சாந்திப்பிரியா
அதன் பின் மீண்டும் சற்று நேரம் அமைதி நிலவியது. தர்மர் மீண்டும் நாரத முனிவரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டார் ‘ தேவ ரிஷியே, நீங்கள் துலா மாதத்தின் பெருமையை எடுத்துக் கூறினீர்கள். கார்த்திகை மாதத்துக்கு எவ்வளவு மகிமை உள்ளது என்பதையும் கூறினீர்கள். இடையிடையே சோம வார விரத மகிமைக் குறித்தும் சிவநாம மகிமைக் குறித்தும் ஓரிரு வார்த்தைகள் கூறினீர்கள். ஆகவே சோம வார விரத மகிமையும் எமக்குக் கூறுவீர்களா’ என்று கேட்க நாரதர் அதைப் பற்றியும் கூறத் துவங்கினார்.
‘தர்மராஜனே, உன் அனைத்து சந்தேகங்களும் நியாயமாகவே உள்ளன. துலா மாசமும், கார்த்திகை மாசமும் எவ்வளவு சிறந்தனவோ அவ்வளவு சிறப்பு பெற்றது சோம வார விரதம் இருப்பதில் உள்ளது. சோம வார விரதம் பித்ருக்களுக்கு பிரீதை (மகிழ்ச்சி) தரும். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களும் விஷ்ணுவிற்கு தீபாராதனை செய்தால் நரகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களும் சுவர்க்கத்துக்கு செல்வார்கள். சோம வாரத்தில் சிவன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றினால் கோடி குலத்தை உத்தாரணம் செய்ய முடியும். பிரும்மஹத்தி தோஷம் போன்ற கொடிய தோஷங்களும் பனி போல விலகும். சோம வாரத்தின் பலனை இந்தக் கதை மூலம் கேள்’ எனக் கூறிய நாரதர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார்.
‘கோதாவதி தீர்த்தத்தில் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்திருந்த வினதன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். அபார கல்வி ஞானம் பெற்று இருந்தாலும் எத்தனை கல்விமானாக இருந்தாரோ, அத்தனை கர்வியாகவும் இருந்தார். காரணம் காரிய சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்பதுதான். அந்த கர்வத்தினால் அவர் எந்த நியமங்களையும் சரிவரக் கடைபிடிக்கவில்லை. உடல் முழுவதும் கம்பளியைப் போர்த்தியது போல வரி வரியாய் வீபுதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷ மாலைகள் மார்பை அலங்கரித்துக் கொண்டவாறு கட்சி தரும் அவர் பழுத்தப் பழம் என்று கூறும் அளவுக்கு இருப்பார். ஆனால் அவருடைய உள்ளமோ கபடத்தினால் நிறைந்து இருந்தது. துஷ்டன், மகா முன்கோபி. பெண் லோலன். சாதுக்களை குறைக் கூறி துரத்துவான். அந்த ஊரில் அவனை விட்டால் வேறு நாதியே இல்லை என்பது போல அவரை மட்டுமே பாண்டித்தியத்துக்கும் புரோகிதத்துக்கும் அழைக்க வேண்டி இருந்தது. நாற்பது வயதுக்குள்ளாகவே ஐம்பதாயிரம் வராகன் பொன் சேர்த்து விட்டவருக்கு எண்பது வயதாகியது என்றாலும் அதே மிடுக்குடன் இருந்தார். உண்பது, அந்த வயதிலும் மனைவியுடன் சல்லாபிப்பது போன்றவைகளுமே அவருக்கு பிடித்தமானதாக இருந்தது.
ஒரு நாள் அவர் வீட்டில் ஒரு விஷேஷம் நடந்தது. அந்த விசேஷம் முடிந்ததும் தன் வீட்டில் உணவருந்த உட்கார்ந்த போது ஒரு ஏழை பிராம்மணர் அங்கு வந்தார். தாம் மிகவும் பசியோடு இருப்பதினால் உண்ண ஏதாவது உணவு தருமாறு பிட்ஷை கேட்டார். ஆனால் கோபம் அடைந்த வினதன் அவரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். ‘இது என்ன தர்ம சத்திரமா யார் வந்தாலும் உணவு தர. போ….போய் உன் வீட்டில் போய் கொட்டிக் கொள் ‘ என்று கத்தி விட்டு படீர் என வாயில் கதவை சாத்தினார்.
வந்தவர் பரம ஏழை. அவர் மனைவியும் இறந்து விட்டவள். பொருள் உள்ளவனுக்குத்தானே பந்தமும், மித்ருக்களும் இருப்பார்கள். ஆகவே ஒன்றுமற்ற அவரை யார் சீண்டுவார்கள்? ஆகவே நடை பிணமானவர் அங்கும் இங்கும் பிட்ஷை எடுத்து உண்டு வந்தார். ஆனால் அன்றோ அபாரப் பசி. தனக்கு உணவு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அடைய அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு உறங்கினார். ஆனால் அவருடைய உள் மனமோ வினதனை சபித்தது. ஒரு பிராமணனை அவமதித்ததற்காக அவன் அழியட்டும் என அவர் மனம் மனதார சபித்தது. உண்மையான மனதுடன் வேதனைகளில் தரப்படும் சாபங்கள் பலிக்கும் என்பார்கள். அதுவே வினதன் விஷயத்திலும் நடந்தது. அன்று இரவே அனைவரும் உறங்கியப் பின் வினதன் வீட்டில் புகுந்த ஆயுதம் எந்தியக் கொள்ளைக்காரர்கள் அவர் வீட்டில் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டார்கள். திடீர் என சப்தத்தைக் கேட்டு எழுந்தவர் திருடர்களைக் கண்டு கூச்சல் எழுப்பினார். அவர் குடும்பத்தினரும் எழுந்து கொண்டு திருடர்களை தாக்க, ஆயுதம் ஏந்திய திருடர்கள் அவர்கள் அனைவரையும் கொன்று விட்டார்கள். அவர்களின் வீடு கிராமத்தை விட்டு ஒதுக்குப் புறமாக இருந்ததினால் ஊருக்குள் யாருக்கும் நடந்ததும் தெரியவில்லை. அதனால் உதவவும் யாரும் வரவில்லை. ஆகவே அந்தக் கொள்ளைக்காரர்கள் கொள்ளை அடித்ததும் போதாதென்று அவருடைய வீட்டுக்கும் தீ வைத்துக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். அந்தக் குழப்பத்தில் அனைவரையும் விட்டு விட்டு தப்பி ஓடினார் வினதன். அவரை திருடர்கள் துரத்தி கொண்டு சென்றார்கள்.
ஐந்து காத தூரம் ஓடியவர் பிரும்மேச்வரம் என்ற கிராமத்தில் இருந்த ஒரு சிவன் ஆலயத்தைக் கண்டதும் அதற்குள் சென்று புகுந்து கொண்டார். அன்று சோம வாரம். அதைப் பார்த்த திருடர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள். தான் சம்பாதித்த அனைத்தையுமே கொள்ளையர்கள் ஒரு நொடியில் கொண்டு போய் விட்டார்களே. இருக்க வீடும் இல்லை, உண்ண உணவும் இல்லை என அழுது கொண்டு இருந்தவருக்கு பசி எடுத்தது. அவர் ஆலயத்துக்குள் சென்றபோது விடியற் காலையாக இருந்தது. ஆலயத்துக்குள் சென்றவன் அங்கு வந்து பூஜைகளை செய்தவர்கள் கொடுத்த பிரசாதங்களை உண்டான். நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் அங்கு நடந்தன. அந்த நான்கு வேலையும் அங்கு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கிடைத்ததை எல்லாம் உண்டான். நாள் முழுவதும் ஆலயம் திறந்தே கிடந்தது. ஆகவே அவனும் அந்த நான்கு கால பூஜையில் கலந்து கொண்டான்.
அப்போது அவன் மனதில் ஒரு தீய எண்ணம் உதித்தது. எப்படியாவது இன்று இரவு வரையிலான காலத்தை ஓட்டி விட்டால் இரவு எப்படியாவது சிலைக்கு போடப்பட்டு உள்ள வஸ்திரங்களையாவது, நகைகளையாவது எடுத்துச் சென்று விட்டால் அவற்றை விட்டு பணமாக்கிக் கொள்ளலாம் என நினைத்தான். இரவும் வந்தது. சோம வார விரதமென்பதினால் நிறைய பேர் அந்த ஆலயத்துக்கு வந்தார்கள். மாலையில் அங்கு சிவநாம காலட்சேபம் செய்தார்கள். அதை அவனும் விழித்திருந்து கேட்டான். இரவு வந்தது. அனைவரும் சென்று விட்டார்கள். அவனும் யாரும் காணாத இடத்தில் பதுங்கி இருந்தான். மறுநாள் விடியற்காலை எப்போதும் போல அர்ச்சகர் மூலவருக்கு பூஜைகளை செய்து விட்டு போக வந்தார். இரவு முழுவதும் கதையைக் கேட்டுக் கொண்டு இருந்ததினால் அன்று விடியற்காலை யாரும் ஆலயத்துக்கு வரவில்லை. அதனால் ஆலயம் காலியாகக் கிடந்தது.
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரச் சென்றபோது ஆலயத்துக்குள் மறைந்து இருந்த வினதன் வெளியில் வந்து கர்பக்கிரஹத்தில் புகுந்து தெய்வத்தின் மீது இருந்த நகைகளை எடுத்துக் கொண்டான். அதற்குள் அங்கு வந்துவிட்ட அர்ச்சகர் சுவாமியின் மீதிருந்த நகைகளை யாரோ திருடுவதைக் கண்டு திருடன், திருடன் என்று கத்திக் கொண்டே அவனைப் பிடிக்க முயல அவனோ நகைகளை எடுத்துக் கொண்டு எங்கு ஓடிச் செல்வது எனப் புரியாமல் ஆலய பிராகாரத்தை சுற்றி ஓடத் துவங்கினான். ஆலய பிராகாரத்தை சுற்றி சுற்றி ஓடத் துவங்கியவனை அர்ச்சகரும் விடாமல் துரத்தினார். இருவரும் மூன்று சுற்றுக்கள் ஓடி இருப்பார்கள். அப்படி ஓடியதில் வினதன் கால் தடுக்கி விழுந்தப் பின் தடுமாறி எழுந்திருக்க முயன்றான். ஆகவே அவன் தப்பிக்க முடியாமல் இருக்க அருகில் வந்துவிட்ட அர்ச்சகன் தன் கையில் இருந்த குடத்தினால் விந்தன் தலையில் ஓங்கி அடித்தார். உடனேயே விந்தனும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அர்ச்சகன் தலையில் ஓங்கி அடிக்க இருவருமே அடி தாங்க முடியாமல் அப்படியே கீழே விழுந்தார்கள். அர்ச்சகன் சிவ சிவா எனக் கூறிக் கொண்டே அங்கேயே மரணம் அடைந்தான். அது போலவே விந்தனும் பத்தடி ஓடிச் சென்று கீழே விழுந்து மரணம் அடைந்தான். இருவரையும் யம தூதர்கள் வந்து யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது இடையில் வந்த சிவகணங்கள் அந்த இருவரையும் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, அவர்களை தம்முடன் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யம தூதர்கள் அவர்கள் செய்துள்ள பாவத்துக்கு நரகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். சிவகணங்களுக்கும், யம தூதர்களுக்கும் வாக்குவாதம் அதிகமாகி, இரு தரப்பினரும் சண்டை இட்டுக் கொண்டார்கள். சிவகணங்களுக்கு எதிராக யம தூதர்கள் வெற்றி அடைய முடியுமா என்ன? சிவ கணங்கள் யம தூதர்களை அடித்து விரட்டி விட்டு இருவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்கள்.
யம தூதர்கள் யமனிடம் ஓடிச் சென்று நடந்ததை யமனிடம் கூற யம தர்மராஜர் நடந்தவற்றை அறிந்து கொண்டார். தாம் செய்துவிட்ட தவறு அவருக்குப் புரிந்தது. இறந்து போகும் தருவாயில் சிவ நாமத்தை உச்சரித்தவனையும், சோம வார விரதம் கடைப் பிடித்தவனையும் சிவலோகம் அனுப்பாமல் யமலோகத்துக்கா அழைத்து வர முடியும்? நடந்த தவறை யம தூதர்களுக்கு விளக்கி விட்டு அவர்களுக்கு உபதேசம் செய்தார் ‘கணங்களே, நாம்தான் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எவன் ஒருவன் நாஸ்தீகனாக இருந்தாலும், மகா பாவியாக இருந்தாலும், துர் நடத்தைக் கெட்டவனாக இருந்தாலும், தீமைகளை மட்டுமே செய்து வந்தவனாகவும் இருந்தால் கூட அவர்கள் மரணம் அடையும் தருவாயில் சிவ சிவா என ஸ்மரித்தால் அவர்களுக்கு அவர்கள் செய்த எந்த பாவத்தின் பலனும் கிடையாது. அவர்கள் சிவலோகமே செல்வார்கள். அது போலத்தான் விஷ்ணுவை ஸ்மரித்தாலும் அனைத்துப் பாவங்களும் விலகி விடும். அர்ச்சகனோ சிவ சிவா என்ற நாமத்தைக் கூறிக் கொண்டே மரணம் அடைந்ததால் அவர் இங்கு வர முடியாது. வினதனும் சோம வார பூஜையின் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டுள்ளான், பூஜைப் பிரசாதங்களையும் உண்டு விட்டு, இரவு முழுவதும் தெரிந்தோ தெரியாமலோ விழித்திருந்து சிவ நாம காலத்ஷேபத்தையும் கேட்டு விட்டு, விடியற்காலை சிவன் ஆலயத்தை மூன்று முறை பிரதர்ஷனம் செய்து விட்டப் பின் ஆலயத்துக்கு உள்ளேயே மரணம் அடைந்து உள்ளான். அப்படிப்பட்டவர்கள் பிரும்மஹத்தி தோஷத்தை செய்து இருந்தால் கூட அந்த தோஷம் அவர்களுக்கு எந்த கெடுதலையும் கொடுக்காது. ஆகவேதான் அவரையும் இங்கு நாம் அழைத்து வந்திருக்கக் கூடாது. அப்படி அழைத்து வந்தாலும் சிவகணங்கள் வந்து அவர்களை தம்முடன் அனுப்புமாறு கேட்டபோது அவர்களை அவர்களுடன் அனுப்பி இருக்க வேண்டும். அதை உங்களுக்கு இதுவரை கூறாதது நான் செய்த தவறு. இனியாவது இந்த நியதியை மறக்காமல் நாம் கடை பிடிக்க வேண்டும் ‘ என்றார் .
இதைக் கூறிய நாரதர் ‘தர்மபுத்திரனே, இப்போது உன் சந்தேகம் விலகியதா?. இப்போது சோம வார விரதப் பலனும் சிவநாம மகிமையும் புரிந்ததா ‘ என்று கேட்டார்.
முந்தைய பாகங்கள்
துலா புராணம் — 1
துலா புராணம் – 2
துலா புராணம் – 3
துலா புராணம் – 4
துலா புராணம் – 5
துலா புராணம் – 6
துலா புராணம் – 7
துலா புராணம் – 8
துலா புராணம் – 9
துலா புராணம் – 10