4
ஒரே புழுதி மண்டலமாக இருந்த இடத்தில் வெளியில் வந்திருந்த நாகங்கள் இரண்டும் கண்களில் புழுதி போகாமல் இருக்க ஒரு ஷணம் கண்களை மூடிக் கொள்ள அதுவே தருமணம் எனக் காத்திருந்த கருடன் வேகமாக கீழே பறந்து வந்து அந்த நாகங்களை அப்படியே தனது அழகினால் கொத்திக் கொண்டு வெளியில் வந்து அவர்களைக் கடித்துத் துப்பி விட அவை இரண்டும் மடிந்து விழுந்தன. சற்றும் தாமதிக்காத கருடன் அந்த ராட்டினத்தின் மையப் பகுதிக்குச் சென்று பாலகியா முனிவர்கள் கொடுத்திருந்த சக்தியைப் பயன்படுத்தி தன் உடம்பை மிகச் சிறியதாக்கிக் கொண்டு புழுதி மண்டலம் இருந்தபோதே உள்ளே நுழைந்து ராட்டினத்தின் அடிப் புறத்தில் இருந்த பல் சக்கரத்தில் ( Gear ) ஒரு கட்டையை வைத்து ராட்டினத்தை நிறுத்தி விட்டு அதன் அடிப்பகுதியை உடைத்து எறிந்தது. அதன் பின் அமிர்த கலசத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தது. கருடனை எதிர்க்க வந்தவர்களை தன் சக்தி மிக்க இறகுகளினாலும் கால் நகங்களினாலும் கீறிக் குதறிக் கொன்றது. அதன் பராக்கிரமத்தை தாங்க முடியாமல் போன தேவ கணங்கள் அங்கிருந்து ஓடிச் சென்று இந்திரனிடம் முறையிட்டன.
ஓடோடி அங்கு வந்த தேவேந்திரன் அந்த குடத்தை எடுத்துக் கொண்டு வானிலே கருடன் பறந்தபோது அதன் மீது தனது வஜ்ராயுதத்தை வீசி அதன் இறகுகளை வெட்ட நினைத்தார். ஆனால் அந்த கருடனை சுற்றி பாலகில்யா முனிவர்களின் சக்தி அரண் போல தடுத்து இருந்ததினால் அந்த முனிவர்களின் தவ வலிமைக்கு எதிராக இந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அப்போது நடப்பதை அனைத்தையும் வானில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மகா விஷ்ணுவோ கருடனின் தாய் பாசம், சமயோசித புத்தி, சாமர்த்தியம், வீரம் மற்றும் கடமை உணர்ச்சி மற்றும் இந்திரனையே எதிர்த்து நின்று வெற்றி கொண்ட தன்மை போன்றவற்றைப் பார்த்து கருடனை தன்னிடம் அழைத்து அதற்கு அருளாசிகளை தந்தார். அதற்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க கருடனும் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தப் பின் தனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றும் தன்னை மகாவிஷ்ணுவின் வாகனமாக ஏற்றுக் கொண்டு தன் மீது அமர்ந்து கொண்டே மகா விஷ்ணு பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறினார். அதைக் கேட்டு மேலும் மகிழ்ந்து போன விஷ்ணுவோ அவரை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டு அதை தன் கொடியிலும் இருக்குமாறு அருள் புரிந்தார்.
அப்போது அங்கு வந்த இந்திரனும் கருடனிடம் தன் தவறுக்கு மன்னிப்பைக் கேட்டப் பின் அந்த அமிர்தக் குடத்தை திருப்பித் தந்து விடுமாறு வேண்டினார். ஆனால் கருடனோ தான் அதைக் கொண்டு சென்றால் மட்டுமே தன்னுடைய தாயார் விடுதலை அடைவார் என்பதினால் அதை மீண்டும் யாரும் பயன்படுத்தாமல் மீட்டுக் கொண்டு வரும் ஒரு உபாயத்தையும் இந்திரனுக்குக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட இந்திரனும் மாறு வேடத்தில் கருடனுடன் பூமிக்குப் பயணித்தார்.
தனது இளைய தாயார் காதுவிடம் சென்ற கருடனும் ஒரு அந்தணர் வேடத்தில் வந்திருந்த இந்திரனின் கையில் வைத்திருந்த அந்த கலசத்தை காத்ருவிடம் கொடுத்து விட்டு தன் தாயார் வினிதாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டார். இனி அமிர்தத்தை தன்னுடைய புத்திரர்களான நாகங்கள் உண்டு விட்டால் அவற்றுக்கு இறவாமை கிடைத்து விடும் என எண்ணிய காத்ருவும் நாகங்கள் அனைத்தையும் அழைத்தாள். அவை அங்கு வந்தவுடன் அந்த குடத்தில் இருந்த அமிர்ததை எடுத்து உண்ணுமாறு ஆனந்தத்துடன் கூறிக் கொண்டு இருந்தபோது அந்தணர் உருவில் அவர்கள் முன் நின்றிருந்த இந்திரனும் அந்த அமிர்தத்தை நதியில் குளித்து விட்டு வந்து உண்ணாமல் அப்படியே உண்டால் பலன் கிடையாது என்ற ஒரு விதி உள்ளதாகக் கூறி அவர்கள் அனைவரையும் குளித்து விட்டு வருமாறு கூறினார். அவர்கள் குளித்து விட்டு வரும் முன் அந்த இடத்தை சின்ன யாகம் செய்து தூய்மைப் படுத்தி அமிர்த கலசத்துக்கும் பூஜை செய்து தயாராக வைத்திருப்பதாகவும் அதன் பின் அவர்கள் அதை உண்ணலாம் என்றார். அதனால் காத்ருவும் தன் கையில் இருந்த அமிர்த கலசத்தைக் கீழே வைத்தாள்.
அந்த அந்தணர் கூறியதைக் கேட்டவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு நதியில் குளிக்கச் சென்றதும் பூஜைகளை துவக்குவது போல பாசாங்கு செய்த இந்திரனும் காத்ரு கீழே வைத்த அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு இந்திர லோகத்துக்கு பறந்து போய்விட்டார். காத்ருவினாலும், அவளுடைய மகன்களினாலும் இந்திரனின் சக்திக்கு பதில் தர முடியவில்லை. இப்படியாக கருடன் தனது தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து சாமர்த்தியமாக மீட்டதும் இல்லாமல் அமிர்தத்தையும் அந்த தீய நாகங்கள் உண்ணாமல் தடுத்து நிறுத்தி மகா விஷ்ணுவின் வாகனமாகவும் மாறிவிட்டார்.
கருடன் விஷ்ணுவின் வாகனமாக மாறிய பின் அவருக்கு கருடாழ்வார் என்ற பெயரும் கிடைத்தது. இப்படியாக இருக்கையில் கிருத யுகத்தில் அஹோபலி எனும் இடத்தை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனே ஹிரண்யகசிபு. அவன் கடவுள் நம்பிக்கை அற்றவன். ஆனால் அவனுடைய மகனோ விஷ்ணுவின் பக்தன். ஆகவே தன் மகனையே ஹிரண்யகசிபு கொடுமை படுத்தி வந்தான். ஆகவே தனது பக்தனான சிறுவன் பிரஹலாதனைக் காக்க விஷ்ணுவும் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்தபோது கருடனால் அவருடன் அந்த தூண் உள்ளே விஷ்ணுவை சுமந்து கொண்டு செல்ல முடியாமல் போயிற்று. அதனால் கருடன் வருத்தம் அடைந்து பெருமாளிடம் தனக்கும் அவருடைய நரசிம்ஹ அவதார காட்சியை காட்டி அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு மகா விஷ்ணுவும் அந்த அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்றால் கருடன் சில காலம் அஹோபிலோகத்தில் இருந்தவாறு தம்மை நோக்கி தவம் இருக்க வேண்டும் என்றும் அப்படி தவம் இருந்தால் தவத்தின் முடிவில் தான் அங்கேயே கருடனுக்கு நரசிம்ம அவதார காட்சியை தருவதாகவும் வாக்கு தந்தார்.
பெருமாளை நரசிம்ஹ மூர்த்தி கோலத்தில் கண்டு களிக்க வேண்டும் ஆசையில் பூமிக்கு ஒரு முனிவர் போல மனித உருவில் வந்து கடுமையான தவத்தில் இருந்த கருடனின் தவ சக்தியினால் வெளிப்பட்ட வெட்பம் தேவலோகம்வரை சென்றது. பூமியும் தேவலோகமும் கொதிக்கத் துவங்கியதைக் கண்ட இந்திரன் மீண்டும் கவலை அடைந்தான். ஏற்கனவே தேவலோகம் வந்து அமிர்த கலசத்தை கொண்டு சென்று இருந்த கருடனின் பராக்கிரமத்தை பார்த்திருந்த இந்திரன் அந்த வெட்பத்தினால் தேவலோகம் தவிப்பில் ஆழ்ந்து விடுமோ என்று கவலைக் கொண்டு கருடனின் யாகத்தை கலைக்க முடிவு செய்தான். கருடன் மனிதப் பிறவி எடுத்து வந்து தவத்தில் இருந்ததினால் அவரை ஊர்வசியின் அழகில் மயங்க வைத்து அவள் மோக வலையில் சிக்க வைத்தால் தவமும் கலையும், கருடனுக்கு பெருமாளின் நரசிம்ஹ அவதாரக் காட்சியும் கிடைக்காது என எண்ணிக் கொண்டு ஊர்வசியை அனுப்பினார். ஊர்வசியும் அபிலோகத்துக்கு வந்து அற்புத இனிய கீதங்களைப் பாடியும், அற்புதமான நடனங்களை ஆடியும் கருடனின் தவத்தைக் கலைக்க முயன்றாள்.
அவள் எத்தனை முயன்றும் கருடன் அவளை பார்க்கவும் இல்லை, அவள் அழகில் மயங்கவும் இல்லை. தன் மனம் அலை பாயாமல் பெருமாளின் ஒரே நினைவுடன் தவத்தில் இருந்தார். பல நாட்கள் அவள் முயன்று பார்த்தும் கருடனின் மனதை கலைக்க முடியாமல் போனதினால் வெட்கமுற்ற ஊர்வசி தேவேந்திரனிடம் திரும்பிச் சென்று தன்னால் அவர் தவத்தைக் கலைக்க முடியவில்லை என்ற உண்மையைக் கூறி கருடனின் பக்தியையும் வெகுவாக அவரிடம் புகழ்ந்து கூறினாள். கருடனின் திடமான பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் கருடன் தவத்தை மெச்சி அவர் விரும்பியபடியே உக்ரஹ நரசிம்ஹராக பிரஹலாதனுக்கு எப்படி காட்சி தந்தாரோ அதே காட்சியை கருடாழ்வாருக்கும் தந்து அவருக்கு தனது பூரண அருளாசியையும் தந்தார். இப்படியாக பூரண பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிய சேவை என்று மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்ததினால்தான் அவர் கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத்தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.
முற்றும்