பாகம் -4 
பிரும்மாவின் மானசீகப் புதல்வராக இருந்தவர் நாரத முனிவர். அவர் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்வதுண்டு. கைலாசம், வைகுண்டம், பித்ருலோகம், பூலோகம் , பிரும்ம லோகம், சூர்யா லோகம் என அனைத்து லோகங்களுக்கும் தங்கு தடை இன்றி செல்வார். தேவலோகத்திலும் இருப்பார். பூலோகத்திலும் மன்னர்களுடன் இருப்பார்.
அப்படிப்பட்ட சக்தி பெற்ற நாரத முனிவர் ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க பூலோகத்தில் துவாரகாபுரிக்குச் சென்று இருந்தார். அங்கு ஸாம்பாவும் இருந்தான். ஸாம்பாவிற்கு தான் அதி சுந்தரமாக இருப்பதான எண்ணம் அதிகம் உண்டு. அந்த கர்வத்தினால் அவன் யாரையும் சட்டை செய்ததில்லை. ஆகவே தேவ முனிவரான நாரதர் அரண்மனைக்கு வந்ததும் எளிமையான தோற்றத்தில் இருந்த அவருடைய உருவைக் கேலி செய்தவாறு இருந்தான். கிருஷ்ணரே தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாரதருக்கு அர்க்கியம் கொடுத்து உபச்சரித்து பூஜை செய்தபோதும் , ஸாம்பா அகம்பாவமாக இருந்தபடி தனது இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. நாரத முனிவரைப் பார்த்தும் அவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக அகம்பாவத்துடன் தன் அழகைக் குறித்து பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மன்னனிடம் எதோ கூறிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட நாரதருக்கு ஒரு பக்கம் வருத்தம் வந்தாலும், அவனது  தந்தையின் எதிரிலேயே பெரியோர் என்ற மரியாதை கூட இல்லாமல் தன்னை அவமானப் படுத்தியது கோபத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு எதிரிலேயே அவன் அப்படி நடந்து கொண்டதின் மூலம் அவன் தனக்கு மட்டும் அல்ல கிருஷ்ணருக்கும் அல்லவா அவமானத்தை தேடித் தந்து விட்டான். ஆகவே அவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
நாரதர் அனைவரிடமும் நலம் விசாரித்ததும் கிருஷ்ணரை தனிமையில் அழைத்துச் சென்று பேசத் துவங்கினார். நாரதர் கிருஷ்ணரிடம் கூறினார் ‘கிருஷ்ணா, நான் இப்போது கூறப்போவது உனக்கு சரியாக இருக்காது. ஆனாலும்  உனக்கு ஒரு விஷயத்தைக் கூறவே நான் இங்கு வந்தேன். உனக்கு பதினாறாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள். உன் அழகிற்கு இணையானவர்கள் அவர்கள அல்ல என்றாலும், சுந்தரியானவர்கள் அவர்கள். ஆனால் இத்தனை அதி சுந்தர தோற்றத்தைக் கொண்ட உன்னை மறந்து, ஸாம்பாவுடன் நீ இருக்கும்போது உன்னைப் பார்க்காமல் ஸாம்பாவின் அழகை அல்லவா ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது முறையான செயலாக எனக்குத் தோன்றவில்லையே. அது போகட்டும் என்றால் ஸாம்பாவும் வேண்டும் என்றே அவர்களைக் கவரும் விதமாக, அவர்கள் தனது சிறிய தாயார்கள் என்றும் கருதாமல் வேண்டுமென்றே அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு  இருந்தவண்ணம் தனது அழகை அவர்களுக்கு காட்டிக் கொண்டு நிற்பதும் சரியாகப் படவில்லையே’ என்றார். நாரதரின் மனதில் இருந்தது என்ன என்றால் எப்படியாவது கிருஷ்ணரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி ஸாம்பாவுக்கு பிரச்சனையை உண்டாக்கி விட்டால், அவன் தக்க பாடம் பெறுவான் என்பதே.
நாரதர் கூறியதைக் கேட்ட கிருஷ்ணரும் நாரதர் கூறியதை சற்றும் ஆராய்ந்து பார்க்காமல் உடனே கலக்கம் அடைந்து கூறினார் ‘ நாரத முனிவரே, நீங்கள் கூறுவது உண்மையா? இதை எப்படி நம்புவது?’.
……தொடரும்