ரகுவம்சம்-1
– சாந்திப்பிரியா –
காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி மற்றும் வடமொழியில் காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதார்ஜுனீயம், மாகரின் சிசுபாலவதம், மற்றும் ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் ஆகியவை முக்கியமானவை ஆகும். தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள அந்த ஐந்து நூல்களும் ஐம்பெருங் காப்பியங்கள் என போற்றப்படுகின்றன.

ரகுவம்ச காவியம் என்பது என்ன? ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும். ரகுவம்சத்தின் மூலம் ராமபிரானுக்கு முன் காலத்திலேயே வசிஷ்ட முனிவர், கௌஷக முனிவர் போன்றவர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

வடநாட்டில் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசர். அவர் பிறப்பும், வாழ்கையும் குறித்த செய்திகள் சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகிறது. கல்வி அறிவே இல்லாமலிருந்த காளிதாசர் ஒருநாள் உஜ்ஜயினி காளி தேவியின் கருணை பெற்று முறையாகக் கல்வி கற்றவர்களையும் மீறிய அளவில் சமிஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, நிரரில்லாத அறிவாற்றல் பெற்று, பல அற்புதமான காவியங்களை இயற்றினார். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன.  ரகுவம்சக் காவியத்தை எதற்காக காளிதாசர் எழுதினர் என்பது குறித்த செய்தி இல்லை. சமிஸ்கிருத மொழியில் காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. இதில் இரண்டு ஆச்சர்யமான செய்திகள்  என்னவென்றால் முதலாவதாக காளிதாசர் எழுதியதற்கு முன்னர் இருந்திருந்த ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதைக்  குறித்து  எவருமே எழுதியதாக தெரியவில்லை.  இரண்டாவதாக காளிதாசருக்கு எப்படி ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதும், அவர்களது வரலாறும் தெரிந்திருந்தது என்றும் விளங்கவில்லை.

இதில் இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டில் சமிஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டு உள்ள ரகுவம்சம் எனும் அந்த அற்புதமான காவியத்தை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார்கள் என்பதும், அதை முதன் முதலில் தமிழில் எழுதியவர் இலங்கையை சேர்ந்த மன்னனான அரசகேசி என்பதைக் கேட்கும்போதும் சற்று வியப்பை தரும். அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரிய சக்கரவர்த்தி எனும் பரராஜசேகரன் என்பவரே இந்த நூலை தமிழில் இயற்ற துணையாக இருந்து அதை எழுதியவரை ஊக்குவித்தார் என்றும் கூறுகிறார்கள்.  அது மட்டும் அல்ல தமிழில் அரசகேசரி எழுதிய ரகுவம்சக் காவியம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரை ஆண்டு வந்திருந்த ரகுநாத நாயக்கர் எனும் அரசரின் சபையில்தான் முதன் முதலாக படிக்கப்பட்டு அரங்கேறியது என்றும் ஒரு செய்தி உண்டு.  இதில் இருந்து இன்னொரு விஷயமும் நமக்கு தெளிவாகிறது. இந்தியாவும், இலங்கையும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளன. தென் பகுதியில், இலங்கையையும் சேர்த்தே தமிழ் மொழி சிறப்புற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தமிழில் எழுதப்பட்டு உள்ள பல  நூல்களைக்  காணும்போது தமிழ்நாட்டை விட இலங்கையில் அதிக தமிழ் படைப்புக்கள் படைக்கப்பட்டு உள்ளன, தமிழ்நாட்டை சேர்ந்த பகுதிகள் மற்றும் இலங்கையின் பகுதிகள் இரண்டையுமே தமிழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள் என்பதெல்லாம் கண்ணாடி பிம்பம் போல தெரிகிறது.
ரகுவம்சம் என்பதின் சாரம் என்ன என்றால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே முதலில் அவதரித்த மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை பூலோகத்தில் எடுத்து தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டு இருந்துள்ளது.  அந்த பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரத்தில் பிராமணப் பிரிவை சேர்ந்த பரசுராமனாக அவதரித்து ஷத்திரியர்களைக் கொல்வதும், ஏழாவது அவதாரத்தில் ஷத்திரியப் பிரிவை சேர்ந்த ராமனாக அவதாரம் எடுத்து பிராமணப் பிரிவை சார்ந்த ராவணனைக் கொல்வது,  மற்றும் கௌதம புத்தராக அவதரித்து தாழ்ந்த பிரிவினரையும் மற்ற பிரிவினருக்கு சமனானவர்களாக மாற்றுவது போன்றவை முக்கியமானவை. இதன் மூலம் பிரும்மா படைத்திருந்த நான்கு வர்ணங்களான பிராமணன், ஷத்ரியன், வைசியர், சூத்திரர் என்பதில் எந்தப் பிரிவினருமே உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. அனைவருமே தெய்வ நாடகத்தின் அங்கங்களே என்பதைக் காட்டும் நாடகம் ஆகும் .
நிற்க, மகாவிஷ்ணு அவதரித்த ராமாவதாரத்தை விளக்குவதே ரகுவம்சம் ஆகும். மகாவிஷ்ணு பூலோகத்தில் மானிடப் பிறவியான ராமராக அவதரிக்க எத்தனைப் பிறவிகள் காத்திருக்க வேண்டி இருந்தது, அதற்க்கு முன்னர் என்ன பிரிவுகளை அவர் உருவாக்க வேண்டி இருந்தது என்பதையெல்லாம் மறைமுகமாக விளக்குகிறது ரகுவம்சம். இதில் காளிதாசர் எழுதிய ரகுவம்சம் கதை அல்ல, அதற்கும் மேற்பட்டக் காவியம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தெய்வ அருளைப் பெற்று இருந்த காளிதாசர் அந்த தெய்வங்களின் அவதாரங்களை மனதார அறிந்திருக்கிறார், அதனால்தான் அவரால் ராமருடைய முன்னோர் மற்றும் சந்ததியினரின் வரலாற்றை காவியமாக எழுத முடிந்துள்ளது. காளிதாசர் இல்லை என்றால் ராமருடைய வம்சத்தைப் பற்றியும், அவருடைய அம்சத்தையும் குறித்து யாரால் அறிந்திருக்க முடியும்?

ராமபிரானின் பரம்பரையை அறிந்து கொள்ள ரகுவம்ச காவியத்தைப் படிக்க வேண்டும். ஆனால் ராமாவதாரத்தைப்  படிக்கும் முன்னர் ராமருடைய பரம்பரை அதாவது இஷ்வாகு பரம்பரை  தோன்றிய  துவக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் ஒவ்வொரு மனித அவதாரத்தையும் தெய்வங்கள் எடுத்தபோது என்னென்ன செய்து ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் அவர்கள் அவதரித்தார்கள் என்பதின் அர்த்தம் புரியும்.

விஷ்ணு புராணத்தின்படி  இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி   ஆவார்.   அவருடைய மகள்  அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார். சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன்.  அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதன், வசிஷ்ட முனிவர், சத்தியத்தை காத்த ஹரிச்சந்திரன், முல்லைக்கு தேர் கொடுத்த  சிபி மன்னன் மற்றும்  சாகரா போன்றவர்கள் ஆவர். சூரியனின் மகன் மனுவிற்கு அறுபது மகன்கள் பிறந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளேயே  எழுந்த பகையினால் அவர்களில் ஐம்பது மகன்கள் மாண்டார்கள். மீதி வாழ்ந்திருந்த பத்து மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர்.   இப்படியாக சூரிய வம்சத்தின் முதல் மன்னனாக பூமியிலே த்ரேதா யுகத்தில் சூரியனின் பேரரான இஷ்வாகு  எனப்பட்டவர் ஆட்சியில் அமர்ந்தார்.  அது முதல் இஷ்வாகுவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களை  இஷ்வாகு பரம்பரை என்று அழைத்தார்கள்.  அவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்  இஷ்வாகுவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த பரம்பரையை  அவர் பெயரிலேயே அமைந்த இஷ்வாகு ராஜவம்சம் என்றே அழைத்தார்கள். சராயு நதிக்கரையை ஒட்டி இருந்த கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து  அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு  ஆண்டார்  சூரிய வம்சத்தின் முதல் மன்னனான  இஷ்வாகு .

ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர்  ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த  மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட  திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே இஷ்வாகு என்ற வம்ச ஆட்சி  மறைந்து  அந்த இஷ்வாகு வம்சத்தின் ஒரு பிரிவாக ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.

 

ரகுவம்சத் துவக்கம்: திலீபன் தோன்றிய வரலாறு
ஆதியிலே மனு வம்சத்தை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் மகனும் அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்கியவனுமான  வைவச்சுதன் எனும் அரசன் பூவுலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அது  இஷ்வாகு வம்சம் எனப்பட்டது.  இஷ்வாகு வழி வந்த மன்னர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தாலும், அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைந்ததும், ஆட்சி செய்த அந்த சிலரில் ஒருவராக ஆட்சிக்கு வந்தவர்களில் முக்கியமானவர் திலீபன் எனும் மன்னன் ஆவார்.  காளிதாசர் தனது 30 ஆம் பாடலில்  கூறுகிறார் ”மனு வம்சத்தில் திடீரென பால் கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப் போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்”. திலீபன் பெற்றிருந்த பெருமையைப் போல வேறெந்த அரசரும் பெறவில்லை. அவரைப் படைத்தவர் அவர் தனித்தன்மைக் கொண்ட பெருமை வாய்ந்தவராக விளங்க வேண்டும் என நினைத்தே அவரை தனிப் பிறவியாக படைத்தாரோ என்னவோ! அவருடைய மனைவியின் பெயர் சுடாக்ஷிணா என்பதாகும். அவர்களுக்கு குழந்தை பேறு கிடையாது. இத்தனைக்கும் திலீபன் உன்னதமான புருஷர், சாஸ்திரங்களிலும் புலமை, சாஸ்திர உணர்வுகளுக்கு மரியாதை, இரக்க குணம் , பகைவரானாலும் அதிலும் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் மதிப்பவர் போன்ற பெருமைகளை உள்ளடக்கியவர். மகா பராக்கிரமசாலி, அவரைக் கண்டாலே எதிரிகளும் அடங்குவர் என்பதெல்லாம் அவர் பெற்று இருந்த பெருமைகளாகும். அவருக்கு குல குரு வசிஷ்ட முனிவர் ஆவார்.
தமக்குப் பிறகு இந்த பூமியை ஆள்வதற்கு இஷ்வாகு வம்சத்தினர் யாருமே இல்லாமல் போய் விடுவார்களே என்ற கவலை கொண்ட திலீபன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ராஜகுரு வசிஷ்டரை சந்தித்தார்.  மனைவி அருந்ததியுடன் ஆஸ்ரமத்தில் இருந்த வசிஷ்டர் திலீபனை வாழ்த்தி விட்டு அவர் தன்னைத் தேடி வந்ததின் காரணத்தைக் கேட்க திலீபன் கூறினார் ‘ஸ்வாமி, நீங்களே எமது ராஜகுருவாக இருந்து எமக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் விலக்கி வருகிறீர்கள். அதனால் என்னால் நிம்மதியாக நாட்டை ஆள முடிகிறது. இந்த நாட்டிலே திருடரால் பயமில்லை. தக்க நேரத்திலே பெய்யும் மழையினால் பயிர்களும் சேதம் அடைவதில்லை, அதனால் உணவுப் பஞ்சமும் இல்லை. ஆனால் ஸ்வாமி எனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பதினால் எனக்குப் பின்னர் மூதையோருக்கும், எங்களுக்கும் பிண்டம் கொடுக்க நாதி இல்லை. பிண்டம் கிடைக்காத முன்னோர் கொடுக்கும் சாபம் எம்மை தேவலோகத்திலே கூட வாட்டி வதைக்கும். இஷ்வாகுவின் குலத்தவருக்கு பிண்டம் கொடுக்க முடியாத நிலையை என்மூலம் ஏற்பட  வைக்காதீர்கள். குருவே நாங்கள் அப்படி என்ன பாபம் செய்து விட்டோம்? தானங்கள் தரவில்லையா, தர்மம் செய்யவில்லையா? இல்லை எம் குடியினர் எந்த கஷ்டமும் அடையலாகாது என்பதற்காக நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவில்லையா? நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்’ என அழுது புலம்பினார்கள்.
அதைக் கேட்ட வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கூறினார் ‘திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். ஒரு முறை நீ இந்திரலோகத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் கற்பக மரத்தடியில் காமதேனுப் பசு படுத்திருந்ததைப் பார்த்தாய். ஆனால் எப்போது காமதேனுப் பசுவைப் பார்த்தாலும் அதற்கு வந்தனம் செய்து விட்டுப் சென்ற  நீ  அன்றைய தினம் அதைப் பார்த்தும் கூட அதற்கு வந்தனம் செய்யாமல் அதை அலட்சியப்படுத்துவது போல அவசரம் அவசரமாக கருத்தரிக்க இருந்த உனது  மனைவியைப் பார்க்க சென்றாய். அவள் உனக்கு ஒரு அற்புதமான புத்திரனைப் பெற்றுத் தருவாள் என்ற கனவுடனும் அவசரம் அவசரமாக நீ அரண்மனைக்கு சென்று கொண்டு இருந்தாய்.  தன்னை அவமரியாதை செய்து விட்டுப் போன திலீபனைக் கண்ட காமதேனுப் பசு வருத்தம் அடைந்து ‘அரசனே, என்னை அவமதித்து விட்டு உன் மனைவியைக் காண ஓடிக்கொண்டிருக்கும் உனக்கு என் சந்ததியை நீ வந்தனம் செய்யாதவரை,  எந்த சந்ததியும் கிடைக்காது’ என மனதார ஒரு சாபம் கொடுத்தது.  உன்மனைவி கருத்தரிக்க உள்ளால் என்பதாக எண்ணிக் கொண்டு நீ சென்றாலும், அவள் கருத்தரிக்கவில்லை என்பதைக் கண்டாய். காமதேனுப் பசு கொடுத்த சாபத்தின் விளைவே இன்றுவரை உன் மனைவி கருத்தரிக்கவில்லை’ என்று கூறினார்.
தொடரும்……2