அத்தியாயம் -22
நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘மகானே ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக் கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?’.
அமராபுரத்தில் இருந்து கந்தர்வபுரத்தை நோக்கி ஓடும் நதிக்கரை வழியே ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் சென்றார். அவர் சங்கம் என்ற இடத்தில் சில காலம் தங்கினார். அதற்குள் அவரது புகழ் பல்வேறு இடங்களிலும் பரவியே இருந்தது. எப்படித்தான் பிறர் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்தபடி இருந்தாலும், மகான்களின் பெருமை எவர் மூலமாவது பரவிக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை. அவர்களால் அதை தடுக்க இயலாது. சங்கம் எனும் இடத்தில் தங்கி இருந்த ஸ்வாமிகள் சன்யாச முறைப்படி தினமும் பிட்ஷை எடுத்தே உண்டு வந்தார் .
அவர் சங்கத்தில் தங்கி இருந்தபோது அந்த கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு பிராமணன் வாழ்ந்து இருந்தார். அவரும் பிட்ஷை எடுத்தே தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். தினமும் ஒவ்ஒருவர் இல்லத்திலும் சென்று ‘பவதி பிட்சாம் தேகி’ எனக் குரல் கொடுக்கும் ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி ஒரு நாள் அந்த ஏழை பிராமணன் வீட்டிலும் சென்று அப்படியே குரல் கொடுக்க வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த அந்த பிராமணருடைய மனைவி பிட்ஷைக் கேட்டு வந்திருந்த ஸ்வாமிகளின் கால்களில் விழுந்து நமஸ்கரித்ததும் குனிந்து கொண்டுக் கூறினாள் ‘ஸ்வாமி, என்னை மன்னித்து விட வேண்டும். நாங்களும் பிட்ஷை எடுத்தே உண்பவர்கள். எப்போதும் போல என்னுடைய கணவரும் பிட்சைக்குத்தான் சென்று இருக்கிறார். விரைவில் அவர் வந்து விடுவார். ஆகவே தயவு செய்து தாங்கள் இந்த நிழலில் சற்று இருந்தால் அவர் கொண்டு வரும் பிட்ஷையை சமைத்து உங்களுக்குத் தந்து விடுவேன். தயவு செய்து உள்ளே வந்து அமருங்கள்’ என நா தழுதழுக்கக் கூறினாள் .
அதைக் கேட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி கூறினார் ‘அம்மணி, நீ கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால் எனக்கு அதற்குள் நேரமாகிவிடும். நான் சென்று இன்னும் சில நியமங்களை செய்ய வேண்டும். ஒருவேளை திரும்பி வரும் உனது கணவர் பிட்ஷைக் கிடைக்காமல் வந்து விட்டால் நான் இதுவரை காத்திருந்தது வீணாகி விடும் அல்லவா. அதற்குப் பிறகு நான் சென்று பிட்ஷை எடுக்க முடியாமல் நேரமும் ஆகிவிடும். ஆகவே வேறு எது இருந்தாலும் எனக்கு பிட்ஷையாகக் கொடுத்தால் அதை நான் மனதார ஏற்றுக் கொள்வேன்’ என்றார். ஆனால் அந்தப் பெண்மணியோ தன் வீட்டில் வேறு எதுவுமே இல்லையே என வருத்தத்துடன் கூற ஸ்வாமிகள் கூறினார் ‘அம்மணி நான் வரும்பது உன் வீட்டின் பின்புறம் ஒரு மாட்டைக் கண்டேனே. அதன் பாலைக் கறந்து கொடுத்தால் கூடப் போதுமே’ என்று கூற அந்தப் பெண்மணி கூறினால் ‘ஸ்வாமி, நான் எப்படி சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. அந்த மாடு வண்டியை இழுக்கும் மலட்டு மாடு. நாங்கள் அதை வண்டியை இழுக்கவே பயன்படுத்துகிறோம். இப்போது நாங்கள் எங்கும் செல்லவில்லை என்பதினால் அதைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம்’ என்று கூற ஸ்வாமிகள் அவளை விடவில்லை.
‘அம்மணி எனக்கென்னவோ அது பால் தரும் மாடாகவே தெரிகிறது. தயவு செய்து மீண்டும் போய் அதில் இருந்து பால் வருகிறதா என்று கறந்து பாரேன்’ என்று கூற ஸ்வாமிகளின் சொல்லை மீற முடியாமல் போனாள் அந்தப் பெண்மணி. ஒரு பிராமணர் பிட்ஷைக் கேட்டு வந்தால் அவரை அவமதிக்கலாகாது என்பது சாஸ்திரம் என்பதினால் வேறு வழி இன்றி பாத்திரம் ஒன்றை எடுத்துப் போய் ஸ்வாமிகள் எதிரிலேயே அந்த மலட்டு மாட்டிலிருந்து பால் கறந்து பார்த்தாள். அதன் காம்புகளைத் தொட்டதும் அதில் இருந்து பால் பீய்ச்சி அடித்தபடி பாத்திரத்தில் வந்து விழுந்தது. அப்படியே அசந்து போனவள் இனி தாமதிக்கலாகாது என அவசரம் அவசரமாக அதை காய்ச்சி ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கொடுக்க அதைக் குடித்த அவரும் போகும் முன் அவளை மனதார ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். அதற்குள் பிட்ஷை எடுத்துவிட்டு வீடு திரும்பிய தன் கணவரிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவரால் அதை நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களாக மலடாக இருந்த மாடு பால் கொடுக்கிறதா? நம்பாமல் அவரும் போய் பாலைக் கறந்து பார்க்க பால் மாட்டின் காம்புகளில் இருந்து பீச்சி அடித்தபடி வந்தது.
அதைக் கண்ட அந்த அந்த பிராமணனும் தன் வீட்டுக்கு பிட்ஷை எடுத்து வந்திருந்தது மாபெரும் மகானாகவே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு குளித்துவிட்டு அவசரம் அவசரமாக தனது மனைவியை அழைத்துக் கொண்டு கருநெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டிருந்த ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை வணங்கி பூஜிக்க அவரும் அவர் அவர்களது ஏழ்மை அன்றோடு ஒழிந்தது என்றும், இனி நல்ல வாழ்வைப் பெற்று, குழந்தை பாக்கியமும் பெற்று வளமான வாழ்வை பெற்று வாழ்வார்கள் என்று அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார்” (இதனுடன் அத்தியாயம் -22 முடிவடைந்தது) .