ரகுவின் பிறப்பும் : இந்திரனுடன் யுத்தமும்

அடுத்த சில நாட்களிலேயே சுதக்கிணை கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. அனைவருக்கும் மன்னன் தாராளமாக நன்கொடைகளை தந்து தானங்களும் செய்து அந்த மகிழ்ச்சியை கொண்டாட.  புத்திரன்  பிறந்ததும் நடைபெறும் அனைத்து சடங்குகளும் நடந்து முடிந்த பல காலத்துக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரை சூட்டினார்கள். இவ்வாறாக திலீபனின் பித்ருக்கள் கடனும் தீர்ந்தது.

வயதுக்கு வந்த பிள்ளைக்கு சடங்குகள் முறைப்படி நடந்தேறியன. ரகுவும் கடலைப் போல கல்வி ஆற்றலையும் அறிவையும்  பெற்றுக் கொண்டான். தக்ஷனின்  மகள்கள் எப்படி சந்திரனை மணந்தனவோ அதைப் போல அழகும் ஆற்றலும் பெற்றிருந்த மணப் பெண்களை தனது மகனுக்கு மனைவியாக்கி அழகு பார்த்தார். தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தை தருவதற்கு முன்னர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார்.

அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் காவலாக செல்ல  திலீபன் தன் மகன் ரகுவை நியமித்தார். அந்த யாகத்தைக் கண்டு பொறாமை கொண்ட தேவலோக அதிபதியான இந்திரனும் ரகுவின் கண்களை மாயையால் கட்டி விட்டு அந்த யாகக் குதிரையை கவர்ந்து சென்று விட்டார்.  யாகம் துவங்கி 99 குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. யாகம் நடந்து முடிந்த நிலையில் நூறாவது குதிரையை அழைத்து வர ரகுவை அழைத்தபோது தாம் காவலுக்கு வந்திருந்த யாகக் குதிரையைக் காணோம் என்கின்ற உண்மையை ரகுவும் உணர்ந்தார். ஐயோ மோசம் போய் விட்டோமே, யாகக் குதிரை எங்கே, எங்கே என அலறித் துடித்த ரகுவின் குரலைக் கேட்ட நந்தினி தேவலோகத்தில் இருந்து கீழிறங்கி அங்கே வந்தது. அங்கு வந்து  நின்ற நந்தினி தான் பொழிந்த சிறு நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுமாறு  கூற ரகுவும் அதன் சிறு நீரால் தனது முகத்தைக் கழுவிக் கொண்ட அடுத்த வினாடியே  அவனால்  இந்திரன்  யாகக் குதிரையைக் கவர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் காட்சியை அப்படியே நேரடியாக காண  முடிந்தது.  அவ்வளவுதான் அங்கிருந்தபடியே ரகு குரல் கொடுத்தார்.

இந்திரனைப் பார்த்து ரகு  கூறினார் ‘இந்திரனே யாகங்கள் எங்கு நடந்தாலும் அதன் அவிர்பாகத்தில் முதல் பாகத்தை பெற்றுக் கொள்பவராக உள்ளவர் நீங்கள் என்றல்லவா முனிவர்கள் கூறுவார்கள். அப்படி இருக்கையில் என்னுடைய தந்தை செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் நீங்கள் குதிரையைக் களவாடிக் கொண்டு போகலாமோ?  யாகங்களைக் காப்பவரே யாகத்தை தடுத்து நிறுத்துபவராக இருக்கலாமா?  யாகம் நிற்க நீரே காரணம் ஆயின் உலகத்தினர் உம்மை இகழ மாட்டார்களா?  ஆகவே தேவனே நீர் களவாடிச் சென்றுள்ள குதிரையை விட்டு விட்டு யாகம்  நல்ல முறையில் நடைபெற உதவுங்கள். அப்படி நீங்கள் செய்யாவிடில் நீங்கள் பாபம் செய்தவர் ஆகி விடுவீர்’.

ரகு உரக்கக்  கூறியதை கேட்டபடி சென்று கொண்டு இருந்த இந்திரன் திகைத்து நின்றார். இதென்ன  திலீபனின் மகன் இப்படி தீர்கமாகப் பேசுகிறான். இவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்றெண்ணிய இந்திரன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி நின்று கூறலானார் ‘ஷத்ரிய வம்ச ராஜகுமாரனே, நீ கூறுவது அனைத்துமே உண்மைதான். ஆனால் ஒரு அரசனுக்கு அழகு என்பது என்ன தெரியுமா?  அவரவர் புகழையே அவரவர் தமது செல்வமாகக் கருதுகிறார்கள். அதை இழக்கும்போது அதைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர் தக்க நடவடிக்கையை எடுத்துக் கொள்ளாவிடில் அதன் பின் அவர்கள் ஆண்டால் என்ன ஆட்சியில் இல்லாவிட்டால் என்ன? உன்னுடைய தந்தை செய்யும் இந்த யாகமானது நடந்து முடிந்தால் என்னுடைய செல்வாக்கை மறைத்து விடும். ஆகவே நான் என்னுடைய  நிலைமையில் இருந்து இதை தடுத்தேன். மகனே, மஹாவிஷ்ணுவை மட்டுமே புருஷோத்தமா என்பார்கள், சிவபெருமானை திரயம்பகா என்பார்கள். அதை போலவேதான் என்னை சடக்ருதா என்பார்கள். சடக்ருதாவான என்னை அழிக்கும் விதத்தில்  இந்த  யாகம் நடப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்?  ஆகவே மைந்தனே மீண்டும் கூறுகிறேன், காது கொடுத்துக் கேள்.  வசிஷ்டரின் பசுவை கவர்ந்து சென்ற கபில மகரிஷியைப் போல  நான்  குதிரையை கவர்ந்து செல்கிறேன். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் உள்ளது. என் புகழ் அழிவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை  தடுக்கவே இந்த காரியத்தை செய்தேன். ஆகவே கபில மகரிஷியை பின் தொடர்ந்து சென்று அழிந்து போன சாகராவின் மகன்களைப் போல  நீயும் என் பின்னே வந்து அழிந்து விடாதே’ என்று கூற சற்றும் பயமில்லாத ரகு கூறினார்.

‘இந்திரனே, நீ அந்த குதிரையைக் கவர்ந்து செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். நீ வீரனாக இருந்தால் எடு உன் ஆயுதங்களை. என்னுடன் போரிட்டு என்னை வீழ்த்தி விட்டு  குதிரையைக்  கொண்டு செல்’ என்று கூறியபடி தன்னுடைய  உறையில் இருந்து அம்பை எடுத்து இந்திரனை நோக்கி வீசத் தயாரானார்.  இந்திரனும் ரகுவுடன் போர் புரிய தயாரானார். இருவரின் படைகளும் சளைக்காமல் கடுமையாக யுத்தம் செய்து கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத்  தாக்கிக் கொண்டார்கள்.  ரகு மீண்டும் மீண்டும் வித விதமான அம்புகளை ஏவி இந்திரனை நிலை குலைய வைத்தார்.  இந்திரன் பவனி வந்த ஐராவத யானையே கதிகலங்கும் வண்ணம்  போர் தொடர்ந்தது. இந்திரனும் ரகுவை ரத்தமயமாக்கி கீழே விழ வைத்தார்.  ஆனாலும் சளைக்காத ரகு யுத்தத்தைத் தொடர்ந்தவண்ணம் இருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.  இந்திரனும் களைத்துப் போனார்.

அதைக் கண்ட ரகு இந்திரனை நோக்கிக் கூறினார் ‘தேவலோக அதிபதியே, இன்னும்  உன்னால் என் குதிரையை கவர்ந்து கொண்டு செல்ல   முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா ? என்னைக் கொன்றால் ஒழிய உன்னால் குதிரையை எடுத்துச் செல்ல முடியாது.   எனக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். என் தந்தை செய்யும் யாகத்தின் பலனை அவர் அடைய வேண்டும்.  அதற்கு அந்தக் குதிரை தேவை. அதை கொடுக்காமல் உன்னை தேவலோகத்துக்கு செல்ல விடமாட்டேன். ஆனால் அதற்கு மாற்றாக இதற்கொரு உபாயம் உள்ளது. அந்த குதிரையை விட மனமில்லை என்றால் என்னுடைய தந்தை செய்யும் யாகத்தின் முழுப் பலனையும் அவர் அடையட்டும்   என சத்தியம் செய்து வாக்கு கொடுத்து  விட்டுச் செல். நானும் திரும்பிச் சென்று விடுவேன். நீயும் யுத்தம் செய்யத் தேவை இல்லை’.

அதைக் கேட்ட இந்திரனும் இனிமேலும் தன்னால் சண்டையைத் தொடர்ந்து  கொண்டு  ரகுவை தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்ததினால் அவன் கேட்ட வரத்தை அப்படியே தருவதாக வாக்குறுதி தந்து சத்தியமும்  செய்தபின் தேவலோகத்துக்கு திரும்பிச் சென்று விட, ரகுவும் தனது அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார்.  ரணகளத்தோடு வந்த மகனை ஆரத் தழுவி வரவேற்ற திலீபன் நடந்த அனைத்தையும் கேட்டறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டு  அழுதார்.  மீதி இருந்த யாகத்தைத் தொடர்ந்தார். யாகம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் சில நாட்கள் பொறுத்து ரகுவிடம் தனது ராஜ்யத்தை தந்து விட்டு தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி இந்த உலகை விட்டு மறைந்தார்.

ராகு ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்

ரகு எனும் ரகு ராமன் ராஜ்ய பதவியை ஏற்றுக் கொண்டு அரச பதவியில் அமர்ந்ததும் அவர் மன்னன் ஆக வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் மற்றவர்களும் மனதார மகிழ்ச்சி அடைந்தாலும் அக்கம் பக்கத்தில் இருந்த அரசர்கள் பொறாமை கொண்டார்கள்.  ரகுவின் ஆட்சியில் நேர்மை இருந்தது,  பட்சபாதம் இல்லை.  அவருடைய தந்தையை விட ஒரு படி மேலாகவே அவர் நியாயத்துடன் ஆட்சி புரிந்ததினால் அவர் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது.  சூரிய சந்திரன்களுக்கு இணையானவராகவே அவர்  போற்றப்பட்டார். விரிந்த கண்களும், திறந்திருந்த காதும் இருக்க வேண்டும் என்பது போல அவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்திருந்தார். கடல் எத்தனைதான் விரிந்துப் படர்ந்திருந்தாலும்   தன்னை  நோக்கி  வரும் ஆற்று  நீரையும்  கடல் ஒதுக்குவதில்லை.  அது  போலவேதான்  நாட்டு  நலனுக்கு தேவை நிதி என்பதினால் சின்ன  அரசனோ,  பெரிய  அரசனோ, யாராக இருந்தாலும் அனைவர் மீதும் படையெடுத்துச் சென்று அனைவரையும் வென்று  அந்த நாட்டில் இருந்து  தேவையான செல்வத்தை கொண்டு வந்து தன் நாட்டுக்கு நிதி  சேர்த்தான். அடுத்த வேலையாக அரண்மனை காவலை அதிகரித்தான்.  நாட்டு எல்லைகளை பலப்படுத்தினான். வசந்த காலம் துவங்க, தந்தையின் காலத்தில் நடந்து முடிந்திருந்த யாகத்தினால் கிடைத்த சக்தியையும் கொண்டு  நான்கு திசைகளையும் நோக்கி பெரும் படையுடன் சென்றான்.

திக்விஜயம் சென்று அந்நிய அரசர்கள் மீது படை எடுக்க முடிவு செய்ததும் தனது மந்திரிகளின் ஆலோசனையைக் கேட்டார். அவர்களும் ‘மன்னரே, அனைத்து குணங்களையும்  பெற்றுள்ள அரசனால் அடைய முடியாத பூமிதான் எது இருக்க முடியும்? சத்ருக்களை வேரோடு அழிக்காதவரை அரசர்கள் நிம்மதியாக நாடாள முடியாது. மேலும் அனைத்து திக்குக்களிலும் சென்று போர் புரிந்து  திரவியம் ஈட்ட வேண்டும். கடலே கூட ஆற்று நீரை விழுங்காமல் இருப்பது இல்லை. ஆகவே நீங்கள் தயங்காதீர்கள். திக்விஜயம் சென்று வெற்றியுடன் வந்து சேருங்கள்’  என்று அரசருக்கு தைரியம்  கொடுத்தார்கள்.

வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து அதிர்கிறதோ எனும் அளவுக்கு அவன் படையில் இருந்த யானைகளும், குதிரைகளும் பூமி அதிர்ந்தபடி முன்னே செல்ல, அவற்றின் கால் அழுத்தங்களினால்   பூமியில் இருந்த  மண் புழுதி  மேலெழுந்து  சென்றது.  பகீரதனின் முயற்சியால் சிவபெருமானின் தலையில்  இருந்து கங்கை நீர் சீறிப் பாய்ந்து பூமியை நோக்கி வந்தது போல அவரது சேனை அனைத்து திசைகளையும் நோக்கி சீறிப் பாய்ந்தபடி நாட்டை விரிவாக்கிக் கொண்டே செல்லத் துவங்கியது.

வங்க மன்னர்கள் வீழ்ந்தார்கள், கலிங்க மன்னர்கள் சாய்ந்தார்கள். மன்னனின் படையினர் மகேந்திர மலையைத் தாண்டி செல்ல, அங்கிருந்த மன்னர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்தார்கள்.  ஆனால் மன்னர்களை சிறை பிடித்தப் பின் அந்தந்த மன்னர்கள் தாமே தமது செல்வங்களை ரகு ராமனுக்கு தந்து விட அந்த மன்னன்களை விடுவித்து  விட்டு அவர்கள்  தந்த  செல்வத்தை மட்டுமே தன் நாட்டுக்கு கொண்டு வந்தார். தென் பகுதியில் காவேரிக் கரைத் தாண்டி அனைவரையும் வென்று வந்தார் மன்னன் ரகு ராமன்.

பாரசீகம் முதல் காஷ்மீர் வரை அனைத்து மன்னர்கள் மற்றும்  நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  மன்னர்களையும்  தோற்கடித்தப் பின்னர் நாடு திரும்பியவர் விஸ்வஜித் யாகத்தையும் செய்து தாராளமாக தானங்களையும்  கொடுத்தார். இப்படியாக  நான்கு திசைகளிலும் சென்று அனைத்து மன்னர்களையும்  வென்று தாம் கொண்டு வந்திருந்த திரவியங்கள் அனைத்தையும் மக்களுக்கு அவ்வப்போது தானமாகவே தந்து விட்ட மன்னனுக்கு யாக முடிவில் மண் பாத்திரம் மட்டுமே மிஞ்சியது.  இனியும் தன்னால் யாருக்கும் எந்த தானமும்  தர முடியாது எனும் அளவிற்கு அரச கஜானாவின் செல்வம் குறைந்தது.  இனி யார் வந்து கேட்டாலும் தானம் தர இயலாதவகையில் அவர் நிலைமை மோசம் ஆயிற்று. யாகத்தை நடத்தி முடித்த களைப்பிலும்,   தானங்கள் கொடுத்து அனைத்து திரவியங்களையும் இழந்து விட்டு ஏதுமற்றவனாய் கலங்கி நின்ற மனதோடும் இருந்த நிலையில்   அவனைத் தேடி கௌற்ச முனிவர் என்பவர் வந்தார்.

 கௌற்ச முனிவர் யாசகம் கேட்டு வந்த  கதை

வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌற்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியபோது  கௌற்ச முனிவர் அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாக பெற்றுக் கொண்டு செல்லலாம் என வந்திருந்தார். ஆனால் அனைத்து செல்வத்தையும் தானங்களைத் தந்தே இழந்து விட்டு, இனி யார் வந்து தானம் கேட்டாலும் கொடுக்க கையில் எந்த செல்வமும் இல்லாமல் நின்றிருந்த வேளையில்  முனிவர் மன்னனிடம் யாசகம் பெற வந்தார். அந்த முனிவர் வந்த நேரத்திலோ ரகு ராமனிடம் மண் பாண்டத்தை  தவிர வேறு எதுவுமே கொடுப்பதற்கு இல்லை. இருந்த அனைத்து தங்கக் குடங்களையும் தானமாக தந்தாகி விட்டது.  இவருக்கு எதைக் கொடுப்பது என மனம் தடுமாறினாலும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்ப விருப்பம் இன்றி அவரை அமரச் சொல்லி அர்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானார். ‘முனிவர் பெருமானே, தங்களுடைய குருநாதர் வரதந்து முனிவர் நலமாக இருக்கிறாரா. அவருக்கும் என் வந்தனங்கள்’. என்று கூறியவாறு வந்தவரை உபசரித்தார்.  பேச்சை வளர்த்தபடி ‘ஆஸ்ரமத்தில் மரங்கள் வாடாமல் உள்ளனவா? மாடுகளும் மான்களும் அவற்றின் கன்றுகளும்  இடையூறு இல்லாமல் உலாவுகின்றனவா?’ என்றெல்லாம் எதை எதையோ கேட்டு வந்த முனிவரை அன்புடன் உபசரித்தார்.

அதைக் கேட்ட கௌஸ்ச் முனிவர் கூறினார் ‘மன்னா, உனது ஆட்சியிலே என் குருநாதர் இருப்பிடத்தில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும்  உள்ள மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல்தான் வாழ்கிறார்கள். அரசனே, முன்னோர்களிடம் இருந்துதான் ஒருவர்  வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தையும், பக்தியையும்  கற்றறிய வேண்டும்.  அப்படிக் கற்ற பின் அதை பிழறாமல் தமது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். ஆனால் நீயோ உன் முன்னோர்களை அனைத்து விதத்திலும் மிஞ்சி விட்டாய் என்பதைக் காணவே ஆனந்தமாக உள்ளது.  அதே சமயத்தில் எனக்கு  போதாத காலமோ என்னவோ நான் உன்னிடம் வந்துள்ள நேரம் காலம் கடந்து விட்ட நேரமாக உள்ளதாகவே உணர்கிறேன். வேள்வி செய்து, அதில்  உன்னிடம் இருந்த அனைத்தையுமே அனைவருக்கும் தானம் செய்து விட்டு இப்போது நொடிந்து விட்டாய். அதைக் கேட்க  எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் நீ நலமாக இருக்க வேண்டும். உனக்கு மங்களம் உண்டாகட்டும்’.

இப்படியாக கூறி விட்டு மன்னரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய  கௌஸ்ச் முனிவரை தடுத்து நிறுத்தி ரகு ராமன் கேட்டார் ‘மரியாதைக்குரிய முனிவரே நான் மனம் நொடிந்து இருந்ததினால் நீங்கள் வந்த விவரத்தைக் கேட்காமல்  ஏதேதோ பேசிக் கொண்டு இருந்து விட்டேன். என்னை தாயைக் கூர்ந்து மன்னித்து விடுங்கள். நீங்கள் வந்த காரியம் யாது? அதை கூறுவீர்களா?’ என்று கேட்க, சற்றே சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர்  கௌற்ச முனிவர் கூறினார் ‘மன்னா எனக்கே நான் வந்த விவரத்தைக் கூற சங்கடமாக உள்ளது.  நான் வரந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். அவரிடம் இருந்து பதினான்கு வித்தைகள், நான்கு வேதங்கள், அனைத்து புராணங்கள், மீமாம்சை, தருமசாஸ்திரம்  என அனைத்தையும்  கற்றறிந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கி சில காலமானதுமே அவருக்கான  குரு தட்க்ஷணை என்ன தர வேண்டும் என்று கேட்டபோது நான் அவருக்கு செய்யும் பணி விடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்  மட்டுமே குரு தட்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார்.

ஆனாலும் நான் அவரிடம் இருந்து அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து போகும் முன் மீண்டும் அவருக்கு நான் என்ன தட்ஷணைத் தர வேண்டும் என்று கேட்க அவரும் என் ஏழ்மை நிலையையும் பார்க்காமல் ‘நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என  பதினான்கு வித்தைகளுக்கு தட்க்ஷணையாக பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா’ என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நான் அதற்கு எங்கு போவது எனத் தெரியாமல் உம்மிடம் வந்து உம்மைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என இங்கு வந்ததும்தான் உன்னுடைய அனைத்துச் செல்வத்தையும் நீயும் துறந்து விட்டு மண் பாண்டத்தைக் கொண்டு  எனக்கு அர்க்கியம் தரும் நிலையில் உள்ளதைக் காண நேரிட்டது. ஆகவே மன்னா,  இதை எண்ணி நீ யோசனை செய்ய வேண்டாம்.  இங்கு வந்து உன் நிலையைக் கண்டதும் நாம் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என என் மனதில் யோசனை தோன்றியது. ஆகவே வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்கலாம் எனக் கிளம்பினேன்’ என்று கூறி விட்டு கிளம்பிய  முனிவரை மீண்டும்  தடுத்து நிறுத்தினார்  ரகு ராமன். அவரிடம் கூறினார் ‘மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்ட பின்  அதை பெற்றுக் கொள்ளாமல் வெறும் கையோடு  போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்லுங்கள். நான் எங்கிருந்தாவது நீங்கள் கேட்ட தானத்தை  கொண்டு வந்து தருகிறேன்’ என்று கூறிவிட்டு  அவரை  ஒய்வு எடுக்குமாறு கூறினார்.

இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்த மன்னன் மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டு வரலாம் என்ற நினைப்புடன், காலைப் பொழுதை எதிர்பார்த்தபடி  பல ஆயுதங்களையும் இரவிலேயே எடுத்து வைத்துக் கொண்டு தனது தேரில் அமர்ந்திருந்தவர் அப்படியே தன்னை மறந்து  உறங்கி விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி ‘மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிறம்பிக்  கிடக்கின்றன’ என்ற சேதியைக் கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்று பார்க்க அவர் முன் வந்த குபேரன்  ‘மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?’ எனக் கேட்க மன்னனும்  ‘நன்றி குபேரா, நன்றி’ எனக் கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த  கௌஸ்ச் முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் ‘மன்னா நான் கேட்டுப் பெற வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொண்டு சென்று அவற்றை எடுத்துச் சென்று எங்கு வைக்க முடியும்?  நீ வாக்கு தவறாதவன் என்பதை உணர்கிறேன். ஆகவே எனக்கு குரு தட்ஷணைத் தருவதற்கு பதினான்கு கோடி தங்க நாணயங்கள் மட்டும் போதும். அதற்கு மேல் ஒரு நாணயம் கூட வேண்டாம்.   நீ நீடூழி வாழ்ந்தவண்ணம் இருந்து கொண்டு, உன் ராஜ்யத்தை தொடர்ந்து  ஆள்வதற்கு நல்ல மகன் பேறு பெற்றுக் கொண்டு வாழ உனக்கு  என் ஆசிகள்’ என மன்னனை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்’ . நாளடைவில்  ரகு ராமனுக்கும்  ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.

அயன் சாபம் தீர்த்த கதை

அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தவனாக இருந்தான்.  அப்போது விதர்ப தேசத்தை சேர்ந்த பேரரசன் ஒருவன் தனது தங்கையான இந்துமதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ஸ்யம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்கு பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.  அதில் கலந்து கொள்ள ரகுராமனின் மகன் அயனுக்கும் அழைப்பு  விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அயனும் அந்த ஸ்யம்வரத்தில் கலந்து கொள்ள நான்கு வகைப் படைகளுடன் விதர்ப தேசத்துக்கு கிளம்பிச் சென்றார். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியவண்ணம் இருந்தது.  நதிக்கரையை அவர்கள் அடைய இன்னும் சில கஜ தூரமே இருந்தது. அந்த நேரத்தில் நதியின் அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி  ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அது அருகில்  வந்து விட்டால் ஒரு சிலருக்காவது மரணம்  நிச்சயம் என்பதை உணர்ந்த மன்னன் அயனும் சற்றும் தயங்காமல் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப் பொட்டில் அதை செலுத்தினார்.  அந்த அம்பும் அந்த யானையின் நெற்றியை துளைத்துக் கொண்டு அதன் உடலில் புகுந்ததும், அந்த யானை மறைந்து போனது. யானைக்கு பதில் அங்கு ஒரு அழகிய மனிதர் நின்று இருந்தார்.  அடுத்த வினாடி அவர் மன்னரை நோக்கி நடந்து வந்தார். அப்படியே மன்னனின் கால்களில் விழுந்து வணங்கினார்.

மன்னர் காலில் விழுந்து வணங்கியவர் அவரிடம் கூறினார் ‘மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு காலத்தில் என்னுடைய தந்தையான பிரியதர்சனன் என்பவர் மாதங்க முனிவரின் சாபத்தைப் பெற்றார். அதன் காரணமாக நான் யானை உருவில் இத்தனைக் காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவரிடம் இருந்து சாபத்தைப் பெற்று யானை உருவை அடைந்த எனக்கு ஆறுதலாக மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் ‘பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும். அவர் உன் மீது அம்பை  எய்தும் அளவுக்கு நீ அவரைக் கோபப்பட வைக்க வேண்டும். அப்போது அவர் விடுக்கும் அம்பு  உன் உடலில் புகுந்ததும் உனக்கு சாப விமோசனம் கிடைத்து நீ பழைய உருவை அடைவாய்’.

பிரியம்வதன் தொடர்ந்து கூறலானார் ‘மன்னா, நானும் இத்தனைக் காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக் கிடந்தேன்.  மாதங்க முனிவர் கூறியது போல இன்று உன்னால் எனக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. அதற்கு மிக்க நன்றி.  மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்கு தக்க நேரத்தில் உதவிடும்’  என்று கூறிய பின் அவருக்கு ஒரு பாணத்தை தந்து விட்டுக் கூறினார் ‘மன்னா, நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்த பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. அது இரண்டு மந்திரங்களைக் கொண்டது. இதை எய்யும்போது ஒரு மந்திரத்தையும், அதை திரும்ப அழைக்கும்போது இன்னொரு மந்திரத்தையும் ஓத வேண்டும். இதற்கு அழிவே கிடையாது.  இதை பயன்படுத்தினால் எதிரிகளை இந்த பாணம்  முற்றிலும் அழிக்கும். உனக்கும் வெற்றியைக்  கொடுக்கும்’. அயனும் அந்த கந்தர்வ புருஷன் கொடுத்த சம்மோகனம் எனும் படையை உள்ளடக்கிய பாணத்தை மனதார பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறிய பின் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றார்.

நகர் பகுதியை அயன் வந்தடைந்து விட்ட செய்தியைக் கேட்ட விதர்ப அரசனும் நகர் எல்லைக்கே வந்து அவரை வரவேற்று சபைக்கு அழைத்துச் சென்றார். அங்கோ அரண்மனையில் ஸ்வயம்வரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருந்த நிலையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து கூடி அவரவர் ஆசனங்களில் அமர்ந்து கொண்டு இருக்க, அங்கு போய் சேர்ந்த அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம்

ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலை வழியே பார்த்துக் கொண்டே நடந்து செல்கையில் அவள் கூட இருந்த அவளது தோழியோ அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமைப் பெருமைகளைக் கூறியவாறு அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபடி ஆவலுடன் கூடவே சென்ற வண்ணம் இருந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜ குமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்து கொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சி செய்தார்கள்.

ஒரு அரசன் தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரை சுற்றி சுற்றி சுயற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தபடி இருக்க, இன்னொருவன் தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்ட தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை   (ஒரு பக்க சட்டை மீது போர்த்திக்  கொள்ளும் துணி)  அவ்வபோது கையில் எடுத்தெடுத்து மீண்டும்  தன்னுடைய தோள் மீது போர்த்திக் கொண்டான்.  அதே போல தனது செல்வத்தைக்  கட்ட எண்ணிய இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்து தனது தோள்  மீது போட்டுக் கொண்டார்.  ஒருவனைக் காட்டி ‘இந்துமதி, இந்த அரசன் மகததேசக்காரன். எதிரிகளையும் மன்னிப்பவர், அடைக்கலம் தேடி வருபவற்கு அடைக்கலம் தருபவர், அனைத்து பிரஜைகளிடமும் அன்பு காட்டுபவர்’ என்று கூற அவளும் அடுத்தவர் என்பாள் ‘அடுத்தவரைக் குறித்துக் கூறுகையில் ‘இந்துமதி இவர் அழகில் மயங்காத தேவலோகப் பெண்கள் கூடாக கிடையாது. இவர் லஷ்மி மற்றும் சரஸ்வதியின் பூரண அருளை பெற்றவர்’ என்று கூறி முடிக்கும் முன்னரே அடுத்தவர் என்பாள். அவர்களை எல்லாம் கடந்து சென்றபோது இந்துமதியுடன் சென்ற தோழியோ சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் அவரவர் அருமை பெருமைகளை அவளுக்கு கூறிக் கொண்டே சென்றாள்.  இப்படியாக அவரவர்   இந்துமதியின் கவனத்தைக் கவர பல்வேறு சேஷ்டைகளை   செய்தபடி இருந்தாலும், அவர்களில் மாறுபட்டு அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவர் அருகில் சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின.  அவரது அமைதியான, அடக்கமான முகமே அவர் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்க அவள் கூடச் சென்ற தோழியோ,  ‘ராஜகுமாரி அவர்களே மேலே செல்லலாமா’ என இந்துமதியை கேட்க அயன் முன் நின்று கொண்டிருந்த இந்துமதியோ  சற்றும் தயங்காமல் தனது கையில் இருந்த மாலையை அவர் கழுத்திலே போட பெரும் கரக ஒலி எழுப்பி அனைவரும் அதை வரவேற்றனர்.

தனது மகள் தேர்வு செய்த ராஜகுமாரனை நோக்கி ஓடோடி வந்த அரசரும், அவரை ஆரத் தழுவி, தன்னுடன் தனது இருக்கைக்கு அழைத்துச் சென்று அவரைக் குறித்த அனைத்து விவரத்தையும் விலாவாரியாக சபையில்  எடுத்துரைத்தப் பின் அனைவர் முன்னிலையிலும் தனது மகளுடன் அயனுக்கு திருமண நிச்சயம் செய்வித்தார். அங்கு அந்த சடங்கை செய்ய தயாராக அமர்ந்திருந்த புரோகிதர்கள் ஹோமக் கிரியை மூட்டி, அக்னி  சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்வித்தார்.  தனது சுற்றார்களுடன் விரைவில் மீண்டும் அங்கு வருவதாக உறுதி கொடுத்து விட்டு இந்துமதியை அழைத்துக் கொண்டு அயன் தனது நாட்டுக்கு திரும்பலானார்.

இந்துமதியின் தந்தையும் அயனுக்கு அநேக பொருட்களையும், பொன்னையும் தந்து அவருடன் மூன்று நாட்கள் அதாவது பாதி தூரம்வரை அவருடன் பயணித்தப் பின்னர் நாடு திரும்பினார். அதே நேரத்தில் இந்துமதி தமக்கு கிடைக்காத கோபத்தில் வழியில் படையினரோடு பதுங்கி இருந்த பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள்.  நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தம்மை தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் மூர்கத்தனமாக  அயன் தாக்கத் துவங்கினான். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியதர்சன் தனக்கு பாதுகாப்பாக இருக்கக் கொடுத்த  விசேஷ பாணம் நினைவுக்கு வர அதை அவன் எதிரிகள் மீது பிரயோகித்தான். அவ்வளவுதான் அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்று குவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினார்.

அதற்கு இடையில் தனது மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகு ராமனும் மனம் மகிழ்ந்து அவர் வரவை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.  அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரைக் வணங்கித் துதிக்க அவர்களும் அவனுக்கு அளவற்ற ஆசிர்வாதம்  .செய்தார்கள். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகு ராமனும் முக்தி தேடி வனத்துக்கு சென்று விட்டார்.  அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தார். மக்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க அயனும் அவ்வப்போது தமது பகைவர்களை ஒடுக்கி வந்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் பிராணனை அடக்கி, யோகங்கள் செய்து  சித்திகள் பலவற்றையும் பெற்றார். தந்தை வழி பிழறாமல் நல்ல ஆட்சி தந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் அவரது தந்தை ரகு ராமனும் தமது யோக சக்தியைக் கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக் கொண்டார் என்ற செய்தி கேட்டு மிக்க துக்கம் அடைந்தார். தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை செய்து முடித்தப் பின் மீண்டும் ஆட்சியிலே கவனத்தை செலுத்தலானார். இடையிலே அவருக்கு சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தார்.  பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்கு தசரதன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்

அயன் மரணம் : தசரதன் அரியணை ஏறினார்  

அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும் கொடுத்ததில்லை.  அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி பூக்களைப் பறித்தபடி ஓடியாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக் கொண்டு இருக்கையில் வானத்து வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவருடைய வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. விழுந்த மாலை இந்துமதியின் மார் மீது வந்து விழ அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்த பின் அப்படியே பூமியிலே வீழ்ந்து மாண்டாள். அதைக் கண்ட அயனும் அப்படியே மூர்ச்சை அடைந்து விழுந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். அன்னமும், ஆகாயத்திலே பறந்து சென்ற கிளிகளும் கூட அழுது புலம்பின. சற்று நேரத்தில் அயன் மட்டும் கண் விழித்தார். இறந்து கிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திக்கிட்டுப் போய் துக்கம் தீராமல் அழுது புலம்பலானார்.

‘தேவி, என்னே விதி என்பது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ…..தெரியவில்லையே….உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே……பிரியமானவளே ….. நாம்  எந்த பாவமும் செய்யவில்லையே… அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்…இப்படி என்னை தனியே தவிக்க விட்டுச் சென்று விட்டாயே…இது நீதியாகுமா. இது நியாயமா……உனக்கே இது தகுமா? தேவி….உயிர் பிழைத்து எழுந்து வந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம்   மீது   உன்னைப் பொசுக்க போடப்படும்  கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?’  என்றெல்லாம் கூறிக் கூறி கதறி அழுத வண்ணம் இருந்தார். அவரை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் உடலையும் எடுத்துச் சென்று பத்து நாட்கள் இறுதிக் காரியங்களை  முறையோடு செய்து முடித்தார்கள்.

இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறிய பின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள்  மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள் ‘மன்னா அனைத்து முக்கால சம்பவங்களை ஞானக் கண் கொண்டு நோக்கும் எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்கு சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்து போன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக  இருந்தாள். அவள் இந்திரனின் சபையில்  ஒரு அப்ஸரை ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து  முடிந்து விட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகி விடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணை எனும் தனது ராஜசபை அப்ஸரையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் திருணவின்து எனும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம் கொண்டு அவளை மானிடப் பெண்ணாக பிறவி எடுத்து பூமியிலேயே சென்று  வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு தான் அறியாமையினால் செய்து விட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கோரினாள்.  தான் வேண்டும் என்றே எந்த தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் திருணவின்துவும் அவள் மீது இரக்கப்பட்டு  ‘அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின் மீது  கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு  மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திர லோகத்துக்கு சென்று விடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுற வேண்டும்’ என்று அவளுக்கு தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.

வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள் ‘மன்னா இதனால்தான் பூர்வ  ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்கு திரும்பச் சென்று விட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வர மாட்டாள் எனும் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டும். மன்னா, பிறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம். நீயும் அவளோடு சேர்ந்து மரணம் அடைய விரும்பினாலும் நீ அவளோடு ஒன்றாக சேர்ந்து போக முடியாது. அவளது ஆத்மா வேறு, உனது ஆத்மா வேறு. இருவரின் பயணப் பாதைகளும் வேறு வேறாகவே இருக்கும். அறிஞ்சர்கள்  இறந்தவர்களை அப்போதே மறந்து விடுவார்கள், மூடர்கள்தான் இறந்தவர்களைக் குறித்து கவலைப்படுவார்கள். ஆகவே நடப்பவைகளை கர்ம வினைப் பயன் என்று எண்ணிக் கொண்டு, மனதை தேற்றிக் கொண்டு, ராஜ்யத்தை நல்ல முறையில் பரிபாலனம் செய்து கொண்டு, உன் கடமையை வழுவாமல் செய்து வா. அதுவே நீ பிறந்த இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் செயலாக இருக்கும்’ என்று கூறி விட்டு சென்று விட்டார்கள்.

ஆனாலும் அயனினால்  தனது மனைவியாக இருந்த இந்துமதியை மறக்க முடியவில்லை. அவர்  மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே  உருமாறிக்  கொண்டு  இருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரைக் காத்திருந்தார்.   தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவரை அரியணையில் அமர்த்தி விட்டு  ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்து விட்டு  பல காலம் உபவாசம் இருந்து ஒருநாள் சராயு நதிக்கரைக்குச் சென்று சராயு நதியில் விழுந்து உயிரைத் துறந்து கொண்டார்.

தசரதன் பெற்ற சாபம்

அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. அவரும் தனது தந்தையைப் போல பல நாடுகள் மீதும் படையெடுத்து சென்று தனது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவர் மீது பெரும்  மதிப்பு வைத்து இருந்தார்கள். பல விஷயங்களிலும் அவர்  சிறந்து விளங்கினார்.

அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் அவர் கோசல நாட்டு மன்னனின் மகளான கௌசல்யயையும், கேயதேசத்து அரசனின் மகளான கைகேயி மற்றும் மகர தேசத்து மன்னனின் மகளான சுமித்திரையும் மணந்து கொண்டார்.  இப்படியாக மூன்று மனைவிகளுடனும் ஆனந்தமான வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கையில் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

வசந்த காலத்தில் பொதுவாக மன்னர்கள் வன வேட்டைக்கு செல்வார்கள். அப்போதுதான் காட்டில்  வன விலங்குகள் ஓடியாடித் திரியும். உணவுக்கு இறை தேடி அங்கும் இங்கும் அலையும். செடி கொடிகள் அற்புத பச்சை நிறத்தில் மனதுக்கு இனிமையாக காட்சி தரும். அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியான வசந்த காலம் வந்தபோது தசரத மன்னனும் தனது சிறு சேனையுடன், வன நாய்கள், மிருகத்தைக் கட்டும் கயிறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வனத்துக்கு வேட்டையாடச் சென்றார். வன தேவதை தசரதனை மனதார வரவேற்றாள். வனத்துக்கு வேட்டைக்கு சென்ற தசரதன் பல மிருகங்களைக் கொன்றார். மறைந்து இருந்த மிருகங்களை தூரத்ததில் இருந்தே பாணம் விட்டு அழித்தார். மதியம் வேட்டையாடி களைப்புற்றவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது காத தூரத்தில் இருந்த நதி ஒன்றில் மிருகம்  ஒன்று களுக், களுக் என்று நீர் அருந்துவது போல சப்தம் கேட்டது. ஆனால் அது யானை அல்ல. ஒரு குருட்டு பெற்றோர்களின் புதல்வர் அவர்களுக்காக தனது குடத்தில் நீரை மொண்டு கொண்டு இருந்தபோது எழுந்த சப்தம் ஆகும்.

தசரதர் வில் வித்தையில் சிறந்தவர். ஓசை வரும் திசையைக் கண்டே துல்லியமாக அந்த ஓசை வரும் இடத்திற்கு அம்பை ஏவும் வல்லமைக் கொண்டவர். ஆகவே ஓசை வந்த திசையில் அம்பை ஏத்தினார்…..அந்தோ பரிதாபம். அந்த அம்பும் அங்கிருந்த குருட்டு பெற்றோர்களின் புதல்வர் உடலிலே தைத்து அவரை கீழே வீழ்த்த, ஐயோ என அலறினான் அந்த சிறுவன். ஒ ….மனிதக் குரல் ஒலிக்கிறதே…ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ ….வந்த குரல்  மனித ஒலியாக இருக்குமா என திடுக்கிட்டு தசரதர் ஓசை வந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்க அங்கே தான் எய்த அம்பினால் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்டார். தசரதரைக் கண்ட சிறுவனோ இருகரமும் கூப்பி ‘மன்னா சற்று தூரத்தில் தோள் கூடையில் சுமந்து வந்துள்ள கண் பார்வை அற்ற என்னுடைய பெற்றோர்களை விட்டு விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் தாகத்தினால் தவித்தபடி இருப்பார்கள். ஆகவே தயவு செய்து உடனடியாக இந்த குடத்தில் உள்ள நீரைக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் தாகத்தைத் தணிக்க உதவுங்கள்’ என்று கூறி விட்டு அப்படியே மரணம் அடைந்து விழுந்தான்.

என்ன செய்வதென்று தெரியாத தசரதனும் இறந்து கிடந்த சிறுவனையும், குடத்து நீரையும் எடுத்துக் கொண்டு போய் கண் பார்வை அற்ற கிழவர்களின் அருகில் சென்று முதலில் நடந்த எதைப் பற்றியும் கூறாமல் நீர் குடத்தைக் கொடுத்து அதை அருந்துமாறு கூறினார். ஆனால் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்களோ தமது புதல்வன் வராமல் வேறு யாரோ வந்தல்லவா தண்ணீரைத் தருகிறார் ….நமது புதல்வனுக்கு என்ன ஆயிற்று என தவித்தபடி தமது புதல்வனின் பெயரைக் கூறி அவனை அழைத்தார்கள். அவன் வந்து விடுவான் என்றும், அதற்குள் நீரை அருந்துமாறு தசரதன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சந்தேகம் கொண்ட அவர்கள் தமது புதல்வன் குரலைக் கேட்காமல் அந்த நீரை அருந்த மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

சில கணம் யோசனை செய்தபின் வேறு வழி இன்றி தசரதனும் நடந்த அனைத்தையும் கூறி, தான் யார் என்பதையும் கூறி அவர்களிடம் தான் அறியாமல் செய்து விட்ட பிழைக்காக மன்னிப்பைக் கோரினார். ‘பெரியோர்களே, நான் தெரியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்து என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டு என்னுடன் அரண்மனைக்கு வந்து விடுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்’ என்று கூறியதும் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தாம் ஆசையுடன், அன்புடன் வளர்த்து வந்த தமது ஒரே மகனை இழந்து விட்டவர்களால் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்றே கோபமுற்ற கிழவர் தசரதனுக்கு சாபமிட்டார். ‘மன்னா, எங்களை நீ எப்படி புத்திர சோகத்தினால் வருத்தமடையச் செய்து விட்டாயோ அதைப் போலவே உன் வாழ்விலும் உனக்கு புத்திர சோகம் ஏற்படட்டும்’ என்று கூறிய பின் அப்படியே கீழே விழுந்து இருவரும் மரணம் அடைய, பெரும் துயரம் அடைந்த தசரதனும் வேறு வழி இன்றி அந்த மூவருக்கும் அங்கேயே கிரியைகளை செய்து அவர்களை தகனமும் செய்து விட்டு நாடு திரும்பினார்.

காலம் விரைவாக ஓடிற்று. மரணம் அடைந்து விட்ட, கண்பார்வை அற்ற கிழவர்களின் சாபமோ என்னவோ, பதினாறாயிரம் வருடம் கழிந்தும் தசரதனுக்கு புத்திர பாக்கியமே கிடைக்கவில்லை. அதனால் தனது மூதையோரான திலீபனைப் போலவே ‘தமக்கு பிறகு ஸ்ரார்தங்கள் செய்து பித்ருக் கடன்களை தீர்க்க மகன் பிறக்கவில்லையே’ என மனம் வருந்திய தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்யலானார்.

இது நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்திலே பாற்கடலில் சயனித்திருந்த மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் சென்று இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமக்கு தேவலோகத்திலும், பூலோகத்திலும் ராவணன் எனும் அசுரனின் மூலம் பல தொல்லைகள் நேரிடுவதாகவும், ராவணனின் ஆட்களினால் தாம் எந்த ஒரு யாகத்தையும் பூஜை புனஸ்காரங்களையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடப்பதையும் கூறி தம் அனைவருக்கும் ராவணனின் அட்டகாசத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட நாராயணரும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அமைதிப்படுத்தி  ‘தேவர்களே நீங்கள் அஞ்ச வேண்டாம். நடப்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த ராவணன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களை பெற்றுக் கொண்டு உள்ளான். அதில் ஒன்றாக அவன் தனக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தையும் பெற்று இருக்கிறான். ஆகவே அவனுக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்காது. ஒரு மானிடப் பிறவியினால் மட்டுமே மரணம் கிடைக்கும்.  அந்த மரணமும் நான் மானிடப் பிறவி எடுத்தப் பின் என்னால் மட்டுமே மரணம் சம்பவிக்கும் என்பது விதியாக உள்ளது. தற்போது தசரதன் தனக்கு மகன் வேண்டும் என புத்ர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆகவே நானே தசரதனின் மகனாக பிறந்து  பூமியிலே மானிடனாக வாழ்ந்து  அந்தப் பிறவியிலே ராவணனுடன் யுத்தம் செய்து அவனை அழிப்பேன்,  கவலைப்படாதீர்கள்’ என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

அதே நேரத்தில் தசரதன் செய்த யாகமும் நிறைவேறும் கட்டத்தை எட்டியபோது அந்த யாகத் தீயில் இருந்து தோன்றிய பூதம் ஒன்று தனது கையில் ஒரு மண் பாண்டத்தை எடுத்து வந்து அதில் இருந்த பிரசாதத்தை தசரதனுக்கு கொடுத்து அதை அவருடைய மனைவிகள் உண்டால் அவர்கள் கருதரிப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தது.   தசரதரும் அதைக் கொண்டு போய்  தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். அதை அருந்திய கோசலை நல்ல நாளில் நாராயணருடைய அவதாரமான ஒரு புத்திரனைப் பெற்று எடுத்தாள்.  அவனுக்கு ராமன் எனப் பெயர்  சூட்டினார்கள்.  பிரசாதத்தை உண்ட கைகேயி பரதனைப் பெற்று எடுக்க, பிரசாதத்தை உண்ட சுமித்திரைக்கு லஷ்மணர் மற்றும் சத்ருக்னன் பிறந்தார்கள். நான்கு புதல்வர்களில் ராமரும், லஷ்மணரும்  ஒன்றாக வளர, பரதனும் சத்ருக்னனும் ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்கள் நால்வரும்  நல்லொழுக்கம் நிறைந்தவர்களாக கல்வி அறிவு மிக்கவர்களாக  வளர்ந்து வந்தார்கள்.

விஸ்வாமித்திரர் முனிவர் யாகம்; சீதையின் ஸ்வயம்வரம்

நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் செய்யும் ஒரு யாகம் அசுரர்களால் இடையூறு செய்யப்பட்டு தடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதினால் தன்னால் யாகத்தை சரிவர செய்ய இயலவில்லை என்றும், அதனால் யாகம் நடந்து முடியும்வரை யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்க தசரதர் தயங்கினார். தனக்கே வெகு காலத்துக்குப் பிறகே புத்திர பாக்கியம் கிடைத்திருக்கையில் யாகத்துக்கு காவலாக இருக்கும் நேரத்தில் அந்த அசுரர்களின் மூலம் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என பயந்து போன தசரதன் விஸ்வாமித்திரர் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனாலும் சற்றே சுதாகரித்துக் கொண்டு ராம லஷ்மணர்களுக்கு பதில் தனது படைகளை யாகத்துக்கு  காவலாக இருக்க அனுப்புவதாக கூற,  அதை ஏற்க விஸ்வாமித்திரர் மறுத்து விட்டதுடன், தான் கேட்டபடி ராம லஷ்மணரை தனது யாகத்துக்கு காவலாக இருக்க அனுப்ப முடியவில்லை என்றால்  தனக்கு வேறு எந்தப் படையும் தேவை இல்லை என கோபமாகக் கூறி விட்டு கிளம்பிச் செல்லத் துவங்கியதும் அங்கிருந்த வசிஷ்ட முனிவர் அவர்களை சாந்தப்படுத்தி  விஸ்வாமித்திரர் கேட்டபடியே அவர் யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் அனுப்புமாறும், அது நன்மைக்கே என்றும் தசரதனுக்கு எடுத்துரைக்க, வேறு வழி இன்றி தசரதனும்  தனது இரண்டு புத்திரர்களான ராமனையும் லஷ்மணரையும்  விஸ்வாமித்திரர் நடத்தும் யாகத்துக்கு காவலாக இருக்க அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்திரருடன் கிளம்பிச் சென்று கொண்டு இருந்தபோது வழியில் தாடகை எனும் அரக்கி இருந்த வனப் பகுதி வந்தது. அவள் கொடூரமான குணத்தையும் முகத்தையும் கொண்ட அரக்கியாவாள். அவள் பலத்தையும், பயங்கரத்தையும் விஸ்வாமித்திரர் ராம லஷ்மணர்களுக்கு  எடுத்துரைத்தார். அவர்கள் விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட அரக்கியோ அவர்களைக் கொல்ல ஆவேசமாக அவர்களை நோக்கி வந்தபோது  பெண் என்பதினால் அவளுடன் சண்டைப் போட முதலில் ராமன் சற்றே  தயங்க, விஸ்வாமித்திரர் பல கதைகளை எடுத்துக் கூறி அவளைக் கொல்லாவிடில் தமது யாகம் நடைபெறாது என்ற காரணத்தையும்  கூற, ராமனும் சற்றும் தயங்காமல் அவள் மீது பாணம்  ஒன்றை விட, அந்த அம்பும் அவளது மார்பை துளைத்துக் கொண்டு வெளியேறிச் செல்ல அவள் மலையைப் போல அப்படியே சாய்ந்து வீழ்ந்தாள். அவள் கொல்லப்பட்டதைப் பார்த்த மாரீசனும், சுவாகு எனும் அரக்கர்களும்  பெரும் சேனையுடன் வந்து ராம-லஷ்மணருடன் யுத்தம் செய்யலானார்கள்.  அவர்களது சேனையையும் மாரீசன் மற்றும் சுவாகு இருவரையும் ராம லஷ்மணர்கள் பல பாணங்களை வீசி கொன்று தீர்த்தார்கள்.  அந்த அரக்கர்கள் அனைவரும் அழிந்தப் பின் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்ற விஸ்வாமித்திரர் தாம் பாதியில் நிறுத்தி வைத்திருந்த தமது யாகத்தைத் மீண்டும் துவக்கி  முடித்துக் கொண்டார். யாகம் நடந்து முடியும்வரை யாகசாலையின் அனைத்துப் பக்கங்களிலும் நடந்து கொண்டே இருந்தவாறு கண் அயராமல் யாகத்துக்கு காவலாக நின்றார்கள் ராம லஷ்மண சகோதரர்கள்.

அந்த யாகம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் மனம் மகிழ்ந்து போன விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு தமது பரிபூரண ஆசிகளை வழங்கினார்.  அந்த நேரத்தில் அவருக்கு மிதிலை மன்னன் ஜனகரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.  அந்த அழைப்பில் அவர் தனது நாட்டில் தனதி எனும் யாகத்தை நடத்த உள்ளதாகவும் அதில் பங்கேற்று அங்குள்ள சிவதனுஷ் எனும் வில்லை தூக்கி அம்பை எய்பவர்களுக்கு தனது மகளை விவாஹம் செய்து கொடுப்பதாக முடிவு செய்து உள்ளதினால், அந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்திட அவர் தன்  நாட்டுக்கு வந்து தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் எனவும்  அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட விஸ்வாமித்திரரும் தம்முடன்  ராம லஷ்மணர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்களும் செல்லும்போது வழியிலே கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாகிக் கிடந்த அவரது மனைவியான அகலிகை மீது ராமனின் கால்கள் எதேற்சையாகப் பட்டு விட கல்லாகிக் கிடந்த அவள் உயிர் பெற்று எழுந்தார். ராமரின் கால் பட்டதும்  அவள் சாபம் நீங்கி உயிர் பிழைத்து எழுந்த காரணத்துக்கான சாபம் குறித்து ராமனுக்கு விஸ்வாமித்திரர் எடுத்துரைத்தார்.  ‘கல்லாகிக் கிடந்த  அகலிகை கௌதம முனிவரின் தர்ம பத்தினியாக இருந்தவள். ஆனால் அவள் தேவலோக அதிபதியான இந்திரனின் அழகில் ஒரு நாள் சற்றே மயங்கி விட்டதால் அவளைக் கல்லாகப் போவது என அந்த முனிவர் சபித்து  விட்டார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இப்போது உனது கால் அந்த சிலை மீது பட்டு அவள் உயிர் பிழைத்து எழுந்து உள்ளாள்’ என்றுக் கூறினார்.  அந்த நிலையிலும் ராமர் தெய்வ அவதாரமே என்பதை அவரும் உணரவில்லை, ராம- லக்ஷ்மணருக்கும்   தெரியவில்லை. உயிர் பிழைத்து எழுந்த அகலிகையை ராம, லஷ்மணர்கள் வணங்கி  எழுந்தப் பின், அவளை அழைத்துக் கொண்டு அவளுடன் துணையாகச் சென்று  கௌதம  முனிவரிடம் அவளை பத்திரமாக ஒப்படைத்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு செல்லத் துவங்கினார்கள்.

விஸ்வாமித்திரர் மிதிலைக்கு வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட ஜனகர் பெரும் மகிழ்ச்சி அடைந்து  அவர் வந்து கொண்டிருந்த வழியை நோக்கிச் சென்று வழியிலேயே அவரை சந்தித்து, அவரை விழுந்து வணங்கி அவருக்கு அர்க்கியமும் தந்து அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களான ராம லஷ்மணர்களைக்  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

ராமனின் வீரம், தீரம் மற்றும் பல்வேறு மேன்மையான குணங்களைக் கேட்டறிந்த ஜனகரும் ராமனையும் அந்த யாக முடிவில் நடைபெற இருந்த வில் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்தார். ராமன் எதுவும் கூறும் முன்னரே அவர் சார்பில் விஸ்வாமித்திரர் அந்த அழைப்பை ராமர் சார்ப்பில் தானே ஏற்றதாகக் கூறி விட்டு மறுநாள் அந்த போட்டியில் பங்கேற்க ராம லக்ஷ்மணரை  அரச சபைக்கு அழைத்துச் சென்றார். போட்டி துவங்கும் முன்னர் மன்னன் அனைவருக்கும்  கூறினார்  ‘இங்கு கூடி உள்ள அனைவருக்கும் வந்தனம். இந்த வில்லும் அம்பும் சிவபெருமான் கொடுத்ததாகும்.

ஏர்  உழும்போது பூமியில் இருந்து எனது மகளான சீதை கிடைத்ததால் இந்த வில்லையும் அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்துக் கொடுப்பதாக  முடிவு செய்திருந்தேன். அதன்படி இந்த வில்லையும், அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களில் ஒருவரே சீதைக்கு கணவராக தேர்வு செய்யப்படுவார்’. இப்படியாகக் கூறி விட்டு, அங்கு கூடி இருந்த அனைவருக்கும் சபை நடுவே வைக்கப்பட்டு இருந்த வில்லையும் அம்பையும் காட்டினார்.

ராமர் சீதையை மணம்; பரசுராமர் கர்வம் அடங்கியது

சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லையும், அம்பையும் தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள். நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி ‘நீ சென்று முயன்று பார்’ என்று கூறி ராமனை அனுப்ப ராமனும் விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லையும் அம்பையும் தூக்க எழுந்து சென்றார். அத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினரான  இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின்  எளிதாக அந்த வில்லைத் தூக்கி வளைத்து உடைத்தார். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள்.  ஜனகரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வேகமாக நடந்தேறியன.  தசரத மன்னன் தமது பரிவாரங்களுடனும், ராஜ குருவான  வசிஷ்டருடனும் மிதிலைக்கு வந்து சேர ஜனக மன்னரும் சீதையை ராமனுக்கு திருமணம் செய்து தந்தார்.   ஊர்மிளை எனும் கன்னிகையை லஷ்மணர் மணந்து கொள்ள, மாண்டவி மற்றும் சுதகீர்த்தி என்பவர்களை முறையே பரதரும் சத்ருக்னனும் மணந்து கொண்டார்கள்.   மணம்  முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பும் வழியில் பரசுராமர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அவர்களை தடுத்து நிறுத்திய பரசுராமர்  ‘ஷத்ரிய வீரனே, எனது பிதாவின் மரணத்துக்குக் காரணமான ஷத்ரியர்களை அழித்து விட்டு இங்கு வந்துள்ளேன். இனி நான் அழிக்க வேண்டிய ஷத்ரியர்களில் நீயும், காத்தவீர்யனும்தான் மீதம் உள்ளீர்கள். உனக்கும் எனக்கும் ராமன் எனும் நாமகரணமே உள்ளது என்பதினால் உன்னைக் கொல்ல யோசனையாக உள்ளது.   நீ ஜனகனிடம் இருந்த  வலிமையற்ற  சிவ தனுஷை உடைத்து விட்டு சீதையை மணந்து கொண்டாலும், அது உன் உண்மையான வலிமையை எடுத்துக் காட்டாது.  இதோ  என்னிடம் உள்ள இந்த  விஷ்ணுவின் வில்லைப் பார். இதை நீ எடுத்து வளைத்து நாணேற்றினால்  என்னை வெற்றிக் கொண்ட உண்மையான வீரன் என்று உன்னை ஒப்புக் கொள்வேன். அதன் பின் நீ மேலே செல்லலாம்’ என்று கூறினார்.

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட ராமன் பரசுராமரிடம் கூறினார் ‘முனிவரே, நீங்கள் என்னை விட மூத்தவர் என்பதினால் இந்த வில்லை வளைத்து நாணேற்றி வெற்றி கொண்டால் அதன் பிறகு   உம்மைக்  கொல்வது குற்றம் ஆகும். ஆகவே இந்த பாணத்தை  தூக்குவதற்கு முன்னரே தயவு செய்து இந்த  பாணத்துக்கு  என்ன இலக்கு என்பதைக் கூறுவீர்களேயானால்  நான் அதை செய்வேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கூட நான் உங்களைக் கொல்ல  மாட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் ஒரு பிராமணர் என்பதைத் தவிர விஸ்வாமித்திரருக்கும் உறவினர் ஆவீர்கள். விஸ்வாமித்திரர் என்னுடைய குரு ஆவார்.  ஆகவே என்னால் என் குருவுடன் சம்மந்தம் உள்ளவர்களைக் கொல்ல முடியாது. அது குரு துரோகம்  ஆகிவிடும். அதனால்  இந்த  பாணத்துக்கு இலக்கு உங்கள் ‘பாத கதியா’ அல்லது நீங்கள் ‘ஜெயித்து உள்ள பூமியா’  என்று கேட்டார்.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்  சாந்தமான முனிவராக இருந்தவர். ஆனால் தன்னுடைய தந்தையைக் கொன்ற ஷத்ரியர்களை பழிவாங்க புறப்பட்டு சென்றபோது விஷ்ணுவின் கோப குணாதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஆவேசமானவர். அவரது அவதாரத்திலே அவருக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டு  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருந்தாலும்  ஷண நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவரால் சென்று விட முடியும்.  அந்த சக்தியையே ‘பாத கதி’  என்பார்கள்.

பரசுராமானின் குரு காஷ்யப முனிவர் என்பவர் ஆவார். பரசுராமர்  அவருடைய குருவான காஷ்யபருக்கு குருதட்ஷணையாக  தான் தபஸ் மூலம் வெற்றிக் கொண்டிருந்த  அனைத்து பூமியையும் தானமாக தந்திருந்தார்.  அப்போது அதைப் பெற்றுக்  கொண்ட காஷ்யபர் பரசுராமரிடம் கூறினாராம்  ‘பரசுராமா, எப்போது உனக்கு தபஸ் மூலம் கிடைத்த அனைத்து பூமியையும் எனக்கு நீ  தானம் தந்து விட்டாயோ, அந்த தானம் தந்த பூமியில் நீ  வசிக்கலாகாது,  அங்கு  நீ விஜயம் மட்டுமே செய்யலாம். இரவிலே தங்கக் கூடாது.

அதனால் பரசுராமர் காலை வேளையில் அந்த பூமியில் எங்கு விஜயம் செய்தவாறு இருந்தாலும், இரவு துவங்கியதுமே தனது பாத கதி எனும் சக்தியை பயன்படுத்தி வெகு தொலைவில் அந்த இடத்தின் எல்லையாக இருந்த மகேந்திர மலைக்கு அப்பால் சென்று விடுவாராம்.  ஆகவே அப்படிப்பட்ட சக்தியைத் தரும் பாத கதியையோ, அல்லது தான் ஏற்க்கனவே தானம் தந்து விட்ட பூமியையோ இலக்காக்கி அவற்றை இழக்க விரும்பவில்லை என்பதினால், ராமர் வில்லில் நாணேற்றி வெற்றி பெற்றால்  ஒன்று தன்னை கொன்று விடலாம், அப்படி தன்னைக் கொல்ல   விருப்பம் இல்லை எனில் அவர் அதற்கு மாறாக தான் யாகம் செய்து பெற்றுக் கொண்ட ஸ்வர்க கதியை இலக்காகக் கொள்ளலாம்  என்று கூறி விட்டார். அதாவது பரசுராமர் என்ற அந்த மானிடப் பிறவி முடிந்து விட்டதும்  அவர் ஸ்வர்கத்துக்கு  செல்ல இருந்த அந்தப் பாதையை* அழித்து  விடலாம் என்ற அர்த்தம் ஆகும்.

அதைக் கேட்டதும் ராமர் பரசுராமரிடம் இருந்த வில்லை வாங்கி அதை தூக்கி அதில் நாணேற்றி பரசுராமரை வெற்றிக் கொள்ள பரசுராமரின் கர்வ பங்கமும் அடங்கியது. அது நடந்து முடிந்ததும் பரசுராமர் தன் முன் உள்ள ராமனே தனக்கு பின் வந்துள்ள விஷ்ணுவின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு அதை ராமனிடமே எடுத்துக் கூறி கைகளைத் தூக்கி ராமனை ஆசிர்வதித்து வழி அனுப்பினார். தனக்கு முடிவு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட பரசுராமனே தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராமர் தூக்கி நிறுத்திய தமது பாணத்திற்கு இரையாக்கி விட்டு, பிராமணர் என்ற நிலையில் இருந்து கொண்டு  ‘நீ அவதரித்தக் காரணம் அனைத்தும் இனிதாக முடியட்டும் என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்ய, ராமனும் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் பரசுராமரின் கால்களில் விழுந்து வணங்கிய பின் அவர் ஆசிகளை ஏற்றுக் கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பினார்.

—————————–
* ஒரு  சிறு விளக்கம் :-​  

ஸ்வர்க கதியை அழிப்பது என்றால் பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டால் ஸ்வர்கத்துக்கு செல்லவே முடியாது என்பதல்ல இதன் சாரம். ஸ்வர்க பாதையை அழித்து விட்டால் பரசுராமர் அவதாரம் முடிந்தவுடன் முதலில்  அவர் எண்ணி இருந்தபடி நேரடியாக ஸ்வர்கத்துக்கு செல்ல முடியாமல் வேறு வழியில் ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டி வரும்.  அதற்கு மேலும் சில ஷணங்கள் தேவைப்படும்.  நாம் கணக்கிடும் ஒவ்வொரு ஷணமும்  தெய்வங்களைப் பொருத்தவரை பல்லாண்டு காலம் ஆகும்.  ஆகவே வீணாகும் ஒவ்வொரு ஷணமும் தெய்வங்களைப் பொருத்தவரை பொன்னானவை. அப்படி  வீணாகும் ஒவ்வொரு ஷணமும்  ஒரு அவதாரத்தை முடித்து விட்டு அடுத்த அவதாரம் எடுப்பதற்கு  இடையே பல்லாயிரம் ஆண்டுகள்   இடைவெளியை ஏற்படுத்தி விடும்.  அப்படி என்றால் அனைத்தையும் இயக்கும் எனப்படும் தெய்வங்களால் அவற்றை முன்னரே அனுமானித்து இருக்க முடியாதா, இப்படிப்பட்ட சங்கடங்களை தவிர்க்க முடியாதா என்ற கேள்வி எழலாம்? புராண விளக்கங்களின்படி தெய்வங்களை மையமாகக் கொண்டு நடப்பது அனைத்துமே  தெய்வ லீலைகள் ஆகும்.  இப்படி செய்வதின் மூலம் இப்படி நடக்கும் என்ற விதியை மானிடப் பிறவிகளுக்கு உணர்த்திடவே அப்படிப்பட்ட லீலைகளை வேண்டும் என்றே தெய்வங்கள்  நடத்திக் காட்டுகிறார்கள்.

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டத்தை அடைந்ததும், தனது சக்தியை ராமருக்கு செலுத்த வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார். அதனால் தன்னிடம் இருந்த வில்லை ராமன் வாங்கிக் கொண்டு, அதை தூக்கி நாணேற்றி  தன்னை  வெற்றிக் கொண்டவுடன்  தன்னை  வணங்கி நின்ற ராமருக்கு தனது கைகளைத் தூக்கி பரசுராமர் ஆசிர்வதிக்கிறார். பரசுராமர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் அப்படி கைகளை தூக்கி ஆசிர்வதிக்கும்போதே அதன் மூலம் தனது சக்திகள் அனைத்தையும் ராமாவதாரத்துக்கு மாற்றி விடுகிறார்.  ஏன் என்றால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இரண்டு வெவ்வேறு மானிட அவதாரங்களில் வைத்திருந்து  தமது கடமைகளை செய்ய முடியாது.

தான் விஷ்ணுவின் அவதாரம் எனும் உண்மையை ராமர் புரிந்து கொள்ளவில்லை. அது போலவே மற்றவர்களும் ராமரை  மானிடர் என்றே நினைத்திருந்தார்களே தவிர அவரை தெய்வம் என்று கருதவில்லை. தானே விஷ்ணுவின் அவதாரம் என்பது ராமருக்குப் புரிந்து இருந்திருந்தால் விஷ்ணுவின் அவதாரமாக, தமக்கு மூத்த அவதாரமாக இருந்த பரசுராமரை தம்மிடம் தோற்றுப் போக வேண்டும் என ராமர் எண்ணி இருப்பாரா? இந்த காட்சி கூட பரசுராம அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், தனது சக்திகளை ராமாவதாரத்துக்கு செலுத்தி விட வேண்டும் என விஷ்ணு எண்ணியதினால் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான   விஸ்வாமித்திர  முனிவருக்கும்  பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து,  வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள்

…..தொடர்கின்றது