அத்தியாயம் -31

”அவர் கூறிக்கொண்டு இருந்ததைக் கேட்ட சாவித்திரி அவரிடம் கேட்டாள் ‘ஸ்வாமி அப்படியானால் நான் எப்படித்தான் என்னை பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை எனக்கு எடுத்து உரைப்பீர்களா?’ அதைக் கேட்ட அந்த சன்யாசி  தோற்றத்தில் இருந்தவர் கூறினார்  ‘பெண்ணே ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு பல  விதிமுறைகள் உள்ளன.  அவை அனைத்தும் ஸ்கந்த புராணத்தில் காசி காண்டம் எனும் அத்தியாயத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஒரு முறை மேரு மற்றும் விந்திய மலைகளுக்கு  இடையே நாரதர் மூட்டிய கலகத்தினால் இரண்டுக்கும் விரோதம் ஏற்பட்டது. மேரு மலையை விட நீ குட்டையாக இருக்கிறாயே என வித்திய மலையிடம் நாரதர் கூறவும், அதைக் கேட்ட விந்திய மலை  மேரு மலையை விட தான் உயரமாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வளரத் துவங்கியது. அது வளரத் துவங்கியதினால் சந்திர, சூரியர்களின் ஒளிக் கிரணங்கள் பூமியில் விழுவதில் தடை ஏற்பட்டது. உலகம் இருண்டு விடுமோ எனும் அளவுக்கு அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்ல அதனால் பயந்து போன தேவர்கள் பிரும்மாவிடம் சென்று முறையிட்டார்கள். பிரும்மாவும் தன்னால் விந்திய மலைக்கு அறிவுரைக் கூற முடியாது என்றும் அதற்கு தகுதியானவர் அப்போது காசியில் தங்கி இருந்த அகஸ்திய முனிவர் மட்டுமே என்றும், ஆகவே அவரிடம் சென்று அவர் உதவியை நாடுமாறும் கூறினார்.

அதைக் கேட்ட  அனைத்து தேவர்களும் ஒன்று கூடி தேவேந்திரனின் தலைமையில் அகத்திய முனிவரிடம்  சென்றனர். அந்த கூட்டத்தில் பிரஹஸ்பதியும் இருந்தார். காசியில் தங்கி இருந்த அகஸ்திய முனிவருடன் அப்போது அவருடைய மனைவியான லோபாமுத்ரா தேவியும் உடனிருந்தாள்.  வந்தவர்களை வரவேற்று நலம் விசாரித்தார் அகஸ்திய முனிவர். அப்போது அகஸ்திய முனிவரை மகிழ்சியில் ஆற்றும் விதமாக முதலில் அவருடைய மனைவியான லோபமுத்ராவின்  பெருமையை  கூறத் துவங்கிய பிரஹஸ்பதி  பெண்களின் வாழ்கை நெறியைப் பற்றி நீண்ட பிரசங்கமே செய்து விட்டார். பிரகஸ்பதி கூறினார் ‘பதி விரதைகளுக்கு அடையாளமாக சாவித்ரி, அருந்ததி பார்வதி, மேனகா போன்றவர்கள்  இருந்தனர். அது போலவேதான் உங்களுடைய மனைவி லோபாமுத்ரா தேவியும் பதிவிரதை என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாக  விளங்குகிறார்.  ஒரு கணவருக்கு பணிவிடை செய்வதில் அவளுக்கு நிகர் அவள்தான் என்ற அளவில் உள்ளாள்’. இப்படியாக வந்த காரணத்தை நேரடியாகக் கூறாமல் பெண்ணைப் பற்றிக் கூறியதும் லோபாமுத்ரா ஆர்வத்தினால் பதிவிரதை மற்றும் பெண்கள் வாழ வேண்டிய நிலைகளைக் குறித்து மேலும் கூறுமாறு  பிரஹஸ்பதியிடம் கேட்டதும் அவர் தான் கூறிக் கொண்டு இருந்ததை தொடரலானார்.

பிரஹஸ்பதி  கூறினார் ‘ஒரு பதி விரதைக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்ன என்ன என்றால் அவள் தனது கணவன் உண்ணும் முன்னர் உண்ணலாகாது. கணவர் அழைக்காமலேயே கணவரை தேடி வீட்டுக்கு வந்து விட்ட விருந்தாளிகளை மனம் கோணாமல் வரவேற்பது, கடவுளைவிட மேலானவர் தனது கணவன் என்ற மன நிலையில் வாழ்வது,  கணவன் எதைக் கூறினாலும் மறுக்காமல் அதை கட்டளைப் போல ஏற்றுக் கொள்வது, கணவருக்கு தேவையான அனைத்து வேலைகளையும் தாமே செய்வது, எந்த நிலையிலும் கணவனின் மனம் வருத்தம் அடையாமல் நடப்பது, கணவனைக் குறைக்  கூறாமல் இருப்பது, மாத விலக்கின்  எவருடனும் பேசாமல் இருப்பது,  தினமும் காலையில் எழுந்து  குளித்தப் பின் கணவனுக்கு நமஸ்காரம் செய்த பின்னரே மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் . இப்படி எல்லாம்  எவள் ஒருவள் வாழ்ந்து கொண்டு இருப்பாளோ அவளே பதிவிரதை என்று கருதப்படுவாள்.

தனது கணவர் ஏழையே ஆனாலும், நோயாளியாகவே இருந்தாலும், முடமாகவே இருந்தாழ்க் கூட அவரை  மனைவி  உதாசீனப்படுத்துக் கூடாது. கணவன் என்பவர் தன்னுடைய தெய்வமே என்றே நினைக்க வேண்டும். ஏன்  எனில் கணவர் தெய்வத்துக்கு சமமானவர். குடும்பத்தில் உள்ள பெண்கள் தமது மாமியார், மாமனார், கணவரின் உடன்பிறந்தோர் என வீட்டில் உள்ளவர்களை அவமானப்படுத்தக் கூடாது. அவர்களது மனதையும் புண்படுத்தலாகாது. கணவனுக்கு உத்தமமாக பணிவிடை செய்யும் மனைவி  தத்தாத்திரேயரின் பரிபூரண அருளைப் பெறுவாள்.

கணவனை ஏசும் பெண்கள் நாயாகவோ இல்லை நரியாகவோ பிறப்பு எடுப்பாள். முக்கியமாக ஒரு பதிவிரதை கவனிக்க வேண்டியது என்ன என்றால் வீட்டில் உரத்த குரலில் பேசக்கூடாது.  அட்டகாசமாக சிரிக்கக் கூடாது. கணவரையும் கூட காமத்துடன் நோக்கக் கூடாது. அவள் கணவர் உயிரோடு உள்ளவரைதான் அவளுக்கு பெருமையும் மகிமையும் இருக்கும். கணவன் இழந்த  பெண் வாசனை அற்ற முட்களைக் கொண்ட காட்டுப் பூ போன்றவளாகி விடுவாள்

எவள் ஒருவள் கணவனுடன் உடன்கட்டை ஏறுவாளோ  அவள் பெரும் பாக்கியம் பெற்றவள் ஆவாள். அப்படி செய்வதின் மூலம் அவளது நாற்பத்தி இரண்டு சந்ததியினரை மோத்ஷத்துக்கு  அனுப்புவாள். அது போல எந்த ஒரு பெண் இறந்து போன தன் கணவனுடன் உடன்கட்டை ஏறாமல் இருப்பாளோ அவளுடைய நாற்பத்தி இரண்டு வம்சத்தினர் நரகத்தை அடைவார்கள்’.

அகஸ்திய முனிவரின் மனைவியான லோபமுத்ராவிடம் இப்படியாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் குறித்து   பிரஹஸ்பதி கூறியதையே இறந்து போன கணவரின் உடலுடன் அமர்ந்து கொண்டு அழுது புலம்பிய சாவித்ரிக்கும் அந்த சன்யாசியானவர்  கூறினார்” (இத்துடன் அத்தியாயம் -31 முடிவடைந்தது).
……….தொடரும்