காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
அவற்றைக் கேட்டு முடித்தப் பின் அரிச்சந்த்ரன் அகஸ்திய முனிவரிடம் கேட்டான் ‘மா முனிவரே, காவேரி ஸ்நான மகிமையைக் கூறினீர்களே, காவேரியின் மகிமை என்ன? அந்த ஸ்நானத்தை எப்படி செய்வது? ஏதும் அதற்கான விதி முறைகள் உள்ளனவா? இது குறித்து வேறு கதை உள்ளதா? பகவான் விஷ்ணுவை எப்படி பூசிப்பது போன்ற விவரங்களை எடுத்துரைத்தால் எங்களுக்கு மனக் குழப்பம் தீரும்’.
அதைக் கேட்ட அகஸ்திய முனிவர் கூறலானார் ‘அரிச்சந்த்ரா, நீ கேட்ட கேள்வி அறிவு பூர்வமானது. உன் சந்தேகங்களை பரிபூரணமாக விளக்க நாரத முனிவர் கூறிய காவேரியின் மகிமையைக் கூறுகிறேன். கேட்டுக் கொள். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பெற்றவர்கள் மட்டுமே அதன் மகிமையைப் படிக்க முடியும். அதற்கான எண்ணமே பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே தோன்றும்.
முன் ஒரு சமயம் அர்ஜுனன் தனியே தீர்த்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அவன் தருமரிடம் ஆசி பெற்றுக் கொண்டு தீர்த்த யாத்திரைத் துவக்கி பல நதிகள், குளங்களில் ஸ்நானம் செய்து விட்டு காவேரிக் கரைக்கும் வந்து அங்கும் ஸ்நானம் செய்தான். அவன் சென்று இருந்தது விசாக மாதம். அந்த நதிக்கரையில் காவேரி ஸ்நான மகிமையைக் குறித்து மகரிஷிகள் பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்கள். அதை அவன் கேட்க நேரிட்டது. அதைக் கேட்டவன் அவர்கள் கூறியபடியே அங்கு மீண்டும் விதி முறைப்படி ஸ்நானம் செய்து விட்டு, அந்த கதா காலட்சேபத்தை செய்த முனிவர்களுக்கு மாலை, வஸ்த்ரம், கோதானம் போன்றவற்றை செய்தான். அதன் பின் அருகில் இருந்த ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்று அவரையும் தரிசனம் செய்தான். அங்கிருந்து துவாரகாவிற்குச் சென்றவன் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்ரயையும் மணந்து கொண்டான். அதன் பின்னரே நாடு திரும்பியவன் மகாபாரத யுத்தத்தில் வெற்றி கொள்ள முடிந்தது. அதற்குக் காரணம் காவேரி ஸ்நான மகிமை என்பதை அவனுக்கு கிருஷ்ணர் உருவில் இருந்த மஹாவிஷ்ணு எடுத்துக் கூறினார்’.
அப்போது ஒரு சிறிய வினாவை அரிச்சந்திரன் எழுப்பினார்,’ தேவ ரிஷி அவர்களே, அரசனான அர்ஜுனன் எதற்காக தீர்த்த யாத்திரை சென்றார்? கிருஷ்ண பகவானின் சகோதரியை எதற்காக மணந்தார். அதையும் கூறுவீர்களா?’
அகஸ்தியர் தொடர்ந்தார் ‘ மகாபாரத யுத்தம் நடைபெறுவதற்குப் பல காலத்துக்கு முன்னால் தாயின் சொற்படியும், குரு வியாசரின் ஆணையை ஏற்றுக் கொண்டும் பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பாஞ்சால மன்னனின் மகளான திரௌபதியை மணந்து கொள்ள வேண்டி இருந்தது. அவர்கள் ஐவருக்கும் அதி சுந்தரியாக இருந்த அவள் மீது அதிக மோகம் ஏற்பட்டது. அவர்களது காம மோகத்தைக் கொண்ட முகத்தை கவனித்த நாரத முனிவர் அந்த ஐவரையும் திரௌபதியுடன் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தர்ம ரஹஸ்யத்தை போதனை செய்தார். நாரதர் அவர்களுக்குக் கூறலானார் ‘நீங்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் எந்த ஒரு வீட்டிலும் புருஷர்கள் ஒருவருடன் ஒருவர் மனஸ்தாபம் கொள்ள ஒரு ஸ்திரீயே காரணமாக இருப்பாள். அன்யோன்யமாக இருக்கும் சகோதரர்களையும் கூட கலகம் செய்து சண்டை இடக் காரணமாக ஒரு ஸ்திரீயே இருப்பாள். பகவான் ஸ்த்ரீகளை படைத்த போது அவர்களது கோபம் வெளியில் தெரியாமல் உள்ளடங்கி சிரித்த முகத்துடன் நிற்கும் வகையில் அவர்களைப் படைத்து உள்ளார். அவர்களது ஆழமான மன நிலையைக் கண்டறிய முடியாது. பெண்கள் யமனுக்கும் கூட அஞ்ச மாட்டார்கள். தன் மனதையே பிரதானமாகக் கருதி கட்டிய புருஷனிடம் அதீத அன்பை செலுத்துவார்கள். ஆனால் கணவன் நோயாளியாகவோ இல்லை ஏழையாகவோ இருந்தால் அவர்களை சபிப்பார்கள். அந்த பாபத்திற்காக நரகமும் செல்லத் தயங்காதவர்கள் பெண்கள். தன சுகத்தையே பெரிதாகக் கருதுபவர்கள். தன் தந்தையின் குலம் எத்தனை மகிமை கொண்டது என்பதையோ, பதியின் குலம் எத்தனை பெருமைப் பெற்றது என்றோ கவனிக்க மாட்டார்கள். அவர்களுடைய ஒரே எண்ணம் தான், தன் சுகம் என்பதுதான். யுகவதி, மலடு, விதவை போன்ற பெண்கள் எந்த வீட்டில் அதிகமோ அங்கு சண்டையும் சச்சரவுமே இருக்கும். ஆனால் உத்தமமான பெண்களும் இங்குண்டு. அவர்கள் நல்ல பதியுடன் வாழ்ந்து இருந்து பதினான்கு செல்வங்களையும் பெற்று பதி விரதையாக வாழ்ந்து இருந்து சொர்கத்துக்கும் செல்வார்கள்.
குழந்தைகளே, நான் எதற்காக உங்களை இங்கு தனிமையில் அழைத்தேன் என்பதைக் கூறும் முன் இன்னொரு கதையையும் கூறி விடுகிறேன். அமைதியாக கேளுங்கள்.
முன்னொரு காலத்தில் சுகதன் மற்றும் உபசுக்தன் என்ற இரண்டு அசுர சகோதரர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அன்புடனும் ஆசையுடனும் இருந்தார்கள். ஆனால் ரிஷி முனிவர்களையும், சாதுக்களையும் அவர்களைப் போல ஹிம்ஸிப்பதில் யாரும் அவர்களை மிஞ்ச இயலாது. அத்தனை கொடூரமானவர்கள் அந்த இரண்டு பேரும். ஒன்றாக இருந்ததினால் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு யார் வந்தாலும் அவர்களை அவர்களால் அடக்கி ஒடுக்க முடிந்தது. ஆகவே அவர்களை அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது என்ன செய்வது என யோசனை செய்த இந்திரன் தேவ லோகத்தில் இருந்த அப்ஸரையான திலோத்தமை என்பவளை அவர்களுக்கு முன்னால் சென்று நிற்குமாறும், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறி அனுப்பினார். அவளும் அந்த இரண்டு சகோதரர்களும் தனித் தனியே இருந்தபோது அவர்கள் எதிரில் சென்றவள் தனது யவ்வன வாளிப்பான உடல் அழகை அரையும் குறையுமாறு காட்டியபடி இருந்து அவர்களை தன் வயப்படுத்தி விட்டப் பின் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாள். அதற்குப் பின்னரே தன்னை தொட அனுமதிப்பேன் என்றும் கூற அவர்களும் அவள் அழகில் மயங்கி அவளை தம் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள். ஒருநாள் அவர்கள் இருவருமே இருக்கையில் அங்கு சென்ற திலோத்தமையை மூத்தவன் வரவேற்றான். அண்ணன் – தம்பி இருவர் கண்களிலும் காமம் சொட்டியது. தன் தம்பியிடம், உன்னுடைய அண்ணி இவள்தான். நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம் என்றான். அதைக் கேட்ட இளையவனோ, என்ன வார்த்தைக் கூறுகிறாய் அண்ணா, இவள் உனக்கு மைத்தினியானவள். என்னுடைய வருங்கால மனைவி என்றான். அவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் தடிக்க, நீயா நானா என்ற நிலை வந்து ஒருவருக்கொருவர் தமது கதைகளினால் தாக்கிக் கொள்ள அந்த சண்டையில் இருவருமே இறந்து போக திலோத்தமையும் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். இப்படியாக ஒரு பெண்ணைக் கொண்டே ஒரு குடும்பத்தை தேவேந்திரனால் அழைக்க முடிந்தது’.
நாரதர் மேலும் தொடர்ந்து கூறினார் ‘ குழந்தைகளே இந்தக் கதையை முக்கியமாக திரௌபதிக்காகவே நான் கூறினேன். திரௌபதி, உனக்கு ஐந்து கணவன்மார்கள் . நீதான் அவர்களுக்குள் பிளவு நேராமல் அவர்களுடைய ஒற்றுமையை பாதுகாத்தவண்ணம் இருக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் ஒவ்வொருவரின் மனதும் சந்தோஷமாக இருக்குமாறு நீயும் உன் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பாண்டவர்களே நீங்களும் இவளுடைய பேரானந்த அழகில் மையல் கொண்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஆனால் ஒரே வீட்டில் அனைவரும் அவளுடன் வாழ்வது கடினம் என்பதினால், நீங்கள் ஐவரும் ஒரு குறிப்பிட்ட கால முறையை வகுத்துக் கொண்டு ஒவ்வொரு வருடம் ஒருவர் என அவளுடன் தனித்து வாழ வேண்டும். ஆனால் அவள் யாருடன் வாழ்கிறார்களோ , அந்த காலத்தில், முக்கியமாக அவள் கணவனுடன் உல்லாசமாக உள்ள நேரங்களில் தப்பித் தவறிக் கூட அவர்களை தொந்தரவும் செய்யலாகாது. அவர்களை அந்தக் கோலத்தில் காணவும் கூடாது. அவள் யாருடன் வசிக்கின்றாளோ அந்த காலத்தில் அவளை மற்றவர்கள் தனது தாயைப் போன்ற அண்ணியாகவே பார்க்க வேண்டும். இதற்க்கு மனக்கட்டுப்பாடு வேண்டும். அப்படி இதை மீறி யாரும் தவறு செய்தால் அவர்கள் அதற்கு பிராயசித்தமாக பன்னிரண்டு வருட தீர்த்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் துலா மற்றும் வைகாசி மாதங்களில் காவேரி ஆற்றில் ஸ்நானம் செய்து ஹரி நாமத்தைக் கூறிக் கொண்டு, சிநேக பாவத்துடன் வாழ வேண்டும்’ என்று கடுமையாக எச்சரித்தார். இல்லை என்றால் ஒரு பெண்ணால் நீங்களும் அழிந்து விட்டீர்கள் என்ற பாவத்தை சுமக்க வேண்டி இருக்கும். அதை ஏற்று பாண்டவர்கள் ஐவரும் மற்றும் திரௌபதியும் சத்தியக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார்கள்.
இதைக் கூறிய அகஸ்த்தியர் ‘ தனது மூத்த சகோதரனுடன் திரௌபதி உல்லாசமாக இருந்த நேரத்தில், அவர்கள் வீட்டு வழியே ஓடிய ஒரு பிரஷ்டனை துரத்திக் கொண்டு அவர்கள் வீட்டிற்குள் புகுந்து ஓடிய அர்ஜுனன் தன்னை அறியாமல் ஒரு கணம் அவர்களை அந்த கோலத்தில் பார்த்து விட்டான். ஆகவே அவர்கள் சத்தியபிரமாணம் கொண்டிருந்த தர்மத்தை மீறி இன்னொரு சகோதரன் வீட்டில் இருந்த திரௌபதியை அலங்கோல காட்சியில் பார்த்து விட்டதினால் அதற்க்கு பிராயச்சித்தமாக பன்னிரண்டு வருட கால தீர்த்த யாத்திரையை அர்ஜுனன் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்த நேரத்தில்தான் அவன் சென்ற தீர்த்த யாத்திரையில் கிருஷ்ணரின் சகோதரியைப் பார்த்து அவள் மீது மையல் கொண்டு அவளை மணந்து கொண்டான்.’ என்று அரிச்சந்திரனிடம் கூறிய அகஸ்தியர் நாரதர் கூறிய கதையை தொடர்ந்து கூறலானார்.
‘இப்படியாக திலோத்தமை கதையைக் கூறிய நாரதரை ஐந்து சகோதரர்களும் வணங்கி துதித்து இனி தாம் எந்த விதத்திலும் திரௌபதியினால் பிரியக் காரணமாக இருக்க மாட்டோம் என்ற பின் நாரதரிடம் ‘ தேவரிஷியே, துலா மற்றும் வைகாசி மாதங்களில் காவேரி ஆற்றில் ஏன் ஸ்நானம் செய்யுமாறு கூறினீர்கள்? அதற்க்கு ஏதேனும் குறிப்பிட்ட உள்ளனவா? அதையும் விளக்குவீர்களா?’ எனக் கேட்டபோது நாரதர் காவேரியின் பெருமையை அவர்களுக்கு எடுத்து கூறலானார்.
…………தொடரும்