துலா புராணம்-7
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
நாரதர் கூறத் துவங்கினார். ”குழந்தைகளே காவேரியில் மூழ்கி ஸ்நானம் செய்தால் ஏழு ஜென்ம பாபங்கள் விலகும். துலா மாதத்தில் ஸ்நானம் செய்தாலோ அவர்களுடைய கோடி குலத்தவரை கரை சேர்க்கும். துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தப் பின் அங்குள்ள ரங்கநாதருக்கு மல்லிகை பூக்களினாலோ அல்லது அந்த நேரத்தில் கிடைக்கும் எந்தப் பூவினாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பிரணவ துவாதசியில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு ஹரிபகவானுக்கு பாயஸ நெய்வித்தியம் செய்தால், பன்னிரண்டு ஆண்டுகள் குரு ஷேத்திரத்தில் அன்ன தானம் செய்ததால் எத்தனைப் புண்ணியம் தருமோ அத்தனைப் புண்ணியம் கைகூடும். அந்த நெய்வித்தியத்தை ஸ்த்ரீகள் உண்டால் புத்திர பாக்கியம் கிட்டும். தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பாள். துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து ரங்கநாதரை பூசிப்பவர்கள் நரகம் என்ற பயத்தையே கொள்ள மாட்டார்கள் . ஒரு முறை அந்த நீரின் ஒரு துளி திவலை பன்றியின் மீது விழுந்து அது சாப விமோசனம் பெற்று சுவர்க்கத்தை அடைந்ததைப் போல, அங்கு ஸ்நானம் செய்பவர்கள் பாப விமோசனம் அடைவார்கள்’ என்று நாரத முனி கூற, ஆச்சர்யம் மிக்க தருமர் நாரத ரிஷியிடம் கேட்டார் ” ஸ்வாமி அதென்ன ஒரு பன்றி சாப விமோசனம் அடைந்து ஸ்வர்கத்துக்கு சென்ற கதை?’ என்று கேட்க நாரதர் அந்தக் கதையையும் கூறலானார்.
‘ஒரு சமயம் பால்ஹிக தேசம் என்ற ஒன்று இருந்தது. அங்கிருந்த ஒரு ஆக்ரஹாரத்தில் பிரும்ம சர்மா என்ற ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். நியமம் தவறாமல் அனுஷ்டானங்களை செய்து வந்தவர். சகல கர்மாவிலும் வித்துவான். வேத தொழிலைத் தவிர தன்னிடம் இருந்த நிலத்தில் பயிரிட்டு அதில் கிடைத்த பொருளைக் கொண்டு ஜீவனமும் நடத்தி வந்தவர். எல்லாத் தொழில்களிலும் தேர்ச்சி பெற்றவர் . எப்போதும் உழைப்பவர். அந்த ஆக்ரஹாரத்தில் அவருக்கு சமமான பணக்காரனே இல்லை எனலாம். இப்படியிருந்தும் அவர் பணத்தை சம்பாதிப்பதிலேயே ஆவல் கொண்டவர். தன் உயிரை பற்றியும் கவலைப்படாமல் பணம் சம்ம்ம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் வேலை செய்பவர்.
தயிர், மோர், வஸ்திரங்கள் என அனைத்தையும் விற்றுப் பணத்தைச் சேமிப்பவர். எவற்றை விற்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவோ அந்த பொருள்களையும் விற்றுப் பணத்தை சம்பாதிப்பவர். அவர் தன் வீட்டில் ஒரு நாள் கூட சாப்பிடமாட்டார் . பிறர் வீட்டிலேயே உண்பார். அதை ஒரு கொள்கையாகவே கொண்டு இருந்தார். செலவு அதிகமாகும் என்பதினால் வீட்டிலுள்ள தன் மனைவி மற்றும் குழந்தை என யாரையும் வயிறு நிறைய உண்ண விட்டது இல்லை. ‘இப்படி தின்றால் எந்த வீடு உருப்படும்’ என்று கோபமுற்றதினால் அவர்களும் வயிறு நிறைய உண்ண மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர். அந்த ஊரில் இருந்த பலருக்கும் அவரே புரோஹிதம் செய்தார். கர்மாக்களை செய்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. விடியற் காலை குளித்து விட்டு, சந்தியை செய்தப் பின், தாகசாந்தி செய்து கொண்டு தனது கைப்பையில் தர்பை, கூர்ச்சம், ஸமித்து போன்றவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விடுவார். உள்ளூரில்தான் என்றல்ல, வெளியூர்களுக்கும் செய்து கர்மாக்களை செய்துவிட்டு வருவார். அவர் சிந்தனை முழுவதுமே முடிந்த அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே. குடையும் கிடையாது, காலில் செருப்பும் இல்லை. அதற்குக் கூட செலவு செய்ய விரும்பாதவர்.
நன்கு படித்தவர் என்பதினால் அனைவருமே அவரவர் வீடுகளில் அவரையே சிரார்தங்களுக்கும் அழைப்பார்கள். தன்னை அழைக்காதவர் வீடுகளுக்கும் கூட நம் வீடுதானே, அழைத்தால்தான் போக வேண்டுமா என்று கூறி விட்டு, வலுகட்டாயமாக சென்று உணவு அருந்துவார். ஒரு வேளை வேறு வழி இல்லாமல் தன் வீட்டில் சாப்பிட வேண்டி வந்து விட்டால், நெய், காய்கறிகள் இல்லாமல் வெறும் அன்னத்தை ரசம் அல்லது குழம்பு வகைகளுடன் மட்டுமே உண்பார். அதாவது அத்தனை செலவை தன் வீட்டில் மிச்சப்படுத்துபவராம்.
இத்தனை கருமியாக இருந்த அவருக்கு அதிருஷ்டவசமாக சுசீலை என்ற மனைவி வாய்த்தாள். அவளோ மகா பத்தி விரத்தை . கணவரின் கோபத்தை தாங்கிக் கொண்டு அவர் மனம் நோகாமல் பால், தயிர், மோர் என அவளும் அவர் கூறுவதை எல்லாம் ஊரில் கொண்டு போய் விற்று பணமாக்கிக் கொண்டு வருவாள். ஆனால் அவள் மிக்க சாமர்த்தியம் வாய்ந்தவள். ஒருநாள் ஆயாசமாக பிரும்ம சர்மா அமர்ந்து கொண்டு இருந்த வேளையில், அவரது கால்களை பிடித்து விட்டப் பின், முதுகை வருடிக் கொடுத்தப் பின், அவரது உள்ளத்தில் மோகத்தைக் கிளறினாள்.
அதன் பின் அவருக்கு பின்புறமாக நின்று கொண்டு இருந்தவள் கூறினாள் ‘ ஸ்வாமி, நான் சிலவற்றை உங்களுக்கு இன்று கூற விரும்புகிறேன். கூறட்டுமா?’ என்று கேட்க பிரும்ம சர்மாவும் ‘பேஷாக நீ கூற வந்ததைக் கூறலாம்’ என்று கூறியப் பின் யாருடைய ஜாதகத்தையோ பார்த்துக் கொண்டு இருந்தார். சுசீலா கூறத் துவங்கினாள் ‘ஸ்வாமி, நேற்று மாலை நான் ஒரு காலத்ஷேபத்தைக் கேட்டேன். அதில் அந்த பண்டிதர் கூறினார் ‘ நம் ஸ்தூல உடல் நீர் குமிழி போன்றது. பிறப்பவர் எவரையும் யமன் விட்டு வைக்க மாட்டார். வேளை வந்ததும் இன்றைக்கோ, நாளைக்கோ யமன் வந்து இறந்த வரை ஒரு பிராணியை இழுத்துச் செல்வது போல இழுத்துக் கொண்டு சென்று விடுவார். ஆகவே நம் தேகம் திடமாக இருக்கும் போதே தர்மம் செய்ய வேண்டும் ? வேத தர்ம நெறிகளும் அதைத்தானே போதிக்கின்றன. தர்மம் செய்யாமல் நமக்கு மட்டுமே பொருள் சேர்த்து என்னப் பயன்? அவை நம்முடனேயா வரப் போகின்றன? நாம் உழைத்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மன்னன் வரி போட்டு பிடுங்கிக் கொள்கிறார். சற்று ஏமார்ந்தால் திருடர்கள் அதை களவு செய்து விடுகிறார்கள். அவர்களும், நம்முடைய உறவினர்களுமே நாம் தேடி வைக்கும் பொருளுக்கும், பணத்துக்கும் பங்காளிகளாக உள்ளவர்கள்.
பதிக்கு பிரியமில்லாத மனைவி, பிட்ஷை எடுத்து உண்ணாத பிரும்மச்சாரி, பிராமணரை சஹாயமாகக் கொள்ளாத மன்னன், அக்னி பூஜை செய்யாத அந்தணன் போன்ற அனைவருமே நரகத்தையே அடைகிறார்கள்’. இதைக் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்த நான் குழந்தைகள் சோர்ந்து பொய் அமர்ந்திருந்ததைக் கண்டேன். வீட்டிலுள்ள உங்கள் குழந்தைகள் அநாதைகளைப் போல உள்ளார்கள். நானும் பத்தி இல்லாதவளைப் போல நடை பிணமாக அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் இரவும் பகலும் அலைந்து திரிந்து, பிறர் வீட்டில் உணவருந்தி வீட்டில் சேமித்து, விற்கக் கூடாததையும் விற்று பணமாக்கி வருகிறீர்கள். நீங்கள் சேர்க்கும் பொருள் என்ன உங்கள் கூடவா வரப் போகின்றது? நீங்கள் செய்யும் தர்மம் மட்டுமே உங்களுடன் கூட வரும். பெண்ணாக உள்ள இவள் யார் எனக்கு உபதேசம் செய்ய என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். வீட்டில் கணவனுக்கு அனுகூலமாக இருக்கும் மனைவியே லஷ்மி தேவியாவாள். வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு அவர்கள் கொண்டு செல்லும் கட்டுச் சாதம் உதவுவது போல பரலோகம் செல்பவர்களுக்கு தர்மம் அல்லவா வழித் துணையாக இருக்கும். நாம் இங்கு பிராமணர்களுக்கு அளிக்கும் போஜனம் அல்லவா நமக்கு யம லோகத்திலும் கிடைக்கும். பதினான்கு லோகங்களிலும் உள்ள அறுபத்தி நான்கு கோடி நதிகளும் அல்லவா துலா மாதத்தில் காவேரியில் வந்து கலக்கின்றன. அந்த மாதத்தில் அங்கு சென்று ஸ்நானம் செய்வது எத்தனை சிறப்பு என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா?. நீங்கள் அவை எதையுமே செய்யாமலும், நித்ய கர்மாக்களையும் சரிவர அனுஷ்டிக்காமலும் இருக்கின்றீர்கள். ஆனாலும் வேத வித்வானாக நீங்களே உங்களை மிகப் பெரியவராக நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறீர்களே, அது உங்களுக்கே பரிகாசமாகத் தெரியவில்லையா?. தயவு செய்து இன்று முதலாவது ஆசமனம், பாராயணம், நித்ய கர்மாக்கள் என அனைத்தையும் செய்து கொண்டு வாழ்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். ஏழையோ, பணக்காரரோ, நோய் வாய்ப்பட்டவரோ, யாராக இருந்தாலும் ஒரு மனைவிக்கு பார்த்தாவே கண்கண்ட தெய்வம். அதுவேதான் என் நிலையும். நீங்களே எனக்கு கண்கண்ட தெய்வம். ஆனாலும் உங்கள் தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக் காட்டுவது என் தர்மம் என்பதினால் இவற்றைக் கூறுகிறேன். மீண்டும் கூறுகிறேன், பெண்ணாக உள்ள இவள் யார் எனக்கு உபதேசம் செய்ய என்றுநினைக்காமல் நான் கூறியதில் உள்ள நியாயத்தை மட்டும் பாருங்கள் ‘.
இப்படி எல்லாம் கணவனுக்கு அவள் எடுத்துரைத்ததும், அவன் மனம் துணுக்குற்றது. தான் செய்த தவறு என்ன என்பதும் அவனுக்குப் புரியலாயிற்று. தான்தான் இத்தனை நாளும் அறிவுபூர்வமாக சிந்திப்பவன், தானே உயர்ந்த வேத பண்டிதன், தானே அனைத்தும் தெரிந்தவன் என்ற கர்வம் தன் கண்களையும், அல்லவா மறைத்து விட்டது என்பதை உணர்ந்தார். ஆவதும் ஸ்த்ரீயினால்தான் , அழிவதும் ஸ்த்ரீயினால்தான் என்ற கிருஷ்ண பகவானின் வேத வாக்கியம் சரியானதாகி விட்டதே என தனக்குத் தானே கூறி வருந்தியவர், அவளிடம் கூறினான்,’ ஹே கல்யாணி, நீ சொல்வதை எல்லாம் நானும் நன்கறிவேன். ஆனால் என் புத்தி இப்படி எப்படி பேதலித்து என் புத்தியில் இருந்து இத்தனை நாளும் இந்த தத்துவார்த்த சத்திய போதனைகளை மறைய வைத்துள்ளது என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். மோஹத்தினால் அல்லவா நான் இத்தனைக் காலமும் எனது வாழ்வை பாழாக்கிக் கொண்டு இருந்துள்ளேன். இன்று முதலாவது நீ கூறியபடி தர்ம நெறி முறையைக் கடை பிடித்து, நித்ய கர்மாக்களை தவறாமல் செய்தும், தர்மம் செய்தும் மீதி காலத்தைக் கடத்துவேன் என்று உனக்கு சத்தியம் செய்கிறேன். அடியே, கல்யாணி, நீ இத்தனை நாளும் ஏன் பேசாமல் இருந்தாய்? எனக்கு இதை முன்னமே கூறி இருந்ததால் நான் இத்தனைப் பாவ மூட்டையை சுமந்திருப்பேனா? என் ஜென்மாவை அனாவசியமாக அல்லவா வீணடித்து விட்டேன்’ என்று பலவாறு அவளிடம் கூறி வருத்தப்பட்டார்.
இப்படியாக ஒரு ஸ்த்ரீயினால் நல்வழிப் போதனையைப் பெற்ற பிரும்ம சர்மா உடனே தன மனைவியை நல்ல கோலம் போடச் சொல்லி, அதை சுற்றி சிறு மேடை அமைத்து துளசி செடியை வைத்து ஜலம் விட்டு வளர்க்கலானார். அதுமுதல் பிரும்ம சர்மாவின் நடை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும், அவன் மனைவியான சுசீலை பர்த்தாவிடம் பயபக்தியோடுதான் இருந்தாள். அவன் சொல்லை மீறி நடந்ததில்லை. அவன் மனம் கோணாத அளவு அவள் பதிவிரதையாக இருந்தால். அவன் கேட்டபோது சற்றும் தயங்காமல் அனைத்து வேலையையும் தள்ளி வைத்து விட்டு, அவனுக்கு மோகம் தருபவளுமாக தன்னுடைய வாழ்கையை வைத்துக் கொண்டு இருந்தாள். தினம் தினம் காவேரி ஸ்நானம் செய்வாள். கணவன் உறங்கத் துவங்கியதும் அவன் கால்களை பிடித்து விடுவாள். அவன் காலையில் எழுந்துவிடும் முன் அவள் எழுந்து அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து வைப்பாள். அவரும் அனைத்து நியமங்களையும் கடைபிடித்தவாறு, தான தர்மங்கள் செய்து, சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாமல் வாழ்ந்து வந்தார் .
இப்படியாக அவர்களது வாழ்கை சென்று கொண்டு இருந்த போது பிரும்ம சர்மாவின் ஆயுள் முடிவடைந்தது. இரண்டு முறை யம தூதர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்தார்கள். ஆனால் அவர்களால் அவரை நெருங்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் சுசீலையின் பத்தி பக்தியும், ஒழுக்க நெறியும், காவேரி ஸ்நான மகிமையும்தான். அதனால் அவர்கள் யமராஜரிடம் சென்று நிலைமையைக் கூறினார்கள். அதைக் கேட்ட யமன் கோபமுற்று சித்திரகுப்தரிடம் கூறினார் ‘ கண்ட இடங்களில் உண்டது, தர்ம நெறிக்கு மாறாக பொருள் தேட பல வழிகளில் சென்றது போன்ற பாவங்கள் சூழ்ந்துள்ள பிரும்ம சர்மாவின் ஆயுள் முடிந்து விட்டது. ஆகவே நீயே அங்கு நம் கிங்கர்களுடன் சென்று அவனை இழுத்து வா’ என்று கூறி அனுப்பினார். தலைவனின் ஆணையை ஏற்று சித்ரகுப்தரும் பிரும்ம சர்மாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது பிரும்ம சர்மா உணவு அருந்திக் கொண்டு இருந்தார். சரி அவர் உணவு அருந்தி முடிக்கட்டும் இழுத்துப் போகலாம் என சித்திரகுதர் காத்திருந்தார். உணவை உண்டு கொண்டு இருந்த பிரும்ம சர்மா தனது மனைவியிடம் கூறினார், ‘சுசீலை, இன்று நீ செய்துள்ள ரசம் அருமையாக உள்ளது. மீதி இருந்தால் அதை இரவு சாப்பிட வைத்து விடு’. இதைக் கேட்டதும், அவர்களுக்குத் தெரியாமல் அங்கு நின்று கொண்டு இருந்த சித்திரகுப்டருக்கு குபீர் என்று சிரிப்பு வர அவர் களுக் என்று சிரித்து விட்டார். ஆனால் அவர் சிரித்தது பதிவிரதையான சுசீலையின் காதில் விழுந்து விட்டது. நம் வீட்டிற்குள் யார் வந்திருப்பது என்று யோசனை செய்தவாறு சுற்றிலும் பார்த்தாள். யாரும் கண்களுக்குப் புலப்படவில்லை.
……………தொடரும்
முந்தைய பாகங்கள்