

அத்தியாயம் – 12
”நரஹரி கூறினார், அம்மா, நாம் வாழும் இந்த மனித வாழ்கை நீர் குமுழி போன்றது. பளபளக்கும் அது திடீர் என வெடித்து விடும். நம்முடைய வாழ்க்கை நீர் குமுழி போன்றதே. ஆகவே பிறந்தவன் இறக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத நியதி. அதனால்தான் ஒவ்வொருவரும் தாம் மரணம் அடையும்வரை நல்ல காரியங்களையே முடிந்தவரை செய்து கொண்டு இருக்க வேண்டும். நாம் பூர்வஜென்ம கர்மாக்களின் விளைவாக அல்லவா மீண்டும் இந்த பூமியிலே பிறந்துள்ளோம். நம்மை படைத்தவன் நமக்கு விதித்துள்ள காலக் கேடு முடிந்ததும் சற்றும் தாமதிக்காமல் நம்மை இழுத்துச் செல்ல கால தேவனின் கணங்கள் நம்மை சுற்றி வந்தவண்ணமே உள்ளது. ஒவ்வொருவரின் மனைவி, மக்கள், சொந்தபந்ததினர் என அனைவருமே நிலையற்ற வாழ்வில் வாழ்ந்து கொண்டு உள்ளவர்கள்தான். நம்மை சுற்றி உள்ள எதுவுமே நிலையானது அல்ல. நாம் தெய்வ விளையாட்டின் பொம்மைகள். காலம் வெகு வேகமாக ஓடி விடும் என்பதினால் நாம் மனித மேம்பாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே போகலாகாது. ஆகவே ஒவ்வொருவர் வீட்டிலும் யாரேனும் நல்ல காரியத்தை செய்ய முயலும்போது அதை தடுக்கலாகாது. அதனால்தான் நான் இப்போது நல்லவற்றை செய்ய எண்ணி இங்கிருந்து செல்ல உள்ள என்னை நீ என்னை தடுக்கலாமா? ‘
இப்படியாக நரஹரி கேட்டதும் அவருடைய தாயார் கூறினாள் ‘மகனே நீ கூறுவது அனைத்தும் உண்மையே. ஆனால் இந்தப் பேதையின் மனம் அதை ஏற்க முடியாமல் தவிப்பது விந்தையாக இருக்கலாம். என்ன செய்வது? சம்சார பந்தத்தில் உழலும் என்னால் வேறு எப்படி யோசிக்க முடியும். ஆனால் மகனே நீ கூறினாயே, எனக்கு இன்னும் நான்கு மகன்கள் பிறப்பார்கள் என்று. அது உண்மை என்றால் என்னக்கு ஒரு மகன் பிறந்து அவன் வளரும் வரையிலாவது எங்களுடன் இருந்து விட்டுப் போக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்’. அப்படி நரஹரியின் தாயார் வேண்டுகோள் விட்டதை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் மேலும் கூறினார் ‘அம்மா, கவலைப்படாதே உன் வேண்டுகோளை நான் நிச்சயம் உதாசீனப்படுத்த மாட்டேன் என்பது மட்டும் அல்ல உனக்கு நான் ஏற்கனவே கூறியபடி நான்கு மகன்கள் மட்டும் அல்ல, அவர்களோடு இன்னும் ஒரு பெண்ணும் சேர்த்தே உங்களுக்குப் பிறந்து வாழ்க்கையில் ஆனந்தத்தைத் தருவார்கள் ‘ என்று கூறினார்.
இன்னும் சில காலம் கழிந்தது. நரஹரியின் பெற்றோர்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் ஒரே பிரசவத்தில் பிறந்தார்கள். அவர்கள் இரண்டு வயது சிறுவர்கள் ஆனதும் நரஹரி தனது பெற்றோர்களிடம் சென்று தான் மறுநாள் காலை தீர்த்த யாத்திரைக்கு கிளம்புவதாக கூறினார். அதைக் கேட்ட பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனாலும் வேறு வழி இல்லை. மறுநாள் காலை அசாதரணமான அமைதி அங்கு நிலவியது. அக்கம் பக்கங்களில் இருந்தும் மக்கள் வந்து கூடி இருந்தார்கள். அவர்கள் இருந்த இடம் சிறு கிராமப் பகுதி என்பதினால் அதிக மக்களின் கூட்டம் இருக்கவில்லை. அவர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்ப சிலர் அவருடன் கிராம எல்லைவரை தொடர்ந்து சென்றார்கள். அதில் அவருடைய பெற்றோர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் கிராம எல்லையை அடைந்ததும் அவர்களை திரும்பிப் பார்த்தார் நரஹரி. என்ன அதிசயம்!! அங்கு நரஹரி காணவில்லை. அதற்குப் பதிலாக ஸ்ரீ பாத வல்லபா காட்சி அளித்தார்.
அவர்கள் அனைவர் முன்னும் நின்றிருந்த ஸ்ரீ பாத வல்லபா தனது பெற்றோர்களைப் பார்த்துக் கூறினார் ‘ பெற்றோர்களே, இப்போது தெரிகிறதா நான் யார் என்று? நீங்கள் இனி லஷ்மி கடாட்ஷத்தோடு மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். வாழ்நாளின் இறுதியில் சொர்கத்தை அடைவீர்கள். நீங்கள் எப்போது என்னைப் பார்க்க வேண்டும் என இதயபூர்வமாக நினைப்பீர்களோ அப்போது நான் நிச்சயமாக இங்கு வருவேன். நீங்கள் அனைவரும் அமைதியோடு வாழ்வீர்கள். நான் மீண்டும் முப்பது வருடங்களுக்குப் பிறகு இங்கு மீண்டும் வருவேன். வந்து உங்களை சந்திப்பேன். நான் இப்போது என் குருவை சந்திக்க பத்ரிநாராயணனுக்கு செல்ல வேண்டும்’ என்று கூற அனைவரும், அவருடைய பெற்றோர்களும் சேர்ந்தே அவரை கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
நரஹரி அங்கிருந்துக் கிளம்பி பதினாராயணத்தை அடைந்தார். வழியில் காசிக்குச் சென்று அங்கு கங்கையில் குளித்தப் பின் காசி விஸ்வநாதரையும் தரிசனம் செய்தபின் அங்கு சில காலம் தங்கி இருந்து யோகக் கலைகளை செய்தபடி இருந்தார். அவரது அற்புதமான ஆத்ம யோக பயிற்சியைக் கண்ட தபஸ்விகள் வியந்து நின்றார்கள். அவருக்கு அங்கு பல சீடர்கள் உருவானார்கள். அப்போது அந்த ஊரில் தபஸ்வி கிருஷ்ண சரஸ்வதி என்றொரு மகானும் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் பிரும்மன் எனும் நிலையை அடைந்தவர். அவரிடம் சென்ற சன்யாசிகள் நரஹரியைக் குறித்துக் கூற அவரும் நரஹரியை கவனிக்கலானார்.
அவரைக் கண்டதும் தபஸ்வி கிருஷ்ண சரஸ்வதி மற்ற சன்யாசிகளிடம் கூறினார் ‘நீங்கள் நினைப்பதைப் போல சாதாரண சந்நியாசி அல்ல அவர். அவர் தெய்வப் பிறவி ஆகும். அவர் சில காரணங்களினால் இந்த பூமியில் அவதரித்து இருக்கிறார். அவரிடம் நீங்கள் அனைவரும் சென்று சிஷ்யர்கள் ஆகி விடுங்கள்’. இப்படியாகக் கூறியவர் நரஹரியையும் சந்தித்து ‘அப்பனே, இந்த கலியுகத்தில் நாம் மனித மேம்பாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய சன்யாச ஆஸ்ரம வாழ்வை ஏற்றால் மட்டும் போதாது. சாஸ்திர முறைப்படி சன்யாச தீக்ஷை எடுத்துக் கொண்ட பின்னரே முழுமையான சன்யாசியாகி அந்த காரியத்தை செய்ய வேண்டும் என்பது நியதி. ஆகவே நீங்கள் சன்யாச தீட்ஷையை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட நரஹரியும் அவரிடம் தனக்கு சன்யாச தீட்ஷை தர இயலுமா என்று கேட்க தபஸ்வி கிருஷ்ண சரஸ்வதியும் அதற்கு உடன்பட்டு நரஹரிக்கு முறையான தீட்ஷை தந்து அவரை முறையான சன்யாசி ஆக்கினார்”.
சித்த முனிவர் கூறிய அந்தக் கதையைக் கேட்ட நமத்ஹரா அவரிடம் பணிவோடு கேட்டார் ‘மகாத்மா, எனக்கு இன்னும் சற்று தெளிவு பெரும் வகையில் என்னுடைய சில சந்தேகங்களை விளக்க வேண்டும்’ என்று கூறிய பின் அவரிடம் கேட்டார் ‘நரஹரி அவர்களை தத்தாத்திரேயரின் அவதாரம் என்றபோது ஒரு தபஸ்வியிடம் அவர் ஏன் தீட்ஷை பெற வேண்டும்? அது மட்டும் அல்லாது குருவுக்கும் குருவான அவர் ஏன் இன்னொருவரை குருவாக ஏற்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. அதையும் விளக்குவீர்களா?’
அதைக் கேட்ட சித்த முனிவர் கூறினார் ”மகனே, நீ கேட்கும் நியாயமான கேள்விகளப் பார்க்கும்போது நீயும் உண்மைகளை உணர்ந்து கொள்ளும் மனப் பக்குவத்தில் இருக்கிறாய் என்பது புரிகிறது. இந்த பூமியிலே மனித உருவை எடுத்து விட்டால் அந்த தெய்வப் பிறவிகள் கூட அந்த உடலுக்கு மரியாதை தரும் வகையில் அதற்கு ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. இராமாயண காலத்தில் வசிஷ்டரே மனித குலத்தில் அவதரித்த மகாவிஷ்ணுவின் அவதார புருஷரான ஸ்ரீ ராமபிரானின் குருவாகவில்லையா? பகவான் கிருஷ்ணர் சாந்திபதியை குருவாக ஏற்கவில்லையா? இந்த நிலைப்பாட்டின்படித்தான் தத்தாத்திரேயரின் அவதாரமான நரஹரியும் சன்யாச தீட்ஷையை தபஸ்வி கிருஷ்ண சரஸ்வதியிடம் இருந்து பெற வேண்டி இருந்தது. அந்த தீட்ஷை மூலமே நரஹரியும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி என்ற நாமகரணத்தையும் பெற்றார். அந்த நிலை ‘பூமியிலே தெய்வங்களை மனித உருவிலே நேரடியாக தரிசிக்கும் நிலையில் உள்ள மானிடப் பிறவிகளுக்கு அடிப்படை நியமங்களை எடுத்துரைக்கும் போதனை ஆகும்’.
இப்படியாக தீட்ஷை பெற்றுக் கொண்ட ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி குரு பரம்பரை என்ன என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினார். அவர் கொண்டிருந்தது அத்வைத்த வேதாந்தத்தின் பரம்பரை எனவும் அதில் ஆதி குருவாக முதலில் திகழ்ந்தவர் ஆதி சங்கரரே என்றும் விளக்கினார். ஆதிகுருவாக சிவபெருமான் இருக்க அவரைத் தொடர்ந்து வந்தவர் விஷ்ணு, அவரைத் தொடர்ந்தவர் பிரும்மா என ஆகி, அதன் பின் தொடர்ந்து வந்த பரம்பரையில் சுக மகரிஷி, கௌதபாத முனிவர், கோவிந்த பகவான், சங்கராச்சாரியா, விஸ்வரூபவார்யா, தியானபோத்கிரியா, கிரிராஜ், ஈஸ்வர நரசிம்ம தீர்த், விட்யாதீர்த்தா என ஆகி ஸ்வாமி கிருஷ்ண சரஸ்வதி மூலம் பரம்பரை தொடர்ந்தது.
ஸ்வாமி கிருஷ்ண சரஸ்வதியிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்றுக் கொண்டு நரஹரி எனும் பெயரை மாற்றி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி தீர்த்தா எனும் நாமகரணத்தை ஏற்றுக் கொண்டு சில காலம் பிரயாக்கில் தங்கி இருந்தவர் அங்கும் பல சீடர்களை பெற்றுக் கொண்டார். அதன் பின் பால ஸரஸ்வதி, கிருஷ்ண ஸரஸ்வதி, உபேந்திரா ஸரஸ்வதி , மாதவ ஸரஸ்வதி, சதானந்த ஸரஸ்வதி, ஞான ஜோதி ஸரஸ்வதி , மற்றும் சித்த முனீஸ்வர ஸரஸ்வதி என்ற ஏழு சிஷ்யர்களையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான கராஞ்சாவுக்கு சென்றதும் அங்கு அவர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அங்கிருந்த மக்கள் அவரை வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்து அவரை வணங்கினார்கள். ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி தன்னுடைய பெற்றோர்களுக்கும் ஆசிகளை தந்தார்”. இப்படியாக அந்தக் கதையை கூறி முடித்தார் சித்த முனிவர். (இத்துடன் அத்தியாயம் -12 முடிவடைந்தது )