பாகம்-2
நைமிசாரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யாகத்தில் ரிஷி முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அப்போது சௌனக முனிவர் சூதரைப் பார்த்துக் கேட்டார், ‘சூதக முனிவரே, நீங்கள் இங்கு எமக்கு பல புராணங்களைப் பற்றிக் கூறினீர்கள். அதன் இடையே சில புராணங்களில் உப புராணக் கதைகளையும் கூடக் கூறினீர்கள். ஆனால் கிருஷ்ணருடைய புத்திரனான ஸாம்பாவைப் பற்றிய புராணத்தைக் கூறவில்லையே. அமிருதத்துக்கும் ஒப்பான அந்தக் கதையையும் எமக்கு கூறுவீர்களா?’.
அதைக் கேட்டு புன்னகைத்த சூதக முனிவரும் ‘தவப் பெரும் முனிவரே, உங்கள் ஆசை மெத்த சிறப்பானது. ஸாம்பா புராணம் என்பது சகல புராணங்களிலும் விசேஷமானது என்பதின் காரணம் தவறு செய்தவர் யாராகிலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம், அதில் பேதம் கிடையாது என்பதை கண்ணபிரான் மீண்டும் தமது சொந்த மகனுக்கு கொடுத்த தண்டனை தந்ததின் மூலம் விளக்கி உள்ளார். இதில் சூரிய பகவானின் மேன்மையையும் விளக்கி உள்ளார். பல தத்துவ பொருட்கள் நிறைந்தது இந்தப் புராணம் .
இப்படியாகப் பிறந்த சாம்பா புராணம் பற்றி நான் கூறுவதை விட, வசிஷ்ட முனிவர் அதை பிருத்பலன் என்ற மன்னனுக்குக் கூறியதைக் கூறுகிறேன். அனைவரும் கேளுங்கள்.  ஒரு நாள் தனது அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்து விட்டு ஆயாசமாக ஆஸ்ரமத்தில் வசிஷ்ட முனிவர் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்த சூரிய வம்சத்தை சேர்ந்த பிருத்பலன் என்ற மன்னன் அவரை வணங்கிவிட்டுக் கேட்டார் ‘ மகரிஷி அவர்களே, எனக்கு பல நாட்களாக சில சந்தேகங்கள் உள்ளன . பரப்பிரும்மம், பரப்பிரும்மம் என்கிறார்களே. அது என்ன?. பரப்பிரும்மனிடம் சென்று விட்டால் இறவாமை வந்து விடுமா? ஒருவன் மோட்ஷம் பெறுவதற்கான உபாயம் எது? அவர்கள் அதற்கு எந்த தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் எந்த தேவர் மேன்மையானவர் ? இவற்றை தாங்கள் எனக்கு விளக்க வேண்டும்’.
அதற்கு வசிஷ்ட முனிவர் விடை தந்தார் ‘ மன்னா உன் சந்தேகங்கள் தெளிவாக்கப்பட வேண்டியவைகளே. உன் மூலமாவது மற்றவர்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும். அனைத்து தேவர்களை விட மேலான தேவர்  யார் என்றால்  எவர் ஒருவர் உதிக்கும்போதே தனது கிரணங்களினால் உலகை இருள் இல்லாத உலகமாக செய்வாரோ, எவர் ஒருவர் அனைவரையும் முகத்தோடு முகமாக நேரில் பார்க்கிறாரோ, விண்ணில் எவர் ஒருவரை அனைவரும் நேராக பார்க்க முடிகின்றதோ, அவரே தேவர்களில் உயர்வான தேவர் ஆவார். அந்த உயர்ந்த தேவர் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் படைக்கப்பட்டு உள்ளார். உக்கிரஹமான தனது கிரணங்களை உலகெங்கும் வீசியபடி உலா வந்து கொண்டே இருப்பவர் அவர். மூன்று  உலகையும் பிரகாசிக்கச் செய்பவர். நமக்கு வேண்டிய வரத்தை அளிப்பவர். தனது ஒளியையே தானமாகத் தருபவர். அவரே பூதகணங்களுக்கெல்லாம் முன்னவர். அவர்களை ரஷிப்பவர். அவரே பித்ருக்களுக்கு பிதாவாகவும், தேவர்களுக்கு தேவராகவும் உள்ளவர். அவரை ஆதித்யன் என்றும் சூரியன் கூறுவார்கள். யோகிகளும் ஞானிகளும் தமது பூத உடலை துறந்து மேலுலகம் சென்றவுடன் இவரிடம் சென்றே மீண்டும் சுத்தமாகி பிரகாசித்துக் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட ஆதித்யனையும் படைத்தவரே பரப்பிரும்மம் என்பவர். அவர் நமது கண்களுக்கு புலப்படார்.
பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனைப் பற்றி வேதங்கள் கூறுகின்றன. அவர்களது ரூபங்களையும், கதைகளையும் நம்மால் காதினால் மட்டுமே கேட்க முடியும். ஆனால் இருளை நீக்கி ஒளியைத் தரும் ஆதித்தன் அப்படிப்பட்டவர் அல்ல. அவரை நம் கண்களினாலும் பார்க்க முடியும் என்பதினால்தான் அவரை தேவர்களிலும் மேலான தேவராக கருதுகிறோம். எந்த தேவதையை நம்மால் நேரடியாக பார்க்க முடிகிறதோ அவர்களிடம் நேரடியாக பிரார்த்திப்பது நல்லதல்லவா. ஆகவே உனக்கும் மோட்ஷம் வேண்டும் என்றால் நீயும் அந்த சூரியன் என்றும் கூறப்படும் ஆதித்யனை சேவித்தால் அந்த பாக்கியம் உனக்கும் கிட்டும்’ என்றார்.
……தொடரும்