சண்டி சப்த சதி

சாந்திப்பிரியா

சண்டி சப்த சதி என்பது என்ன? சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். தேவி மகாத்மியம் அல்லது துர்கா சப்த சதி என்றும் அழைக்கப்படும் இந்த நூல் இந்த உலகில் இருந்த அசுரர்களை அழித்து உலகைக் காக்க வந்த சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தபதி (700 ) என்றும் அழைக்கின்றார்கள். சப்த சதி என்பது ஏழு தேவதைகளை குறிக்கும். அந்த ஏழு தேவிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு சாரார் அந்த ஏழு தேவதைகள் நந்தா, சாகாம்பரி, பீமா, ரத்த தந்திகா, துர்கா, பிராம்மி மற்றும் சதாக்ஷி என்று கூற, இன்னும் சில பண்டிதர்கள் அந்த தேவதைகளை பிராம்மி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டா, மகேஸ்வரி, கௌமாரி மற்றும் இந்திராணி என்பதாக கூறுகின்றார்கள்.
துர்க்கை தேவியை சண்டி தேவி என்றும் சண்டிகா தேவி என்றும் அழைக்கின்றார்கள். துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமம் சண்டிகா பரமேஸ்வரி தேவி என்பதாகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசக்தியானவள் நவராத்திரியில் முதல் மூன்று நாட்களில் மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து தவம் புரிந்து அசுரர்களைக் கொன்று அழித்தாள். அப்படிப்பட்ட சண்டி தேவியின் பெருமையை கூறுவதே தேவி மஹாத்மியம் எனும் நூல் ஆகும். தேவியின் பெருமையை கூறும் நூல்களில் தேவி மஹாத்மியம் என்பது மேன்மையானதும், மிக பழமையானதும் ஆகும்.
இந்த நூல் 13 அத்தியாயங்கள், 700 மந்திரங்களுடன் கூடியது. தேவி உபாசனைகளை குறிக்கும் தேவி மகாத்மியம் ஒரு சக்தி வாய்ந்த மந்திர நூலாகும். இந்த நூலில் காணப்படும் 700 மந்திரங்களில் தான் சண்டி ஹோமம் செய்யப்படுகின்றது. 400 அல்லது 500 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்கள் எத்தனை முக்கியமானதோ தேவி மஹாத்மியமும் அத்தனை முக்கியம் வாய்ந்த நூலாக உள்ளது.
இதனை பாராயணம் செய்து பூஜைகளை செய்ய வேண்டும் எனில் அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க வேண்டும். ஏன் என்றால் துர்கா சப்த சதி மந்திர சக்தியைக் கொண்டது. தேவி மஹாத்மியத்தின் பெருமை என்ன என்றால் அதை தினசரி அல்லது முக்கியமாக நவராத்திரி காலத்தின் ஒன்பது நாட்களிலும் பூஜைகள் இல்லாத பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். சண்டி தேவியின் அருள் பெற்றவன் மட்டுமே இதை பாராயணம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.
இந்த நூலை பாராயணம் செய்பவன் கடுமையான துன்பத்தில் மாட்டிக் கொண்டாலும் நொடிப் பொழுதில் அவனை சண்டி தேவி மீட்டு விடுவாள். ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும். இந்த பாராயண சப்தம் கேட்கும் இடங்களில் உள்ள தீய சக்திகள் ஒழிந்து போகும். தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனும் கிடைக்கும் என்பார்கள்.
துர்கா என்றால் அணுகுவதற்கு அரிதானவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர் கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ‘எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகின்றானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கி விடுவேன்’. அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
அன்னை மேலும் கூறுவாள் ‘இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மனான நான் இரண்டாக என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காப்பாற்றுவதற்கே ஆகும்.
இந்த நூலின் முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது. அடுத்த பாகம் அத்தியாயம் இரண்டு முதல் நான்கு வரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது. அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்று வரை (5-13) உள்ள மூன்றாம் பாகமோ அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் அமைந்து உள்ளது.
மாயையை ஒழித்து ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல். தமது பரப்பிரும்ம ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே தேவி மகாத்மியம் என்ற இந்த மகாத்மியம்.
பரமாத்மன் மூன்று லோகங்களான ஆகாயம், பூலோகம் மற்றும் பாதாளம் என்பவற்றை படைத்தபோது, பூலோகத்தின் அதிபதி தெய்வமாக சக்தி தேவி எனப்படும் பார்வதி தேவியின் அவதாரமான துர்கா தேவியை படைத்தாராம். அதனால்தான் பூலோகத்தில் துன்பங்களை தந்து கொண்டு இருந்த அசுரர்கள் மற்றும் அரக்கர்களையும் சக்தி தேவதைகள் எனப்படும் பெண் தெய்வங்களே பல்வேறு அவதாரங்களை எடுத்து அழித்தார்கள் என்பதை புராணங்கள் மூலம் அறிய முடியும். அது மட்டும் அல்ல அனைத்து தெய்வங்களின் படை வீரர்களும் பெண் தேவதைகள் மற்றும் யோகினிகள்தான். அதனால்தான் சக்தி தேவதைகளின் பெருமைகளைக் கூறும் பாராயண நூல்களே அதிகம் உள்ளன. சில நிலைகளில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து அசுர சக்திகளை அழித்த போதும் அவருக்கு அந்த அழிக்கும் மூல சக்தியை தந்தது சக்தி தேவிதான் என்பதாகவும் கூறப்படுகின்றது.
சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதை இது. சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தத்தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். (பண்டைய இந்தியாவில் நிலவி வந்திருந்த பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு வர்ணங்களில் இருந்தவர்களில் மூன்றாவது நிலையில் இருந்தவரே வைசியன் ஆகும்). எங்கு செல்வது என புரியாமல் தங்கும் இடம் தேடி அலைந்தவர்கள் முடிவாக ஒரு வனத்தை அடைந்தார்கள். அங்கு பல இடங்களிலும் சுற்றி அலைந்தவர்கள் முடிவாக சுமேதஸ் என்ற மகரிஷியிடம் அடைக்கலம் புகுந்து தமது மனக் குறைகளைக் கூறி அழுதார்கள். அவருடைய குடிலோ அமைதியாக, மனதுக்கு ஆறுதல் தரும் இடமாக இருந்தது.
அவர்களை அன்புடன் வரவேற்ற மகரிஷி சுமேதஸ் அவர்கள் வந்ததின் காரணத்தைக் கேட்க உடனடியாக அந்த மன்னன் அவர் முன் அழுது புலம்பத் துவங்கினார். ‘மாபெரும் மகரிஷியே, நான் ஒரு மன்னன். ஆட்சியை இழந்து இங்கு வந்துள்ளேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் தூய்மையான வாழ்க்கையை நடத்தினேன், என் வாழ்க்கையில் பணக்காரர்கள் அல்லது ஏழை என பேதம் பார்க்காமல் அனைவரையும் ஒன்று போலவேதான் நடத்தினேன். அனைவரையும் மரியாதையுடன் நடத்தினேன். மற்றவர்களின் நலனுக்காக நன்மைகளை செய்யும் பல செயல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். எனக்கு சொந்தமான செல்வத்தில்தான் பல வகையான தான தர்மங்களை செய்து வந்தேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை, மற்றவர்களின் செல்வத்தை அபகரிக்க எண்ணியதில்லை. மற்றவர்களது இன்பங்களை அழித்ததில்லை. நான் செய்யாத தர்மம் இல்லை, தானங்கள் இல்லை, நற்காரியங்கள் இல்லை என்றாலும் கூட என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை விரட்டி அடித்து விட்டு வேதனைப்படுத்தினார்கள். இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டபோது மகரிஷி சுமேதஸ் அவனுக்கு அறிவுரை கூறத் துவங்கினார்.
‘மன்னா, முதலில் உன் மனதை அமைதியாக வைத்துக் கொள். மனதிலும் இதயத்திலும் தூய்மையுடன் இருந்து மகத்தான செயல்களை, தான தர்மங்களை செய்வதாகக் கூறுகின்றீர்கள். மற்றவர்களின் பொக்கிஷங்களை பார்த்து பொறாமை கொள்ளவில்லை, அவற்றை பறிக்க ஒருபோதும் எண்ணவில்லை என்று கூறினீர்கள். ஒரு கணம் நீங்கள் கூறுவது அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் உங்களது எதிர்மறை எண்ணங்களினால் ஈர்க்கப்பட்டு நீங்கள் செய்த தவறான செயல்களை எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா? அவற்றை வேண்டுமென்றே அல்லது அறியாமையில் நினைவுபடுத்திப் பார்க்க விரும்பவில்லையா? குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சி அடைந்து நல்ல நிலையில் இருந்தவரை நீங்கள் எந்த வித தீய உணர்வுகளும், செயல்களும் இல்லாதவராக, ஒழுங்கு மிக்க, நேர்மையான மனிதனாக மட்டுமே வாழ்ந்து இருந்திருக்க வேண்டும் என்று என்னை நம்பச் சொல்கின்றீர்களா?
நீங்கள் பேசுவதற்கு முன் இருமுறை யோசித்துப் பேச வேண்டும். உங்களுடைய தற்போதைய அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் நீங்கள் தெரிந்தே செய்த பல பாவங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மறைக்க முயல்வது உங்களுடைய பெரும் தவறு. நீங்கள் மேன்மையான மன்னனாக அமர்ந்த பின்னர் உங்களது இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, உங்களுக்கு யார் யார் பல வகைகளிலும் உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தினீர்கள்; அவர்களை புறக்கணித்தீர்கள்; ஆனால் நீங்கள் அதிகாரத்தின் உச்சத்தை அடைய அவர்களின் தோள்களில்தானே பயணம் செய்தீர்கள். நீங்கள் பல்வேறு நல்ல செயல்களை செய்தீர்கள் என்றாலும் உங்கள் மனதிலும் இதயத்திலும், எண்ணங்களிலும் தூய்மை இருக்கவில்லை. எதை செய்தாலும் அதற்கு ஒரு வெகுமதியை எதிர்பார்த்தே செய்து வந்தீர்கள். அப்படி இருந்து விரிவான பல சடங்குகளை செய்து, தேவியை வணங்கி அவளுடைய அருளை பெற எத்தனை முயற்சி செய்தாலும் அது நடக்காது. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அவர்களுக்கு அருள் புரிந்து, தண்டனையையும் அந்த தேவி தருகின்றாள்.
உங்கள் ஆட்சியின் துவக்க கால கட்டங்களில் நீங்கள் நல்ல நோக்கங்களும், நல்ல எண்ணங்களும் கொண்ட தூய்மையானவனாகி இருந்துள்ளீர்கள். அதனால் அந்த நேரங்களில் நீங்கள் தேவியின் அருளைப் பெற்றிருக்கலாம். தேவியின் கிருபையால் ஒரு சக்தி வாய்ந்த மன்னனாக அமர்ந்தீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில், நீங்கள் அடைந்திருந்த மேன்மை அனைத்தும் உங்கள் முயற்சியினால் மட்டுமே கிடைத்தது என்ற ஆணவம் உங்கள் மனதில் புகுந்து கொள்ள, அந்த ஆணவம் மற்றும் மமதை அளவுக்கு மீறிய போது உங்கள் ஒழுக்கம் கீழே விழத் துவங்கியது. சக்தி வாய்ந்த அந்த தேவி கூட உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி வந்தீர்கள். உங்கள் செயல்பாடுகளில் மகிழ்ச்சி கொண்டு உங்களுக்கு தொடர்ந்து மேன்மையை தேவி தந்து வருவார் எனக் கருதத் துவங்கினீர்கள்.
ஆணவ மிகுதியால் உங்களுடைய ஏற்றத்துக்கு காரணமான அனைவரையும் அவமதிக்கவும் புறக்கணிக்கவும் ஆரம்பித்தீர்கள். அதனால் உங்களது வேதனையிலும், மகிழ்ச்சியிலும் பங்கு கொண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகினார்கள். ஆனால் உங்களுடைய பெற்றோர்கள் அவர்களது முந்தைய பிறப்புகளில் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெற முடிந்தது என்றாலும் அது உங்களால் வந்தது என்று எண்ணத் துவங்கியதே நீங்கள் ஒரு முட்டாள் என்பதை எடுத்துக் காட்டியது. அதனால்தான் நீங்கள் ராஜ்யத்தையும் இழந்தீர்கள்.
இன்று உங்கள் நிலை என்ன என்று பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாமலும், மன அமைதி இல்லாமலும், தனி ஆளாக நிற்கின்றீர்கள். அதன் காரணம் நீங்கள் செய்த தவறான செயல்களை எண்ணிப் பார்க்கவில்லை. உங்களுடைய எண்ணங்களும் மனதும் தூய்மையாக இருந்திருந்தால் இந்த சோதனையான காலகட்டத்தில் உங்களுக்கு தேவி உடனடியாக ஏதாவது ஒரு விதத்தில் அருள் புரிந்து உதவி இருக்க மாட்டாளா என்பதை உணர்ந்தீர்களா ? உங்களுடைய தற்போதைய சோதனை ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னமும் உங்கள் முட்டாள்தனத்தை நீங்கள் உணரா விட்டால், உங்கள் கட்டுப்பாட்டின்றி உங்களுக்குள் இருந்து கொண்டு இருக்கும் பழிவாங்கல் மற்றும் ஆணவம் போன்ற எண்ணங்களுக்கு அடிமையாகிக் கிடந்தால், இன்னமும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
தேவியை வணங்கும் தத்துவம் என்ன தெரியுமா? ‘அவளை நேர்மையுடனும், பக்தியுடன் துதிக்க வேண்டும். அவள் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். தூய்மை அற்ற மனதுடனும், பல்வேறு காலங்களில் உன்னிடம் அன்பாகவும், நெருக்கமாகவும் இருந்தவர்களை பழி வாங்கும் நோக்கத்தையும் மனதில் கொண்டு அவளை ஆராதனை செய்தால் தேவி நிச்சயமாக உங்கள் அருகில் இருக்க மாட்டார். ஆகவே உங்களது வேண்டுதலை முழுமையாக ஏற்றுக் கொண்டு தேவி உங்களது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்ற தவறான மாயையில் இருக்க முயலாதீர்கள். நீங்கள் எதற்காக தேவியை வழிபாடு செய்து துதிக்கின்றீர்கள்? மாயையான எண்ணங்களை விலக்கி , அவளே இந்த உலகை படைத்தவள் என்பதை நன்கே புரிந்து கொண்டு அவளை வணங்க வேண்டும். அவள் அனைவரது மனதையும், எண்ணங்களையும் முற்றிலுமாக அறிந்தவள் என்பதினால் அவளை ஏமாற்ற முடியாது என்ற உண்மையை மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் முன்னால் நேர்மையாக இருப்பதை போல வெளி உலகிற்கு காட்டிக் கொண்டு, உங்களுடைய வேதனைகள் தீர வேண்டும் என்பதற்காக தேவியின் அருளைக் கோரி பூஜையோ ஆராதனையோ செய்தால், அவளது அருள் கிடைத்து விடும் என எதிர்பார்ப்பது மாயை. அவளிடம் சரணடைவதற்கு முன், மனதில் உள்ள துரோக உணர்வுகளையும், பழிவாங்கும் எண்ணங்களையும் முற்றிலும் அழிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவளது அருள் உனக்கு கிடைக்கும், உனது துயரங்களும் வேதனைகளும் நீக்கி உன்னை மாயையின் உலகத்திலிருந்து வெளியே வர உதவுவாள். எனது ஆலோசனை உனக்கு உகந்ததாக தோன்றினால் நவராத்திரியில் புனித சண்டி சப்த சதியை உச்சரித்து நேர்மையுடன் தேவியிடம் பிரார்த்தனை செய்து இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்று சங்கடங்களை விலக்கிக் கொள்’.
தனது தலையில் யாரோ பெரிய கல்லைக் கொண்டு தாக்கியதை போல மன்னன் உணர்ந்தான். உண்மை மனதுக்குள் மேலெழ அப்படியே அவர் கால்களில் விழுந்து வணங்கியவன் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்துள்ள தவறுகளே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்பதை உணர்ந்தான். இனியாவது திருந்தி வாழலாம் என முடிவு செய்தவன் சண்டி சப்த சதியை பூஜித்து ஆராதிக்கும் முறையைக் கேட்க அவரும் அதை கூறலானார்.
மகரிஷி சுமேதஸ் கூறலானார் ‘மன்னனே கேள். சண்டி சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உரத்த குரலில் பாராயணம் செய்யாமல், மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். மந்திர உச்சாடனங்களை செய்கையில் அவற்றுக்கான விதி முறைகளை கடை பிடிக்காமல், சப்தங்களை முறைப்படி உச்சாடனம் செய்யாமல் படிப்பது கெடுதலை தரும். ஏன் எனில் அதில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மந்திர சக்திகளைக் கொண்டவை ஆகும்.
அதே சமயத்தில் வெவ்வேறு ஆன்மீக மற்றும் தனி மனித நோக்கங்களுக்காக சாதனாத்விக்கள் (சாதனா செய்கிறவர்கள்) சண்டி சப்த சதி பாராயணத்தை, முறையான உச்சாடனங்களுடனும், நியமங்களை அனுசரித்தும் சண்டி ஹோமம் எனும் பெயரில் செய்கின்றார்கள். அதை போலவே பொதுமக்கள் சிலரும் சில வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள வீடுகளில் சண்டி ஹோமம் செய்கின்றார்கள்.
பாராயணத்தைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் சில சடங்குகளை செய்ய வேண்டும். சுத்தமான தரையிலோ அல்லது நன்கு சுத்தம் செய்யப்பட்ட இடத்திலோ உட்கார்ந்து கொண்டு ஆசனம், பிரணயாமம், சங்கல்பம் போன்ற அனுஷ்டானங்களை செய்த பின்னர் நவாக்ஷரி மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும். நவாக்ஷரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த துர்கா மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஓதினால் தாந்த்ரீக, கிரக மற்றும் பிற கோளங்களின் சக்திகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதினால் மறைந்தும், வெளித் தெரிந்தும் உள்ள தீய சக்திகள் அழியும். நவராத்திரி காலத்தில் இந்த மந்திரத்தை உச்சாடனை செய்வது சிறப்பானது ஆகும்.
அதே சமயம், தேவி மஹாத்மியத்தின் ஸ்லோகங்களை நேரடியாக ஒரு புத்தகம் படிப்பதை போல (உச்சரிப்புககளுக்கு ஏற்ற ஸ்வரங்கள், அல்லது சரியான உச்சரிப்பு இல்லாமல்) படித்தால், அது அவர்களுக்கு மன திருப்தியை அளிக்கலாம், ஆனால் விரும்பிய வேண்டுதல்கள் நிறைவேறாது. அதன் காரணம் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள மந்திரங்கள் அந்தந்த உச்சாடனங்களுக்கு ஏற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதினால் அந்த உச்சாடனைகளுக்கு உள்ள தெய்வ சக்திகளை அழைக்க இயலாது. மாயை என்பதில் இருந்து விடுதலை பெற வேண்டும் (ஞானம் பெற வேண்டும்) என நினைப்பவர்கள் ஒரு நல்ல குருவிடம் இருந்து தீட்சை பெற்று பின்னர் அவர் கூறும் நியமங்களின்படியே சண்டி சப்த சதி பாராயணத்தை செய்ய வேண்டும்.
சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரன் பார்வதிக்குக் கூறினாராம் -தேவியே! சண்டி சப்த சதியின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மை மற்றும் மாயையில் இருந்து விடுதலை அடைவார்கள் (இங்கு ஏழ்மை என்பது செல்வத்தை குறிப்பிடும் வார்த்தை அல்ல. ஞானம் என்பதையே குறிப்பிடுகின்றது). சின்மயமான திரிபுரா என்பவள் மூன்று வடிவைக் கொண்டவள். அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு பரதேவதை காளி உருவைக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். சண்டிகா என்பவள் துர்கா தேவியின் ஒரு வடிவம். அவள் மேலான மற்றும் புனிதமான தெய்வம் ஆவார். உலகம் முழுவதும் புத்துணர்ச்சி தருபவள். அவளிடம் சரணடைபவர்களை முழுமையாக பாதுகாக்கிறாள். அவளையே மூன்று உலகங்களின் தாய் என்றும் கூறுவார்கள்-, என்று கூறிய பின்னர் துர்கை எனும் சக்தியின் மகிமைகளையும் அவளை வணங்குவதினால் கிடைக்கும் நன்மைகளையும் விரிவாக விளக்கினார். (இங்கே ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட வேண்டும். சிவபெருமானும் பார்வதி தேவியும் பிரபஞ்சத்தின் அனைத்து நடப்புகளையும் அறிந்தவர்கள், அவர்களே அனைத்தையும் நடத்தி வைக்கும் தெய்வங்களே என்றாலும், இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்மன் ஏற்படுத்தி இருந்த சில தெய்வீக விதிப்படி நடைபெறும் சில தெய்வீக நாடகத்தில் சில செயல்களை செய்ய வேண்டி உள்ளதினால், அந்த லீலை முடியும்வரை குறுகிய காலத்திற்கு தங்கள் தெய்வீக சக்திகளை இழக்கிறார்கள். இங்கே சிவன் தனது மனைவிக்கு சண்டி சப்த சதியின் மகிமையை கூறும்போது , தாம் இருவருமே தெய்வம் என்ற உண்மையை இழந்து அவளுக்கு துர்கா தேவியின் பெருமையை பற்றி தன்னிலை மறந்து கூறுகின்றார். – சாந்திப்பிரியா).
அவர் கூறியதைக் கேட்ட பரமேஸ்வரி அழகாகவும் கேலியாகவும் சிரித்தாள். அதைக் கண்ட சிவபெருமான் துணுக்குற்று அவளிடம் கேட்டார் ‘பத்தினியே, நீ ஏன் நான் கூறியதைக் கேட்டு கேலியாக சிரித்தாய்?’ பரமேஸ்வரி கூறினாள் ‘நாதா, துர்கை என்பவள் என்னுள் இருந்து உருவானவள்! அவளது பெருமையை எடுத்துரைக்கும் சண்டி சப்த சதியின் மேன்மையை குறித்து, அவற்றை நடத்திய என்னிடமே , நானே எடுத்த அவதாரத்தை எனக்கே ஒரு புதிர் போலக் கூறினால் அதைக் கேட்டு சிரிக்க மாட்டேனா என்ன?’ என்றாள். அதைக் கேட்டு தன் நிலைக்கு வந்த அடைந்த பரமேஸ்வரரும் தன்னை மறந்து அவளுடன் சேர்ந்து சிரித்தார். அவர்கள் சிரித்த சிரிப்பினால் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் ஆனந்தமயமாக சிரித்த அந்த ஷணத்திலேயே உலகில் எங்குமே துன்பம் மற்றும் துயரங்கள் என்ற உணர்வுகளே இல்லாமல் மறைந்து போக, அனைவரும் இன்பத்தில் மூழ்கி இருந்தார்கள் எனும் நிலைமை ஏற்பட்டதின் காரணம் துர்கா சண்டி சப்த சதி அல்லவா?
ஆகவேதான் கூறுகிறேன் மன்னா, நீயும் மேலான தேவியான அந்த துர்கா தேவி எனும் பரமேஸ்வரியை முழுமையாக சரணடைவாய். அவளை தொடர்ந்து பக்தியோடு ஆராதித்தால் தக்க நேரத்தில் அவளே நீ இழந்த அனைத்தையும் உனக்கு மீட்டுத் தருவதும் அல்லாமல், இகலோக இன்பங்களையும் ஸ்வர்கத்தையும் மோக்ஷத்தையும் உனக்கு அளிப்பாள்’. இப்படியாகக் கூறியவர் சண்டி சப்த சதியை பாராயணம் செய்ய தேவையான நியமங்களை ஒவ்வொன்றாக கூறலானார். அதற்கு முன்னர் துர்கா சண்டி சப்த சதியை பாராயணம் செய்யத் தேவையான கீழ் தந்துள்ள குரு மந்திரத்தை உபதேசித்து, தீக்ஷையையும் தந்தார்.
கவச மந்திரம்:- சப்த சதியின் 700 வசனங்களில் உள்ள மந்திரங்களை உச்சரிக்கும்போது அது சக்தியை மூர்க்கமாக எழும்பி சாதனாவை செய்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். ஏனெனில் அவர்கள் மாத்ரு தேவதைகளுடன் தொடர்பு கொண்டுதான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கும், அவர்களில் சிலர் தேவியின் யுத்த கணங்களாக இருந்தாலும் சில காரணங்களுக்காக சாதனாவை உடைக்க முயற்சிக்கலாம். ஆகவே பத்து திக்குக்களின் சக்திகளான சப்த மாத்ருகைகள், பல இடங்களிலும் பல கோலத்துடன் காட்சி தரும் சக்திகள் என அனைவரையும் அழைத்து வணங்கி, தனது உடலின் புற மற்றும் அக உறுப்புக்கள், சுவாசிக்கும் பிராண்ணன், மனைவி, உடன் பிறந்த மக்கள், புத்திர புத்திரிகள், செல்வம் என அனைத்தையும் காக்க வேண்டும் என பாராயணம் செய்பவர் வேண்டிக் கொண்டு மேலே செல்ல வேண்டும். ஆகவே சப்த சதியை பாராயணம் செய்யும் முன் மற்ற இடைஞ்சல்களில் இருந்து நம்மைக் காத்தருள ஓத வேண்டிய மந்திரமே கவச மந்திரம்’ என்று கூறிய மகரிஷி கவச மந்திரத்தையும் அவர்களுக்குக் போதனை செய்து தீக்ஷை தந்தார்.
அர்கலா மந்திரம்:- மகரிஷி சுமேதஸ் அடுத்த மந்திரத்தை உபதேசிக்கத் துவங்கினார். சக்தியின் தலையீட்டைக் கோரும் அடுத்த பிரார்த்தனை அர்கலா என்பதாகும். இது ஒரு போல்ட் போல செயல்பட்டு கேடயத்தை (கவச மந்திரம்) சாதனாவை செய்பவருடன் உறுதியாக இணைத்து வைக்கின்றது. சக்தியின் தலையீட்டைக் கோரும் அடுத்த பிரார்த்தனையான அர்கலா அனைத்தையும் வெட்டுகின்ற ஒரு வாளைப் போன்றது. இது இலக்கை நோக்கிய பாதையில் வெற்றிகரமாக பயணிக்கும் சாதனாவை செய்பவருக்கு ஏற்படக் கூடிய தடைகள் மற்றும் பிற இடையூறுகளை அழிக்க உதவுகிறது.
அதனால்தான், கவச்சா, அர்கலா, கீலகா மற்றும் நவாக்ஷரி மந்திரங்களை உச்சரிக்காமல், தேவி மஹாத்மியத்தை பாராயணம் செய்யக் கூடாது. தேவியின் அருளை வேண்டி இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்யாமல் சண்டி சப்த சதியில் உள்ள ஸ்லோகங்களை பாராயணம் செய்தால் தங்கள் இலக்கை அடையவோ அல்லது எந்த நன்மையையும் பெறவோ முடியாது. மகரிஷி சுமேதஸ் தொடர்ந்து கூறலானார். ‘மன்னா, சப்த சாதியை பாராயணம் செய்யும் முன் ஓத வேண்டிய அடுத்த மந்திரம் கீலகா எனப்படுவது’.
கீலகா மந்திரம்:- சப்த சதியை பாராயணம் செய்வதற்கு முன்பு, கவச மற்றும் அர்கலா எனும் மந்திரங்களை ஓதிய பின்னர் அடுத்து கீலகா எனும் மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். கீலகா என்பது குத்தூசி அல்லது ஒரு பூட்டை போன்றது. கீலகா மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சண்டி சப்த சதியில் உள்ள மந்திரங்களை ஓதக் கூடாது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம், சப்த சதியை பாராயணம் செய்பவர்கள் தனது ஆற்றல்களை சிதற விடாமல் ஒரே இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இல்லை என்றால் வேண்டுபவர்களது பிரார்த்தனையை ஏற்று அவர் முன் வெளித் தெரியாமல் சில கணங்களுக்கு துர்கா தேவியானவள் வந்து நிற்கும்போது சிதறிக் கிடக்கும் தனது ஆற்றல் மிக்க சக்திகளை ஒருங்கிணைத்து தன்னிடம் உள்ள அனைத்தையும் அவள் காலடியில் சமர்பித்து அவளிடம் முழுமையாக சரண் அடைய முடியாது. வந்து நிற்பவள் தேவியே என்பதை சில சமிக்கைகள் மூலம் வேண்டுபவர் மனதில் தோன்ற வைப்பாள். (இங்கு கூறப்படும் முழுமையாக சரண் அடைவது என்ற தத்துவம் வேண்டுபவர்களுடைய செல்வங்களை அவள் காலடியில் சமர்ப்பிப்பது என்பதல்ல அர்த்தம். அது குறிப்பிடுவது என்ன என்றால் மனதில் மிதந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் பிற உலக பந்தங்களை பற்றிய நினைவுகள் என அனைத்தையும் சண்டி சப்த சதி பாராயணத்தை பாராயணம் செய்து முடிக்கும்வரை தன்னுள் இருந்து அழித்து விட்டு தேவியிடம் சரண் அடையும் நிலை ஆகும்).
சாதனா செய்பவர் அனுபவம் மிக்கவர் என்றால் தனது மனதை வெற்றிடமாக வைத்துக் கொண்டு கீலகா மந்திரத்தை முறைப்படி பாராயணம் செய்து அடுத்த பாதையை நோக்கி நகர்வார். இலக்கை அடைய அடுத்த பாதையின் பூட்டை திறக்க வேண்டும் என்பதற்கு கீலகா மந்திரம் முக்கியமானது. கதவில் உள்ள பூட்டைத் திறக்காமல் வீட்டில் எப்படி ஒருவர் நுழைய முடியாதோ அதை போலவேதான் கீலகா போன்ற பூர்வாங்க மந்திரங்களை ஓதாமல் துர்கா தேவி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சாதகர் நுழைய முடியாது. இதனால்தான் உனக்கு கூறுகின்றேன் மன்னா, சண்டி சப்த சதியை பாராயணம் செய்யும்போது பாராயண மந்திரங்களில் மட்டுமே முழுமையான கவனம் இருக்க வேண்டும்.
ராத்திரி ஸூக்த மந்திரம்:- வேதத்தில் காணப்படும் ஸூக்தம் என்பது பிரார்த்தனையை குறிக்கின்றது. அது தேவியின் மேன்மையை புகழ்ந்து கூறும் ஸ்லோகம் ஆகும். அவற்றை இயற்றியது மனிதர்கள் அல்ல என்பது நிச்சயம் என்றாலும் வேறு யார் அவற்றை இயற்றியது என்பது தெரியவில்லை. கண்களுக்கு புலப்படாத தேவதைகளே, முக்கியமாக வாக் தேவதைகளே அவற்றை இயற்றி உள்ளதாக நம்புகின்றார்கள். ரிக் வேதத்தில் துர்கா தேவியை புகழ்ந்து பாராயணிக்கப்படும் ராத்திரி ஸூக்தம் என்பது மிக முக்கியமான ஸ்லோகம் ஆகும். அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும் கட்டத்தில் சாதனாவிகளுடைய ஆத்ம பலம் மற்றும் மனோபலம் உயர்ந்த நிலைக்கு சென்று விடுகின்றது .
உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. (இங்கு இரவு என்பதை அறியாமை என்பதாக பொருள் கொள்ள வேண்டும்). அதுவே ஜீவ ராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் அனைத்துமே சலனங்கள் இன்றி ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். இரவு நேரத்தில் பலவித மர்ம தெய்வீக லீலைகள் நடந்து கொண்டு இருக்கையில் இரவின் அதிபதியான தேவியோ விழித்த நிலையில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றாள். இரவு என்பது அஞ்ஞானத்தை குறிக்கும். பகல் என்றால் ஞானத்தைக் குறிக்கும். ஸூக்தம் என்றால் பிரார்த்தனை அல்லது பாராயணம் என்று பொருள்படும். ஆகவேதான் சந்தியா காலத்தில் தன் அறியாமையை அழித்து ஞானத்தை தர வேண்டும் என தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு எட்டு மந்திர ஸ்லோகங்களைக் கொண்ட ராத்திரி ஸூக்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ராத்திரி ஸூக்தம் மிக சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனை ஆகும். அதை போலவேதான் பகலிலும் பகல் தேவியானவளும் சூரிய பகவானின் மகளுமான உஷா தேவியை வேண்டிக் கொண்டு தேவி ஸுக்தத்தை பாராயணம் செய்ய வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு இயக்கமும் தற்காலிகமாக ஒய்வு எடுத்தாலும் அந்த வேளையிலும் சக்தியின் இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் சண்டி சப்த சதியை படிப்பதற்கு முன்னால் ராத்திரி ஸூக்தத்தையும், சண்டி சப்த சதியை பாராயணம் செய்த பின்னர் தேவி ஸூக்தத்தையும் படிக்க வேண்டும் என்பது நியதி. சண்டி சப்த சதியை பாராயணம் செய்யும் காலத்தில் இந்த இரண்டு ஸூக்தங்களையும் பாராயணம் செய்யாவிடில் சண்டி சப்த சதியை பாராயணம் செய்ததின் பலன் கிடைக்காது.
நவாக்ஷரி மந்திரம்:- நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். அந்த ஒன்பது அட்ஷரங்களை கொண்ட மந்திரத்தை பாராயணம் செய்து ஒன்பது ரூபங்களைக் காட்டும் துர்கா தேவியை வேண்டி துதிப்பதையே சண்டி காயத்திரி என்பார்கள். நம்முடைய மனதில் உள்ள மாயையை ஒழித்திட தினமும் இருபது முறை சண்டி காயத்திரியை படிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போதுதான் ஒருவர் பிரும்மன் என்ற நிலையை அடைவார். அந்த நிலையே மாயையை விலக்கிக் கொள்ளும் நிலை மற்றும் ஆனந்தம் என்பது. அந்த நிலைக்கு அதிபதியானவள் ஆனந்தி எனும் தேவி. அவளே மாயையை அழிக்கும் சாமுண்டா தேவி என்பவள். இந்த நவாக்ஷரி மந்திரத்தின் தெய்வங்கள் யார் தெரியுமா? அவர்களே மகா காளி, மகா லஷ்மி, மற்றும் மகா சரஸ்வதி என்பவர்கள். சப்த சதியின் முக்கிய மந்திரமே நவாக்ஷரி மந்திரம். நவாக்ஷரி மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சண்டி சப்த சதியை படித்தால் அதற்கு பூரண பலன் கிடைக்காது’.
மகரிஷி சுமேதஸ் சப்த சதி பாராயண முறையை கூறிக் கொண்டு இருந்தபோது இடையே சிறிது நேரம் அவர் மெளனமாக இருக்க சப்த சதி என்பதின் உள்ளடக்கங்கள் என்ன என்பதை சுருக்கமாகச் சொல்லுமாறு மன்னரும் வணிகரும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட மகரிஷியும் அவர்களுக்கு கூறத் துவங்கினார். ‘சண்டி சப்த சதி என்பது துர்கா தேவி எடுத்த மூன்று முக்கிய அவதாரங்களையும் அதில் அவள் நடத்திய திருவிளையாடளையும் பற்றிக் கூறுகின்றது. முதல் அவதாரக் கதையில் வேதங்களை திருடிக் கொண்டு ஓடிய மது மற்றும் கைதபா என்ற அசுரர்களை பிடிக்க பிரம்மா அவர்களை துரத்தியபோது அந்த அசுரர்கள் பிரும்மாவை அச்சுறுத்தியுள்ளார்கள். விஷ்ணுவின் கண்களில் தங்கியிருந்த தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் யோகநித்ரா எனும் தேவியை வேண்டிக் கொண்டு பிரம்மா பிரார்த்தனை செய்தார். அவள் துர்கா தேவியின் அவதாரமான தேவி மகாமயா என்றும் அழைக்கப்பட்டாள். மஹாமாயா தேவியிடம் அந்த அசுரர்களைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதினால் ஆழ்ந்த யோக உறக்கத்தில் இருந்த விஷ்ணுவை எப்படியாவது எழுப்பும்படி பிரம்மா கேட்டுக் கொண்டார்.
அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தேவி மஹாமாயா விஷ்ணுவை அவரது யோக நித்திரையில் இருந்து எழுப்பி, அந்த அசுரர்களை அவர்களுக்கு இருந்த விதிப்படி வஞ்சகத்தால் கொல்ல வைத்தார். அவர்கள் விஷ்ணுவால் கொல்லப்பட்டாலும், அவர்களை வஞ்சகத்தால் கொல்ல வைத்தவர் துர்கா தேவி அவதாரத்தில் இருந்த மஹாமாயா தேவிதான். தீய சக்திகளான அசுரர்களை பல்வேறு யுத்தங்களில் அழித்த துர்கா தேவி அதற்காக வஞ்சகத்தின் மூலம் அழிப்பது போன்ற பல்வேறு யுத்த முறைகளைப் பயன்படுத்தினார். எல்லோரிடமும், தெய்வங்களில் கூட மாயையை உருவாக்கும் சக்தி அவளுக்கு இருக்கிறது. அவள் மனதை கட்டுப்படுத்தும் சக்தியை பயன்படுத்தும் பொழுதெல்லாம் அவளை மஹாமாயா தேவி என்றே அழைத்தார்கள்.
இரண்டாவது அவதாரக் கதை தேவியின் மிகவும் பிரபலமான வடிவமான மஹிஷாசுரமர்தினியின் கதை ஆகும். பண்டைய காலத்தில் இந்திரன் தலைமையிலான தேவதைகள் மஹிஷாசூரன் எனும் அசுரனின் தலைமையிலான அரக்கர்கள் சேனைக்கு எதிராக போராடினார்கள். அதன் காரணம் அசுரன் மஹிஷா இந்திரனின் சக்திகளை தனது சக்திகளாக மாற்றிக் கொண்டான். பிரபஞ்சத்தின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி தேவர்களையும் இந்திரனையும் துரத்தி அடித்தான். ஆகவே தேவர்கள் அனைவரும் விஷ்ணு மற்றும் சிவபெருமானிடம் சென்று பாதுகாப்பு கோரியபோது, அதைக் கேட்டு கோபம் கொண்ட அவர்களது சக்தியில் இருந்து கம்பீரமான சிங்கத்தின் மீது அமர்ந்து இருந்த கோலத்தில் மஹிஷாசுரமர்தினி என்ற பெண் வடிவத்தில் தேவி வெளிவந்து மஹிஷாவின் அசுரர் சேனையுடன் போரிட்டு அந்த அரக்கனின் தலையை துண்டித்து அழித்தாள்.
மூன்றாவது கதை ஷும்பா மற்றும் நிஷும்பா என்று அழைக்கப்படும் அசுரர்களைக் கொன்ற கதை ஆகும். அவர்கள் இந்திரனையும் மற்ற தேவர்களையும் துரத்தி அடித்து அவர்கள் இருப்பிடங்களை கைப்பற்றினார்கள். அதனால் அவதிப்பட்ட தேவர்கள் பார்வதி தேவியின் உதவியை நாடியபோது, அவள் உடலில் இருந்து தேவி அம்பிகா என்று அழைக்கப்படும் அவதாரத்தை வெளி வரச் செய்து அந்த அசுரர்களை வஞ்சகத்தால் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்’.
இப்படியாக மகரிஷி கூறிய பரமேஸ்வரி தேவியின் மகிமையைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன மன்னரும் வணிகரும் சண்டி சப்த சதியின் ஆராதனை நியமத்தை குறித்த மேலும் செய்திகளைக் கூறுமாறு வேண்டினார்கள். அதுவரை அமைதியாக மகரிஷி கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வணிகன் சமாதி, மகரிஷியை கேட்டான் ‘மகரிஷியே, நீங்கள் தேவி ஸூக்தம், தேவி ஸூக்தம் என்று கூறினீர்களே அந்த தேவி என்பவர் யார் ? அந்த மந்திரத்தின் மகிமைதான் என்ன? மகரிஷி சுமேதஸ் கூறலானார் ‘வணிகனே, தேவி ஸூக்தம் என்பது எல்லையற்ற மஹிமையை உடைய தேவியின் அருளை பெற அனு தினமும் ஓதப்படும் பிரார்த்தனை ஸ்லோகங்கள். அது தேவியின் மேன்மையை புகழ்ந்து கூறும் ஸ்லோகம் ஆகும். அதையே தேவி ஸூக்தம் என அழைக்கின்றார்கள். சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்றே தேவி ஸூக்தமும் ஆகும். தேவி என்பவர் துர்கை எனும் மஹா பரமேஸ்வரி ஆவார். நான் ஏற்கனவே கூறியபடி அவற்றை இயற்றியது மனிதர்கள் அல்ல மற்றும் வேறு யார் அவற்றை இயற்றியது என்பது தெரியவில்லை என்றாலும், கண்களுக்கு புலப்படாத அம்ப்ருண என்ற ரிஷியின் மகளான பெண் தேவதை வாக் என்பவள் அவற்றை இயற்றியதாக கூறுகின்றார்கள். அவளே ஒரு பிரும்ம ரிஷி என்பதாகவும் அறியப்படுகிறது. அவள் எதற்காக தேவியின் தேவியின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்களை இயற்ற வேண்டும்? அதற்கும் காரணம் உள்ளது.
ஒவ்வொரு தேவியும் அவதரித்தபோது அந்தந்த தேவிகளின் மகிமைகளும் குணாதிசயங்களும் பெருமைகளும் எவர் மூலமாவது பூவுலகிற்கு தெரியபடுத்த வேண்டும் என்பது பரபிரும்ம நியதியாகவே இருந்தது. அந்த தெய்வங்களுக்கும் அந்த கட்டளை தரப்பட்டு இருந்தது. இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதின் காரணமும், அதில் நிகழ்வுற்ற தெய்வ லீலைகள், தெய்வங்களின் வழிபாடு மற்றும் தெய்வ அவதாரங்களின் காரணங்கள் போன்றவை நான்கு யுகங்களிலும் பிறப்பெடுக்கும் மானிடப் பிறவிகளுக்கு தெரியாமலேயே இருந்திடும். பிரபஞ்சம் படைக்கப்பட்டதின் பலனே இல்லாமல் போய் விடும். இன்னின்ன காரணங்களுக்கு, இன்னின்ன விளைவுகள், இன்னின்ன பரிகாரங்களை செய்ய வேண்டும், இன்னின்ன தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற அனைத்தையும் விளக்க வேண்டும். அதற்கான மந்திரங்களும், தந்திர வகைகளும் வெளிப்பட வேண்டும் என்பதாக கொடுக்கப்பட்டு இருந்த நியமங்களின்படி அந்தந்த அவதார தெய்வங்களே அவற்றை மகரிஷிகள், முனிவர்கள், பூமியில் அவதரித்த தேவதைகள் போன்றவர்கள் மூலம் விளக்கிட ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தன. ஆகவே அவை அவதரித்தபோது, தனது பரிவார தேவதைகள் மற்றும் தெய்வ கணங்கள் மூலம் தன்னைப் பற்றிய ஸ்துதி எனும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் கதைகளை மனிதர்களிடையே வாய் மொழி செய்தியாக பரப்பி, சில ரிஷிகள் மூலம் ஓலை சுவடிகளாகவும் எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட நியதியினால்தான் பரமேஸ்வரியான துர்க்கை தேவியும் தனது வரலாற்றுப் பெருமை மற்றும் தன்னை வணங்க வேண்டியதின் முறையையும் வாக் தேவதை போன்றவர்கள் மூலம் வெளிவர ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தேவியின் உண்மையான பெருமைகளை தானே பார்த்து, அனுபவித்து பிறருக்கும் பயன்படும் வகையில் அவளை துதிக்கும் மந்திரமாக அதை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வாக் தேவதைக்கு எழுந்ததினால்தான், அவள் தபம் செய்து, பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையை அடைந்தாள் (அநுபூதி நிலை என்பது, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி, எந்த ஒரு பேதமும் இல்லாமல் நிலைத்திருக்கும் மௌனமான ஆழ்ந்த ஞான நிலை ஆகும்). அந்த நிலையில் அவள் தேவியின் உணர்வோடு இருந்ததினால் அப்படியே தேவியைப் பற்றிய பெருமையை நேரடியாக உணர்ந்து, அவளுக்கு அந்த நிலையை பொறுமையாக இருந்து பார்த்து, அதன் பின் பழைய நிலையை அடைந்து, வாய்மொழி செய்தியாக மஹரிஷி வியாசரிடம் வாக் தேவதை அதைக் கூற, அவரே ரிக் வேத பாஷணைகளை தமது சீடர்களான ஜைமினி பில்லா, வைசம்பயானா மற்றும் சமந்தாவிடம் கூறி அவற்றை ரிக் வேதத்தில் இணைத்து இருக்கலாம் என்பதான எண்ணம் பண்டிதர்களிடையே உள்ளது. அந்த தேவியின் பெருமையை காட்டும் ஆத்ம ஸ்துதியினுள் அடங்கி உள்ள கருத்துக்கள் இவை :
‘நானே வசு, ருத்திரர்கள், ஆதித்ய மற்றும் விஸ்வ தேவர்களாக சஞ்சரிக்கிறேன். அவர்கள் என்னுள்தான் உள்ளனர். பிரும்ம ஸ்வரூபமாக இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன். உலகின் அனைத்தையுமே என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.
சோம யாகம் செய்து, த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய ஸ்தானத்தில் அமர வைத்து அவர்களுக்கு ஹவிஸ் தரும் பக்தனுக்கு அளவற்ற ஐஸ்வர்யத்தைத் தருவேன். நானே பரமேஸ்வரி, அனைத்து ஐஸ்வரியங்களையும் தருபவள், யாகங்களில் முதல் தெய்வமான பர பிரும்மத்தை அறிந்தவள், பல வடிவங்களில் தோன்றியவள், பல தேவதைகளே என்னை பல இடங்களிலும் ஸ்தாபனம் செய்து உள்ளார்கள். அங்கெல்லாம் நானும் வசிக்கிறேன்.
மனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன. என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம். நான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.
கடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான். என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான். பிரபஞ்சத்தின் தந்தை போன்ற வானம் நான் படைத்ததே, அதையும் என் உடலால் தொடுகிறேன். அது போலவே ஆழ் கடலின் உள்ளே நான் யோனியாக இருப்பதினால்தான் உயிரினங்கள் அனைத்திலும் நான் உள்ளேன். அவற்றின் மூச்சுக் காற்றாக உள்ளேன். எனது மகிமையோ பூமிக்கும் வானத்திற்கும் அப்பாற்பட்டது. வானத்திலும் பூமியிலும் நானே வியாபித்துள்ளேன்’.
மகரிஷி சுமேதஸ் தொடர்ந்து கூறலானார். ‘சண்டி சப்த சதி பாராயணம் செய்யும் முன் கண்டிப்பாக கூற வேண்டிய மந்திரங்கள் கவசம், அர்கலா மற்றும் கீலகா போன்ற மூன்றும் ஆகும். அசுரர்களின் தலைவனான ராவணன் சண்டி சப்த சதி பாராயணம் செய்யும் முன் கவச மந்திரத்தை ஓத மறந்து விட்டான், ஆகவே அவன் ராமரால் கொல்லப்பட்டான். அசுரன் அருணாசுரன் பிரம்மாவின் கிருபையைப் பெற்றிருந்தாலும், சிவபெருமானும் தேவியும் இணைந்து இருந்த சக்திகளால் மரணத்தை சந்திக்க நேர்ந்தது, அதன் காரணம் அவன் சண்டி சப்த சதி பாராயணம் செய்தபோது அந்த பாராயணத்தை சரியான நடை முறையை பின்பற்றி செய்யவில்லை. மந்திரங்களில் மேலானதும், சக்தி வாய்ந்ததுமான சண்டி சப்த சதியின் மந்திரங்களில் அர்கலாவை மகா விஷ்ணுவும் கீலகாவை சிவபெருமானும், கவச மந்திரத்தை பிரம்மாவும் அசுரன் அருணாசுரனுக்கு போதனை செய்தார்களாம்.
சண்டி சப்த சதி பாராயணம் செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம் (Chapter-1), மத்தியம சரிதம் (Chapter-2,3,4) மற்றும் உத்தம சரிதம் (Chapter-5 to 13) என மூன்று பாகங்களாக உள்ளது.
முதலாவதான பிரதம சரித பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயா எனும் காளி தேவியின் மாயையில் சிக்கிக் கொண்டு தவித்த தேவர்கள் மற்றும் பிற தெய்வங்கள், மாயையில் இருந்து விடுபட அதே மாயையான லோக மாதா எனும் மகா காளியையே வழிபட்டு பிரார்த்திப்பதை கூறுகிறது. லோக மாதாவான மாயையில் விஷ்ணு பகவான் கூட சிக்கிக் கொண்டு அவள் சொல்படி நடக்க வேண்டி இருந்தது. இந்த பாகத்தில் லோக மாதாவை பகவான் பிரும்மன் துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது. மேலும் இந்த பாகத்தில் மதுகைடப சம்ஹாரம் வருகின்றது.
மத்யம சரிதம் எனும் இரண்டாம் பாகத்தில் காணப்படும் அத்தியாயம் இரண்டு முதல் நான்கு வரை அசுரன் மஹிஷாவின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள் பராசக்தியான தேவியை ஸ்தோத்திரம் செய்வது, மற்றும் அசுரன் மகிஷாசுரனின் சைனியம் அழிந்த கதை, மகிஷாசுரனின் வதம் போன்றவை விவரிக்கப்பட்டு உள்ளது. சகல தேவர்களின் உடல்களில் இருந்தும் பல சக்திகள் வெளிப்பட்டு மகாலஷ்மி எனும் மகிஷாசுரமர்தினியான ஒரே அம்பிகையாக அவதாரம் பூண்ட கதையும் உள்ளது.
உத்தம சரிதம் எனும் மூன்றாவது பாகத்தில் ஐந்து முதல் பதிமூன்று (5-13) பாகங்கள் உள்ளன. இந்த பாகத்தின் ஆறாம் அத்தியாயத்தில் தும்ரலோசன வதம், ஏழாவதில் சண்ட-முண்ட அசுரர் வதம், எட்டாவதில் ரக்தபீஜ வதம், ஒன்பதில் நிசும்ப வதம், போன்றவை விவரிக்கப்பட்டு உள்ளன. இந்த மூன்றாம் பாகம் அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
உத்தம சரிதத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம் சண்டி சப்த சதியினைப் பாராயணம் செய்வதினால் ஏற்படும் அனைத்து நன்மைகளையும் தேவியே கூறுவது போல அமைந்துள்ளது. அந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறி உள்ளது இதுதான் ‘இந்த துதிகளினால் யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி போன்ற மேன்மையான தினங்களில் இதைப் படிப்பவர்களை பாவங்கள் அண்டாது. இந்த மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது எங்கு படிக்கப்படுமோ அங்கு எல்லாம் நான் நிரந்தரமாக இருப்பேன்.
பூஜை, ஹோமங்கள் நடைபெறும் இடங்களில் இதை பாராயணம் செய்தால் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பக்தர்களின் குலமும், கோத்திரமும் மேன்மையாக விளங்கும். பக்தர்களின் இல்லங்களில் மங்களம் நிலைக்கும். எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி காரியங்களும் (ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம் இந்த மான்மியம் படிக்கப்பட வேண்டும். வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம், அன்ன தானம், தூப தீபம், மற்றும் புஷ்ப தானம் போன்றவற்றினால் கிடைக்கும் பலன் அதிகமே என்றாலும் ஒரே ஒரு தடவை இந்த மகாத்மியத்தைப் படிப்பதின் மூலம் அவற்றை விட அதிக பலன் கிடைக்கும்’.
மகரிஷி மேலும் கூறினார் “மூல மந்திரங்களை படித்து முடித்தப் பின்னர் 13 அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதியை படித்து முடித்ததும், அதை பாராயணம் செய்பவர் உத்தரங்கம் எனும் பகுதியில் உள்ள ஸ்லோகங்களையும் படித்தப் பின் தேவி ஸூக்தம் அல்லது வாக் அம்ருனிய ஸூக்தம் என்பதையும் படித்து நிறைவு செய்ய வேண்டும்’ என்றார்.
சப்த சத்தியில் உள்ள முழு ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யும்போது இடையில் நிறுத்தி விட்டு சில மணி நேரம் பொறுத்து மீண்டும் பாராயணத்தை தொடரக் கூடாது. நடுவில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓத வேண்டும். (நடுவில் நிறுத்தாமல் படிக்க வேண்டும் என்பது அங்கேயே அமர்ந்த நிலையில் தண்ணீர் அல்லது குளிர் பானம் குடிக்க நிறுத்துதல், ஓரிரு நிமிட நேரம் மூச்சு விட நிறுத்துதல் மற்றும் விளக்கில் எண்ணெய் விட நிறுத்துதல் போன்றவற்றுக்கு பொருந்தாது. நடுவில் நிறுத்தாமல் என்பது சிரமப் பரிகாரம் போல கால் மணி நேரத்துக்கும் அதிக அளவிலான நேரத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்வதை குறிக்கும்). மற்றும் சில காரணங்களால் சப்த சதியை முழுமையாக படிக்க முடியாவிடில், அவர்கள் மத்யம சரித்ராவின் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும். சில காரணங்களால் பாராயணத்தை நடுப் பகுதியில் பாராயணத்தை கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், மீண்டும் பாராயணத்தை துவங்கும்போது அந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து பாராயணத்தை படிக்கத் தொடங்க வேண்டும். வேக வேகமாக பாராயணம் செய்யக் கூடாது, அதை போல மிக நிதானமாகவும் அதை பாராயணம் செய்யக் கூடாது. மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகவும் பக்தியுடனும் உச்சரிக்கப்பட வேண்டும்.
சில காரணங்களால் தொடர்ந்து ஒரே நாளில் பாராயணம் செய்து முடிக்க முடியவில்லை என்றால், அதை ஏழு நாட்களில் செய்யும் பாராயணமாக செய்யலாம். அந்த நிலையில் உதாரணமாக நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பாராயணத்தை துவங்குவதாக உள்ளது என்றால் , கீழே உள்ள அட்டவணைப்படி அதை செய்யலாம்.

• அத்தியாயம் -1 ஞாயிறு
• அத்தியாயம் -2 & 3 திங்கள்
• அத்தியாயம் -4 செய்வாய்
• அத்தியாயம் -5 to 8 புதன்
• அத்தியாயம் -9 & 10 வியாழன்
• அத்தியாயம் -11 வெள்ளி
• அத்தியாயம் -12 & 13 சனி

சப்த சதியில் காணப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக இருக்கிறாள். அவர்கள் யார் ?

• அத்தியாயம் -1 மஹாகாளி
• அத்தியாயம் -2 மகா லஷ்மி
• அத்தியாயம் -3 சங்கரி தேவி
• அத்தியாயம் -4 ஜெய துர்கா
• அத்தியாயம் -5 மகா சரஸ்வதி
• அத்தியாயம் -6 பத்மாவதி
• அத்தியாயம் -7 மாதங்கி
• அத்தியாயம் -8 பவானி
• அத்தியாயம் -9 அர்த்தாம்பிகா
• அத்தியாயம் -10 காமேஸ்வரி
• அத்தியாயம் -11 புவனேஸ்வரி
• அத்தியாயம் -12 அக்னி துர்கா
• அத்தியாயம் -13 தாரிகா பரமேஸ்வரி

முற்றியது