எழுதியவர்: சாந்திப்பிரியா

பாகம் :2

 

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”

இந்த உலகத்தைப் படைத்த  சிவபெருமானின் மகனும்,  எங்களது குருவும், என்றும் இளம் வயது வாலிபனாக தோற்றம் தரும் முருகப் பெருமானே, குளிர் நிறைந்த திருத்தணி மலையில், மயில் மீது அமர்ந்தவாறு காட்சி தந்து அருள் புரிபவரே, உங்கள் கையில் உள்ள ‘வேல்’ எங்கள் உள்ளத்தில் என்றும் நிலையாக இருந்து எங்களுக்கு அருள் புரியட்டும்.

(விளக்கம் :
(A) ‘திரு’ என்பது முருகப் பெருமானை குறிக்கின்றது. ‘தணி’ என்பது குளிர்ச்சி அடைவதை குறிக்கின்றது. ‘தணி’ என்பதற்கு மலை என்ற பெயரும் உள்ளது. ‘விருத்தம்’ என்பது தெய்வங்களில் மூத்த என்பதை குறிக்கின்றது. ‘கருத்தன்’ என்பது இந்த உலகைப் படைத்தவன் என்பதைக் குறிக்கின்றது.  ஆகவே  சூரபத்தமனை வதம் செய்த பின் முருகப் பெருமான் மனம் குளிர்ச்சி அடைந்து இங்கு தங்கி இருந்ததை குறிக்கும் வகையில் அமைந்ததே திருத்தணி எனும் பெயராகும்.

(B) இந்த பாடலின்  விளக்கம் இதுதான்
ஒருத்தன் மலை = உனக்கு சொந்தமான மலையான
திருத்தணியில் = குளிர் நிறைந்த மலை மீது
மயில் நடத்து = மயில் மீது அமர்ந்தவாறு
உதித்(து) = தோன்றி
அருளும் = அருள் புரியும்
கருத்தன் = இந்த உலகைப் படைத்த
விருத்தன் = தெய்வங்களில்  மூத்த
குகன் = சிவபெருமானின் மகனும்,  எங்களது குருவும், என்றும் இளமையானவருமான
வேலே = வேலே
என(து) உளத்தில் = எனது உள்ளத்தில்
உறை = நிறைந்து

(C)  தெய்வங்களில் மூத்தவரான சிவபெருமானின் மகனும், இந்த உலகை படைத்தவனுக்கே  ஞானத்தை தந்தவரும், மயில் மீது அமர்ந்திருந்தவாறு, திருத்தணி மலை மீது  காட்சி தருபவரும்,  எங்கள் உள்ளத்தில்  வாசம் தரும்  மலைவாழ் தெய்வமுமான, முருகப் பெருமானின்  கரங்களில் காட்சி தரும் ‘வேலாயுதமே’,   சூரிய கிரணங்கள் ஒளி வெள்ளத்தை உலகின் மீது வாரி வீசுவதை போல அல்லவா, ஒளி வெள்ளமாக காட்சி தருகின்றாய் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும்).

பருத்த முலை சிறுத்தஇடை வெளுத்த நகை கறுத்த குழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்க நிகர் ஆகும்

பெருத்த மார்பகங்களையும், மெல்லிய  இடையையும், வெண்மையான பற்களையும், கரும் கூந்தலையும் மற்றும்  சிவந்த இதழ்களையும் கொண்ட வள்ளி தேவியின் கண்களை போன்று கூர்மையான வடிவில் காட்சி தரும் வேலே, உனக்கு நிகர் வேறு யாருமே கிடையாது.

(விளக்கம் :  மேலே கூறப்பட்டு உள்ள பாடலின் அர்த்தத்தை உலகின் தாயாரான பார்வதி தேவியின் ரூபிணியான வள்ளி தேவியின்  உடல் அழகை வர்ணிக்கும் நிலையிலான கண்ணோட்டத்தோடு  பார்க்கக் கூடாது. இந்த பாடலின் உள்ளர்த்தம் மிகவும் ஆழமானது, அற்புதமான தத்துவத்தைக் கொண்டது ஆகும். 

1. ‘முலை’ என்பதை ‘முளைக்க வைப்பது’ என்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும். ஒரு செடியோ மரமோ முளைக்க வேண்டும் எனில் அதற்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்தால்தான் அந்த விதை முளை விட்டு செடி, கொடி அல்லது மரமாகும் .

2. ஒரு தாயார் எப்படி கருவுற்று, குழந்தையை பெற்றெடுத்து பாலூட்டி வளர்த்து பெரியவர்களாக்குகின்றாளோ, அதே போன்ற நிலையில்தான் இந்த உலகத்தில் உள்ள  அனைத்து குழந்தைகளுக்கும் (பக்தர்களுக்கும்)  வள்ளி தேவி, பாலூட்டி வளர்க்கும் தாயைப் போல இருந்தவாறு அவர்களை பாதுகாத்து வருகின்றாள்  எனும்  தாய்மை நிலையை  குறிக்கும் விதமாக பருத்த முலை கொண்டவள் என்று கூறி உள்ளார். இங்கு ‘பருத்த’ என்பதை ‘பிரபஞ்சத்தில் உள்ள எண்ண முடியாத அளவிலான’ மக்களின் தாயாராக இருக்கும் நிலை  என்பதாக பார்க்க வேண்டும். 

3. வாழ்க்கையில் நம்மை அறியாமை எனும்  இருள் சூழ்ந்து இருப்பதினால், வள்ளி தேவியின் மீது இச்சை அதிகமுள்ள முருகப் பெருமான் கையில் ஏந்தி நிற்கும் ‘வேலின்’ மகிமையினால் நமது வாழ்க்கை பிரகாசம் அடையும் என்பதை உருவகமாக விளக்கவே, இருள் சூழ்ந்த நிலையிலான அறியாமையைக் குறிக்கும் விதமாக வள்ளி தேவியின் ‘கருத்த கூந்தலின் நிறத்தையும்’,  அறியாமையை அழித்த பின் ஒருவர் அடையும் ஞான  நிலையை வெளிப்படுத்தும் உருவகமாக  ‘வெளுத்த பற்கள்’  எனவும்  கூறி உள்ளார்.  

4. வள்ளி தேவியின் சிவந்த இதழ்கள் என்பது கொழுந்து விட்டு எரியும் அக்னித் தீயின் சிவப்பு  நிறத்தைக் காட்டுகின்றது.  சூரிய ஒளியை விட அதிக பிரகாசத்துடன்   சீறிக் கொண்டு வரும் முருகப் பெருமானின் வேல்,  சிவந்த நிறத்தில் எரிந்து கொண்டிருக்கும் அக்னியில், நமது அறியாமை துன்பங்கள் மற்றும் கர்ம  வினைகளை   போட்டு எரித்து விடும்.  இப்படியாக  வள்ளி தேவியின் உடல் வர்ணனை எனும் தத்துவத்தை உள்ளடக்கிய பாடல் மூலம்  முருகப் பெருமான் கையில் உள்ள சக்தி  வேலின் முக்கியத்துவம், மகிமை மற்றும் சக்தி என்பவை வெளிப்படுத்தப்பட்டு உள்ளன)

சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்

சொல்வதற்கு அரிதான  திருப்புகழ் மந்திரத்தை  கூறிக் கொண்டே உள்ளவர்களை அண்டிக் கெடுக்கும், வெளித் தெரியாத பகைவர்களை, வேருடன் அழித்து, தர்மத்தை நிலை நாட்டும் தன்மையிலானது உக்கிரமாக சீறி வரும் முருகப் பெருமானின் கையில் உள்ள சக்தி ‘வேல்’.

(விளக்கம்:
1. இந்த பாடலில் காணப்படும் ‘வெளித் தெரியாத பகைவர்கள்’ என்பதை மனதில் ஆழமாக பதிந்து உள்ள தீய எண்ணங்கள், அறியாமை மற்றும் பேராசைகள் போன்றவை என்பதாக பார்க்க வேண்டும். ‘தர்மத்தை நிலை நாட்டும் ‘ என்பது நல் வழிக்கான மற்றும் ஞான நிலைக்கான பாதையைக் காட்டும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும். ‘உறுக்கி எழும்’ என்பது உக்கிரமாக கிளம்பி வந்து என்ற பொருளை தரும்.

2. ஆகவே இந்த பாடல் மூலம் என்ன விளக்கப்பட்டு உள்ளது என்றால் அனைவராலும் அனைத்தையும் எளிதில் அடைந்து விட முடியாது. ஒவ்வொருவரின் திறமைகளுக்கு ஏற்பவே அவரவர்களுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்கும். அவர்களால் எளிதில் அடைய முடியாத பலவும் நிறையவே உள்ளன. அப்படிப்பட்டவற்றை அடைய வேண்டும் எனில் இறைவனின் பரிபூரண அருள் வேண்டும். பிராப்தம் என்பது இருக்க வேண்டும். அது அனைவருக்கும் அமைந்து விடுவது இல்லை. ஆகவே அவற்றையே எளிதில் அடைய முடியாத, அரிதான ஒன்று என்கின்றோம்.

3. அப்படிப்பட்ட நிலைதான் வேல் மாறல் மந்திர பாடலை படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் உள்ளது. வேல் மாறலை அனைவராலும் படித்து விட முடியாது, மனதார ஸ்தோத்திரம் செய்ய முடியாது. அதற்கும்   கர்மாவின் நல்ல பலன் இருக்க வேண்டும். அல்லது முருகப் பெருமான் நினைத்தால் மட்டுமே அவருடைய அருளினால் அவருடைய பெருமைகளைக் கூறும் அவற்றை கூட படிக்கத் தோன்றும், படிக்க இயலும்.

4. வேல் மாறல் பாடலை மேலோட்டமாக படிப்பது ஒரு கடமையை செய்து முடித்து விட்டதை போன்றது அல்ல. ஒரு கடமையை செய்து விட்டதை போல படிப்பது எந்த பலனையும் தருவது இல்லை. அதை உளமார, நம்பிக்கையோடு படிக்க வேண்டும், அதற்கான நேரமும் காலமும் கனிந்து வர வேண்டும்.

5. எந்த ஒருவனுக்கு பிராப்தம் இருந்து முருகப் பெருமானின் வேலின் மகிமையை போற்றும் வேல் மாறலை உணர்ச்சிபூர்வமாக, மனதில் ஏந்தி வைத்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக படிக்கின்றானோ அவனுடைய பகைவர்களை முருகப் பெருமானின் கையில் உள்ள சக்தி வேலானது சீறிப் பாய்ந்து வந்து வேருடன் அழிக்கும் என்பது இந்த பாடலின் உள் அர்த்தம் ஆகும்.

6. இங்கு பகை என்பது தனிப்பட்ட முறையிலான பகைவர்களை குறிப்பது அல்ல. வேல் மாறலை மனதார ஸ்தோத்திரம் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பிராரப்த கர்ம வினையின் பலனாக ஏற்படும் தீய பலன்கள், துன்பங்கள், துயரங்கள், அறியாமை போன்றவற்றையே அது குறிக்கின்றது. அதனால் வேல் மாறலைப் படிப்பவர்களின் பகைவர்களை முருகப் பெருமானின் கைகளில் உள்ள ‘வேலானது’ சீறிப் பாய்ந்து வந்து நீக்கிவிடும் என்பதாக இந்த பாடலின் பொருள் தருகின்றது.

7. அப்படி தீய எண்ணங்கள் மற்றும் அறியாமையில் இருந்து வெளிவரும் மானிடர்கள் முருகப் பெருமானின் அருளினால் மன அமைதியுடன் வாழ்ந்து கொண்டு இருந்து மோட்ஷ நிலையை அடைவார்கள் என்பது இதன் இன்னொரு தத்துவம் ஆகும்).

               தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
           தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை
           கழற்குநிகர் ஆகும்  

கழுத்தில் எருக்கம் மாலையையும், பிறையில் சந்திரனையும்  சூட்டிக் கொண்டுள்ள சிவபெருமான், தனது பக்தனை யம பெருமானிடம் இருந்து காப்பாற்ற, அவரை  தனது திருப் பாதத்தினால்  உதைத்து தள்ளினார்.  அத்தகைய சக்தி வாய்ந்த சிவபெருமானின் திருப் பாதங்களுக்கு நிகரான சக்தியை  கொண்டுள்ளது  முருகப் பெருமானின் ‘வேல்’ எனும் ஆயுதமும் ஆகும்.

(விளக்கம் : 
1. இந்த பாடலில் உள்ள முக்கியமான வார்த்தைகளாக ‘தருக்கி நமன்’ என்பது ஆணவத்தின் அடையாளமான எம பெருமான் என்றும், ‘முறுக்கு’ என்றால் கொலை செய்ய முயலும் (கழுத்தை நெரித்துக் கொள்ளுதல் போன்ற முறுக்குதல்) என்றும், ‘விறல்’ என்றால் வெற்றி என்றும் பொருள் தருகின்றது.

2. திருக்கடையூரில்  இருந்தபோது சிவபெருமானின் பக்தரான மார்க்கண்டேய முனிவருக்கு மரணம் சம்பவிக்கும் நேரம் வந்து விட்டது.  ஆனால் அதற்கு மேலும் சில காலத்திற்கு மரணத்தை நீட்டிக்கும் வகையிலான ஒரு விதி விலக்கும் இருந்தது. அதை அறிந்திடாத யமபெருமான் அகங்காரத்துடன் பாசக் கயிற்றை கொண்டு வந்து மார்க்கண்டேய ரிஷி மீது அதை வீசி அவரை  யமலோகத்திற்கு இழுத்து போக முயலுகையில், அந்த ரிஷி சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டு ‘சிவபெருமானே என்னைக் காப்பாற்று’ என்று ஓலமிடுகின்றார். அவ்வளவுதான் அடுத்த வினாடி கழுத்தில் எருக்கம் மாலையையும், பிறையில் சந்திரனையும் சூட்டிக் கொண்டுள்ள சிவபெருமான் அங்கே தோன்றி யமபெருமானை தனது திருப் பாதத்தினால் தள்ளி விட்டு தனது பக்தரைக் காப்பாற்றினார்.  இந்தக் கதையில் ஒளிந்துள்ள மிகப் பெரிய தெய்வீக தத்துவத்தை  நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.  அவை என்ன?

3. சிவபெருமானே முருகப் பெருமானை தனது உடலில் இருந்து படைத்தவர் என்பதினால் முருகப் பெருமானுக்கு சிவபெருமானின் அனைத்து தன்மைகளும் உண்டு. சிவபெருமானின் மாய உருவமே முருகப் பெருமான் என்பதினால்  முருகப் பெருமானும் சிவ பெருமானும் ஒன்றேதான் என்பது முதல் தத்துவம்.

4. ஆகவே சிவபெருமானின் சக்திகளைக் கொண்டிருந்த முருகப் பெருமானின் கையில் உள்ள, பார்வதி தேவியின் சக்திகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டிருந்த சக்தி வேல்-ஐ தந்தது பார்வதி தேவியே ஆகும். பார்வதி தேவி யார் ? சிவபெருமானின் உடலின் ஒரு பாதி ஆவாள் . ஆகவே பார்வதி  தேவி  முருகப் பெருமானுக்கு கொடுத்த சக்தி ‘வேலில்’ அடங்கி இருந்தது பார்வதி தேவியின் சக்திகள் மட்டும் அல்ல, சிவபெருமானின் சக்திகளும் ஆகும் என்பதினால்தான் சிவபெருமானின் பாதங்களுக்கு இணையான சக்தியைக் கொண்டது அந்த ‘வேல்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அந்த  ‘வேல்’-ஐ  பஞ்சாட்சரம் என்றும் கூறுவார்கள். இது இரண்டாம் தத்துவம் ஆகும்.

5. பஞ்சாட்சரம் என்பது நமசிவாயா எனும் சிவபெருமானின் பெயரான  ஐந்து எழுத்துக்களால் ஆன சிவபெருமானை  குறிப்பது மட்டும் அல்ல, பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய நாமம் ஆகும். பஞ்ச பூதங்கள் எனப்படும் ஐந்து பூதங்களையும் கொண்டதே இந்த பிரபஞ்சம் மட்டும் அல்ல மானிட உடலும் ஆகும். அதனால்தான் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும், பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது’ என்பதாக  சித்தர்களின் பழமொழியே உண்டு .

6. பஞ்ச பூதங்களையும் கொண்டுள்ள மானிடர்களை கொண்ட இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்  என்றால் பரபிரும்மன் எனும் கண்களுக்கு புலப்படாத ஆணும் பெண்ணும் கலந்த சக்தி ஆகும். அந்த ஆணும் பெண்ணும் கலந்த சக்தியே சதாசிவா எனும் சிவ சக்தியாகும். அவர்களே சிவனும் பார்வதியும் என்பதினால் அவர்களது சக்திகளை உள்ளடக்கி இருந்த ‘வேலின்’ மகிமையைக் குறித்து மேலும் கூற முடியுமா? மரண பயத்தை தரும் யமபெருமானை உதைத்து தள்ளியது சிவபெருமானின் திருப் பாதங்கள் என்பதினால், சிவபெருமானின் திருப் பாதங்களின் சக்தியை உள்ளடக்கிய முருகப் பெருமானின் கையில் உள்ள ‘வேல் -ஐ’ துதிப்பது மரண பயத்தை அழிக்கும் என்பது மூன்றாவது தத்துவம் ஆகும்.

7. நமது புராணங்கள் அனைத்திலும் ஒரு முக்கியமான அம்சத்தை  கூறி உள்ளனர். உலகில் எப்போதெல்லாம் அசுரர்கள் மற்றும் அரக்கர்கள் எனும் பெயரில் அதி பயங்கரமான தீய சக்திகள் தோன்றுகின்றனவோ, அவர்களை எல்லாம் அடக்கி  அழிக்க தெய்வங்கள் பெண் தெய்வங்களைத்தான் முக்கியமாக தோற்றுவித்தன. அத்தனை பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் பல்வேறு ரூபங்களில் உள்ள தெய்வங்கள்தான் என்பது புராணங்களை படிக்கும்போது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட பெண் தெய்வங்கள்தான்  பல்வேறு ரூபங்களில் தோன்றி  தீய சக்திகளை அழிக்கிறார்கள். இதற்கும் முருகப் பெருமானின் கையில் உள்ள ‘சக்தி வேல்’ எனும் ஆயுதத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கின்றீர்களா?

8. முருகப் பெருமானின் கையில் உள்ள ‘வேல்’ என்பது எது? பார்வதி தேவியின் அனைத்து சக்திகளையும் அடக்கிக் கொண்டுள்ள ‘சக்தி வேல்’. அதனால்தான் பெண் தெய்வமான பார்வதி தேவியின் சக்திகளைக் கொண்டிருந்த அந்த ‘வேலானது’ சூரபத்மன் எனும் அசுரனை அழிக்க பயன்படுத்தப்பட்ட பெண் தெய்வம் ஆகும் என்பது நான்காம் தத்துவம் ஆகும்.

9. மேலும் ஜோதி எனும் பெண் தெய்வமே ‘வேல்’ என்பதான நம்பிக்கை ஒன்றும் உள்ளது. அந்த கதையின்படி ஜோதி எனும் தேவியானவள்  சிவ பெருமானின் ஒளி வெள்ளத்தில் இருந்து வெளிப்பட்டவர்  என்றும் இரண்டாவது புராணக் கதையின்படி அவள் பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து ஒரு தீப்பொறியில் இருந்து   பிறந்தாள் என்றும் அவளையே ‘வேலாக’ மாற்றி பார்வதி  தேவி தனது மகனுக்கு தந்து, அந்த ஆயுதமான ‘வேல்’ மூலம் அசுரன் சூரபத்மனை வதம் செய்ய வைத்தாள் என்றும் கூறப்பட்டு உள்ளது.  முருகனின் ஆலயங்களில் அந்த ஜோதி எனும் தேவியானவள் உருவமற்ற அல்லது அரூப நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இதை முருகப் பெருமானின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த ‘திரு அழகப்ப அழகப்பன்’ என்பவர் தனக்கு ஸ்ரீ ஸ்ரீ லா ஸ்ரீ பன்றிமலை ஸ்வாமிகள்*** ஒருமுறை கூறியதாக கூறி உள்ளார். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து முழு கட்டுரையையும் படிக்கவும் (http://murugan.org/research/alagarappan.htm / http://murugan.org/temples/arupadai.htm / http://murugan.org/jyoti2.htm). இந்த செய்தியும் முருகப் பெருமானின் கையில் இருந்த வேல் என்பது பெண் சக்தியை கொண்டிருந்த ஆயுதம் எனும் தத்துவத்தை உறுதிப்படுத்துகின்றது .

10. இந்த உண்மையினால்தான்  ‘முருகா  என்னைக் காப்பாற்று ‘ என்றோ யார் மனமுருகி வேண்டினாலும் தாய்மை குணம் கொண்ட அந்த ‘சக்தி வேல்’  அடுத்த நொடி பறந்து சென்று அவர்களது துன்பங்களையும், துயரங்களையும் தீர்த்திடுமாம். தனது குழந்தை தவிப்பதைப் பார்த்துக் கொண்டு எந்த தாய்தான் அமைதியாக இருப்பாள்?

11. *** பெரும் சித்தரான ஸ்ரீ ஸ்ரீ லா ஸ்ரீ பன்றிமலை ஸ்வாமிகளின் இடது பாதத்தில் சுதர்சன சக்கரம் மற்றும் சக்திவேல் இயல்பாகவே இருந்தன. அதே போல அவரது வலது பாதத்தில் சங்கும் சக்கரமும் அமைந்திருந்தன என்றும் சுவாமிகளின் இடது கரத்தில் சங்கு, சக்கரம், சேவல் கொடி மற்றும் சக்திவேலும் வலது கையில் சங்கு, சக்கரம், சேவல் கொடி, முருகப் பெருமானின் அணுகோணம் மற்றும் வேலுக்குள் ஒரு சக்தி வேலும் அமையப் பெற்றிருந்தன என்றும் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தில் காணப்படுகின்றது . அவரது ஆஸ்ரமம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்து உள்ளது).

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்  

சூரபத்மன் தேவர்களுடன் நடத்திய யுத்தத்தில், தேவர்களை வென்று சிறையில் அடைத்தபோது, தேவலோக அதிபதி இந்திரனையும், பனைமரம் போன்று நீண்டு தொங்கிய துதிக்கையையும், இருபக்க கன்னங்களில் இருந்தும் வழிந்து கொண்டிருந்த நீருடன் முகக் கவசத்தையும் அணிந்து கொண்டிருந்த அவருடைய யானை ஐராவத்தையும் சிறையில் அடைத்து, யானையை சங்கிலியால் கட்டி வைத்து, சங்கிலியின் முனைகளை ஆணிகளை கொண்டு பூமியில் அடித்து வைத்து விட்டான். என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றிருந்த யானை ‘முருகா’, ‘முருகா’ எனக் கூக்குரல் இட்டு அழுதபோது, முருகப் பெருமானின் கையில் இருந்த வேலானது சீறிப் பாய்ந்து சென்று பூமியில் புதைத்து வைத்து இருந்த ஆணியே அடியோடு பிளந்து யானையை விடுவித்தது. அத்தனை வல்லமை கொண்டது சக்தி வேல் ஆகும்.

(விளக்கம் :
1. ‘பனைக்கை’  என்பது தும்பிக்கையை குறிக்கின்றது, ‘தளம்’ என்பது பால் நிற வெண்மையை குறிக்க, ‘கசம்’ என்பது யானையை குறிக்கின்றது. ‘நிகள’ என்பது விலங்கு (கை கால்களில் மாட்டப்படும் விலங்கு) மற்றும் ‘முளை’ என்பது ஆணியை குறிக்கும்.

2. இதில் கூறப்பட்டு உள்ள  முதல் தத்துவம் என்ன என்றால்  வாழ்க்கை என்பதே நம்மை பிடித்து கட்டி  வைத்துள்ள விலங்கைப் போன்ற  சம்சார பந்தம் ஆகும். அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நமது அறியாமையினாலும், எல்லையற்ற  ஆசாபாசங்கள், பேராசைகள் மற்றும்பிராரப்த கர்ம வினைகளினாலும் நாலாபுறமும்  இன்ப துன்பங்களில் பின்னிப் பிணைந்து கொண்டு, வெளிவர   இயலாத நிலையிலான ஜனன, மரண சங்கிலியால் பூமியோடு பிணைக்கப்பட்டு   இருக்கின்றோம்.

3. தேவேந்திரனின் வாகனமான, பாற்கடலில் தோன்றிய பால் போன்ற வெண்மை நிறத்திலான ஐராவதம் எனும் புனித யானை, சூரபத்மனினால் விலங்கிடப்பட்டு அவதிப்பட்டதை போல, கிடைப்பதற்கரிய மானிட வாழ்வை எடுத்து விட்ட நம்மை, சம்சார வாழ்க்கையின் ஆசா பாசங்களும், அளவற்ற பேராசைகளும் விலங்கு போட்டு அவற்றுடன் கட்டி வைத்து உள்ளன.

4. யானையைப் போன்றது நமது ஆசா பாசங்களும், பேராசைகளும். மதம் பிடித்த யானையைப் போல அவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஒரு பக்கம் பிராரப்த கர்ம வினையினால் எழும் இன்பமும் துன்பங்களும் நம்மை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சம்சார பந்தங்களை நம்மால் உடைத்துக் கொண்டு வெளிவர முடியாமல் அமைதி இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதை எடுத்துக் காட்டுவதே ஐராவதம் யானை சங்கிலியால் கட்டப்பட்டு வெளிவர முடியாத நிலையில் இருந்த நிலை. இது இரண்டாம் தத்துவம் ஆகும்.

5. சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த ஐராவதம் நமக்கு  விடிமோட்ஷம் கிடைக்காதா  என்ற துயரத்துடன், நம்மை இந்த நிலையில் இருந்து முருகப் பெருமானின் அருள் மட்டுமே காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு,   பக்தி  பெருக்கோடு  ‘என்னை காப்பாற்று  முருகா, முருகா’ என கூக்குரல் இட்டபோது அதைக் கேட்டு துயரமுற்ற, முருகப் பெருமானின் உணர்வுகளை புரிந்து கொண்டு விட்ட சக்தி வேல், பாய்ந்து சென்று யானையைக் கட்டி வைத்து இருந்த சங்கிலியின் ஆணி வேரையே அடியோடு பிளந்து எடுத்து யானையை காப்பாற்றியது.

6. அதை போலவே நமது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக உள்ள அறியாமை மற்றும் பிராரப்த கர்மாக்கள் என்பவற்றில் சிக்கித் தவிக்கும் நம்மை, அவற்றின் பிடியில் இருந்து மீட்டு நல்வாழ்வை தர வேண்டும் என்று முருகப் பெருமானை மனமுருகி வேண்டினால், அவருடைய சக்தி வேலானது தயக்கம் இன்றி ஓடோடி வந்து நமது அறியாமைகள் அனைத்தையும் அழித்து, பிராரப்த கர்ம வினையில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தரும். முருகப் பெருமானின் திருவடிகளில் சரணம் அடைந்தால், அவருடைய சக்தி வேல், ஐராவதம் யானையின் முகத்தில் போடப்பட்டு இருந்த ‘முகப்படத்தைப்’ போன்ற கவசத்தை போல நமக்கு கவசமாக இருந்து கொண்டு நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றி, மன அமைதி கிடைக்க வைத்து மோட்ஷ நிலையை அடைய வழி வகுக்கும் என்பது மூன்றாம் தத்துவம் ஆகும்).

சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும்

தேவர்களை மீட்பதற்கு அசுரர்களுடன் முருகப் பெருமான் போர் புரிந்த சமயத்தில்   முருகப் பெருமானின் கையில் இருந்த வலிமை மிக்க  ‘வேல்’ சீறிப் பாய்ந்து சென்று அசுரர்களின் தலையை சீவி சீவி எறிய,  கோபத்துடன் நறநறவென பற்களை கடித்தபடி பூமியிலே விழுந்த அசுரர்களின் தலைகள், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு அலறிக் கொண்டிருக்க, அவற்றை பார்த்து முருகப் பெருமானின் ‘வேலானது’ சிரித்தபடி  இருந்தது .

(விளக்கம் :
1. ‘சினத்து’ என்பது கோபத்தை குறிக்க, ‘அவுணர்’ என்பது அசுரர்களை குறிக்க, ‘களம்’ என்பது யுத்தத்தை குறிக்கின்றது. ‘குறை’ என்பது அறுந்து விழுந்த என்பதையும், ‘எயிறு’ என்பது பற்களையும் குறிக்கும் சொற்கள் ஆகும்.

2. இந்த பாடலில் கூறப்பட்டு உள்ள தத்துவார்த்தமான கருத்து என்ன என்றால் அசுரர்கள் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது மனிதர்களின் உள் மனதிலும், இதயத்திலும் உள்ள அசுர குணங்களான மன அழுக்குகள், அறியாமை, மூடத்தனம், போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் எண்ணம் போன்ற தீயகுணங்கள் ஆகும்.

3. இந்த குணங்கள் எல்லாம் பெருகிக் கொண்டே செல்கின்றன என்பதின் காரணமே யுக மாற்றங்கள்தான். அனைத்து யுகங்களும் ஒன்றபின் ஒன்றாக முடிந்த பின்னர் கடைசி யுகமான கலியுகத்தை நோக்கி பிரபஞ்சம் செல்லுகையில், பகைமைகளும் தீமைகளும் அதிகரிக்கத் துவங்குகின்றன. தீமைகள் என்பது தனி நபர் அல்லது சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் காட்டும், போட்டி, பொறாமை மற்றும் பகைமைகள் மட்டும் அல்ல, தீய சக்திகளினால், கிருமிகளினால், விஷ ஜந்துக்களினால் நேரிடும் வியாதிகள், உடல் உபாதைகள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை உள்ளடக்கியவை.  இந்த நிலையில் வாழும் வாழ்க்கையையே ஒரு யுத்த பூமியின் தன்மைகளை கொண்டவைகளாகி விடுகின்றன. அதையே அசுரர்களுடன் முருகப் பெருமான் யுத்தம் புரிந்த யுத்த பூமியாக காட்டப்படுகின்றது.

4.இப்படியான யுத்த தன்மையிலான வாழ்க்கையில் வாழ்கிறவன் வாழ்கின்றான், வாழ வழியற்றவன் வீழ்ந்து கிடக்கின்றான் என்பதை எடுத்துக் காட்டுவதே ‘கோபத்துடன் நறநறவென பற்களை கடித்தபடி பூமியிலே விழுந்த அசுரர்களின் தலைகள், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு அலறிக் கொண்டிருக்கும் நிலை’ ஆகும். அதாவது உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் எனும் நிலை ஆகும். இதன் காரணம் கலியுகத்தின் தன்மைகள்தான்.

5. அவற்றைக் பார்த்து எதற்காக ‘சக்தி வேல்’ சிரித்தபடி இருக்க வேண்டும்? அது ஆணவச் சிரிப்போ, ஏளனச் சிரிப்போ, சாகசச் சிரிப்போ அல்லது நையாண்டிச் சிரிப்போ அல்ல. அந்த சிரிப்பு என்பது, அசுர சக்திகளை அழித்து, மண்ணோடு மண்ணாக்கி தர்மத்தை நிலை நாட்டி விட்ட பெருமையை, வெற்றிக்  கொடியை நிலை நாட்டி விட்ட மகிழ்ச்சியை பல வித ஒலிகளுடன் வெளிப்படுத்தும் உணர்வாகுமே அல்லாது மரணம் அடைந்து கிடந்தவர்களைப் பார்த்து மனிதாபமற்று ஏளனமாக சிரிக்கும் நிலை அல்ல. ‘மூடர்களே, முருகப் பெருமானின் பேச்சை மதித்து இருந்தால் உங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது அல்லவா’ என்ற வேதனையை வெளிப்படுத்திய விரக்தி உணர்வை வெளிப்படுத்திய வருத்தம் தோய்ந்த தோற்றம் ஆகும்).

                        துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
                   நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
                    எனக்(கு)ஓர் துணை ஆகும்      

தன்னைப் பக்தி பூர்வமாக வணங்கி துதிக்கும் பக்தர்களுக்கு தீமை செய்ய அந்த பக்தர்களின் பகைவர்கள் மனத்தால் நினைத்தால் கூட போதும், அடுத்த நொடியிலேயே முருகப் பெருமானின் கையில் உள்ள ‘சக்தி வேலானது’ பறந்து சென்று அந்த எதிரிகளின் குலத்தையே அடியோடு அழித்து விடும் என்ற தன்மையிலானது முருகப் பெருமானின் சக்தி வேல் .

(விளக்கம்:
1. இது பொதுவான பாடல்தான் என்றாலும் இதிலும் பெரிய தத்துவம் மறைந்து கிடக்கின்றது. எவன் ஒருவன் முருகப் பெருமானுக்கு மனமுவர்ந்து சேவை புரிகின்றானோ, எவன் ஒருவன் பக்தி பூர்வமாக அவரை ஆராதித்து வருவானோ, அல்லது எவன் ஒருவன் அவரது ஆலயங்களில் உண்மையாக, நேர்மையாக பணி புரிந்து, முருகப் பெருமானது சேவையை தனது சேவையாக கருதி அவரை பூஜித்து வருவானோ, அத்தகைய பக்தர்களுக்கு எந்த விதத்திலான துன்பத்தையோ அல்லது துயரத்தையோ கொடுக்க நினைப்பவர்களையும், கிரக ரீதியான கோளாறுகளையும், முருகப் பெருமானுடைய கரங்களில் உள்ள ‘வேலானது’ பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காதாம். தனது உண்மையான பக்தனுக்கு துன்பமோ அல்லது துயரமோ நேர உள்ளது என்பதை புரிந்து கொண்ட அடுத்த நொடியில் அந்த ‘வேலானது’ பறந்து சென்று, துன்பங்களையும், துயரங்களையும் கொடுப்பவனையும், கொடுக்க நினைப்பவனையும், அந்த துன்பங்களுக்கான காரணங்களையும், கிரக ரீதியான கோளாறுகளையும் ஆணி வேரோடு அழித்து விடுமாம்.

2. ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் என்பவை என்ன? ஐந்து பூதங்கள் எனப்படும் ஐம்புலன்களினால் ஏற்படுவதே அறியாமை, ஆத்திரம், போட்டி, பொறாமை, தீய எண்ணங்கள், தீய செயல்கள் மற்றும் பேராசை போன்ற எண்ணங்கள் ஆகும். அவை பேய், பிசாசுகள் போன்ற தீய சக்திகள் என்பதினால் அத்தகைய தன்மைகளின் துவக்கமே ஒருவரது அழிவிற்கு துவக்கம் ஆகி விடுகின்றது. அவைகளே அவர்களை கெடுக்க நினைக்கும், உட்புறத்தில் உள்ள உண்மையான எதிரிகள், அவர்களுக்கு வெளிப்புற எதிரிகளை உருவாக்குகின்றார்கள். அதன் காரணமாகவே அவர்களின் வாழ்க்கையில் தீராத துன்பத்திலும் துயரங்களிலும் கொண்டு சென்று விடுகின்றது. மனதிலும், இதயத்திலும் ஐந்து பூதங்கள் எனப்படும் ஐம்புலன்களினால் ஏற்படும் அத்தகைய பேய், பிசாசுகள் போன்ற தீய எண்ணங்களையே ‘கெடுக்க நினைப்பவர், அல்லது அவர்களுக்குத் தீமைகள் செய்ய மனதில் எண்ணுபவர்’ என்பதாக இந்த பாடலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. .

3. அப்படிப்பட்ட மன நிலை ஒருவருக்கு எதனால் ஏற்படுகின்றன? அந்தந்த மனிதனின் கிரக நிலைக் கோளாறுகள், கர்ம வினைகள் போன்றவைகளே அத்தகைய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. ஆகவே தன்னை பக்தி பூர்வமாக வணங்கி துதிக்கும், சேவை செய்யும், ஆராதிக்கும் பக்தனை, கிரக நிலைக் கோளாறுகளினால் ஏற்படும் பேய், பிசாசுகள் போன்ற தீய எண்ணங்கள் சூழ்ந்து கொள்ளத் துவங்கியதுமே, முருகப் பெருமானின் வேலானது விரைந்து செயல்பட்டு அத்தகைய தீய எண்ணங்கள் அவர்களது மனதில் எழாமல் இருக்குமாறு அவை அனைத்தையுமே அடியோடு அழித்து விடுமாம். அந்த நிலையையே ‘பகைவரது குலத்தையே வேரோடு அழிக்கும் நிலை’ எனக் கூறப்பட்டு உள்ளது. ஆனால் அத்தகைய அருள் என்பது தீவிரமான முருக பக்தி கொண்டவர்களுக்கே கிடைக்கும்.

4. முற் பிறவியில் தமக்கு பக்தியோடு சேவை செய்த அடியவர்கள் என்றாலும் கூட, அந்த பிறவியில் அவர்கள் செய்த பல்வேறு பாவத்தின் காரணமாக அடுத்தடுத்த ஜென்மங்களில் அவர்களில் சிலர் புழு, பூச்சிகள், மிருகங்களாக பிறப்பு எடுக்க நேரிடுகின்றன. வேறு சில உயிர்கள் வேதாள பூதங்களாக பிறப்பு எடுத்தாலும் , அவை வேதாள பூத நிலையில் இருக்கும்போது கூட முருகப் பெருமானையே புகழ்ந்து பாடிக் கொண்டு இருக்கும். அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் முருகப் பெருமானின் ‘வேலானது’ மனம் இளகி தம்மை ஆராதிக்கும் வேதாள பூதங்களுக்கு அருள் புரிந்து அவற்றின் பாபங்களை களைந்து  உயர் நிலையை  அடைய வைக்குமாம். பூர்வ ஜென்மங்களில் முருகப் பெருமானுக்கு சேவை செய்து வந்திருந்தாலும் கர்மாவினால் புழு, பூச்சிகள், மிருகங்களாக பிறப்பு எடுத்திருந்தவர்களுக்கும் ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும் அந்தந்த தன்மைகளுக்கு ஏற்ப முருகப் பெருமானின் வேல் களைந்து எறிகின்றதாம். ஆகவே முருகப் பெருமானின் அருளை முழுமையாக அடைய சுயநலமற்ற முருக பக்தி தேவை.

5. சத்ருக்களை  நாசம் செய்வதும், பயங்களை அகற்றுவதும் ‘வேலின்’ குணமானதினால்  அதற்குச் ‘சத்ரு சம்ஹார வேல்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. தன்னைப்  பக்தி பூர்வமாக வணங்கி துதிக்கும் பக்தர்கள் எந்த ரூபத்திலும், புழு, பூச்சிகள் அல்லது வேதாள கணங்களாகாவோ – பிரபஞ்சத்தில் உள்ள பதினான்கு புவனங்களிலும், மூன்று அண்டங்களிலும்- எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, அத்தனை லோகங்களிலும் உள்ள அந்த முருகப் பெருமானின் பக்தர்களுக்கு தீமைகளை செய்ய நினைக்கும் தீய சக்திகள்  அனைத்தையும்,  ஐந்து தீய பூதங்களை அழிப்பதை போலவே ‘சக்தி வேல்’ அழித்து விடுமாம்.

6. மூன்று அண்டங்கள் என்பது  மேல் லோகம், பாதாளம் மற்றும் பூமியை குறிக்கும்.  அவற்றை ஸ்வர்க லோகம் (பரலோக சாம்ராஜ்யம்) அதாவது  இன்பம், மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக உயர்வு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட உலகமாக கூறினாலும் அதிலும் சில தேவர்கள் தவறுகளை செய்து தண்டனை பெறுகின்றார்கள். நல்ல கர்மாவை சுமந்து கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அங்குதான் செல்கின்றன.

7. மர்த்ய லோகம் என்பது  மனிதர்களும் பிற உயிரினங்களும் வசிக்கும் பூமியை குறிக்கும். அத்தகைய பூமியானது இன்பம், துன்பம், நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டு நிலைகளையும் உள்ளடக்கியது.

8. பாதாள லோகம் என்பது  இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்புடையது. இது பொதுவாக இருள் மற்றும் துன்பம் நிறைந்த இடமாக கருதப்படுகின்றன. ஆனாலும் முருகப் பெருமானுடைய பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களை முருகப் பெருமானின் வேலானது காத்து அருள் புரியும் என்பது இந்த பாடலின் பொது தத்துவம் ஆகும்)

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும்
  

சூரபத்மனை வென்ற பிறகு தமது சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த முருகப் பெருமானை காண கூடி இருந்த கணங்கள், பசியால் களைப்புடன் இருக்க, அந்த கணங்கள் அனைத்தையும் தன் மலர் கரத்தின் விறல் நுனி மூலம் (மலர்க்கமல கரத்தின்முனை) தன் அருகில் வருமாறு தன் கையில் இருந்த ‘வேல்’ மூலம் சைகை காட்ட, அந்த சக்தி ‘வேலோ’ வயிறு நிறைய உணவு உண்ட நிலையை கணங்களுக்கு ஏற்படுத்தியது. அத்தகைய தன்மையிலானது முருகப் பெருமானின் சக்தி வேல்.

1. இதில் உள்ள கணங்கள் என்பது சிவ கணங்களை குறிக்கின்றது. இந்தப் பாடல் அதை ஒட்டிய கதையையும், முருகப் பெருமானின் சக்தி ‘வேலின்’ மகிமையையும், இன்னொரு தத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது.

2. முருகப் பெருமான் ஒரு காலத்தில் பெரும் சிவபக்தனான இருந்த சூரனையும் அவன் மகனையும் கொன்றதால் பிரும்மஹத்தி தோஷத்தை அடைகின்றார். ஏன் என்றால் அவர்களை அவர் வதம் செய்தபோது அவர் மானிட உருவில் இருந்ததினால் அவருக்கு அந்த தோஷம் ஏற்பட்டது. அதை நீக்கிக் கொள்ள சேயூர் என்ற இடத்தில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை வழிபட்டாராம். சேய் என்றால் மகவு; சிவப்பு, இளமை, செவ்வாய்,முருகன், மகன், தலைவன் என்ற பல பொருட்கள் உண்டு. ஊர் என்றால் இடம் என்பதாகும். அதுவே சிவபெருமானின் தம்பதியரை அவர்களது மகன் வழிபட்ட இடம் என்பதினால் சேயூர் என்று பெயரை அடைய, காலப்போக்கில் அது மருவி செய்யூர் என ஆயிற்று.

3. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரிந்தபோது, அவருக்கு பைரவர் தலைமையில் இருந்த சேனைகளான சிவ கணங்கள் பெரும் உதவி செய்தன. அவற்றில் வேதாள கணங்களும் இருந்தன. ஆனால் யுத்த பூமியில் கோடிக்கணக்கான சிவகணங்கள் சூழ்ந்து கொண்டிருந்த முருகப் பெருமானை வேதாளங்களினால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. ஆகவே யுத்தம் முடிந்ததும் பைரவரின் இருபத்தி ஏழு வேதாள கணங்கள் முருகப் பெருமானை வள்ளி-தெய்வானையோடு வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காண விரும்பி, பைரவரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். பைரவர் மூலம் அதை ஏற்றுக் கொண்ட முருகப் பெருமான் தான் சிவபெருமானை வணங்கி துதித்த இடத்திற்கு வந்து தன்னை, வழிபடுமாறு அவர்களை அழைத்தார்.

4. பைரவர் அந்த வேதாள கணங்களை அழைத்துக் கொண்டு செய்யூருக்கு சென்றபோது அங்கும் சிவகணங்களினால் முருகப் பெருமான் சூழப்பட்டு நின்று கொண்டிருக்க, வேதாள கணங்கள் தூர நின்று கொண்டு இருக்க வேண்டியதாயிற்று. யுத்த பூமியில் இருந்து நேராக அங்கு சென்றதினால் வேதாள கணங்கள் பசியோடு துடித்துக் கொண்டிருந்தன. அதை கவனித்து விட்ட முருகப் பெருமானின் மனதை புரிந்து கொண்ட அவரது கையில் இருந்த ‘வேலானது’ அவர்களை முருகப் பெருமானின் அருகில் வருமாறு கைவிரலை ஆட்டி அழைப்பதை போல சைகை காட்ட, அத்தனை வேதாள கணங்களும் முருகப் பெருமானை நோக்கி ஓடிச் செல்ல, அந்த கணங்களின் பசியோ அவை ஓடிச் சென்றபோதே பெரும் அளவிலான உணவு அருந்திய உணர்விலான நிலையை தந்து விட அந்த கணங்களின் பசி மறைந்து போனதாம்.

5. இதில்தான் நமக்கு புரியாத பெரிய தத்துவம் அடங்கி கிடக்கின்றது. இங்கு வேதாள மற்றும் பூத கணங்கள் என்பது மானிடர்களைக் குறிக்கும். பசி என்பது அவர்களது அறியாமை, ஆணவம், தீராத நோய்கள் மற்றும் அளவற்ற பேராசைகளைக் குறிக்கின்றது. ‘வேல்’ தனது கைவிரலை அசைத்து அவர்களை அருகில் வருமாறு அழைத்த சைகையானது முருகப் பெருமானை சரண் அடைந்தால் அவர்களது பசி எனும் அறியாமை, ஆணவம், தீராத வியாதிகள், மற்றும் அளவற்ற பேராசைகள் அழியும் என்ற உணர்வை தருவதைக் குறிக்கின்றது.

6. அந்த சைகையை புரிந்து கொண்ட பூத கணங்கள் உடனேயே முருகப் பெருமானை நோக்கி ஓடிய நிலை முருகப் பெருமானிடம் முழுமையாக சரண் அடைந்து விட்ட நிலையைக் காட்டுகின்றது. அதே போன்று முருகப் பெருமானிடம் எவர் ஒருவர் மனதார சரண் அடைவார்களோ அது முதல் அவர்களது பசி எனும் அறியாமை, ஆணவம் மற்றும் அளவற்ற பேராசைகளை ‘வேல்’ தனது சக்தியால் அழித்து விடுகின்றது என்ற தத்துவத்தை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது .

7. இப்படியாக எவர் ஒருவர் முருகப் பெருமானிடம் பரிபூரணமாக சரண் அடைகின்றார்களோ அவர்களது பிராரப்த கர்ம வினையினால் ஏற்படும் தீய பலன்கள், துன்பங்கள், துயரங்கள், அறியாமை போன்ற அனைத்துமே முருகப் பெருமானின் கையில் உள்ள வேலினுடைய சக்தியினால் அழிந்து விடுவதினால், முருகப் பெருமானின் மீது வைக்கும் பக்தியினால் வாழ்க்கையில் வறுமையை நீக்கி, தீராத நோய்களும் குணமாகி மோட்ஷ நிலையை அடைய முடியும் என்பதை இந்த ஆலயத்தின் கதை உணர்த்துகின்றது.

8. இந்த நீண்ட கதையையே சில வரிகளில் அருணகிரிநாத ஸ்வாமிகள் நமக்கு கூறி ‘வேலினுடைய’ மகிமையைக் எடுத்துக் காட்டி உள்ளார்).

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்து வழி காணும்

பெருமை வாய்ந்த புலவரான நக்கீரன் பழமை வாய்ந்த தமிழ் சங்கத் பலகையில் பாடிய திருமுருகாற்றுப்படை படை பாடலைக் கேட்டு மனம் உருகிய, முருகப் பெருமானின் கையில் இருந்த சக்தி ‘வேலானது’ அவர் கையில் இருந்து சீறிக் கிளம்பிச் சென்று நக்கீரர் சிறை வைக்கப்பட்டு இருந்த குகையை இடித்துத் தள்ளி, அவரைக் காப்பாற்றியது.

(விளக்கம் :
1. வெளிப்படையாக பார்க்கும்போது இந்த பாடலில் என்ன மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைக்கத் தோன்றும். இந்த பாடலுக்கும் நக்கீரரின் கதைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது என நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த பாடலில் கூறப்பட்டு உள்ள கதையில்  பல  தத்துவங்கள் அடங்கி உள்ளன.

2. நக்கீரருக்கு இயற்கையிலேயே தான் என்ற ஆணவமும், தான் பெரிய  புலவர் என்ற அகம்பாவமும் உண்டு. அந்த ஆணவத்தினால்தான் அவர் சிவபெருமானையே எதிர்த்து நின்று அவருடைய குற்றம் குற்றமே என வாதாடி, அதனால் கோபமுற்ற சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறிகளினால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் வெப்பு நோய்  பெற்றார்.   அந்த நோயினால் ஏற்பட்ட  வெப்பத்தை தணித்துக் கொள்ள  பொற்றாமரை குளத்தில்  தண்ணீரில் மூழ்கி நின்று கொண்டு இருந்தபோது அவரை கைலாயத்திற்கு வருமாறு  சிவபெருமான் அழைத்தார். 

3. பூர்வ ஜென்மத்தில் நக்கீரர் செய்திருந்த பெரும் பாவங்களினால் அவருக்கு பூர்வ ஜென்ம வினை பலவும் ஏற்பட்டு இருந்தது.அதன் காரணமாகத்தான் அவர் சிவபெருமானுடன் வாதாடும் நிலையும், அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அந்த பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து அவருக்கு மோட்ஷம் கிடைக்க வேண்டிய தருமணம் வந்தபோது அந்த பாபங்களை அழிக்க  வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிவபெருமான் அவரை  தன்னுடன் வாதம் செய்ய வைத்து அவருக்கு அந்த நிலையை ஏற்படுத்தி இருந்தார்.

4. அவர் அழைப்பின் பெயரில் வடக்கு நோக்கி சென்று இருந்த நக்கீரர் ஒரு ஆலமரத்தின் கீழ்  அமர்ந்து கொண்டு சிவபெருமானுக்கு  பூஜை செய்து கொண்டு இருந்தபோது, மரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு இலையினால் ஏற்பட்ட ஒரு மாயத் தோற்றத்தை புரிந்து கொள்ள முடியாமல், பூஜையை ஒரு கணம்  மறந்து அலை பாய்ந்த மனதை அந்த இலை மீது வைத்துக் கொள்ள,  ஒரு பூதம் அங்கு தோன்றி அவரை தின்பதற்காக குகை ஒன்றில் அடைத்து வைத்தது.

5. அங்கு ஏற்கனவே பலர் சிறை பிடிக்கப்பட்டு இருந்தார்கள். தன்னோடு அவர்கள் அனைவரையும் பூதத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன், மனம் உருகி ஒரே நிலையிலான மனதுடன் முருகப் பெருமான் மீதான திருமுருகாற்றுப் படை பாடலை பாடியபோதுதான், அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த முருகப் பெருமானின் மனதை புரிந்து கொண்ட சக்தி ‘வேலானது’ பாய்ந்து சென்று  சென்று குகையை இடித்து  தள்ளி, அனைவரையும் காப்பாற்றியது.

6. நக்கீரரின் கதையில் பல  தத்துவங்கள் காணப்படுகின்றன.  எவன் ஒருவன் இறப்பும் பிறப்பும் இல்லாத நிலையை எட்டி விடுவானோ அவனைப் படைத்த இறைவன் ஏதாவது ஒரு வகையிலான துன்பத்தை அவனுக்கு கொடுத்து, அவன் அழியும் நிலையை அவனுக்கு  ஏற்படுத்தி விடுகின்றார். அதுதான் நக்கீரர் சிவபெருமானுடன் வாதம் செய்த நிலை. இது முதல் தத்துவம்.

7. இறைவனிடம் செலுத்தும் பக்தி பரிபூரணமாக இருந்தால் மட்டுமே  இறைவனை அடைய முடியும். அதற்கு தடைக் கற்களாக உள்ள,  பஞ்ச பூதங்களினால் இயங்கும் ஐம்புலன்களின் தாக்கத்தினால் இயங்கும் ஐம்பொறிகளின்  தாக்கத்தினால் ஏற்படும் மன இருட்டுகளை  (அறியாமை, ஆணவம், ஆசைகள், மன சஞ்சலங்கள் மற்றும் உடல் மீதான மோகம் போன்றவை)  அகற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் நக்கீரர் அதை முழுமையாக  அகற்றிக் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதே பஞ்ச பூதங்களிலான பூதம் அவரை பிடித்து குகையில்  அடைத்த நிலை ஆகும். இது இரண்டாவது தத்துவம் ஆகும்.

8. அந்த நிலைதான் அவரை முருகப் பெருமானின் பக்தனாக்கியது.  அலைபாயா  நிலையிலான ஒரே மனதுடன் இருந்து கொண்டு, முருகப் பெருமான் மீது பரிபூரணமாக பக்தி செலுத்தினால் மட்டுமே மன இருள்களான அறியாமை, ஆணவம், ஆசைகள், மன சஞ்சலங்கள் மற்றும் உடல் மீதான மோகம் போன்றவற்றை நீக்கிக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டிய நிலையே  அவர் மனமுருகி பாடிய திருமுருகாற்றுப் படை பாடலினால்  மனம் மகிழ்ந்த முருகப் பெருமானின் வேலானது இருள் சூழ்ந்த  குகையை அழித்த நிலை ஆகும். இது மூன்றாவது தத்துவம்.

9. முருகப் பெருமானிடம் முழு மனதுடன் செலுத்தும் பக்தியானது மட்டுமே பஞ்ச பூதங்களின் விளைவினால் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் வெளிச்சம் அற்ற இருள் சூழந்த துன்பங்கள், துயரங்கள், தீராத பிணிகள் பூர்வ ஜென்ம கர்ம வினை பயன்கள் போன்றவை அழிந்து, ஒருவரை இறப்பும் பிறப்பும் அற்ற  நிலைக்கு கொண்டு செல்லும் என்பதைக் எடுத்துக் காட்டுவதே குகையை அழித்த நிலையின் இன்னொரு தத்துவம் ஆகும்.

10. குகையில் சிறை வைக்கப்படாமல் இருந்திருந்தால் முருகப் பெருமானின் மகிமைகளை எடுத்துக் கூறும் திருமுருகாற்றுப் படை பாடல் வெளி வந்திருக்காது. துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம், அந்த இன்பத்தின் உச்சகட்ட இன்ப நிலையே மீண்டும் பிறவா நிலை எனும் மோட்ஷ நிலையை அடைவது ஆகும். ஆகவே இறப்புக்குப் பின் மீண்டும் பிறவாமை என்ற மோட்ஷ நிலையை அடைய வேண்டுமானால் தெய்வ அருள் வேண்டும். பொருளையும் செல்வத்தையும் எப்படி வேண்டுமானாலும் அடைய முடியும், ஆனால் தெய்வ அருள் என்பதை கடவுளால் மட்டுமே தர இயலும். அந்த அருளை பெற்று பிறவாமை எனும் நிலையை பெறும் வாழ்வே சிறந்தது. அப்படிப்பட்ட மீண்டும் பிறவாமை எனும் மோட்ஷ நிலைக்கான அருளை முருகப் பெருமான் மூலம் மட்டுமே அடைய முடியும் என்னும் உயர்ந்த தத்துவத்தை வெளிப்படுத்தவே முருகப் பெருமான் அருளினால் இந்த பாடல் இயற்றப்பட்டு உள்ளது. அதனால்தான் திருமுறைகாற்றுப் படையில் கூறப்பட்டு உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்)

11. சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் என்ன சம்மந்தம் இந்த கதையின் தத்துவத்தில் உள்ளது என்று எண்ணத் தோன்றலாம். முருகப் பெருமான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்குமான உறவில் பிறக்கவில்லை. சிவபெருமானின் நெற்றிக் கனலில் இருந்து வெளி வந்த தீப்பொறிகளே முருகப் பெருமானை உருவாக்கியது என்பதினால் அவர் சிவபெருமானின் மாய ரூபமே ஆவார். அதனால்தான் சிவபெருமானின் ரூபத்தில் மாய நாடகத்தை நடத்தி நக்கீரரை குகையில் அடைக்க வைத்தார். அதன் மூலம் முருகப் பெருமானின் ரூபத்திலான தன் மீது திருமுருகாற்றுப் படை பாடலையும் பாட வைத்து மோட்ஷ நிலையை அடைய வைக்கும் ஆறுபடை வீடுகளையும் உருவாக்க வைத்தார்.

12. எனவேதான் முருகப் பெருமான் என்பவர் சிவபெருமானின் இன்னொரு ரூபம் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றார்கள். அதற்கு சாட்சி சிவபெருமானின் ஐந்து செயல்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களின் சக்திகளையும் கொண்டது முருகப் பெருமானின் கையில் உள்ள வேல் என்பது ஆகும். இந்த பாடல் மூலம் அந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது).

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
 பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்

முன்னொரு காலத்தில் தேவேந்திரன் எனப்படும்  இந்திரன், வான் வெளியில் யாருமே செல்ல இயலாதவாறு   தடுக்கும் வகையில் பெரும் ஓசை எழுப்பியபடி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்த  மலைகளின் இறகுகளை வெட்டித் தள்ளினார். அப்படி அவர் அறுத்துத் தள்ளிய மலையின் இறக்கைகள் மீண்டும்  மலைகளிடம் முளைத்து விட்டு அவை பறக்கின்றனவோ,  என்று எண்ணும் வகையிலான அதிர்வையையும், அச்சத்தையும் அண்டத்தின் உச்சியிலே விரைந்து செல்லும்  முருகப் பெருமானின் சக்தி வேல் ஏற்படுத்துமாம் .

(விளக்கம் :
1. இந்த பாடலுக்கான தத்துவத்தை விளக்கும் முன் அதோடு  சம்மந்தப்பட்ட   சிறிய கதை ஒன்றைக் கூற வேண்டும்.  அப்போதுதான் இந்த பாடலின் தத்துவம் புரியும். கிருதயுகத்தில் அடிக்கடி ஏற்பட்டு வந்திருந்த புவியியல் மாற்றங்களின்  காரணமாக மலைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு  இடத்திற்கு பறந்து சென்று அமர்ந்து கொண்டனவாம். புராணத்தின்படி, மலைகள் பறவைகளைப் போல அங்கும் இங்கும் பறந்து சென்று இடமிடமாக அமர்ந்து கொண்டன. இப்படியே அவை இடமிடமாக நகர்ந்து கொண்டே இருந்ததினால் பூமியின் சமநிலை  சீர் குலைந்தது. ஒலி வேகத்தை விட அதிக அளவு  வேகத்தில் கருடனைப் போல பறந்து கொண்டு இருந்த  மலைகளினால் முனிவர்களும் தேவர்களும் எங்கே மலைகள் தமது தலையில் விழுந்து விடுமோ என்று அஞ்சினார்கள். இதற்கு பரிகாரம் காண தேவர்கள் தேவேந்திரனிடம் சென்று முறை இட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட  இந்திரன் அந்த பறக்கும் மலைகளின் இறகுகளை தனது வஜ்ராயுதத்தினால்  வெட்டி வீழ்த்தி விட,  மலைகள் எங்கு பறந்து கொண்டிருந்தனவோ அங்கேயே கீழிறங்கிச் சென்று பூமியில் அமர்ந்து கொண்டு விட்டனவாம். இதனால்தான் உலகில் பல இடங்களிலும்  பல   மலைகள் தோன்றின என்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. வால்மீகி  ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் இந்த கதை உள்ளதாம் .

2. இந்த நிலைமையில்தான் சூரபத்மனின் சேனையோடு நடந்த யுத்தத்தில்  முருகப் பெருமானுடைய ‘வேலின்’ அளவிலா ஆற்றல் அனைவரையும் வியப்பூட்டும் அளவில் இருந்தன.  சூரபத்மனின் சேனையோடு நடந்த யுத்தத்தில் அசுரர்களை அழிக்க, முருகப் பெருமானுடைய ‘வேல்’ தனது படையினரோடு யுத்த பூமியை நோக்கி ஒலி வேகத்தை விட அதிக  வேகத்தில்,  பெரும் சப்தம் எழுப்பியவண்ணம் ஆகாயத்தில் பறந்து சென்றபோது, அந்த வேல் எழுப்பிய ஓசையினால்  உலகெல்லாம் கிடுகிடு என அதிர்ந்தன.  இந்திரன் வெட்டித்  தள்ளி விட்ட மலைகளின் இறக்கைகள், மீண்டும் அந்த மலைகளுக்கு  முளைத்து விட்டு பறக்கின்றனவோ  என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

3.மலையின் இறக்கைகள் மீண்டும்  மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று எண்ணும் வகையிலான அதிர்வும், அச்சமும்,  முருகப் பெருமானின் சக்தி ‘வேலானது’  அண்டத்தின் உச்சியிலே விரைந்து செல்லும்போது ஏற்படுமாம் என்பதைதான் ‘விசைத்(து) அதிர ஓடும்’ என்பதாக பாடலில் கூறப்பட்டு உள்ளது என்பதில் இருந்தே அந்த ‘வேல்’ எத்தனை பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அதன் வலிமையையும், சக்தியையும் எந்த அளவு இருந்திருக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

4. இப்போது இந்த கதைக்கும் பாடலின் தத்துவத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று கேட்கின்றீர்களா?  இந்த கதையில் கூறப்படும் பறக்கும் மலை என்பது  ஒவ்வொருவருடைய மனதிலும் மலைப் போல குவிந்து கிடைக்கும்  அலை பாய்ந்து கொண்டிருக்கும், நல்ல மற்றும் தீய எண்ண அலைகளையும், பேராசைகளையும், அசுர  குணங்களான மன அழுக்குகள், அறியாமை, மூடத்தனம், போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் எண்ணம் போன்ற குணங்களை எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் அறியாமையில் உழல்பவர்கள் எப்போதுமே நிலையற்ற மனதுடன்,  மலை பறந்து கொண்டிருந்ததை போன்று கற்பனையில் மிதந்து கொண்டே இருப்பார்கள்.   மாயா எனும் மாயையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு, அறியாமையினால் கற்பனை உலகில் மிதக்கின்றார்கள் என்பதே அதற்கான காரணம் ஆகும். அவற்றை அழித்துக் கொள்ளாவிடில் இறக்கைகளைக் கொண்ட மலைகள் அங்கங்கே பறந்து சென்று கொண்டு அங்கங்கே அமர்ந்து கொண்டிருந்ததை போன்ற நிலையில்தான் நிலையற்ற வாழ்க்கையில் உழல வேண்டி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதே இந்த பாடலின் முதல் தத்துவம் ஆகும் .

5. மனதில் உள்ள மாயை எனும் அறியாமையை அழிக்க பிறப்பிக்கப்பட்டவரே முருகப் பெருமானும் அவர் கையில் உள்ள சக்தி ‘வேலும்’ என்பதினால் அறியாமையினால் ஒவ்வொருவருடைய மனதிலும் மலைப் போல குவிந்து கிடைக்கும்  அலை பாய்ந்து கொண்டிருக்கும், தீய எண்ண அலைகளையும், பேராசைகளையும், அசுர  குணங்களான மன அழுக்குகள், அறியாமை, மூடத்தனம், போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் எண்ணம் போன்ற தீய குணங்களையும் அழித்துக் கொள்ள வேண்டும் எனில் முருகப் பெருமானிடம் உள்ள ‘வேலிடம்’ சரண் அடைய வேண்டும் என்பது இரண்டாவது தத்துவம் ஆகும்.

6. மனதில் உள்ள அறியாமை, பேராசை மற்றும்  தீய எண்ணங்களைக்  அகற்றி ஞானத்தை பெற வேண்டும் என மனமுருகி  முருகப் பெருமானை பிரார்த்தனை செய்யும்போது, அவருடைய கையில் உள்ள சக்தி ‘வேலானது’ சற்றும் தாமதிக்காமல், முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் அறியாமையை விலக்கி, அவர்களுக்கு ஞானத்தை தரும் என்பது மூன்றாவது தத்துவம் ஆகும்.

7. முருகனை வேண்டினால் எதற்காக அவருடைய சக்தி ‘வேல்’ தானாக வெளிக் கிளம்பி வந்து முருகப் பெருமானின்  வேலையை செய்கின்றது என்ற எண்ணம் தோன்றலாம். அதற்கு காரணம் முருகப் பெருமானை ஒருவர் வேண்டித் துதிக்கும்போது, அவரது கையில் உள்ள சக்தி ‘வேலிடம்’  அந்த பக்தர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, தனது  விரல்களினால், வெளித்  தெரியாமல் சமிக்கை கொடுப்பாராம். அதை ஏற்றுக் கொள்ளும் ‘வேல்’ உடனடியாக பறந்து சென்று முருகப் பெருமானின் ஆணையை நிறைவேற்றி வைக்கின்றதாம்.

                                    சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
                                    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
                                          ஒளிப்பிரபை வீசும்     

பிரபஞ்சம் முழுவதும் ஒளி கிரணங்களை வீசிடும்  சூரியன், குளிர்ந்த ஒளி கிரணங்களை வீசிடும் சந்திரன், கடல் நீர் பிரவாகம் எடுத்து  கரை கடந்து உலகத்தை அழித்து விடாமல் இருக்க வைத்தபடி கடலின் அடியில் ஜெகத்ஜோதியாக எரிந்து கொண்டிருக்கும் வடவாமுக அக்னி போன்றவற்றின் ஒளி வெள்ளங்கள் அனைத்துமே வெட்கி தலை குனியும் அளவிலான ஒளி வெள்ளத்தை வீசிடும் தன்மையிலானது முருகப் பெருமானின் ‘சக்தி வேல்’.

(விளக்கம்:
1. இந்த பாடலிலும் பெரிய தத்துவமே அடங்கி உள்ளது.  சிவபெருமானின் மூன்று கண்களாகவே சூரியன், சந்திரன் மற்றும்  அக்னியை குறிப்பிடுவார்கள். அவை மூன்றுமே ஆக்கல் அதாவது தோற்றுதல், காத்தல்  மற்றும் அழித்தல் எனும் சக்திகளை குறிப்பவை ஆகும்.  இருள் சூழ்ந்த உலகில் உள்ள ஜீவ ராசிகளை வெளிக் காட்டுவது சூரியனின் ஒளி வெள்ளம் என்பதையே படைத்தல் என்பதாக தத்துவார்த்தமாக கூறுகின்றார்கள்.  சூரியனின் ஒளி வெள்ளம் இருபத்தி நான்கு மணி நேரமும்  இருந்தால் அதன்  வெட்பத்தினால்  ஜீவ ராசிகள் உயிர் வாழ முடியாது.

2. சூரிய ஒளியின் வெட்பத்திற்கு  குளிர்ச்சியும் தேவை  என்பதினால்  ஒவ்வொரு நாட்களின் பாதி நேரங்களிலும் சந்திரனின் குளிர்ந்த ஒளி வெள்ளம்  வெளிப்பட்டு ஜீவராசிகளுக்கு இதம் அளிக்கின்றது. அதையே காத்தல் என்பதாக பொருள் காண வேண்டும்.

3. மூன்றாவதான அக்னி என்பது தீய சக்திகளை அழிக்கும் நிலையிலானது. அந்த அக்னியில் வடவாமுக அக்னியும் அடக்கம் ஆகும். ஆனால் வடவாமுக அக்னி இரண்டு தன்மைகளில் ஆன அக்னி ஆகும். அது காத்தல் தொழிலையும் செய்கின்றது. அழித்தல் தொழிலிலும் தனது பங்கை அளிக்கின்றது.

4. முதல் மூன்று யுகங்களும் பிரளயத்தால் பாதிக்கப்படாமல் இருக்க வைப்பது கடலுக்கு உள்ளே அதன் அடியில் வற்றாமல் எரிந்து கொண்டிருக்கும் வடவாமுக அக்னி எனும் அக்னிதான். அதுதான் கடல் நீரின் அளவு அதிகமாகும் போது அதன் தண்ணீரை ஆவியாக்கி, வற்ற வைத்து உலகை அழியாமல் காப்பாற்றுகிறது. அப்படிப்பட்ட செயலை காக்கும் நிலை என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.

5. நான்கு யுகங்களாக கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்ற யுகங்களில் மூன்று யுகங்கள் கடந்த பின் நான்காவதான கலியுகம் தோன்றி தீமைகள் உச்ச கட்டத்தை எட்டும்போது பிரபஞ்சத்தை படைத்தவர் பிரளயத்தை ஏற்படுத்தி உலகை அதில் முழுக வைத்து உலகை அழித்து விட்டு புதிய உலகைப் படைப்பார். பிரளய காலம் தோன்றும்போது கடல் நீர் வற்றாமல் இருக்கும் வகையில் வடவாமுக அக்னி தனது வெப்பத்தை அழித்துக் கொண்டு விடுமாம். அப்படிப்பட்ட செயலை அழிக்கும் நிலை என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.

6. இப்படியாக சிவபெருமானே மூன்று தொழிலான ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்பவற்றை, பிற ரூபங்கள் மூலம் செய்து வருகின்றார்.

7. அப்படிப்பட்ட மூன்று அக்னியின் ஜிவாலைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஜுவாலை எனப்படும் ஒளி வெள்ளத்தை வைத்துள்ளதுதான் முருகப் பெருமானின் ‘சக்தி வேல்’. அதன் காரணம் மூன்று அக்னிகளையும் தனது கண்களாக கொண்டுள்ள சிவபெருமானின் சக்திகளான அந்த ஜுவாலைகளையும், அவருடைய செயல்களான தோற்றுதல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் சக்தியையும், அவரின் பாதி அங்கமான ஜொலிக்கும் பார்வதி தேவியின் சக்திகளையும் உள்ளடக்கி உள்ளது மட்டும் அல்ல, ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தி அவற்றை ஒன்றிணைத்து அவற்றையே முருகப் பெருமானாக ஆக்கி தோற்றுவித்ததினால், முருகப் பெருமானின் சக்திகளான அந்த ஆறு தீப்பொறிகளின் ஜுவாலையையும் உள்ளடக்கிய ‘வேலின்’ ஒளி வெள்ளத்திற்கு முன் எந்த ஒளி வெள்ளம் நிற்க முடியும்? அப்படிப்பட்ட அபார சக்தி வாய்ந்த ‘வேலின்’ சக்திக்கு முன் எந்த சக்திதான் நிற்க முடியும்?

8. இந்த பாடலில் கூறப்பட்டுள்ள, ‘சக்தி வேலின்’ ஒளி வெள்ளம் என்பது, ஒவ்வொருவருடைய மனதிலும் மலைப் போல குவிந்து கிடைக்கும், அலை பாய்ந்து கொண்டிருக்கும், தீய எண்ண அலைகளையும், பேராசைகளையும், அசுர குணங்களான மன அழுக்குகள், அறியாமை, மூடத்தனம், போட்டி, பொறாமை, ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் எண்ணம் போன்ற தீய குணங்களையும், மும்மலங்கள் எனப்படும் ஆணவம் , கன்மம் (மனிதர்காளோடு பிறந்த ஆசை, பொறாமை) போன்ற அனைத்தையும், ஐம்புலன்களின் ஆதிக்கத்தோடு அழித்து, அனைத்து உணர்வுகளும் நீங்கப் பெற்ற ‘ஒளி மயமான வாழ்வை’ தரும் நிலையை குறிக்கின்றது.  அதை அடைய வேண்டும் எனில் முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த வேலினை மனதார வணங்கி துதிக்க வேண்டும் எனும் தத்துவத்தை வெளிப்படுத்துவதே இந்த பாடல் ஆகும் )

  தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்

துணையின்றித் தனியாகச் செல்லும் என் வலது பக்கமும்,  இடது பக்கமும், முன், பின் பக்கங்களிலும்,   இரவு பகல் எனப் பார்க்காமல், என் நிழல் போல தொடர்ந்து கொண்டு, ஒரு கவசம் போல  என்னை சூழ்ந்து கொண்டிருந்து என்னைக் காத்தருளும் தன்மையைக் கொண்டது  முருகப் பெருமானின் ‘சக்தி வேல்’.

(விளக்கம் :
1. இதை மேலோட்டமாக படிக்கையில் இதில் என்ன பெரிய தத்துவம் அடங்கி உள்ளது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த பாடலின் உள் அர்த்தமும் கடலை விட ஆழமானது, ஆகாயத்தை விட விரிந்து படர்ந்து விரிந்தது ஆகும். ‘ஒவ்வொரு ஜீவனும் பிறக்கும்போதும், இறக்கும்போதும் யாரும் அவன் கூட வருவதில்லை, செல்வதில்லை’ என்பார்கள் என்றாலும், அந்த ஜீவனை பெற்றெடுத்த அதனுடைய அன்னை, இரவு பகல் எனப் பார்க்காமல் அதனுடன் இருந்தவாறே, குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு பாதுகாத்து வருவாள். அந்தக் குழந்தை பெரியவனாகி வாழ்ந்து கெட்டு  அலைந்த பின்னர், அதற்கு மரணம் சம்பவிக்கும் போது அவனை பெற்று எடுத்த அன்னை கூட அவனுடன் செல்ல முடியாமல் நிற்பாள். அவன் தனித்தே மேலுலகம் செல்வான். இது இயற்கையின் நியதி.

2. ஆனால் முருகப் பெருமானின் அருளை பெற்றவர்களுக்கு அந்த நிலை ஏற்படுவது இல்லை. ஒருவனது கர்ம வினைகளுக்கு ஏற்ப அவனுக்கு பிறப்பையும் இறப்பையும் கொடுப்பவன் இறைவனே.  படைக்கும், காக்கும் மற்றும் அழிக்கும் தொழிலையும் செய்யும் சிவபெருமானே, முருகப் பெருமான் எனும் ரூபத்திலும் உள்ளார் என்பதினால் ஒரு ஜீவன் பிறக்கும்போதே அவனது உடலில் அரூபமாய், அவனது ஆத்மாவாக  முருகப் பெருமானின் தாயாரான   திரிபுர சுந்தரி ரூபத்தில் உள்ள  பார்வதி தேவியானவள் அமர்ந்து கொண்டு வருகின்றாள். ஒவ்வொருவரின் உடலில் உள்ள ஆத்மா எனும் ஜீவன் என்பது திரிபுர சுந்தரியே என்பதாக தத்தாத்திரேயர் போதனை செய்த திரிபுரா ரகசியம் என்பதில் காணலாம்.    அந்த ஜீவன் வெளி வந்ததும் அதனதன் கர்ம வினைப்படி அவற்றின் வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை அனுபவித்து முடித்த பின்னர் அதன் காலம் முடிய உள்ள கடைசி கட்ட காலத்தில் அதற்கு விதி என்பது இருந்தால் அது முருகப் பெருமானின் நினைவை மனதில் ஏந்திக் கொள்ளுமாம்.

3. அப்படி ஒரு நிலையில் அந்த ஜீவன் மரணம் அடைந்து விட்டவரின் உடலை விட்டு சென்று விடும்போது, அதன் எண்ணங்களிலும், உணர்வுகளிலும் முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த ‘வேலானது’, முருகப் பெருமானின் அருளை  வியாபித்துக் கொண்டு, அந்த ஆத்மா எனும் ஜீவனை சுற்றி கவசம் போல நின்றவண்ணம், அந்த ஜீவனை பாதுகாத்து வரும். மரணம் அடைந்து விட்ட ஜீவன் மேலுலகம் செல்லும்வரை அந்த ஜீவனுக்கு ஒரு கவசம் போல இருந்தவாறு அதற்கு துணை புரிகின்றது என்ற முதல் தத்துவத்தை வெளிப்படுத்துவதே இந்த பாடல்.இதனால்தான் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை சுற்றி இருந்தவாறு தெய்வீக பாடல்களை பாடிக்கொண்டே இருப்பது அந்த மனிதரின் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன் பயமின்றி மேலுலகிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். 

4. மரணம் அடைந்து விட்டவரின் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவிற்கு கவசமா என யோஜனை செய்ய வேண்டியது இல்லை. கவசம் என்பது அந்த ஜீவனின் முடிவு காலத்தில் அதனை முன்னர் சூழ்ந்து இருந்த மும்மலங்கள் எனப்படும் ஆணவம் , கன்மம் (மனிதர்காளோடு பிறந்த ஆசை, பொறாமை) மற்றும் அறியாமை போன்ற   தீய வினைகள் மீண்டும் சூழ்ந்து கொள்ளாமல் இருக்கும்  தடுப்பு போன்ற கவசமாக இருந்தவண்ணம், அனைத்து  உணர்வுகளும் நீங்கப் பெற்ற நிலையில் வைத்து இருந்து, சிவ நிலையை அடைய வைக்கும். இந்த தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே இந்த பாடலில் ‘அனைத்து பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, நிழல் போல தொடர்ந்து கொண்டு, ஒரு கவசம் போல  இருந்தவாறு   காத்திடும்  முருகப் பெருமானின்   ‘சக்தி வேல்’ என்பதாக கூறப்பட்டு உள்ளது.

5. அதாவது பிறப்பில் இருந்து இறக்கும் வகையில் அனைத்து ஜீவன்களையும்,  அனைத்து பக்கங்களிலும் இருந்து சூழ்ந்து கொண்டு, அவனவன் கர்ம வினைகளுக்கு ஏற்ப  அவனை காப்பாற்றிக் கொண்டு இருக்கும்  வகையில் தனது தெய்வீக கணங்களை ஒவ்வொரு ஜீவனுக்கும் அனுப்பி வைக்கின்றது அந்த ‘சக்தி வேல்’. அதற்கு தேவை முருகப் பெருமான் மீதான அபார நம்பிக்கை, பக்தி மற்றும் பற்றுதல் ஆகும் எனும் இரண்டாவது தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது இந்த பாடல்.

6. ஆனால் இந்த நிலை  பிறந்த அனைத்து ஜீவன்களுக்கும் கிடைக்குமா என்றால், அது இல்லை என்பதே உண்மையான நிலை. அந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?  ஞானத்தை அள்ளித் தரும் , தனது தந்தைக்கே ஞானபதேசம் செய்த,  முருகப் பெருமான் நினைத்தால் மட்டுமே அவருடைய  பெருமைகளைக் எடுத்துக் காட்டும்  அவருடைய ‘வேலின்’ நினைவு ஒருவருடைய மனதிலும் எழும்.  அதற்கும் நமக்கு பிராப்தம் என்பது இருக்க வேண்டும்,  அதற்கான நேரமும் காலமும் கனிந்து வர வேண்டும். அதற்கான கர்ம வினைகள் சாதகமாக இருக்க வேண்டும் என்றாலும் அவற்றை எல்லாம் தாண்டி எவன் ஒருவன் முருகப் பெருமானின் காலடிகளில் சரண் அடைந்து  விடுகிறானோ, அதனால் மனம் இளகும் முருகப் பெருமானின் ‘வேலானது’ பறந்து சென்று அந்த ஜீவனின் பிராரப்த கர்ம வினையின் தீய பலன்கள், துன்பங்கள், துயரங்கள், அறியாமை போன்ற அனைத்தையும்  அழித்து  மோட்ஷ நிலையை அடைய வழி காட்டும்  என்பது இந்த பாடலின் மூன்றாவது தத்துவம் ஆகும்).

பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்  

சூரபத்மனின் படைகளுக்கும் முருகப் பெருமானின் படைகளுக்கும் யுத்தம் நடக்கையில், அங்கு உலவிக் கொண்டு இருந்த பேய் மற்றும் பிசாசுகள் பசியால் துடிதுடித்தனவாம். அப்போது அசுரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த முருகப் பெருமானின் வேலானது, அசுரர்களின் உடலை வெட்டி அசுரர்களின் ரத்தத்துடன் அவற்றை பேய் மற்றும் பிசாசுகளுக்கு தந்து அவர்களது பசி அடங்க அருள் புரிந்தது. அத்தகைய தன்மையைக் கொண்டது முருகப் பெருமானின் சக்தி வேல்.

(விளக்கம் :
1. இந்த மந்திர வரிகளை படிக்கையில் முருகப் பெருமானின் ‘வேல்’ அசுரர்களை வெட்டி அவர்களது ரத்தம் தோய்ந்த உடல்களை பேய் பிசாசுகளுக்கு உணவாக போட்டது சரியான செயலா என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த மந்திர பாடலுக்குள் அடங்கி உள்ள தத்துவங்கள் மிகவும் ஆழமானது.

2. அவுணர் என்பது ‘அ’ ‘உணர்’ எவனும் இரு சொற்களின் கூட்டாகும். அதன் அர்த்தம் உணர்வுகள் இல்லாதது  என்பதாகும்.  தீய அரக்கர்களைக் அவுணர் என்பார்கள்.  அதே போலவேதான்   பூர்வ ஜென்மங்களில் செய்த பாபங்களினால்  பேய் மற்றும் பிசாசுகளாக பிறப்பு எடுத்திருந்த, குணங்களுக்கும் உணர்வுகள் கிடையாது.  ஆனால் இந்த பாடலில் கூறப்பட்டு உள்ள பேய்,  பிசாசுகள் என்பவர்கள் மானிடர்கள் உள்ளத்திலும், மனதிலும்  அலையலையாய்  உலாவிக் கொண்டு இருக்கும் அடங்காத தீய எண்ணங்கள், பேராசைகள், ஆசா பாசங்கள், காம, மோக இச்சைகள் என்பவற்றைக் குறிக்கின்றது.  அசுரர்கள் என்பவர்கள் பிற தீய சக்திகளை பிரதிபலிப்பவர் ஆகும்.  ஆகவே பூர்வ ஜென்மங்களில் செய்த பாபங்களினால்  பேய் மற்றும் பிசாசுகளாக பிறப்பு எடுத்திருந்த, கணங்களுக்கு  ‘வேலானது’,   ஒழுக்கமற்ற அசுரர்களின் உடலை தந்து அவற்றின் பசியை போக்கியதாம் என்பதாக  மேலோட்டமாக இதை பார்க்கக் கூடாது.

3. பேய் மற்றும் பிசாசு போன்ற தீய எண்ணங்கள், பேராசைகள், ஆசாபாசங்கள், காம, மோக இச்சைகள் போன்றவை எளிதில் தம்முள் இருந்து அழித்துக் கொள்ள முடியாமல் உள்ளதினால், பசியால் துடிப்பவன் ஏதாவது உணவு கிடைக்காதா என அலைந்து திரிவதை போல, மானிடர்களில் பலர் தன்னை மீறி  அசுரத்தனமான தீய செயல்களில் ஈடுபட்டு தீமைகளினால் சூழப்பட்டு விடுகின்றார்கள். தாம் விரும்பியவற்றை அடைய வேண்டும் என்ற பேராசையினால் மேலும் மேலும் அசுரர்கள் எனப்படும் தவறான மற்றும் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார்கள்.  அசுரர்கள் போன்ற தீமைகளால் சூழப்பட்டு உள்ளவர்கள் பேராசைகளினால் செய்யும் தவறான, தீய   செயல்களையே  அடங்காத  ‘பசி’  என்பதாக  இந்த பாடலில் கூறப்பட்டு உள்ளது.  இது முதல் தத்துவம்.

4. தமது எண்ணங்கள் நிறைவேறாத நிலையில் மானிடர்கள் வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவிக்கிறார்கள். இது அடங்காத பசியினால் ஏற்படும் அடுத்த கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.

5. எப்படியாவது தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என எடுக்கும் முயற்சிகளில் தீய செயல்களும் அடங்கி உள்ளதினால், அவற்றினால் ஏற்படும் தீ வினைகள் அடுத்தடுத்த பிறவிகளில் அவர்களுக்கு கெடுதல்களை தரும் பிராரப்த கர்ம வினைகளாக மாறி வாழ்க்கையில் நிம்மதி இன்மையை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் மீண்டும், மீண்டும் ஜனன மரண நிலைக்கு தள்ளப்பட்டு, அந்த வாழ்க்கைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள். துன்பங்களும் துயரங்களும் வாழ்க்கையை போராட்டகளமாக மாற்றி விடுகின்றது. முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற, யுத்தம் என்பது போராட்டம் நிறைந்த வாழ்க்கையை குறிக்கின்றது. இது இரண்டாவது தத்துவம் ஆகும்.

6. அசுரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த முருகப் பெருமானின் வேலானது, அசுரர்களின் உடலை வெட்டி அசுரர்களின் ரத்தத்துடன் அவற்றை பேய் மற்றும் பிசாசுகளுக்கு தந்து அவர்களது பசியை அடக்கியதாம் என்பதில் உள்ள ‘ரத்தம்’ என்பது ‘தீய வினைப் பலன்களைக்’ குறிக்கின்றது. அவரது ‘வேல்’ மூலம் கொல்லப்பட்ட அசுரர்கள், பூர்வ ஜென்ம வினைகளினால் அசுரர்களாக பிறந்து மரணம் அடைந்தவர்கள். பூர்வ ஜென்மங்களில் அவர்கள் முருகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக சேவை செய்து வந்திருக்க வேண்டும், அதனால்தான் அவர் மூலம் இந்த ஜென்மத்தில் அவர்கள் மரணம் அடைய வேண்டி இருந்தது.

7. அவர்களது பிராரப்த கர்ம வினையின்படி அவர்கள் முருகப் பெருமானின் அருளினால் மோட்ஷ நிலையை அடைய வேண்டிய நிலையில் இருந்தவர்கள் என்பதினால்தான், அந்த யுத்தத்தில் அவர்கள் அவருடைய வேல் மூலம் கொல்லப்பட்டு பேய் மற்றும் பிசாசுகளுக்கு உணவாக தரப்பட்டார்கள். முன்பே கூறியபடி முருகப் பெருமான் பூர்வ ஜென்ம கர்மாக்களை அழிப்பவர் என்பதினால்தான் தன்னால் மரணம் அடைந்த அசுரர்களை சுற்றி இருந்த தீய வினைப் பலன்கள்-ரத்தம்- அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்பதினால்தான் அசுரர்களின் ரத்தம் கலந்த உடலை பேய் மற்றும் பிசாசுகளுக்கு உணவாக அவருடைய ஆயுதமான ‘வேல்’ தந்தது. ஏன் எனில் ‘ரத்தம்’ என்பது ‘தீய வினைப் பலன்களைக்’ குறிக்கின்றது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேன்.

8. இந்த செயலுக்கு இன்னொரு காரணம் இருந்திருக்க வேண்டும். இன்னின்னார்களுக்கு, இன்னின்னார்கள் மூலமே மரணம் அமைய வேண்டும் என்ற விதி இருந்ததினால்தான் அந்த அசுரர்களின் விதிப்படி அவர்கள் பேய் மற்றும் பிசாசுகளுக்கு உணவாக தரப்பட்டு மோட்ஷ நிலையை அடைய வேண்டும் என்ற நிலை இருந்திருக்க வேண்டும். ஆகவே கர்ம வினைகள், அவற்றின் பலா பலன்கள் மற்றும் நன்மை, தீமைகளை, எடுத்துக் காட்டவே, இந்த உண்மைகளை இந்த சிறிய பாடலில் அழகாக எடுத்து உரைத்து உள்ளார். இதுவே இந்த பாடலில் உள்ள மூன்றாவது தத்துவம் ஆகும்.

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்   

அலை வீசிக் கொண்டிருக்கும் கடலை சுற்றி அணை போன்ற தடுப்பை அமைத்து,  கடலின் நீர் அதில் இருந்து வெளியேறாமல் இருக்க  வைத்து,  அனைத்து நீரையும் ஒரு நொடியில்  உறுஞ்சிப்  பருகி விட்டு, கடல் நீர் வற்றி விட்ட  குழியை தான் கொன்று குவித்த  சூரனின் அசுர படையினரின் ரத்தத்தால்  நிறப்பி, அதற்குள் குதித்து விளையாடும் தன்மையைக் கொண்டது முருகப் பெருமானின் சக்தி வேல்.   

(விளக்கம் :
1. இந்த பாடலில் காணப்படும் ‘திரை கடல்’ என்பது விரிந்து படர்ந்துள்ள கடலைக் குறிக்கின்றது. ‘உதிரம்’ என்பது ரத்தத்தையும், ‘நிறைத்து’ என்றால் நிறப்பி என்றும் ‘உடைப்பை அடைய அடைத்து’ என்றால் கடலை சுற்றி அணை போன்று அமைத்து நீர் வெளியேறாமல் இருக்குமாறு வைத்து என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.

2. இதில் உள்ள தத்துவம் கடலைப் போன்று மிகவும் ஆழமானது. இந்த உலகமானது கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் போன்ற நான்கு யுகங்களை உள்ளடக்கியது. முதல் மூன்று யுகங்கள் கடந்த பின் நான்காவதான கலியுகம் தோன்றி தீமைகள் உச்சகட்டத்தை எட்டும்போது, பிரபஞ்சத்தை படைத்தவர் பிரளயத்தை ஏற்படுத்தி, அனைத்து அசையா, அசையும் பொருட்கள், மானிடர்கள், தாவரங்கள், மிருகங்கள் என அனைத்து ஜீவராசிகளுடன் சேர்ந்த உலகை அதில் முழுக வைத்து, உலகை அழித்து விட்டு புதிய உலகைப் படைப்பார்.

3. இந்த பாடலில் உள்ள ‘அனைத்து நீரையும் ஒரு நொடியில் உறுஞ்சிப் பருகி விட்டு’ என்பது உலகை அழிக்கும் நிலை என்பதாக பொருள் கொள்ள வேண்டும். அந்த நிலையே வற்றி விடும் கடலாக இதில் வர்ணிக்கப்பட்டு உள்ளது. ‘சக்தி வேலானது’ கடல் நீரை வற்ற வைக்க கடல் நீர் முழுவதையும் உறிஞ்சி குடித்து விடும் என்பதின் இரண்டாவது அர்த்தம் கடல் போன்று உலகெங்கும் பரவி உள்ள தீமைகளை தன்னுள் கிரகித்துக் கொண்டு அவர்களை அழித்து விடும் நிலை ஆகும்.

4. மருந்துகள் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள நோய்க் கிருமிகளை அழித்து விட்டு, மீண்டும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதை போல, அழிக்கப்பட்ட உடல்களில் இருந்து வெளியேறும் ஜீவன்களை தூய்மைப்படுத்தி அடுத்த யுகத்திற்கான புதிய ஜீவன்களை உருவாக்கும் நிலையே கொன்று குவித்த அசுர படையினரின் ரத்தத்தில் குதித்து விளையாடும் முருகப் பெருமானின் சக்தி வேல் எனும் கருத்தைக் கொண்ட பாடல் ஆகும். இங்கு ‘குதித்து விளையாடும்’ என்பதை தூய்மையாக்குவது என்ற பொருளில் பார்க்க வேண்டும். இதுவே இந்த பாடலின் முக்கியமான தத்துவம் ஆகும்.

5. சிவபெருமானே மூன்று தொழிலான ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்பவற்றை, பிற ரூபங்கள் மூலம் செய்து வருகின்றார் என்பதினால் அப்படிப்பட்ட அவருடைய ஒரு ரூபமான முருகப் பெருமானின் கையில் உள்ள சக்தி ‘வேல்’ மூலம் மீண்டும் புதிய பிரபஞ்சத்தில் படைக்கப்பட உள்ள ஜீவன்களை தூய்மையான எண்ணம் கொண்டவைகளாக அமைக்கவே, தீய எண்ணங்களைக் கொண்ட ஜீவன்களின் தீய எண்ணங்கள் அனைத்தையும் ‘சக்தி வேல்’ மூலம் கிரகித்துக் கொண்ட பின்னரே அனைத்தையும் கலியுக முடிவில் அழிக்கிறார் என்பதையே இந்த பாடல் வெளிப்படுத்துகின்றது).

        சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
      இடுக்கண்வினை சாடும்  

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரும்மா, திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிட்ட  துன்பத்தையும், அதற்கு மூல காரணமான பூர்வ கர்ம வினைகளையும் அடியோடு அழிக்கும் தன்மையைக் கொண்டது முருகப் பெருமானின் சக்தி வேல்.

(விளக்கம்:
1. சுரர் என்றால் தேவர்கள், மஹாபதி என்றால் தேவேந்திரன், விதி என்பது பிரும்மா மற்றும் அரி என்பது விஷ்ணுவையும் குறிக்கின்றன. இடுக்கண்வினை சாடும் என்றால்  துன்பத்திற்குக் காரணமான தீயவர்களை அழிப்பது என்பது பொருள்.

2. பொதுவாக ‘வேல் மாறலில்’ கூறப்பட்டு உள்ள அனைத்து பாடல்களுமே கர்ம வினையினால் அவதிப்படுபவர்களது துன்பங்களையும், துயரங்களையும் முருகப் பெருமானின் ‘வேலானது’ அழித்து , ஞானத்தை அருளுகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் முருக பக்தர்களின் உள்ளத்தில் அறியாமையினால் எழும் அலை பாயும் எண்ணங்கள், தீய செயல்கள், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள், பேராசை, காம மோக இச்சை போன்றவற்றையும் முருகப் பெருமானின் ‘வேலானது’ அழிக்கின்றது என்பதையும் அடிப்படை தத்துவமாக கொண்டு உள்ளது. ஞானம் என்பதை அறிவாற்றல் என்றும், மன விடுதலை அளித்து மோட்ஷ நிலை தருவது  என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  அதையே மீண்டும் மீண்டும் பலவிதமான பாடல்களின் சில வரிகளில் அருணகிரிநாத ஸ்வாமிகள் கூறி உள்ளார்.

3. இந்த  பாடல் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு உள்ள தத்துவமும்  கர்ம வினைப் பலனைப் பற்றியது ஆகும்.  பிராரப்த கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல.  அது அவரவர்களுடைய  வினைப் பயன் அல்லது பூர்வ ஜென்ம கர்ம வினை ஆகும். அவரவர் பெறும்  கர்ம வினையின் விளைவுகள் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக   தீமைகளை செய்வது துன்பத்தை  தரும்.  ஒவ்வொருவருடைய செயல்களின் பலனையும், முற் பிறவிச் செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் கணக்கில் கொண்டே  கர்ம வினை பலன்கள் அமைகின்றன.  நல்ல செயல்கள் மற்றும் தீய  செயல்களின் தொகுப்பே  கர்ம வினைப் பலன்களாக மாறுகின்றன. இந்த நியதிக்கு  மானிடர்கள் மட்டும் அல்ல தேவலோகத்தில் உள்ள தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரும்மா, திருமால் போன்ற அனைவருமே கட்டுப்பட்டவர்கள்தான் எனும் தத்துவத்தை இந்த பாடல் எடுத்துக் காட்டி உள்ளது.

4. கர்ம வினையினால்தான் பல்வேறு தேவர்களும், தெய்வங்களும் பல்வேறு நிலைகளில் பூமியில் பிறப்பை எடுத்து கர்ம வினை பலன்களை அனுபவித்த பின்னர் மீண்டும் தேவலோகத்துக்கு சென்று விடுவார்கள். சிவபெருமானை அவமதித்த தக்கனின் யாகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை மறைமுகமாக அவமதித்த குற்றத்தினால்தான் இந்திரன் உட்பட, பல்வேறு தேவர்களுக்கும்,  பல்வேறு தெய்வங்களுக்கும்  தீய கர்ம வினை பலன் ஏற்பட்டது. அதனால்தான்  தேவர்களும், இந்திரனும், அவரது யானை ஐராவாதமும் சூரபத்மனின் கொடுமைகளுக்கு ஆளாகி சிறைக்கும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது  அவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு முருகப் பெருமான் அவர்களை மீட்க சூரபத்மனின் படைகளோடு யுத்தம் புரிந்து அவர்களை விடுதலை செய்தார்.

5. ‘சூரபத்மனின் கொடுமைகளுக்கு ஆளாகி சிறைக்கும் செல்ல வேண்டி இருந்தது’ என்பது அவர்கள் தீய வினைப் பலன்களினால் சூழப்பட்டு இருந்தார்கள் என்ற பொருள் தரும். ‘அவர்களை விடுதலை செய்தார்’ என்பது அவர்களது கர்ம வினைகள் அழிக்கப்பட்டன என்பதான பொருளில் பார்க்க வேண்டும். அந்த யுத்தத்தில் முருகப் பெருமான் வெற்றி பெற்றதின் மூல காரணமே அவருடைய கையில் இருந்த ‘சக்தி வேல்’ எனும் ஆயுதத்தின் வலிமைதான்  காரணம் ஆகும். இங்கு யுத்தத்தில் வெற்றி பெற்றார் என்பது அவர்களுடைய கர்மாக்களை முருகப் பெருமான் அவருடைய வேல்-ஐ  கொண்டு அழித்தார் என்ற பொருள் தரும்.

6. கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப் பயன் அல்லது கர்ம வினை ஆகும். அவரவர் பெறும்  கர்மம் என்பது அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும். ஒவ்வொருவருடைய செயல்களின் பலனையும், முற் பிறவிச் செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் கணக்கில் கொண்டே அவரது கர்ம வினை பலன்கள் தீர்மானிக்கப்படுகின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின்  தொகுதியே வினைப்பயன்.

6. கர்ம வினைகள் என்பவற்றை சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்ற மூன்று  வகையில் கூறுகின்றார்கள். அவைகள் என்னென்ன?

7. நிகழ் கால வாழ்வில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை பிராரப்தம் என்று  கூறுவார்கள். அதாவது பிராரப்தம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் எந்தக் கர்மத்தின் விளைவாக இந்த ஜென்மம் வந்ததோ, அவற்றுக்கான பாவ புண்ணியங்களின் பலனை  அனுபவிக்க வேண்டும். மூன்று வயது முதல் வாழ்வு காலம் முடியும்வரை  நாம் செய்துள்ள கர்ம வினைகளை பிராரப்தம் என்பார்கள்.  அந்த  கர்ம வினை  முழுவதும்  முடிந்த பின்னரே ஒருவருடைய பிராரப்த கர்ம வினை என்பது முடிவிற்கு வரும்.

8. நாம்  பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணிய, பாபங்களில், அந்த ஜென்மங்களில் நாம் பெற்ற   பலன்களில் மிச்சம் உள்ளவை  அடுத்த ஜென்மத்தில் தொடர்கின்றன. இதுவே நம் முன்னோர்கள் மூலமாக, நாம் பிறக்கும் போதே நம்முடன் வந்த கர்ம வினைகள் ஆகும்.  அவற்றையும் நாம் அனுபவிக்க வேண்டும். அவை சஞ்சிதம் எனப்படும்.  ஆகவே சஞ்சிதத்தில் இருந்து  ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப் பயன்கள் மட்டும் செயல்படுகின்றன.

9. அடுத்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்க உள்ளவற்றை ஆகாமியம் என்பார்கள்.   ஆகாமியம் என்றால் பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் கால கட்டத்தில் செய்த அனைத்து பாவ புண்ணியங்களும், பதினான்கு வயது முதல்  செய்த அனைத்து பாவ புண்ணியங்களும், நிகழ் காலத்தில் வாழும்போது செய்யும் அனைத்து பாவ புண்ணியங்களும் சேர்ந்து கொண்டு சஞ்சித கர்ம வினைகளை தரும். அதாவது பூர்வ ஜென்ம பாவ புண்ணிய பலன்களில் மிச்சம் இருந்தவைகளுடன்  வாழும் ஜென்மத்தில் மூன்று  வயது முதல் செய்த பாவ புண்ணியங்களும் சேர்ந்து கொள்ளுமாம்.  உதாரணமாக பூர்வ ஜென்ம பாக்கி 14 , இந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் 16  எனும்போது  அவை இரண்டும் சேர்ந்து இந்த ஜென்மத்திலான சஞ்சிதம்  எனும் கர்மாவின் கணக்கில் 30 என்றாகி விடுமாம். அவற்றை நாம் அடுத்தடுத்த  ஜென்மங்களில்- ஆகாமியத்தில் – அனுபவிக்க வேண்டும் .

10. சஞ்சிதம் என்பது = முன்னோர்கள் மூலமாக, பிறக்கும் போதே வந்த கர்ம வினைகள்
பிராரப்தம் என்பது  = மூன்று வயது முதல் இன்று வரை நாம் செய்துள்ள கர்ம வினைகள்
ஆகாமியம் என்பது = சஞ்சிதம், பிராரப்தம் போன்ற கர்ம வினைகளில்  வரப்போகும் ஜென்மங்களில்  அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள்).

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

யுத்தத்தில் கோபக்கனல் தெறிக்க ஓடி வந்த சதை பிண்டங்கள் போன்ற கொழுத்த உடலைக் கொண்ட அசுரர்களையும், அரக்கர்களையும்  தீக்கனலாய்  சென்று  கொன்று  குவித்தபோது,  அந்த அசுரர்களின் உடல் கிழிந்து அதில் இருந்து வெளியில் வந்து விழுந்த,  ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த சிவந்த குடலை, சிவப்பு நிறத்திலான பூமாலை போல கருதி, தன் தலை மீது  மாலை போல அணிந்து கொண்டதாம்  சக்தி ‘வேல்’.

(விளக்கம்: 
1. இந்த பாடலின்  தத்துவத்தை புரிந்து கொள்ள சின்ன கதை ஒன்றைக் கூற வேண்டி உள்ளது. பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் காசிபன்  சிவபெருமானிடம் இருந்து அரிய வரத்தை பெற வேண்டும் என்ற நினைப்புடன் கடும் தவத்தில் இருந்தபோது, சுக்ராச்சாரியார்  மாயையாக உருவாக்கி இருந்த மாயை எனும் அறியாமை எனும் பெண் மீது மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். மாயை எனும் அசுரப் பெண்ணும் காசிபனும் முதலாம் ஜாமத்தில்  மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடைய சூரபத்மனையும்,  இரண்டாம் ஜாமத்தில்  இணைந்து சிங்க உருவில் சிங்க முகமுடைய சிங்கனையும்,  மூன்றாம் ஜாமத்தில் இணைந்து யானை உருவில்  யானை முகமுடைய தாரகாசுரனையும்  நான்காம் ஜாமத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணையும் பெற்றார்கள்.

2. மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவமும் அகங்காரமும் கொண்டவர்களாக விளங்கினார்கள். அவர்களில் சூரபத்மன் ஆணவத்தை கொண்டவனாகவும் , சிங்கமுகன், தாரகன் மற்றும் அஜமுகி என்ற மூவரும்  அறியாமை, மூடத்தனம் எனும் மாயையினாலான குணத்தை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.  சூரபத்மன் சிவனிடம்  ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் தனக்கு அழிவு வர வேண்டும்  என்ற வரத்தையும் பெற்றுக் கொண்டு இருந்தான். சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும்  தம்மைப் போன்ற பலரையும் உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு கொண்டு வந்தபோது, ஒரு கட்டத்தில் தேவலோகத்தின் மீது படை எடுத்து இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

3. பெண் இன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதினால்தான் சூரபத்மன் சிறை வைத்திருந்த இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும்  விடுதலை செய்ய வேண்டிய  கட்டாயத்தில் இருந்த சிவபெருமான் தனது நெற்றி பொட்டில் இருந்து வெளிவந்த தீப்பொறிகளினால் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் கொண்ட  முருகப் பெருமானை படைத்தார்.  சூரபத்மனுடன் போரிட முருகப் பெருமானுக்கு தனது சக்திகளை எல்லாம் உள்ளடக்கிய சக்தி ‘வேல்’ ஒன்றை அவருடைய தாயாரான பார்வதி தேவி தந்தாள்.

4. முருகப் பெருமான் சூரபத்மனுடன் யுத்தம் செய்து அவர்களை விடுதலை செய்தார். அப்போது யுத்த பூமியில் நின்றிருந்தபடி  முருகப் பெருமானை ஏமாற்றும் விதமாக சூரபத்மன் கூறினான் ‘முருகா, என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிந்து உனது திருவடியில் கலந்து விட வேண்டும்’. அவன் கூறியதை ஏற்றுக் கொண்ட முருகப் பெருமானும் அந்த வரத்தை அவனுக்கு கொடுத்து விட, அந்த சமயத்தில் அவரை ஏமாற்றி, அவன் மரமாகி கடலில் மறைந்து நின்று கொண்டு முருகனிடம் இருந்து தப்ப முயன்றான். அதை கண்டுபிடித்து விட்ட  முருகப் பெருமான் தனது சக்தி ‘வேல்’-ஐ  அந்த மரத்தின் மீது ஏவினார். மரம் இரண்டாகப் பிளந்து ஒரு பாதி  மயிலாகவும், மறுபாதி  சேவலாகவும் மாறி விட்டது. அதன் காரணம், அவன் மரணம் அடையும் முன்னர் தனது திருவடியில் சரணம் அடைய அவனுக்கு  வரம் கொடுத்து இருந்ததினால் இரண்டாக பிளந்து விழுந்த அவனை தன்னுடைய வாகனமான மயிலாகவும், வெற்றிக் கொடிச் சின்னமாகவும் முருகப் பெருமான் மாற்றிக் கொண்டார்.

5. இதில் இரண்டு தத்துவங்கள் மறைந்து உள்ளன. முதலாவது ஆணவமும், அகந்தையையும் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தெய்வங்கள் தண்டிக்காமல் இருப்பதில்லை. ஒருவருக்கு ஏற்படும் ஆணவமும் அகந்தையும், அவர்களது மனதில் உள்ள அறியாமை எனும் மாய உணர்வால் வெளிப்படுபவை. சூரபத்மனை சுற்றி இருந்தவர்கள் மாயையினால் படைக்கப்பட்ட சிங்கமுகன், தாரகன் மற்றும் அஜமுகி என்பவர்கள். ஆகவே முதலில் அறியாமை எனும் மாயையான   சிங்கமுகன், தாரகன் மற்றும் அஜமுகி என்பவர்களை முருகப் பெருமான் அழித்த பின்னரே கடைசியில் அகந்தை எனும் சூரபத்மனை அழிக்கிறார்.

6. சூரபத்மன் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வெளிப்படுத்தும் பாத்திரமானவன் என்றாலும் அவன் தெய்வ பக்தி மிக்கவன். சிவபெருமானை வணங்கி துதித்தவன் , சாவின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது உயிர் பிழைக்க, முருகப் பெருமானை ஏமாற்றி  அவரது  திருவடியில் சரணம் அடைய வேண்டும் என பாசாங்கு செய்து மரமாகி ஒளிந்து கொண்டாலும்,   சிவபெருமானின் பக்தனான அவன் தன்னை வேண்டிக் கொண்டு பெற்ற வரத்தினால்    இரண்டாக பிளந்து விட்ட அவனுடைய உடலின் ஒரு பாதியை தனது வாகனமான மயிலாகவும் மறு  பாதியை  சேவல் கொடியாகவும் மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. 

7. முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தரும் நிலை அகம்பாவத்தையும் ஆணவத்தையும் அவர் அடக்கி வைத்துக் கொண்டுள்ள நிலையைக் காட்டும். சேவல் ஜீவாத்மாவைக் குறிக்கின்றது. ஞானத்தை அளிக்கும் முருகப் பெருமானே அனைவரது ஜீவாத்மாவையும் தன் கையில் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளார் என்பதை அவற்றின் மூலம்  வெளிப்படுத்துகின்றார்.

8. எதனால்   ரத்தத்துடன் அரக்கர்களது உடலில் இருந்து வெளி வந்து விழுந்த  குடலை மாலையாக சக்தி ‘வேல்’ அணிவித்துக் கொண்டதாம்? யுத்தம் நடந்து  கொண்டிருந்தபோது முருகப் பெருமானுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோடிக்கணக்கான பைரவர் மற்றும் சிவகணங்கள், முருகப் பெருமானை எதிரிகளிடம்   இருந்து பாதுகாக்க  வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை  சூழ்ந்து கொண்டு இருந்தவாறு சண்டையில் ஈடுபட்டனவாம்.

9. அப்போது முருகப் பெருமானை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் உக்கிரமாக அவரை தேடி அலைந்தவாறு  ஓடி வந்த  அசுரர்களும் அரக்கர்களும் முருகப் பெருமானை காண முடியாமல் முருகப் பெருமான் எங்கே என்பதை அறிந்து கொள்ள ‘முருகா’, ‘முருகா’ நீ எங்கே  என்று கூவியவாறே அவரை தேடி அலைந்தபோது, அவர்களை அறியாமலேயே அவர்கள் முருகப் பெருமானின் திருநாம ஜெபத்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்ததினால்,  அவர்கள் உடல் முழுவதுமே முருகனின் நாமத்தினால் நிறைந்து  இருந்தது. 

10. முருகப் பெருமானின் ‘வேலில்’ இருந்து வெளிவந்த சக்தி கணங்கள் அசுரர்களின்  உடலைக் குத்தி குடலை வெளியில் உருவி  எடுத்தபோது  முருகப் பெருமானின்  நாம ஜெபத்தினால் நிறைந்து இருந்த குடல்கள் வெளியில் விழுந்த போது பூக்களாக  மாறி விட்டதாம். அதனால்தான் சிவந்த பூக்களாக வெளியில் விழுந்த, முருகப் பெருமானின் நாமத்தால் நிறைந்து இருந்த  குடல்களை சக்தி ‘வேலானது’  எடுத்து  தனது தலையில் மாலையாக அணிவித்துக் கொண்டு மகிழ்ந்ததாம்.  எவர் ஒருவர் தம்மை அறியாமலேயே தெய்வத்தின் நாமத்தை அடிக்கடி உச்சரித்தபடியே இருப்பார்களோ அவர்கள் நல்ல கதியை பெறுவார்கள் என்ற தத்துவம் இதில் கூறப்பட்டு உள்ளது )

தொடர்கின்றது …. .……..பாகம் :3.