

அத்தியாயம் – 13
அந்த நேரத்தில் அங்கிருந்த அவருடைய சகோதரி ரத்னா என்பவள் அங்கு வந்து அவர் கால்களில் விழுந்து வணங்கி கண்ணீருடன் அவரைக் கேட்டாள் ‘பரமேஸ்வரரின் அவதார புருஷரே, எனக்கும் நீங்களே அருள் புரிய வேண்டும். என்னுடைய வாழ்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை. நாளைப் பொழுதை நினைத்தாலே மனதில் இனம் புரியாத பயம் ஏற்படுகிறது. கஷ்ட திசையில் உள்ள எங்கள் வாழ்வு எப்போதுதான் செழுமைப் பெறும்? எங்களுக்கு விடிவு காலம் உண்டா? நான் அனுபவிக்கும் இந்த துயரங்களின் காரணம் என்ன? அதை நீங்கள்தான் எனக்கு எடுத்துக் கூறி எம்மை கரை சேர்க்க வேண்டும்’ என்றவுடன் அவர் கருணையோடு ரத்னாவைப் பார்த்துக் கூறினார் ‘அம்மணி,எந்த ஒரு பெண்மணி தனது கணவனை சிவபெருமானாகவே நினைத்து அவருக்குப் பணிவிடை செய்வாளோ அவள் வம்சம் விருத்தி அடையும், சுகமான வருங்கலத்தைப் பெறுவார்கள். அவரவருக்கு ஏற்படும் துயரங்கள் பூர்வ ஜென்ம வினைப் பயன் என மனதை பக்குவப்படுத்திக் கொண்டு இருப்பதே சிறந்த வழி. கடவுளை நம்பினோரை அவர் என்றுமே கைவிட்டது இல்லை.
இந்த பூமியிலே பிறந்து விட்டால் மூன்று நிலைகளை கடக்க வேண்டும். அவை நடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வரும் காலம் என்பதின் பலன்கள் ஆகும். உன்னைப் பொருத்தவரை நீ பூர்வ ஜென்மத்தில் ஒரு பசுமாட்டினை உன் கால்களினால் எட்டி உதைத்தாய். அக்கம் பக்கத்தில் இருந்த பிராமணர்களின் குடும்ப ஒற்றுமையைக் கலைத்து அவர்கள் குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தினாய். அவர்கள் கொடுத்த சாபத்தினால் இன்று உனக்கு பல்வேறு கஷ்டங்கள் வந்துள்ளன. அவற்றை நீ இந்த ஜென்மத்தில் அனுபவித்தே கழிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, வெண்மையான பசுவை நீ எட்டி உதைத்ததினால் உனக்கு வயதான காலத்தில் வெண்குஷ்ட நோய் ஏற்படும். உன் கணவரும் உன்னுடன் மனக்கசப்புக் கொண்டு சன்யாசத்தை ஏற்றுக் கொண்டு உன்னை விட்டு விலகி விடுவார். எதெல்லாம் தவிர்க்க முடியாதவையாக உள்ளது’.
அதைக் கேட்டவள் அழுதபடி அவருடைய கால்களில் விழுந்து தன்னை மன்னித்து விடுமாறும், தனக்கு விமோசனத்துக்கு வழியையும் கூறுமாறு அவரிடம் கேட்டாள். அதற்க்கு அவர் கூறினார் ‘ அம்மணி நான் உன் வினைப் பயனை அப்படியே விளக்க முடியாது. ஆனால் உனக்கு வரவுள்ள வெண் குஷ்ட நோய் உன் கணவர் உன்னைவிட்டுப் பிரியும்போது வந்து சேரட்டும். அது வந்ததும் நீயும் கனகபுரிக்கு வந்து அங்குள்ள பீமா எனும் நதியில் குளித்து விட்டுக் கரை ஏறும்போது உனக்கு நான் காட்சி தருவேன். அங்கிருந்து உன்னை நானே பாபநாசி எனும் இடத்துக்கு அழைத்துச் செல்வேன். அங்கு நீ நதியில் குளித்தவுடன் உன் வெண் குஷ்டமும் மறைந்து போகும்’ என்றார். இப்படியாக கூறிவிட்டு ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் நாசிக்கில் உள்ள பல பாபங்களையும் விலக்கும் கோதாவரி நதிக்கரையை ஒட்டிய திரயம்பகேஸ்வரருக்கு சென்றார் ”.
அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா அவரை இடையில் கேட்டார் ‘.ஸ்வாமி, அதென்ன கோதாவரி நதி? அது எப்படி அங்கு வந்தது?’. அதைக் கேட்ட சித்த முனிவர் கூறலானார் ”முன் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த கௌதம மகரிஷி என்பவர் மாபெரும் முனிவர். அவர் தன்னுடைய ஆசிரமத்தில் தினமும் பலருக்கு அன்னதானம் செய்த வண்ணம் இருந்தார். கடுமையான பஞ்ச காலத்தில் கூட உணவின்றி தவித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் செய்து வந்தார். அவர் தினமும் ஒரு கைப்பிடி தானியத்தை பூமியிலே தூவிய பின்னர் தவத்தில் அமர்ந்து கொள்வார். அவர் தவத்தை முடிக்கும் முன்னரே அவை கணக்கற்ற அளவில் செடிகளாக முளைத்து தானியத்தைத் தர அதை அவர் மக்களுக்கு விநியோகிப்பார். இப்படியாக அவர் தொடர்ந்து நடத்தி வந்த அன்னதானத்தின் போது ஒருமுறை கங்கையை பூமியிலே கொண்டு வர திட்டம் போட்டு ஒரு பசு மாட்டை அனுப்பி அவர் தவத்தில் இருந்தபோது தானியங்களை தின்று விடச் சொன்னார்கள். கௌதம முனிவர் அதனால் கோபமுற்று அந்த பசு மாட்டின் மீது தர்பை புல்லை வீச அது மடிந்துவிட்டது. அவ்வளவுதான் எங்கிருந்தோ வந்த ரிஷி முனிவர்கள் கௌதம முனிவர் பசு மாட்டைக் கொன்று விட்டதினால் கங்கையில் ஸ்நானம் செய்து பாவத்தைக் களைந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆகவே கௌதம முனிவர் சிவபெருமானை வேண்டி தவமிருக்க சிவபெருமானும் அவர் தவத்துக்கு மனமிரங்கி தனது ஜடையில் இருந்த கங்கையை அங்கு பாய வைத்தார். அந்த நதியே பசுவின் பெயரை நினைவூட்டும் வகையில் கோ அதாவது பசு + தாவரி அதாவது தாவி வருதல் என்பதைக் குறிப்பிடும் வகையில் கோதாவரி எனும் பெயரைப் பெற்றது. ஆகவே வேண்டும் என்றே முனிவரை கோபமடையச் செய்து அவர் மூலம் கோதாவரி நதியும் பூமியில் வந்தது. அதில் குளிப்பதினால் பெரும் பாபச் செயல்களான பசுவதைக் கூட விலகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமி அங்கு சென்றபோது மாதவ முனிவர் என்பவர் விஷ்ணுவை வேண்டியபடி தவத்தில் இருந்தார். ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அங்கு சென்றதும் அவரை கண்ட மாதவ முனிவர் அவரே தான் வேண்டி தவம் இருக்கும் விஷ்ணுவின் அவதாரமாக வந்துள்ளதாகக் கருதி அவரை தக்க மரியாதையுடன் தனது குடிலுக்கு அழைத்து சென்று பாத பூஜை செய்து அவருடைய சீடர் ஆனார். மாதவ முனிவரின் வேண்டுகோளுக்கு செவி சித்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு தன் சுய உருவைக் காட்டி தரிசனம் தந்து இனி அவருக்கு மறு பிறவி இல்லை என்றும் அவர் வேண்டிய வரத்தையும் அருளினார். அதன் பின் அங்கிருந்துக் கிளம்பி கோதாவரி நதிக்கரை ஓரமாக யாத்திரையை மேற்கொண்டு இருந்த ஸ்வாமிகள் ஒரு இடத்தில் நதிக்கரையில் சாயம்தேவா எனும் பிராமணன் ஒருவன் பெரிய கல்லை தன் இடுப்பிலே கட்டிக் கொண்டு நதியில் குதிக்க இருந்ததைக் கண்டு அவனை தன்னிடம் அழைத்து வருமாறு தமது சிஷ்யர்களை அனுப்பினார்.
தன்னிடம் வந்தவனிடம் ஒரு பிராமணன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பெரும் பாவத்தை பெற்று விடுவான் என்பதினால் அதை தடுத்து நிறுத்தி அவனுடைய பிரச்சனை என்ன என்றும் கேட்டதும், அவர் கால்களில் தடாலென விழுந்து வணங்கியவன் கதறினான் ‘ஐயா, நான் இந்த ஊருக்கு பக்கத்து நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் மன்னனிடம் சேவகம் செய்கிறேன். இந்த ஊருக்கு கிராம அதிகாரியாக என்னை அவர் நியமித்து உள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை நான் கடுமையான வயிற்று வலியினால் பல காலமாக அவதிப்படுகிறேன். என்னால் சரிவர உணவு உண்ணக் கூட முடியவில்லை. நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? யாருக்கு நான் பாரமாக இருக்க வேண்டும். ஆகவே நான் மரணம் அடைய எனக்கு நீங்கள்தான் அனுமதி கொடுக்க வேண்டும்’ எனக் கூற அவன் மன நிலையைக் கண்டு வருத்தம் அடைந்த ஸ்வாமிகள் அவர் தலை மீது தன் கையை வைத்து ஆசிர்வதித்தப் பின் அவரை தேற்றினார். ‘பிராமணனே, கவலை வேண்டாம். உடனடியாக வீடு போய் சேர்ந்து உணவை உண்டு விட்டு வா. நீ சரியாகி விடுவாய் என்று கூறி அவருக்கு உணவு தந்து தன்னிடம் அழைத்து வருமாறு அவருடன் வந்திருந்தவரிடம் கூறி அனுப்பினார்.
அதைக் கேட்டவர் ‘ஸ்வாமி உங்களைக் கண்டதுமே என் வயிற்று வலி குறைந்துவிட்டது போல உணர்கிறேன். நீங்கள் என்னுடைய வயிற்று வழியை குணமாக்கிவிட்டது உண்மை என்றால், என்னுடன் என் வீட்டுக்கு வந்து நான் போடும் பிட்ஷையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடியேன் வீட்டுக்கு நீங்கள் வருகை தந்து என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை கெஞ்ச அவரும் சாயம்தேவாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அந்த பிராமணர் அர்க்கியம் தந்து, பாத பூஜை செய்த பின் பல்வேறு மந்திரங்களையும் ஓதி துதித்தப் பின் அவர் கால்களில் விழுந்து வணங்கினார். ‘மாபெரும் தெய்வமே, உங்களை நான் தரிசித்தது என்னுடைய பெரும் பாக்கியமே. கங்கையில் குளித்தால் பாபங்கள் விலகும், சந்திரனின் குளுமையான ஒளிக் கிரணங்கள் நம் உடலில் படும்போது இதய பாரம் குறையும், கல்பக விருசஷத்தைப் பார்த்தாலே ஏழ்மை விலகும் என்ற சத்திய உண்மைகளைப் போலவேதான் உங்களுடைய புனிதமான தரிசனத்தைப் பெற்ற எனக்கு இனி அனைத்து பாபங்களும் விலகி விடும் என்பதை மனப்பூர்வமாக உணருகிறேன்’. என்று கூறிய பின்னர் அவர் எதிரிலேயே வயிறு முட்ட உணவையும் அருந்தினான். ஆனால் அதன் பின் அவனுக்கு எந்த வயிற்று வலியும் வரவே இல்லை”. என்று சித்த முனிவர் நாமத்ஹரகாவிடம் கூறி முடித்தார் (இத்துடன் அத்தியாயம்- 13 முடிவடைந்தது).