திருப்பூவண ஆலய மகிமையைக் குறித்து சூதகர் மேலும் கூறலானார் ”திருப்பூவணத்தில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகத் தோன்றியதற்கு ஒரு காரணக் கதை உள்ளது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்” எனக் கூறிவிட்டு அதைக் கூறலானார். ” பார்வதியை மகளாக அடைந்த தக்க்ஷன் ஒருமுறை பிரும்மாவின் ஆலோசனைப்படி சிவபெருமானை துதித்துப் கடும் தவம் செய்து அறிய பல வரங்களைப் பெற்றான். அதன்படி அவனுக்கு பார்வதி தேவி மகளாகப் பிறக்க வேண்டும் என்றும் அவள் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்றும் அவன் உலகின் முக்கியத்துவம் பெற்றனாக இருப்பான் என்றும் அவன் நடத்தும் எந்த ஒரு பூஜையிலும், யாகத்திலும் அவனுடைய குடும்பத்தினரே முன்னிலை பெற்று இருப்பார்கள் என்றும் அவர்கள் அளிக்கும் அவிர் பாகத்தை அதிதியாக வந்து முதலில் சிவபெருமானே பெற்றுக் கொள்வார். அவர் வராமல் போனால் அதை பார்வதியே பெற்றுக் கொள்வாள் என்றும் வரம் பெற்றுக் கொண்டான்.
ஒருமுறை சிவபெருமானின் கோபத்தினால் பார்வதி சாபம் பெற அதை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் அவரை மணந்து கொள்ள அவள் இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அந்த சாபத்தினால் அவள் தக்க்ஷனின் ஆட்சிப் பகுதியில் ஒரு தாமரைத் தடாகத்திலே மலராக இருந்து கொண்டு இருக்க ஒருநாள் அதைப் பறித்த தக்க்ஷனின் கையில் குழந்தை வடிவமாக அவள் மாறிவிட பெண்ண குழந்தை அற்ற அவனும் அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி அதிக சந்தோஷத்துடன் அவளை தன் பெண்ணாக தத்து எடுத்துக் கொண்டான். அதுமுதல் பார்வதி தக்க்ஷனின் மகளாகவே வளர்ந்தாள்.
அவள் வளர்ந்து பெரியவளாகி சிவபெருமானை துதித்து அவரை மணந்து கொண்டாள். அதன் பின் நடந்த பல நிகழ்ச்சிகளினால் சிவபெருமான் மீது கோபம் அடைந்த தக்க்ஷன் அவரை நிந்திக்கலானான். சிவபெருமானை தன்னை சார்ந்த யாருமே வணங்கக் கூடாது என உத்தரவு இட்டான். (முனிவர்களுக்கு சூதர் தக்க்ஷனின் கதையை விவரமாக எடுத்துரைத்தார். ஆனால் அந்தக் கதையை அனைவரும் அறிவார்கள் என்பதினால் நான் இதில் சுருக்கமாக எழுதி உள்ளேன் -சாந்திப்பிரியா). அதன் பின்னர் அவன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காமல் அவமானப்படுத்த, சிவபெருமானின் அறிவுரையையும் மீறி பார்வதி யாகத்துக்குச் சென்று அங்கு அவமானப்பட்டாள். அவமானத்தினால் துக்கம் அடைந்தவள் யாகத் தீயில் விழுந்து மரணமடைய அதனால் கோபமுற்ற சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி தக்க்ஷனின் யாகத்தை அழித்து அவனையும் கொன்றார். அப்போது அனைவர் முன்னாலும் ஒரு முக்கிய சந்தேகம் எழுந்தது. பார்வதி தக்க்ஷனுக்குப் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்று சிவபெருமான் கொடுத்த வரம் என்ன ஆயிற்று? சிவபெருமான் வரம் கொடுத்தது பொய்யா என தேவர்களும் அனைவரும் குழம்பியபோது அங்கிருந்த திருமால் சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சகோதரியின் தந்தைக்கு உயிர் பிச்சைக் கொடுக்குமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவனாரும் அறுத்து எறியப்பட்ட தக்க்ஷனின் தலையில் ஆட்டுத் தலையைப் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார்.
அதன் பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் அவர்களது சந்தேகத்தைப் போக்க திருமாலே ஒரு விளக்கம் அளித்தார். ‘தக்க்ஷனுக்கு மரணம் இல்லை என்ற வரத்தை சிவபெருமான் பொய்யாக கொடுக்கவில்லை. அவன் கேட்டுப் பெற்ற வரத்தின்படி பார்வதி பிறந்து சிவனை மணம் செய்து கொண்டப் பின் அவனுக்கு மரணம் ஏற்படாது என்பது உண்மை. ஆனால் பார்வதி அவனுக்கு மகளாகப் பிறக்கவில்லை. அவனுக்கு தாடகத்தில் இருந்து கிடைத்த பூவில் இருந்தே அவள் உருவானவள் என்பதினால் அவனுக்கு மகளாக மாறினாளே தவிர அவள் தக்க்ஷனுக்கு நேரடியாகப் பிறக்கவில்லை. ஆகவே அவனுக்கு சிவபெருமான் அளித்த வரம் பலிக்கவில்லை. வீரபத்திரரால் மரணம் கிடைத்தது என்றாலும் தக்க்ஷனின் வளர்ப்பு மகளாக பார்வதி இருந்ததினால் கருணைக் கொண்டு மீண்டும் அவனுக்கு உயிர் பிச்சைக் கொடுத்ததின் மூலம் சிவபெருமான் தான் கொடுத்த வரத்தையும் முழுமையாக அழிக்கவில்லை’ என்று கூற அதைக் கேட்ட அனைவரும் மனம் மகிழ்ந்து சென்றார்கள் . அதுமுதல் தக்க்ஷனும் சிவபெருமானுக்கு தொண்டு புரியலானான். (இந்த கதையுடன் சம்மந்தப்பட்ட வீரபத்திரஸ்வாமியின் ஆலயம் மாயவரத்தின் அருகில் பரசலூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள வீரபத்திர ஸ்வாமியின் திருமேனியை வழிபடலாம். சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய ஆறு கரங்களுடன் காட்சி தரும் இந்த மூர்த்தியின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பது போல சிலை உள்ளது. இங்குள்ள தல வரலாற்றின்படி வீரபத்திரர் அவதரித்தது ரிஷிகேசத்தில் என்றும் அவர் இங்கு வந்து இங்கு யாகம் செய்த தக்க்ஷனை அழித்ததாகவும் கூறுகிறார்கள். ஆகவே இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் தக்க்ஷன் யாகம் செய்தான் என்றும் கூறுகிறார்கள். இதை எதற்காக குறிப்பிட்டு உள்ளேன் என்றால் தக்க்ஷன் யாகம் செய்த பூமி ரிஷிகேசத்தில் இருந்து மாயவரம் வரை பரவி இருந்துள்ளது என்றும் அப்படி என்றால் கடவுட்களின் உருவ அமைப்பு எந்த அளவு பிரும்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை மீண்டும் எடுத்துக் கூறவே ஆகும். – சாந்திப்பிரியா ) .