சாந்திப்பிரியா
உடனே காவேரியும் அந்த நதியில் இருந்து வெளி வந்து தன் சுய உருவைக் காட்டினாள் . அகஸ்த்தியர் கேட்டார் ‘ஜகன்மாதா, நீ எங்கு சென்று விட்டாய்? மந்தஹாசமுள்ளவளே , மூன்று குணங்களிலும் சிறந்தவளே, அழகானவளே, லஷ்மிக்குத் தோழியானவளே , ஸ்ரீபதியின் சக்தி வடிவமானவளே, நீ எங்கு சென்று விட்டாய். என் மீது உனக்கு என்ன கோபம். எனது முன்னிலையில் நீ சென்று இருக்கலாம் அல்லவா ?’ என்றெல்லாம் கூறி அவளை அஞ்சலி செய்தார்.
அதற்கு காவேரி கூறினாள் ‘ யோகீந்த்திரா, உமது ஆக்ஞயை ஏற்றுக் கொண்டல்லவா நான் இந்த மலையில் இருந்து ஏற்கனவே முடிவானபடி கிளம்பிச் சென்றேன். சஹஸ்ய மலையில் இருந்துதான் நான் விஷ்ணுவின் அவதாரமான தத்தாத்திரேயரின் பாத சரணங்களை தொட்டுக் கொண்டு கிளம்ப வேண்டும் என்று பிரும்மாவும் விஷ்ணுவும் கூற நீங்களும் அதை ஆமோத்தித்தீர்கள் அல்லவா. அதனால்தான் உங்களையும் நினைத்துக் கொண்டுதான் பிரும்மகிரியில் இருந்துக் கிளம்பினேன். புண்ணிய காலத்தில் கிளம்ப வேண்டும், அதற்க்கு நேரமாகி விட்டது என்பதினால் நீங்கள் இல்லாவிடிலும், உங்கள் நினைவை என் இதயத்தில் வைத்துக் கொண்டு அல்லவா கிளம்பினேன். என்னுடன் அந்த புண்ணிய காலத்தில் புறப்பட்டு வர பல புண்ணிய தீர்த்தங்களும் அங்கு காத்துக் கிடந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி கால தாமதத்தை தவிர்ப்பதற்காக உடனே துலா மாதத்தில் நான் கிளம்ப வேண்டியதாயிற்று. மகா பாபிகளாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் எனது மகாத்மியத்தை சொல்பவர்களும், கேட்பவர்களும் விஷ்ணு பதத்தை அடையட்டும் என்று வேண்டிக் கொண்டுதான் இங்கிருந்துக் கிளம்பினேன். யோகின், விஷ்ணுவின் ஆணையை ஏற்று அவர் பாத ஜலத்துடன் கிளம்பும்போது சர்வ துக்கங்கள் நீங்கவும், சர்வ பாபங்கள் அகலவும், சர்வ தோஷங்கள் நீங்கவும் என்ன தக்ஷிண கங்கை என்று போற்றி அனைவரும் என்னுள் ஸ்நானம் செய்து பூரண கதி அடைய வேண்டும் என்றுதான் நதியாகக் கிளம்பினேன். என் நதியில் ஒரு நாள் ஸ்நானம் செய்ததாலும் அனைத்து பாபங்களும் விலகும். நெல்லி மரமாகிய பகவானின் பாதாத்திற்கு பிரும்மா ஆகாச கங்கை எனப்படும் மாபெரும் புண்ணிய தீர்த்தமான வீராச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேக நீரும் கலந்து வந்துள்ளதால் என் நதிக் கரையில் பிரும்மனை நாடி பிண்டத்தைத் தந்தால் கயாவில் சிரார்த்தம் செய்தப் பலனை பித்ருக்களுக்குத் தரும் என்றெல்லாம் சங்கல்ப்பம் செய்து கொண்டுதான் உடனடியாக கிளம்பினேன். நான் உள்ளவரை லோகம் உங்களையும் நினைவில் வைத்து இருக்கும். நான் தென் திசைக்கு வந்ததின் காரணம் நீர் அல்லவா. ஆகவே என்னால் உங்களுக்கும் பெருமை வரட்டும் என்று வேண்டிக் கொண்டே கிளம்பினேன். நாம் எதற்காக இங்கு வந்தோமோ அது நடந்து முடிந்து விட்டது. ஆகவே இனி நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள்.
இப்படியாக காவேரி கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அகஸ்த்தியர் கூறினார் ‘ஓ, தேவி, நடந்தது எல்லாமே நல்லதற்குத்தான். உன்னிடம் நான் வைத்து இருந்த அன்பினால்தான் நான் உன்னைப் பிரிந்து விட்டது போல உணர்ந்தேன். ஜகதாம்பிகே, நீ உன் எண்ணப்படி உலகத்தைக் காக்கக் கிளம்பிச் செல். நானும் அதற்கு ததாஸ்து கூறுகிறேன். ஹரிபாத தீர்த்தம், சங்கம தீர்த்தம் என்று உன்னை அனைவரும் புகழ் பாடுவார்கள். உன்னில் ஒரு முறை ஸ்னானம் செய்தாலும் அநேக பாபங்கள் அகலட்டும். நெல்லி மரமாகிய பகவானுக்கு பிரும்மா விராஜ தீர்த்ததினால் அபிஷேகம் செய்தார் என்பதினால் அந்த ஆகாய கங்கை நீருக்குப் புனிதமானது இந்த லோகத்தில் வேறு ஏது இருக்க முடியும்? உன் கரைகளில் பித்ரு சிரார்த்தம் செய்தால் கயாவில் பத்தாயிரம் சிரார்த்தம் செய்ததற்கான பலன் உண்டாகட்டும். ஓ, காவேரி சகல புண்ணிய தீர்த்தங்களிலும் புனிதமானவளாக நீ இருப்பாய். நினைத்த இஷ்டங்களை நிறைவேற்றித் தருபவளாக நீ இருப்பாய். விவேகமானவளே , இப்போதே நீ தென் திசையை நோக்கிச் சென்று தட்ஷின கங்கை என்ற பெயரைக் கொள்வாயாக. நான் அனைத்து ரிஷி முனிவர்களுடன் உன் கரைகளில் வாசம் புரிவேன். அவ்வபோது நாராயணரும் எங்களுடன் வந்து உரையாடுவார். அத்தனை புனிதமான கரையில் வந்து வணங்கும் பக்தர்கள் வந்து பித்ரு தர்ப்பணம் செய்தாலும் அவர்களது பித்ருக்கள் தோஷ நிவாரணம் அடைவார்கள். வைகுண்டத்துக்கு செல்வார்கள். அதற்குக் காரணம் தத்தாத்திரேயர் தனது கைகளினால் உன் தலையை வருடி ஆசிர்வாதம் செய்ததினாலும், நாராயணனின் அவதாரமாகவே உள்ள அவருடைய பாதங்களை தொட்டுவிட்டு நீ பிரவாகித்துக் கொண்டு இருப்பதினால் உன்னுள் வசிக்கும் கடவுள்களின் சக்தி அமோகமானது. ஆகவே தென் நாட்டவருக்கு தர்மத்தையும், கீர்த்தியையும் அளிக்க உடனே கிளம்பிச் செல்’.
இப்படியாக தனது கணவரின் அனுமதியோடும், பிற தெய்வங்களின் ஆசிகளுடனும் சகாய மலையில் இருந்து ஜோவென்று சப்தமிட்டபடி பெரும் பிரவாகத்துடன் காவேரி கிளம்பிச் செல்ல வானம் முழுவதும் நிறைந்து இருந்த தெய்வங்களும், தேவர்களும், ரிஷி முனிவர்களும், அனைத்து கணங்களும் ததாஸ்த்து….ததாஸ்து என்ற கோஷத்தை எழுப்பியவாறு காவேரி நதியில் ஸ்னானம் செய்தப் பின் ‘இது உனக்காகட்டும்’ என்று தமது சக்தியின் ஒரு பாகத்தை அதில் விட்டப் பின் காவேரியை வழி அனுப்பி வைத்தார்கள்.
இப்படியாக கோடிக்கணக்கான தெய்வங்கள், தேவர்கள், கணங்கள் மற்றும் ரிஷி முனிவர்களின் ஆசிகளைப் பெற்ற காவேரி நதிக்க எண்ணிலா சக்தி பெருகியது. அவள் கிளம்பியதும் தேவ முனிகள், ரிஷிகள் என அனைவரும் அவளை ஆசிர்வதித்தார்கள். தேவதைகள் கூறினார்கள் ‘ ஆஹா. என்ன அற்புதமாக காவேரி காட்சி தருகிறாள். இவ்வளது பிரவாஹம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதது. அதை சர்வ வல்லமைப் படைத்த மகாதேவன் மட்டுமே அறிவார். நாம் எல்லோரும் அதிருஷ்டசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த காவேரி ஜலத்தில் பிராமணர்கள் நமக்கு தர்ப்பணம் செய்வார்கள். அரசர்கள் இதன் நதிக் கரையில் யாகங்கள் செய்து நம்மை ஆராதிப்பார்கள். உலக நன்மைக்காக பிரும்மாவினால் படைக்கப்பட்டவள் இவள்’ . ரிஷி முனிவர்கள் கூறினார்கள் ‘கலியை அகற்ற வல்லவலான காவேரியை பகவான் அல்லவா இந்த லோகத்துக்கு அனுப்பி உள்ளார். இந்த தீர்த்தம் பாலவனங்களை சோலைவனங்களாக அல்லவா ஆக்கும். இனி இதில் ஸ்நானம் செய்துவிட்டு நாம் யம பயமின்றி இருக்கலாம். இவள் பூமிக்கு சிறந்த ஆபரணம். காவேரி ஜெய ஜெய ….காவேரி ஜெய ஜெய ‘ என்று வாழ்த்துப் பாடியாப்பின் அதில் உடனேயே ஸ்நானம் செய்யத் தொடங்கினார்கள் .
அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பிரும்மா கூறினார் ‘ காவேரி உன் தீர்த்தத்தில் வசிப்பவர்கள் துர்புத்தி அடைந்தவர்கள் ஆனாலும், பாபிகளானாலும் அவர்கள் நற்கதியையே அடைவார்கள். வேதத்தைக் கற்காத பிராமணர்களும் உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும்போது அவர்கள் வேதம் பயின்ற பலனைத் தர உள்ளாய். வாசுதேவனை துளசிதளத்தினால் நூறாண்டு பூஜை செய்தால் என்னப் பலன் கிடைக்குமோ அத்தனைப் பலன் உன்னுள் ஸ்நானம் செய்பவர்களுக்கு கிடைக்க உள்ளது. உன் நதியில் வந்து ஸ்நானம் செய்தப் பின் அன்னதானம் செய்பவன் கோடி ஆண்டு புண்ணியத்தைப் பெறுவான். உன் மகிமையை நூறாண்டு ஆனாலும் கூறி முடிக்க முடியாத அளவு மேன்மைக் கொண்டவள் நீ. ஸ்ரீரங்கன் சன்னதியில் காவேரி ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் அகலும். துலா மாதத்தில் உன்னில் ஸ்நானம் செய்தால் நூறு பிறவிகள் செல்வந்தனாகப் பிறப்பான். குருஷேத்திரத்திலும் கயாவிலும் கோடி சிரார்த்தம் செய்ததின் பலன் இங்கு உன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஒரே ஒரு முறை தர்ப்பணம் செய்பவனுக்குக் கிடைக்கும்’ என்று கூறி அவளை ஆசிர்வதித்து அனுப்ப ஓ..ஓ…. என்ற ஓசையுடன் பிரவாகித்துக் கொண்டு சென்றவள் சமுத்திரராஜனுடன் கலந்தாள்.