அத்தியாயம் – 18

குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி, சிவா, பத்திரா, கும்பிலினி  மற்றும் போகவதி எனும் ஐந்து நதிகள் ஒன்றாக சங்கமிக்கின்றன.   ஆகவேதான் இந்த இடத்தை காசி மற்றும் பிரயாகைக்கு நிகரானதாகக் கூறுவார்கள்.   அங்கு அமரேஷ்வர் எனும் ஆலயம் மற்றும் அதன் அருகில் கருநெல்லி மரமும் உள்ளது.

இங்கு  அம்ரேஷ்வரர் என்ற பெயரில் ஆலயமும் உள்ளது. அதை சுற்றி எட்டு புண்ணிய தீர்த்தங்கள் பாபவினாசி, கன்யாதீர்த்தம், பிரயாக தீர்த்தம், சித்த வரத், சக்தி தீர்த்தம், கோடி தீர்த்தம் மற்றும் சுக்ல தீர்த்தம் என்ற பெயரில் உள்ளன.  மேலும் இந்த இடங்களில்தான் அறுபத்தி நான்கு யோகினிகள் வசிப்பதாக நம்பப்படுகின்றது.

இங்குள்ள நதிக் கரையில் உள்ள  கருநெல்லி மரத்தின் அடியில்தான் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி பன்னிரண்டு வருடங்கள் அமர்ந்து தவம் செய்தார்.  ஆகவே அந்த மரம் புனிதமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அந்த தீர்த்தங்களில் தினமும் நீராடிய பின்னர் தமது நித்ய கடமைகளை முடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று மதிய பிட்ஷை எடுத்து உண்பார்.

அமர்பூர் என அழைக்கப்பட்ட அந்த ஊரில் ஏழை  பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தார். அவரும் மகா பாண்டித்தியம் பெற்றவர். ஆனால்  பரம ஏழை என்பதினால் பிட்சை எடுத்தே அதை உண்டு தன் மனைவியுடன் வாழ்ந்து வர வேண்டி இருந்தது. ஏன் எனில் அந்த காலத்தில் பிரோகிதர்களுக்கு அதிக வருமானம் கிடையாது.  அந்த அந்தணர் வீட்டின் பின்புறம்  சில செடி கொடிகள்  வளர்ந்து  இருந்தன. கீரையைப் போன்ற அவற்றை உண்ணலாம். ஆகவே பிட்ஷைக்  கிடைக்காத நாட்களில் வேறு வழி கிடையாது என்பதினால் அவர்கள் அந்த செடிகளின் இலைகளைப் பறித்து அதை வேக வைத்து உண்பார்கள்.  இப்படியாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள்  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர் வீடிற்கு பிட்ஷை   எடுக்க வந்தார். அன்று அந்த பிராமணரிடம் பிட்ஷைக் கொடுக்க எதுவுமே இல்லை என்பதினால் வேறு வழி இன்றி அந்த செடிகளில் இருந்த இலைகளை பறித்து வந்து அதையே பிட்ஷையாகப் போட்டு தலையை குனிந்து கொண்டார்கள்.  பிட்ஷை எடுக்க வந்தவர்களை  வெறும் கையுடன் திருப்பி அனுப்புவது   பாபச் செயல் என்ற நம்பிக்கை உண்டு.

தலை குனிந்து நின்று கொண்டு ஸ்வாமிகளிடம் அதைக் கொடுத்து விட்டு தங்களால் அதற்கு மேல் எதையும் தர முடியாமல் இருப்பதற்கு மன்னிப்பைக் கேட்டார்கள். அதைக் கேட்ட ஸ்வாமிகள்  ‘இந்த செடி எங்கே உள்ளது, காட்டுங்கள்’ என்று  கேட்டப்   பின் அவர்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்த அந்த செடி கொடியை சென்று பார்த்தார். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தடாலென அந்த செடி கொடியை பிடுங்கி அங்கு ஓடிக் கொண்டு இருந்த சாக்கடையில் எறிந்து விட்டார். அந்த பிராமணத் தம்பதியினர் திடுக்கிட்டு நின்றார்கள். ஐயோ, நமக்கு நாளைப் பொழுதுக்கு வைத்திருந்த செடியையும் அல்லவா பிடுங்கி சாக்கடையில் எறிந்து விட்டுப் போய் விட்டார் என்று மனம் வருந்தினார்கள். ஆனாலும் வீட்டுக்கு வந்தவரை அவமதிக்கலாகாது என்பதினால் அவர் சென்ற பிறகு ‘சரி அந்த இடத்தைக் கொத்தி விட்டு வேறு புதிய செடியை எங்கிருந்தாவது கொண்டு வைக்கலாம்’ எனக் கருதி அங்கு பூமியை தோண்டிய போது அவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் ஒரு மண் பாண்டத்தில் தங்கக் காசுகள் நிரம்பி இருந்ததைக் கண்டார்கள். அதை எடுத்துக் கொண்டு ஓடோடிச் சென்று கருநெல்லி மரத்தடியில் அமர்ந்திருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை  வணங்கி ஆராதித்தார்கள். அவரது கருணையை எண்ணி எண்ணி மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களிடம் ஸ்வாமிகள் கூறினார் ‘இதை இப்போது யாரிடமும் கூறாதீர்கள். இல்லை என்றால் அனைத்து செல்வமும் அழிந்து விடும். நீங்கள் நல்ல மகவு பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வருவீர்கள்’ என்று ஆசி கூறி அனுப்பினார். அன்றுடன் அவர்களது வறுமை விலகி நல்ல வாழ்வு கிடைத்தது (இத்துடன் அத்தியாயம் -18 முடிவடைந்தது).

………..தொடரும்