சாந்திப்பிரியா

பாகம்-12

காளியின் கர்வபங்கம் அடங்கியக் கதை

ஒரு முறை சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை சக்தி இல்லையேல் சிவனும் இல்லை’ என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சபித்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொள்ள சிவன் கூறினார் ‘ இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களின் சார்ப்பில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அங்கு  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்’.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். ஆகவே அவனை அடக்க சிவபெருமானும் காளி உருவில் இருந்த பார்வதியை அனுப்ப அவனை யுத்தம் செய்து வதம் செய்த பார்வதியின் உக்ரஹம் அடங்காமல் போயிற்று. வெறி கொண்டு ஊழித் தாண்டவம் என்ற நடநாத்தை ஆடத் துவங்கினாள். சிவபெருமானை விட தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் அவள் மனதில் தொடர்ந்து கொண்டு இருந்தது. ஆகவே அவளது கோபத்தை தணித்து அவளுடைய அகங்காரத்தை அடக்க நினைத்தவர் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தார். அந்த போட்டியின் விதிப்படி போட்டியில் தோற்பவர்கள்   அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும்.

நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் ஆயிரக்ககணக்கான இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி நிற்காமல் தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் திடீரென ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள, அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.  பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள். அவளது உக்ரஹமும் குறைந்தது. அந்த ஊரின் எல்லைக்குச் சென்று தில்லைக் காளி அம்மனாக அமர்ந்து கொண்டாள். சிதம்பரத்தில் தில்லை நடராஜர் மற்றும் தில்லைக் காளி அம்மன் எனும் இரண்டு ஆலயங்களும் ஒன்றுடன் ஒன்று சில நூறு அடி தூரத்தில்தான் அமைந்து உள்ளது.
–சிதம்பர மான்மியம் நிறைவுற்றது–