சாந்திப்பிரியா

பாகம்- 3

அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் கூறினார் ‘மூத்தோர்களே, நான் இப்போது சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எனக்குக் கூறுங்கள். எனக்கு ஒரே நேரத்தில் எனக்கு இரண்டு காரியங்கள் வந்துள்ளன. முதலாவது தேவர்களுக்கு நன்மை பயக்கும் காரியமான சிசுபால வதம். இரண்டாவது தருமருக்கு மதிப்பு அளிக்கும் மித்ர காரியம். இவற்றில் எதை விடுவது, எதை செய்வது என்பதில் குழப்பமாக உள்ளது. தருமபுத்திரர் தனது பலமிக்க பீமன் போன்ற சகோதரர்களை அனைத்து திக்குக்களிலும் அனுப்பி அந்த திக்குக்களில் உள்ள நாட்டு மன்னர்களை அடக்கி வைத்து உள்ளார். ஆகவே அவர் செய்யும் யாகத்துக்கு யாராலும் எந்த விதமான இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதினால் அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஆகவே அதை மித்ரகாரியம் என்று இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளலாமா?
சிசுபாலனோ எனது தந்தையின் சகோதரியின் மகனாவார். எனக்கு மைத்துனன் என்பதினால் அவன் செய்யும் முறைக் கேடுகளைப் கண்டு கொள்ளாமல் இருப்பது தவறாக அமைந்து விடும். அவனோ ஒருவனுக்கு வந்துள்ள நோய் முற்றிப் போவது போல பகைவர்களை அதிகரித்துக் கொண்டு போய் தன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் துரோகம் செய்கிறான். பலரும் அவன் செயலால் துக்கமுற்று மனம் பதைபதைத்து என்னிடம் முறையிட்டு உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு யாரேனும் துரோகம் செய்தால் அதைப் பற்றி நான் கவலைப் பட மாட்டேன். ஆனால் பலருக்கும் அவன் துரோகம் செய்து அவர்களை வதைப்பதைக் கேட்கும்போது என் மனம் தவிக்கிறது. இப்படி உள்ள நிலையில் சிசுபால வதம் என்பது தேவ காரியமாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே நான் முதலில் எதை செய்வது?, எதை விடுவது என்பதைப் பற்றி உங்கள் கருத்தைக் கூற வேண்டும்’ என்று கூறிவிட்டு சிசுபாலம் செய்து வந்ததாக கூறப்படும் அனைத்து தொல்லைகளையும், அக்கிரமங்களையும் விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார்.
அதைக் கேட்ட பலராமர் கூறினார் ‘ கிருஷ்ணா நீ அனைத்துமே சுருக்கமாக கூறி இருந்தாலும் அதில் பெரிய சூத்திரமே உள்ளடங்கி உள்ளது. தேவ காரியம் மற்றும் மித்ரு காரியம் என்பது லேசானது அல்ல. அது தத்துவார்த்தமான கருத்தைக் கொண்ட வார்த்தை. அநேகம் பேர்களுக்கு அவற்றின் மகத்துவம் புரியாது. ஆனால் அதிலும் நீ எத்தனை கவனமாக இருக்கிறாய் என்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆகவே உன் விருப்பத்துக்கு ஏற்ப என்னுடைய எண்ணத்தை சில வார்த்தைகளில் நானும் கூற விரும்புகிறேன். கிருஷ்ணா, நீ சிசுபாலனை எதற்காக கொல்ல வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைத்தாய். எந்த ஒருவரும் தான் எண்ணியதை துணிவுடன் செய்ய முடியாது என்று எண்ணினால் அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. போருக்குப் புறப்பட்டுப் போகும் முன்னாள் நல்லவை எது, தீயவை எது என்பவை அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்க வேண்டும். அது பற்றி யாரிடமாவது ஆலோசனைக் கேட்டால் அவர்கள் கூறுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும். காரியங்களை அறியாதவர்களின் ஆலோசனைக் கேட்டால் பலன் இருக்காது. அவர்கள் கூறும் அறிவுரைகள் இலக்கு தவறி குறி வைக்கும் அம்பைப் போன்றதாக இருக்கும். அறிவாளர்கள் எண்ணிச் சொல்லிய சொற்களையே ஆழ்ந்து மனதில் கொள்ள வேண்டும். பகைவர்களை சிறியவன், பெரியவன் என்ற பேதத்துடன் பார்க்காமல் அவர்களை வேரோடு பிடுங்கி எறிதல் அவசியம் என்பதை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் செடி கொடிகள் தழைப்பது போல பகைவர்கள் சிலகாலம் வாடி உள்ளதைப் போல காத்திருந்து மீண்டும் ஒன்று கூடி மேல் எழுந்து வருவார்கள்.
சிசுபாலன் உனக்கு பிதா வழியில் வந்தவனாகவும், மித்ருவாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றுக்கு இடையில் அவன் பெரும் தீங்கு புரியும் சத்ருவாகவும் இருக்கிறான். ஆகவே வெளிப் பார்வைக்கு ஒரு நல்ல நண்பனாகவும் , மனதுக்குள் ஒரு பகைவனாகவும் இரு வேடம் தரித்திருக்கிறான். ஆகவே அவனை எப்படி நல் வழியில் கொண்டு செல்வது? நண்பனாக எடுத்துரைத்தா அல்லது பகைவனாகப் பார்ப்பதா என்று குழம்பாதே. தீமைகளை தொடர்ந்து செய்து கொண்டு உள்ளவனை நண்பனாகப் பார்ப்பது நல்லதல்ல. மனதாலும், செயலாலும் சிசுபாலன் தீயவன். ஆகவே இதயத்தில் தீமையை பொக்கிஷமாக வைத்து உள்ளவன் மீண்டும் மீண்டும் தீமையே செய்வான். அவன் எப்போதாவது நல்லது செய்வான் என்று எதிர்பார்ப்பது காலத்தை விரயம் செய்வதாகும். உறவாயினும் தீங்கு புரிபவனை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும், பகைவனானாலும் நன்மைகளை செய்பவனை பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் தர்ம சாஸ்த்திரம் சொல்கிறது.
அவன் உன் வம்சத்தில் உருவானவன் என்பதினால் உனக்கு தீமைகளை செய்யாது இருந்தானா? இல்லை அல்லவா?. அவன் உனக்கும் தீங்கு புரிந்தான், எனக்கும் தீமை புரிந்தான், அனைவருக்கும் தீமைகளையே செய்தான். இன்னமும் தீமையே செய்தும் வருகிறான். அவன் மணக்க விரும்பிய ருக்மணியை நீ மணந்த நாள் முதலே உன் மீது வன்மம் கொண்டுள்ளான். நரகாசுரனை நீ வதம் செய்யச் சென்றபோது, நீ இல்லாத நேரம் பார்த்து துவாரகாபுரியை முற்றுகை இட்டு பெரும் போர் செய்தவன் அல்லவா அவன். என்னுடைய தந்தையார் வாசுதேவருடைய அஸ்வமேத யாகத்தை அழிக்கக் கருதி அவர் வைத்திருந்த குதிரயையும் கவர்ந்தவன் அல்லவா அவன். பொழுது போக்கிற்காக இரவதாக மலை அடிவாரத்துக்கு சென்ற யாதவர்களை கயிற்றினால் கட்டி இழுத்துக் கொண்டு போய் சிறையிலிட்டவன் அல்லவா அவான். வப்புரு என்ற யாதவனின் மனைவியை பலாத்காரம் புரிந்தவன் அல்லவா அவன். இப்படியே எண்ணிலடங்காத தீமைகளை செய்தான். இந்த துரோகி உள்ளவரை யாருக்கும் சுகம் இருக்காது. ஆகவே அவனை கொலை செய்து அனைவரது துயரையும் நீக்குவது உன் கடமைகளில் ஒன்றாகும். ஆகவே சிசுபாலனை வதம் செய்ய சேனைகளோடு செல்வதே நல்லது. செடி தேசத்து விருஷங்களை முறித்துக் கொண்டு முன்னேறும் வகையில் யானைப் படையுடன் செல். சிசுபாலனின் தம்பியான மகிஷ்மதியின் நகரை யாதவப் படையினரை அனுப்பி அவன் வெளியே வராதபடி முற்றுகை இடச் செய். தருமர் செய்யும் யாகத்தை அவரே நடைத்திக் கொள்ள முடியும் என்பதினால் மித்ரு காரியம் என்று எண்ணிக் கொண்டு நீ யாகத்துக்குப் போவதற்கு இப்போது முக்கியத்துவம் தர வேண்டாம். சூரியன் வானிலே ஒளியாய் இருந்து உலகைக் காப்பது போல, தேவேந்திரன் தேவலோகத்தைக் காப்பது போல, நமது பகைவர்களை நாம்தான் அழிக்க வேண்டும்’
பலராமர் தனது என்னத்தைக் கூறி முடித்தவுடன் அடுத்து உத்தவர் தனது எண்ணத்தைக் கூறலானார். ‘கண்ணா, இப்போது உன்னுடைய மூத்தவர் எடுத்துரைத்த எண்ணங்களைத் தவிர நான் மேலும் கூற வார்த்தைகளே இல்லை. அவர் அனைத்தையுமே அழகாக எடுத்துரைத்தார். தர்ம சாஸ்திரங்களை நன்கே அறிந்துள்ள உனக்கு நான் அவற்றைப் பற்றி மேலும் கூறினால் அவை உனக்கு பாலபாடம் புகட்டுவது போல இருக்கும். இருந்தாலும் என்னுடைய எண்ணத்தைக் கூறுகிறேன்.
வெற்றி முதலிய காரிய சித்திகளை அடைய துடிக்கும் மன்னர்கள் மேலான மக்களின் ஆலோசனைகளை முதலில் கேட்க வேண்டும். அவற்றை எல்லாம் மனதில் ஏந்திக் கொண்டு தான் ஒரு தக்க முடிவு எடுக்க வேண்டும். ஆலோசனைகளைக் கைகொள்ளும் அறிவாளர்கள் நன்கு முடிவு எடுப்பார்கள். அவர்களது காரியங்கள் தங்கு தடையின்றி நடந்தவாறு இருக்கும். ஆலோசனைகளைக் கைகொள்ளாமல் முடிவு எடுப்பவர்கள் தாம் எடுத்த காரியத்தை முடிக்க வழி தெரியாமல் குழம்பிப் போய் இடையில் தமது காரியங்களை விட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எலியைப் பிடிக்க மலையை உடைத்த கதையில் வருபவர்களைப் போன்றவர்கள். காரியத்திலேயே கண்ணாக இருப்பவர்கள் நித்திரையைப் பாரார், சத்ருக்களையும் பாரார், சரீரத்தின் அலுப்பையும் பாரார், பொழுதையும் பாரார், போஜனத்தையும் பாரார். ஆலோசனையின் முடிவில் துணிவு பெற காரியத்தில் தளர்ச்சி இன்றி முயற்சி செய்ய வேண்டும். முயற்சி இன்றி எந்த காரியமும் வெற்றி பெற முடியாது. முயற்சியிலேதான் செல்வமும், சேனைகளைப் பெரும் பாக்கியமும் உண்டாகிறது. தட்டில் உள்ள சோறு வாயிலே புக நம்முடைய கைதான் நமக்கு கை கொடுக்க வேண்டும்.
ஆகவே நீர் இப்போது சிசுபாலன் மீது போர் தொடுக்கும் முன்னர் ஒற்றர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். உன்னிடத்தில் உள்ள வலிமைகளின் நிலையையும், அவனிடத்தில் உள்ள வலிமைகளின் நிலைமையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொது நெறியையும் நோக்க வேண்டும். இவற்றை எல்லாம் பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என போர் தொடுப்பது அறிவான செயலாக இருக்காது.
சிசுபாலன் அற்பமான பகைவன் என்று அவமதிக்கத்தக்கவன் அல்ல. அவனும் போர் தொழிலில் தேர்ச்சி பெற்ற வீரன். துணை வலிமை மிக்க சூரன். கலங்காத நிலையைக் கொண்ட அகங்கார குணத்தைக் கொண்டவன். ஒருவனுக்கு வந்துவிடும் ஷ்யரோகம் என்ற பெரும் வியாதி மருந்து கொடுக்கவில்லை என்றால் அதிகம் வளர்வது போல தீமைகளை வளர விட்டுக் கொள்ளும் அவன் மேலும் பல அரசர்களையும் தன்னுடன் துணைக்கு அழைத்து வரக் கூடியவன். நீங்கள் செல்லும் போராட்டக் களத்திலே பல அரசர்களும் வரக்கூடும். உம்மோடு பகை கொண்டுள்ள அரசர்களும் இந்த நேரத்தில் அவனுக்கு துணையாக வந்து உம்முடன் போர் தொடுப்பார்கள். அது போல உமக்கும் அவனுக்குப் பகையான மன்னர்கள் வந்து உனக்கு துணை புரிவார்கள். தருமனின் யாகத்துக்கு வரும் மன்னர்கள் அனைவருமே உனக்கும் துணையாக நிற்பார்கள் என்று எண்ணி விடாதே. அவர்கள் அனைவரும் தருமனுடன் ஒன்று சேர்ந்து, ‘ஐயோ இப்போது இந்த யுத்தத்தைத் துவக்கி எமது யாகத்துக்கு பங்கம் விளைத்து விடாதீர்கள்’ என்று உமக்கு நெருக்கடியும் தருவார்கள். வலியவர்களாக இருந்தாலும் சத்ருக்களை மெல்ல மெல்ல மாற்ற முடியும். மித்ரர்கள் மனம் வேறுபட்டால் அது இணைவது கடினம்.
நீங்கள் மித்திர காரியத்தை விட தேவ காரியமான யாகத்துக்கு செல்வதே சிறந்தது என்று எண்ணுவீர்கள். யாகம் முடிந்தப் பின் தமக்குக் கொடுக்கும் யாக அவிரைக் கொடுத்தால் தேவர்களூம் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சத்ருவைக் கொல்லும் போது அத்தனை மகிழ்ச்சியை அடைய முடியாது.
சிசுபாலம் குழந்தையாகப் பிறந்தபோது நான்கு கைகளையும் நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்களுடன் தோன்றினான். அந்தக் குழந்தைஒன் அற்புத வடிவைப் பார்க்கப் பலரும் போய் இருந்தார்கள். அப்போது நீங்களும் அங்கு சென்றீர்கள். அவனது தாயாரோ அவனை தனித் தனியாக அனைவரது மடியிலும் வைத்து எடுத்தாள். உன் மடியிலும் அவனைக் கிடத்திய அடுத்தகணமே அவனுக்கு இருந்த மீதி இரண்டு கைகளும் மூன்றாம் கண்ணும் மறைந்து போயிற்று. அதைக் கண்ட அவனுடைய தாயாரான சாத்துவதி ‘ மிகையான (அதிகமான) அவயங்கள் எவரால் காணாமல் போயினவோ, அவனாலேயே இவனுக்கு மரணம் நேரும்’ என்று கூறியப் பின் அழுது புலம்பி விட்டு, ‘அப்பா, இவன் செய்யும் குற்றங்களை மனதில் வைத்திராது அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று உம்மிடம் கேட்டாள் . நீரும் அதைக் கேட்டு ‘சரி அம்மா, இவன் எனக்கு செய்யும் குற்றங்கள் அல்லது நிந்தனைகளை நூறுக்கு வரை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்வேன். நூறு குற்றங்களுக்கு மேல் அல்லது நூறு நிந்தனைகளுக்கு மேல் அவன் செய்தால்தான், அவனுக்கு என்னால் மரணம் சம்பவிக்கும் என்பதி உறுதியாகக் கூறுகிறேன் ‘ என்று கூறினீர்கள். அந்த வாக்கை மீறக் கூடாது. வாய்மை தவறாகக் கூடாது. எதற்குமே காலமும் வந்து கைகூட வேண்டும். ஒற்றர் இல்லாத அரசியல் எத்தனை சிறப்பாக இருந்தாலும் அது காரியத்துக்கு உதவாது. சத்ருவோடு சார்ந்தது நிற்கும் ஜனங்களையும் பேதம் செய்து பிரித்து விட ஒற்றர் தேவை. இப்படியாக நீங்கள் உங்கள் படை வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்திரப்பிரத்த நகரிலே அனைத்து அரசர்களும் வந்து கூடுவார்கள். அவர்களில் சத்ருவின் நண்பர்களை ஒற்றர்கள் மூலம் அந்தரமாக்கிக் கொண்டு அவனை பலவீனப்படுத்தி விட வேண்டும். நீங்கள் தர்மரின் யாகத்துக்குச் சென்றால் தருமர் அக்கிர பூஜயையும் (பூஜையில் தரப்படும் முதல் மரியாதை என்பதே அக்கிர பூஜை என்பது) உமக்கே செய்வார். நாங்களும் அங்கு வருவோம். சிசுபாலனும் அங்கு வருவான். உங்களுக்குக் கிடைக்கும் அக்கிர பூஜையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் உங்களை நிந்திப்பான். வாய்க்கு வந்தபடி கூறுவான். சண்டைக்கும் வருவான். அப்போது அங்கிருக்கும் மன்னர்கள் யாக சபை என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி பேசும் இவனுடன் நட்பு கொள்வது கேவலம் என்பதை உணர்ந்து அவனை விட்டு விலகுவார்கள். அப்போது நீர் காட்டும் வீரத்தனத்தால் விளக்கிலே வந்து விழும் விட்டில் பூச்சிப் போல அவன் வந்து உங்கள் வலையில் விழுந்து மரணம் அடைவான். அதுவரை பொறுத்திருந்து மித்ரகாரியத்தின் மூலம் தேவகாரியத்தை வெற்றியோடு செய்து முடிக்க வேண்டும் ‘ என்று தனது கருத்தைக் கூறினார். மூவரும் அதன் பின் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக் கொண்டப் பின் அவரவர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

 

…………..தொடரும்  

முந்தைய பாகங்கள்