-3-

அகண்டத்தை வெளிப்படுத்திய பரப்பிரும்மன்

29) நாம் குலதெய்வங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டு உள்ள நிலையில் எதற்காக அகண்டம் தோன்றிய கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என ஒருவர் கேட்கலாம். அகண்டம் படைக்கப்பட்டவுடன் அதில் இருந்துதான் தெய்வங்களும், குலதெய்வங்களும் தோன்றின என்பதினால் தெய்வங்கள் எப்படி தோன்றின என்பதை புரிந்து கொள்ள அகண்டம் தோன்றிய கதையை தெரிந்து கொள்ள வேண்டும். அகண்டம் படைக்கப்பட்ட உடனேயே அதில் மனிதர்கள் வசிக்கும் அளவிற்கான இயற்கை நிலை உருவாகவில்லை. மானிடர்களை பாதுகாத்து வழி நடத்தவே குலதெய்வங்கள் தேவைப்பட்டன என்பதினால், மனிதர்கள் இருந்திடாத நிலையில் உடனடியாக அதில் குல தெய்வங்களும் வெளிவரவில்லை. அகண்டம் தோன்றிய உடனேயே பரபிரும்மன் எதனால் மானிடப் படைப்புக்களை வெளிவர விடவில்லை என்பதின் காரணம் மானிடர்களும் பிற பிறவிகளும் வாழத் தேவையான நிலையில் பூமியை வடிவமைக்க பல கோடானுகோடி வருடங்கள் ஆகும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதே. மேலும் அதன் இடையே அந்த பூமிக்கு தான் அனுப்ப வேண்டிய தெய்வங்களின் உருவங்களை வடிவமைக்கவும் அத்தனை வருடங்கள் அவருக்கு தேவையாக இருந்தது. இதனால்தான் பூமி வெளியான பலகோடானுகோடி வருடங்கள் கழிந்த பின்னரே தெய்வங்களும் மானிடர்களும் அதில் குடியேற தோற்றம் கொடுக்கப்பட்டார்கள். இந்த தத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அல்லாமல் பல புராண நூல்களும் குறிப்பிட்டு உள்ளன.
30) புராண நூல்கள் மற்றும் நம்பிக்கைகளின்படி, அகண்டத்தை உருவாக்க நினைத்த பரபிரும்மன் தன் உடலில் இருந்து பூமியை வெளியே வரச் செய்த பின்னர் அதில் உலகம் உருவாகத் தேவையான சில விதைகளை தூவ, அந்த விதைகள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் முட்டையாக வடிவம் பெற்றது. பல வருட காலம் பரபிரும்மன் காத்திருக்க, அவர் தோற்றுவித்த தங்க நிறத்திலான முட்டை பிளந்து இரு பாகங்களாக ஆயிற்று. மானிடர்கள் வருடக் கணக்கும், தெய்வங்களின் வருடக் கணக்கும் வெவ்வேறானவை. உதாரணமாக பிரும்மாவிற்கு ஒரு நாள் காலை பொழுது 4.32 மில்லியன் எனும் அளவிலும் இரவு 4.32 மில்லியன் எனும் அளவிலும், அதாவது 8.64 மில்லியன் அளவில் உள்ளது. பின்னர் அந்த முட்டையின் ஒரு பாகம் பூமியாகவும், இன்னொன்று மேலுலகமாகவும், அவற்றின் இடையே ஆகாசம் இருக்குமாறும் மாறியது. இப்படியாக முட்டை உடைந்து உலகம் உருவானதையே ஆராய்ச்சியாளர்கள் பெரும் வெடிப்பு (Big Bang Theory) எனும் தத்துவமாக கூறுகின்றார்கள்.
31) நான்கு யுகங்களின் குணாதிசயங்களைக் கொண்ட பரந்த நிலமும் கடலும் வெளிப்படும் முன்னரே அவை இரண்டும் பரப்பிரும்மனின் சக்திக் கதிர்களுக்குள் செயலற்று இருந்துள்ளது என்றும் அதைத்தான் பரப்பிரும்மன் பிரும்மா மூலம் வெளிக் கொண்டு வந்து ஆற்றல் கொடுத்தார் என்றும் ஆன்மீக குருமார்கள் நம்புகிறார்கள். விஞ்ஞானிகள் இந்த நம்பிக்கையை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள், அவர்கள் கூற்றின்படி ‘ஏதாவது ஒன்று ஏற்பட வேண்டும் எனில், அதை உருவாக்கத் தேவையான மூல பொருட்கள் சில வேண்டும் என்பதினால், பெரு வெடிப்பு (Big Bang’) என்பதை உருவாக்கிய பொருள் எங்கிருந்து வந்தது, மற்றும் அந்த பொருள் எப்படி எங்கிருந்து உருவாயிற்று’ என்கின்ற விஞ்ஞானிகளின் கேள்விக்கு (Ref: https://www.bbc.com/future/article/20220105-what-existed-before-the-big-bang) கண்களுக்கு புலப்படாமல் உள்ள பரப்பிரும்மனே காரணம் என ஆன்மீக ரீதியில் பதில் கூறுகின்றது .
32) பெரு வெடிப்பு தத்துவத்தின்படி, பிரபஞ்சம் 13.7 அல்லது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே படைக்கப்பட்டது. ஆனால் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி அதற்கும் முற்பட்ட காலத்திலேயே பிரபஞ்சம் படைக்கப்பட்டு உள்ளது. எதோ எப்படியோ, பிரபஞ்சம் படைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே மானிடர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாயிற்று என்பதே உண்மை நிலை ஆகும்.
33) ஆய்வாளர்களின் கூற்றின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு நான்கு அல்லது ஐந்து கட்டங்களில் உயிரினங்கள் வாழத் தகுதியான நிலையை பூமி எட்டி உள்ளது. முதலில் வெளி வந்த நிலம் கண்களால் பார்க்க முடியாத அளவிலான தூசியினால் மூடப்பட்ட புகை மண்டலமாக காட்சி தந்தது. எதோ ஒரு வாயு முற்றிலும் நிறம்பி இருந்த நிலையில் இருந்த நிலமோ, உருகிய பாறைகளைக் கொண்டு வெளிச்சம் அற்ற இருட்டு நிலமாகவே இருந்துள்ளது. மெல்ல மெல்ல சிறிதளவு வெளிச்சத்தை காணும் வகையில், பூமி மீது படர்ந்திருந்த புழுதிப் படலம் கீழ் இறங்கி வர பல்லாயிரம் கோடி வருடங்கள் ஆக, பூமியும் அனைத்து பக்கங்களிலும் விரிவடையத் துவங்கியது.
34) பரபிரும்மனின் உடலில் இருந்து வெளியான பூமியின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு பெரு வெடிப்பு என்பதின் அடிப்படை அறிவியல் கோட்பாடு விளக்கம் அளிக்கின்றது. இன்று நாம் காணும் பிரபஞ்சம் பரபிரும்மனின் உடலில் இருந்து வெளி வந்தபோது முதலில் சிறு புள்ளியாகத் தெரிந்த தீயின் ஜிவாலை, மெல்ல பெரியதாக பெரியதாகிக் கொண்டே செல்ல அது நெருப்புப் பிழம்பாகவே தோற்றம் தந்தது.
35) சிறு புள்ளியாக தெரிந்த நெருப்பு பொறி என்பது பரபிரும்மனால் முதலில் வெளிப்படுத்தப்பட்ட, உருவம் வெளித் தெரியாமல் இருந்த சூரியனாக இருக்கலாம். பூமி முழுவதும் வாயுவும், உறைந்த நீருமாக இருந்த நிலம், மெல்ல மெல்ல மாறியவண்ணம் நல்ல காற்றோட்டமும் கடலுமாக உயிரினங்கள் வாழத் தேவையான நிலமாக மாறத் துவங்க பல்லாயிரம் கோடி வருடங்கள் ஆயின என்பதே உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
36) சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எங்குமே திரவ வடிவிலான தண்ணீர் இருக்கவில்லை என்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். தேவைக்கும் மிக அதிக அளவிலான வெட்ப நிலையில் இருந்த பூமியில் பாறைகள் திரவ நிலையில் உருகிக் கிடந்தன. பூமி குளிர்ச்சியடையும் வரை தண்ணீரானது வாயு வடிவில் அதற்குள் மறைந்து கிடந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். பூமியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்ட போது, அதில் மறைந்து கிடந்த வாயு நீராவியாக வெளியேறத் துவங்கியது. அப்படி வெளியேறிய நீராவி பூமி குளிர்ந்தவுடன், மெல்ல மெல்ல திரவ நிலையை அடைந்து கீழ் நோக்கி தண்ணீராக விழத் துவங்கின. கோடானுகோடி ஆண்டுகளாக இப்படியாக பூமியின் உள் இருந்து வெளியேறிய வாயு, நீராவியாகி மீண்டும், மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மழையாக பெய்தவண்ணம் இருந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்த பெரும் பள்ளங்களுக்குள் தண்ணீர் நிறையத் துவங்க அதுவே கால ஓட்டத்தில் பெரும் கடலாக உருவாயிற்று. இப்படியான பல்வேறு செயல்களுக்கு அதிபதிகளாக இருந்த தெய்வங்கள் பரபிரும்மனால் வெளிப்படுத்தப்பட்டு கண்களுக்கு புலப்படாவண்ணம் இருந்தார்கள். அவர்களில் சூரிய பகவான், சந்திர பகவான் மற்றும் இடி, மின்னல், மழை, ஆகாயம், சீதோஷ்ண நிலை போன்ற அனைத்திற்கும் அதிபதியான தேவேந்திரனும் வாயு பகவானும் அடங்குவார்கள். துவக்க நிலை வேலைகள் முடிந்த பின்னர் பரபிரும்மன் மீண்டும் அவர்களை தம்முள் இணைத்துக் கொண்டார்.
37) மானிட மற்றும் பிற ஜீவன்கள் உயிர் வாழத் தேவையான நீரும், நிலமும், கடலும் உருவாக பல்லாயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதினை பரபிரும்மன் அறிந்தே இருந்தார் என்பதினால்தான் தன்னுள் இருந்து பூமியை வெளிவரச் செய்த பரபிரும்மன் அடுத்து கடலை உருவாக்கினார்.
38) ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி பூமி வெளி வந்த பின்னர் அது உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நிலையில் அமைய சுமார் 13 பில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்டன என்பதாக கூறி உள்ளார்கள். அதாவது பரபிரும்மன் வெளிப்படுத்திய பூமியானது உயிரினங்கள் வாழத் தேவையான நிலையில் மாற்றி அமைத்து பிரும்மா மூலம் உயிரினங்களை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட காலம் ஆகும். முதலில் பிரும்மா வெளிப்படுத்திய உயிரினங்கள் சுமார் 15 முதல் 20 விலங்குகள் ஆகும். அவற்றில் இருந்தே சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றியதாம். இது பின்னர் விளக்கப்படுகின்றது.


39)
இவை அனைத்தும் எடுத்துக் காட்டுவது என்ன எனில் பரபிரும்மன் வெளிப்படுத்திய பூமியில் இருந்து கடல் தோன்றி, பிரும்மா படைத்த அசையும், அசையா மற்றும் பிற விலங்கினங்கள் முதல் சிவ சக்தி நிலையைக் குறிக்கும் ஆண் மற்றும் பெண் இனங்கள் என அனைவரும் வாழத் தேவையான நிலமாக மாறவும், மேலும் நிலம் விரிவடையவும் எடுத்துக் கொண்ட காலம் 13.699 பில்லியன் வருடங்கள் ஆகும்.

40) அதனால்தான் அந்த 13.699 பில்லியன் வருட காலத்தை பல்வேறு தெய்வங்களை தன்னுள் சிருஷ்டி செய்து அவர்களை தெய்வ சில்பியான விஸ்வகர்மா மூலம் வடிவமைக்க பரபிரும்மன் பயன்படுத்திக் கொண்டார் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். தெய்வ சில்பியான விஸ்வகர்மா வடிவமைத்த செய்தியை பின்னர் கூறுகின்றேன்.

தொடர்கிறது …..4

—————————-

அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

  1. https://www.space.com/25126-big-bang-theory.html
  2. https://www.hinduismfacts.org/hindu-scriptures-and-holy-books/manusmriti/
  3. https://www.space.com/13320-big-bang-universe-10-steps-explainer.html
  4. https://en.wikipedia.org/wiki/The_Five_Ages_of_the_Universe
  5. https://en.wikipedia.org/wiki/Universe
  6. https://thesciencebehindit.org/how-did-the-universe-begin-how-will-it-end/
  7. https://oceanservice.noaa.gov/facts/why_oceans.html
  8. https://socratic.org/questions/how-were-the-earth-s-oceans-formed
  9. https://en.wikipedia.org/wiki/Human_evolution
  10. https://flexbooks.ck12.org/cbook/ck-12-college-human-biology-flexbook-2.0/section/27.7/primary/lesson/chapter-7-answers-chumbio/
  11. https://www.templepurohit.com/origin-lord-shiva-lord-vishnu/
  12. https://www.kanyakumari-info.com/blog/question-how-brahma-vishnu-mahesh-born.html
  13. https://www.hinduwebsite.com/sacredscripts/hinduism/dharma/manusmriti_1.asp
  14. https://www.bbc.com/future/article/20220105-what-existed-before-the-big-bang

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman