துலா புராணம்- 14
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

பாண்டவர்களுடன் திரௌபதி மனமொத்து பல காலம் வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒரு முறை பாண்டவ சகோதரர்களின் ஒப்பந்தத்தின்படி அவள் தர்மருடன் வசிக்க  வேண்டி இருந்தது.  அவர்களும் ஆனந்தமாக காலத்தை  ஓட்டிக் கொண்டு ராஜ்ய பரிபாலனத்தையும்  பார்த்துக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு பிராமணர்  ‘ஐயா, என் பசுக்களைக் காப்பாற்றித் தாருங்கள், என் பசுக்களைக் காப்பாற்றித் தாருங்கள்’ எனக் கதறியவாறு அர்ஜுனனிடம் வந்தார். அவரைக் கண்ட அர்ஜுனன் அவரை ஆஸ்வாசப்படுத்தி என்ன ஆயிற்று என்று கேட்டான். அந்த பிராமணர் கூறினார் ‘ அர்ஜுனா நான் வைத்து இருந்த பசுக்களும், அவற்றில் இருந்து பால் கறக்கும் பாத்திரங்களையும் ஒருவன் திருடிக் கொண்டு போய் விட்டான். நாம் எந்த நாட்டில் உள்ளோமோ அந்த நாட்டில் இப்படி ஒரு திருட்டு நடந்தால் ஒன்று திருடனை அரசர் பிடித்துக் பொருட்களை மீட்டுக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் எவ்வளவோ களவு போயிற்றோ அதை அரசர் ஈடு  வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் அரசருக்கு சாபம் கொடுத்து விடுவேன் ‘ என்று கோபத்துடன் கூறினார்.
உடனே அர்ஜுனன் ‘ அந்தணரே, உங்கள் பொருட்கள் களவு போனதற்குக் காரணம் உங்கள் விதி  கூட காரணமாக இருக்கலாம் அல்லவா . ஆகவே கோபப்படுவதை விடுத்து  நிதானத்துக்கு வந்து நீங்கள் எப்படிப்பட்டவர், எப்படி பறி கொடுத்த இத்தனைப் பொருட்களை ஈட்டினீர்கள் என்பதைக் கூறுவீர்களா’ என்று கேட்டவுடன் அந்த அந்தணருக்கு இன்னும் கோபம் வந்து விட்டது. அவர் அர்ஜுனனைப் பார்த்துக் கூறினார் ‘ ஹே அர்ஜுனா, நான் எப்படி இத்தனைப் பொருள் ஈட்டினேன் என்று கேட்கிறாயே, நான் யார் தெரியுமா? பிரும்மச்சாரியாக இருந்து குருகுலத்துக்குச் சென்று குருவிடம் பாடங்கள் பயின்று பெற்றோருக்கும் பணி விடை செய்து வந்தவன். தர்ம நெறி தவறி வாழாதவன் . விதிப்படி திருமணம் ஆக வேண்டிய நேரத்தில் மணமும் செய்து கொண்டேன். இருந்தும் எந்த நியமத்தையும் விட்டு விடவில்லை. புரோகிதம் செய்து நிறைய பொருள் ஈட்டினேன். நிறைய தான தருமமும் செய்தேன். யாரிடமும் கை ஏந்தியதில்லை. நான் செய்த தொழிலுக்கு ஏற்பவே தட்ஷனையும் பெற்றுக் கொண்டேன். பேராசை பிடித்து அலையவில்லை. பழையதை உண்டதில்லை. நெறி தவறி மனைவியுடன் சல்லாபிக்கவில்லை. சீடர்களை அவமதித்தது இல்லை. ஸ்திரீகளுடன் சரி சமமாக அமர்ந்து போஜனம் செய்தது இல்லை. ஏகாதசியில் உண்டதில்லை. தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து இருநூறு பொற் காசுகளை தானம் செய்தேன்.  இத்தனைப் பொருள் என் புரோகிததினால் ஈட்டி இருந்தேன் என்றால் என் புரோகிததின் மகிமையைப் பார்.
எவன் ஒருவன் தனது பாபத்தை மூடி மறைத்து விட்டு, தான் செய்த புண்ணியத்தை மட்டுமே கூறுவானோ அந்த ஷணமே அவன் செய்திருந்த அனைத்து புண்ணியங்களும் மறைந்து விடும். ஆகவே நான் கூறுவது அனைத்துமே சத்தியம். அர்ஜுனா உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? சாதுக்கள் பலரும் என்னுடன் துலா மாத ஸ்நானம் செய்துள்ளார்கள். நாளைத் தவற விட்டாலும், விரதத்தை  தவற விட்டவன் இல்லை நான். எனக்கு ஐந்து அழகான பெண்களும் இருக்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் விவாஹமும் செய்து கொடுத்துள்ளேன். பசும் பாலையோ, எள்லையோ, உப்பையோ விற்றுப் பணம் சேர்த்தது இல்லை. தானம் கிடைத்த அரிசியை விற்பவன் பத்து நாளிலும், உப்பை விற்ப்பவன் உடனேயும், பசும்பாலை விற்பவன் மூன்று நாளிலும் சண்டாளன்  ஆகி விடுவார்கள். எள்ளை விர்ப்பவனோ அவனது சந்ததியை அழித்துக் கொள்கிறான்.
லோபத்தினால் ஆயுள் குறைவதைப் போல பாம்பின் விஷத்தினால் கூட ஆயுள் விரைவில் அழிவது இல்லை. ஆசையை அடக்கி வைத்துக் கொண்டு வீட்டிலேயே உள்ளவனுக்கு அந்த வீடே தபோவனம் ஆகும். இவற்றை எல்லாம் நீ அறிவாயா? என்னைப் போய் நீ எப்படி இத்தனைப் பொருள் ஈட்டினாய் என்று கேட்கிறாயே. நான் எப்படி சம்பாதித்தேன் என்பது இப்போது முக்கியம் அல்ல. நான் இழந்தப் பொருளை எனக்கு மீட்டுத் தர உன்னால் முடியுமா?’ என்று கோபமாகக் கேட்டார்.
பசுமாட்டையும் பிராமணர் இழந்தப் பொருட்களையும் 
 மீட்டு வர அர்ஜுனன் கிளம்பிச் சென்றான் 
அவர் கோபத்தை முற்றிலும் உணர்ந்து கொண்ட அர்ஜுனன் அவரிடம் தான் கேட்ட கேள்விக்கு மன்னிப்புக் கேட்டான். ‘அந்தணரே, நான் உங்களுடைய பெருமையைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்  வேண்டும் என்றே உங்களை சீண்டி விட்டேன். உங்களைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்களுடைய மேன்மை. உங்கள் முகத்தில் காணப்படும் தேஜஸ் அதை தெளிவாக காட்டுகிறது அல்லவா. கவலையை விடுங்கள் நாளை மாலைக்குள் உங்களுடைய களவு போன பசுக்கள் மற்றும் பாத்திரங்களை அனைத்தையும் மீட்டுத் தருவேன்’  என உறுதி கூறி விட்டு அவரை நமஸ்கரித்தான். பெரியோர்களை நமஸ்கரிப்பது விவேகத்தைத் தரும். புண்ணியம் கைகூடும் என்பார்கள்.  அவசரம் அவசரமாக உள்ளே சென்று தனது ஆயுதங்களை எடுக்கப் போனவன்  தவறுதலாக எந்த அறைக்குள் நுழையக் கூடாதோ, அந்த அறை வழியே உள்ளே சென்ற போது அங்கு திரௌபதியும் தர்மரும் நெருக்கமான கோலத்தில் இருந்ததைப் பார்க்க நேரிட்டது. உடனே அவர்களிடம் மன்னிப்பைக்  கேட்டுக் கொண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடர்கள் ஓடிய திசையில் அவர்கள் விட்டுச் சென்றிருந்த காலடி தளத்தை பின்பற்றிச் சென்று அவர்களுடன் சண்டை இட்டு அவர்களை அழித்து விட்டு பசு மாடுகளை மீட்டு வந்து அந்த பிராமணரிடம் கொடுத்தான்.
அதன் பின் தவறுதலாகவோ, வேண்டும் என்றோ எதுவாக இருந்தாலும், தர்ம நெறியை மீறி விட்டால் அதற்கு பரிகாரம் செய்ய ஒரு வருட தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற விதியின்படி மறு நாளே அரண்மனையை விட்டுக் கிளம்பி ஒரு வருட தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் செல்ல வேண்டி இருந்தது. அந்த தீர்த்த யாத்திரையில்தான் அவர் கிருஷ்ணரின் சகோதரி சுபத்ரையை மணந்து கொண்டதும் நடந்தது. அது தனிக் கதை’ என்று அகஸ்தியர் கூறி முடித்தார்.
…..தொடரும்
முந்தைய பாகங்கள்