சாந்திப்பிரியா
 
பாகம்- 2
முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி என்பவருக்கும் தமகோஷன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் சிசுபாலன் என்பவர்.  முந்தைய ஜென்மத்தில் ராவணனாக பிறந்து இருந்து ராமரால் வதம் செய்யப்பட்டவர் சிசுபாலன். அவருக்கு பூர்வ ஜென்மத்தில் மறுபிறப்பிலும் ராமரின் ஒரு அவதாரத்தினால் மரணம் கிட்டும் என்ற விதி இருந்தது. பிறந்த குழந்தை பெரியவனாகி சிசுபாலன்  எனப் பெயர் கொண்டு சேதி எனும் ஒரு நாட்டின் மன்னரானார்.
அப்போது ஒரு முறை நாரதரை தேவலோகத்துக்கு அழைத்த இந்திரன் அவரிடம் கூறினார் ‘ ஸ்வாமி, வர வர சேதி நாட்டை ஆண்டு வரும் சிசுபாலனின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவர்களை துன்புறுத்துகிறான்.  பிறரையும் துன்புறுத்துகிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆகவே அவரை அடக்க வேண்டும், அல்லது அவரை கொல்ல வேண்டும் என்றால் அது கிருஷ்ணரால் மட்டுமே முடியும் என்று ராஜ பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவே தயவு செய்து நீங்கள் துவாரகாபுரிக்குச் சென்று, கிருஷ்ணரை சந்தித்து அவரிடம் சிசுபாலம் செய்திடும் அட்டகாசங்களைக் எடுத்துக் கூறி, அவரிடம் சிசுபாலனை வதம் செய்ய வேண்டும் என்று என் சார்ப்பில் கேட்டுக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
அதைக் கேட்ட நாரதரும் அதி விரைவாக பூலோகம் நோக்கிச் சென்றார்.
அவர் பூலோகம் நோக்கிச் சென்றபோது சூரியனே பூலோகத்தில் இறங்கிச் செல்வதைப் போன்ற ஒளி காணப்பட்டது. கண்ணபிரானும் வருவது சூரியனாரோ என்றே  எண்ணிக் கொண்டு அமர்ந்து இருந்தார்.  ஆனால் தன்னை நோக்கி ஒளிப் போல வந்தது நாரத முனிவர் என்பதைக் கண்டதும் எழுந்து சென்று அவரை வரவேற்ற கண்ணபிரான் அவருக்கு அர்க்கியம் கொடுத்து உபச்சரித்தப் பின் நாரதரிடம்  ‘மாமுனிவரே, உமது வரவு நல்வரவாக இருக்கட்டும்.  தாங்கள் வந்த காரியத்தை கூறுவீர்களா’ என்று கேட்டார். அர்க்கியம் கொடுப்பது என்றால் வந்துள்ளவரை கௌரவிக்கும் வகையில் அவர் கையில் நீரை கையில் ஊற்றி அவரை வணங்கி வரவேற்பதான ஐதீகம்.  அதைக் கேட்ட  நாரதர் கூறினார் ‘கண்ணா, நீரே மூன்று  உலகிற்கும் காவலர். முனிவர்களுக்கு கிருபை செய்பவர். நல்லோரைக் காத்து தீயோரை அழிக்கப் பத்து அவதாரங்களை எடுத்தவர். பன்றி  அவதாரம் எடுத்து கடலில் மூழ்கிய பூமியை மேலே தூக்கி வந்தவர். நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்தவர். ராமவதாரத்தில் ராவணனை வதம் செய்தவர். அந்த ராவணனே தற்போது சிசுபாலன் என்ற பிறப்பு எடுத்து வந்து சேதி எனும் நாட்டின் அதிபதியாக இருக்கிறார். அவர் தேவர்களுக்கும், அரசர்களுக்கும் சொல்லொணாத்  துன்பங்களைத் தந்து வருகிறார். முன் பிறப்பில்தான் துஷ்டனாக இருந்தான் என்றால் இந்தப் பிறப்பில் அதை விட அதிக துஷ்டனாக இருக்கிறான். அவனால் பூமியில் உள்ளவர்களுக்கு நிம்மதி இல்லை என்பதினால் அவனது கொட்டத்தை அடக்கி அவனை தாங்கள் வதம் செய்ய வேண்டும் என்று இந்திரன் விடுத்துள்ள வேண்டுகோளை நான் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறினார். மேலும் இந்திரன் அவரிடம் கூறிய, சிசுபாலனின் அக்கிரச் செயல்களை விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட கண்ணபிரானும் அவருக்கு ஆறுதல் கூறி தாம் அந்த வேலையை செய்து முடிப்பதாக உத்திரவாதம் தந்து அவரை அனுப்பினார்.
அவர் சென்றதும்  சிசுபாலனின் அட்டகாசங்களை எண்ணிப் பார்த்து வருத்தம் அடைந்தார் கிருஷ்ணர்.   அவனுக்கு புத்தி சொல்லித் திருத்துவது நடக்காத காரியம் என்பதை புரிந்து கொண்டார்.  ஆகவே அவனை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் உணர்ந்தார்.  ஆகவே அவனை வதம் செய்ய என்ன செய்யலாம், எந்த மாதிரியான சேனைகளோடு யுத்தத்துக்கு செல்வது என்றெல்லாம் யோசனை செய்து பார்த்தார். அவருடைய வருத்தம் என்ன என்றால் என்ன இருந்தாலும் சிசுபாலன் அவருடைய  தந்தையின் சகோதரியின் மகன் அல்லவா.  அதே சமயத்தில் தருமர்  செய்ய இருந்த  ராஜசூய யாகத்திற்கு கிருஷ்ணர் கட்டாயம் வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்து இருந்தார். ராய சூயம் என்பது ராஜாக்களினால் அதாவது மன்னர்களினால் மட்டுமே செய்யப்படும் ஒரு விசேஷமான யாகம் ஆகும்.
அதனால் கிருஷ்ணருக்கு மனதில் சஞ்சலம்  ஏற்பட்டது ‘ஒரே நேரத்தில் இரண்டு காரியங்கள் வந்துள்ளன. முதலாவது காரியம்  தேவர்களுக்கு நன்மை பயக்கும் காரியமான சிசுபால வதம். அது தேவ காரியம். இரண்டாவது காரியம்  நண்பருக்கு மதிப்பு அளிக்கும் மித்ர காரியம்.  இவற்றில் எதை விடுவது, எதை செய்வது? இரண்டுமே முக்கியமானவை ஆகும். ஆனால் ஒரே நேரத்தில் வந்துள்ள இரண்டையும் எப்படி எதிர்கொள்வது? கடமை எது? காரியம் எது?  ‘ ஆகவே ஒரு முடிவுக்கு வர முடியாமல் மனம் குழம்பியபோது தனது சகோதரர் பலராமரையும் உத்தவ முனிவரையும் வரவழைத்தார். உத்தவர்  என்பவர் வாசுதேவருடைய  இளைய சகோதரராகிய தேவபாகன் என்பவருடைய புதல்வர்.  வியாழ பகவானின் சீடர். மெத்தப் படித்தவர். கிருஷ்ணருக்கு  ஒன்றுவிட்ட சகோதரர் முறை ஆகும்.  அவர்கள் இருவரும் வந்தப் பின்  இருவரையும் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தனக்கு வந்துள்ள இக்காட்டான நிலைமையையும்,  அதனால் தனக்கு ஏற்பட்டு உள்ள சஞ்சலத்தையும் எடுத்துக் கூறி அவர்களது கருத்தைக்  கேட்டார்.

…..தொடரும்

முந்தைய பாகங்கள்