தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் புத்தமதமும் பிற மதங்களும் பெருமளவு தலை தூக்கத் துவங்கி இருந்தன. தென் பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்களில் பாண்டிய வம்சத்து மன்னர்கள் இந்து மதத்தை விட்டு விலகி புத்த மற்றும் சமண மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார்கள் அதனால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. அந்த நிலையில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் பெருமளவு பிற சமய மாறுதலுக்கு காரணமாக அமைந்தபோது அங்கிருந்தவர்கள் திருநாவுக்கரசரை பாண்டிய நாட்டுக்கு வந்து அங்கு நிலவிய சூழ்நிலையை மாற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் பக்தரான திருநாவுக்கரசரும் மதுரையை நோக்கி வரலானார். அவர் திருப்பூவண எல்லையை அடைந்தபோது வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. வைகை ஆற்றை நோக்கிச் சென்றவர் நிலை தடுமாறினார். அதற்க்குக் காரணம் அந்த ஆற்று மணலைக் கடக்க முயன்றபோது அவர் எங்கு நோக்கினாலும் அந்த மணல் பகுதி அனைத்துமே சிவலிங்கங்களை கொண்ட பூமியாகவே காட்சி அளித்தன. அவரால் அந்த மண்ணில் நடந்து செல்ல முடியவில்லை. ஆகவே அவர் தூரத்தில் இருந்தபடியே சிவபெருமான் மீது பதிகம் பாடத் துவங்க அவர் பக்தியை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு காட்சி தர முடிவு செய்து அந்த மணல் திட்டில் ஒரு கோடியில் நின்றவாறு திருநாவுக்கரசருக்கு தானே காட்சி தரத் துவங்க அந்த அழகைக் காண விரும்பிய நந்தி தேவர் தனது தலையை திருப்பிப் பார்த்தாராம். அதனால்தான் திருப்பூவணத்தில் உள்ள நந்தியின் தலை சாய்ந்து காணப்படுகிறது என்பது ஒரு புராணக் கதை. இன்னொரு கதையின்படி திருநாவுக்கரசருக்கு காட்சி தர விரும்பிய சிவபெருமானே தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்தி தேவரை தன்னை திருநாவுக்கரசர் தரிசிக்க வேண்டும் என்பதற்காக சற்று தலையை சாய்த்துக் கொண்டு அமருமாறு கூறியதினால் நந்தியின் தலை திரும்பி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
திருநாவுக்கரசர் ஆற்று மண் முழுவதுமே சிவலிங்கங்களாக
இருந்ததைக் கண்டார். படத்தின் உள்ளே உள்ள ஆலய
ஆடித்த பசு மண்டபம் எனப்படும் ஒரு மண்டபத்தில்தான்
சிவபெருமான் அவருக்கு காட்சி தந்ததாக கூறுகிறார்கள் .
இந்த மண்டபம் ஆலயத்தின் வெளியில் உள்ளது.
(திருநாவுக்கரசருடன் சம்மந்தப்பட்ட இதைப் போன்ற இன்னொரு கதை பட்டீஸ்வரத்து துர்க்கை ஆலயத்திலும் கூறப்படுகிறது. ஒரு முறை திருஞான சம்மந்தர் திருவலஞ்சுழியில் சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின் தமது பரிவாரங்களுடன் பட்டீஸ்வறரை காண பட்டீஸ்வரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். கடுமையான வெயில். கால்கள் சுட்டுப் பொசுக்கின. அவருடைய பக்தியை மெச்சிய சிவபெருமான் தனது பூத கணங்களை அனுப்பி அவர் வரும் வழியில் அவர் தலை மீது ஆகாய மார்கத்தில் பூக்களை தூவிக்கொண்டே இருக்குமாறு ஆணையிட்டார். அந்த கணங்களும் அப்படியே செய்ய வெயில் திருஞான சம்மந்தர் மீது படவே இல்லை. அனைவரும் வியந்து நின்றனர். அது மட்டுமா அவர் தனது சன்னதிக்கு வந்ததும் தன்னை நேரிலே பார்க்கட்டும் என்பதற்காக தனது நந்தியை வழியை விட்டு விலகி இருக்குமாறு சிவன் ஆணையிட நந்தியும் விலகி நின்றது. பட்டீஸ்வரர் சன்னதிக்கு வந்த சம்மந்தர் ஈசனை நேரிலே கண்டார் , ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால்தான் இந்த ஆலயத்தில் சிவனுடைய சன்னதிலும் சரி, அதன் நுழை வாயிலிலும் சரி சிவலிங்கத்தை நந்தி மறைத்தபடி நிற்காமல் ஒரு பக்கமாக நகர்ந்து அமர்ந்து உள்ள அமைப்பில் நந்தி உள்ளது – சாந்திப்பிரியா ).
திருப்பூவண்ண ஆலயத்துக்கு மற்ற ஆலயங்களுக்கு இல்லாத இன்னும் ஐந்துவித பெருமையும் உண்டு. அவை:-
- இங்குள்ள சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ளார்.
- இங்குள்ள ஆலயத்தில் பல மன்னர்கள் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து உள்ளார்கள்.
- இங்குள்ள ஆலயத்தில் அந்த நட்டு மக்களில் சிலரும் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து உள்ளார்கள்;.
- இங்குள்ள ஆலயத்தில் பிரும்மா, விஷ்ணு போன்றவர்கள் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்துள்ளார்கள் .பூக்களிலேயே சிறந்த தாழம்பூவும், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்று உள்ளது.
- தாழம்பூ சாப விமோசனம் பெற்ற கதை (ஒருமுறை பிரும்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் முடியையும் காலையும் பார்ப்பதற்கு முயற்சி செய்தபோது அதில் சிவபெருமானின் தலையை பிரும்மா பார்த்து விட்டதாக பிரும்மாவிற்காக பொய் சாட்சி கூறிய தாழம்பூ அதற்காக சிவபெருமானிடம் சாபம் பெற்றது. அதற்கான சாப விமோசனம் பெற அது இங்கு வந்து சிவபெருமானை துதித்ததாம் – சாந்திப்பிரியா )
மதுரையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் வைகை கரையில் அமைந்துள்ள உள்ள இந்த ஆலயம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. மானாமதுரை, பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரம் போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் திருப்புவனம் வழியாக செல்வதினால் இந்த ஆலயத்துக்கு எளிதாக செல்ல முடிகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலும் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
புஸ்பவனேஸ்வரர்
சௌந்தரநாயகி
இங்குள்ள மூலவரை பூவணன், புட்பவன நாதர், புஸ்பவனேஸ்வரர், பிதுர் மோட்சபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அவருடைய மனைவியான அம்பாளை சௌந்தரநாயகி, தடிதாம்பை, ஸ்வர்ணவல்லி, அன்னபூரணி, மின்னனையாள் போன்ற பெயர்களில் அழைத்து துதிக்கிறார்கள்.
இக்கோவில் முஸ்லீம் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டுள்ளது என்பதினால் பிற காலங்களில் பல மன்னர்களால் ஒவ்வொரு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. இக் கோவில் கோபுரத்தில் சிற்பங்கள் இல்லை. ஒருஷணப் பொழுதாவது எவர் ஒருவர் திருப்பூவணத்தில் வந்து வசிப்பார்களோ அவர்கள் முத்தி அடைவர் என்பது நம்பிக்கை.
ஓம் நமச்சிவாயஹா:
திருப்பூவண மகாத்மியம் முடிவுற்றது