-5-

உலகம் வடிவமைக்கப்பட்டது

63) பரப்பிரம்மனிடமிருந்து தோன்றியவுடன், படைப்பின் பணியை ஏற்றுக் கொண்ட பிரம்மா, உயிரினங்களை படைக்கத் தொடங்கினார். பூமியை நான்கு யுகங்களின் சுழற்சிகள் கொண்டதாகவும், ஒவ்வொரு சுழற்சியிலும் வெளிப்படும் ஒவ்வொரு யுகமும் தனித் தன்மைகள் கொண்டதாக இருக்குமாறும், குலதெய்வங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் எங்கெங்கு எப்போது வெளிப்பட வேண்டும் என்பவற்றையும் வடிவமைத்தார். ஒவ்வொரு யுகத்திலும் எத்தனை மானிடர்கள் இருப்பார்கள், எத்தனை தெய்வங்கள் இருக்கும் போன்ற அனைத்தும் இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
64) சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாரபர யுகம் மற்றும் கலி யுகம் என  ஒவ்வொரு யுகத்திற்குமான கால அளவையும் நிர்ணயித்தப் பின் அந்த நான்கு யுகங்களும் சேர்ந்த சுழற்சியை சதுர் யுகம் என்றும், 71 சதுர் யுக சுழற்சியை மன்வந்தர என்றும் பெயரிட்டார். சத்ய யுகத்தின் கால அளவு 1,728,000 ஆண்டுகள் என்றும், திரேதா யுகத்திற்கு ஆயுள் 1,296,000 என்றும், துவாபர யுகத்தின் ஆயுள் 864,000 என்றும் இறுதியாக நான்காவது யுகமான கலியுகத்தின் ஆயுள் 432,000 ஆண்டுகள் என்றும் நிர்ணயித்தார். ஒரு சுற்றில் வரும் நான்கு யுகங்கள் 4,320,000 ஆண்டுகளை கொண்டதாக இருக்கும் என்றும் நிர்ணயித்தார். (Ref: Brahmanda Purana Chapter-29).  71 சதுர் யுகங்கள் அடங்கிய மன்வந்திரா என்பது 4,320,000 x 71 = i.e. 306,720,000 மனித வருட காலமாக இருக்கும். 14 மன்வந்திராக்கள் அடங்கிய 4294.08 வருட காலத்தை ஒரு கல்ப என்பார்கள் (306.72 x 14 மில்லியன்
வருடங்கள்).


65) பரம்பரை பரம்பரையாகப் கூறப்பட்டு வரும் வாய்மொழிக் கதைகளையும், அனைத்து  நூல்களையும் படித்தால், பிரபஞ்சத்தை இயக்கத் துவங்கிய பொழுதே ஒவ்வொரு யுக துவக்கத்திலும் மனிதர்களின் நல்ல குணங்கள் குறைந்து, தீய குணங்கள் வெளிப்படத்  துவங்கும் என்பதை பிரும்மா  அறிந்திருந்ததினால்தான்  சத்ய யுகத்திலே மக்கள் தார்மீக நெறிகளைக் கடைப் பிடித்தவண்ணம்  உண்மையான குணாதிசயங்களோடு இருப்பார்கள் என்றும்   திரேதா யுகத்தில், சத்திய யுகத்தில் நிலவிய உண்மை மற்றும் நேர்மையில் நான்கில் ஒரு பங்கை பிரபஞ்சம் இழக்கும்.  துவாபர யுகத்தில்  மேலும் ஒரு பாதி நேர்மையை இழந்த மக்களைக் கொண்டிருக்கும் மற்றும் கலியுகத்தில் நான்கில் ஒரு பங்கு நேர்மையை கடைபிடிக்கும்  மக்களைக் கொண்டதாகவே  இருக்கும் என நிர்ணயித்தார். கலியுகம் என்பது பாபம் செய்தவர்களின் பூமியாக, தீய ஆதிக்கம் நிறைந்த, நேர்மையற்ற மற்றும் குழப்ப மிக்க பூமியாகவே இருக்கும் என்பதினால்தான் பிரும்மா அந்த குணாதிசயங்களைக் கொண்ட மக்களை வழி நடத்தி நல்வழிப்படுத்த எந்த விதமான தெய்வங்கள் தேவையாக இருக்கும், முக்கியமாக எந்த குணாதிசயங்களைக் கொண்ட குலதெய்வங்கள் அமைய வேண்டும் என்பதை கவனமாக  தீர்மானிக்க வேண்டி இருந்தது.

66) ஒவ்வொரு யுக முடிவிலும் அதிக எண்ணிக்கையில் மானிடர்கள் பிறப்பு எடுப்பார்கள் என்பதினால் சத்ய யுகத்தின் முடிவு முதல் ஒவ்வொரு யுகத்தின் துவக்கத்திலும் நிலத்தின் பரப்பளவு படிப்படியாக அதாவது சத்ய யுகத்தில்  X எனும் எண்ணிக்கையுடன் இருந்த நிலம் 2X , 3X எனும் அளவில்   விரிவாக்கப்பட வேண்டும் என்பதை பிரம்மதேவர் உணர்ந்திருந்தார் என்பதினால்தான்  நிலப்பரப்பின் தன்மை விரிவடையும் வகையில் வைத்து இருந்தார்.
67)
தர்ம உலகியல் நம்பிக்கையின்படி 71 வது கலியுகத்தின் முடிவில் அதாவது எழுபத்தி ஒன்றாவது சதுர் யுக முடிவில், பிரம்மா உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் பரப்பிரும்மனின் உடலுக்குள் சென்று மறைந்து விடும். அதாவது சிவபெருமான் அனைத்து ஆன்மாக்களுடன் பிரபஞ்சத்தை அழித்தப் பின் மீண்டும் பிரம்மாவை வெளிப்படுத்தி ஆகாயம், நிலம், கடல், உயிரினங்கள் என  புதிய பிரபஞ்சத்தை வெளிப்படுத்துவார் என்று கூறுகின்றார்கள். ஆக, பிரம்மா 71 சதுர்யுக சுழற்சிகளின் முடிவில் மன்வந்தரா எனப்படும் 306.72 மில்லியன் மனித ஆண்டுகளின் முடிவில் மறுபிறவி எடுக்கிறார் என்பது பொருள் ஆகும்.

68) தேவி பாகவதம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் காணப்படும் குறிப்பின்படி ‘பரந்த கடல் மற்றும் நிலம் கொண்ட பிரபஞ்சத்துடன், பிரம்மா உட்பட அனைத்து தெய்வங்களும், படைப்புக்களும், மரணத்தைச் சந்தித்து மறைந்து விடும் என்றும், 14வது   மன்வந்தராவின் துவக்கத்தில் பரப்பிரும்மனால் மீண்டும் புதிய பிரபஞ்சம் வெளிப்படுத்தப்படும். அப்போது சப்த ரிஷிகள் மற்றும் தெய்வங்களின் பெயர்களும் நிலைகளும் மாறும் ‘ என்றும் தெரிகின்றது.
69)  புராணங்கள் மற்றும் பிற இதிகாச நூல்களில் காணப்படும் குறிப்புக்களின்படி, புதிய பிரபஞ்சம் மீண்டும் படைக்கப்படும்போது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட மூல தெய்வங்களை தவிர புதிய, புதிய தெய்வ வெளிப்பாடுகள் அடுத்தடுத்த யுகங்களில் வெளி வரும். அதனால்தானோ என்னவோ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு உள்ள நூல்களில் காணப்படும் தெய்வங்களை விட அதிக அளவிலான புதிய வடிவங்களிலான தெய்வங்கள் மேலும் மேலும் வெளிப்படுவதை காண முடிகின்றது.
70) பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து வகைகளிலான தெய்வங்களும், அவதாரங்களும் பரபிரும்மனின் தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து பல்வேறு தெய்வங்கள் மூலம் வெளியானவர்களே. பரபிரும்மன் அழிவற்றவர் என்பதினால், 71 வது கலியுகத்தின் முடிவில் தற்காலிகமாக அனைத்து தெய்வங்களும், பிரும்மாவும் பரபிரும்மனின் உடலுக்குள் சென்று மறைந்து விட்டாலும் அழிவற்ற பரபிரும்மனின் தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து வெளியான அவர்களும் அழிவற்றவர்கள். அவர்களுடைய மறைவும் தற்காலிகமான காட்சிதான்.
71) வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மானிட ஆன்மாக்களை விடுவிக்கும் முன் குறிப்பிட்ட சில செயல் திட்டங்களுக்காக முதலில் ஏழு ரிஷிகளை பிரம்ம தேவர் மனித உருவில் படைத்தார்.  ஜைமினிய உபநிஷத் என்ற நூலின்படி (The Jaiminiya Upanishad Brahmana –जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ரிஷிகளின் பெயர்கள் அகஸ்தியர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, வஷிஷ்ட மற்றும் விசுவாமித்திரர் என இருக்க பிரஹதாரண்யக உபநிஷத் (Brihadaranyaka Upanishad) என்ற நூலில் அகஸ்தியர் என்பதற்கு பதில் பிருகு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போலவே பிற பிரிவுகளை சேர்ந்த நூல்களில் ஏழு ரிஷிகளின் பெயர்கள் மாறுபட்டு காணப்படுகின்றன என்கின்றார்கள்.
72) உலகில் படிந்திருக்கும் மானிடர்களை ஏழு பிரிவுகளாக அதாவது ஒவ்வொரு ரிஷியின் குலத்தையும் கொண்ட ஏழு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வைக்கவே பிரும்மா ஏழு ரிஷிகளை படைத்தார். ஒரு குலம்  என்பது ஒரு கோத்திரத்தை, அதாவது ஒரு ரிஷியை குறிக்கும். ஒவ்வொரு பரம்பரையில் வெளிப்படும் ஒவ்வொருவரும் ஒரே ரத்த இனத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது நியதி எனும்போது இன்றும் சில ஜாதியினரில் எப்படி 2500க்கும் அதிக அளவிலான எண்ணிக்கையில் கோத்திரங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது.
73) பரப்பிரம்மனின் உடலுக்குள் இருந்து பிரும்மதேவர் சில குறிப்பிட்ட தெய்வங்களை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தாலும், முதலில் மேன்மையான ஞானம் கொண்ட ஏழு மகரிஷிகளை படைத்த பிரும்மா, அப்படி படைக்கப்பட்டிருந்த தெய்வங்களையும் ரிஷிகளையும் உடனடியாக பூமியில் செயல்படும் நிலையில் அனுப்பவில்லை. அதன் காரணம் முதலில் அவரால் படைக்கப்பட்ட நான்கு யுகங்களும் எப்படி செயல்பட வேண்டும், எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்த அவருக்கு அதிக அளவிலான காலம் தேவையாக இருந்தது.
74) தாங்கள் படைக்கப்பட்டவுடன், ஏழு முனிவர்களும் தாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்று தெரியாமல் குழப்பமடைந்து பிரம்மாவின் முன் நின்றார்கள். பிரபஞ்சம் மானிடர்கள் வாழும் நிலைக்கு வந்தவுடன் அவர்கள் அங்கு சென்று தனது பிரதம தூதர்களாக செயல்படுவார்கள் என்பதாக பிரும்மதேவர் கூறினார்.

75) அவர்களுக்கு தான் படைத்த நான்கு யுகங்கள் என்னென்ன, ஒவ்வொரு யுகத்திலும் உள்ள ஆத்மாக்களின் குணாதிசயங்கள் எப்படி அமைந்து இருக்கும், ஒவ்வொரு ஆன்மாவிற்குமான பிறப்பு -இறப்பு – மறு பிறப்பு எனும் சுழற்சி, ஆண்-பெண் கோட்பாடு, அவர்களின் ஒன்றிணைப்பு, குழந்தைகள், வாழ்வின் நெறிமுறைகள், வளமான வாழ்க்கையின் விதிமுறைகள், நல்ல மற்றும் தீய செயல்கள், பாவங்கள் என தனது படைப்பின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார்.
76)மேலும் குலதெய்வங்களின் முக்கியத்துவம், ஒவ்வொரு மானிட குலமும் அவர்கள் தோன்றும் அந்த நிலப்பகுதியில் எப்படி அவர்களால் வழி நடத்தப்பட்டு வருவார்கள் என்பதை எல்லாம் விளக்கிக் கூறிய பின் தன்னுடைய கட்டளை கிடைக்கும் வரை அவர்கள் அனைவரையும் யாருடைய கண்களுக்கும்  தெரியாமல் மறைந்து இருக்குமாறு கட்டளை இட்டார்.
77) அந்த மகரிஷிகளை செயல் மிக்கவர்களாக்கிய பின்னர் அவர்கள் பூமிக்கு சென்று அங்குள்ள சில மானிடர்களையும் தெய்வ தூதர்களான தமது சிஷ்யர்களாக்கிக் கொண்டு அவர்களுக்கு தெய்வீகத்தின் மகிமைகள், ஆன்மீக வழி நடப்பதின் பலன்கள் என தான் கொடுத்துள்ள அனைத்து செய்திகளையும் பூலோக மக்களிடையே பரப்ப வேண்டும். அது குரு-சிஷ்ய பரம்பரையையும் உருவாக்கும் என்றார்.
78) பிரம்மாவின் போதனைகளை மனதில் ஏற்றுக் கொண்ட மஹரிஷிகள் தமக்காக உருவான பெண் ரிஷிகளையும் மணந்து கொண்டு தமது பணியை நிறைவேற்ற பூமிக்கு சென்று எவருடைய கண்களுக்கும் புலப்படாத வகையிலும்  செயல் அற்ற நிலையிலும் கோடானுகோடி ஆண்டுகளாக இருந்தவாறு பிரபஞ்சத்தின் அம்சங்களையும், பிரபஞ்சத்தில் பிரம்மா நடத்திய நாடக ஒத்திகையையும் பார்த்தவாறு இருந்தார்கள்.
79) பிரும்மாவின் அடுத்த வேலை மனிடப் பிறவிகளை படைத்து அவர்களை பூமிக்கு அனுப்புவதுதான். ஆனால் அப்படி அனுப்பப்பட்ட ஆத்மாக்கள் உடனடியாக மானிடப் பிறவியை எடுக்கவில்லை. பிரும்மா படைத்த ஆத்மாக்கள்  முதலில் 15 முதல் 20 வகைகளிலான விலங்கியல்களாக படைப்பு எடுத்தப் பின்னரே அவர்களிடம் இருந்து ஒரு பகுதியினர் பலகோடி வருடங்களுக்குப் பிறகு மானிடப் பிரிவுகளாக மாறினர். எதனால் இந்த நிலை ஏற்படுத்தப்பட்டது?
80) எதற்காக மானிடப் பிறவிகள் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்றால் முதலில் பூமியின் நிலையை, அதாவது மலை, குகை, நீர் நிலைகள் நதிகள் என அனைத்தையும் முற்றிலும் புரிந்து கொண்டு அதில் வாழப் பழக்கிக் கொண்டால்தான் அவர்களால் பூமியில் வாழ முடியும் என்பதாக பிரும்மா நினைத்ததே அதன் காரணம்.
81) இப்படியாக நினைத்த பிரும்மா தனது உடலில் இருந்து நான்கு வகைகளிலான உயிரினங்களை வெளிப்படுத்தி பூமிக்கு அனுப்ப அவைகளில் ஒரு பகுதியினர் பலகோடி வருடங்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல மானிடர்களாக உருமாறி பல இனப் பிரிவுகளிலான மானிடர்களாக வாழத் துவங்கினார்கள்.
82) பிரும்மதேவர் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு யுகங்களின் தன்மைக்கேற்ப வாழத் தேவையான அளவிலான அறிவாற்றலைப் பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிரும்மதேவர் சத்ய யுகத்தில் படைத்த அனைத்து உயிரினங்களையும் உடனடியாக ஏதாவது பிறப்பு எடுக்க வைக்காமல் ஒரு பகுதி உயிரினங்கள் வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் வகையில் படைப்பை வைத்தார். அவை மெல்ல மெல்ல சத்ய யுகத்திலே அல்லது பிற யுகங்களில் பிறப்பு எடுக்கும் என்ற நியதியையும் வைத்து இருந்தார். எதனால் அப்படி செய்தார் எனில் அப்போதுதான் ஆண் மற்றும் பெண் இனங்களின் தத்துவத்தை புரிந்து கொள்ளவும், அவர்களது சேர்க்கையினால் மற்றொரு உயிர் உருவாகும் தன்மையையும் உலகில் உள்ள மானிடர்களினால் அறிந்து கொள்ள முடியும்.
83) தொல்பொருள் மற்றும் மானுடவிய  விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி, பிரம்மாவின் துவக்க கால படைப்புகள் ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கின வகைகளிலும், டைனோசர்கள் மற்றும் சிம்பன்சிகள் எனப்படும் விலங்கியல்கள், செடி, கொடி, மரங்கள் என்ற அசையா பொருட்கள் உட்பட அனைத்தும் 15 முதல் 20 வகைகளிலும் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது. பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட அடர்ந்த காடுகளில் அசையும் உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.

84) தொல்பொருள் மற்றும் மானுடவிய விஞ்ஞானிகளின் கூற்றின்படி ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கியல்கள் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றி இருந்தாலும், அந்த விலங்கியல்கள் அவர்களது தோற்றங்களில் மெல்ல மெல்ல பரிமாற்றம் அடைந்து இரண்டு கால்களுடன் நடந்த மானிட உருவை அடைந்தார்கள். அப்படியாக பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரியல் மாற்றங்களால் வாலில்லாத குரங்குகளும் சிம்பன்சிகளும் மனிதர்களின் வடிவமாக மாறி சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரண்டு கால்களுடன் நடந்த, ஆனால் அறிவு இல்லாத நிலையில் இருந்த மானிடப் பிறவிகளாக தோன்றினார்கள் என்பதாக கருத்து தெரிவிக்கின்றார்கள். இதனால் பிரபஞ்சம் உருவான பின்னர் சுமார் 13.799 பில்லியன் ஆண்டுகள் கழிந்த பிறகே அறிவு இல்லாத மானிடர்களின் தோற்றம் வெளித் தெரியலாயிற்று. ஆக பிரபஞ்சம் உருவான பின்னர் சுமார் 13.799 பில்லியன் ஆண்டுகள்வரை குலதெய்வம் உட்பட வேறு எந்த தெய்வங்களும் வெளியாகவில்லை என்பதாக கருதலாம்.
85) கருட புராண நூலை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் அதில் காணப்படும் செய்தியின்படி சத்ய யுகத்தில், ஒரு தேவ வருடத்திற்கு (கடவுளின் ஆண்டு) ஒருமுறை 84 லட்சம் ஆன்மாக்கள் என்ற அளவில் பிரம்மா படைத்தார். ஒரு தேவ வருடம் என்றால் 306 மனித வருடங்கள் ஆகும். சத்திய யுகத்தின் ஆயுட் காலம் 1,728,000 மனித ஆண்டுகள் ஆகும் என்பதினால் அது 5647 தேவ ஆண்டுகளுக்கு சமம் ஆகும் (1728000 ÷ 306 = 5647). ஆகவே, சத்ய யுகத்தில் ஒரு தேவ வருடத்திற்கு 84 லட்சம் என்ற விகிதத்தில் உருவாக்கப்பட்ட, மனிதர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் போன்ற அனைத்து படைப்புகளும் உட்பட்ட ஆத்மாக்களின் மொத்த எண்ணிக்கை 474.348 மில்லியனாக இருக்கலாம்.
86) கருட புராணத்தின்படி, பிரம்மா உருவாக்கிய 84 லட்ச ஆன்மாக்களில் 21 லட்சம் முட்டைகளிலிருந்தும், 21 லட்சம் மரம் மற்றும் செடி கொடிகளிலிருந்தும், 21 லட்சம் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளிடமிருந்தும், மீதமுள்ள 21 லட்சம் புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்தும் வந்தவை என்பதாக தெரிகின்றது. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் ஆரம்பத்தில் அவர் உருவாக்கிய ஆத்மாக்களில் சுமார் 25% மட்டுமே மனித வடிவத்தில் இருந்திருக்க வேண்டும். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், சத்ய யுகத்தில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட 474.348 மில்லியன் ஆத்மாக்களில், 120 மில்லியன் ஆத்மாக்கள் மட்டுமே மானிட ஆத்மாக்களாக இருந்திருக்க வேண்டும்.

87) மேல் கூறப்பட்டு உள்ள பல பத்திகளின் அனைத்து செய்திகளும் நமக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் :
• ஒவ்வொரு கல்பாவிலும் பிரும்மா முதல் படைக்கப்பட்ட அனைத்தும் பரபிரும்மனின் உடலுக்குள் சென்று மறைந்து விட்டு மீண்டும் புதியதாக வெளிப்படுவார்கள்.
• பிரபஞ்சம் உருவான பின்னர் சுமார் 13.799 பில்லியன் ஆண்டுகள் கழிந்த பிறகே, உயிரியல் மாற்றங்களால் வாலில்லாத குரங்குகளும் சிம்பன்சிகளும் மனிதர்களின் வடிவமாக மாற,  அறிவு இல்லாத மானிடர்களின் தோற்றம் வெளித் தெரியலாயிற்று என்பதில் இருந்து 13.799 பில்லியன் ஆண்டுகள்வரை பரபிரும்மன் பிரபஞ்சத்தை அழிக்கவும் இல்லை, புதியதாக தோற்றுவிக்கவும் இல்லை என்பதும் தெரிகின்றது.
• குலதெய்வங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இன்றைய சதுர் யுகத்தில் இருந்து 302.400 மில்லியன் ஆண்டுகள் முன் வரை {(306720000)-(1728000+1296000+864000+432000) =302.400} பிறப்பு மற்றும் இறப்பு இல்லாத நிலையில் இருக்குமாறு தோற்றுவிக்கப்பட்டார்கள்.
88) பூமியை வாழும் வகையில் தயார் செய்த பின், அதை பல பூமிகளாக்கி தன்னால் படைக்கப்பட்ட முதல் முதலான ஆத்மாக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று முதல் பிறப்பு எடுக்க பிரும்ம தேவர் அனுமதித்து இருந்தார். அப்படி படைக்கப்பட்டிருந்த நிலப்பகுதிகளில் நதிகள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளும் அடக்கம் என்பதாக தெரிகின்றது.
89) எங்கெல்லாம் மானிட பிறவிகள் பிறப்பு எடுத்தனவோ அந்தந்த பூமியின் தன்மைகளைக் கொண்டவர்களாகவே அமைத்தார்கள். அப்படி இருந்தால்தான் நன்மை மற்றும் தீமைகளின் வேற்றுமைகளை புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே அந்த நிலையை பிரும்ம தேவர் ஏற்படுத்தி இருந்தார். நல்ல தன்மைகளை கொண்ட நிலப்பரப்பில் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள், ரிஷி மற்றும் முனிவர்கள் இருந்தார்கள்.
90) பிறப்பின் தத்துவம் என்ன என்றால் மரணம் அடைந்த அனைவருமே மானிடப் பிறவிகளை எடுப்பார்கள் என்ற உத்திரவாதம் கிடையாது. ஆகவே மரணம் அடைந்த மானிட பிறவிகள் விலங்குகளாகவோ இல்லை வேறு எந்த பொருட்களாகவோ இல்லை விலங்குகளாகவோ கூட பிறப்பு எடுக்கலாம். ஒவ்வொரு யுகங்களிலும் அவை அவை செய்த பாவ புண்ணிய அளவிற்கு ஏற்பவே மரணம் அடைந்தவர்களின் மறுபிறவி இருக்கும் என்பது தத்துவமாயிற்று.
91) 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டு உள்ளது என்றால் நாம் தற்போது உள்ள காலம் 46 வது மன்வந்தரா, அதாவது 3195 வது சதுர் யுக (13800000000÷432000=3194)* சுழற்சி ஆகும். ஒரு சதுர் யுகம் என்பது 4.32 மில்லியன் ஆண்டுகள் என்பதினால் 3194 வது சதுர் யுக சுழற்சி வரை பிரபஞ்சத்தில் தெய்வங்களோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
92) அனைத்து நிலைக்களையும் ஆராய்ந்து பார்க்கும்போது நமக்கு புலப்படுவது என்ன என்றால் குலதெய்வங்களும், ரிஷி முனிவர்களும் , மானிடர்களும் 3195 வது சதுர் யுகத்தின் த்ரேதா யுகத்தில்தான் வெளிவந்து இருக்க முடியும்.
93) வெளிப்படுத்தப்பட்ட பூமி மானிடர்கள் வாழக் கூடிய நிலையை அடைந்ததும் பல்வேறு இடங்களிலும் மானிடர்கள் தங்க, அங்கெல்லாம் ரிஷி, முனிவர்களும் சென்று தங்கி மெல்ல மெல்ல தெய்வ லீலைகளை விளக்கி, ஆன்மீக போதனைகளை தரத் துவங்கினார்கள். அதோடு வாழ்க்கையில் ஒருவர் கடைபிடிக்க நன்னெறி முறைகளையும் போதனை செய்தவண்ணம்   அவர்கள் மனதில் தெய்வத்தின் மீதான ஒருவித பய உணர்ச்சியையும் தூண்டி விட்டார்கள். அப்போதுதானே குலதெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்கள் வெளிப்படும்போது மானிடர்கள் அவர்களிடம் சரணடைய முடியும்.
94) பரபிரும்மனின் நியதிப்படி மானிடர்களுக்கு பிறப்பு-இறப்பு மற்றும் மறுபிறப்பு எனும் சக்கரம் இருந்தாலும் அவர்களில், பல நல்ல பண்புகளை செய்திருந்த சிலருக்கு மறுபிறப்பு இல்லாமல், தேவ கணங்களாக பிறவி எடுத்து பின்னர் குலதெய்வமாக மாறவும் வழி செய்து இருந்தார்.
95) இன்னொரு பிரிவிலான ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி 3194 வது சதுர் யுக சுழற்சி வரை வெளிப்பட்ட பூமியின் நிலை என்ன, அதில் என்னென்ன மாற்றங்களும் நிகழ்வுகளும் நடைபெற்றன என்பது ஒரு மர்மமாகவே இருந்து விட்டது.

தொடர்கிறது …..6

————-
அடிப்படை ஆதாரம் :-
மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்

1)http://sarojbala.blogspot.com/2021/02/concept-of-yugas-re-examined.html
2) https://www.cs.ubc.ca/~goyal/age_of_universe.php
3) https://docs.wixstatic.com/ugd/f0633e_99240cde252e424cbd5b71c832d8dfef.pdf?index=true
4) https://en.wikipedia.org/wiki/Yuga_Cycle
5) https://www.wisdomlib.org/hinduism/book/the-brahmanda-purana/d/doc362847.html
6) http://www.findmessages.com/now-about-the-four-yugas-its-characteristics
7) https://www.hinduwebsite.com/timecycle.asp
8) https://m.dailyhunt.in/news/nepal/english/the+sentinel-epaper-senteng
9) https://www.iimb.ac.in/sites/default/files/inline-files
10) https://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time
11) https://docs.wixstatic.com/
12) https://en.wikipedia.org/wiki/Saptarishi
13) https://pravase.co.in/gyan-detail/82/saptarshi-seven-sages-sanatan-dharma-vedic-time
14) https://www.researchgate.net/publication/335929735_Article_23_Ancient_Saints_of_Hinduism_-Saptarishi
15) https://en.wikipedia.org/wiki/Gotra
16) https://www.britannica.com/topic/gotra
17) http://www.vedah.net/manasanskriti/Brahmins.html#13
18) https://ramanuja.org/sri/BhaktiListArchives/Article?p=aug95%2F0027.html
19) https://humanorigins.si.edu/education/introduction-human-evolution
20) https://www.quora.com/Are-Brahmins-are-born-from-Brahmas-head-Kshatriyas-from-this-gods-arms-vysyas-from-this-creators-thighs-and-shudras-from-his-feet
21) https://zeenews.india.com/spirituality/decoding-the-story-behind-four-faces-of-lord-brahma_1956584.html
22) https://en.wikipedia.org/wiki/Primate
23) https://humanorigins.si.edu/evidence/human-evolution-interactive-timeline
24) https://ia802900.us.archive.org/0/items/acc.no.25554srigarudapuranam1968/Acc.No.25554-Sri%20Garuda%20Puranam-1968.pdf
26) https://www.quora.com/How-can-one-know-that-there-are-4-lakh-species-of-human-being-out-of-84-lakhs
27) https://www.quora.com/Who-discovered-that-there-are-84-lakhs-varieties-of-living-being-present-on-earth
28) https://iskcondesiretree.com/forum/topics/84-lakh-species
29) https://en.wikipedia.org/wiki/Para_Brahman

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman