ரகுவம்சம் – 3
– சாந்திப்பிரியா – 

ரகுவின்பிறப்பும் , 

இந்திரனுடன் யுத்தமும்
அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. அனைவருக்கும் மன்னன் தாராளமாக நன்கொடைகளை தந்து தானங்களும் செய்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.  புத்திரன்  பிறந்ததும் நடைபெறும் அனைத்து சடங்குகளும் நடந்து முடிந்த பல காலத்துக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரை சூட்டினார்கள்.
வயதுக்கு வந்த பிள்ளைக்கு சடங்குகள் முறைப்படி நடந்தேறியன. ரகுவும் கடலைப் போல கல்வி ஆற்றலையும் அறிவையும்  பெற்றுக் கொண்டான். தக்ஷனின்  மகள்கள் எப்படி சந்திரனை மணந்தனவோ அதைப் போல அழகும் ஆற்றலும் பெற்றிருந்த மணப் பெண்களை தனது மகனுக்கு மனைவியாக்கி அழகு பார்த்தார். தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தை தருவதற்கு முன்னர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார்.
அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாக செல்ல  திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தார். அந்த யாகத்தைக் கண்டு பொறாமை கொண்ட தேவலோக அதிபதியான இந்திரனும் ரகுவின் கண்களை மாயையால் கட்டி விட்டு அந்த யாகக் குதிரையை கவர்ந்து சென்று விட்டார்.  யாகம் துவங்கி 99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு யாகம் நடந்து முடிந்த நிலையில் நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோது தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தார். ஐயோ மோசம் போய் விட்டோமே, யாகக் குதிரை எங்கே, எங்கே என அலறித் துடித்த ரகுவின் குரலைக் கேட்ட நந்தினி தேவலோகத்தில் இருந்து கீழிறங்கி அங்கே வந்தது. அங்கு வந்து  நின்ற நந்தினி தான் பொழிந்த சிறுநீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுமாறு  கூற ரகுவும் அதன் சிறுநீரால் தனது முகத்தைக் கழுவிக் கொண்ட அடுத்த வினாடியே  அவனால்  இந்திரன்  யாகக் குதிரையைக் கவர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் காட்சியை அப்படியே நேரடியாக காண  முடிந்தது.  அவ்வளவுதான் அங்கிருந்தபடியே ரகு குரல் கொடுத்தார்.
இந்திரனைப் பார்த்து ரகு  கூறினார் ‘இந்திரனே யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தை பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டு போகலாமோ?  யாகங்களைக் காப்பவரே யாகத்தை தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?  யாகம் நிற்க நீரே காரணம் ஆயின் உலகத்தினர் உம்மை இகழ மாட்டார்களா?  ஆகவே தேவனே நீர் களவாடிச் சென்றுள்ள குதிரையை விட்டு விட்டு யாகம்  நல்ல முறையில் நடைபெற உதவுங்கள். அப்படி நீங்கள் செய்யாவிடில் நீங்கள் பாபம் செய்தவர் ஆகி விடுவீர்’
ரகு உரக்கக்  கூறியதை கேட்டபடி சென்று கொண்டு இருந்த இந்திரன் திகைத்து நின்றார். இதென்ன  திலீபனின் மகன் இப்படி தீர்கமாகப் பேசுகிறான். இவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்றெண்ணிய இந்திரன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி நின்று கூறலானார் ‘ஷத்ரிய வம்ச ராஜகுமாரனே , நீ கூறுவது அனைத்துமே உண்மைதான். ஆனால் ஒரு அரசனுக்கு அழகு என்பது என்ன தெரியுமா?  அவரவர் புகழையே அவரவர் தமது செல்வமாகக் கருதுகிறார்கள். அதை இழக்கும்போது அதைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர் தக்க நடவடிக்கையை எடுத்துக் கொள்ளாவிடில் அதன் பின் அவர்கள் ஆண்டால் என்ன ஆட்சியில் இல்லாவிட்டால் என்ன? உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய  நிலைமையில் இருந்து இதை தடுத்தேன்.

மகனே, மஹாவிஷ்ணுவை மட்டுமே புருஷோத்தமா என்பார்கள், சிவபெருமானை திரயம்பகா என்பார்கள். அதை போலவேதான் என்னை சடக்ருதா என்பார்கள். சடக்ருதாவான என்னை அழிக்கும் விதத்தில்  இந்த  யாகம் நடப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்?  ஆகவே மைந்தனே மீண்டும் கூறுகிறேன், காது கொடுத்துக் கேள்.  வசிஷ்டரின் பசுவை கவர்ந்து சென்ற கபில மகரிஷியைப் போல  நான்  குதிரையை கவர்ந்து செல்கிறேன். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. என் புகழ் அழிவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை  தடுக்கவே இந்த காரியத்தை செய்தேன். ஆகவே கபில மகரிஷியை பின் தொடர்ந்து சென்று அழிந்துபோன சாகராவின் மகன்களைப் போல  நீயும் என் பின்னே வந்து அழிந்து விடாதே’ என்று கூற சற்றும் பயமில்லாத ரகு கூறினார்  ‘இந்திரனே, நீ அந்த குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் எடு உன் ஆயுதங்களை. என்னுடன் போரிட்டு என்னை வீழ்த்தி விட்டு  குதிரையைக்  கொண்டு செல்’ என்று கூறியபடி தன்னுடைய  உறையில் இருந்து அம்பை எடுத்து இந்திரனை நோக்கி வீசத் தயாரானார்.  இந்திரனும் ரகுவுடன் போர் புரிய தயாரானார். இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் செய்து கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத்  தாக்கிக் கொண்டார்கள்.  ரகு மீண்டும் மீண்டும் வித விதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலைகுலைய வைத்தார். இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம்  போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கி கீழே விழ வைத்தார்.  ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்திரனும் களைத்துப் போனார்.

அதைக் கண்ட ரகு இந்திரனை நோக்கிக் கூறினார் ‘தேவலோக அதிபதியே, இன்னும்  உன்னால் என் குதிரையை கவர்ந்து கொண்டு செல்ல   முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது.   எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும்.  அதற்கு அந்தக் குதிரை தேவை. அதை கொடுக்காமல் உன்னை தேவலோகத்துக்கு செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்த குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும்   என சத்தியம் செய்து வாக்கு கொடுத்து  விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்று விடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை’.

அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்து  கொண்டு  ரகுவை தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்ததினால் அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும்  செய்தபின் தேவலோகத்துக்கு திரும்பிச் சென்று விட, ரகுவும் தனது அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார்.  ரணகளத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்ற திலீபன் நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு  அழுதார்.  மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தார். யாகம் நல்லமுறையில் நடந்து முடிந்ததும் சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தை தந்து விட்டு தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தார்.

ரகு எனும் ரகுராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும் அவர் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தாலும் அக்கம்பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.  ரகுவின் ஆட்சியில் நேர்மை இருந்தது,  பட்சபாதம் இல்லை.  அவருடைய தந்தையை விட ஒரு படி மேலாகவே அவர் நியாயத்துடன் ஆட்சி புரிந்ததினால் அவர் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது.  சூரிய சந்திரன்களுக்கு இணையானவராகவே அவர்  போற்றப்பட்டார். விரிந்த கண்களும், திறந்திருந்த காதும் இருக்க வேண்டும் என்பது போல அவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்திருந்தார். கடல் எத்தனைதான் விரிந்துப் படர்ந்திருந்தாலும்   தன்னை  நோக்கி  வரும் ஆற்று  நீரையும்  கடல் ஒதுக்குவதில்லை.  அது  போலவேதான்  நாட்டு  நலனுக்கு தேவை நிதி என்பதினால் சின்ன  அரசனோ,  பெரிய  அரசனோ, யாராக இருந்தாலும் அனைவர் மீதும் படையெடுத்துச் சென்று அனைவரையும் வென்று  அந்த நாட்டில் இருந்து  தேவையான செல்வத்தை கொண்டு வந்து தன் நாட்டுக்கு நிதி  சேர்த்தான். அடுத்த வேலையாக அரண்மனை காவலை அதிகரித்தான்.  நாட்டு எல்லைகளை பலப்படுத்தினான். வசந்த காலம் துவங்க, தந்தையின் காலத்தில் நடந்து முடிந்திருந்த யாகத்தினால் கிடைத்த சக்தியையும் கொண்டு  நான்கு திசைகளையும் நோக்கி பெரும் படையுடன் சென்றான். வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து அதிர்கிறதோ எனும் அளவுக்கு அவன் படையில் இருந்த யானைகளும், குதிரைகளும் பூமி அதிர்ந்தபடி முன்னே செல்ல, அவற்றின் கால் அழுத்தங்களினால்   பூமியில் இருந்த  மண் புழுதி  மேலெழுந்து  சென்றது.  பகீரதனின் முயற்சியால் சிவபெருமானின் தலையில்  இருந்து கங்கை நீர் சீறிப் பாய்ந்து பூமியை நோக்கி வந்தது போல அவரது சேனை அனைத்து திசைகளையும் நோக்கி சீறிப் பாய்ந்தபடி நாட்டை விரிவாக்கிக் கொண்டே செல்லத் துவங்கியது.

வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டி செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள்.  ஆனால் மன்னர்களை சிறை பிடித்தப் பின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகுராமனுக்கு தந்து விட அந்த மன்னன்களை விடுவித்து  விட்டு அவர்கள்  தந்த  செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்கு கொண்டு வந்தார். தென் பகுதியில் காவேரிக் கரைத் தாண்டி அனைவரையும் வென்று வந்தார் மன்னன் ரகுராமன்.
பாரசீகம் முதல் காஷ்மீர் வரை அனைத்து மன்னர்கள் மற்றும்  நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  மன்னர்களையும்  தோற்கடித்தப் பின்னர் நாடு திரும்பியவர் விஸ்வஜித் யாகத்தையும் செய்து தாராளமாக தானங்களையும்  கொடுத்தார். இப்படியாக  நான்கு திசைகளிலும் சென்று அனைத்து மன்னர்களையும்  வென்று தாம் கொண்டு வந்திருந்த திரவியங்கள் அனைத்தையும் மக்களுக்கு அவ்வப்போது தானமாகவே தந்து விட்ட மன்னனுக்கு யாக முடிவில் மண் பாத்திரம் மட்டுமே மிஞ்சியது.  இனியும் தன்னால் யாருக்கும் எந்த தானமும்  தர முடியாது எனும் அளவிற்கு அரச கஜானாவின் செல்வம் குறைந்தது.  இனி யார் வந்து கேட்டாலும் தானம் தர இயலாதவகையில் அவர் நிலைமை மோசம் ஆயிற்று. யாகத்தை நடத்தி முடித்த களைப்பிலும்,   தானங்கள் கொடுத்து அனைத்து திரவியங்களையும் இழந்து விட்டு ஏதுமற்றவனாய் கலங்கி நின்ற மனதோடும் இருந்த நிலையில்   அவனைத் தேடி கௌட்ச முனிவர் வந்தார்.
தொடரும்……4