.……….அத்தியாயம் – 5(i)

கலி துவங்கி விட்ட  இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை  காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார்.

சுமதியோ தன்னை மறந்து உள்ளே ஓடிச் சென்று தன் கணவர் செய்த சிரார்த்த காரியம் முடியும் வரை அமைதியுடன் இருந்தப் பின் அவரிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.  நல்ல பாண்டித்தியம் பெற்று இருந்த அப்பலராஜுவுக்கு புரிந்தது அப்படி பிட்ஷை எடுத்து வந்திருந்தவர் தத்தாத்திரேயராகவே  இருந்திருக்க வேண்டும்.  அவர்தான் தன்  பக்தர்களை சோதிக்க இப்படி எல்லாம் தன்னை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு வேஷங்களில் வந்து நாடகங்களை நடத்துவார் என்று கேள்விப்பட்டு இருந்தார் (இதனால்தானோ என்னவோ தத்தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்படும் சீரடி சாயிபாபாவும் மாறு வேடங்களில் பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சோதிக்க பிட்ஷை எடுப்பதுண்டு என்று அவருடைய வாழ்கை வரலாற்றுக் கதைகளில் சில நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன). மேலும் எவர் ஒருவர் அகால வேளைகளில் பிட்ஷை எடுக்க வருவார்களோ அவர்கள் விஷ்ணு பகவானின் அம்சமாக இருப்பார்கள்  என்று பண்டிதர்கள் கூறுவார்கள்.

பித்ரு காரியங்கள் நடைபெறும்போது நல்ல முறையில் பித்ரு காரியங்கள் நடைபெறும் இடங்களில் பித்ருக்களை சாந்தப்படுத்த, விஷ்ணு பகவான் ஏதேனும் ஒரு ரூபத்தில் சென்று அங்கு தரப்படும் பிட்ஷைகளை  ஏற்பார் என்று சாஸ்திர நம்பிக்கைகள் உண்டு (இங்கு பிட்ஷை என்பது பிராமண போஜனத்தைக் குறிக்கும்). தத்தாத்திரேயரோ விஷ்ணு பகவானையும் உள்ளடக்கியவர். ஆகவே காட்சி தந்தப் பின் உடனே மறைந்து விட்ட நிகழ்வும் காட்டுவது என்ன என்றால் திதி தரும் வேளையில் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயராகவே  இருந்திருக்க வேண்டும் என்று நம்பினார்.  அப்படி நடந்த நிகழ்ச்சி மூலம் தான் செய்த பித்ரு காரியம் திருப்திகரமாக நடந்துள்ளது என்றும் அதற்குரிய புண்ணியம் நிச்சயம் தமக்கு நல்ல பலன்களைத் தரும்  என்று நம்பினார். அது மட்டும் அல்ல உண்மையிலேயே வந்திருந்தது தத்தாத்திரேயரே என்றால், தமக்கு விரைவில் தத்தாத்திரேய அவதாரமாக இருக்கும் மகன் பிறக்க சாத்தியம் உள்ளது. அப்படி நடந்தால் வந்திருந்தது நிச்சயமாக தத்தாத்திரேயரே என்பதும் தெரிந்துவிடும் என மகிழ்ந்தார்கள். காலம் ஓடியது. சுமதி மீண்டும் கர்பவதி ஆகி ஒரு அழகிய ஆண்  மகவைப் பெற்றெடுத்தாள் .

பிறந்த குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ ரேகைகள் இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித் தவறி யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக இருப்பார்கள். ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக் குறிக்கும் மீன் போன்ற உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது.  அவை இரண்டும் பெரிய மகான்களாக உருவெடுக்க உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு  மட்டுமே இருக்கும். மேலும் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த பண்டிதர்கள் அந்த குழந்தை நிச்சயமாக தெய்வாம்சம் பொருந்தியது என்றும், பிற்காலத்தில் பெரும் ஞானியாக உருவெடுப்பார் என்றும், பல சீடர்களைக் கொண்டு அவர்களுக்கு தர்ம நெறிகளை போதிக்கும் ஆசானாக இருந்து பெருமை மிக்கவராகவும் விளங்குவார் என்று கூறினார்கள். அதைக் கேட்ட பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இப்படியாக நல்ல அம்சங்களோடு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீபாதா என்று பெயரிட்டார்கள். ஒரு பிராமண வம்சத்தில் நடைபெறும் அனைத்து சடங்குகளையும் பிசகாமல் செய்தார்கள்.  முதன் முதலில் குழந்தைக்கு உணவு தரும் வைபவமான அன்னப்பிரசனம்  முதல் குலதெய்வக் காணிக்கை, பூணல் வைபவம், பாடசாலையில் புகுதல், வேதங்களைக் கற்றறிதல் என அனைத்தையும் அந்த குழந்தைக்கு செய்ய அதுவும் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக நன்கே வளரத் துவங்கியது. பாடங்களை கிரஹிப்பதிலும் படிப்பதிலும் அதன் ஆர்வம் மிகப் பெரிய அளவில் இருந்ததையும்,  எளிதில் அனைத்தையும் கற்றதையும் கண்டு அதற்கு பாடம் பயில்வித்த ஆசான்களே பிரமித்தார்கள். குழந்தை வளர்ந்து சிறுவனாகி இளைஞ்சனாகி  திருமண வயதையும் எட்டியது.  அதனால் அவருடைய பெற்றோர்கள் அந்த இளைஞ்ஜனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்கத் துவங்கியபோது  அந்த சிறுவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒருநாள்  தனது பெற்றோர்களிடம் அந்த இளைஞ்சர் கூறினார் ”தாய், தந்தையே, எனக்கு திருமணம் செய்ய முயலாதீர்கள். நான் சில குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இந்த பூமியிலே பிறந்து இருக்கிறேன். என்னுடைய இந்த ஜென்மத்தில் நான் அனைத்து பெண் இனத்தையும் எனது தாய் குலமாகவே பாவிப்பேன் என்பது விதி. நான் பலருக்கும் தர்ம நெறியை போதிக்கும் ஆசானாக இருந்து, ஞானமும் தந்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்.  நானே தபம் செய்து இறுதியில் முக்தி அடைய நினைக்கிறேன். நான் பரப்பிரும்மனாக இருக்கவே பிறந்தவன். ஆகவே என்னை திருமண பந்தத்தில் மாட்டி வைக்க எண்ணாதீர்கள் ”  என்று கூறினார்.

………..தொடரும்