………….அத்தியாயம் – 7(i)
ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான். அதனால் கோபமுற்ற அந்த பதிவிரதை ‘கேடு கெட்ட பிரும்ம இராட்சஷனே, நான் இத்தனைக் கெஞ்சியும் என்னுடைய கணவனை கொன்று விட்டாய். உனக்கு பன்னிரண்டு ஆண்டுகால ராக்ஷச வாழ்வுக்குப் பிறகு சாப விமோசனம் கிடைத்து அரியணை எறப் போகிறாய் அல்லவா. ஆனால் அங்கு உனக்கு நிம்மதி கிடைக்கப் போவது இல்லை. எப்படி என்னை என்னுடைய கணவரிடம் இருந்து பிரித்து விட்டாயோ அது போலவே நீ அரியணை ஏறியதும் என்று உன் மனைவியுடன் நீ சேர்ந்து படுப்பாயோ அன்றே உனக்கும் அவள் எதிரிலேயே மரணம் சம்பவிக்கும்’ என சாபம் இட்டாள்.
பிரும்ம ராக்ஷசனாகி பன்னிரண்டு ஆண்டுகள் வனங்களில் திரிந்து கொண்டு இருந்த கல்மதபாக்ஷா பன்னிரண்டு வருட கால ராக்ஷச வாழ்வுக்குப் பிறகு சாப விமோசனம் பெற்று மனித உருவை அடைந்தான். அரண்மனைக்கு திரும்பியவனை எதிர்கொண்டு அழைத்து கட்டிப் பிடிக்க ஓடி வந்த மனைவியை தடுத்து நிறுத்தினான் கல்மதபாக்ஷா. தன்னுடைய மனைவியிடம் தனக்கு கிடைத்த மற்றொரு சாபத்தைப் பற்றிக் கூறி இனி அவர்கள் இரவு நேரத்தில் தனித்தனி இடங்களில் படுக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தான். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள். பன்னிரண்டு வருட சாப காலம் முடிந்த பின் நமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்ற ஆசையில் மண் விழுந்து விட்டதே என்ற வருத்தமே அதன் காரணம். ஆனால் அவளை எழுப்பி ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றினான் மன்னன்.
ஆகவே அந்த சாபம் விலக வேண்டுமானால் அதற்கான ஒரே வழி தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு, புனித நதிகளில் நீராடி, நதிக்கரைகளில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தெய்வங்களை வேண்டிக் கொள்வதுதான் என்று மன்னனின் ஆலோசகர்கள் கூறினார்கள். பண்டிதர்களுடைய ஆலோசனைக்கு ஏற்ப கணவனும் மனைவியும் புனித யாத்திரைப் பயணத்தை மேற்கொண்டார்கள். அப்படி பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தபோது மிதிலை நகரின் வனப்பகுதியில் தங்கி இருந்த மகரிஷி கௌதமரை சந்திக்க நேரிட்டது. அவரை சந்தித்து வணங்கித் துதித்து தம்முடைய அனைத்துக் கதையையும் அவரிடம் கூறி அழுதார்கள். அவரும் அவர்களது நிலையைக் கண்டு வருத்தம் அடைந்து அவர்களுக்கு ஒரு அறிவுரைக் கொடுத்தார்.
அவர் கூறினார் ‘நீங்கள் இருவரும் இங்கிருந்துக் கிளம்பி கோகர்ணம் செல்லுங்கள். அங்கு சென்று அங்குள்ள நதியில் நீராடி வினாயகர் ஸ்தாபித்த சிவபெருமானின் ஆத்மலிங்கத்தை வணங்கித் துதித்தால் பிரும்மஹத்தி தோஷம் முற்றிலும் விலகும். பூலோகத்தில் உள்ள கைலாயம் அது. பிரும்மா, விஷ்ணு முதல் அனைத்து தேவர்களும் தினமும் அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி இருக்கிறார்கள். கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவகம் செய்யும் அனைவருமே இங்கும் வந்து ஆத்மலிங்கத்தில் உள்ள சிவபெருமானுக்கு சேவகம் செய்து விட்டுப் போகிறார்கள். அங்கு வாசம் செய்யாத மகா முனிவர்களோ, மகரிஷிகளோ, கிம் புருஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் யாருமே இல்லை என்பதினால் அதைவிட இந்த பூலோகத்தில் புண்ணிய ஸ்தலம் வேறு எதுவுமே கிடையாது என்றே கூறலாம். அங்கு சென்று பரமேஸ்வரனை வணங்கித் துதித்தால் கேட்டது அனைத்தையும் அவர் தருவார்.
அந்த லிங்கத்தின் மகிமை எப்படிப்பட்டது என்றால் அது கிருதே யுகத்தில் பளிங்கு போன்ற வெண்மையாகவும், திரதே யுகத்தில் சிவப்பு நிறத்திலும், துவாபகர யுகத்தில் மஞ்சளாகவும், கலி யுகத்தில் கறுப்பு நிறத்திலும் இருந்தவாறு காட்சி தரும். அதனால்தான் கிழக்கு புறத்தில் உள்ள இந்த ஷேத்திரம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஷேத்திரத்தில் வந்து பூஜிப்பதினால் கிடைக்கும் மேலான பலன் என்ன தெரியுமா? இங்கு வந்து தத்தம் பாபங்களைக் களைந்து கொண்டு மோட்ஷம் செல்லும் ஆத்மாக்கள் சிவபெருமானின் ருத்திர கணங்களாக மாறி விடுகின்றன என்பதே. இதை விட என்ன பெரும் பேறு வேண்டும்? பண்டிகை தினங்களான சிவராத்திரி, சங்கராந்தி, பிரதோஷம் போன்ற தினங்களில் இங்கு வந்து ஆராதிப்பதின் மூலம் சிவனிடமே ஐக்கியம் ஆகிவிட முடியும் என்ற அளவில் சிவபெருமானின் மகிமை உள்ளது. ஆகவே நீங்கள் இருவரும் அங்கு சென்று சிவபெருமானை வேண்டிக் கொண்டால் உங்களது குறை விலகும்’. என்று கௌதம முனி அந்த மன்னன் கல்மதபாக்ஷா தம்பதியினரிடம் கூறினார்.
அதைக் கேட்ட கல்மதபாக்ஷா அவரிடம் கேட்டார் ‘மேன்மைமிக்க குருவே, உங்கள் அறிவுரையை ஏற்று நீங்கள் கூறியவாறு அங்கு சென்று எமது பாபங்களைக் களைந்து கொள்கிறோம். அதற்கு முன்னால் சின்ன சந்தேகம் உள்ளது. அதையும் நீங்கள் எமக்கு விளக்கினால் ஆறுதலாக இருக்கும். இந்த ஷேத்திரத்தில் பாவங்களைக் களைந்து கொண்டவர்கள் கதை வேறு ஏதும் உண்டா? அப்படி இருந்தால் அதையும் எமக்குக் கூறுவீர்களா’ என்று கேட்டார். அதைக் கேட்ட கௌதம முனிவர் கூறினார் ‘அப்பனே, கதை என்ன? நானே நேரில் பார்த்த ஒரு சம்பவம் உள்ளது. அதைக் கூறுகிறேன் கேள்’ என்று கூறிய பின் அது குறித்துக் கூறலானார்.
‘ஒருமுறை ஒரு சிவராத்திரி தினத்தன்று இங்குள்ள ஆத்ம லிங்கத்தை வழிபட நான் வந்திருந்தேன். அப்போது நான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது சற்று தள்ளி ஒரு மரத்தடியில் வயதான ஒரு கிழவியும் படுத்துக் கிடந்தாள். அவள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவள். அவள் கழுத்தும் வயிறும் வீங்கி இருந்தது. பசி, பசி என்று அவள் கதறிக்கொண்டே இருந்தாலும் அவள் அருகில் யாரும் சென்று அவளுக்கு உதவவில்லை. அவள் கையில் சில வில்வ இலைகள் இருந்தன. முனகிக் கொண்டே படுத்துக் கிடந்தவள் சற்று நேரத்தில் மரணம் அடைந்து விட்டாள். அப்போதுதான் அந்த அற்புதத்தைக் கண்டேன். மேலுலகில் இருந்து சிவகணங்கள் வந்து அவளுடைய ஆத்மாவை தமது தேரில் ஏற்றிக் கொண்டு சென்றன. ஆனால் அங்கு யம தூதர்களைக் காணவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யமாகி விட்டதினால் ஓடிச் சென்று அந்த சிவகணங்களை ‘தாழ்ந்த ஜாதியை சேர்ந்த இந்த பெண்மணியா நீங்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டபோது அவர்கள் கூறினார்கள் ‘முனிவரே இந்த தலத்தின் மகிமையை அறியாமல் கேட்கிறீர்கள். இவள் மரணம் அடையும் தருவாயில் ‘சிவசிவா’ என முனகிக் கொண்டே இருந்ததினால் அந்த தாரக மந்திரம் இவளுக்கு சிவலோகப் பிராப்தியை தந்தது. அது மட்டும் அல்ல அவள் கையில் வைத்திருந்த வில்வ இலைகள் பறந்து போய் அந்த ஆத்ம லிங்கத்தின் மீது விழுந்ததினால் அதை அவரும் அர்ச்சனை வில்வமாக ஏற்றுக் கொண்டார். அத்தனைக் கருணை மிக்கவர் இங்குள்ள சிவபெருமான். யாராக இருந்தால் என்ன? இங்கு குடி கொண்டுள்ள சிவபெருமானுக்கு அனைத்து உயிர்களும் ஒன்றேதான். ஆகவேதான் இந்த ஜென்ம புண்ணியத்தினால் அவளுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.
அது மட்டும் அல்ல இந்தப் பெண்மணி பூர்வ ஜென்மத்தில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்து இருந்து மணமானவள். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அவள் விதவையாகி விட்டாள். அவளுடைய பெற்றோர் மரணம் அடைந்தப் பின் வேறு வழி இன்றி விலைமாதாகி அவளிடம் வந்த வாடிக்கையாளர்களின் தூண்டுதலால் மாமிசங்களையும் உண்ணும் அளவுக்கு சென்று விட்டாள். அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் அவள் தனியே நின்று கொண்டு இருந்த ஒரு பசுவின் சின்ன கன்றை கொன்று அதன் மாமிசத்தையும் உண்டதினால் அந்த கன்றின் தாயின் சாபத்தினால் இந்த பிறவியில் தாழ்ந்த ஜாதியில் பிறந்து யாருமற்ற அனாதையாக இறக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த பிறவியிலும் அவள் விலைமாதாக இருந்தபோதும், பசுவின் மாமிசத்தை உண்டபோதும் உணவை உண்பதற்கு முன்பும், பின்னரும் ‘சிவசிவா’ என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். அதனால்தான் அவளுக்கு தன்னை அறியாமலேயே கிடைத்த பூர்வ ஜென்ம புண்ணியமும் சேர்ந்தே இருந்தது. ஆகவே இவளை சிவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறோம் ‘ என்று கூறினார்கள்’.
இந்தக் கதையை கௌதம முனிவர் கூறியதும் அவர் கால்களில் விழுந்து வணங்கிய கல்மதபாக்ஷா தம்பதியினரும் கோகர்ணத்துக்கு வந்து பாபங்களைக் களைந்து கொண்டு ஆனந்த வாழ்வை மீண்டும் பெற்று, குழந்தைகள் பல பெற்று பல காலம் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். இந்த தலத்தின் மேன்மை இப்படியாக இருந்ததினால்தான் ஸ்ரீ பாத வல்லபாவும் இங்கு வந்து மூன்று வருடங்கள் இங்கு இருந்தபடி தவமிருந்து விட்டுப் போனார்” என்று சித்த முனிவர் நமத்ஹராவுக்குக் கூறினார். அந்தக் கதையை ஆனந்தமாக கேட்டவண்ணம் அமர்ந்திருந்தார் நமத்ஹரகா.