அத்தியாயம் -42
சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ‘அனைவரையும் ஸ்வாமிகள் ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள் அனைவரும் குளித்து விட்டு வந்ததும் சாயம்தேவாவின் மூத்த மகனை தமது அருகில் அழைத்த ஸ்வாமிகள் அவர் தலையில் தனது கையை வைத்து ‘நீ பல்லாண்டு காலம் பெரும் செல்வம் பெற்று வளமாக வாழ்ந்து கொண்டு உன் மூதையர்களுக்கும் பெருமை சேர்த்தவண்ணம் இரு’ என்றார்.
இப்படியாக அங்கு சில காலம் வசித்து வந்த சாயம்தேவாவின் குடும்பத்தினர் ஸ்வாமிகளுக்கு சேவை செய்து வந்தார்கள். அப்போது பத்ரபாத மாசமும் வந்தது. ஒரு நாள் ஸ்வாமிகள் சாயம்தேவாவை அழைத்து அவர் குடும்பத்துடன் கருநெல்லி மரத்தை ஆராதித்தவண்ணம் இருந்து கொண்டு அதே மாதத்தில் அனந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார். அதற்கு சாயம்தேவா தம்மைப் பொருத்தவரை ஸ்வாமிகளே அனந்தர் என்று கூற ஸ்வாமிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தான் கூறியதை தட்டாமல் அவரை அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார். அதைக் கேட்ட சாயம்தேவாவும் அந்த விரதத்தின் மகிமையை தனக்குக் கூறுமாறு ஸ்வாமிகளிடம் வேண்டுகோள் வைத்தார். அவர் கேட்டதற்கு இணங்க ஸ்வாமிகள் சாயம்தேவாவுக்கு அந்த விரதத்தின் மகிமையைக் குறித்தக் கதையைக் கூறத் துவங்கினார்.
‘பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது பலவிதமான கொடுமைகளை அனுபவித்தார்கள். காட்டில் இருந்த பாண்டவர்களுக்கு துர்வாச ரிஷி மூலம் கௌரவர்கள் மேலும் தொல்லைக் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுடன் கிருஷ்ணரும் இருந்து வந்ததினால் அவ்வபோது பாண்டவர்கள் அவர் கொடுத்த அறிவுரைகளின்படி நடந்து தொல்லைகளில் இருந்து தப்பி வந்தார்கள். அப்போது ஒருநாள் திரௌபதியும் பாண்டவ சகோதரர்களான யுதிஷ்டர், நகுலன், சகாதேவன், அர்ஜுனன் மற்றும் பீமன் போன்ற ஐவரும் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் என்ன தவறை செய்து விட்டதினால் இப்படியாக கொடுமைகளை அனுபவிக்கும்படி ஆயிற்று என்றும் காட்டிற்கு வரவேண்டியதாயிற்று என்றும் தமக்கு வந்துள்ள சங்கடங்களில் இருந்து மீள என்ன செய்யலாம் என்றும் கேட்டார்கள். கிருஷ்ணரும் அவர்களை கடந்த ஜென்மத்தின் நிகழ்வுகளை ஆராய வேண்டிய தேவை அப்போது இல்லை என்றும், முதலில் அவர்கள் அனுபவித்து வரும் கஷ்டத்தில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, அவர்களை பத்ரபாத மாதத்தில் அனந்த விரதம் இருந்து வந்தால் அவர்கள் தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள் என்று அறிவுரை செய்து விட்டு அந்த விரத மகிமையைக் எடுத்துக் காட்டும் ஒரு கதையும் அவர்களுக்குக் கூறினார். கிருஷ்ணர் கூறலானார்:
‘அனந்த என்பது இரவு-பகல், வார நாட்கள், மாதம், பௌர்ணமி-அமாவாசை, வருடங்கள், யுகங்கள் என்பவற்றில் ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். ஆனால் அவை அனைத்தும் நானேதான். நேற்று, இன்று, நாளை என்பதும், சிவன், விஷ்ணு, பிரும்மா என்ற அனைத்துமே நான்தான். என்னை எங்கும் நிறைந்தவர் என்றே கூறுவார்கள். ஆகவே நான் கூறும் அனந்த விரதத்தை பத்ரபாத மாதத்தின் சதுர் தசையில் செய்ய வேண்டும். அதை முழு பக்தியுடனும் சிரத்தையுடனும் செய்தால் நிச்சயமாக நீங்கள் இழந்து விட்ட ராஜ்யத்தை திரும்பப் பெறுவீர்கள்.
கிரேதா யுகத்தில் சுமன்து என்றொரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் தீக்ஷா என்பதாகும். அவர்களுக்கு சுசீலா என்ற மகள் உண்டு. சுசீலா பிறந்த சில மாதத்திலேயே தீக்ஷா இறந்து விட சுமன்து தனது மகளை பராமரிக்க இரண்டாம் தாரமாக ஒருவளை மணந்து கொண்டார். ஆனால் அந்த இரண்டாம் மனைவியோ கொடுமைக்காரியாக இருந்தாள். அவள் சுசீலாவுக்கு செய்து வந்த கொடுமைகளைக் கண்ட சுமன்து தனது மனைவியை அடக்கி வைக்க முடியாமல் போனதினால் சுசீலா வயதுக்கு வந்ததுமே அவளை கௌடின்யா என்ற பிராமணருக்கு மணம் புரிந்து வைத்தார். ஆனால் அவர்களை தம்முடனேயே தங்க வைத்துக் கொண்டார். அதுவும் சுமந்துவின் இரண்டாம் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதினால் அவர்களுக்கு மேலும் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தாள். ஆகவே கௌடின்யா அங்கு இனிமேலும் தங்கி இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி தனது மனைவியுடன் வேறு எங்காவது சென்று விட முடிவு செய்தார்.
ஆகவே அவர் தனது மாமனாரிடம் சென்று தமது நிலையைக் கூறி அங்கிருந்து கிளம்பிச் செல்ல அனுமதி கேட்டார். சுமன்து என்ன செய்வார் பாவம்? அவர்களுக்கு ஏதாவது கொடுத்து அனுப்ப நினைத்து தனது மனைவியிடம் கேட்க அவளோ எதையும் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறி விட்டு கதவையும் படீர் என சாத்தி மூடிக் கொண்டாள். அந்த நிலையைக் கண்ட சுமன்து கண்ணீர் விட்டழுது எதேர்ச்சையாக கூடத்தில் வைத்து இருந்த கோதுமை மாவை அவர்களுக்கு கொடுத்து அனுப்பினார். சுமந்துவின் நிலையை தெரிந்து கொண்டிருந்த சுசீலாவும் அவளது கணவரான கௌடின்யாவும் அவரைத் தேற்றினார்கள். மாமனார் கவலைக்கொள்ள வேண்டாம் என்றும் சுசீலாவை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கௌடின்யா அவருக்கு ஆறுதல் கூறிய பின் இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் வெளியேறிச் சென்ற தினம் பத்ரபாத மாதத்தின் சுத்த சதுர்தஷியாகும். அவர்கள் நடந்தபடி ஒரு ஊரில் இருந்த நதிக்கரையை அடைந்தனர். அங்கு பல பெண்களும் குழந்தைகளும் நதியில் குளித்து விட்டு எதோ பூஜை செய்தபடி இருப்பதைக் கண்டனர். ஆகவே சுசீலா ஒரு பெண்மணியிடம் சென்று அங்கு என்ன நடக்கின்றது என வினவ, அவளும் தாங்கள் அனந்த விரதம் இருப்பதாகக் கூறினாள். அதைக் கேட்ட சுசீலாவும் அந்த விரதம் எதற்காக செய்யப்படுகிறது என்பதை தனக்கும் கூற முடியுமா என்று கேட்க அந்தப் பெண்மணி கூறினாள் ‘அம்மணி இந்த விரதத்தை பத்ரபாத சுத்த சதுர்தஷியில் செய்ய வேண்டும். வீட்டில் அனைத்து பக்கங்களிலும் தோரணங்கள் கட்டி பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து பதினான்கு வருடங்கள் அதே குறிப்பிட்ட நாளில் விரதத்தை செய்ய வேண்டும்.
முதலில் நதியில் குளித்தப் பின் நல்ல உடை உடுத்தி, இரண்டு கலசங்களை வைத்து அதன் முன்பாக நல்ல துணியை வைத்து அதையே ஆதிசேஷ நாகம் போன்ற உருவாக மனதில் உருவகம் செய்து கொண்டு அதை குறிக்கும் வகையில் தர்பைப் புல்லையும் வைக்க வேண்டும். கையில் சங்கையும், சக்கரத்தையும் ஏந்திய விஷ்ணு பகவானை மனதில் தியானித்தபடி பூஜை செய்ய வேண்டும். மந்திரத்தை உச்சரித்தவாறு வலது கை மணிக்கட்டில் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். கோதுமை மாவைக் கொண்டு தயாரித்த இனிப்பை பிராமணர்களுக்குத் தர வேண்டும். முடிவாக தங்கள் வீட்டில் சமைத்த உணவை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொண்டு உண்ண வேண்டும். இப்படியாக தொடர்ந்து பதினான்கு வருடங்கள் விரத பூஜை செய்த பின் பதினான்கு வருட முடிவில் பதினான்கு கலசங்கள் வைத்து பூஜையை முடித்தப் பின் அவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்து விட வேண்டும்’ என்று கூறினாள்.
அதைக் கேட்ட சுசீலா தானும் அந்த விரதம் இருக்க விரும்பியதினால் அவளையும் அந்த பூஜையில் கலந்து கொள்ளலாம் என அந்தப் பெண்மணி அழைப்பு விடுத்தாள். அவளும் சந்தோஷமாக அதில் கலந்து கொண்டாள். தன்னுடைய தந்தைக் கொடுத்து இருந்த கோதுமை மாவைக் கொண்டு இனிப்பு தயாரித்து அங்கிருந்த பிராமணர்களுக்கு கொடுத்தாள். அந்த பூஜையை அவள் செய்து முடிக்கவும் அவளது கணவர் குளித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன் குளித்து விட்டு வந்ததும் அவள் தனது கணவரிடம் நடந்ததைக் கூறினாள். அதன் பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
போகும் வழியில் இருந்த ஒரு கிராமத்தை அவர்கள் அடைந்தாகள். அந்த கிராமத்தில் நுழைந்ததுமே அங்கிருந்த கிராம மக்கள் அவர்கள் இவருடைய முகத்தில் தெரிந்த தேஜஸ்சைக் கண்டு அவர்கள் மாபெரும் மகான்களாக இருக்க வேண்டும் என நினைத்து விட்டார்கள். அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். அவர்கள் எதையும் கூறுவதற்கு முன்னரே அவர்களை ஒரு நல்ல வீட்டுக்கு அழைத்துச் சென்று இது உங்கள் வீடு என்றார்கள். கௌடின்யாவுக்கும் சுசீலாவுக்கும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் தந்தார்கள்.
இதென்ன மாயம், எதற்காக இவை நடக்கிறது என்று புரியாத தம்பதியினர் சில நாட்களிலேயே கிடைத்தவரை லாபம், வேறு யாரையோ எதிர்பார்த்து இருந்தவர்கள் நம்மையே அவர்கள் எதிர்பார்த்து இருந்தவர்கள் என்று தவறாக நினைத்து நமக்கு அனைத்து வசதிகளையும் தந்துள்ளார்கள். சரி வருவது வரட்டும் என நினைத்துக் கொண்டு அங்கு தங்கி இருந்தார்கள். கௌடின்யா சாஸ்திரங்களையும், பூஜைகளையும் நன்கு அறிந்தவர் என்பதினால் அவர் அந்த கிராமத்திலேயே அனைவருக்கும் தேவையான பாண்டித்தியத்தை செய்தவண்ணம் தங்கி இருந்தார். கிராம மக்களும் அவரை போற்றி வந்தார்கள். சில காலம் சென்றதும், தனக்குக் கிடைத்த மரியாதைக் கண்ட கௌடின்யாயா தலைகனம் கொள்ளலானார்.
இன்னும் சில நாட்கள் கழிய எந்த அந்த கிராமத்தினர் அவர்களுக்கு மரியாதை தந்தார்களோ அவர்களே காரணம் இல்லாமல் அவர்கள் மீது வெறுப்பு காட்டத் துவங்கினார்கள். திடீர் என ஒருநாள் அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கொள்ளை போயின. கையில் காசில்லை. கடன் வாங்கி காலம் கழிக்க வேண்டியதாயிற்று. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததினால் விரைவில் வீடும் ஜப்தி ஆயிற்று. நடுத்தெருவில் பஞ்ச பரதேசிகளாக மீண்டும் வந்தார்கள். அப்போதுதான் கௌடின்யாவுக்கு உறைத்தது தான் தவறு செய்து சுசீலாவின் அனந்த விரதத்தை தடுத்ததும், அவள் கையில் கட்டி இருந்த அனந்த விரத கயிற்றை அறுத்து எறிந்ததும். அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது புரிந்தது. தான் செய்த பிழையை உணர்ந்தான். ஆகவே எப்படியாவது அந்த அனந்தரைக் காண வேண்டும் என நினைத்து அதை தனது மனைவியிடமும் கூறினான்.
அனைத்து இடங்களிலும் அனந்தாவை பைத்தியம் போல தேடி அலைந்தான். பைத்தியம் பிடித்தவன் போல அனந்தா எங்கு இருப்பார், அனந்தா எங்கு இருப்பார் என மனிதர்களைத் தவிர பட்சிகளையும், விலங்குகளையும் கேட்டபடி திரிந்தார். அவருக்கு பட்ஷி சாஸ்திரம் மற்றும் மிருக சாஸ்திரம் போன்றவை தெரியும் என்பதினால் அவற்றுடன் அவரால் பேச முடிந்தது. வழியில் நீர் குடிக்க அங்கிருந்த இரண்டு குளங்களில் இறங்கியதும்தான் தெரிந்தது அவை பாழடைந்த குளங்கள் என்பது. இப்படியாக அலைந்தவர் வனத்தில் இருந்த மாங்காய் பழங்கள் பழுத்துக் குலுங்கிய ஒரு மரத்திடமும் சென்று உரத்தக் குரலில் ‘அனந்தா எங்கு இருப்பார்’ என்று கேட்டார். யாரால் அவருக்கு பதில் கூற முடியும். ஆனந்தா எங்கு இருப்பர் என்பது அவர்களுக்கு தெரியாதே. கத்திக் கத்தி களைப்பு அடைந்தவர் அப்படியே மயக்கம் அடைந்து விழுந்தார்.
அப்போது ஒரு பிராமணன் அங்கு வந்து அவரை எழுப்பினார். ‘ஓய் பிராமணரே, நீ அனந்தாவைத் தேடுகிறீர் அல்லவா, என் பின்னால் வாரும்’ என்று கூறிவிட்டு அவரை காடுகள் வழியாக ஒரு பெரிய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். வெகு தொலைவில் இருந்த அந்த இடம் மாபெரும் அரண்மனைப் போல இருந்தது. அந்த மாளிகைக்கு உள்ளே அழைத்துச் சென்ற அந்த பிராமணன் அங்கு பல மாணிக்கக் கற்களும் தங்க வெள்ளி நகைகளும் பதிக்கப்பட்ட ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். ‘நான்தான் அனந்தா என்பவர், உன்னை இங்கு அழைத்து வந்தவர்’ என்று கூற சுசீலாவின் கணவரான கௌடின்யா திகைத்து நின்றார். அடுத்தகணம் அனந்தாவின் கால்களில் விழுந்து வணங்கி தான் அறியாமல் செய்து விட்ட பிழையை மன்னிக்கும்படிக் கேட்டு விட்டு அவர் மீது தோத்திரம் பாடித் துதித்தார். அதனால் மனம் மகிழ்ந்த அனந்தரான கிருஷ்ணரும் ‘இனி மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்று இனிய வாழ்க்கையை நீ அடைவாய்’ என அவரை ஆசிர்வதித்தப் பின்னர் நல்வழியில் நடந்து கொண்டு இருக்க புத்திமதியும் கூறி அனுப்பினார்.
கௌடின்யா தான் வழியில் சந்தித்த மாங்காய் மரம் மற்றும் கன்றுக் குட்டியைப் பற்றியும் அவரிடம் கூற கிருஷ்ணர் எனும் அனந்தா கூறினார் ‘கௌடின்யா, அந்த மாங்காய் மரம் பூர்வ ஜென்மத்தில் ஒரு பெரும் பண்டிதராக இருந்தது. ஆனால் தான் கற்றறிந்த எதையும் அது மற்றவர்களுக்குப் போதிக்கவில்லை என்பதினால் இந்த ஜென்மத்தில் பூத்துக் குலுங்கிய பழங்களைக் கொண்டு அது தன் மீது கொண்டு இருந்தாலும் அதனிடம் எவரும் செல்ல முடியாமல் வனத்தில் உள்ளது. அவர் சந்தித்த மாடு முன்ஜென்மத்தில் திமிர் பிடித்து முரட்டுத்தனமாக இருந்து எவருக்கும் தானம் செய்யாதவனாக இருந்ததினால் மாடாகவும் பிறந்துள்ளது என்று கூறிய பின் என்றும் விளைச்சல் இல்லாத நிலத்தை தானம் செய்த ஒருவனே வழியில் அவர் சந்தித்த கன்றுக் குட்டி, மற்றும் அவர் பார்த்த இரண்டு பாழும் குளங்களும் முன் ஜென்மத்தில் அனைத்துப் பொருட்களையும் தாமே அனுபவித்து மற்றவர்களுக்கு எதையுமே தராத இரண்டு சகோதரிகளாக இருந்தவர்கள் என்றும் கூறி விட்டு சுசீலா செய்த உண்மையான விரதத்தினால்தான் பிராமணர் உருவில் வந்து அவரைக் காப்பாற்றினேன் என்றார்.
கௌடன்யா மூலம் மாங்காய் மரம், பாழும் குளங்கள், கன்றுக் குட்டி, மாடு போன்றவர்களுக்கு மோட்சம் கிடைத்தது. இந்தக் கதையை கிருஷ்ணர் பாண்டவர்களுக்குக் கூறிய பின் யதுஷ்டரையும் அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார். பாண்டவர்களும் அவர் கூறியபடி அந்த விரதத்தைக் கடைப் பிடித்து இழந்து நின்ற ராஜ்யத்தை சில காலம் பொறுத்து மீண்டும் திரும்பப் பெற்றனர்.
இதைக் கேட்ட சாயம்தேவாவும் ஸ்வாமிகளின் ஆணையை ஏற்று தனது மூத்த மகனாக நாகதேவாவை அழைத்து அந்த விரதத்தை செய்யுமாறு கூறி அதை செய்தப் பின் ஸ்வாமிகளை பூஜை செய்து வழிபட்டார். இப்படியாகவே உன்னுடைய மூதோர் ஸ்வாமிகளின் சேவையை செய்து வந்தார்கள்” என்று நமத்ஹரகாவிடம் சித்த முனிவர் கூறினார் (இதனுடன் அத்தியாயம்-42 முடிவடைந்தது).