तमनुश्रितः ॥

3.7  சிற்றின்ப ஆசை ஞான மார்கத்தில் செல்வதற்கு  தடையாக இருக்கும்  என்று தெரிந்தும், உடல் வலு குன்றியவன், மரணம் அடைய வேண்டிய காலத்தை எட்டி விட்ட நிலையிலும் கூட , சிற்றின்ப ஆசைக்காக ஏங்குவது வியக்கத்தக்கது.

(விளக்கம் : உடல் ஆசை மற்றும் பெண்  மோகங்களில் மனதை செலுத்தி விட்டால் அது உடலின் இச்சைகளை  அதிகரிக்கும், அதில் இருந்து எளிதில் மீண்டு  வர இயலாது. உடல் இச்சைகள் அதிகரிக்க, அதிகரிக்க மனக் கிளர்ச்சிகள் அதிகமாகும்.   மனக் கிளர்ச்சி  அதிகமாகி பெண் மோகம் அதிகரித்தால், மனதின் தூய்மை மட்டும் அல்ல உடலின் தூய்மை கூட மாசு படும். விழிப்புணர்வு பெறும் பாதையில் செல்ல வேண்டும் என்று எண்ணும் சாதகர்  முதல் கட்டமாக உடல் மீதான ஆசை, மோகம், காமம் போன்றவற்றை மனதில் இருந்து முற்றிலும் அழித்துக் கொள்ள வேண்டும் என்பது அடிப்படை தத்துவம் ஆகும். அவை  இருந்தால் விழிப்புணர்வு பெறும் பாதையில் நுழையக் கூட முடியாது.

பொதுவாகவே இளம் வயதில் காம  நாட்டம் அதிகம் இருக்கும். ஞான நிலையை அடைய ஆசைப்படும்  ஜனக மன்னன் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவன். அரசனான அவன் இளம் வயதுடையவனாக   இருக்க முடியாது,  வயது முதிர்ந்தவனாகவே இருந்திருக்க வேண்டும்.  அனைத்தையும் அனுபவித்தப் பின் ஆடி அடங்கும் வயதில்தான் பொதுவாக ஞான நிலை அடைய விருப்பம்  தோன்றத் துவங்கும் என்பது நியதி.  ஆகவே   ஞான நிலையை அடைய விருப்பம் கொண்டு  அஷ்டவக்கரரை ஜனகர் அணுகி உள்ளார்  எனும்போது நிச்சயம் ஜனகர்  வயதான நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் என்றாலும் இன்னும் அவர் காம மோக இச்சைகளை துறக்கவில்லை என்பதாகவே அஷ்டவக்கரர் உணர்ந்தார். அதனால்தான் அவரை நோக்கி ‘ உடல் வலு குன்றியவன், மரணம் அடைய வேண்டிய காலத்தை எட்டி விட்ட நிலையிலும் கூட, சிற்றின்ப ஆசைக்காக ஏங்குவது வியக்கத்தக்கது’ என்ற கிண்டலான கருத்தை வெளியிட்டார்).

इहामुत्र विरक्तस्य नित्यानित्यविवेकिनः ।

आश्चर्यं मोक्षकामस्य मोक्षाद् एव विभीषिका ॥

3.8   மாயையான உலக பொருட்களில் பற்றற்றவர், அழிபவை மற்றும் அழிவற்றவை  என்ற வித்தியாசங்களை நன்கு உணர்ந்துள்ளவர்ஆத்ம ஞானம் பெற ஏங்குபவர்  என அனைத்து குணங்களையும் கொண்டவர், எதற்காக  பேரானந்த ஞான நிலையை அடைய அஞ்சுகிறார்  என்பதைக் காண வியப்பாக உள்ளது.

(விளக்கம் :  ஒரு சாதகர் விழிப்புணர்வு பெறும் பாதையில் செல்ல வேண்டும் எனில் முதல் கட்டமாக உடல் மீதான ஆசை, மோகம், காமம் போன்றவற்றை மனதில் இருந்து முற்றிலும் அழித்துக் கொள்ள வேண்டும் என்பது அடிப்படை  தத்துவம் ஆகும். அவை  இருந்தால் விழிப்புணர்வு பெறும் பாதையில் நுழையக் கூட முடியாது. இந்த உலகமே மாயை என்ற தத்துவத்தை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  பிரபஞ்சத்தில் பிரும்மா முதல் அவர் படைத்த புல் பூண்டுகள் வரை அனைத்துமே அழிவிற்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால் உண்மையான, தூய்மையான, தனித்துமை வாய்ந்த சுதந்திரமான  ஜீவாத்மா என்பது மட்டுமே அழிவற்றது என்ற ஆழமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஞான நிலையை அடைய வேண்டும் எனில் மெல்ல, மெல்ல உலக ஆசைகளை ஒவ்வொன்றாக துறந்து கொண்டே வர வேண்டும். ஞான நிலையை அடைய நினைக்கும் ஜனகரோ அதை விடுத்து  தான் சேர்த்துள்ள செல்வம் அழிந்து விடுமோ, தனது மனைவி   மற்றும் மக்கள் என்ன ஆவார்கள்,  தனது அதிகாரம் என்ன ஆகி விடும் என்பதையெல்லாம் குறித்து  கவலைப்படக் கூடாது. பிறந்தவன் எப்படியாவது வாழ்வான் என்ற நம்பிக்கை  கொள்ள வேண்டும். ஆனால்  ஜனகருக்கு அவ்வப்போது  ஸம்ஸார ஸாகர  நினைவுகள்  அவரது மன வலிமையை குறைப்பது போல தெரிகின்றது என்பதாக  அஷ்டவக்கரர் உணர்ந்து கொண்டார் அதனால்தான் ஜனகர் இனம் தெரியாத பயத்தில்  ஞான நிலையை அடைய அஞ்சுகிறார் என்பதாக கிண்டலாக கூறினார்).

धीरस्तु भोज्यमानोऽपि पीड्यमानोऽपि सर्वदा ।

आत्मानं केवलं पश्यन् न तुष्यति न कुप्यति ॥

3.9  தன்னை முற்றிலும் உணர்ந்த ஞானிக்கு  யார் விருந்தளித்துக் கெளரவித்தாலும், வேதனைப்படுத்தினாலும் அவற்றினால் அவர்  மகிழ்ச்சியோ கோபமோ அடைவதில்லை. அமைதியாக தன்னை உணர்ந்த நிலையிலேயே அவர் இருக்கின்றார்.

(விளக்கம் : இந்த கருத்தை வெளியிட்ட  அஷ்டவக்கரர்  உண்மையில் என்ன செய்தியை  தெரிவித்தார் ?   ‘எந்த நிலையிலும்  ஒரு ஞானி மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ அடைய மாட்டார். ஞானிக்கு  அவர் செல்லும்  இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும், அவருக்கு மக்கள் பல விதமான வசதிகளையும், உணவையும், பரிசுப் பொருட்களையும்  வழங்குவார்கள். ஆனால் அவற்றால் ஞானியின் மன நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.  ஏன் என்றால் தரப்படுபவை மாயையானவை, உலக பற்றை ஏற்படுத்துபவை, ஒரு ஞானிக்கு உகந்த வஸ்து அல்ல,  அவருக்கும் அவற்றுக்கும்  எந்த சம்மந்தமும் கிடையாது என்ற மன நிலையில்  இருப்பதினால், அவர் மன சஞ்சலம் அடைவதில்லை, புளகாங்கிதமும்  அடைவதில்லை. அதே போன்று அவருக்கு எதிரானவர்கள் அவரை அவமதித்தாலும்  அவற்றினால் அவர்  வருத்தம் அடைவதில்லை. மன எண்ணங்களோடு சம்மந்தப்பட்ட  செயல்களே வருத்தம் மற்றும் மகிழ்ச்சி போன்ற  நிலைப்பாடுகள்  என்பதினால்  அவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ள ஞானிக்கு  அந்த செயல்கள்   எப்படி பாதிப்பை ஏற்படுத்த முடியும்?’  இந்த உண்மைகளைதான்  விழிப்புணர்வு பெற விரும்பும் சாதகர்கள் முதலில் கவனிக்க வேண்டும்’).

चेष्टमानं शरीरं स्वं पश्यत्यन्यशरीरवत् ।

संस्तवे चापि निन्दायां कथं क्षुभ्येत् महाशयः

3.10  ஆத்ம விடுதலையை நோக்கி  பயணிக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்,   உடல் தன்னுடையது அல்ல, அது வேறு ஒருவரின் உடலாகும் எனக் கருதுகையில், அந்த உடலுக்கு கிடைக்கும் பழியோ அல்லது  புகழோ குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?

(விளக்கம் : இதன் மூலம் ஜனகரிடம் அஷ்டவக்கரர் கேட்ட கேள்வி என்ன என்றால் ‘விழிப்புணர்வு நிலையை நோக்கி பயணிக்க  ஆசை கொண்டுள்ள ஜனகர் தான் வசிக்கும் உடல் தனதல்ல என்பதை முழுமையாக  நம்ப வேண்டும், உண்மையும் அதுதான். ஆனால் அதை விடுத்து எந்த உலகப் பற்றும் தனக்கு இல்லை எனக் கூறிக் கொள்ளும் ஜனகர், அவருடைய உடலுக்கு கிடைக்கும் புகழையும் அவமானங்களையும் குறித்து  எதற்காக கவலைப்படுகின்றார். அப்படி என்றால் அவர் இன்னும் மனதளவில் ஞான நிலையை நோக்கி பயணிக்க தயாராகவில்லையா?’).

मायामात्रमिदं विश्वं पश्यन् विगतकौतुकः ।

अपि सन्निहिते मृत्यौ कथं त्रस्यति धीरधीः ॥

3.11  இந்த உலகே ஒரு மாயை என்றும், உலக இன்ப துன்பங்களில் எந்த பற்றும் இல்லாத வலிமையான மனதுடைய அறிவாளி என்று  நினைப்பவர், மரணம்  தன்னை நெருங்கி வரும்போது எதற்காக மரண பயம் அடைய   வேண்டும்?

(விளக்கம் :  அஷ்டவக்கரர்  ஜனகரைப் பார்த்துக் கேட்டார் ‘பரமாத்மாவினால் படைக்கப்படும் அகண்ட வெளி எனும் பிரபஞ்சம்  மாயை தோற்றம் கொண்டது.  ஒவ்வொரு யுக முடிவிலும் தன்னுள்  மறைந்து விடும்  பிரபஞ்சத்தை மீண்டும், மீண்டும் பரமாத்மாவே வெளிப்படுத்துகின்றார்.  பிரளய காலத்தில்  பிரும்மா  முதல், அவரால்  படைக்கப்பட்ட புல்    பூண்டுவரை  அனைத்தும்  அழிந்து விடும் என்பது நியதி. ஆகவே பிரும்மாவிற்கு கூட அழிவு என்பது உண்டு என்றாலும் கூட ஒளி மயமான பரமாத்மா எனும் ஜீவாத்மாவிற்கு என்றுமே அழிவில்லை. அது உருவமற்றது, நிலையானது, சுதந்திரமானது, தூய்மையானது. பரமாத்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட உலகில் படைக்கப்பட்ட அனைத்திலும், அவை எந்த வித  தோற்றங்களில் இருந்தாலும் பரமாத்மா எனும் ஜீவாத்மா அவற்றில் வியாபித்து உள்ளார் எனும்போது பிரும்மா முதல் அனைத்துமே அழிந்தாலும் கூட பரமாத்மா எனும் ஜீவாத்மாவிற்கு அழிவில்லை. பிரும்மாவே அழிவிற்கு உட்பட்டவர்  எனும்போது அதில் பயணிக்கும் அனைவரும் இறப்பும் பிறப்பும் என்ற  நியதிக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.  கண்களுக்கு புலப்படாத பிரபஞ்சம் என்பதும்  மாயை, அதில் குடி இருக்கும் மானிட உடலும் மாயைதான். ஆனால் அந்த உடல்களில்  பயணிக்கும் உருவமற்ற ஆத்மாவிற்கு இறப்பும் இல்லை, பிறப்பும் இல்லை என்பதை முற்றிலும் உணர்பவனே ஞானி ஆக முடியும்.  இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்திருக்கும்  சுய ஞானம் பெற்றவர்களுக்கு மனக் கிளர்ச்சியே இருக்க முடியாது. அந்த நிலையில் உள்ளவர்களுக்கு மரண பயம்  ஏதும் இல்லை என்பதின் காரணம் அவர்கள் தங்கி உள்ள உடல் தன்னுடையது அல்ல என்பதை நம்புபவர்கள்.  இந்த நிலையில்  தானும் விழிப்புணர்ச்சி பெற்று ஞான நிலையை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் ஜனகர் மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்படும்போது மரண பயத்துடன் ஏன் இருக்க வேண்டும்?’).

निःस्पृहं मानसं यस्य नैराश्येऽपि महात्मनः ।

तस्यात्मज्ञानतृप्तस्य तुलना केन जायते ॥

3.12   எந்த ஒரு ஏமாற்றத்தையும்  கண்டு  கலங்காத, வலிமையான மன நிலையில் உள்ள  துறவியின்  உடலில் உள்ள ஜீவாத்மாவை  வேறு எவருடன்  ஒப்பிட  முடியும்?

(விளக்கம் :  அஷ்டவக்கரர்  ஜனகரைப் பார்த்துக் கேட்டார் ‘ எவன் ஒருவன், அனைத்து பற்றுக்களையும் விலக்கிக் கொண்டு, ஆசைகளற்ற நிலைக்கு சென்று   மோட்சத்தை  அடைய எண்ணி காத்திருப்பானோ, அவனுக்கு இன்ப, துன்பங்களைக் கண்டு பயமில்லை, பாதிப்பும் இல்லை.  ஏமாற்றங்களைக் கண்டு கலங்குவதில்லை, எதையும் அடைய விரும்புவதும் இல்லை. சம்சார சாகரத்தில் உழன்றாலும் கூட எதிலும் பற்று இல்லாமல் இயந்திரம் போல செயல் படுவான். இருந்தும் இறந்தவன் போன்ற நிலையில் இருப்பான்.  அந்த நிலையே ஞான நிலை. அப்படிப்பட்ட ஞானியின் மனம் நிலையாக  ஒரே குறிக்கோளுடன் எல்லா நிலைகளிலும் இருக்கும். ஆனால் ஞான நிலையை அடைய முயலும் பெரும் அறிவாளியான சாதகனுக்கோ  தொட்டதில்  எல்லாம் ஆசை, கண்ணில் பட்டதில் எல்லாம் ஆசை என  அந்த ஆசை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் நினைத்தவை நடக்கவில்லை என்றால் ஏமாற்றம், ஏமாற்றம் மற்றும் வாழ்க்கையில் விரக்தி போன்ற நிலைகளில் சிக்கி தவித்தபடி இருந்து கொண்டு  தான் அடைய நினைத்த ஞான நிலையைக் கூட மறந்து விடுவான். அப்படிப்பட்ட சாதகர்கள் பெரும் அறிவாளிகள் என்றாலும் அவர்களை ஆசைகள் அற்ற  ஞானியுடன் ஒப்பிட முடியுமா?’).

स्वभावाद् एव जानानो दृश्यमेतन्न किञ्चन ।

इदं ग्राह्यमिदं त्याज्यं स किं पश्यति धीरधीः ॥

3.13  உலகின் தான் காண்பது எதுவும் நிஜமல்ல என்ற உண்மையை நன்கே அறிந்திருக்கும்,  வலிமையான, எதிலும் பற்று இல்லாத மனம் கொண்ட அறிவாளிக்கு (ஞானிக்கு) பிடித்தவை பிடிக்காதவை என்ற நிலையே கிடையாது.  

(விளக்கம் : அஷ்டவக்கர் என்ன கூறுகின்றார் எனில் ‘உலகே மாயை, அதில் உள்ள  அனைத்துமே மாயை, உண்மை அற்றவை. ஆனால்  அதில் நான் என்பது மட்டுமே உண்மை  என  முழுமையாக அறிந்து கொண்டு, எதன் மீதும் பற்று  இல்லாமல்  வாழ்ந்து விழிப்புணர்வு எனும் ஞான நிலையில் பயணிப்பவருக்கு, இது வேண்டும், அது வேண்டும், என்ற எந்த எதிர்பார்ப்புகளும்  இருக்க முடியாது.  ஆகவே அவர் முன் காணப்படும் பொருட்களில் ஒன்றை  ஏற்றுக் கொள்ளலாம், இன்னொன்றை அவர் நிராகிக்கலாம் என எப்படி எதிர் பார்க்க முடியும்? அப்படி அவர் இரு நிலைப்பாடுகளை கொண்டவர் என்றால் அவர் ஆசைகளை முற்றிலும் துறந்த  ஞானி  அல்ல என்ற  என்பது உண்மையல்லவா’).

अन्तस्त्यक्तकषायस्य निर्द्वन्द्वस्य निराशिषः ।

यदृच्छयागतो भोगो न दुःखाय न तुष्टये ॥

3.14  உலகப் பற்றுதல் இல்லாமை, எந்த பொருட்கள் மீதும் ஆசை இல்லாமை மற்றும் இரட்டை நிலை இல்லாமை  போன்ற அனைத்தையும் துறந்து விட்டவனிடம்  இயற்கையாக ஏற்படும்  இன்ப துன்பங்கள்  எந்த மாறுதலையும் ஏற்படுத்தாது.

(விளக்கம் : அஷ்டவக்கர் மீண்டும், மீண்டும் ஜனகருக்கு என்ன கூறினார் எனில் ‘உலகே மாயை, அதில் உள்ள  அனைத்துமே மாயை, அதில் ‘நான்’ என்பது மட்டுமே உண்மை  என  முழுமையாக அறிந்து கொண்டு, எதன் மீதும் பற்று  இல்லாமல் விழிப்புணர்வு எனும் ஞான நிலையில் பயணிப்பவருக்கு, இது வேண்டும், அது வேண்டும், என்ற எந்த எதிர்பார்ப்புகளும்  இருக்க முடியாது. ஆகவே என்ன விதத்திலான இன்ப துன்பங்கள் நேர்ந்தாலும் அவை எதுவுமே அவரை எந்த நிலையிலும் பாதிக்காது’).

நான்காம்  அத்தியாயம்

அஷ்டவாக்கரர் மேலும் தொடர்ந்து கூறினார்

 हन्तात्मज्ञानस्य धीरस्य खेलतो भोगलीलया ।

न हि संसारवाहीकैर्मूढैः सह समानता ॥

4.1  கேளிக்கையும் இன்பங்களும்  சூழ்ந்துள்ள  உலகில், ஆத்ம ஞானம் பெற்றவன் வாழ்ந்து கொண்டிருந்தாலும்,  நிச்சயமாக, உலக இன்பங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் மிருகம் போன்ற மற்ற  பாமரர்களுடன் அவரை ஒப்பிட முடியாது.

(விளக்கம் : அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் எனில் ‘தன்னை முற்றிலும் உணர்ந்த ஞானி, கேளிக்கைகள் நிறைந்த  சம்சார வாழ்வில்  வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவன் எந்த நிலையிலும் உலக இன்பங்களினாலோ அல்லது துன்பங்களினாலோ பாதிக்கப்படுவது இல்லை. கிளுகிளுப்பு நிறைந்த வாழ்க்கையில்  ஏற்படும்  எந்த நிகழ்வும்  அவரை பாதிப்பது இல்லை. ஏன் எனில் அவர் உடல்தான் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒழிய அவரது மனமோ   பேரானந்த நிலையிலான  ஜீவாத்மாவுடன் மூழ்கி இருக்கும். அவன் ஒரு விளையாட்டு அரங்கில், விளையாட்டுக்களை ரசிக்காமல் ஜடம் போன்று அமைதியாக அமர்ந்து இருக்கின்றான்.     ஆகவே அப்படிப்பட்ட ஞானியை , உலக இன்பங்களிலும் கேளிக்கைகளிலும் மிருகங்களை போல  மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுடன் ஒப்பிட முடியாது’).

यत् पदं प्रेप्सवो दीनाः शक्राद्याः सर्वदेवताः ।

अहो तत्र स्थितो योगी न हर्षमुपगच्छति ॥

4.2  இந்திரன் முதல் அனைத்து தேவர்களும் கேளிக்கைகள் நிறைந்த  உலகைக் கண்டு மனம் ஏங்கினாலும் கூட,  கேளிக்கைகள் நிறைந்த  உலக இன்பங்கள், பேரானந்த நிலையில் வாழும்  ஞானியின்  மனதில் எந்த  வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. 

(விளக்கம் : அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘இந்திரன் முதல் தேவர்கள் வரை இந்திர லோகங்களில் உள்ளவர்கள் எத்தனை மகிழ்ச்சியோடும், வளமையோடும், அற்புத நிலைகளோடும்  வாழ்ந்து கொண்டிருந்தாலும், மானிடர்களுக்கு உள்ளதை போன்ற காம இச்சைகளும், மனநிலையும், கேளிக்கைகளும் அங்கு இருக்க முடியாது,  அவை தெய்வீக உணர்வுகளுக்கு அடங்கியே உள்ள லோக அமைப்பைக் கொண்டவை.  ஆனால் கட்டுப்பாடற்ற உலகின் கிளுகிளுப்பான வாழ்க்கை முறைகளும், கேளிக்கைகளும் அசாதாரணமானது, ஆனந்த மயமானது, தெய்வீக லோகங்களின் சூழ்நிலைகளுக்கு எதிர்மாறானது.   அப்படிப்பட்ட வாழ்க்கை  முறை தெய்வீக மணம் கமழும் இந்திர, சந்திர, தேவலோகங்களுக்கு பொருந்தாது என்றாலும், சில நேரங்களில் இந்திரன் முதல் தேவர்கள் வரை நமது லோகத்திலும் அத்தகைய கிளுகிளுப்பான வாழ்க்கை முறை  அமையாதா  என்பதாக  மனம்  ஏங்குவார்களாம். ஆனால் அத்தகைய சூழ்நிலையில் வாழும் ஞானியோ அவற்றை விரும்புவதில்லை, எந்த சூழ்நிலைகளும் அவனை எந்த விதத்திலும் சலனப்படுத்துவதில்லை.  விழிப்புணர்ச்சி பெற்று பேரானந்த நிலையில் வாழும் ஞானிக்கு எந்த பற்றுதலும், பாசமும், துன்பங்களும்  இருக்காது என்பதே அதன் காரணம் ‘).

तज्ज्ञस्य पुण्यपापाभ्यां स्पर्शो ह्यन्तर्न जायते ।

न ह्याकाशस्य धूमेन दृश्यमानापि सङ्गतिः ॥

4.3 எவ்வளவுதான் புகை மண்டலம் மேல் எழுந்தாலும் அவை எப்படி ஆகாயத்தை நெருங்க முடியாதோ, அப்படித்தான்  ஆத்ம ஞானம் பெற்று விட்டவனின் உள்ளுணர்வு எனும் மனசாட்சியை  புண்ணிய, பாபங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

(விளக்கம் : அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் என்றால் ‘ஆத்ம ஞானம் பெற்று விட்டவனின் மனசாட்சி  பாவ புண்ணிய நிலைகளில் இருந்து விடுபட்டு  எந்த சஞ்சலமும் இல்லாத நிலையில் சென்று விடும். அவனுடைய உள்ளுணர்வுகளோ  ஜீவாத்மா எனும் பேரானந்த நிலையில் மூழ்கிக் கிடைக்கும்.  காட்டுத் தீயோ அல்லது யாக குண்டத்தில் இருந்து எழும் தீயோ  எத்தனை வீரியமாகவும், கொழுந்து விட்டு எரிந்தாலும் அவற்றினுள் இருந்து எழும் புகை மண்டலம்  எந்த நிலையிலும் ஆகாயத்தை தொட்டு களங்கப்படுத்த  முடியாது. அதே போன்ற நிலையிலேதான் எத்தனை பாவ புண்ணியங்கள் சேர்ந்தாலும் ஆத்ம ஞானத்தை பெற்று விட்டவன் உள் மனதையும், மனசாட்சியையும் அவற்றின்  தாக்கங்கள்   நெருங்கவும் முடியாது, சஞ்சலப்படுத்தவும் முடியாது.  ஏன் எனில் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலைதான் விழிப்புணர்ச்சி எனும் நிலை எனும்போது, நன்மைகளினால் ஏற்படும் புண்ணியங்களும்,  தீமைகளினால் ஏற்படும் பாபங்களும் ஒரு ஞானியை   எந்த வகையில் தீண்ட முடியும்?’ ).

आत्मैवेदं जगत्सर्वं ज्ञातं येन महात्मना ।

यदृच्छया वर्तमानं तं निषेद्धुं क्षमेत कः ॥

 4.4  இந்த உலகம் அனைத்துமே  தனக்குள் உள்ள அதே ஆத்மாவினால் சூழப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்துள்ள  ஞானி, தனது மனம் போல வாழ்வதில் என்ன தடை இருக்க முடியும்?

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவாக்கரர் என்ன கூறுகின்றார் எனில்  ‘வேத மற்றும் திரு நூல்களில்  கூறப்பட்டு உள்ள வாழ்க்கை நெறி முறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவனே   ஞான நிலையை எட்டி விட்டவனின் நிலையும் ஆகும். அவரை  எந்த நியமங்களும், நியதிகளும் கட்டுப்படுத்த முடியாது. ஏன் எனில் ஞான நிலையை அடைந்து விட்டவன் எந்த தீய செயல்களையும் செய்ய முடியாத மனநிலையில் உள்ளவர். சிற்றின்ப, உல்லாச வாழ்க்கை முறைகளை தனது எண்ணங்களில் இருந்தும் மனதில் இருந்தும் அடியோடு அழித்துக் கொண்டவர்கள். ஜீவாத்மா எனும் பேரானந்த நிலைக்கு சென்று விட்ட ஞானிகளினால் மீண்டும்   அந்த எண்ணங்களை  நினைத்தும் கூட பார்க்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சம்சார சாகரத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களை பாவமோ, புண்ணியமோ தீண்டாதா  என்ற கேள்வி எழலாம். ஆனால் சம்சார சாகரத்தில் உழன்றாலும், ஞான நிலையை எட்டி விட்ட   ஞானியோ,   இருந்தும் இறந்தவன் போன்ற நிலையில்தான் வாழ்ந்து வருவான். அவன் தங்கி உள்ள ஜடமான உடல் பிராரப்த கர்மா வினையின்படி இன்ப துன்பங்களை அனுபவித்தாலும், அந்த உடலுக்குள் சுதந்திரமாக,  எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத நிலையில் பேரானந்தமாக குடி இருக்கும் ஜீவாத்மாவுடன் கலந்து விட்ட ஞானிக்கு அந்த கர்ம வினைப் பலன்களோ, கிளுகிளுப்பான வாழ்க்கை முறைகளோ  எந்த சலனங்களையும் ஏற்படுத்துவது இல்லை. அவன் அவனாக மட்டுமே இருப்பான் என்பதினால்   இந்த உலகில்  ஞானிக்கு  அவர் விருப்பம் போல வாழ உரிமை உள்ளது’).

आब्रह्मस्तंबपर्यन्ते भूतग्रामे चतुर्विधे।

विज्ञस्यैव हि सामर्थ्य- मिच्छानिच्छाविवर्जने॥

4.5  இவ்வுலகில் பிரும்ம முதல் புல் பூண்டுவரை காணப்படும்  நான்கு வகை உயிரினங்களில்,  ஞானியைத் தவிர வேறு எவராலும்  விருப்பு வெறுப்புக்களை தமது வாழ்வில் இருந்து விலக்கிக் கொள்ள முடியாது.

(விளக்கம் : அஷ்டவாக்கரர்  என்ன கூறினார் என்றால் ‘இந்த உலகில் நான்கு வகையிலான உயிரினங்கள் படைக்கப்படுகின்றன. அவை   அழுக்குகளில் இருந்து வெளியாகும் சுவேதஜம் எனப்படும்  புழு, பூச்சி, கொசு போன்றவை.  இரண்டாவதாக,  விதையில் இருந்து தோன்றும்  மரம், செடி, கொடி போன்றவை. அவை உத்பீஜம் எனப்படும். மூன்றாவதாக முட்டையிலிருந்து வெளி வரும்  பறவைகள், சில நீர்வாழ்வன, புழு பூச்சிகள்  போன்றவை. அவை அண்டஜம் எனப்படும்.  நான்காவதாக   கருப்பையிலிருந்து வெளி வரும்  மனிதன், சில விலங்குகள் போன்றவை. அவற்றை  ஜராயுதம்  என்பார்கள்.  முதல் மூன்றுமே மானிட உடலில் உள்ளே காணப்படும்  உயிரோட்டம் போன்ற நிலையை அதனதன் பாணியில் கொண்டவை ஆகும்.  இவ்வளவு இருந்தும் அவற்றுக்கு விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லை, மானிடர்கள் போல  விருப்பு வெறுப்பு என்பவற்றை விலக்கிக் கொள்ளவும்  முடியாது. விருப்பு வெறுப்பு  என்பவற்றை விலக்கிக் கொள்ள முடிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே ஆவர்).

आत्मानमद्वयं कश्चिज्जानाति जगदीश्वरम् ।

यद् वेत्ति तत्स कुरुते न भयं तस्य कुत्रचित् ॥

4.6  இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ள பரமாத்மனும் தனக்குள் உள்ள  ஜீவாத்மாவும் ஒருவரே என்ற உண்மையை பரிபூரணமாக எவன் ஒருவன் உணர்வானோ, அவனுக்கு எந்த நிலையிலும் எந்த வகையிலான  பயமும்  இருக்காது.

(விளக்கம் : அஷ்டவாக்கரர்  என்ன கூறினார் என்றால் ‘எவன் ஒருவன் தனக்குள் உள்ள  ஜீவாத்மாவும் பிரபஞ்சம் முழுவதிலும்   வியாபித்து உள்ள பரமாத்மனும் ஒருவரே என்ற தத்துவத்தை முழுமையாக உணர்ந்திருப்பானோ, எந்த ஒருவன்  ஜீவாத்மாவை நன்கு புரிந்து கொண்டு பேரானந்த நிலைக்கு சென்று விடுவானோ, அவனுக்கு  அவனை சுற்றி நடைபெறும் எந்த நிகழ்வுகளினாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. அவன் எந்தவிதமான பற்றும் அற்ற நிலையில் சுதந்திரமாக உள்ளவன் எனும்போது அவன் எதற்காக, யாரைக் கண்டு  அச்சம் கொள்ள வேண்டும்? அவரே முற்றும் துறந்த ஞானியாவார் ).

ஐந்தாம் அத்தியாயம்

ஞான நிலையை அடைய நான்கு வழிகள் – ஜனக மன்னனுக்கு அஷ்டவக்கரர் உபதேசம்

न ते सङ्गोऽस्ति केनापि किं शुद्धस्त्यक्तुमिच्छसि ।

सङ्घातविलयं कुर्वन्नेवमेव लयं व्रज ॥

5.1  அஷ்டவக்கரர் மேலும் தொடர்ந்து கூறுகிறார் – உங்களுக்கு யாருடனும் தொடர்பு இல்லை, நீங்கள் தூய்மையானவர் எனும்போது  நீங்கள் எதைத் துறக்க விரும்புகிறீர்கள் ? உடலின் ஐம்புலன்களின் தாக்கத்தையும் அகற்றிக் கொண்டு  பிரும்மத்துடன் இணைந்து கொள்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் மேலும் பலவிதமான அறிவுரைகளை வழங்கத் துவங்கினார். ‘ஜனகா, சாதகன் ஒருவன்  விழிப்புணர்வை பெற்று விட்டால், அதாவது உலக பந்தங்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டு விட்டால்,  அவனுக்கு எவருடனும்  தொடர்ப்பு இருக்காது, புனிதமான ஜீவாத்மாவின் பேரானந்த நிலையில் ஐக்கியமாகி விடுவான். அப்போது ஐம்புலன்களினால் இயங்கும் அவனது  சடலமான  உடலின் எந்த  செயல்களும் அவனை  சலனப்படுத்தாது.  அவன் தூய்மையானவனாகி விடுவான்.  இப்போது நீயோ விழிப்புணர்வை பெற்று விட்டதாக கூறுகிறாய். நீ தூய்மையான நிலையில் நுழைந்து விட்டவன்  என்றால் இன்னும்  நீ எதை  துறக்க வேண்டும்? சொந்த பந்தங்களையா அல்லது  நான் என்ற அகங்கார நிலையையா? இன்னும் நேரத்தை வீணடிக்காமல் எண்ண அலைகளை அழித்துக் கொண்டு,   உடலின் ஐம்புலன்களின் தாக்கத்தை  அகற்றிக் கொண்டு பிரும்மத்துடன் இணைந்து கொள் ‘).

उदेति भवतो विश्वं वारिधेरिव बुद्बुदः ।

इति ज्ञात्वैकमात्मानमेवमेव लयं व्रज ॥

5.2  கடலில் இருந்து வெளிப்படும் நீர்  குமிழி  மீண்டும் கடலில் மறைந்து வெளிப்படுவதை  போல, விரிந்து படர்ந்துள்ள ஜீவாத்மாவில் இருந்து   பிரபஞ்சம்  தோன்றி மறைந்து விட்டு மீண்டும் வெளிப்படுகின்றது.  நீயே அந்த ஜீவாத்மா என்ற   உண்மையை உணர்ந்து கொண்டு  பிரும்மத்துடன் இணைந்து கொள்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் மேலும்  அறிவுரைகளை வழங்கினார் ‘ ஜனகா கடல் நீரில் இருந்து எழும் கடல் நுரைகள் மீண்டும் மீண்டும் வெளி வந்து அந்த கடல் நீரிலேயே மூழ்கி  மறைந்து விடுவதை போன்றேதான் இந்த பிரபஞ்சமும் ஜீவாத்மாவின் உருவமற்ற உடலில் இருந்து வெளியாகி அந்தந்த யுகங்களின் முடிவில் மறைந்து விட்டு மீண்டும் வெளிவரும். அந்த ஜீவாத்மா என்பது என்ன? உன் சடலமான உடலில் உள்ள அதே ஜீவாத்மாதான் அது. அதுவே படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் உள்ளது, தானே வெளிப்படுத்திய  பிரபஞ்சம்  முழுவதும் வியாபித்து உள்ளது. ஆகவே ஆத்மா எனும் ஜீவாத்மா என்பது ஒன்றே ஒன்றுதான், அது எனக்குள்ளும் உள்ளது, உனக்குள்ளும் உள்ளது, பிரபஞ்சத்திலும் வியாபித்து உள்ளது என்பதை புரிந்து கொள். இன்னும் நேரத்தை வீணடிக்காமல் எண்ண அலைகளை அழித்துக் கொண்டு,   உடலின் ஐம்புலன்களின் தாக்கத்தை  அகற்றிக் கொண்டு பிரும்மத்துடன் இணைந்து கொள் ‘).

प्रत्यक्षमप्यवस्तुत्वाद् विश्वं नास्त्यमले त्वयि ।

रज्जुसर्प इव व्यक्तमेवमेव लयं व्रज ॥

5.3  உன் கண்ணெதிரே தெரியும் உலகத்தின்  தோற்றம் மாயையானது, உண்மை அற்றது.  கற்பனையில் கயிறு கூட பாம்பை போல தோற்றம்  தருவதை போன்றே  மாயையான உலகம்   தூய்மையான உன் உடலில்  இருப்பதாக எண்ணுவதும் ஆகும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு  பிரும்மத்துடன் இணைந்து கொள்.

(விளக்கம் : மேலே உள்ள இரண்டு பத்திகளில் கூறப்பட்டு உள்ள அறிவுரை மூலம் அஷ்டவக்கரர் என்ன கூறினார் என்றால்  ‘ இந்த உலகைப்  படைத்த பரமாத்மாவுடன் கலந்துள்ளதே ஜீவாத்மா. இரண்டுமே வெவ்வெறானவை அல்ல. அந்த தூய ஜீவாத்மாவை உள்ளடக்கியதே சடலம் போன்ற உடலும் ஆகும். சடலமான உடலில்  ஜீவாத்மா பயணித்தாலும் அந்த உடல்  இயக்கங்களின் எந்த நிலையினாலும் அது பாதிக்கப்படுவது இல்லை. ஜீவாத்மா தூய்மையானது, தனிமையானது, சுதந்திரமானது.  மாயையான உலக மற்றும் உடல் இயக்கங்களுடன் எந்த  சம்மந்தங்களும் இல்லாதது. எந்த நிலையிலும்  மாயையான உடல் எதிர் கொள்ளும் இன்ப துன்பங்களால் அது  பாதிக்கப்படுவதில்லை.  அவ்வளவு புனிதமான ஜீவாத்மாவை  சுமக்கும் நீயோ,  அறியாமையில் எப்படி பாம்பு கூட கயிறாக ஒருவருக்கு தெரிகிறதோ, அதே போன்ற  அறியாமையில்,  அரசனான நீ , மாயையான இந்த உலகை நீதான் சுமப்பதாக எண்ணிக் கொண்டு இருக்கின்றாய். அது உண்மை அல்ல.  ஆகவே இன்னும் நேரத்தை வீணடிக்காமல் எண்ண அலைகளை அழித்துக் கொண்டு, உடலின் ஐம்புலன்களின் தாக்கத்தை  அகற்றிக் கொண்டு பிரும்மத்துடன் இணைந்து கொள்’).

समदुःखसुखः पूर्ण आशानैराश्ययोः समः ।

समजीवितमृत्युः सन्नेवमेव लयं व्रज ॥

5.4  நீ தூய்மையானவன், வாழ்வோ, சாவோ, இன்பமோ, துன்பமோ, ஆசை, நிராசை போன்ற எவையுமே உன்னை பாதிப்பது இல்லை. அவை உலகைப் போன்ற மாயையானவை.  உன்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே உனக்கு அப்பாற்பட்டவை எனும்  உண்மையை உணர்ந்து கொண்டு விரைவாக  ஆத்ம விடுதலை பெற்றுக் கொள். 

(விளக்கம் : இங்கு நீ என்பதின்   மூலம்   அஷ்டவக்காரர் ஜீவாத்மாவின் உண்மையான தன்மையை மீண்டும் எடுத்துக்  காட்டுகின்றார் .  சடலமான உடலில்  ஜீவாத்மா பயணித்தாலும் அந்த உடல்  இயக்கங்களின் எந்த நிலையினாலும்,  வாழ்வோ, சாவோ, இன்பமோ, துன்பமோ, ஆசை, நிராசை போன்ற எந்த நிலைகளினாலும் அது பாதிக்கப்படுவது இல்லை என்கின்றார். ஜீவாத்மா தூய்மையானது, தனிமையானது, சுதந்திரமானது.  மாயையான உலக மற்றும் உடல் இயக்கங்களுடன் எந்த  சம்மந்தங்களும் இல்லாதது எனும் அவர்  ஜனகரிடம் ‘இன்னும் நேரத்தை வீணடிக்காமல் எண்ண அலைகளை அழித்துக் கொண்டு, உடலின் ஐம்புலன்களின் தாக்கத்தை  அகற்றிக் கொண்டு பிரும்மத்துடன் இணைந்து கொள்’ என்று அறிவுரை கூறினார்).

ஆறாவது  அத்தியாயம்

 விழிப்புணர்வு நிலையில் சென்று விட்டதாக கூறிய ஜனகருக்கு   ஆத்மாவின் நிலை குறித்து   அஷ்டவக்கரர் கூறலானார்  

आकाशवदनन्तोऽहं घटवत् प्राकृतं जगत् ।

इति ज्ञानं तथैतस्य न त्यागो न ग्रहो लयः ॥

6.1  ஜீவாத்மா, ஆகாயத்தைப்  போன்று எல்லை அற்று வியாபித்து இருக்க,  உலகமோ வெற்றிடத்தைக் கொண்ட ஒரு மண் குடம் போன்று உள்ளது. இந்த உண்மையை முழுமையாக உணர்ந்து கொண்டவனுக்கு எதையும் துறக்க வேண்டிய அவசியம்  இல்லை, ஏற்க வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய அவசியமும்  இல்லை.

( விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர்  கூறி உள்ளது  என்ன என்றால்  ‘ஆகாயத்திற்கு எப்படி எல்லை இல்லையோ, அதை போலவே  ஜீவாத்மாவிற்கும் எல்லை கிடையாது. அது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ளது. ஜீவாத்மா வியாபித்து உள்ள பிரபஞ்சமோ காலி மண்குடம் போன்றது. ஆகவே ஆகாயத்தில் உள்ள வெற்றிடம் போன்ற தன்மைதான் மண் குடத்தைப் போன்ற  உலகத்திற்கும் உள்ளது.  ஆகாயத்தை போன்றேதான் தூய்மையான, பேரானந்த நிலையில் உள்ள ஜீவாத்மாவிற்கும்  எல்லை இல்லை, எந்த பந்தமும் இல்லை, இன்ப துன்பங்கள்  இல்லை. இந்த உண்மைகளை உணர்ந்து  கொண்டவனுக்கு  ஜீவாத்மாவை அடையும் நிலையிலான விழிப்புணர்வை அடைய துறவறம் தேவை இல்லை, எதையும் ஒதுக்கி வைக்கவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ தேவை இல்லை’ என்பதாக ஜீவாத்மாவின் நிலையைக்  குறித்து அஷ்டவாக்கரர்  கூறுகின்றார்).

महोदधिरिवाहं स प्रपञ्चो वीचिसन्निभः ।

इति ज्ञानं तथैतस्य न त्यागो न ग्रहो लयः ॥

6.2   ஜீவாத்மா கடல் போன்றது. கண்களுக்கு  தெரியும் உலகம் கடலின் அலைகள் போன்றது. இதுவே பிரபஞ்சத்தின் நியதியாகும். இந்த உண்மையை முழுமையாக உணர்ந்து கொண்டவனுக்கு எதையும் துறக்க வேண்டிய அவசியம்  இல்லை, ஏற்க வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய அவசியமும்  இல்லை. 

( விளக்கம் :  ‘ஜீவாத்மா என்பது கடல் போன்று படர்ந்து விரிந்து உள்ளதாகும். அந்த ஜீவாத்மாவில் இருந்து வெளியாகும் பிரபஞ்சம்  என்பது,  கடல் அலைகளினால் எழும் நீர் குமிழிகள் போன்ற நிலையிலானது. கடல் அலைகளில் இருந்து வெளிப்படும் நீர் குமிழிகள் எப்படி மீண்டும் கடலில்  முழுகி மறைந்து விடுமோ, அது போலவே ஜீவாத்மாவிடம் இருந்து தோன்றும் பிரபஞ்சமும் அதே ஜீவாத்மாவிற்குள்  சென்று மறைந்து விடும். எனவே உலகம் என்பது நிலையற்ற  நீர் குமிழிகள் போன்றது. இந்த உண்மைகளை உணர்ந்து  கொண்டவனுக்கு  ஜீவாத்மாவை அடையும் நிலையிலான விழிப்புணர்வை அடைய துறவறம் தேவை இல்லை, எதையும் ஒதுக்கி வைக்கவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ தேவை இல்லை’ என்பதாக ஜீவாத்மாவின் நிலையைக்  குறித்து அஷ்டவாக்கரர்  கூறுகின்றார்).

अहं स शुक्तिसङ्काशो रूप्यवद् विश्वकल्पना ।

इति ज्ञानं तथैतस्य न त्यागो न ग्रहो लयः ॥

6.3  சமுத்திரத்தில் மூழ்கி உள்ள மின்மிக்கும் முத்துச் சிப்பியை      அறியாமையினால் வெள்ளி என்று நினைப்பதை போலவேதான் மாயை தோற்றம் தரும் உலகத்தின் நிலையும் உள்ளது.   இந்த உண்மையை முழுமையாக உணர்ந்து கொண்டவனுக்கு எதையும் துறக்க வேண்டிய அவசியம்  இல்லை, ஏற்க வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய அவசியமும்  இல்லை. 

(விளக்கம் : ‘கடலில் காணப்படும் பளபளக்கும் அரிய வகை  முத்துச் சிப்பியை வெள்ளி என்று எண்ணி ஏமார்ந்து விடுவார்கள். அதை வெளியில் எடுத்த பின்னரே அது முத்து என்பது தெரியும். அந்த அரிய வகை  முத்துச் சிப்பியை போன்ற மாயத் தோற்றம் கொண்டதே ஜீவாத்மாவிடம் இருந்து வெளியான இந்த உலகமும். அந்த ஜீவாத்மாவே படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் எனக்குள்ளும், உனக்குள்ளும் உள்ளது, பிரபஞ்சத்திலும் வியாபித்து உள்ளது.  தானே வெளிப்படுத்திய  பிரபஞ்சம்  முழுவதும் தான் வியாபித்து இருந்தாலும் அந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் எந்த செயல்களுக்கும் எண்ண அலைகளுக்கும் தான் காரணமல்ல  என்ற நிலையோடு அது எதன்  மீதும் பற்று இல்லாமல் சுதந்திரமாக, தனித்துவ தன்மையோடு பேரானந்த நிலையில் உள்ளது. ஜீவாத்மாவிற்கு  அழிவில்லை, இறப்போ பிறப்போ எதுவும் இல்லை.  இந்த உண்மைகளை உணர்ந்து  கொண்டவனுக்கு  ஜீவாத்மாவை அடையும் நிலையிலான விழிப்புணர்வை அடைய துறவறம் தேவை இல்லை, எதையும் ஒதுக்கி வைக்கவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ தேவை இல்லை’ என்பதாக ஜீவாத்மாவின் நிலையைக்  குறித்து அஷ்டவாக்கரர்  கூறுகின்றார்).

अहं वा सर्वभूतेषु सर्वभूतान्यथो मयि ।

इति ज्ञानं तथैतस्य न त्यागो न ग्रहो लयः ॥

6.4  என்னால் படைக்கப்பட்ட அனைத்திலும் வியாபித்து உள்ளது ஜீவாத்மா. அதே போல படைக்கப்பட்ட அனைத்தும் ஜீவாத்மாவிற்குள் அடங்கி உள்ளன என்ற  உண்மையை முழுமையாக உணர்ந்து கொண்டவனுக்கு எதையும் துறக்க வேண்டிய அவசியம்  இல்லை, ஏற்க வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய அவசியமும்  இல்லை. 

(விளக்கம்: ‘அனைத்து இயக்கங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தை வெளிப்படுத்திய அதே ஜீவாத்மாவே  பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உள்ளது. அதே  ஜீவாத்மாதான்  எனக்குள்ளும் உள்ளது, உனக்குள்ளும் உள்ளது, பிரபஞ்சத்திலும் வியாபித்து உள்ளது.   என்ன ஆச்சர்யம்,  தானே வெளிப்படுத்திய  பிரபஞ்சம்  முழுவதும் தான் வியாபித்து இருந்தாலும் அந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் எந்த செயல்களுக்கும் எண்ண அலைகளுக்கும் தான் காரணமல்ல  என்ற நிலைபாடோடு அது எதன்  மீதும் பற்று இல்லாமல், சுதந்திரமாக, தனித்துவ தன்மையோடு பேரானந்த நிலையில் உள்ளது.  ஜீவாத்மாவிற்கு  அழிவில்லை, இறப்போ, பிறப்போ எதுவும் இல்லை, அது நிரந்திரமானது. இந்த உண்மைகளை உணர்ந்து  கொண்டவனுக்கு  ஜீவாத்மாவை அடையும் நிலையிலான விழிப்புணர்வை அடைய துறவறம் தேவை இல்லை, எதையும் ஒதுக்கி வைக்கவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ தேவை இல்லை’ என்பதாக ஜீவாத்மாவின் நிலையைக்  குறித்து அஷ்டவாக்கரர்  கூறுகின்றார்). 

ஏழாவது  அத்தியாயம்

 தன் நிலைக் குறித்து ஜனக மன்னன் அஷ்டவக்கரரிடம்  எடுத்துரைக்கின்றார்

मय्यनन्तमहाम्भोधौ विश्वपोत इतस्ततः ।

भ्रमति स्वान्तवातेन न ममास्त्यसहिष्णुता ॥

7.1  பரந்து விரிந்துள்ள கடல் போன்ற ஜீவாத்மாவிற்குள்அலை பாயும் எண்ணங்களுடன் கூடிய உலகம் இங்கும் அங்கும் தள்ளப்படுகிறது. ஆனாலும் அவற்றினால் ஜீவாத்மாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.  நான் இன்னமும் என் பொறுமையை இழக்கவில்லை.  

( விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னன் தன் நிலை விளக்கத்தில்  ‘கடல் மீது வீசும் காற்றினால் கடலில் மிதக்கும் கப்பல் அங்கும் இங்கும்  தள்ளப்படுகிறது, அல்லது  கடலுக்குளேயே விழுகின்றது.  அந்த நிகழ்வினால் கடல் எந்த பாதிப்பிற்கும் உள்ளாவதில்லை, கப்பல் மட்டுமே சேதம் அடைகின்றது. அதை போலவேதான் கடல் போன்று விரிந்து படைத்துள்ள ஜீவாத்மா பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து இருந்தாலும், தானே  வெளிப்படுத்திய உலகம் பல்வேறு   பெயர்களில், பல்வேறு தன்மைகளில்  இருந்தாலும், அவற்றில்  வாழும் மக்களின் மன எண்ணங்களினால் எழும் குழப்பங்களினாலும், இன்ப, துன்பங்களினாலும்  எந்த பாதிப்பையும் அடைவது இல்லை. நடப்பவை அனைத்துமே அவரவர்களின் மன எண்ணங்களின்  பிரதிபலிப்பாகும். ஜீவாத்மா என்பது  அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையிலானது,  சுதந்திரமானது, யாருக்கும், எதற்கும்  கட்டுப்பட்டதல்ல, நிலையானது. இந்த உண்மைகளை எல்லாம் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளதினால்தான் இன்னமும் எனது பொறுமையை இழக்காமல் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு  தூய உணர்வு நிலையில் இருக்கின்றேன் ‘ என்பதாக கூறினார்)

मय्यनन्तमहाम्भोधौ जगद्वीचिः स्वभावतः ।

उदेतु वास्तमायातु न मे वृद्धिर्न च क्षतिः ॥

7.2   பரந்து விரிந்துள்ள கடலைப் போன்ற என்னுள், மாயையினால் ஏற்படும்  உலக இயக்கங்கள் கடலுக்குள் தோன்றி மறையும் கடல் அலைகள் போலவே உள்ளன. அவற்றினால்  நான் வளர்ச்சி அடையவும்  இல்லை, தாழ்ந்து போகவும் இல்லை.

( விளக்கம் : இதன் மூலம் ஜனக மன்னன் தன் நிலை விளக்கத்தில்  ‘கடல் மீது எழும் அலைகள் காற்றினால் ஏற்படுபவை. காற்றின் வீச்சினால் சிறியதும், பெரியதுமாக கடல் அலைகள் கடலில் இருந்து மேலெழுந்து வந்து  மீண்டும்   கடலுக்குள்ளேயே சென்று  மறைந்து விடும். அப்படியானால்  கடல் அலையும் கடலும் வெவ்வெறானவையா என்ற வினாவிற்கான பதில், இல்லை என்பதே. கடல்  நீர்தான்  அலையாக உருவெடுத்து, அதன் மீதிருந்தே  மேல் எழும்பி,  அதே கடலில் மறைகின்றது. அதை போலவேதான் மாயையான உலகிலும் பல செயல்களும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என்றாலும்  முடிவாக அவை அனைத்துமே மாயையான உலகின் மீதே சென்று மறைகின்றது. இன்னும் ஒரு படி  மேல் சென்று பார்த்தால் உலகம் கூட ஜீவாத்மாவில் இருந்து வெளியாகி பல்வேறு பெயர்களிலும் தன்மைகளிலும் இருந்து விட்டு, அதன் கால முடிவில் அந்த பிரும்மனுக்குள்ளேயே ஐக்கியம் ஆகி விடும் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நிகழ்வுகளினால்  ஜீவாத்மாவிற்கு எந்த வளர்ச்சியோ அல்லது தாழ்வோ ஏற்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏன் என்றால் ஜீவாத்மா அழிவற்றது, நிலையானது, மாறுதல் அடையாதது, சுதந்திரமானது, எதன் மீதும் பற்று இல்லாதது என்பதினால் உலகத்தில் ஏற்படும் எந்த சூழ்நிலைகளும் அதை எந்த விதத்திலும் மாறுதலுக்கு உள்ளாக்காது என்பதே உண்மை என்பதை அறிந்தவன் நான். அதனால்தான்  இன்னமும் எனது பொறுமையை இழக்காமல் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு  தூய உணர்வு நிலையில் இருக்கின்றேன் என்கின்றார்).

मय्यनन्तमहाम्भोधौ विश्वं नाम विकल्पना ।

अतिशान्तो निराकार एतदेवाहमास्थितः ॥

7.3  பரந்து விரிந்துள்ள கடலைப் போன்ற என்னிடத்தில்    உலகம் உள்ளது  என்பது கற்பனை, ஏன் எனில் உலகமே மாயையாகும். நானோ உருவமற்ற நிலையில், அமைதியாக உள்ளேன்.

नात्मा भावेषु नो भावस्तत्रानन्ते निरञ्जने ।

इत्यसक्तोऽस्पृहः शान्त एतदेवाहमास्थितः

7.4  நான் ஐம்புலன்களில் இல்லை, அவைகளும் எனக்குள்  இல்லை.  ஆனந்தமயமான, அமைதியான  நிலையில் உள்ள  நான்  எல்லையற்ற, களங்கமற்ற, புனிதமான, ஆசைகளற்ற, பற்றற்ற நிலையில் உள்ள நான் நானாக உள்ளேன். 

(விளக்கம் : இதன்  மூலம் ஜனகர் கூறினார்  ‘நமக்குள் இருக்கும் ஒரே  உண்மை ஜீவாத்மா. மற்ற அனைத்தும் உண்மையற்றவை.  ஜீவாத்மா என்பது  சுதந்திரமானது,  எல்லையற்றது, அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளதாகும். அது செயல்படுவதில்லை, உணர்வும் இல்லை.  அதை  மனத்திலோ, எண்ணங்களிலோ, சொற்களிலோ அல்லது இதயத்திலோ அடைத்து வைக்க  முடியாது. ஐம்புலன்களில் அடங்கியவை அல்ல  ஜீவாத்மா, அதே போலவேதான் ஜீவாத்மாவின்  உள்ளேயும் ஐம்புலன்கள் இல்லை.  ஆசைகளும், எண்ணங்களும்  மனதின் மாயைகள், அவை ஆத்மாவிற்கல்ல. அதனால்தான்  தனித் தன்மையுடனான ஜீவாத்மா ‘தான் தானாகவே’ உள்ளது  என்பதை நான் நன்கு உணர்கின்றேன். அதனால்தான்  இன்னமும் எனது பொறுமையை இழக்காமல் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு  தூய உணர்வு நிலையில் இருக்கின்றேன்’ என்கின்றார்).

अहो चिन्मात्रमेवाहमिन्द्रजालोपमं जगत् ।

इति मम कथं कुत्र हेयोपादेयकल्पना ॥

7.5  உண்மையாகவே நான் பேரானந்த  நிலையில்  இருக்கின்றேன். இந்த உலகமே மாயா ஜால காட்சியை உள்ளடக்கிய மாயையான  தோற்றம் கொண்டது எனும்போது அந்த உலகில் இருந்து எதை நிராகரிப்பது அல்லது எதை எடுத்துக் கொள்வது என்ற கற்பனையில் நான் எப்படி இருக்க முடியும்?

(விளக்கம் : ஜனகர் இப்படியாக தன்னிலை விளக்கம் அளித்தார் ‘ஞான நிலையை அடைந்து விட்டவனுக்கு இந்த உலகமே மாயை என்ற எண்ணம் இருக்கும்.  அவனை சுற்றி பன்முகத் தோற்றமும், பல்வகை உணர்வுகளும் கொண்ட மானிடர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்  அவனை உலகின் எந்த மாய நிகழ்வுகளும் ஈர்க்க முடியாது. உலகை சுற்றி இன்ப, துன்பங்கள், கேளிக்கைகள், கிளுகிளுப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் போலியான வாழ்க்கை முறைகளே  உள்ளன.   அப்படிப்பட்ட உலகத்தின் மீதான பற்றுக்கள் அனைத்தையும்  துறந்தால் மட்டுமே ஞான நிலையின் பாதையில் நுழைய முடியும் என்பதை நன்கே  உணர்ந்த நான் இப்போது  பேரானந்த  நிலையில்  இருக்கின்றேன்.  இந்த உலகமே   மாயா ஜால காட்சியை உள்ளடக்கிய மாயை தோற்றம் கொண்டது  என்பதை முற்றிலும் புரிந்து கொண்டுள்ள எனக்கு அந்த உலகில் இருந்து எதை நிராகரிப்பது அல்லது எதை எடுத்துக் கொள்வது என்ற கற்பனை எப்படி தோன்றும்? அதனால்தான்  இன்னமும் எனது பொறுமையை இழக்காமல் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு  தூய உணர்வு நிலையில் இருக்கின்றேன்’ என்கின்றார்).

எட்டாவது  அத்தியாயம்

அஷ்டவக்கரர் உபதேசம் தொடர்கின்றது. ஜனக மன்னனுக்கு ஆத்மாவைக் குறித்த நிலையை எடுத்து உரைக்கின்றார்.

तदा बन्धो यदा चित्तं किञ्चिद् वाञ्छति शोचति ।

किञ्चिन् मुञ्चति गृह्णाति किञ्चिद्धृष्यति कुप्यति ॥

8.1 எப்போது சித்தம் (மனநிலை) எதையாவது நினைத்து  வருந்துகின்றதோஏங்குகின்றதோ, மகிழ்ச்சி அடைகிறதோ, வேண்டாம் என ஒதுக்கித்  தள்ளுமோ, இன்பத்தில் ஆழ்ந்திருக்குமோ அல்லது கோபப்படுமோ, அதுவே அது உலக பந்தத்தில்  அடிமையாகி விட்டதின் அடையாளம் ஆகும்.

(விளக்கம் : ஜனகரின் பதிலால் திருப்தி அடைந்த அஷ்டவக்கரர் மேலும் கூறலானார் ‘நித்திய வடிவமான ஆத்மாவுக்கு  எதையுமே துறத்தல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்ற மாயையான உணர்வுகள் கிடையாது என்பதை முன்னர் கூறினாய்.  உனது  எண்ணம்  சரியானதேயாகும். ஜீவாத்மாவை அடைய  முயலும் சாதகனுக்கு அப்படிப்பட்ட  உணர்வுகள் மீண்டும் எழத்  துவங்கி விட்டால்  அது உலக பந்தங்களில் மூழ்கி விட்டது என்ற நிலையை காட்டும். அந்த நிலையை அடைந்து விட்டால் ஐம்புலன்களில்  சிக்கி,   எண்ண அலைகளினால்  உந்தப்பட்டு மேலும் மேலும் எதையாவது அடைய மனதில் பேராசை ஏற்படும்.  அது  விரும்பிய பொருளை அடையும்போது  அதற்கு மகிழ்ச்சியாகவும், கிடைக்காதபோது கோபமாகவும் மாறும். இப்படி மனதிற்கும் அதன் மரண நாடகங்களுக்கும் இடையே சிக்கி அடிமையாகி விடுவதையே  அடிமைத்தனம்  என்கின்றோம்’).

तदा मुक्तिर्यदा चित्तं न वाञ्छति न शोचति ।

न मुञ्चति न गृह्णाति न हृष्यति न कुप्यति ॥

8.2  எப்போது சித்தம் (ஒருவரின் மனநிலையை குறிக்கிறது) அலை மோதாமல் எதையும் அடைய விரும்பாமல், கவலை கொள்ளாமல், விருப்பு மற்றும் வெறுப்பு கொள்ளாமல், மகிழ்ச்சி அல்லது துக்கப்படாமல் இருக்குமோ, அதுவே சாதகன் விடுதலை அடைந்து விட்ட நிலையை  காட்டுவதாகும்.

(விளக்கம் : ‘சித்தம் என்பது மன நிலையை குறிக்கின்றது. மனதில் எழும் விருப்பு, வெறுப்பு, ஆனந்தம், துக்கம், போன்ற அனைத்துமே மனதின் குப்பைகள் ஆகும். எப்படி ஒரு நீர் நிலையில் அழுக்குகள் சேர்ந்தால் நீர் நிலைக்கு அடியில் உள்ளவற்றை காண முடியாதோ, அதே போலவேதான் மனதின் அழுக்குகள் இருந்து கொண்டே இருக்கும்வரை உள்ளே உள்ள பேரானந்த நிலையான ஜீவாத்மா  என்பதை நம்மால் உணர முடியாது. மனம் அமைதி அடைந்தால்தான்  பற்று விலகும், ஆசா பாசங்கள் அழியும். அதுவே பேரானந்த நிலையான ஞான நிலையை அடைய வழி வகுக்கும். இல்லை எனில் மனதிற்கும் அதன் மரண நாடகங்களுக்கும் இடையே சிக்கி அடிமையாகி விடுவோம்’ என்பதாக அஷ்டவாக்கரர் ஜனக மன்னனுக்கு எடுத்துக் கூறினார்).

तदा बन्धो यदा चित्तं सक्तं कास्वपि दृष्टिषु ।

तदा मोक्षो यदा चित्तमसक्तं सर्वदृष्टिषु ॥

8.3   எப்போது மனதில் உலக பொருட்களின் மீதான நாட்டம்  தோன்றத் துவங்குமோ  அப்போதே அறியாமை எனும் அடிமைத்தனத்தில் மூழ்கி விடுவோம். எப்போது மனதில் இருந்து  உலக பொருட்களின் மீதான இச்சைகள்  அனைத்தையும் அழித்துக் கொள்வோமோ அப்போதே நாம் ஆத்ம விடுதலை பெற்று விடுவோம்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு  மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை பலமுறை  கூறுவது போல தோன்றினாலும், உண்மை நிலை அதுவல்ல.  இந்த போதனையில் உள்ள ஆழமான கருத்தை கவனத்தில் கொண்டால் அது புரியும்.   முதல் இரண்டு  போதனைகளிலும்  அவர் அலைபாயும் மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். முதல் போதனையில் அலைபாயும் எண்ணத்தினால் மீண்டும் மீண்டும், அதை செய்ய வேண்டும் , இங்கு போக வேண்டும், அவர் அழகாக இருக்கின்றார், நாம் ஏன் அதை வாங்கக் கூடாது போன்ற  ஏதாவது எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்க, சாதகர்  எதையாவது செய்து கொண்டே இருப்பார். அந்த நிலை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி விடும் என்று கூறினார்.

இந்த போதனை மூலம்  அவர்  உலக பொருட்கள் மீதான நேரடியான ஆசைகளைக் குறித்து  குறிப்பிடுகின்றார். ஒரு  பொருளை நேரடியாக  பார்க்கும்வரை அதன் மீது ஆசை வராது. ஒன்று இரண்டாகலாம் , மூன்றாகலாம், மேலும் பலவற்றிலும் நாட்டம் வரலாம்.  பொருட்களின் மீதான ஆசை வளரும்போது அதுவும் அடிமைத்தனத்திற்கு வழி வகுத்து விடும்.

மனதில் ஆசைகளை வளர்த்துக் கொண்டு மன அளவில் இருப்பதும், ஒரு பொருளை பார்த்து அதை அடைய முயற்சிப்பதும், இரண்டுமே  அடிமைத்தனம்தான். ஆகவே அந்த இரண்டு நிலைகளையும்  தனித்தனியே எடுத்துக் காட்டினால்தான் மனதில் அந்த கருத்து ஆழமாக பதியும் என்றே அஷ்டவக்காரர் நினைத்து இருக்கக் கூடும். அதன் விளைவால் எழுந்ததே  இந்த போதனையும் ஆகும்).

यदा नाहं तदा मोक्षो यदाहं बन्धनं तदा ।

मत्वेति हेलया किञ्चिन्मा गृहाण विमुञ्च मा ॥

8.4 நான் என்ற அகம்பாவம் எப்போது தலை தூக்குமோ, அப்போதே அடிமைத்தனம் எனும் அறியாமையில் நாம் மூழ்கி  விடுவோம். நான் என்ற அகங்காரம் முற்றிலும் அழிந்தால் மட்டுமே ஆத்ம விடுதலை பெறும் மார்கத்தில் நுழைய முடியும். ஆகவே விளையாட்டிற்குக் கூட  எதையும் விரும்பக் கூடாது, வெறுக்கக் கூடாது.

ஒன்பதாம்  அத்தியாயம்

பற்றை நீக்கிக் கொள்ளுதல்

कृताकृते च द्वन्द्वानि कदा शान्तानि कस्य वा ।

एवं ज्ञात्वेह निर्वेदाद् भव त्यागपरोऽव्रती ॥

9.1  எதை செய்வது, எது கூடாது,  எதற்கு ஆனந்தம், எதற்கு துன்பம், எது வெற்றி, எது தோல்வி என்ற மனக் குழப்பங்கள் வாழ்க்கையுடன் தொடர்பவை. ஆகவே   துறவி போன்று அவற்றை அலட்சியப்படுத்துங்கள். உலக பந்தங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

(விளக்கம்:  அஷ்டவக்கர் ஜனகருக்கு  கூறினார் ‘வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, வேண்டும், வேண்டாம், வெற்றி மற்றும் தோல்வி போன்ற நிலைப்பாடுகள் அனைத்தும் ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருப்பவை, வாழ்க்கையில் இருந்து அவை எந்த நிலையிலும்  ஒய்வு பெறுவதில்லை. அவற்றை தீர்க்க முயலும்போது  எழும்  மன எண்ண ஓட்டங்கள் ஓய்வதில்லை.  விளைவு , ஞான நிலைக்கான பாதையில்  நுழைவதற்காக விலக்கி வைத்து இருந்த பற்று மீண்டும் ஒட்டிக் கொள்கின்றது. ஞான நிலையை அடையும் முயற்சி தளர்வடைகின்றது. ஆகவேதான் ஒரு துறவியின் நிலையில் இருந்தவாறு அனைத்து பற்றுக்களையும்  விலக்கி வைத்துக் கொண்டு , என்ன நடந்தால் என்ன, அதற்கும் எனக்கும்  சம்மந்தம் இல்லை என்ற நிலைப்பாட்டோடு  அலட்சியமாக இருக்க வேண்டும். அலட்சியப் படுத்துபவர்களிடம்  எவரும் செல்ல மாட்டார்கள் என்பதினால், பிரச்சனைகள் உன்னை தேடி வராது, அவை உன்னை  கடந்து சென்று விடும் என்பதினால் நீ உனது பயணப் பாதையில் தடங்கல்கள் இன்றி பயணிக்கலாம்’)

कस्यापि तात धन्यस्य लोकचेष्टावलोकनात् ।

जीवितेच्छा बुभुक्षा च बुभुत्सोपशमं गताः ॥

9.2  மகனே, உலகின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளை    கூர்ந்து  கவனித்து, அனைத்துமே மாயை என்பதை புரிந்து கொண்டு, அவற்றின் மீதான ஆசைகளை அழித்துக் கொள்ளும் அறிவாளி ஒருவனை  காணுவது அரிதிலும் அரிதானதாகும். 

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவாக்கரர் என்ன கூறினார் என்றால் ‘உலக நடப்புகளை, மானிட வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்ப நிலைகளை, கவலை, வேண்டும், வேண்டாம், வெற்றி மற்றும் தோல்வி போன்ற நெறி முறைகளை கூர்ந்து நோக்கும்  மெத்த அறிவாளி  ஒருவன், அப்படிப்பட்ட நிலையிலான உலக நடப்புகள் வாழ்க்கைக்கு தற்காலிகமாக சந்தோஷம் அளிக்கலாம், செல்வங்களை அளிக்கலாம்,  துயரங்களை அளிக்கலாம், ஏழ்மையை அளிக்கலாம் ஆனால் அவற்றை மீறி எந்த ஒருவனுக்கும்  நேரடியாக பேரானந்த  நிலையான ஆத்ம விடுதலையை அளிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொள்வான். ஆனால் வேறு பலரோ அந்த உண்மைகளை உணர்ந்து கொள்ளாமல் உலக பந்தங்களில் சிக்கி, அவதியுற்று, அவமானப்பட்டு, அடிமைத்தனத்தில் வாழ்ந்தவாறு,  வாழ்க்கையின் துன்ப நிலையில் இருப்பார்கள்’).

अनित्यं सर्वमेवेदं तापत्रितयदूषितम् ।

असारं निन्दितं हेयमिति निश्चित्य शाम्यति ॥

9.3  வாழ்க்கை மூன்று விதங்களிலான துயர நிலைகளினால் சூழப்பட்டுள்ளது என்பதினால் வாழ்க்கையே அர்த்தமற்றது, இழிவானது  மற்றும் நிலையற்றது என்பதை எப்போது ஒருவன் உணர்வானோ அப்போதே அவன் மன அமைதியை பெறுவான்.

(விளக்கம் : இதன் மூலம் அஷ்டவக்கரர்  என்ன செய்தியை ஜனகருக்கு தெரிவித்தார் என்றால் ‘இயற்கை அல்லது சமுதாயத்தில் காணப்படும்   மூன்று நிலைகளிலான துன்பம்  என்பவற்றை ஆத்யாத்மிகா, ஆதிதைவிகா மற்றும் ஆதிபௌதிகா என்பார்கள்.  (i) ஆத்யாத்மிகா துக்க நிலை என்பது  உடல் துன்பம் மற்றும் மன வேதனையால் ஏற்படுகிறது. (ii) ஆதிதைவிகா துக்கம்  என்பது தெய்வ நியதியினால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளான நோய்கள், வெள்ளம் மற்றும் நெருப்பு போன்ற  சக்திகளால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் (iii) ஆதிபௌதிகா துக்க நிலை  என்பது காட்டு விலங்குகள், பாம்புகள் அல்லது பிற பூதங்கள் அல்லது உயிரினங்களால் ஏற்படும் துக்க நிலையாகும். அவை அனைத்துமே வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க முடியாதவை. அந்த துன்ப நிலைகள் எதனால் நேரிடுகின்றன? மனிதர்களின் தீராத பேராசை, பொருளாசை மற்றும் பெண்ணாசையே அவற்றுக்கான அடிப்படைக் காரணம் ஆகும். இந்த மூன்றுக்குமான அடிப்படைக் காரணம் அலைபாயும் மன எண்ண ஓட்டங்கள்தான். ஆகவே மன எண்ண ஓட்டங்களை அழித்துக் கொண்டு,  உலக பந்தங்கள் அனைத்தையும் எவன் ஒருவன் துறந்துவிட்டு  இருப்பானோ, அவனே பரிபூரண மன அமைதியுடன் இருப்பான். அதாவது ஞான நிலைக்கான பாதையில் அடியெடுத்து  வைப்பான்’ ).

कोऽसौ कालो वयः किं वा यत्र द्वन्द्वानि नो नृणाम् ।

तान्युपेक्ष्य यथाप्राप्तवर्ती सिद्धिमवाप्नुयात् ॥

9.4   மனதின் அனைத்து சலனங்களையும்   துறந்து விட்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனப் பக்குவம் பெறும்  நிலையே பூரணத்துவமான நிலை என்பதினால்,  அப்படிப்பட்ட மன சஞ்சலம்  அற்ற  வாழ்க்கை  நிலையை ஆண்கள் எந்த வயதில் பெறுவார்கள்?

(விளக்கம் : மானிட வாழ்வில் இருக்கும் ஆணாயினும் சரி, பெண் ஆயினும் சரி அவர்களுக்கு  இன்ப, துன்பங்கள் போன்ற பல்வேறு   இருமை நிலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த இருமை நிலைகள் ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும்  இருக்க முடியாது.  எந்த நேரத்தில் எவருக்கு இன்பங்களும் துன்பங்களும் வரும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூற முடியாது. அவை அவனவன் கழிக்க வேண்டிய  பிராரப்த கர்ம வினைக்கேற்ப நிகழும். இன்ப துன்பங்கள் சிறு வயதிலும் ஏற்படலாம் அல்லது வாழ்க்கையின் கடைசி கால கட்டங்களிலும் தோன்றலாம். இன்ப துன்பங்களுக்கு ஆண் மற்றும் பெண் என்ற வேற்றுமை கிடையாது. ஆகவே ஒருவருக்கு இன்ன வயதில்தான் மனப் பக்குவம் பெறும்  நிலை வரும் என்பதை முன்கூட்டியே  கூற இயலாது என்பதினால் ஆண்களுக்கு துறவற வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலை எந்த வயதில்  வரும் என்பதை கூற முடியாது  என்பதை தெளிவுபடுத்தினார்.  எனவே எவர் ஒருவர் , அது ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி  அவர்களது மனதில்  ஏற்படும் அனைத்து சலனங்களையும்   துறந்து விட்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மன நிலையை அடைவார்களோ அப்போதுதான் அவர்கள் மன அமைதியை அடைவார்கள் என்பது பொது நியதி ‘ என்கின்றார்).

नाना मतं महर्षीणां साधूनां योगिनां तथा ।

दृष्ट्वा निर्वेदमापन्नः को न शाम्यति मानवः ॥

9.5  மாமுனிவர்கள், மஹான்கள் மற்றும் முனிவர்களுக்கு இடையே  நிலவும் ஆன்மீக  முரண்பட்ட கருத்துக்களால் தன்னுள் எந்த   சலனத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் எவன் ஒருவனோ அமைதியாக இருப்பானோ, அவனே ஆத்ம விடுதலை பெறும் மனநிலையை அடைவான்.

(விளக்கம்: இதன் மூலம் அஷ்டவாக்கரர் என்ன உபதேசிக்கிறார் என்றால் ‘ஒவ்வொரு ஆன்மீக குருவும் ஒவ்வொரு வகையிலான தத்துவ போதனை செய்வார்கள். இறை வழி  மார்கத்தில் பயணிக்க வெவ்வேறு பாதைகளை காட்டுவார்கள். அத்வைத தத்துவம்   என்பது ஜீவாத்மா என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றுதான் வேறல்ல, சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்கின்றது.   துவைதத் தத்துவமோ பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை, பரமாத்மா என்பவர்  தனிமையானவர், அதில் ஜீவாத்மா கிடையாது என்கின்றது.  விசிஷ்டாத்வைதமோ  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும், ஜீவாத்மா என்பது பரமாத்மாவிலிருந்து தான் வெளிப்பட்டது என்று   கூறுகிறது. அதே போல மதப்பிரிவுகளில்   சைவம் என்பது  சிவனை மூலக் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு ஆகும். வைணவம் விஷ்ணுவையும், சாக்தம் என்பது சக்தியை (பெண் தெய்வம்) வணங்கும் சமயப் பிரிவு ஆகும். கௌமாரம் என்பது முருகனை வணங்கும் சமயப் பிரிவு ஆகும். சௌரம் என்பது சூரியனை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு ஆகும் கணாபத்தியம் என்பது விநாயகரை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமய பிரிவு ஆகும்.  அவை அனைத்தையும்  போதனை செய்யும் ஆசான்கள் ஒவ்வொரு வகையிலான தத்துவ போதனை செய்வார்கள். ஆசான்களும் குருமார்களும் அவரவர் முறைக்கேற்ப போதனைகள் செய்வார்கள். அவை வெளியில் இருந்து பார்த்தால் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டது   போல தோன்றினாலும் முடிவில் இறைவன் நம்பிக்கையை   அடிப்படையாக கொண்டதுதானே.  இப்படி  முரண்பட்ட நிலைப்பாடுகளான ஆன்மீகத்தில்  எந்த மார்கத்தில் செல்வது என்ற எந்த குழப்பமும் கொள்ளாமல் தான் முழுமையாக நம்பும் மார்கத்தில் அமைதியாக பயணித்தபடி இருப்பவனே வெற்றிகரமாக ஆத்ம விடுதலை பெறுகின்றார்’).

कृत्वा मूर्तिपरिज्ञानं चैतन्यस्य न किं गुरुः ।

निर्वेदसमतायुक्त्या यस्तारयति संसृतेः ॥

9.6  உலக சலனங்களினால் சற்றும்  பாதிக்கப்படாமல், அனைத்து சூழ்நிலையிலும் ஒரே  சீரான மன நிலையில் இருந்தவாறு, ஆத்ம விடுதலை அடைந்து, மற்றவர்களையும் சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை பெற எவர் ஒருவர் வழி வகுப்பாரோ, அவரே உண்மையான ஆன்மீக குரு எனப்படுவார்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு ஆன்மீக குரு என்பவர் யார் என்பதை குறித்து இப்படியாக தெளிவுபடுத்துகிறார்.  ‘யார் எனில் எவர் ஒருவர் சீரான மன நிலையில் இருந்தவாறு, இன்பமோ, துன்பமோ எந்த நிலையிலும் சலனப்படாமல், எந்த விதமான பாகுபாடும் இல்லாத  மன நிலையுடன், தர்க்க ரீதியான பகுத்தறிவுடன், பட்டற்ற நிலையில் இருந்து ஆன்மீக விடுதலை பெற்றவரே பிரும்ம நிஷ்டை எனப்படும் விழிப்புணர்வை பெற்ற ஆன்மீக குரு எனப்படுபவர் ஆவார். அப்படிப்பட்ட ஆன்மீக குருவே எவர் ஒருவர்  சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை  பெற விரும்புவாரோ அவர்களுக்கும்   ஞான வழி மார்கத்தில் செல்ல வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பார்’.

தர்க்கரீதியான பகுத்தறிவு என்பது சிந்தனையின் ஒரு வடிவமாகும்,  வாதங்களின் சரியான தன்மையுடன் தொடர்புடையது. தர்க்க ரீதியான சிந்தனை என்பது உங்கள் ஒழுக்கமான முறையில் சிந்திக்கும் திறன் அல்லது ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் மீது குறிப்பிடத்தக்க எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டது).

पश्य भूतविकारांस्त्वं भूतमात्रान् यथार्थतः ।

तत्क्षणाद् बन्धनिर्मुक्तः स्वरूपस्थो भविष्यसि ॥

9.7   உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கான மூல காரணமே  மனம், உடல், புலன்கள் போன்றவற்றினால் ஏற்படும் தாக்கங்கள்தான். எவன் ஒருவன் இதை  தீர்க்கமாக உணர்வானோ, அந்த ஷணம் முதலே  அவன் அறியாமையில் இருந்து விடுதலை  பெற்று ஆனந்த நிலையின் பாதையில் நுழைந்து விடுவான். 

(விளக்கம்: இந்த போதனை மூலம் ஜனகருக்கு அஷ்டவக்கரர் கூறியது என்ன என்றால் ‘பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்பவற்றை ஐம்புலன்கள் என்கிறோம். இந்த ஐம்புலன்களும் இயங்கக் காரணம்  கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்பனவாகும்.  இவை அனைத்துமே உடல் உணர்வுகளை தூண்டக் கூடியவை. மனதில் ஏற்படும் எண்ண அலைகளினால் உடலின் உணர்வுகள் தூண்டப்பட்டு,  அதன் விளைவினால் பல்வேறு நிகழ்வுகளும் உலகில்   நடைபெறுகின்றன. ஆகவே ஆன்மீக விடுதலை பெற விரும்புகிறவன் முதலில் ஐம்புலன்களின் தாக்கத்தை அடக்க வேண்டும். ஐம்புலன்களை  முற்றிலும் அடக்கிக் கொண்டால்தான் உலகப் பற்றை விலக்கிக் கொள்ள  முடியும். உலக பற்றை முற்றிலும் விலக்கிக் கொண்டால் மட்டுமே ஆன்மீக விடுதலை அடைய முடியும்.  இந்த உண்மையை உணர்ச்சிபூர்வமாக அறிந்தவன் மட்டுமே ஞான நிலையின் பாதையில் நுழைய முடியும்’).

वासना एव संसार इति सर्वा विमुञ्च ताः ।

तत्त्यागो वासनात्यागात्स्थितिरद्य यथा तथा ॥

9.8  ஆசா பாசங்கள், ஆசைகள் போன்ற  வாழ்க்கை சக்கரங்கள்  சூழ்ந்ததே உலகம்.  அவை அனைத்தையும்  துறந்து, உலக வாழ்வே மாயை என்பதை  உணர்ந்து கொண்டு, உலக பற்றையும்  துறந்து விட்டால் உலகில்  எங்கு வேண்டுமானாலும் சென்று  வசிக்க முடியும் .

(விளக்கம் : அஷ்டவக்கரர்  ஜனக மன்னனுக்கு உபதேசமாக கூறினார் ‘ஆசா பாசங்கள் மற்றும்   ஆசைகளே நம்மை சம்சார சாகரத்தில் முழுமையாக இணைத்து விடுகின்றது. முதலில் அவற்றை   துறந்து விட்டால்  உலகின் மீதான பந்தத்தையும் எளிதில்  விலக்கிக் கொள்ள முடியும். அந்த நிலையில் சென்று விடுபவனை  எந்த சூழ்நிலையும்  பாதிக்காது. ஞான நிலையை  எட்டி விடும்  அவன் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்க முடியும்’).

பத்தாம்  அத்தியாயம்

அஷ்டவாக்கரர் உபதேசங்களை தொடர்ந்தார் 

विहाय वैरिणं काममर्थं चानर्थसङ्कुलम् ।

धर्ममप्येतयोर्हेतुं सर्वत्रानादरं कुरु ॥

10.1  காமம், பொருளாசை மற்றும்  தர்ம  செயல்கள் மீது நாட்டம் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்

{விளக்கம் :  இது மேலோட்டமாக பார்க்கக் கூடியது அல்ல. காமம், பொருளாசை மற்றும்  தர்ம  செயல்கள் போன்ற மூன்றும் ஒன்றுடன்  ஒன்று சம்மந்தப்பட்டவை.  இதில் உள்ள ஆழமான கருத்து என்ன என்றால் ‘தான தர்மங்கள் செய்ய பெரும் பொருள் வேண்டும். யாகங்கள், சடங்குகளை செய்தும், அதர்ம செயல்களிலும் ஈடுபட்டும் வளமான வாழ்க்கைக்கான பெரும் பொருள் சேர்ப்பார்கள். பெரும் பொருள் கிடைத்தவுடன்  பொருளாசையோடு மண் ஆசையும் (உலகப் பற்று) சேர்ந்து கொள்கின்றது . மண் ஆசையும், பொருள் ஆசையும் சேர்ந்தால் மேலும், மேலும் வளமான வாழ்க்கையை தேடி அலைவார்கள். வளமான வாழ்க்கை அமைத்து விட்டாலோ கூடவே காம, சிற்றின்ப ஆசைகளும் மனதில் ஒட்டிக் கொள்ளும். இது இயற்கை. தான தர்மங்கள் கேட்பவர்களும் விட மாட்டார்கள், காம ஆசைகளை தேடி அலையாவிடிலும் மற்றவர்கள் விட மாட்டார்கள். ஆகவே  ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள இவை அனைத்தும் இருக்கும்வரை ஒருவரால் முழுமையாக மோட்ஷம் தரும் பாதைக்கான மனவிடுதலை  எனும் பேரானந்த நிலையை அடைய முடியாது. ஆகவேதான் உலகப் பற்றான மண் ஆசை, பெண்ணாசை மற்றும் பொருளாசை போன்ற மூன்று எதிரிகளையும்  நமது வாழ்வில் இருந்து துரத்த வேண்டும்’ என்பதை  அறிவுரையாக அஷ்டவக்கர் கூறி உள்ளார்).

स्वप्नेन्द्रजालवत् पश्य दिनानि त्रीणि पञ्च वा ।

मित्रक्षेत्रधनागारदारदायादिसम्पदः ॥

10.2   மனைவி, நண்பர்கள், பொருள், நிலம், வீடு மற்றும் பிற பரிசுப் பொருட்கள் அனைத்துமே செப்படி வித்தைக்காரன் காட்டும் மாயாஜால வித்தையைப்  போல மூன்று அல்லது ஐந்து நாட்களே  நிலைப்பவை என்ற மன  நிலையில் இருக்க வேண்டும்.

(விளக்கம் :  இதுவும்  மேலோட்டமாக பார்க்கக் கூடியது  போதனை அல்ல. மனைவி, நண்பர்கள், பொருள், நிலம், வீடு மற்றும் பிற பரிசுப் பொருட்கள் அனைத்துமே செப்படி வித்தைக்காரன் காட்டும் மாயாஜால வித்தையைப்  போல மூன்று அல்லது ஐந்து நாட்கள் மட்டும்தானா நிலைக்கும் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் ‘மாயாஜால வித்தையைப்  போல மூன்று அல்லது ஐந்து நாட்கள்’ என்பது வாய் வழி மூலம் கூறப்படும் பொதுவான போதனை ஆகும். ஞான நிலையை அடையும் பாதையில் பயணிக்கத் துவங்கியதும் முதலில் அனைத்து பற்றையும் விட்டு விட வேண்டும் என்பது நியதி. ஆகவே அப்படிப்பட்ட வைராக்கிய நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக கூறப்படும் அறிவுரையை இது.

ஒரு சாதகன் குருவிடம் சென்று தனக்கு ஆத்ம விடுதலை பெறும்   வழிக்கான போதனையை கொடுக்குமாறு கேட்டதும் முதலில் அவன் மனதில் ஆழமாக அமர வேண்டிய தத்துவமாக இந்த போதனையை கூறுவார்கள்  ‘மனைவி, நண்பர்கள், பொருள், நிலம், வீடு மற்றும் பிற பரிசுப் பொருட்கள் அனைத்துமே செப்படி வித்தைக்காரர் காட்டும் மாயாஜால வித்தையைப்  போல மூன்று அல்லது ஐந்து நாட்களே  நிலைப்பவை என்பதாக சாதகன் மனதில் கூறிக்  கொண்டே இருந்தால் அது அவன் மனதில் ஆழமாக பதிந்து அவனை உலகப் பற்றில் இருந்து விடுவிக்கும் நிலைக்கு தள்ளும்’  என்பதான போதனையாக  அஷ்டவக்கரர் கூறி உள்ளார்).

यत्र यत्र भवेत्तृष्णा संसारं विद्धि तत्र वै ।

प्रौढवैराग्यमाश्रित्य वीततृष्णः सुखी भव ॥

10.3  ஆசைகளை அழித்துக்  கொள்ளாதவரை உலகம் மாயை என்பதை புரிந்து கொள்ள முடியாது. ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருந்து ஆத்ம மகிழ்ச்சியோடு  இருக்க வேண்டும்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் ‘ஆத்ம மகிழ்சசி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் ஆசைகளை அடக்கிக் கொள்ள வேண்டும். ஆசை அசைந்து, ஓடும் தேர் போன்றது. மனமோ   குதிரைகள் போல வெகு வேகமாக ஓடக் கூடியவை. காலையில் சுவையான உணவை உண்டால் மாலையில் இன்னும் அது போன்ற உணவு கிடைக்காதா என மனம் எங்கும்.  இப்படித்தான் ஒவ்வொரு ஆசைகளையும் ஏற்றிக் கொண்டே செல்லும் தேர் மெல்ல மெல்ல,  அசைய குதிரைகள் அந்த தேரை  வேகமாக இழுத்துக் கொண்டு செல்ல, மனம் எங்கெங்கோ  சென்று கொண்டிருக்க, உலக  பற்று எங்கிருந்து விலகும்? எனவேதான்    ஆத்ம மகிழ்ச்சியோடு  இருக்க வேண்டும் என்றால் ஆசைகளை அடக்க வேண்டும்,  அலை பாயும் மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்’)

तृष्णामात्रात्मको बन्धस्तन्नाशो मोक्ष उच्यते ।

भवासंसक्तिमात्रेण प्राप्तितुष्टिर्मुहुर्मुहुः ॥

10.4  ஆசைகள் உள்ளவரைதான் அடிமைத்தனம் எனும் அறியாமை நம்மை ஆக்ரமித்தபடி இருக்கும். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளவை. பேரானந்த நிலையான ஞானத்தை அடைய  வேண்டும் எனில் முதலில் அனைத்து  பற்றையும்  விலக்கிக்  கொள்ள வேண்டும்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் ‘மனிதனாக பிறந்து விட்டவன் நிலையை எண்ணிப் பார் ஜனகா, ஒருவனின் தலைமுடி உதிர்ந்து அவன் மொட்டையாகி விடலாம், அவனது  பற்கள்  உதிர்ந்து விடலாம், மீசையும் நரைத்து போகலாம்,  உடல் தளர்ந்து போகலாம். ஆனாலும் எத்தனை வயதானாலும் அவனது மனதில் கெட்டியாக அமர்ந்திருக்கும் அவனது ஆசைகளின் மீசை நரைப்பதில்லை, முடி கொட்டுவதில்லை மற்றும் பற்களும் அடர்த்தியாகவே இருக்கும்.   ஜனகா, பேரானந்த நிலையான ஞானத்தை அடைய  வேண்டும் எனில் முதலில் மனதில் விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் ஆசைகளை அல்லவா முற்றிலும் அழித்துக் கொள்ள வேண்டும்! அதன் பிறகல்லவா பேரானந்த நிலையை அடைய முடியும் ‘)

त्वमेकश्चेतनः शुद्धो जडं विश्वमसत्तथा ।

अविद्यापि न किञ्चित्सा का बुभुत्सा तथापि ते ॥

10.5    நீ (ஜீவாத்மா எனும் பிரும்மன் ) தூய்மையானவன், அறிவுமயமானவன். உலகம் முதல் மற்ற  அனைத்துமே ஜடமானவை, மாயையானவை. அறியாமையும் போலியானது எனும்போது நீ ஜடமான உலகில் இருந்து எதை அடைய  முனைகின்றாய் ?

(விளக்கம் :   இங்கு நீ  என்று அஷ்டவக்கரர் குறிப்பிட்டு உள்ளது ஜனகரின் உடலில் உள்ள தூய ஆத்மாவைக் குறித்து அவருக்கு நினைவுபடுத்தும்  நிலையாகும். ஜனகருக்கு அஷ்டவக்கரர் என்ன கூறினார்  என்றால் ‘ஜனகா, ஆத்மா என்பது அறிவு மயமானது, தூய்மையானது மற்றும் சூனிய நிலையிலானது. அறியாமை என்பது அதற்கு அறவே இல்லை. உலகில் எது நடந்தாலும் அதற்கு பாதகமோ அல்லது சாதகமோ எதுவும் இல்லை. காரணம் அது பற்று இல்லாத சூனிய நிலையிலானது. அப்படிப்பட்ட அமைதியான இடத்தை அடைய துடிப்பவன்  உனக்கு  மாயையான உலகம் எப்படி இருந்தால் என்ன, அதில் என்ன நாடகம் நடந்தால் என்ன? அவற்றில் யார் எப்படி வாழ்ந்தால் என்ன? நீ ஏன் உன் எண்ணத்தை விரையம்  செய்ய வேண்டும்? போலியான  உலகில் இருந்து எதை நீ அடைய  முனைகின்றாய் ? ‘)

राज्यं सुताः कलत्राणि शरीराणि सुखानि च ।

संसक्तस्यापि नष्टानि तव जन्मनि जन्मनि ॥

10.6 ராஜ்ஜியம், மனைவி, மக்கள் இனிய வாழ்க்கை என்பவை உன்னோடு அழிவில்லாமல் நிலைக்கின்றனவா?  அவற்றின் மீது நீ எத்தனை பற்று வைத்துக் கொண்டாலும் உன் ஜனன மரணத்தோடு அவையும் அழிகின்றன என்பது உண்மை அல்லவா.

(விளக்கம் : ஜனகா, உன்னோடு இந்த ஜென்மத்தில்  வாழும்   வாழ்க்கையோடு உன்னை   சுற்றி உள்ள  ராஜ்ஜியம், மனைவி , மக்கள், இனிய வாழ்க்கை  போன்ற அனைத்துமே அழிந்து விடும்.  ஒன்று  இந்த  ஜென்மத்திலேயே  அவர்கள் மரணம் அடைந்து விடுவார்கள், அல்லது அவை அழிந்து விடும். படைக்கப்பட்ட அனைத்திற்குமே அழிவு  உண்டு என்பது நியதி அல்லவா.  அடுத்த பிறவியில், அவர்கள் உன்னோடுதான் மனைவி மற்றும் மக்களாக பிறப்பார்கள் என்பது நிச்சயமா என்ன?  நீ  யார் என்பது அவர்களுக்கோ  அல்லது அவர்கள் யார் என்பது  உனக்கோ தெரியப் போவது இல்லை எனும்போது எதற்காக நீ இந்த ஜென்மத்தில் நிலையற்ற ஜடங்களான உலக இன்பங்கள், ராஜ்ஜியம், மனைவி, மக்கள் போன்றவற்றின் மீது அளவற்ற பற்று வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதாக அஷ்டவக்கரர் கேட்டார்).

अलमर्थेन कामेन सुकृतेनापि कर्मणा ।

एभ्यः संसारकान्तारे न विश्रान्तमभून् मनः ॥

10.7  செல்வம், ஆசைகள் மற்றும் புண்ணிய செயல்கள் செய்தவை  போதும்.  வனாந்திரம் போன்று பறந்து விரிந்து கிடைக்கும் இவைகளினால் மன அமைதி கிட்டாது.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனகருக்கு கூறியது இதுதான் ‘ஜனகா, இந்த  சாரமில்லாத உலகில் ஏற்படும்  பல்லாயிரக்கணக்கான மாற்றங்களுக்கு அடிப்படை  காரணங்கள் காமம், பொருளாசை மற்றும்  தர்ம, அதர்ம  செயல்கள்தான். அதில் நடைபெற்ற  கிளர்ச்சியூட்டும் செயல்கள்  மனதிற்கு எந்த வகையிலும் அமைதி கொடுப்பதில்லை.

நீ அரசனாக இருந்து கொண்டு செல்வம் சேர்த்தாய், ஆசைகளை அதிகரித்துக் கொண்டாய். பல  புண்ணிய செயல்களையும் செய்தாய். இப்போதோ மன அமைதி தேடி வந்துள்ளாய் என்பதால், போதும் இதுவரை நீ செய்தவை. அவற்றை நிறுத்திக் கொள்.  இல்லை என்றால் நீ  செய்ய, செய்ய உலக பற்றினால் இன்னும் செய்ய வேண்டும் என்ற ஆவல் உன்னுள் தோன்றிக் கொண்டே இருக்கும். அது  ஆலமரமாய் விரிந்து விடும்.  நீ செய்யவில்லை என்றாலும்  உன்னை செய்யுமாறு கூடி உள்ளவர்கள் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதினால்தான்  அவற்றை நிறுத்திக் கொள். வனாந்திரம் போன்று  படர்ந்து  கொண்டே போகும் அவற்றினால் உனக்கு பேரானந்த நிலை கிடைத்து விடுமா என்ன? நிச்சயம் கிடைக்காது என்பதினால்தான் இந்த அறிவுரையை கூறுகின்றேன்’).

कृतं न कति जन्मानि कायेन मनसा गिरा ।

दुःखमायासदं कर्म तदद्याप्युपरम्यताम् ॥

10.8  எத்தனை  ஜென்மங்களாக நீ மனதாலும், உடலாலும் வாக்காலும் உழைத்துக் கொண்டே  இருந்துள்ளாய்? போதும், இதோடு  நீ அவற்றை எல்லாம் துறந்து விடு.

(விளக்கம் : ‘ஜனகா, ஜென்ம, ஜென்மங்களாக நீ செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப  நீ   அடுத்தடுத்த பிறவிகளை  எடுத்துக் கொண்டே இருந்தவாறு பூர்வ ஜென்ம பிராரப்த கர்மாக்களை கழித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நீ உலக வாழ்க்கையில் உழன்று கொண்டே இருந்தால், அந்தந்த வாழ்வில் செய்த கர்மாக்களை கழிக்க அடுத்தடுத்த பிறவிகளை எடுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆகவே அந்த நிலையை தவிர்க்கும் விதமாக மறு  பிறப்பில்லா நிலையை அடைய வேண்டும் என நீ நினைத்தால் இந்த ஜென்மத்திலேயே உன் சரீரத்தின் மீதான, ராஜ்யத்தின் மீதான மற்றும் செல்வத்தின் மீதான ஆசைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டு  பற்றற்ற நிலை செல், பேரானந்த நிலையை அடைந்து விடுவாய்’ என்பதாக அஷ்டவாக்கரர் ஜனக மன்னனுக்கு அறிவுரை கொடுத்தார்).  

 

பதினோராம் அத்தியாயம்

அஷ்டவாக்கரர் உபதேசங்களை தொடர்ந்தார்

भावाभावविकारश्च स्वभावादिति निश्चयी ।

निर्विकारो गतक्लेशः सुखेनैवोपशाम्यति ॥

11.1  தோற்றம், வாழ்க்கை  மற்றும் அழிவு  போன்ற அனைத்துமே இயற்கையின் நியதிகள் என்பதை மனதார உணர்பவன் எவனோ, அவனே சுக, துக்கங்கள் பாதிப்பின்றி, எதற்கும் கலங்காமல் அமைதியான மன நிலையில் இருக்கின்றான்.

(விளக்கம்:  இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு என்ன கூறினார் என்றால் ‘ஜனகா, இயற்கையின் நியதியான இறப்பிற்கும் பிறப்பிற்கும் விதி விலக்கானவர் எவரும் இல்லை என்பதை அறியாதவர் எவருமில்லை. ஆனால் அறிந்தவர் மற்றும்  உணர்பவர் என்பதற்கு மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள  வித்தியாசம் ஆகும்.  இன்றைக்கே நான் மரணம் அடையத் தயார் என்று கூறுவதற்கும், என் விதிப்படி எப்போது மரணம் சம்பவிக்க வேண்டுமோ  அது நிகழட்டும், ஆனால் அதுவரை என் உடல் தனது  கடமையை செய்தபடி இருக்கட்டும், அதன் செயல்களுக்கும் நான் எனும் ஜீவாத்மாவிற்கும் எந்த சம்மந்தம் இல்லை, அது தனிமையானது, சுதந்திரமானது, அழிவற்றது என்பதினால் நான் உலக பற்றுக்கள் அனைத்தையும் துறந்த நிலையில்  பேரானந்தம் தரும் அமைதியான சூழ்நிலையில் செல்கின்றேன் என்ற மன நிலை எப்போது உறுதியாக தோன்றுமோ அப்போதுதான் இந்த உண்மையை உறுதியாக உணர்வான், அந்த நேரம் முதல் அவன் அமைதியான சூழ்நிலையில் வாழத் துவங்குவான்,  பேரானந்த நிலையை நோக்கி பயணிக்கும் பாதையில் பயணிப்பான்’).

ईश्वरः सर्वनिर्माता नेहान्य इति निश्चयी ।

अन्तर्गलितसर्वाशः शान्तः क्वापि न सज्जते ॥

11.2  இன்ப துன்ப எண்ணங்களை அழித்துக் கொண்டு  எதன் மீதும் பற்று வைக்காமல் முழுமையான மன அமைதியோடு இருப்பவன் யார்  என்றால்  இந்த  உலகை படைத்த  பரபிரும்மனை  தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறெவரும் இல்லை என்ற உண்மையை மனதார உணர்பவனே.  

(விளக்கம்:  இதன் மூலம் அஷ்டவக்கரர் ஜனகருக்கு என்ன கூறினார் என்றால் ‘ஜனகா, உலகை படைத்த  பரபிரும்மனை  தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறெவரும் இல்லை என்ற உண்மையை மனதார யார் உணர்வானோ அப்போதே அவனுக்குள் உள்ள நான் எனும் அகந்தை விலகி விடும். நான் எனும் அகந்தை அழிந்து விட்டாலே உலகின் மீதான பற்று அனைத்தும் அழிந்து விடும். உலக பற்று அழிந்து விட்டாலே பேரானந்த நிலையின் பாதையில் நுழைந்து விடுவான்’).    

आपदः सम्पदः काले दैवादेवेति निश्चयी ।

तृप्तः स्वस्थेन्द्रियो नित्यं न वाञ्छति न शोचति ॥

11.3  அதிஷ்டமும்,  துரதிஷ்டமும் அவனவன் பிராரப்த விதிக்கேற்ப, வர வேண்டிய நேரத்தில் நிச்சயமாக வந்தே தீரும் என்ற உண்மையை பரிபூரணமாக எவன் ஒருவன் உணர்ந்திருப்பானோ அவனுடைய  புலன்கள் அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும். அவனை இன்ப, துன்பங்கள் பாதிப்பது இல்லை.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு கூறிய செய்தி இதுதான் ‘இன்று நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் நல்ல காலமும் கெட்ட காலமும், அதிஷ்டமும், துரதிஷ்டமும் பூர்வ ஜென்ம வினைப் பலன்களினால் விளைபவை என்பதை எவன் ஒருவன் உறுதியாக நம்புவானோ அவன் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அவனை  எந்த பாதிப்பிற்கும் உள்ளாக்குவதில்லை. அவனது மனம் திடப்பட்டு நிற்க, எதையும் எதிர் கொள்ளும் மன நிலை அவனுக்குள் ஏற்படும். அதுவே   வைராக்கிய நிலையில் அவனை  கொண்டு செல்லும். மன வைராக்கியம் திடப்படும்போது ஐம்புலன்களினால் ஏற்படும் மாற்றங்கள் நம் மீது வீசும்  காற்றுபோல நம்மை கடந்து சென்று விடும் என்பதினால் அவனது புலன்களும் அவனுக்கு கட்டுப்பட்டே இருக்கும். மனதை பட்டற்ற நிலை எனும் ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதன் மூலம் மட்டுமே நாம் பேரானந்த நிலையை அடைய முடியும்).

सुखदुःखे जन्ममृत्यू दैवादेवेति निश्चयी ।

साध्यादर्शी निरायासः कुर्वन्नपि न लिप्यते ॥

11.4 இன்பமும் துன்பமும், பிறப்பும்,  இறப்பும் கர்மாவினால் தோன்றுபவை. பிராரப்த கர்ம எனும் விதியை  தான் விரும்பியபடி மாற்றி அமைக்க  முடியாது  என்பதை பரிபூரணமாக உணர்ந்தவன், உலகில்  எந்த பற்றும் இல்லாமல், ஆத்ம விடுதலை பெற்று  மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும்  இருக்கின்றான்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு கூறிய செய்தி இதுதான் ‘ நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்  அதற்கேற்ப வினைப் பலன் இருக்கும். அவற்றையே பிராரப்த கர்ம வினைகள் என்கின்றோம்.  பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின் பலன்களை நாம்  அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்காமல் இருக்க முடியாது. இதுவே  இறைவனின் நியதி ஆகும். இந்த யாதார்த்தத்தை அறிந்தவர்கள், ஆசைகள் எதுவும் இன்றி செயல்களை செய்வதால், அவர்களின் செயல்கள் அடுத்த பிறவியில் பிராரப்த பலனைத் தராது. இரண்டாமவர் தாம் செய்யும் செயல்களை பிறவி தர்மமாகக்  கருதி செய்வதாலும் அவர்களையும் கர்ம வினைகள்  பாதிப்பது இல்லை. மூன்றாவதானவர்கள் எந்தவிதமான அகங்காரமும் இல்லாமல் தமது கடமைகளை செய்வார்கள். அவர்களுக்கும் பிராரப்த கர்ம ஏற்படுவதில்லை.  இந்த உண்மையை நன்கு உணர்ந்தவன் அதற்கான பிராயசித்தங்களை தான் வாழ்ந்த காலத்திலேயே செய்து விட்டு ஞான நிலையை அடைந்து விடும்போது  அவனுடைய கர்மாக்கள் அவனை அடுத்த ஜென்மங்களில் துரத்துவது இல்லை என்பதின் காரணம் அவன்  ஞானம் பெற்றதும் இனி மறு பிறப்பில்லாத நிலைக்கு சென்று விடுகின்றான்’).

चिन्तया जायते दुःखं नान्यथेहेति निश्चयी ।

तया हीनः सुखी शान्तः सर्वत्र गलितस्पृहः ॥

11.5 ஆசைகளே இந்த உலகின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்திருப்பவன், அனைத்து ஆசைகளையும்  துறந்து, பற்றற்ற நிலையில் சென்று விடும்போது,  மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறான்.

(விளக்கம் : அஷ்டவக்கரர் ஜனக மன்னனுக்கு கூறிய செய்தி இதுதான் ‘நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்  அதற்கேற்ப வினைப் பலன் இருக்கும். அவற்றையே பிராரப்த கர்ம வினைகள் என்கின்றோம்.  பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின் பலன்களை நாம்  அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்காமல் இருக்க முடியாது. இதுவே  இறைவனின் நியதி எனும் யாதார்த்தத்தை நன்கு  உணர்த்திருப்பவர்களை  இன்ப துன்ப நிலைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்ல. மனதை பட்டற்ற நிலை எனும் ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதன் மூலம் மட்டுமே நாம் பேரானந்த நிலையை அடைய முடியும்’).

आब्रह्मस्तम्बपर्यन्तमहमेवेति निश्चयी ।

निर्विकल्पः शुचिः शान्तः प्राप्ताप्राप्तविनिर्वृतः ॥

11.6   நான் விழிப்புணர்ச்சி பெற்றவன். எனவே  ஜடமான உடலில் உள்ளது நான் (ஜீவாத்மா) அல்ல, அந்த உடலும் எனக்கு சொந்தமானது அல்ல என்ற  எண்ணத்தின் உச்ச நிலையை அடைந்து விட்டவன்,  முன்னர் செய்த, அல்லது செய்யாத செயல்களை எண்ணிப் பார்ப்பது இல்லை.

नानाश्चर्यमिदं विश्वं न किञ्चिदिति निश्चयी ।

निर्वासनः स्फूर्तिमात्रो न किञ्चिदिव शाम्यति ॥

11.7 இந்த உலகில் பிரும்மா முதல் புல் பூண்டு வரை அனைத்துமே  பரபிரும்மனே (ஜீவாத்மா)  என்ற உண்மையை உணர்ந்தவரே  முழுமையான மன விடுதலை பெற்றவனாக இருப்பார். அதை அடைய வேண்டும், இதை அடைய வேண்டும் என்ற எந்தவித சலனமும் அற்ற,  ஏகாந்தமான மன நிலையில் கவலையற்று இருப்பார்.

(விளக்கம் : பரபிரும்ம நிலை என்பது அனைத்தையும் துறந்த ஏகாந்த நிலை. அனைத்து ஆசா பாசங்களையும்   துறந்து  பட்டற்ற  நிலையில் மனம் சென்று விடும்போது  அதற்கு பின் எதை அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்? அந்த நிலையில் நான் என்ற மன நிலை மட்டுமே  இருக்கும். நான்  என்பது ஜீவாத்மாவுடன் கலந்துள்ள  பரமாத்மா எனும்போது அங்கு வேறு எந்த மன ஓட்டங்கள் இருக்க முடியும்? அதுவே மன விடுதலை அடைந்த முற்றிலும் அமைதி சூழ்ந்த ஏகாந்த நிலை ஆகும்’  என்பதாக அஷ்டவக்கரர் கூறினார் ).

பன்னிரண்டாம் அத்தியாயம்

ஜனக மன்னன் தனது விழிப்புணர்வு நிலையை  குறித்து அஷ்டவக்கரரிடம் கூறலானார்

कायकृत्यासहः पूर्वं ततो वाग्विस्तरासहः ।

अथ चिन्तासहस्तस्माद् एवमेवाहमास्थितः ॥

12.1 முதலில் நான், என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறக்கலானேன், பின்னர் நீண்ட  உரையாடல்களை துறக்கலானேன்.  முடிவாக  அனைத்து எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன்‘. 

(விளக்கம்  : ஜனக மன்னனின் தன்னிலை விளக்கத்தில் தான் எவ்வாறு படிப்படியாக  பேரானந்த நிலையில் காலடி எடுத்து வைத்தேன் என்பதை விளக்கினார்.  ‘வாழ்க்கையில் ஆன்மீக விடுதலை பெற விரும்புபவர்கள் மூன்று நியமங்களை கடை பிடிக்கிறார்கள். முதலாவது உணர்ச்சி  கொண்ட உடலின் செயல்பாடுகளை மெல்ல மெல்ல நிறுத்துவது. இரண்டாவது அவசிய மற்றும் அனாவசிய பேச்சு வார்த்தைகளை குறைக்கத் துவங்குவது, மற்றும் மூன்றாவதாக உலக பந்தங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தன்னைப் பற்றி நினைக்காமல், அந்த நினைவுகளையும்  மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு ஜீவாத்மாவின் மீதான நம்பிக்கையை ஆழமாக வைத்துக் கொள்ளத் துவங்குவது. இப்படியாக தனக்குள் மெல்ல மெல்ல  தெய்வீக உணர்வை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்  ஒரு சாதகன் அதை தியான நிலை மூலம் ஸ்திரப்படுத்திக் கொள்ள முயல்கின்றான்’. இதுதான் பேரானந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதகனின் நிலைப்பாடு என்பதை தன்னிலை விளக்கம் மூலம் அழகாக எடுத்துரைத்த  ஜனக மன்னன் தானும் அந்த மூன்று நிலைகளையும் அகற்றிக் கொண்டு பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ என்பதாக தனது குருவான அஷ்டவக்கரரிடம் கூறினார்).

प्रीत्यभावेन शब्दादेरदृश्यत्वेन चात्मनः ।

विक्षेपैकाग्रहृदय एवमेवाहमास्थितः ॥

12.2  அறியாமை காரணமாகவே களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதை நன்கு  உணர்ந்து கொண்டு விட்டதினால்தான் அந்த எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன்‘. 

(விளக்கம்  : ஜனக மன்னனின் இந்த  தன்னிலை விளக்கத்தில் தான் எவ்வாறு தனது உணர்ச்சி மிக்க புலன்களை அழித்துக் கொண்டு பேரானந்த நிலையில் காலடி எடுத்து வைத்தேன் என்பதை விளக்கினார்.     ‘எப்போது ஒருவன் தனது புலன்களை அழித்துக் கொண்டு, சிற்றின்பங்களை துறந்து, மனதிற்கு களிப்பூட்டும் செயல்களையும் துறந்து, யாருடனும் பேசாமல் மௌனமாகி விடுவானோ, அந்த நிலையில் அவன் அனைத்து பற்றுக்களை அழித்துக் கொண்டவன் ஆகி விடுவான், அப்போது அவன் மனம் முற்றிலும் அவன் கட்டுப்பாட்டில் வந்து விடும். அவனது  சிந்தனை முழுவதும் ஆத்ம விடுதலையை நோக்கியே சென்று  கொண்டிருக்கும். அவன் பேரானந்த அமைதி நிலையை எட்டி விடுவான்.  பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ என்பதாக தனது குருவான அஷ்டவக்கரரிடம் கூறினார்).

समाध्यासादिविक्षिप्तौ व्यवहारः समाधये ।

एवं विलोक्य नियममेवमेवाहमास्थितः ॥

12.3  அகம்பாவம், கோபம், இச்சை போன்றவற்றினால்  ஏற்படும் அலை பாயும்  எண்ணங்களை அழித்து மனதை சமாதி  நிலையில் வைத்துக் கொள்ள  வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு விட்டதினால் அந்த எண்ணங்களையும், கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன்‘.

(விளக்கம்:   ஜனக மன்னனின் இந்த  தன்னிலை விளக்கத்தில் ‘அறியாமையினால் ஏற்படுவதே அகம்பாவம், கோபம், இச்சை போன்றவை. ஐம்புலனைகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் அவற்றை எவரும் எளிதில் அடக்கிக் கொள்ள முடியாது என்பதினால் அதற்கு சாதனாக்களின் உதவி தேவைப்படுகின்றது. சாதனாக்களில் முக்கியமானது  தியானப் பயிற்சி என்பதை சாதகர் உணர்வார்.  வாழ்க்கையில் ஆன்மீக விடுதலை பெற விரும்புபவர்கள் மூன்று நியமங்களை கடை பிடிக்கிறார்கள். முதலாவது உணர்ச்சி  கொண்ட உடலின் செயல்பாடுகளை மெல்ல மெல்ல நிறுத்துவது. இரண்டாவது அவசிய மற்றும் அனாவசிய பேச்சு வார்த்தைகளை குறைக்கத் துவங்குவது, மூன்றாவதாக உலக பந்தங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தன்னைப் பற்றி நினைக்காமல், அந்த நினைவுகளையும்  மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு, ஜீவாத்மாவின் மீதான நம்பிக்கையை ஆழமாக வைத்துக் கொள்ளத் துவங்குவது. இப்படியாக தனக்குள் மெல்ல மெல்ல  தெய்வீக உணர்வை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்  ஒரு சாதகன் அதை தியான நிலை மூலம் ஸ்திரப்படுத்திக் கொள்ள முயல்கின்றான்.

ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல   என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறந்தேன், நீண்ட  உரையாடல்களை துறந்தேன், என்னை பற்றியே  சிந்திக்க விரும்பாத நிலைக்கு சென்று சமாதி நிலையை அடைந்தேன்.  களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகளையும்  அழித்துக் கொண்டு விட்டதினால், தியான பயிற்சி எனக்கு தேவைப்படவில்லை. எனவேதான்   பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ என்பதாக தனது குருவான அஷ்டவக்கரரிடம் கூறினார்).

हेयोपादेयविरहाद् एवं हर्षविषादयोः ।

अभावादद्य हे ब्रह्मन्न् एवमेवाहमास्थितः ॥

12.4    ஓபிராமணனேஅது வேண்டும், அது வேண்டாம் என்ற உணர்வுகளும், இன்ப துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்களும் அறியாமையினால்   ஏற்படுகின்றன என்பதை நன்கு  உணர்ந்து கொண்டு விட்டதினால்தான் அந்த எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன்‘.

(விளக்கம்:   ஜனக மன்னனின் இந்த  தன்னிலை விளக்கத்தில்,  ஓ,  பிராமணனே என்று  குரு அஷ்டவக்கரரை குறிப்பிட்டு கூறினார் ‘நான் ஏற்கனவே கூறியது போல   என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறந்தேன், நீண்ட  உரையாடல்களை துறந்தேன், என்னை பற்றியே  சிந்திக்க விரும்பாத நிலைக்கு சென்று சமாதி நிலையை அடைந்தேன்.  களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகளையும்  அழித்துக் கொண்டு விட்டேன். மேலும் அது வேண்டும், அது வேண்டாம் போன்ற உணர்வுகளையும், இன்ப துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளையும் அழித்துக் கொண்டு விட்டதினால் பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

आश्रमानाश्रमं ध्यानं चित्तस्वीकृतवर्जनम् ।

विकल्पं मम वीक्ष्यैतैरेवमेवाहमास्थितः ॥

12.5 ஜடமான உடலுடன் நான்கு நிலைகளிலான வாழ்க்கை, அதன் பின் தியானம், உலக பற்றை நீக்கிக் கொள்ளுதல் போன்ற குழப்பங்கள் எனக்கு தேவை அற்றவை  என்பதினால் அந்த எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன்‘.

( விளக்கம் : மேலுள்ள கருத்துக்கள் மூலம் ஜனகர் என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை பெற விரும்பும் சாதகர்களுக்கு கூறப்படுவது என்ன எனில் ஜடமான உடலுடன் மூன்று நிலைகளிலான பிரம்மச்சர்யம், குடும்பஸ்தன், வானப்ரஸ்தம் போன்ற வாழ்க்கை முறைகளை  அனுபவித்த  பின்  நான்காவது நிலையான சன்யாச நிலையை  அடைந்தால் மட்டுமே  பேரானந்த நிலைக்கான பாதையில் நுழைய முடியும்.   அந்த கடைசி நிலையை அடையவே அவர்களுக்கு தியானம், யோகா மற்றும் உலக பற்றை நீக்கிக் கொள்ளும் நியமங்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டி உள்ளது. ஆனால் நானோ  ஏற்கனவே கூறியது போல   என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறந்தேன், நீண்ட  உரையாடல்களை துறந்தேன், என்னை பற்றியே  சிந்திக்க விரும்பாத நிலைக்கு சென்று சமாதி நிலையை அடைந்தேன்.  களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகளையும்  அழித்துக் கொண்டு விட்டேன். மேலும் அது வேண்டும், அது வேண்டாம் போன்ற உணர்வுகளையும், இன்ப துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளையும் அழித்துக் கொண்டு விட்டதினால் பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன். எனக்கு தியானம் அவசியம் இல்லாதது).

कर्मानुष्ठानमज्ञानाद् यथैवोपरमस्तथा ।

बुध्वा सम्यगिदं तत्त्वमेवमेवाहमास्थितः ॥

12.6 அறியாமையின் காரணமாகவே  ஒன்றை செய்வதும், செய்யாமல் இருக்கும் நிலையும் ஏற்படுகின்றன என்பதை நன்கு  உணர்ந்து கொண்டதினால் அந்த எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன். 

( விளக்கம் : மேலுள்ள கருத்துக்கள் மூலம் ஜனகர் என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை பெற விரும்பும் சாதகர்கள் உணர்ந்து கொள்வது என்ன எனில் அறியாமையின் காரணமாகவே ஜடமான உடலுடன் மூன்று நிலைகளிலான  வாழ்க்கை முறைகளை  அனுபவித்த பின்   சன்யாச நிலையை    அடைய   தியானம், யோகா மற்றும் உலக பற்றை நீக்கிக் கொள்ளும் நியமங்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டி உள்ளது. ஆனால் ஏற்கனவே  நான்  என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறந்தேன், உரையாடல்களை துறந்தேன், பற்றில்லாத நிலைக்கு சென்று சமாதி நிலையை அடைந்தேன்.  களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகளை அழித்துக் கொண்டேன். அது வேண்டும், அது வேண்டாம் போன்ற உணர்வுகளையும், இன்ப துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளையும், ஒன்றை செய்வதும், செய்யாமல் இருக்கும் நிலையும், அழித்துக் கொண்டு விட்டதினால் பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

अचिन्त्यं चिन्त्यमानोऽपि चिन्तारूपं भजत्यसौ ।

त्यक्त्वा तद्भावनं तस्माद् एवमेवाहमास्थितः ॥

12.7   சிந்திக்க முடியாததை (பிரம்மம்) பற்றி  நினைக்க முயற்சிப்பது  மேலும் எண்ண அலைகளை அதிகரித்து மனக் குழப்பத்தை விளைவிக்கும்  என்பதை உணர்ந்துள்ளதினால் அந்த எண்ணங்களையும் கவலைகளையும் அழித்து விட்டு என் உள்ளத்தில் நான் நிலைத்திருக்கிறேன். 

( விளக்கம் : மேலுள்ள கருத்துக்கள் மூலம் ஜனகர் என்ன கூறினார் என்றால் ‘ஆத்ம விடுதலை பெற விரும்பும் சாதகர்கள் உணர்ந்து கொள்வது என்ன எனில் அறியாமையின் காரணமாகவே ஜடமான உடலுடன் மூன்று நிலைகளிலான  வாழ்க்கை முறைகளை  அனுபவித்த பின்   சன்யாச நிலையை    அடைய   தியானம், யோகா மற்றும் உலக பற்றை நீக்கிக் கொள்ளும் நியமங்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டி உள்ளது. ஆனால் ஏற்கனவே  நான்  என் உடல் சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை துறந்தேன், உரையாடல்களை துறந்தேன், பற்றில்லாத நிலைக்கு சென்று சமாதி நிலையை அடைந்தேன்.  களிப்பூட்டும் இசை, ஒலி மற்றும் பிற புலன்  உணர்ச்சிகளை அழித்துக் கொண்டேன். அது வேண்டும், அது வேண்டாம் போன்ற உணர்வுகளையும், இன்ப துன்பங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளையும், ஒன்றை செய்வதும், செய்யாமல் இருக்கும் நிலையும், அழித்துக் கொண்டு, சிந்திக்க முடியாத பிரம்மம் நிலை பற்றி  நினைக்க முயற்சிப்பது  மேலும் எண்ண அலைகளை அதிகரித்து மனக் குழப்பத்தை விளைவிக்கும்  என்பதையும்  உணர்ந்து கொண்டு விட்டதினால் பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ ).

एवमेव कृतं येन स कृतार्थो भवेदसौ ।

एवमेव स्वभावो यः स कृतार्थो भवेदसौ ॥

12.8  எவன் ஒருவன் மேலே நான் கூறியவற்றை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றானோ அவனே ஞான நிலைக்கு சென்றவன் ஆகின்றான்.

( விளக்கம் : மேலுள்ள கருத்துக்கள் மூலம் ஜனகர் ‘தான் அனைத்து எண்ணங்களையும் அழித்துக் கொண்டு விட்டதினால்தான்  வெற்றிகரமாக ஞான நிலையின் பாதையில் நுழைந்து பேரானந்த அமைதி நிலை எனும் மைய புள்ளியை நோக்கி செல்லும் அலை பாயாத மன நிலையுடன் ஸ்திரமாக உள்ளேன்’ என்பதாக அஷ்டவக்கரரிடம் தன்னிலை விளக்கம் அளித்தார்’).

……….தொடர்கின்றது
அத்தியாயம் 13 முதல் அத்தியாயம் 20 வரை