குலதேவி
தஞ்சம்மாவை தேடி
-ஒரு உண்மை அனுபவம்-
எழுதியவர் : சாந்திப்பிரியா
கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று நான் எழுதி இருந்த “குலதெய்வம் மற்றும் குடும்ப தெய்வம் – 8” என்பதில் தமது கருத்தை திருமதி சாரு எனும் ஒரு பெண்மணி கீழ் கண்டவாறு பதிவு செய்து இருந்தார்.
Quote:
“வனதுர்க்கை மஹாலக்ஷ்மியின் அவதாரமான தஞ்சம்மா தேவியே எங்களது குலதெய்வம். ஆனால் அந்த தேவியை என்ன பெயரில் அழைக்கின்றார்கள் என்பதோ அந்த தேவியின் ஆலயம் எங்கு உள்ளது என்பதோ தெரியவில்லை.”
– Unquote
அவர்களுக்கு ஈமெயில் மூலம் நான் அனுப்பிய பதிலில் கதிராமங்கல வனதுர்க்கை குறித்து மட்டுமே நான் அறிந்துள்ளேன் என்றும், தஞ்சம்மா எனும் பெயரில் எந்த ஒரு தெய்வத்தையும் கேள்விப்பட்டது இல்லை என்பதினால் அதைக் குறித்து யார் கூறினார்கள் என்பதையோ அல்லது அந்த தேவியின் புகைப்படத்தையோ அனுப்பி வைத்தால் நான் கண்டு பிடிக்க முயலுகின்றேன் என்றும் பதில் எழுதினேன். (சாதாரணமாக குலதெய்வம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கதிராமங்கல வனதுர்கையை தற்காலிக குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டால் அவர்களது உண்மையான குலதெய்வத்தை தக்க நேரத்தில் அவள் அடையாளம் காட்டுவார் என்பது நம்பிக்கை. மேலும் இன்னும் சிலர் திருப்பதி வெங்கடேசப் பெருமானையும் தற்காலிக குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு தமது குலதெய்வத்தை தேடுவது உண்டு என்பதினால் அப்படி கடிதம் எழுதினேன்).
அப்படி எழுதி விட்ட பின்னர் நான் உடனடியாக தஞ்சம்மா குறித்து தேடுதலை தொடங்கினேன். கூகுளில் தேடியபோது ஆந்திராவில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலைக்கு பக்கத்தில் இன்னொன்றும் இருந்ததைக் கண்டேன். ஆனால் அந்த இரண்டிலும் தஞ்சம்மா குறித்த எந்த ஒரு குறிப்புமே இல்லை என்பது வருத்தமாக இருந்தது.
அந்த பெண்மணிக்கு அதை அனுப்பும் முன்னரே எனக்கு அந்த பெண்மணியிடம் இருந்து அவர்களுடைய குலதெய்வத்தை அதிசயமான வழியில் அவர் கண்டு பிடித்து விட்டதாக ஈமெயில் மூலம் தகவல் வந்தது. நேரம் வரும்போது குலதெய்வமே தன்னை எப்படி அடையாளம் காட்டிக் கொள்கின்றது என்பதைக் கண்டபோது எனக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. அந்த பெண்மணியின் கடிதத்தை படித்தவுடன் கீழ் கண்ட உண்மைகள் எனக்கு விளங்கின. அந்த பெண்மணியின் கடிதத்தை படித்தவுடன் கீழ் கண்ட உண்மைகள் எனக்கு விளங்கின:
- பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் நம் நாட்டை கைப்பற்றும் முன்னரே நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்களால் தத்தம் இருப்பிடங்களை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு இருந்த அந்த பெண்மணியின் புகுந்த வீட்டை சேர்ந்த முன்னோர்கள் வேறு வழி இன்றி கர்நாடகத்தில் ஒரு இடத்தில் தங்கி இருந்தபோது, தமது பூர்வீக குலதெய்வம் யார் எனது தெரியாத நிலையில் தற்காலிகமாக திருப்பதி வெங்கடேசப் பெருமானை குலதெய்வமாக துதித்து வந்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் தமது குலதெய்வம் ‘ஐயனார்’ என்பதை தெரிந்து கொண்டாலும், அந்த தெய்வம் குடி இருந்த ஆலயம் எது என்பதை இன்றுவரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
- தத்தம் சொந்த இடங்களை துறந்துவிட்டு ஓடி வந்திருந்த முன்னோர்கள் வருடா வருடம் ஸ்வாமி சமாராதனை எனும் சடங்கை செய்து வந்தார்கள் ( ஸ்வாமி சமாராதனை என்பது என்ன என்றால் வீட்டினர் பெரும் பயணத்தை மேற்கொண்டப் பின் திரும்பி வந்ததும் கடவுளுக்கு நன்றி கூற செய்யப்படும் சடங்கு ஆகும். அதே போல தூரதேச பயணங்களை மேற்கொண்டவர்கள், காசி, ராமேஸ்வரம் போன்ற புனித இடங்களுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் இதை செய்வார்கள். முக்கியமாக திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் வீடுகளில் இது நிச்சயம் நடைபெறும். அந்த பூஜையை ஏற்றுக் கொள்ளும் குடும்ப தேவதைகள் மனம் மகிழ்ந்து அந்த குடும்பத்தினர் வளமாக வாழட்டும் என தெய்வங்களுடன் சேர்ந்து ஆசிகளைத் தருவார்கள் என்பதும் ஐதீகம் ஆகும்). அந்த குடும்பத்தினர் தமது குலதேவதையாக ஏற்றுக் கொண்டு இருந்த அவர்களது கிராம தேவதையான படவாட்டளம்மா எனும் தேவதையை ஆராதிக்கும் வகையில் அந்த சடங்கை செய்து வந்தார்களாம்.
- அந்த பூஜையை தவிர அவர்கள் காட்டில் தங்கி இருந்தபோது அவர்களுக்கு காட்சி தந்திருந்த கிராம தேவதையான தஞ்சம்மா எனும் தேவிக்கும் சில காலம் பூஜை செய்து வந்தவர்கள், இன்றளவும் எவருக்கும் தெரியாத காரணங்களினால் திடீர் என அந்த வழிபாட்டை நிறுத்தி விட்டதும் இல்லாமல், அவளுக்காக அவர்கள் கட்டிய வழிபாட்டு தலத்தையும் இடித்து விட்டு சென்று விட்டார்களாம். அதனால் அந்த தேவியின் சாபத்துக்கு ஆளான அந்தக் குடும்பத்தினருக்கு வாழ்கையில் பல துன்பங்களும் துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததாம். இதன் விவரத்தை அந்த பெண்மணியின் கடிதத்தில் படிக்கலாம்.
- இப்படியாக அவருடைய புகுந்த வீட்டினர் பட்ட சோதனைகள் ஒரு புறம் இருக்க அந்த பெண்மணியின் பிறந்த வீட்டின் நிலைமை என்ன? பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்களால் தத்தம் இருப்பிடங்களை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு இருந்த அந்த பெண்மணியின் பிறந்த வீட்டை சேர்ந்த முன்னோர்களும் வேறு வழி இன்றி கர்நாடகத்தில் அந்த பெண்மணியின் புகுந்த வீட்டினர் தங்கி இருந்த கிராமங்கள் ஒன்றில் தங்கி இருந்தபோது, தமது பூர்வீக குலதெய்வம் யார் எனது தெரியாத நிலையில் தற்காலிகமாக திருப்பதி வெங்கடேசப் பெருமானை குலதெய்வமாக துதித்து வந்திருந்தார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்களுக்கு அவர்களது குலதெய்வம் அவர்களது பூர்வீக கிராமத்தில் இருந்த ஸ்ரீனிவாசப் பெருமான் என்பது தெரிய வந்ததாம். அவர்களது குலதேவதை அவர்களது கிராமத்தில் இருந்த அன்னை மாரியம்மனாம்.
- அவர் தேடிய தஞ்சம்மா அவர்களது குலதெய்வம் அல்ல. ஆனால் அந்த தெய்வம் அவர்களது குலதேவதையாகும். அதாவது அவர்களது குலதெய்வமான ஐயனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த தெய்வம் ஆகும்.
அந்த பெண்மணின் சுவையான கடிதத்தை படியுங்கள். அந்த பெண்மணியின் நலனைக் கருதி அதில் கூறப்பட்டு உள்ள இடங்கள் மற்றும் பெயர்கள் இந்தக் கட்டுரையில் மாற்றி தரப்பட்டு உள்ளன. இடையிடையே எனது விளக்கத்தை அடைப்புக் குறியில் வேறு நிற சொற்களில் கொடுத்து உள்ளேன். –சாந்திப்பிரியா
குலதேவதையை தேடி அலைந்த
ஒரு பெண்மணியின் உண்மைக் கதை
“ஐயா
வணக்கங்கள்
நாங்கள் பிராமணர் பிரிவை சேர்ந்தவர்கள். ஆங்கிலேய அரசாங்கம் வருவதற்கு முன்னரே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த முகலாய மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு அவர்கள் தங்கி இருந்த அக்ரஹாரம் மற்றும் கிராமங்களில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட இந்து பிராமணர்கள் அனைவரும் காடுகள் வழியே தப்பி ஓடி முன்பின் தெரியாத இடத்தை சென்றடைந்தார்கள். அப்படி தப்பி வந்தவர்கள் தங்குவதற்காக மைசூர் மஹாராஜா அவர்களால் தந்த கிராமங்களில் தங்கி இருக்கலானார்கள். அந்த கிராமங்கள் முல்பாகல் எனும் ஊரின் அருகில் உள்ளது. அப்படி குடியேறியவர்கள் காஞ்சிபுரம், வேலூர், வட மற்றும் தெற்கு ஆற்காடு, ஈரோடு, கரூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற இடங்களில் இருந்து தப்பி ஓடி வந்தவர்கள். அந்த கிராமத்தில் குடியேறியவர்கள். பின்னர் அவரவர் கோத்திர குழுக்களாக ஒன்று சேர்ந்து தனி கோத்திர குழுக்களாக அந்த கிராமத்தில் வாழத் துவங்கினார்கள்(கோத்திரம் என்பது முதலில் தோன்றிய மூல ஆண் மகன் முதல் பரம்பரைப் பரம்பரையாக தொடரும் அந்த குடும்பத்தினரின் இன்னொரு அடைமொழிப் பெயர் ஆகும். அந்த அடைமொழியைக் கொண்ட குடும்பத்தின் மூல மகன் உலகம் தோன்றியபோது தோன்றிய ஏழு ரிஷிகளில் ஒரு ரிஷியாகும். அதாவது ஒருவர் தனது அடைமொழி பெயரை பாரத்வாஜ பாரத் கோத்திரம் எனும்போது அந்த கோத்திரத்தை சேர்ந்த மூல ஆண் மகன் ஏழு ரிஷிகளில் ஒருவரான பாரத்வாஜ ரிஷி ஆகும்). ஆனால் அங்கிருந்த அனைத்து கோத்திர பிரிவினரும் ஒருமித்த கருத்தோடு திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாளை தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்கி வரலானார்கள் .காலம் ஓடியது. இப்படியாக தப்பி வந்து குடியேறிய குடும்பத்தின் பின் வழிச் சந்ததியினருக்கு அவர்களது சொந்த கிராமம், குலதெய்வம், குலதேவதை மற்றும் மூதையோர் கடைப்பிடித்து வந்த சடங்குகள் என எதுவுமே தெரியாமல் போய்விட்டது
இப்படியாக வாழ்ந்து வந்த வம்சாவழிக் குடும்பத்தினருக்கு பல தொல்லைகளும் துன்பங்களும் நேர்ந்தன. குடும்பங்களில் ஒற்றுமை இல்லை, அமைதி இல்லை, வினோதமான வியாதிகள் வந்து கொண்டே இருந்தன, ஒருவருக்கொருவர் இடையே இருந்த அன்பும், ஆதரவும் குறைந்தது, குடும்பங்களில் விவாகங்கள் நடைபெறவில்லை, திருமணம் ஆன பல குடும்பங்களில் விவாகரத்து ஏற்பட்டது. அவரவர் படிப்புக்கும், திறமைக்கும் ஏற்ற பதவிகள் கிடைக்கவில்லை, சமுதாயத்தில் மதிப்பும் இன்றி இருந்தது. ஆகவே இப்படியான துன்பங்களில் வாழ்ந்தவர்கள் ஜோதிடர்களை அணுகியபோது அவர்களோ குடும்பங்களைக் காக்கும் சக்தி படைத்த அவரவர் குலதெய்வம் மற்றும் குலதேவதைகளை வழிபட்டால் மட்டுமே இந்த துயரங்கள் விலகும் என்றார்கள். குலதெய்வம் மற்றும் குலதேவதை ஒரு குடும்பத்தின் ஆணிவேர் ஆகும். அவர்களை உதாசீனப்படுத்துவது பெரும் குற்றம் ஆகும். அவர்களை மீறி வேறு எந்த தெய்வத்தாலும் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. இஷ்டதேவதைகளுக்கு எத்தனை ஹோமம், யாகம், பூஜை என சடங்குகள் செய்தாலும் அவற்றால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கொடுக்க முடியும். குலதெய்வம் மற்றும் குலதேவதை என்பவர்களை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
அதையே காஞ்சி மஹா பெரியவா மிகவும் அழகாக எடுத்துக் கூறினார் ‘குலதெய்வத்தையும் பித்ருக்களையும் உதாசீனப்படுத்தி விட்டு வேறு எந்த தெய்வத்திடம் சென்று வேண்டிக் கொண்டாலும், எத்தனை பெரிய பூஜை, யாகம், ஹோமம், பிரார்த்தனைகள் என சடங்குகள் செய்தாலும், அதற்கான பலன் கிடைக்காது. அதன் காரணம் வேண்டப்படும் தெய்வங்களினால் அவரவர் குலதெய்வங்கள் மற்றும் பித்ருக்களின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு வரத்தையும் தர முடியாது. ஒருவருடைய நலனையும் பேணுவதற்கு அதிகாரம் படைத்தவர்கள் அவரவர் குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் மட்டுமே ஆவார்கள். அதனால் அவர்களை மனதிருப்தியுடன் இருக்க வைப்பது அவசியம் ஆகும். குலதெய்வம் மற்றும் அவரவர் பித்ருக்களை உதாசீனப்படுத்தி, அவர்களை விட்டு விலகிச் செல்வது, தன்னுடைய வேர்களை தானே அறுத்துக் கொண்டு விடும் ஒரு மரத்துக்கு சமம் ஆகி விடும். அப்படி தனது பிரதான வேரினை வெட்டிக் கொள்ளும் அந்த மரம் உயிர் வாழத் தேவையான உயிர்ச்சத்து அதற்குப் பிறகு பூமியில் இருந்து அதற்கு கிடைக்காது. பித்ருக்களையும் குலதெய்வத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு வேறு தெய்வத்தை வணங்குவது, வேர் அறுந்த மரம் தற்காலிகமாக உயிர் வாழ அதற்கு சிறிதளவு தண்ணீரை ஊற்றுவதை போன்றதே ஆகும்’.
அவர் மேலும் கூறுகையில் ‘ஆகம வழிபாட்டு முறையிலான தெய்வங்கள் வழிபாடு துவங்கியதற்கு முன் ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் கிராமங்களில் இருந்த எதோ ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். பல நேரங்களில் உப தெய்வங்களே கிராம தேவதை அல்லது கிராம தேவதா என்ற பெயரில் இருந்துள்ளன’. இது ஆச்சர்யமான உண்மை ஆகும்.
எனது கணவரின் கடந்த மூன்று பரம்பரையினருக்கும் எதோ ஒரு தோஷத்தினால் வாழ்க்கையில் பல சிக்கல்கள் வந்து கொண்டே இருந்தது. அதன் காரணம் குலதெய்வத்தின் சாபம் என்பதாக ஜோதிடர்கள் கூறினார்கள். அவர்களுக்கோ அவர்களது பூர்வீகமும் தெரியவில்லை, குலதெய்வமும் யார் என்பது தெரிந்திருக்கவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் எங்கள் குலதெய்வம் மற்றும் குலதேவதையை தேடி வந்தேன். அந்த சமயத்தில் அனுபவம் மிக்க ஒருவர் பூஜை அறையில் தினமும் ஒரு விளக்கை ஏற்றி வைத்து ‘நீங்கள் எங்கிருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் என்னுடைய இந்த வேண்டுகோளையும் என் பூஜையையும் ஏற்றுக் கொண்டு எங்கள் குலத்தைக் காப்பாற்ற வேண்டும் ‘ என குலதெய்வம் மற்றும் குலதேவதையை வேண்டிக் கொள்ளுமாறு யோஜனைக் கூற நான் அதை பக்திபூர்வமாக தவறாமல் செய்து வந்தேன். அதன் பின்னரே என்னுடைய மூதையோர் காஞ்சிபுரம், வேலூர், வட மற்றும் தெற்கு ஆற்காடு போன்ற இடங்களில் இருந்து தப்பி ஓடி வந்தவர்கள் என்பதும் அவர்களது பூர்வீக கிராமம் குண்டூர் மற்றும் குமுன்தன் என்பதாகவும் அறிந்தேன்.
எனது பல வருட பிரார்தனையினாலும், காஞ்சி மஹாபெரியவாவின் அனுகிரஹத்தினாலும் எங்கள் குலதெய்வம் ஐயனார் என்பதை அறிந்து கொண்டேன் ஆனால் எங்கள் ஆலயத்தை கண்டு பிடிக்க முடியவில்லை (தனது குடும்பம் என அந்தப் பெண்மணி குறிப்பிட்டது அவர் கணவரின் குடும்பம் ஆகும். ஏன் எனில் திருமணம் ஆன ஒரு பெண்ணின் திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு கணவரின் குடும்பமே அவளது குடும்பம் ஆகும்). அது கிருஷ்ணகிரி எனும் ஊரில் உள்ள எட்டஹள்ளி எனும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். அதன் காரணம் அரசாங்க கெஸட் எனப்படும் அரசு செய்தி இதழின்படி எனது கணவரின் பெரிய தாத்தா பெயர் எட்டஹள்ளி எனும் அடைமொழிப் பெயருடன் துவங்குவதாகும். ஆனாலும் எவ்வளவோ முயன்றும் கிருஷ்ணகிரியில் உள்ளதாக கூறப்பட்ட எட்டஹள்ளி உள்ள இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எவருக்குமே அந்த கிராமம் உள்ள இடம் குறித்த தகவல் தெரியவில்லை. ஆகவே பாலபெரியவர் அறிவுறுத்தியதை தொடர்ந்து நாங்கள் காஞ்சி காமாக்ஷி ஆலயத்தில் உள்ள ஐயனாரை வணங்கி வந்தோம். அதை போலவே எங்கள் மூதையாருக்கு காட்சி கொடுத்து அவர்கள் ஒவ்வொரு வருடமும் பூஜை செய்து ஆராதித்து வந்திருந்த மஹாலஷ்மியின் ஸ்வரூபமான கிராம தேவதை தஞ்சம்மா குடி இருந்த ஆலயத்தையும் தேடினோம். இந்த தேவி எங்கள் குடும்பதேவியாகும் என்பதினால் அந்த தேவிக்கு செய்யப்படும் எங்களது பூஜை எங்கள் குடும்பத்தை மட்டுமே சேர்ந்ததாகும். ஆனால் இதுவரை அந்த தேவி உள்ள ஆலயத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
நேற்று உங்களிடம் தஞ்சம்மா தேவி குறித்துக் கேட்டபோது நீங்கள் அவரது ஆலயம் உள்ள இடத்தைக் கண்டு பிடிக்க உதவுவதாக அன்புடன் கூறினீர்கள். இன்று காலை நான் பூஜைகளை செய்து முடித்தப் பின் என் மனதில் ஒரு பொறி தட்டியது போல எதோ ஒரு உணர்வு ஏற்பட நான் மீண்டும் கம்பியூடரில் தஞ்சம்மா தேவியை குறித்து தேடியபோது மீண்டும் மீண்டும் ‘தஞ்சம்மா கராஜ் (வாகனக் கூடம்), பெங்களுர்’ என்ற பெயர் வந்து கொண்டே இருந்தது. யாரும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் தஞ்சம்மாவின் பெயரை வைத்து இருக்க மாட்டார்கள் என எண்ணினேன். காஞ்சி மஹாபெரியவரின் அருள் இருந்தால் விவரம் கிடைக்கலாம் என எண்ணி அந்த வாகனக் கூடத்தில் உள்ளவரை தொடர்ப்பு கொண்டு தஞ்சம்மா தேவியைக் குறித்து கேட்டதும் என்னுடன் யாரோ ஒருவர் பேசினார். அவரிடம் நான் அவரை தொடர்ப்பு கொண்டதின் காரணத்தை எடுத்துக் கூறியதும் அவர் தொலைபேசியை அவரது தாயாரிடம் கொடுத்து என்னுடன் பேசுமாறு கூறினார். அந்த பெண்மணி தங்களது குலதெய்வம் தஞ்சம்மா எனவும், மிகவும் சக்தி வாய்ந்த அந்த கன்னி தேவியின் ஆலயம் வேலூரில் உள்ள ஆடுகாம்பொறை எனும் குக்கிராமத்தில் உள்ளது என்றும் அங்குள்ள பல குடும்பத்தினரும் குலதெய்வமாக தஞ்சம்மாவை வழிபட்டு வந்துள்ளதாகவும் கூறினார். நான் முன்னரே கூறியபடி முஸ்லீம் மன்னர் கொடுமையினால் தம் இடத்தை விட்டு ஓடிய சிலர் வழி தவறி சென்று இங்கு வந்து குடியேறி இருந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. இன்றைய நாள் எனக்கு அதிஷ்ட நாளாகவே இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். உடனடியாக ஒரு பண்டிதரை தொடர்பு கொண்டு அந்த தேவியை ஆகம வழிபாட்டு முறையில் ஆராதிப்பது எப்படி என்பதைக் கற்று அறிந்து கொண்டேன்.
போன வருடம் தஞ்சாவூரில் எங்களுடைய குலதெய்வமான ஐயனார் ஆலயத்தை நாங்கள் தேடித் கொண்டு இருக்கையில் எங்களை போலவே பலரும் அவரவர் குலதெய்வத்தை தேடித் கொண்டு இருந்தது தெரிய வந்தது. முன்காலத்தில் அந்தணர்கள் உட்பட அனைவருமே அவரவர்களது கிராமத்தில் இருந்த கிராம தேவதா அல்லது தேவதைகளை வணங்கி வந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் இடம் பெயர்ந்து சென்றவுடன் ஆகம வழிபாட்டு முறையிலான தெய்வ வழிபாடு தோன்றியதின் காரணமாக கிராமதேவதை வழிபாட்டை நிறுத்தி விட, வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்தார்கள். இடையில் ஏற்பட்ட தொல்லைகள் காரணமாக மீண்டும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளத் துவங்கி உள்ளார்கள் என்பதே உண்மை ஆகும்.
நீங்கள் என் மீது காட்டிய அக்கரைக்கு மிக்க நன்றி. நங்கள் காஞ்சி மஹா பெரியவாவின் ஆசியினால் காஞ்சி மடத்தின் ஆஸ்தான ஜோதிடர் எனப்பட்டவரும், பிரசன்னத்தில் வல்லவருமான பாலக்காட்டை சேர்ந்த ஒருவரை தொடர்ப்பு கொண்டோம். எளிதில் அணுக முடியாமல் இருந்த அவரை எப்படியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களது பிரச்சனயைக் கூற, அவர் எங்களுடைய குலதெய்வம் ஐயனார் என்றும், அந்த ஆலயத்தை கண்டு பிடிக்க முதலில் ஆலங்குடிக்கு சென்று அங்கு தேடுமாறும் கூறிவிட்டு அந்த ஐயனார் ஆலயம் குறித்து புஷ்கலை, பூரணை மற்றும் தர்ம ஸாஸ்தா மற்றும் போன்ற ஆலயங்களில் மற்றும் கும்பகோணத்தில் உள்ள பிரபலமான ஒரு பெருமாள் கோவிலிலும் சென்று விஜாரிக்குமாறும் கூறினார்.
அந்த நிமிடம் வரை எனக்கு ஐயனார் என்ற ஒரு கடவுள் இருக்கின்றார் என்பதே தெரியாமல் இருந்தது. ஆகம தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு முன்னர் தட்ஷிண பீட பூமியில் ஐயனார் ஒரு காலத்தில் பிராமணர்கள் உட்பட அனைத்து குடும்பங்களின் குலதெய்வமாக இருந்துள்ளார் என்பது தெரிந்தது. எட்டு அவதாரங்களில் அவதரித்ததாக கூறப்படும் அவருடைய ஒரு அவதாரம் ஐயப்பன் என்றும் தெரிந்து கொண்டேன். கும்பகோணத்தில் இருந்த சிறிய பல ஆலயங்கள் ஐயனார் ஆலயமாக இருந்தாலும், அவருடைய ஆலயங்களின் பின்புறங்களில் பெருமாள் கோவில்கள் இருந்தன. அந்த பகுதியில் பெருமாள் ஆலயம் பின்புறத்தில் இருந்த பல ஐயனார் ஆலயங்கள் இருந்ததினால் எங்களுடைய குறிப்பிட்ட ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே ஆலங்குடி ஆலயத்தின் எதிரிலேயே இருந்த சிறிய ஐயனார் ஆலயத்தில் வழிபட்டு விட்டு வந்து விட்டோம். மேலும் இந்தப் பகுதியில் இருந்தவர்கள் நாராயணப் பெருமான் மற்றும் சிவபெருமான் ஆலயங்கள் இரண்டையுமே பெருமாள் ஆலயம் என குறிப்பிட்டதினால் குழப்பம் ஏற்பட்டது. எங்களுடைய உண்மையான ஐயனார் ஆலயத்தை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் நாங்கள் தற்போது காஞ்சி காமாட்சி ஆலயத்தில் உள்ள ஐயனாரை வணங்கி வருகிறோம்
மேலும் நாங்கள் பலகாலம் ஆராதித்து வந்து பின்னர் கை விட்டு விட்ட கிராம தேவதை ஒன்றின் சாபம் உள்ளதாக ஒரு ஜோதிடர் மூலம் தெரிய வந்தது. அந்த கிராம தேவதையின் கோபத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என அவர் கூறி இருந்ததினால் அந்த கிராம தேவதை இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க கர்நாடகாவின் அருகில் இருந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களில் சிலர் எழுதிய புத்தகங்களை தேடி எடுத்துக் படித்தேன். அதில் ஒன்றில் என்னுடைய கணவரின் குடும்ப உறவினர்கள் குறித்த செய்தி இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களையும், துன்பங்களையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டேயிருந்தார்கள். அதன் காரணம் தெரியாததினால் அவர்கள் அடுத்த ஊரை சேர்ந்த சில பெரியவர்களுடைய அறிவுரையை பெற்று வரச் சென்றார்கள். திரும்பி தமது கிராமத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தவர்கள் களைப்படைந்து, வந்த வழியில் இருந்த அடர்ந்த காட்டில் மரத்தடியில் தங்கினார்கள். அவர்கள் வேலூர் மற்றும் ஆற்காட்டை சேர்ந்தவர்கள். அன்று மாலைப் பொழுதில் அவர்கள் முன் சிவப்பு கரை போட்ட சேலை அணிந்த ஒரு பெண்மணி தோன்றி தான் கன்னி வன தேவதை எனவும், தன்னுடைய பெயர் தஞ்சம்மா என்றும், தன்னை அவர்கள் வழிபட்டால் அவர்களது குடும்பத்தை பாதுகாத்து அவர்களை வழி நடத்துவேன் எனவும் கூறினாள். அதை ஏற்றுக் கொண்ட அந்த மக்களும் அவள் தோற்றம் தந்த அதே இடத்தில் அவளுக்கு ஒரு சிலை வைத்து வழிபடத் துவங்க அவர்களது துன்பமும், துயரங்களும் குறையலாயின. ஆனால் அந்த கிராமத்தில் இருந்தவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அந்த கிராம ஆலயத்தை இடித்து விட்டு சிலையையும் தூக்கி எறிந்து விட்டார்கள். ஆகவே மீண்டும் கிராமதேவதை தஞ்சம்மாவை வழிபடுவதற்காக நாங்கள் அவளது ஆலயத்தை தேடத் துவங்கினோம்.
முதலில் எங்களுக்கு கிராம தேவதை எப்படி குலதெய்வமாக இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஆலயத்தில் இருந்த பெரிய பண்டிதர்கள் பண்டைய காலத்தில் ஆகம தெய்வங்கள் தோன்றுவதற்கு முன்னால் அனைவருமே தத்தம் கிராமங்களில் இருந்த கிராம தேவதை மற்றும் கிராம தெய்வங்களையே தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டு வந்துள்ளார்கள் என்று கூறினார்கள். அதனால் தற்போது பிராமணர்கள் கூட அந்த உண்மையை உணர்ந்து கொண்டு அவர்களை வழிபடத் துவங்கி உள்ளார்கள். இதைக் குறித்து கூறிய காஞ்சி காமகோடி மஹாபெரியாவாள் அவரவர்களது சொந்த கிராமங்களில் இருக்கும் தேவதைகளும், தெய்வங்களும் மூல தெய்வங்களின் இணை தெய்வமே என்று கருத்து தெரிவித்தார்கள்.
இந்த பின்னணியில்தான் வேலூர் மாவட்டத்தில் இருந்த அறுக்கம்பொறை கிராமத்தில் இருந்த தஞ்சம்மா ஆலயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்று இருந்தோம். அங்கு தஞ்சம்மாவின் உருவம் இல்லாத சிலை மட்டுமே இருந்தது. தஞ்சம்மா சிவப்பு கரை போட்ட வெண்ணிற சேலை அணிந்திருந்தாள். தஞ்சம்மாவின் ஆலயம் வேலூரில் மட்டும் அல்ல தமிழ்நாட்டு எல்லையிலும் சில இடங்களில் உள்ளதாகவும், பிராமணர்கள் உட்பட அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே அவள் குலதெய்வமாக இருந்துள்ளாள் என்பதாக பண்டிதர் கூறினார். ஒரு அடி உயரத்தில் இருந்த அந்த உருவமில்லாத சிலையின் இருபுறமும் இருந்த குதிரைகளில் ஒன்றில் ஒரு வீரரும், இன்னொன்றில் ஒரு பெண்மணியும் அமர்ந்திருக்க அவர்களது முன்புறம் வெம்முனி மற்றும் செம்முனி என்ற இருவரும் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் உருவமற்ற தேவியாக நீள்வட்டத்தில் இருந்த கல்லில் அமர்ந்து இருந்த தேவியின் புகைப்படத்தை எடுக்க ஆசைப்பட்ட நாங்கள் தடுக்கப்பட்டோம். உருவம் வெளித் தெரியாத நிலையில் தஞ்சம்மா அந்த நேரத்தில் உலவிக் கொண்டு இருப்பாள் என்பதே அதன் காரணம் ஆகும். அந்த சன்னதியில் நுழைந்ததுமே ஒரு தெய்வீக சக்தி எங்களை ஆக்ரமித்துக் கொண்ட உண்மையான உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. சித்தூர் மற்றும் வேலூரை சுற்றியும் தஞ்சம்மா ஆலயங்கள் உள்ளன என்பதை அறிந்து கொண்டோம்.
உங்கள் மூலம் எனக்கு கிடைத்த குலதெய்வத்தின் புகைப்படம் என்னுடைய அதிஷ்டம் என்றே கூறவேண்டும். அதற்கு உங்களுக்கு நான் எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக நான் கூகுளில் எத்தனை தேடியும் கிடைக்காத இதே விவரங்கள் இப்போது எப்படி வெளிவந்தது என்பதைக் காணும்போதும் எனக்கு வியப்பாக உள்ளது. நான் தேடியபோதெல்லாம் இந்த ஆலயம் குறித்த எந்த செய்தியும் காணப்படவில்லை. ஒரு காலத்தில் முஸ்லீம் மன்னர்களின் கொடுமையினால் எங்கள் சந்ததியினர் பலரும் தமது சொந்த இருப்பிடங்களை துறந்து பல்வேறு இடங்களில் இருந்த இடங்களில் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
என்னுடைய தந்தையின் குடும்பக் கதை இன்னும் வினோதமானது. அவருடைய பன்னிரண்டு பரம்பரைக்கு முன்னர் இருந்த மூதையோர் அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களில் இருந்த பிராமணர்களில் அய்யங்கார் பிரிவை சேர்ந்தவர்கள். முகலாய மன்னர்களால் கொடுமைபடுத்தப்பட்டு, இன்னல்களை சந்தித்து வாழ்ந்த அவர்கள் ஒரு கட்டத்தில் தத்தம் இடத்தை விட்டு தப்பி ஓடி முல்பாகல் என்ற பகுதியில் இருந்த அடர்ந்த காட்டின் உள் இருந்த பெயர் தெரியாத ஒரு கிராமத்தை சென்றடைந்தார்கள். அங்கிருந்த மக்களோ ஸ்மார்த்தாக்கள் என்பதினால், அங்கு வைஷ்ணவர் ஒருவர் கூட வாழ முடியவில்லை. இந்த நிலையில் தங்க இடம் தேடி தப்பி வந்தவர்கள் வைஷ்ணவர்கள் என்பதினால் பசிக்கு உணவு கூட தர மறுத்தார்கள். அந்த காலத்தில் ஸ்மார்த்தா மற்றும் வைஷ்ணவர்கள் இடையே பகை இருந்தது என்பதினால் உணவு கூட கிடைக்கவில்லையே என்பதினால் அவர்கள் தமது நெற்றியில் இருந்த நாமங்களை அழித்து விட்டு வீபூதியை பூசிக் கொண்டு வேறு இடத்துக்கு செல்ல அவர்களுக்கு அங்கு உணவு கிடைத்தது. ஆகவே அங்கு தங்கிய அவர்கள் ஸ்மார்த்தாக்களாகவே மாறி விட்டார்கள். திருப்பதி வெங்கடாசலபதியை தற்காலிகமாக தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு பல துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகையில் எப்படியோ தம்முடைய சொந்த கிராமத்தில் தாம் வழிபட்டு வந்திருந்த குலதெய்வத்தை கண்டு பிடித்தார்கள். அவர்களுடைய துயரமும் விலகத் துவங்கின.
என் தந்தையின் கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ‘படவெட்டியம்மா’ அதாவது ‘படை வெட்டிய அம்மா’ என்ற தேவிக்கு ‘ஸ்வாமி ஸமாராதனை’ என்ற பெயரில் ஒரு சடங்கு செய்வார்கள். ஐந்து சுமங்கலிகளுடன் ஒரு வெள்ளைப் புடவை கட்டிய ஒரு விதவையை அமர வைத்து உணவு அளிக்கும்போது அந்த விதவைக்கு உப்பு சப்பில்லாத தயிர் சாதத்தை மட்டுமே உணவாக போடுவார்கள். அதே சமயம் அந்த ஐந்து சுமங்கலிகளைத் தவிர இன்னொரு கன்னிப் பெண்ணுக்கு விதவிதமான உணவை போடுவார்கள். படை வெட்டிய அம்மா என்பது வேலூரில் போளூர் அருகில் உள்ள ரேணுகா தேவி ஆலயம் ஆகும். அவளே எங்களது குலதேவதை ஆகும். இதை பார்க்கும்போது அவர்கள் வேலூரில் இருந்தவர்கள் என்பது புலப்படுகின்றது. அந்த அம்மனின் கதை என்ன என்றால் ஒருமுறை ரேணுகா தேவியின் பக்தனான அந்த நாட்டு மன்னன் மீது திடீர் என ஒரு முகலாய மன்னன் படையெடுத்து வந்தான். அவனிடம் இருந்து தப்பி ஓடி வந்த மன்னனும் சில வீரர்களும் இந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் இரவில் உறங்கி கொண்டு இருந்தபோது அவர்கள் உள்ள இடத்தைக் கண்டு பிடித்து விட்ட முகலாய மன்னன் அவர்களைக் கொல்ல படையோடு அங்கு வந்தபோது ரேணுகா தேவி தன் கையில் ஒரு வாளினை ஏந்தி ஒரு விதவைப் பெண் உருவில் ஆலய வாயிலில் நின்று கொண்டு அந்த ஆலயத்தில் நுழைந்த அத்தனை படை வீரர்களின் தலையையும் வெட்டி ஏறியத் துவங்கினாள். அதைக் கண்டு பயந்த மற்றவர்கள் தப்பி ஓடினார்கள். மறுநாள் அந்த ஆலய வாயிலில் வெட்டுண்ட படை வீரர்கள் தலை குவியலாகக் கிடந்தது. ஆனால் அவர்களை வெட்டி எறிந்த விதவைப் பெண்ணைக் காணவில்லை. அந்த ஆலய தேவியே அதை செய்து இருக்கின்றாள் என்பதை உணர்ந்த மக்கள் அந்த ஆலய தேவியை ‘படை வெட்டிய அம்மன்’ என்ற பெயரில் வணங்கினார்கள்.
என்னுடைய மூத்த சகோதரி ஆற்காட்டில் இருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். அவர்களது குலதெய்வம் சௌண்டம்மா என்பதாகும். அவளுடைய கணவர் குடும்பம் வணங்கும் குலதெய்வம் மீனவர்கள் வணங்கும் தேவியாகும். மஹாபெரியவா கூறுவார்கள் “குலதேவதை அல்லது குலதெய்வம் என்பது பிரபலமான ஆகம தெய்வங்கள் போன்றவை அல்ல. பண்டைய காலங்களில் பல்வேறு மூதையோர்களின் கிராமங்களில் அவர்களால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்களே அவர்கள்.
நன்றி
–திருமதி சாரு–“
:பின் குறிப்பு:
இந்த பெண்மணியின் தகவல்களை நுணுக்கமாக படித்தால் ஓரு உண்மை விளங்கும். பண்டைய காலத்தில் கிராமங்களில் வழிபடப்பட்டு வந்திருந்த குலதெய்வங்கள், ஜாதி பேதம் இல்லாமல், அனைவராலும், அனைத்து ஜாதியினராலும், அனைத்து பிரிவினராலும் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் ஆகும். அவர்களுக்குள் வைஷ்ணவர்கள் மற்றும் சைவர்கள் என்ற பேதமும் இருந்திடவில்லை. அனைவருமே கிராம தேவதைகளையும் கிராம தெய்வங்களையும் ஒருசேர வணங்கி வந்துள்ளார்கள். ஆகம வழியிலான தெய்வங்களை போன்ற சக்திகள் அனைத்தையுமே தன்னுள் கொண்டவை.
அம்மா என முடிவடையும் பெயரில் இருந்த கிராம தேவதைகள் -தாயம்மா, தஞ்சையம்மா, மாயம்மா, ரேணுகா அம்மா, எல்லம்மா, கங்கம்மா, கங்கையம்மா- என பல்வேறு பெயர்களில் இருந்தாலும், அவர்கள் அனைவருமே பல்வேறு ரூபங்களில் அவ்வப்போது தோன்றிய தேவி மாரியம்மன் ஆகும். மாரியம்மன் பார்வதியின் உடலில் இருந்து வெளிவந்த சக்தி கணமே. அத்தனை ஏன் லக்ஷ்மி தேவியின் அவதாரம் கூட பார்வதி தேவியின் சக்தியில் வெளி வந்தவரே. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு காரணங்களுக்காக ஆகம வழிபாட்டு முறையிலான தெய்வங்களினால், தம்முள் இருந்தே படைக்கப்பட்டவை அந்த தெய்வங்கள்.
பலரது மனதில் ஒரு குழப்பம் உள்ளது. அது என்ன என்றால் ஒரு குடும்பத்தினருக்கு எத்தனை குலதெய்வம் இருந்திருக்கும் என்பதே அந்த எண்ணம் ஆகும். சந்தேகம் இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு குலதெய்வம் மட்டுமே இருக்கும் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தின் ஆண் மகன்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கும் சந்ததியினரின் அனைத்து பரம்பரையினருக்கும் முதல் குடும்பத்தின் குலதெய்வமே தொடர்ந்து அவர்களை காக்கும் குலதெய்வமாக இருந்து கொண்டு இருக்கும்.
அதே சமயத்தில் பண்டைய காலத்தில் நடைமுறை வழக்கத்தில் இருந்திருந்த இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். கிராமங்களில் வாழ்ந்த குடும்பத்தினர் அவர்களது கிராமங்களில் இருந்த பெண் கிராம தேவதைகளுக்கு வருடா வருடம் விழா எடுத்து பூஜை செய்வார்கள். அவர்களை அந்த குடும்பத்தினர் தமது குலதேவதையாக அதாவது இரண்டாம் குலதெய்வமாக மதித்து வந்தார்கள். அதே சமயம் தமது மூல குலதெய்வம் பெண்ணாக இருந்திருப்பின் அவர்கள் அந்த கிராமத்து ஆண் கிராம தேவதாவை இரண்டாம் குலதெய்வம் போல போற்றி வருடா வருடம் பூஜை செய்து பூஜித்து வந்தார்கள். இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த பழக்கத்தை அனைத்து கிராமத்தினரும் கடை பிடிக்கவில்லை, மாறாக கர்நாடகா மற்றும் ஆந்திராவின் கிராமங்களில் வாழ்ந்திருந்த ஒரு சில குடும்பங்களில் இந்த பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆகவே அந்த பழக்கத்தை கொண்டிருந்த குடும்பத்தினர் ‘இன்ன தெய்வம் தமது குலதெய்வம்’ என்றும், ‘இன்ன தெய்வம் தமது குலதேவதா/தேவதை’ என்றும் கூறிக் கொள்வார்களாம்.
பண்டை காலத்தில் பல குடும்பங்கள் சுமங்கலிப் பிராத்தனை எனும் சடங்கையும் கிரஹ தேவதை எனப்படும் வீட்டு தெய்வங்களுக்கு நடத்தி வந்தார்கள். கிரஹ தேவதைகள் யார் என்றால் ஒரு குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்கள், திருமணம் ஆகாமலேயே இளம் வயதில் மரணமடைந்தவர்கள், மற்றும் சுமங்கலிகளாக மரணம் அடைந்தவர்கள் போன்றவர்கள். அவர்கள் தெய்வத்துடன் கலந்து விட்டவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்காக நடத்தப்படும் சுமங்கலிப் பிரார்த்தனை முடிந்ததும் கண்களுக்கு தெரியாமல் அங்கு வீற்று இருக்கும் கிரஹ தேவதைகள் குலதெய்வம் மற்றும் பிற தெய்வங்களுடன் சேர்ந்து அந்த குடும்பத்துக்கு அருளைத் தருவார்கள், அந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்டு உள்ள தோஷங்களை விலக்குவார்கள் என்பது ஐதீகம். இதனால் வீட்டில் வளம் பெருகுமாம், மகிழ்ச்சி நிலைக்குமாம்.
இதனால்தானோ என்னவோ அந்தப் பெண்மணி தமது கணவர் வீட்டாரின் குலதெய்வம் ஐயனார் என்றும், குலதேவதை படவாட்டாளம்மா என்றும் அவரது முன்னோர்கள் தற்காலிகமாக வணங்கி வந்திருந்த தஞ்சம்மாவையும் குலதேவதை எனக் கூறி உள்ளார். அதை போல அவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு குலதெய்வம் ஸ்ரீனிவாஸப் பெருமான் மற்றும் குலதேவதை மாரியம்மன் ஆகும்.
கிராமதேவதை மற்றும் கிராம தேவதாக்கள் என்பவர்கள் அனைவருமே ஆகம தெய்வங்களின் நிழல் தெய்வங்களே ஆகும். அவர்கள் கிராமங்களில் தோன்றியதின் காரணமாக கிராம தெய்வங்கள் என்ற பெயரை பெற்று இருந்தன. ஆகவே கிராம தேவதைகளை, கிராம தெய்வங்களை குலதெய்வங்களாக கொண்டுள்ளவர்கள் எந்த விதத்திலும் ஆகம வழிமுறையிலான தெய்வங்களின் சக்திகளுக்கு சற்றுமே குறைவில்லாதவை அவை என்பதை மனதார உணர்வது அவசியம்
– சாந்திப்பிரியா
Sir want to talk with you. Can i get your contact number. This is my number 9751405253