துலா புராணம்-4
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
சந்தரகாந்தாவும், வித்யாவளியும் மரணம் அடைந்த வெகு காலத்துக்குப் பிறகே வேதராசியும் மரணம் அடைந்தார். மழைக் காலத்தில் ஒருநாள் காவேரி ஸ்நானத்தை முடித்து விட்டு கரை ஏரி வந்த வேதராசி அந்தக் கரையில் தன்னை மறந்து, தான் கட்டிக் கொண்டு இருந்த ஈரத் துணியுடனேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். கீழே கிடந்தவரை சுற்றி அங்கிருந்தவர்கள் கூட்டமாக நின்று கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தபோது, ஆகாயத்தில் இருந்து சூரிய ஒளியே அங்கு வந்து கொட்டியது போல ஒரு காட்சி தோன்றியது. இந்த மேக மூட்டத்தில் எங்கிருந்து வந்தது இத்தனை சூரிய ஒளி என அனைவரும் வியந்து நின்றபோது, ஒரு தங்கத் தேர் அங்கு வந்து நின்றது. அதில் வந்திருந்த யம தூதுவர்கள் அந்த தங்கத் தேரில் வேதராசியை வைத்து சொர்கத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அடுத்த கணம் அந்த சூரிய வெளிச்சமே மறைந்து கருமேகங்கள் சூழ்ந்து பெரும் மழைக் கொட்ட காவேரி ஆற்றில் வெள்ளம் வர அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டார்கள். கீழே கிடந்த வேதராசியின் உடலை காவேரி ஆற்றின் வெள்ளம் உள்ளே இழுத்துக் கொண்டு போய் இயற்கை தகனத்தை செய்து விட்டது.
இதற்கு இடையில் சொர்கத்துக்குச் செல்ல நரகத்தின் உள் வழியாகவேதான் செல்ல வேண்டும் என்பதினால் யம தூதர்களுடன் வேதராசி அப்படி சென்று கொண்டு இருக்கையில் சில இடங்களில் ‘ஹா…….அய்யோ….அய்யோ ….ஹா’. என சிலர் அலறுவதையும், இன்னொரு பக்கம் ‘சாப்பிடுங்கள், இந்தக் கனிகளை சாப்பிடுங்கள்…..உங்களுக்கு என்ன உணவு வேண்டும், இந்த ஆசனத்தில் சற்று அமருங்கள் ‘ என்றெல்லாம் இனிய வார்த்தைகள் வந்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
இதற்கு இடையில் சொர்கத்துக்குச் செல்ல நரகத்தின் உள் வழியாகவேதான் செல்ல வேண்டும் என்பதினால் யம தூதர்களுடன் வேதராசி அப்படி சென்று கொண்டு இருக்கையில் சில இடங்களில் ‘ஹா…….அய்யோ….அய்யோ ….ஹா’. என சிலர் அலறுவதையும், இன்னொரு பக்கம் ‘சாப்பிடுங்கள், இந்தக் கனிகளை சாப்பிடுங்கள்…..உங்களுக்கு என்ன உணவு வேண்டும், இந்த ஆசனத்தில் சற்று அமருங்கள் ‘ என்றெல்லாம் இனிய வார்த்தைகள் வந்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
இதென்ன இரு புறமும் இருந்தும் வெவ்வேறு சப்தங்கள் வருகின்றன. நான் அவற்றைப் பார்க்க வேண்டுமே என வேதராசி யம கிங்கர்களிடம் கேட்க அவரை அவர்கள் முதலில் வலது பக்கப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர் கண்ட காட்சி என்ன?
அங்கு ஆண்களும் பெண்களும் ஆயாசமாக அமர்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலருக்கு எதிரில் தங்கத் தட்டுகள் , சிலருக்கு எதிரில் வெள்ளித் தட்டுக்கள், சிலருக்கு பித்தளை, சிலருக்கு வாழை இலை என பல வகைகளிலான தட்டுக்கள் இருந்தன. அவர்கள் எதிரில் இருந்த தட்டுக்களில் அறுசுவை உணவுகள், பழங்கள், பால், மோர் என அனைத்தும் இருந்தது. ஆனால் அவற்றில் இருந்தப் பொருட்கள் ஒரே மாதிரியானதாக இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருந்தன. அவர்கள் அனைவரையும் யமகின்கர்கள் உபசரித்துக் கொண்டு இருந்தார்கள்.
வேதராசி ஆச்சர்யம் அடைந்துக் கேட்டார் ‘ எது என்ன, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணவு படைக்கப்படுகிறதே. அதன் காரணம் என்ன? யம கின்கர்கள் கூறினார்கள் ‘அந்தணரே, அவரவர் பூமியில் இருந்தபோது செய்த தான தர்மங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு அதே உபசாரங்கள் இங்கும் தரப்படுகின்றன. புண்ணிய நதிகளில் நீராடியவர்கள் பெரும் பயனை அடைகிறார்கள். இவர்களில் தங்கத் தட்டுக்களில் உணவு உண்கிறார்களே, அவர்கள் துலா மாதத்தில் காவேரி ஆற்றில் ஸ்நானம் செய்தவர்கள். அதோ அந்தப் பெண்கள் உள்ளார்களே, அவர்கள் எந்த புண்ணியத்தையும் செய்யவில்லை என்றாலும், தத்தம் பர்தாக்களுக்கு பிரியமாக இருந்தவர்கள். கணவனைத் தவிர வேறு யாரையும் கண் எடுத்தும் பார்க்காதவர்கள். பர்தாவை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை மற்றும் இரவு என தினமும் நான்கு முறை வணங்கித் துதித்தவர்கள். அதற்குப் பின்னரே அவர்கள் கடவுட்களையும் வணங்கியவர்கள். கட்டிய புருஷனே முதல் தெய்வம் என்பது அவர்கள் கொண்டு தர்ம நெறி. அதனால்தான் தங்கத் தட்டுக்களில் உணவு அருந்துகிறார்கள்.’
இப்படியாகக் கூறிவிட்டு அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு விதத்தில் ஆனந்தமாக இருப்பதைக் காட்டியப் பின் இடது பக்கத்தில் இருந்த நரகத்துக்குள் நுழைந்தார்கள். அதற்குள் வேதராசி நுழைந்ததுமே மரண ஓலம் கேட்டது. ‘ஐயோ, அடிக்காதே, அய்யோ கொல்லாதே’, ‘என்னை விட்டு விடு…..தவறு செய்து விட்டேன் என்னை விட்டுவிடு’ என பயங்கரமாகப் பலரும் கதறிக் கொண்டு இருந்தார்கள். யம கின்கர்கள் அங்கிருந்த சிலரை தம் கையில் இருந்த சவுக்கினால் அடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலரை கொதிக்கும் எண்ணையில் போட்டு வதக்கிக் கொண்டு இருந்தார்கள், சிலரை கூர்மையான ஆயுதங்களினால் குத்திக் கொண்டு அஹ்ஹாஹ்ஹா……………… அஹ்ஹாஹ்ஹா ………… என அட்டகாசமாக சிரித்துக் கொண்டு அவர்கள் பட்ட வேதனைகளை ரசித்துக் கொண்டு இருந்தார்கள். சிலரை வேட்டை நாய்களை ஏவி விட்டு கடித்துக் குதறுமாறு கூறினார்கள். சிலரை ஆகாயத்தில் தூக்கிப் போட்டு கீழே விழும்போது அவர்களை ஈட்டிகளின் முனையில் குத்திப் பிடிக்க அவர்கள் அய்யோ …அய்யோ என அலற மீண்டும் மீண்டும் யமகின்கர்கள் அட்டகாசமாக சிரித்துக் கொண்டே அவர்களை மேலே தூக்கிப் போட்டு ஈட்டியால் குத்தியபடி இருந்தார்கள். அதை வேதராசியால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
அவர்கள் எல்லாம் யார் என்று அங்கிருந்த கிங்கர்களிடம் வேதராசி கேட்க அந்த யம தூதர்கள் கூறினார்கள் ‘அவர்களில் சிலர் பாலில் நீர் கலந்து மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்தவர்கள், சிலர் பசுவிற்கு புல்லைப் போடாதவர்கள், சிலர் கணவனுக்கு துரோகம் செய்து விட்டு வந்தவர்கள், சிலர் ஜாதி துவேஷம் பார்த்து அந்தணர்களுக்கு உணவு கொடுக்காமல் அவர்களை அடித்து விரட்டியவர்கள், ஏழைகளை ஹிம்சித்தவர்கள் என பலதரப்பட்ட பாவாத்மாக்கள் உண்டு. அவர்களையும் சேர்த்து கட்டிய மனைவியை அடித்துத் துரத்தியவர்களும், அநேக பாவங்களை செய்தவர்களும் மட்டுமே இங்குள்ளனர் ‘ என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட வேதராசி மனம் கலங்கினார். ஒருவர் படும் துயரத்தைக் கண்டும் காணாமலும் இருந்து கொண்டிருப்பதே தர்ம சாஸ்திரத்துக்கு எதிரானதாகும். பரோபகாரத்தினால் மட்டுமே பகவான் சந்தோஷப்படுவார் என்று கூறுகிறார்களே அந்த பரோபகாரம் பூமியில் மட்டும்தானா கடைப் பிடிக்கப்பட வேண்டும்? அவதிப்படுபவர்கள் எங்கிருந்தால் என்ன. அவர்களுக்கு உதவுவதே பிராமண லட்சணம் என்றெல்லாம் யோசனை செய்தவர் அங்கிருந்தவர்கள் பட்டக் கஷ்டத்தைக் காண சகிக்காமல் உரத்தக் குரலில் கூறினார் ‘ எம் பெருமானே, மோட்ஷத்தைத் தரும் மகா விஷ்ணுவே, நான் உன் மீது சத்தியமாய் கூறுகிறேன், இங்குள்ளவர்களுக்கு மோட்ஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உன்னை வணங்கிவிட்டு காவேரியில் ஸ்நானம் செய்து நான் பெற்ற புண்ணியத்தில் கால் பாகத்தை இவர்களுக்காக இங்கே விடுகிறேன். அவர்கள் பட்ட துயரம் போதும்’ என்று உரத்தக் குரலில் பிரார்த்தனை செய்ய நில்…..நில்…என எங்கிருந்தோ வந்த ஓசையைக் கேட்ட யமகிங்கர்கள் அங்கிருந்தவர்களை துன்புறுத்துவதை நிறுத்த அந்த இடமே தங்க ஜோதியாக தகிக்கத் துவங்கியது. அங்கிருந்த அனைவருடைய உடலும் வனப்பு பெற அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். அவர்கள் பட்ட அனைத்து கஷ்டங்களும் நொடிப் பொழுதில் கரைந்து விட்டன !.
அதைக் கண்ட யமகின்கர்கள் வருத்தமும் கோபமும் அடைந்தார்கள். அவர்கள் வேதராசியிடம் கூறினார்கள் ‘பிராமணரே, நீங்கள் தவறான வழியைக் காட்டி விட்டீர்கள். பூமியில் பாவாங்களை செய்தவர்கள்தான் இங்கு வந்து தண்டனைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் செய்துள்ள பாவத்திற்கான தகுந்த தண்டனையை பெறாவிடில், மீண்டும் பிறவி எடுத்து பூமிக்கு செல்லும்போது மீண்டும் அதே தவறுகளை தொடர்ந்து செய்வார்கள். பூஉலகில் நல்லவன் யாரும் இருக்க மாட்டன். கெட்டவன் பெருகிக் கொண்டே இருப்பான். அதன் பின் யார் தீமைகளை அதிகம் செய்கிறானோ அவனும், தர்ம நெறியைக் கடைப் பிடித்து வாழ்பவனும் வித்தியாசம் இல்லாத பிறவிகளாகவே ஒன்றாக வாழ்வார்கள். அது முறையாக இருக்குமா? நீங்கள் இப்போது செய்துள்ளது யம தர்மனின் நியாயத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா. ஆனால் நீங்கள் காவேரியில் ஸ்நானம் செய்துள்ளதினால் உங்களிடம் நாங்கள் இதைக் கூற மட்டுமே முடியுமே தவிர, இந்த தகாத செயலை செய்துள்ள உங்களை எங்களால் தண்டிக்க இயலாது என்பதை நினைக்கும்போது எங்களுக்கு சங்கடமாக உள்ளது’ என்று கூறி விட்டு இனியும் தாமதிக்காமல் இவரை இங்கிருந்து அழைத்துச் சென்று விட வேண்டும். இல்லை என்றால் இவர் நரகத்தையே காலி செய்து விடுவார்கள் என அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றார்கள்.
ஆனால் போகும் வழியில் வேதராசி இன்னும் சில இடங்களில் இருந்து வந்து கொண்டிருந்த கூக்குரலைக் கேட்டு அங்கு சென்றார். அங்கு சிலர் கழுகு மரத்தில் ஏற்ற வைக்கப்பட்டு இருந்தார்கள். சிலரது கைகளையும், சிலரது கால்களையும் அவர்கள் கதறக் கதற யம கிங்கர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டு இருந்தார்கள். சிலர் உடம்பின் மீது காய்ச்சிய ஈயமும், வெந்நீரும் ஊற்றப்பட அவர்கள் அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்த வேதராசி அவர்கள் அருகில் சென்றதும், அவர்கள் அனைவரும் வந்து வேதராசியை வந்து சூழ்ந்து கொள்ள வேதராசி அங்கிருந்தவர்களிடம் கேட்டார் ‘நரகவாசிகளே, ஒரு ஷணத்தில் அழியக் கூடிய உடலாக இருந்த நீங்கள் ஏன் இப்படி வேண்டாத பாபங்களை செய்து விட்டு வந்துள்ளீர்கள்? நீங்கள் செய்த பாவங்கள் என்ன? உங்கள் வாழ்வில் ஒரு நாளாவது விஷ்ணு பாராயணம் செய்து உள்ளீர்களா? சகல பாவங்களைவும் விலக்கி சர்வ மங்களத்தையும் தரவல்ல விஷ்ணு பகவானின் கதைகளையாவது கேட்டு உள்ளீர்களா?. ஹரிநாம பஜனையாவது செய்து உள்ளீர்களா?’ என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அதற்கு அந்த நரகவாசிகள் கூறினார்கள், ‘ஒ, பரிசுத்தப் அந்தணரே, நாங்கள் செய்துள்ள பாவத்துக்கு அளவே இல்லை. அதற்காக வெட்கப்படுகிறோம். நீங்கள் இங்கு வரவில்லை என்றால் எங்கள் கதி இன்னும் அதோ கதியாகவே இருந்திருக்கும். நீங்கள் ஹரி நாமத்தைக் கூறியதுமே எங்கள் உடம்பில் இதமாக யாரோ தடவித் தந்தது போல உள்ளது. பசி என வந்தவர்களுக்கு இங்குள்ள எங்களில் பலபேர் போஜனம் தரவில்லை, உப்பு, பால், நெய், மோர் என்று நாங்கள் விற்ற அனைத்திலும் கலப்படம் செய்து செல்வம் ஈன்றோம், பிறர் பொருளை அபகரித்தோம், விரதம் கொள்ள வேண்டிய ஏகாதசியில் வயிறு புடைக்க உண்டோம், அம்மாவாசை தர்ப்பணம் செய்யவில்லை. பித்ரு தர்ப்பணமோ, பூஜைகளையோ கூட செய்யவில்லை. புனிதப் பிரசங்கங்களுக்குச் சென்று அங்கு வீட்டு வம்புகளை அலசினோம். தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லவில்லை. பௌர்ணமி தினங்களில் முருங்கைக்காய் மற்றும் வெங்காயத்தை உண்டோம். காயத்ரி ஜபம் என்ன என்றே தெரியாத அளவில் இருந்தோம். அகாலத்தில் புசித்து, அகால வேளைகளிலும் உறவு கொண்டோம். தர்மத்தைக் கை விட்டோம். ரிஷி முனிவர்களை அவமதித்தோம். தெய்வத்துக்கு படைக்க வேண்டிய பிரசாதங்களை சுவைப் பார்த்து விட்டு வைத்தோம், பிராமணர்களை அவமதித்தோம். தெய்வம் என்பது இல்லை, கோயிலை இடிக்க வேண்டும், நாம் பட்டினி கிடக்க ஆலயத்தில் எதற்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் என்று சொல்லி தெய்வத்துக்கு எதிரான வாதங்களை ஜனங்களுக்கு உபதேசித்து நாஸ்திகத்தைப் பரப்பியவர்கள் இங்குள்ள சிலர். கன்றுக்குப் பாலில்லாமல் எல்லாவற்றையும் கறந்தவர்கள். அந்தணர்களின் போஜனத்தைத் தடுத்தவர்கள், பெற்ற தாய் தந்தையரை விரட்டி, மனைவியின் பேச்சைக் கேட்டவர்கள், ஹோமம் முதலிய நற்காரியங்கள் எவை என்பதே எங்களுக்குத் தெரியாது என்றவர்கள் இங்குள்ள பலரில் உண்டு. இப்படியாக பல பாவங்களை செய்து விட்டதற்கான தண்டனையாக இங்கு வந்து விட்ட எங்களை கழுகு மரத்தில் ஏற்றியும், கொதிக்கும் எண்ணையில் போட்டும், ஈயத்தைக் காய்ச்சி உடம்பில் ஊற்றியும், பசிக்கு உணவு தராமலும் அளவில்லா துன்பங்களையும் தருகிறார்கள். அதோ தலை கீழாகத் தொங்க விடப்பட்டு வாளால் அவள் உடம்பைக் கீறுகிறார்களே அவள் ஒரு பிராமண ஸ்த்ரீ, கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து விட்டு கள்ளக் காதலைக் கொண்டவள். அதோ தேளும், பாம்பும் துரத்துகின்றனவே அவன் குலத்தைக் கெடுத்தப் பாவி, அதோ கொதிக்கும் எண்ணையில் போட்டு வதைக்கிறார்களே அவள் உஜ்ஜயினி நகரில் இருந்த ஸ்த்ரீயானவள். அங்கு கற்பை இழந்தவள்., மாமனார் மற்றும் மாமியாரைக் கொடுமைப் படுத்தி, தகாத ஆட்களின் மூலம் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தவள். அதோ நாய்கள் கடித்துக் குதறும் அந்த ஆள் ஒரு ஆலய பூசாரி. கோவில் சொத்தை அபகரித்தவன். அதோ ஊசியால் கண்ணிலும், கழுத்திலும் குத்திக் குத்தி துன்புறுத்துகிறார்களே, அவனும், அவளும் மகா பாவிகள். கோவிலுக்கு கிடைத்த சொத்தை தனதாக்கிக் கொண்டவர்கள். இன்னும் அதோ உள்ளார்களே அவர்கள் மீண்டும் மீண்டும் எடுத்தப் பிறவிகளில் பாபங்களை செய்து விட்டு வந்தவர்கள். இப்படியாக பல வகைகளிலும் அவதிப்படும் நாங்கள் உங்களுடைய காலடி இங்கு பட்டதுமே சுகம் வந்துவிட்டதைப் போல உணருகிறோம். ஆகவே பிராம்மணரே தயவு செய்து ஒரு சுப முகுர்த்த காலத்துக்கு நீங்கள் இங்கு இருந்தால் எங்கள் வேதனை மறையும் அல்லவா. நீங்கள் எங்களை ஹரி பூஜை செய்தீர்களா என்று கேட்டீர்கள். அந்த ஹரியை நாங்கள் ஹரி ஓம், ஹரி ஓம் என்று கூற மறந்து காவேரி ஆற்றில் துலா ஸ்நானமும் செய்ய மறந்து விட்டதினால் நாங்கள் இந்த துயரை அடைந்துள்ளோம். நீங்கள் பூமிக்கு மறு பிறப்பு எடுத்துச் சென்றதும் காவேரி ஸ்நானம் செய்து ஹரி ஓம் பஜனையும் செய்வோம்’ என்று கூறிக் கொண்டு இருக்கையிலேயே அவர்களின் பாபம் விலகி அவர்கள் இருந்த நரகம் சொர்கமாயிற்று.
அதைக் கண்ட யம கின்கர்கள் அதிசயம் அடைந்தார்கள். அவர்களைப் பார்த்து வேதராசி கூறினார் ‘பார்த்தீர்களா விஷ்ணு நாம மகிமையை….இவர்கள் ஹரி ஓம், ஹரி ஓம் என்று விஷ்ணுவின் நாமத்தைக் கூறிய மட்டிலேயே சொர்கத்தை எட்டி விட்டார்கள். ஹரி நாமம் அனைத்து தீமைகளையும் அழிக்கும் என்பதை இப்போதாவது உணர்வீர்களா? ஹே கிருஷ்ணா….ஹே விஷ்ணு பகவானே….முகுந்தா….ஹரி… என்னை நீவீர் ரட்ஷிக்க வேண்டும்’ என்று பலவாறு ஹரியைத் துதித்தபடியே அவர்களுடன் ஸ்வர்கத்துக்குச் சென்றார்.
இதைக் கூறி முடித்த அகஸ்திய முனிவர் ”அரிச்சந்திரா, காவேரி ஸ்நான மகிமை வேதராசி என்ற அந்தணனை எந்த அளவு மேன்மையில் வைத்து இருந்தது என்பதை? துலா மாதத்தில் காவேரி ஸ்நானம் செய்தவரை கண்ணால் பார்த்ததுமே, அவருடைய வார்த்தையைக் கேட்டதுமே ஹரி நாமத்தைக் கூறியதுமே நரகவாசிகள் சொர்கத்தை அடைய முடியும் என்றால், துலா மாதத்தில் காவேரி நதியில் நேரடியாக ஸ்நானம் செய்பவர்கள் எத்தனை புண்ணியங்களைப் பெறுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டாயா ? காவேரியின் மஹிமை ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷனாலும் கூட புகழ்ந்து கூற முடியாத அளவு மேன்மைக் கொண்டது.’
அகஸ்திய முனிவர் கதையை முடித்ததும் அங்கு அமைதி நிலவியது.