பாகம் – 1

ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண காவியங்களில் கதைகளுக்குள் பல உப கதைகள் உள்ளன. நம் நாட்டில் பதினெட்டுக்கும் மேற்பட்ட புராணங்கள் உள்ளன என்றும் அவற்றில் காணப்படும் சில உப புராணங்களைப் படிப்பதின் மூலம் நமது வாழ்க்கையில் மேன்மை அடைய முடியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. துரதிஷ்டவசமாக சமிஸ்கிருத மொழிகளிலேயே எழுதப்பட்டு உள்ள புராணங்களை தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் தமிழில் விரிவாக யாரும் எழுதவில்லை. புராணங்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன என்றாலும், அவற்றை அப்படியே தொடர்ந்து வெளியிட்டு வருவதாலும், தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் இல்லாததினால் அவை பலரையும் சென்று அடையவில்லை.  தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டு உள்ள சில புத்தகங்களில் உள்ள சொற்கள் பலவற்றிலும் சமிஸ்கிருத வாடை வீசுவதினால் அவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே கூடுமானவரை   சுவையான புராணங்களில் காணப்படும் உப புராணங்களை சுருக்கியும், அதே நேரம் அவற்றை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் கொடுக்க நான் முயன்று வருகிறேன். அதில் ஒரு முயற்சியே இந்த சம்பா அல்லது ஸாம்பா புராணமும்.

இந்த புராணம் சூரியனின் பெருமையை எடுத்துக் காட்டுவதும் அவருக்கு அர்பணிக்கப்பட்ட புராணமும் ஆகும். தந்தை கிருஷ்ணரே கொடுத்த ஒரு சாபத்தினால் தனது அழகையும் இளமையையும் இழந்து உடல் முழுவதும் தொழு நோய் ஏற்பட்ட பகவான் கிருஷ்ணரின் மகனான ஸாம்பா ஒரிஸ்ஸா மானிலத்தில், சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி அங்கு சூரிய பகவானை வழிபாட்டு , அவர் பெருமையை பறைசாற்ற  சந்திரபாகா என்ற புனித நதியை உருவாக்கி அதில் நீராடி தனது சாபத்தை விலக்கிக்  கொண்டதான கதையே   இந்தப் புராணம் ஆகும். இன்று அந்த நதி மறைந்து விட்டாலும் அதன் நினைவாக ஒரு சிறிய குளம் மட்டுமே உள்ளது. இந்தக் குளத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்தப் புராணத்தை இஷ்யவகு வம்சத்தை சேர்ந்த பிரகுத்பாலா என்ற மன்னனுக்கும், வசிஷ்ட முனிவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களாகவே எழுதி உள்ளார்கள். ஸாம்பா புராணத்தில் கிருஷ்ண பகவானுக்கு ஸாம்பா எப்படி மகனாகப் பிறந்தார், அவருக்கு அந்த கதி ஏற்பட்டதின் காரணம் போன்றவை விலக்கப்பட்டு உள்ளன. விதிப்படி கிருஷ்ணருடைய மகன் ஸாம்பாவின் மூலமே அவர் வம்சமான யாதவ குலம் அழிந்தது என்பது ஒரு உண்மை. இனி ஸாம்பா புராணத்தைப் பார்க்கலாம்.

……தொடரும்