அத்தியாயம் – 17
ஸ்வாமிகள் தங்கி இருந்த இடத்தின் அருகில் இருந்தது ஒரு சிற்றூர். அதன் பெயர் குருவிபுரம் என்பது. வேத சாஸ்திரங்களில் நன்கு பாண்டித்தியம் பெற்ற கவிர் என்ற பண்டிதர் ஒருவர் அங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு எட்டு வயதான மகன் இருந்தான். வயதுக்கு வந்தவனுக்கு உபநயனம் செய்தார்கள். ஆனால் அவன் ஆரம்பம் முதலிலேயே படிப்பு அறிவற்றவனாக இருந்தான். இப்படி இருந்தவனுக்கு எட்டு வயதான பொழுது அவனது பெற்றோர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். ஆகவே அவன் உண்ணக் கூட பணம் இன்றி கஷ்டப்பட்டான். பல பிராமணர்களை அணுகி தம்மை சடங்குகளுக்கு ஒரு பண்டிதனாக அழைத்துச் செல்லுமாறு கேட்டான். ஆனால் அவர்களோ அவனை எள்ளி நகையாடி, அவனுக்கு பாண்டித்திய பாக்கியம் அடுத்த ஜென்மத்தில்தான் கிடைக்கும் என்று துரத்தி அடித்தார்கள். பிட்ஷை எடுத்தாலும் அவன் அறிவற்றவன் என்பதினால் அவனுக்கு போதிய அளவிலான பிட்ஷை கிடைக்கவில்லை. ஆகவே சரியான உணவின்றி பசியால் வாடியவன் ஒருநாள் அவன் இருந்த ஊரின் அருகில் இருந்த பிலாவடிக்குச் சென்று அங்கிருந்த புவனேஸ்வரி ஆலயத்தில் சென்று அந்த அன்னையின் முன் அழுதான். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அடுத்த ஜென்மத்திலாவது தனக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். மந்திரங்களை ஓத முடியாமல் உள்ள தனது நாக்கையே அறுத்துக் கொள்ள முயன்றவனுக்கு முன் பிரசன்னமான தேவி அவனை நதியின் அருகில் இருந்த கருநெல்லி மரத்தடியில் அமர்ந்துள்ள மகானை சென்று சந்திக்குமாறு கூறி விட்டு மறைந்து போனாள்.
அதைக் கேட்டவன் தன்னை மறந்து கருநெல்லி மரத்தை நோக்கி ஓடினான். அங்கு அதனடியில் அமர்ந்திருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்து அழுது தன் நிலையைக் கூறி அழுதான். அவனைக் கண்டு மனமிரங்கிய ஸ்வாமிகள் அவன் தலை மீது கையை வைத்து ஆசி கூற அடுத்த கணமே அவனுக்கு அனைத்து மந்திரங்களும், வேதங்களும், வித்தைகளும் மனப்பாடம் செய்தது போல அவன் மனதில் சென்று பதிந்தன. அவன் பெரும் பெருமைப் பெற்று மகா பண்டிதனாயினான். ஆனால் அவனுக்கு எப்படி அப்படி ஒரு சக்தி வந்து பாண்டித்தியம் பெற்றான் என்பதை அறிந்து கொள்ள முடியாத மக்கள் வாயடைத்து நின்றனர். இது ஒரு குருவின் கிருபை என்று கூறுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்று சித்த முனிவர் கேட்டார். (இத்துடன் அத்தியாயம்- 17 முடிவடைந்தது ) .