சாந்திப்பிரியா
பாகம்-9
சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை
அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார். அவனும் அவரை தில்லை வனத்துக்கு அழைத்துப் போவதாகவும், அங்கு உள்ள முனிவரை சந்தித்தால் அந்த இடத்தின் மேன்மையை அவர் கூறுவார் என்று கூறியப் பின் யோகத்திலே அமர்ந்திருந்த வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். வியாக்கிரபாத முனிவரைக் கண்ட சிங்கவர்மர் அவரை நமஸ்கரித்து கண்களில் கண்ணீர் தழும்ப அவரிடம் தனது வரலாற்றை எடுத்துரைத்தார். தாம் உடல் கோளாறு கொண்டதினால் அரசாளத் தகுதி இன்றிப் போய்விட்டதாகவும், ஆகவே பல இடங்களுக்கும் சென்ற வண்ணம் குறைந்த பட்ஷம் முக்தி இன்பத்தையாவது பெறமுடியுமா என்பதற்காக இடமிடமாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டு வருவதாகவும், இங்கும் முக்தி இன்பம் (மோட்ஷம் பெறுவதற்கான வழி முறை ) கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ளவே வந்ததாகவும் கூறினார்.
அதைக் கேட்ட வியாக்கிரபாதரும் அவருடைய மனக் குறையை அறிந்து கொண்டு அவர் மீது இறக்கம் கொண்டார். அவரை அங்கேயே அமர்ந்து இருக்குமாறு கூறி விட்டு பதஞ்சலி முனிவரிடம் சென்றார். அவரிடம் சிங்கவர்மனின் கதையை கூறிய பின் என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசனை செய்தார்கள். முடிவாக அவர்கள் இருவரும் சிவபெருமானிடமே சென்று முறையிடலாம் என முடிவு செய்து விட்டு கனக சபையின் வாயிலிலே சென்று நின்று கொண்டு சிவபெருமானிடம் மனமுருகி வேண்டினார்கள் ‘எம்பெருமானே, இங்கு கெளடதேசத்தை சேர்ந்த குமாரன் ஒருவன் வந்து உம்மை சரணடைந்து நிற்கிறான். அவனது உடல் குறையை நீக்கி, அவனுக்கும் உமது திருக்காட்சியைத் தந்து அவனை உமது அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’.
அதைக் கேட்டு இரக்கம் கொண்ட நடன சபாபதி அவர்கள் முன் தோன்றினார். அதன் பின் அவர் ‘முனிவர்களே, உங்கள் வேண்டுகோட்களை கேட்டேன். அந்த குமாரனை முதலில் பொற்றாமரை குளத்திலே ஸ்நானம் செய்யுமாறு கூறியப் பின் இங்கு அழைத்து வாருங்கள் ‘ என்று கூறி அனுப்ப அவர்களும் உடன் கிளம்பிச் சென்று சிங்கவர்மரை சிவகங்கை நதியிலே குளிக்கச் செய்து அவரை கனக சபைக்கு அழைத்து வந்து அங்கு நமஸ்கரிக்கச் சொன்னார்கள்.
அவரும் அதுபோலவே செய்தப் பின் கனக சபைக்கு வந்து நமஸ்கரித்து எழுந்தவுடன் ஆனந்த நடராஜர் அவருக்கும் காட்சி தந்தார். அவர் காட்சியைப் பெற்ற சிங்கவர்மரின் உடல் கோளாறு அந்தக் கணமே மறைந்தது. அவர் நல்ல உடல் நிலையுடன் தோற்றம் கொண்டார். ஆகவே அவர் இரண்யவர்மன் என்ற பெயரைப் பெற்றார். இரண்ய என்பது விடுதலைப் பெற்ற என்பதாகும். கண்களில் தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட, நெஞ்சம் சிலிர்க்க, நெஞ்சே வெடிக்க, நடராஜர் முன்னிலையில் விழுந்து விழுந்து வணங்கி ஆனந்தம் மேற்பட அழுதார். அதன் பின் அவரிடம் சிவபெருமான் கூறினார் ‘ இரண்யவர்மனே , இன்று முதல் நீயும் இங்கேயே தங்கி இருந்து நமக்கும், வியாக்கிரபாதா முனிவர் , பதஞ்சலி முனிவர் மற்றும் இங்குள்ள மூவாயிரம் முனிவர்களுக்கும் தொண்டு செய்து வருவாயாக’ என்று ஆசிர்வதித்தார்.
அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த வியாக்கிரபாதா முனிவர் அங்கிருந்து கிளம்பி இரண்யவர்மனை தன்னுடன் அழைத்துச் சென்று தமது மனைவியிடம் சென்று கூறினார் ‘பத்தினிப் பெண்ணே , உபமன்யுவிற்குப் பிறகு நீ பெற்றேடுக்காதப் பிள்ளை இவர் ‘ என்று அவரை அறிமுகம் செய்து அவர் வரலாற்றைக் கூற, இரண்யவர்மரும் ‘தாயே , என்னை ஆசிர்வதியுங்கள்’ என்று கூறி விட்டு அவள் காலில் விழுந்து வணங்கினார். அன்று முதல் இரண்யவர்மரும் அவர்களுடனேயே தங்கி இருந்து அனுதினமும் சிவகங்கையிலே நீராடி சிவபெருமானை ஆராதித்து, முனிவர்களுக்கு தொண்டு செய்தவாறு அங்கு இருந்து வந்தார்.
…..தொடரும்