அத்தியாயம் – 14

நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் ‘ முனிவரே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன ஆயிற்று? அங்கிருந்து அவர் எங்கு சென்றார்?’ என்று கேட்க சித்த முனிவர் கூறலானார்.

சாயம்தேவா எனும் அந்த கிராம அதிகாரி ஸ்வாமிகளிடம் கூறலானான் ‘ஸ்வாமி நான் முதலிலேயே கூறியபடி நான் வேலை செய்யும் அந்த முஸ்லிம் மன்னனுக்கு ஒரு குணம் உண்டு. அதன்படி அவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒரு பிராமணரை வரவழைத்து அவரைக் கொல்வதை  ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டு உள்ளார்.  இந்த வருடம் அந்த சடங்கிற்கு என்னுடைய முறை வருவதால் நாளை என்னை அழைத்து உள்ளார். ஆனால் குருதேவா, நான் செய்த புண்ணியத்தினால்  நான் இறக்கும் முன்னால்  உங்களை என் வீட்டிற்கு அழைத்து பாத பூஜையும் செய்து உங்களது பரிபூரண அருளையும்  பெற்றுக் கொண்டு விட்டேன்.  அது எனக்குப் போதும். ஆகவே மரணம் அடைந்தாலும் கலங்காமல் இருப்பேன். ஆனால் குருதேவா எனக்கு உள்ள கவலை என்னுடைய குடும்பத்தினர் இனியாவது நல்ல வாழ்க்கையைப் பெற்று நலமாக இருக்க வேண்டும் என்பதே.  ஆகவே என்னை ஆசிர்வதியுங்கள்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட சாயம்தேவாவின் மனைவி அழுதவாறு ஸ்வாமிகள் முன் நின்று ‘ ஸ்வாமி  எனக்கு எதுவுமே இந்த உலகில் வேண்டாம். எனக்கு என்னுடைய கணவர் மட்டும் போதும். அவரை நீங்கள் எனக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதை உங்களிடம் இந்த அபலை பிட்ஷையாகக் கேட்கிறாள்’  என்று கூற அமைதியாக அனைத்தையும் கேட்டவாறு இருந்த ஸ்வாமிகள் கூறினார் ‘சாயம்தேவா, எதற்கும் கவலைக் கொள்ளாமல் நாளை காலை நீ மன்னனிடம் செல். உனக்கு ஒன்றும் ஆகாது. நான் நீ திரும்பி வரும்வரை இங்கு உன் வீட்டிலேயே உனக்காக காத்திருப்பேன்’ என்று தைரியம் கூறி விட்டு  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவரை வழி அனுப்பினார்.

மறுநாள் கால சாயம்தேவா நன்கு குளித்து விட்டு ஸ்வாமிகளை வணங்கி அவரை பூஜை  செய்தப் பின் அங்கிருந்து கிளம்பி அரண்மணைக்குச் சென்று அரசன் முன்னால்  நின்றார்.  அவரை வெட்டிக் கொல்ல கையில் வெட்டுக் கத்திகளுடன் காவலாளிகள் தயாராக நின்றபடி அரசனின் ஆணையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். உள்ளே இருந்து மன்னன் வந்தான். சாயம்தேவாவைப்  பார்த்ததும், சற்று பொறு வருகிறேன் என்று கூறி விட்டு மீண்டும் உள்ளே சென்றவர் என்ன காரணத்தினாலோ அப்படியே உறங்கி விட்டார். சாயம்தேவா அப்படியே நின்று கொண்டு இருக்க காவலாளிகளும் அரசனின் ஆணைக்காக அங்கு காத்துக் கொண்டு நின்றார்கள். உறங்கிக் கொண்டு இருந்த மன்னனின் கனவில் அவரை யாரோ ஒரு பிராமணர் அவரை துரத்தித் துரத்தி அடிப்பது போலவும், மன்னன் எங்கு ஓடினாலும் அங்கும் அவரை அடித்து துவம்சம் செய்வது போலவும் கனவு வர அலறியவாறு வேர்த்து விறுவிறுக்க உறக்கத்தில் இருந்து எழுந்தார். உடம்பெல்லாம் ஒரே வலி. வெளியில் வந்தவர் சாயம்தேவாவை  பார்த்துக் கூறினார் ‘ பிராமணரே, இன்னும் நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நான்தான் உங்களைக் கொல்ல வேண்டாம் எனக் கூறி விட்டேனே. உடனே கிளம்பி வீட்டுக்குச் செல்லுங்கள். அடே, மந்திரி இவருக்கு அநேக பரிசுகளை வழங்கி வீட்டுக்கு மரியாதையுடன் அனுப்பி வை’ என்று மந்திரிக்கும் ஆணையிட அதைக் கேட்ட அனைவரும் திகைத்தார்கள்.  மன்னனுக்கு என்ன ஆயிற்று  என்று தெரியவில்லை. உள்ளே சென்றவர் இத்தனை நேரம் பொறுத்து வெளியே வந்து வந்தவனை பரிசுகள் கொடுத்து அனுப்பு என்கிறாரே, அவருக்கு  ஆயிற்று என விளங்காமல் குழம்பினாலும், மன்னனின் ஆணையை ஏற்று அந்த பிராமணருக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்து  அனுப்பினார்கள். மன்னனும் அடுத்த வேலையில் தன் கவனத்தை செலுத்தலானார்.

நிறைய பரிசுப்பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு  சாயம்தேவா வீடு திரும்பிய நேரத்தில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் நதியில் குளிக்கச் சென்று இருந்தார். தனது கணவர் உயிரோடு திரும்பி வந்ததும் அல்லாமல் நிறைய பொருட்களுடன் வந்திருப்பதைக் கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சர்யம் அடைந்தார்கள். அவரும்  விளக்கமாகக் கூறினார். ஆனால் மன்னனின் கனவில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது  தனது  பரிவாரங்களிடம் மன்னன் கூறியபோதுதான் உண்மை  தெரிந்தது. என்னே ஸ்வாமிகளின்  கருணை என அனைவரும்  வியந்து ஆனந்தக் கண்ணீர் விட்டபடி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்திக்க நதிக்கரைக்கு சென்றார்கள். குளித்துவிட்டு வந்த ஸ்வாமிகளை அங்கேயே விழுந்து விழுந்து வணங்கித் துதித்தார்கள்.

அதன் பின் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய வேலை முடிந்து விட்டதினால் இனி தெற்கு நோக்கிப் போவதாக கூறிவிட்டு கிளம்பினார். அவருடன் தானும் அவருடைய சிஷ்யனாக செல்ல ஆசைக் கொண்ட சாயம்தேவாவை  தடுத்து நிறுத்தினார் ஸ்வாமிகள். தமக்கு வேறு முக்கியமான கடமை உள்ளதினால் தற்போது அவரை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாது என்றும், ஆனால் தான் மீண்டும் இதே இடத்தில் இருபது வருடத்துக்குப் பிரு வந்து தங்கும்போது சாயம்தேவா தனக்கு சிஷ்யனாகலாம் எனவும் அறிவுறுத்தி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்”.  இப்படியாகக் கதையைக் கூறிய சித்த முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். (இதனுடன் அத்தியாயம் -14 முடிவடைந்தது)

………தொடரும்