சாந்திப்பிரியா

அவர் குரலைக் கேட்டவள் கண்களை விழித்து எழுந்தாள் . அவரை நமஸ்கரித்து அர்கியம் பாத்யம் முதலியவற்றை தந்தாள். அப்போது அகஸ்தியர் கூறினார் ‘ தேவி நான் பிரும்மாவின் கட்டளைப்படி இங்கு வந்துள்ளேன். என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்’. உடனே அவள் கூறினாள் ‘முனீஸ்வரா, நீங்கள் கூறியதை நான் செய்வேன். ஆனால் நீங்களும் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் விஷ்ணுமாயா என்ற தேவ கன்னிகை. பிரும்மாவினால் படைக்கப்பட்டவள். என்னுடைய இன்னொரு அம்சம் லோபாமுத்ரா என்பவள் ஆவாள். லோக ஷேமத்திற்காக நான் காவேரி எனும் நதியாக மாறி தென் திசையில் பயணம் செய்ய உள்ளேன். பதினான்கு லோகங்களிலும் உள்ள அறுபத்தி நான்கு கோடி தீர்த்தங்களும் நதி ரூபமாக என்னுடன் வரட்டும். என் நதியில் ஒருநாள் ஸ்நானம் செய்தாலும் கூட யாகங்கள் மற்றும் விரதங்களைனால் கிடைக்கும் புண்ணியத்தைப் பெறவேண்டும் . என் கரையில் உள்ள பூமி சத்ய பூமியாக விளங்கும். என் அருகில் ஒருமுறை சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் அதீத திருப்தி அடைந்து வைகுண்டம் செல்வார்கள். என் கரைக்கு வந்து என்னை தரிசித்தால் கூட போதும், அவர்கள் பாபிகளாக இருந்தாலும் அவர்களின் பாபங்கள் விலகும். இப்படிப்பட்ட புனிதத்தை எனக்குக் கொடுத்தால் என்னுடைய இன்னொரு அம்சமான லோபாமுத்ரா என்ற பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். நானும் உங்கள் அருளினால் காவேரி எனும் நதியாகவும் ஓடிக் கொண்டு இருப்பேன்’.
அதைக் கேட்ட அகஸ்தியர் கூறினார் ‘தேவி உன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பிரும்மா எனக்கு ஏற்கனவே கூறிவிட்டார். புண்ணியமான பிரும்மகிரிக்கு சஹத்யகிரி என்றப பெயரும் உண்டு. அங்கு பகவானானவர் தத்தத்திரேயர் என்ற யோகியின் உருவில் ஒரு நெல்லி மரத்தின் அடியில் வசித்து வருகிறார் . அவரது பாதங்களை நனைத்துக் கொண்டு நீ அங்கிருந்து காவேரி நதியாக புறப்பட்டுச் செல். பாவிகளை பவித்திரர்களாக்கு. உன் பெருமை மேலோங்கும். இந்த வரம் உனக்கு ஏற்கனவே கிடைத்து உள்ளது என்றாலும், என்னுடைய சம்மதத்தினால் அது மேலும் சக்தி பெரும். ஆகவே ஏற்கனவே உனக்கு கிடைத்துள்ள வரத்தை மீண்டும் நான் தருவது போல கூறுவது முறை அல்ல. ஆகவே உனக்கு சந்தோஷம் தரும் என்றால் நான் உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன். ஏழு கடல்களிலும் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்நானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதே அளவு புண்ணியத்தை உன்னிடம் ஏகாதசியில் வந்து ஸ்நானம் செய்தால் கிடைக்கும்’.

அதைக் கேட்டவளின் மனம் சந்தோஷப்பட தன்னுடைய உடம்பும் திடீர் என பெருத்து இருந்ததைக் கண்டாள். உடனே எழுந்தவள் தன்னை அழகுற அலங்கரித்துக் கொண்டு அவர் பாதங்களை நமச்கரித்தப் பின் ஒரு பெரிய நதியாகி அவர் கமண்டலத்தில் புகுந்து கொண்டாள். அவள் கமண்டலத்தில் சென்றதும் அங்கு லோபாமுத்ராவும் தோன்ற முனிவர் அபார சந்தோஷம் அடைந்தார். தேவாதி தேவர்களை அழைத்தார். அடுத்த சில நிமிட காலத்திலேயே அங்கு தேவ சமாஜமே கூடி இருந்தது. பரமேஸ்வரர் முதல், பிரும்மா மற்றும் மகா விஷ்ணு வரை அனைவரும் தத்தம் பதிகளுடன் அங்கு குமுழினார்கள். அகஸ்தியருக்கும் லோபாமுத்ராவுக்கும் கந்தர்வ விவாஹம் நடந்தது. அகஸ்தியரும் மும்மூர்த்திகளையும் நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார். விஷ்ணு கூறியதற்கு ஏற்ப பிரும்மா லோபாமுத்ராவை தன பெண்ணாக கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஆகாயத்தில் மங்கள வாத்தியம் ஒலித்தது. அனைத்து தேவ ரிஷி முனிவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்கள். சிவனையும் மகாவிஷ்ணுவையும் நமஸ்கரித்த அகஸ்தியர் அவர்களின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து அதை தானும் அருந்தி மற்றவர்களுக்கும் கொடுத்தப் பின் அந்த தீர்த்தத்தை கமண்டலத்தில் ஏற்கனவே இருந்த காவேரி மேலும் புனிதம் அடையும் வகையில் தனது கமண்டலத்தில் இருந்த காவேரி நதியுடன் கலந்தார்.
அந்த விவாஹம் முடிந்ததும் லோபாமுத்ராவை அழைத்து தனது மடி மீது அமர வைத்துக் கொண்ட சரஸ்வதி தேவி அவளுக்கு சில புத்திமதிகளைக் கூறினாள். அவளைத் தொடர்ந்து பார்வதி மற்றும் லஷ்மி தேவியும் அவளுக்கு சில புத்திமதிகளைக் கூறி ஆசிர்வதித்தார்கள். இப்படியாக லோபாமுத்ரா மூன்று பெரும் தேவிகளின் அரவணைப்பை பெற்றாள் . அதைத் தொடர்ந்து பிரும்மாவை பார்த்த அகஸ்தியர் கூறினார் ‘பிரபோ, நீங்கள் கூறியபடி நான் கிரஹஸ்தானாகி விட்டேன். தாண்ட முடியாத பிறவிக் கடலை தாண்டும் வழியை இப்போதாவது எனக்குக் கூற வேண்டும்’ என்று கூற மகாவிஷ்ணுவை நோக்கி புன்னகைத்தார் பிரும்மா. உடனே விஷ்ணு கூறினார் ‘ முனிவரே, நீர் இளமையிலேயே சம்சாரத்தில் விரக்தராக உள்ளவர். புண்ணியங்களை செய்தவர். சகல தர்மங்களும் உனது கரத்தில் அல்லவா இப்போது உள்ளது (கமண்டலத்தில் உள்ள நதியைக் கூறினார்). ஆகவே உமக்கு முக்தி கிடைக்க ராம மந்திரத்தைக் கூறுகிறேன். அதை உபாசித்து முக்தி அடையும்’ என்று கூறிய பின் அவருக்கு ராம மந்திரத்தை உபதேசித்தார்.

அடுத்து பரமேஸ்வரரை தனது கணவருடன் சேர்ந்து நமஸ்கரித்த லோபாமுத்ராவைப் பார்த்து பரமசிவனார் கூறினார் ‘ காவேரி, நீ ஓடும் எங்கு வேண்டுமானாலும் யார் வந்து ஸ்நானம் செய்தாலும் எனது கடாட்ஷம் அவர்களுக்குக் கிடைக்கும். மூன்று நாள் கங்கை நதியில் ஸ்நானம் செய்தாலும் , யமுனையில் ஐந்து நாட்கள் ஸ்நானம் செய்தாலும் அந்தந்த நதிக்கரைகளிலும் வசித்தாலும் எப்படி சகல பாபங்களும், தோஷங்களும், கர்மாக்களும் விலகுமோ அதைப் போல காவேரி நதியான உன்னில் யார் வந்து ஸ்நானம் செய்தாலும் அந்த ஷணத்திலேயே அவர்களது பாபமும், கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும். மேலும் நீ எங்கு சென்று தோன்றுவாயோ அந்த மூல இடத்தில் இருந்து நீ செல்லும் அனைத்து இடத்திலும் நானும் தேவ ரிஷி முனிவர்களும் தேவ கணங்களும் உன்னுள் வாசிப்போம். நீ செல்லும் இடங்கள் அனைத்தும் புண்ணிய பூமியாக இருக்கும்’.
அடுத்து அங்கிருந்த அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு அகஸ்திய முனிவருடன் கிளம்பி தென் திசையை நோக்கிப் புறப்பட்டாள். பிரும்மா கூறியபடி பிரும்மபுரியை அடைந்தார். அங்கு சென்றதும் அகஸ்தியரிடம் காவேரி கேட்டாள் ‘என்னை எப்போது வெளியில் விடுவீர்கள் நாதா?.’ அதற்கு அகஸ்தியர் ‘இன்னும் சில காலம் பொறுத்திரு பத்தினியே’ என்று அவளை சமாதானப் படுத்தியப் பின் அந்த கமண்டலத்தை பிரும்மபுரியில் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு தான் ஸ்நானம் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார்.
ஆனால் கமண்டலத்தில் இருந்த காவேரிக்கோ தான் உடனே வெளிக் கிளம்ப வேண்டும் என்ற உத்வேகம் அதிகம் இருந்தது. தன்னை பிரும்மாபுரியில் இருந்து வெளிக் கிளம்பலாம் என்று கூறியவர் இப்போது ஏன் தன்னை வெளியில் விட மறுக்கிறார். அவர் கூறி இருந்த நேரமும் கனிந்து வந்து விட்டப் பின்னும் ஏன் தயக்கம்? சரி அவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை ஒரு முகூர்த்த நேரம் காத்திருந்து பார்க்கலாம் என்று எண்ணியவாறு மெளனமாக அமர்ந்து இருந்தாள். அந்த நேரத்தில் பிரும்ம தனது ஹம்ச வாகனத்தில் ஏறிக் கொண்டு தென் பகுதிக்கு வந்தார். அவருடன் கோடி தீர்த்தங்களும் வந்திருந்தன. அதுதான் விஷ்ணு லோகமோ என்று எண்ணியவர் அங்கிருந்த மலை மீது இறங்கினார். ஷ்டாஷற மந்திரத்தை ஓதியவாறு அங்கிருந்த நதியில் குளித்தார். காற்று இதமாக வீசிக் கொண்டு இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவர் தூரத்தில் ஒரு நெல்லி மரம் இருந்ததைக் கண்டார். பரபரப்புடன் அதன் அருகில் சென்றதும் அவரது மனம் அமைதியாக இருந்தது. அதன் அடியில் சென்று அமர்ந்ததும் ஆகாயத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘பிரும்மனே இந்த விருஷத்தின் அடியில்தான் பலரும் அமர்ந்து கொண்டு ஹரியை துதித்து வைகுண்டம் சென்று உள்ளார்கள். நீயும் விஷ்ணுவை குறித்து இங்கு தவம் செய் ‘. அந்தக் குரல் மறைந்து விட்டது.
உடனே சற்றும் தயங்காமல் பிரும்மா அந்த மரத்தை நமஸ்கரித்தார். திவ்ய புஷ்பங்களையும், துளசியையும், வாசனை மலர்களையும் கொண்டு வந்தார். தனது கமண்டலத்தில் இருந்த விராஜ நதியின் நீரால் தன்னிடம் இருந்த காயத்ரி ரூபமான சங்கை நிரப்பினார். அந்த சங்கில் இருந்த தீர்த்தத்தினால் அந்த மரத்தை சுற்றியும், தன்னையும் புரோஷித்துக் கொண்டார். அதன் பின் அந்த மரத்தை பூஜித்தார்.
அந்த நேரத்தில் இன்னொரு ஆகாய வாணி அகஸ்த்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த காவேரி நதியிடம் கூறியது. ‘காவேரி இதைக் கேள். உனது எண்ணம் பூர்த்தி ஆகும் நேரம் இது. இதுவே நீ சென்று கடலில் கலக்க நல்ல நேரமும் ஆகும். நீயும் தட்ஷிண கங்கையாக சித்திக்கும் நேரம் வந்துள்ளது. இப்போது பிரும்மா பூஜித்து காயத்ரி ரூபமான சங்கினால் தண்ணீரை அபிஷேகம் செய்தாரே அந்த நீர் சர்வ தீர்த்தமாகும். கோடி நதிகள் அடங்கி உள்ள தீர்த்தம் அது. சகல பாபங்களையும் போக்கவல்ல வலிமைக் கொண்டது அந்த தண்ணீர். சர்வ இஷ்டங்களையும் தரவல்லது. நெல்லி மரத்தின் அடிப்பாகமே பகவானின் பாதமாகும். அதில் இருந்து வழியும் நீருக்கு சமமான நீர் இந்த மூன்று உலகிலும் வேறு எங்குமே இல்லை. ஆகவே நீயும் அந்த மரத்தின் அடியில் சென்று ஸ்நானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிட்டுமோ அந்த அளவு புண்ணியம் உனது நீரில் ஸ்நானம் செய்பவர்களுக்கும் கிடைக்கும் என்பதினால் தயங்காதே. விரைந்து சென்று நதியாகப் பாய்ந்து செல்’.

இதுவரைக் கூறியதும் அந்தக் குரல் மறைந்து விட்டது. வேறு வழி இல்லை. ஆகவே அவள் பிரும்மாவை வேண்டினார். அடுத்த கணம் அங்கு பெரும் காற்று வீசியது. அங்கிருந்த அனைத்து மரங்களும் செடி கொடிகளும் பயங்கரமாக ஆடிக் குலுங்கின. உடனே இந்திரனால் தூண்டப்பட்ட மேகங்கள் தண்ணீரை பொழிந்தன. இதுவே நல்ல நேரம் என்பதை காவேரி உணர்ந்தாள். வேகமாக வீசிய காற்றினால் அகஸ்தியர் பத்திரமாக வைத்து விட்டுப் போய் இருந்த கமண்டலம் கவிழ்ந்தது. நெல்லி மரத்தின் அடியில் இருந்து வழிந்து வந்த பகவானின் பாத நீருடன் கமண்டலத்தில் இருந்த தண்ணீரும் கலந்து ஓடியது. உலகின் பாலவனப் பிரதேசத்தை பாலாவனப் பிரதேசமாக ஆக்க காவேரி பிறந்தாள். (இந்தக் கதை புராணங்களில் கூறப்பட்டு உள்ள கதையில் இருந்து சற்று மாறுபட்டு உள்ளது. புராணக் கதையில் ‘அகஸ்தியர் காவேரி நீர் அடங்கிய கமண்டலத்துடன் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டு இருந்தபோது, காவேரி பிறக்க நேரம் வந்து விட்டதை உணர்ந்த விநாயகர் ஒரு காக்காய் உருவில் அங்கு வந்து கமண்டலத்தைத் தட்டி விட அந்தக் கமண்டலத்து நீர் காவேரியாக அங்கிருந்து கிளம்பியது’ என்று கூறுகின்றது).
…..தொடரும்