அத்தியாயம் -43

சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  ‘கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக் கோலம் போடுவது உண்டு.  அதன் பின் தூரத்தில்  இருந்தே குருதேவரை நமஸ்கரித்து விட்டுச் சென்று விடுவான்.  ஒரு நாள் அவனுடைய பெற்றோர்கள் தமது உறவினர்களுடன் ஸ்ரீசைலம் சென்று சிவராத்திரி  அன்று அங்குள்ள சிவபெருமானை வழிபாட்டு விட்டு வரலாம் என எண்ணிக் கொண்டு தண்டுக்கையையும்  ஸ்ரீசைலம் வருமாறு அழைத்தார்கள். ஆனால் தண்டுக்கோ ஸ்வாமிகள் உள்ள இந்த இடமே ஸ்ரீ சைலம் என்று தாம் கருதியதினால் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார்.

அதைக் கேள்விப்பட்ட ஸ்வாமிகள் வேண்டும் என்றே தண்டுக்கை அழைத்துக் கேட்டார் ‘அப்பனே, ஸ்ரீசைலம் போவதற்கு நீ ஏன் மறுத்தாய்?’ தண்டுக் கூறினார் ‘ஸ்வாமி என்னைப் பொருத்தவரை உங்கள் பாதங்களே எனக்கு ஸ்ரீ சைலம் ஆகும்’ என்றார். அதற்குப் பின்னர் ஸ்வாமிகள் அவனிடம் வேறு எதையும் கேட்கவில்லை.

சிவராத்திரி வந்தது. தண்டுக் சங்கம் நதியில் குளித்தப் பின் ஸ்வாமிகளிடம்  சென்று அவரை நமஸ்கரித்தார்.  அப்போது ஸ்வாமிகள் கூறினார் ‘தண்டுக், உன்னுடைய சொந்தக்கரர்கள் அனைவரும் ஸ்ரீசைலத்துக்கு சென்று விட்டார்கள் அல்லவா? சரி, உனக்கும் ஸ்ரீசைலத்தை தரிசிக்க ஆசையாக உள்ளதா? அப்படி என்றால் என்னுடன் வா, உனக்கு ஸ்ரீசைலத்தைக் காட்டுகிறேன்’ என்று கூறி விட்டு தண்டுக்கை தன் பின்னால் வருமாறு அழைத்தார். தண்டுக்கும் ஒன்றும் புரியாமல் அவர் பின்னால் நடக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தான் ஸ்ரீசைலத்தில் இருப்பதைக் கண்டான்.

அங்கிருந்த பாதாள கங்கையில் குளித்து விட்டு மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அவனும்  பாதாள கங்கை நதியில் குளிக்க ஆரம்பித்தபோது அங்கு தன்னுடைய பெற்றோர்களையும், உறவினர்களையும் பார்த்தான். அவர்கள் தண்டுக்கைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்து அவன் எப்போது அங்கு வந்தான் என்று கேட்டார்கள். அவன் தான் ஒரு மணி நேரம் முன்னர் சங்கமத்தின் அருகில் இருந்ததாகவும், கனக்பூரில் சென்று குருவை தரிசித்தப்  பின் என்ன நடந்தது, தான் அங்கு எப்படி வந்தேன் என்று  தெரியாது என்றும் கூற எவரும் அவன் கூறியதை நம்பத் தயாராக இல்லை. அவன் தங்களுடன் வருவதற்குப் பிடிக்காமல் எதோ பொய் கூறுகிறான் என்று நினைத்து அவனை கடிந்து கொண்டார்கள்.

ஆனால் அவனோ எதற்கும் கவலைப்படாமல் ஸ்வாமிகள் கூறிய அறிவுரையை ஏற்று மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யச் சென்றான்.  என்ன ஆச்சர்யம், அங்கு கடவுளுக்குப் பதில் தன்னுடைய குருநாதர் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தரிசனம் தந்து கொண்டிருந்ததைக் கண்டதும் அவர் சங்கரரின் அவதாரமாகவே இருக்க வேண்டும் என நினைத்தான். அதன் பின் மல்லிகார்ஜுனாவிலும் பிரும்மராம்பிகாவிலும் தரிசனங்களை முடித்துக் கொண்டப் பின்   பாதாள கங்காவில் எந்த இடத்தில் தன்னை குரு விட்டுச் சென்றாரோ  அதே இடத்திற்கு திரும்ப வந்து குருவைத் தேடினான்.

அங்கிருந்த குருவை கண்டவனிடம் ‘என்னப்பா, நல்ல தரிசனம் கிடைத்ததா?’ என்று  ஸ்வாமிகள் கேட்டதும் தண்டு கூறினான் ‘ஸ்வாமி, இன்றுதான் ஒரு உண்மையை புரிந்து கொண்டேன். உண்மையான சங்கரரான நீங்கள் எங்கள் முன் இருக்க, அதை புரிந்து கொள்ள முடியாத நாங்கள் ஸ்ரீசைலத்துக்கு வந்து உங்களைத் தேடுகிறோம். அனைத்து நதிகளும் ஒரே இடத்தில் சங்கமிக்கும்போது அந்த நதியில் ஒரு நதியைக் காட்டுவது போல இங்கு ஏன் ஸ்வாமி என்னை அழைத்து வந்தீர்கள்?’ என்று கேட்க ஸ்வாமி அவனுக்கு பதில் அளித்தார்.

‘மகனே, கடவுள் இருப்பது ஒரு இடத்திலேதான் என்றாலும்  சில இடங்களில் அந்தந்த இடங்களின் மகிமையைக் காட்ட அவர் அங்கெல்லாம் அவதரிக்கிறார். அதற்கு உதாரணமாக ஸ்கந்தபுராணத்திலும்  எழுதப்பட்டு உள்ள ஒரு கதையைக் கேள்’ என்று கூறி விட்டு அதைப் பற்றிக் கூறத் துவங்கினார்.

‘முன் ஒரு காலத்தில் கிராட் எனும் பூமியை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். தெய்வ பக்தி மிக்கவன் அவன். சாஸ்திர முறைப்படி சிவபெருமானை துதித்து வணங்கி வந்தாலும் சிற்றின்ப ஆசைகளான பெண்ணாசை, குடி, கூத்து என பலவிதமான தீய பழக்கங்களையும் தன்னுடன் கொண்டு இருந்தான். அதை அவனது மனைவி விரும்பவில்லை என்பதினால் சமயம் பார்த்து அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள் ‘நாதா இத்தனை பெரும் சிவபக்தராக உள்ள நீங்கள் ஏன் நானாவித தீய பழக்கங்களைக்  கைக்  கொண்டு வாழ்கிறீர்கள்?’

அதற்கு அந்த மன்னன் கூறினான் ‘அடியே, நான் என்ன செய்வது. அது என்னுடைய பூர்வ ஜென்ம வாசனையால் வந்த பழக்கங்கள். அப்போது நான் ஒரு நாயாக இருந்தேன். ஒரு முறை சிவராத்திரி அன்று அந்த வீட்டில் இருந்தவர்கள் விரதம் இருந்தார்கள். எனக்கும் எந்த உணவும் போடவில்லை. மாலை அனைவரும் ஆலயத்துக்கு சென்று விட்டார்கள். அவர்கள் விரதம் என்பதினால் வீட்டில் எதுவும் எனக்கும் கிடைக்கவில்லை. மற்றவர்கள் வீட்டிலும் யாருமே அவர்கள் உண்ட எதையுமே வெளியில் போடவில்லை. அனைவருமே பட்டினி விரதம் இருந்துள்ளார்கள் என்பது புரிந்தது. எனக்கோ பசி எடுத்தது. ஆகவே நானும் சாதுவான நாய் போல அவர்கள் பின்னாலேயே சிவன் ஆலயத்துக்கு சென்றேன். அங்கிருந்தக் கூட்டத்தோடு எப்படியோ உள்ளே சென்று விட்டேன். கருவறையில் சிவபெருமானுக்கு பூஜை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. சன்னதியின் பக்கத்தில் பெரிய பாத்திரம் முழுக்க பிரசாதம் வைக்கப்பட்டு இருந்தது.

பசி தாங்க முடியாமல் இருந்த நான் மெல்ல அந்த பாத்திரத்தின் அருகில் போனபோது என்னைப் பார்த்து விட்ட  குருக்கள் நாய்…நாய் எனக் காத்த அதைக் கேட்ட   அனைவரும் ஆளுக்கொரு  கழியை எடுத்துக் கொண்டு என்னை அடித்து துரத்தத் துவங்க நான் ஆலயத்தை சுற்றி சுற்றி ஓடத் துவங்கினேன்.  ஆனாலும் என்னை துரத்தியவர்கள் என்னை துரத்திப் பிடித்து அடி அடி என்று அடிக்க நான் ஆலயத்திலேயே சுருண்டு விழுந்தேன். ஆலயத்தின் ஒரு மூலையில் ஓடிச் சென்று விழுந்து விட்ட   நான் மரணமும் அடைந்தேன். நான் அந்த ஜென்மத்தில் சிவராத்தரி அன்று பட்டினியுடன் இருந்து சிவபெருமானின் ஆலயத்தில் பிரதர்ஷணம் செய்த பின் அந்த ஆலயத்திலேயே மரணம் அடைந்ததினால் இந்த ஜென்மத்தில் ஒரு மன்னனாக பிறந்து  இருந்தாலும் சிவபக்தனாக இருந்தபடி கிராதகர்கள் மத்தியில் பிறந்தேன்.  நான் அந்த ஜென்மத்தில் ஆலயத்தில்  புனிதமான, பூஜை முடியும் முன் தொடக்கூடாத பிரசாதத்தை  கண்டதும் இல்லாமல் திருட எண்ணிய அதே உணர்வு  இந்த ஜென்மத்தில் தொடர்வதினால்தான்  செய்யக்கூடாத காரியங்களை என்னை மீறி  செய்கின்றேன். அதை என்னால் உணர முடிந்தாலும் என்னால் தடுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்’ என்று கூறினான்.

அதைக் கேட்ட அவன் மனைவிக்கும் தனது  பூர்வ ஜென்ம வாழ்வு பற்றி தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. ஆகவே தன்னுடைய பூர்வ ஜென்மத்தைப் பற்றி அவனால் கூற முடியுமா என்று அவள் மன்னனிடம்  கேட்க அவன் கூறினான் ‘பூர்வ ஜென்மத்தில் நீ ஒரு பறவையாக ஸ்ரீ சைலத்தில் இருந்தாய். ஒரு முறை  சிவராத்திரி அன்று உண்பதற்காக  ஒன்றுமே கிடைக்காமல் பட்டினியோடு பறந்து கொண்டு இருந்தபோது ஒரு சின்ன எலும்புத் துண்டு மாமிசத்துடன் கிடைத்தது.  நீ  அந்த  எலும்புத் துண்டை அலகினால் கௌவிக் கொண்டு பறந்து சென்று கொண்டு இருந்த பொழுது ஒரு பெரிய பறவை அதைப் பிடுங்க உன்னை  துரத்திக் கொண்டு வந்தது.  நீயோ மல்லிகார்ஜுனர் ஆலயத்தை  பலமுறை சுற்றிப் சுற்றிப் பறக்கத் துவங்கினாய். ஆனால் அந்த பெரிய பறவையிடம்  இருந்து உன்னால் தப்ப முடியவில்லை. அது உன்னை  பிடித்து  தாக்கியபோது  நீ படுகாயம் அடைந்து அதே ஆலயத்தின் மீதே விழுந்து மரணம் அடைந்தாய். ஆகவே நீயும் பட்டினியுடன் இருந்து ஆலயத்தை பிரதர்ஷணம் செய்வது போல சுற்றியதினால் இந்த ஜென்மத்தில் இராணியாகப் பிறந்து விட்டாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் சேர்ந்து கொண்டு பக்தி பூர்வமாக பூஜையை  செய்து வருவதினால் அடுத்த ஆறு ஜென்மங்களிலும் இருவரும் இராஜவம்சத்திலேயே பிறந்து கணவன் மனைவியாகவே வாழ இருக்கின்றோம்’   எனக் கூறிய பின் எந்த எந்த ஜென்மங்களில் எங்கு பிறக்க உள்ளனர் எனவும் கூறினான். கடைசியாக எடுக்க இருக்கும் ஆறாவது  ஜென்மத்தில் அகத்திய முனிவரை சந்தித்தப் பின் மோட்சம் அடைய இருப்பதாகக் கூறியவன் சிவ பக்தியை விடாது செய்யுமாறு மனைவியிடம் கூறினான்’.

அதைக் கூறிய பின் ஸ்வாமிகள் தண்டுவிடம் கூறினார் ‘இப்போது புரிகின்றதா நான் ஏன் சில இடங்களுக்கு விசேஷ  சக்தி உண்டு எனக் கூறியதின் காரணம்? மல்லிகார்ஜுன ஆலயத்தின் மீது விழுந்து இறந்த பறவை ஆறு ஜென்மங்கள் இராணியாகப் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றது. அதனால் நீ உன் சொந்த ஊரான கந்தர்வ நகரத்திற்கு சென்று கல்லீஸ்வரரை வணங்கு. அவரும்  மல்லிகார்ஜுனருக்கு இணையானவரே’ என குருதேவர் கூறினார்.

அவனோ ‘ஸ்வாமி, நான் மல்லிகார்ஜுனரை வணங்கச் சென்ற பொழுது அங்கு பீடத்தில் உங்களையே  கண்டேன். நீங்களே கடவுள்  எனும்போது  எனக்கு வேறு என்ன வேண்டும்?’ எனக் கேட்டவனுக்கு பதில் கூறாமல் அவன் கண்களை மூடிக் கொள்ளுமாறு கூறியவர் அடுத்த நொடியில் அவனை மீண்டும் கனக்பூருக்கு அருகில் சங்கமத்திற்கு அழைத்து வந்து விட்டார். அதே சமயத்தில் சிவராத்திரி  அன்று குருதேவரை வணங்க ஆசிரமம் வந்தவர்கள் அவர் அங்கு இல்லை என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். அதைக் கேள்வியுற்ற குருதேவர் நகருக்குள் போய் பக்தர்களிடம் தான் வந்து விட்ட விவரத்தைக் கூறுமாறு தண்டுவிடம்  கூறி அனுப்பினார். அவனும் நகருக்குள் சென்று நடந்த அதிசயம் அனைத்தையும் கூற  யாருமே அதை எளிதில் நம்ப முடியாமல் மலைத்து நின்றார்கள் . காலையில் இங்கு இருந்தவன் பல மைல்  தொலைவில் இருந்த ஸ்ரீ சைலத்துக்கு சென்று விட்டு எப்படி திரும்பினான் என கேலி செய்தார்கள். ஆனால் அதுவே குருவின் மகிமை என்று  கூற அதன் பின் நடந்தவற்றை அறிந்து கொண்டவர்கள் உண்மையான பக்தி நன்மையை அளிக்கும், சந்தேகத்துடன் காட்டும் பக்தி அழித்து விடும் என உணர்ந்தனர்”. இப்படியாக இன்னொரு மகிமைக் கதையை சித்த முனிவர் நமத்ஹரகாவுக்குக் கூறி முடித்தார் (இப்படியாக அத்தியாயம்-43 முடிவடைந்தது).

……தொடரும்